search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முறைகேடு"

    • திருச்சி மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அதிகாரிகள் பெயரை சொல்லி முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு
    • ஓராண்டாக ஆர்.டி.ஓ. நியமிக்கப்படாததால் பொதுமக்கள் அவதி

    திருச்சி,

    திருச்சி பிராட்டியூரில் திருச்சி மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் பழகுனர் உரிமம், ஓட்டுனர் உரிமம், புதிய வாகன பதிவு, வாகன உரிம பெயர் மாற்றம், வாகன அனுமதி சீட்டு,வாகன தகுதிச் சான்று, பொதுப்பணி வில்லை போன்ற பல்வேறு தேவைகளுக்கு பொதுமக்கள் வந்து செல்கிறார்கள்.மேற்கண்ட தேவைகளுக்கு ஆன்லைனில் அதற்குரிய கட்டணத்தை செலுத்தும் வசதி தற்போது நடைமுறையில் உள்ளது. முறைகேடுகளை தடுத்து பொதுமக்களுக்கு விரைவான சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆன்லைன் வசதி கொண்டுவரப்பட்டது.ஆனால் இப்போதும் புரோக்கர்களின் துணை இல்லாமல் பெரும்பாலான மக்களால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் எதையும் பெற முடியாத நிலையே நீடிக்கிறது.பேட்ஜ் எனப்படும் பொது வாகனங்களை இயக்குவதற்கான வில்லைகள் பெற்றுக் கொள்வதற்கு அரசு ரூ. 315 மட்டுமே கட்டணம் நிர்ணயித்துள்ளது.ஆனால் இதனை புரோக்கர்கள் வாயிலாக கூடுதல் தொகை செலவழிக்காமல் வாங்க இயலவில்லை.இவற்றையெல்லாம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில் பிராட்டியூர் திருச்சி மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த ஒரு வருட காலமாக வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நியமிக்கப்படவில்லை.அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கூடுதல் பொறுப்பினை வகித்து பணியாற்றி வருகின்றனர்.

    வாரத்தில் ஒன்றிரண்டு தினங்கள் மட்டுமே முழுநேர பணிகளை மேற்கொள்கிறார்கள். இதனால் பொதுமக்களும் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பல நாட்கள் காத்திருக்க வேண்டிய அவலம் நீடிக்கிறது.பெரும்பாலான பணிகளை போக்குவரத்து ஆய்வாளர்களே செய்து முடிக்கிறார்கள். இந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை பொருத்தமட்டில் காத்திருக்கும் மக்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. காத்திருப்பு பகுதியில் குறைந்த அளவு இருக்கைகளே உள்ளன.இதுபோன்ற சிக்கலான நிலைகளில் பொதுமக்கள் புரோக்கர்களை நாட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள்.இதனை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் சில புரோக்கர்கள் அதிகாரிகளின் பெயர்களை சொல்லி லஞ்சம் வாங்குவதாகவும் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் புலம்புகின்றனர்.இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க உடனடியாக வட்டார போக்குவரத்து அலுவலர் நியமிக்க வேண்டும் என பொதுமக்களும் ஊழியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
    • சார்பதிவாளர்களாக திருப்பூரில் பணியாற்றி வந்த பெருமாள்ராஜா, பூபதி ராஜா ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்லடம், பொங்கலூர் மற்றும் சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களின் பத்திரப்பதிவுகள் நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் பல்லடம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடுகள் நடப்பதாகவும் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் பல்லடம் பத்திர எழுத்தர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பத்திர பதிவுக்கு வந்தவர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் பல்லடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளர்களாக பணியாற்றிய பிரவீனா மற்றும் ஈஸ்வரி ஆகிய 2பேரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    மேலும் பல்லடம் சார்பதிவாளர்களாக திருப்பூரில் பணியாற்றி வந்த பெருமாள்ராஜா, பூபதி ராஜா ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டனர். பல்லடம் சார்பதிவாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டதையடுத்து பல்லடம் பத்திர எழுத்தர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றதுடன், இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    • புதுவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
    • தலைமை செயலகத்தை நேரு எம்.எல்.ஏ. முற்றுகையிட்டார்.

    புதுச்சேரி:

    புதுவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

    மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தொடங்கப்பட்ட பணிகளில் முறைகேடுகளால் கட்டுமான பணிகள் தரமற்றதாகவும், குறைபாடுகள் நிறைந்தும் காணப்படுகிறது.

    பல கட்டுமான பணிகள் தடைபட்டு வேலைகள் நடைபெறாமல் உள்ளது என்றும் உயர் அதிகாரிகளின் அலட்சிய போக்கும் லஞ்ச ஊழலமே காரணம் என உருளையான்பேட்டை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு குற்றம்சாட்டி இருந்தார்.

    மேலும் தனது தொகுதியில் ஒராண்டில் கட்டி முடித்திருக்க வேண்டிய அண்ணாதிடல் கட்டுமான பணி 2 ½ ஆண்டுகளை கடந்தும் காட்சி பொருளாக உள்ளது என்றும் புதிய பஸ் நிலையம், பெரிய மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் கூட செய்யவில்லை என்றும் புகார் கூறியிருந்தார்.

    அதோடு ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடுகள் மற்றும் ஊழலை கண்டித்து தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் எனவும் நேரு எம்.எல்.ஏ. அறிவித்திருந்தார்.

    இதன்படி இன்று காலை தலைமை செயலகத்தை நேரு எம்.எல்.ஏ. முற்றுகையிட்டார்.

    அவருடன் வாழ்வுரிமை கட்சி தலைவர் ஸ்ரீதர், தமிழர் களம் அழகர், திராவிடர் விடுதலை இயக்கம் லோகு.அய்யப்பன், நகர தலித் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.தலைமை செயலகத்தின் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

    தலைமை செயலாளரை சந்திக்க வேண்டும் என கோரினர். ஆனால், தலைமை செயலாளர் இல்லை என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    தொடர்ந்து புதுவை கம்பன் கலையரங்கில் நடந்த உலக சுற்று சுழல் தின விழாவில் தலைமை செயலாளர் பங்கேற்று இருந்ததால் அங்கு சென்றனர்.

    மேடையில் விழா நடந்த போது நேரு எம்.எல்.ஏ. தனது ஆதரவாளருடன் கிழே நின்றபடி தலைமை செயலாளருக்கு எதிராக பேசினார்.

    இதனால் விழா தடைப்பட்டது. மேடையில் இருந்த முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா ஆகியோர் அமைதியாக பார்த்து கொண்டிருந்தனர்.

    ஒரு கட்டத்தில் நேரு எம்.எல்.ஏ. விழாவில் முதலமைச்சர் பேச இடையூறு செய்யமால் வெளியேறுவதாக கூறி சென்றார்.

    அவருடன் வந்த ஆதரவாளர்களும் அங்கிருந்து சென்றனர். இதை தொடர்ந்து விழா நடந்தது.

    • மாவட்ட நிா்வாகத்தின் மூலமாக குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • உடுமலை வட்டாட்சியா் தலைமையில் கருத்துக் கேட்புக்கூட்டம் கடந்த ஏப்ரல் 24 -ந் தேதி நடைபெற்றது.

    உடுமலை :

    திருப்பூா் மாவட்டம் உடுமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட போடிப்பட்டி ஊராட்சியில் நிதி நிா்வாகத்தில் முறைகேடு நடைபெற்றதாக புகாா் எழுந்தது. இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகத்தின் மூலமாக குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த முறைகேடு தொடா்பாக ஊராட்சி மன்ற தலைவா் டி.சௌந்திரராஜனிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

    இதுதொடா்பாக அவா் அளித்த விளக்கம் ஏற்கத் தகுதியில்லாததால் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் உத்தரவிட்டிருந்தாா். இதையடுத்து உடுமலை வட்டாட்சியா் கண்ணாமணி தலைமையில் கருத்துக் கேட்புக்கூட்டம் கடந்த ஏப்ரல் 24 -ந் தேதி நடைபெற்றது. இதில் 12 ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், ஊராட்சி மன்றத் தலைவா் ஆகியோரிடம் கருத்துக் கேட்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் போடிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் சௌந்திரராஜனை தகுதி நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் உத்தரவிட்டாா்.

    • மதுரை மாவட்டத்தில் தொழிலாளர் துறையினர் சோதனையில் முறைகேட்டில் ஈடுபட்ட 45 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • இணைய தளத்தில் புகார் தெரிவிக்கலாம்.

    மதுரை

    மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன், இணை ஆணையர் சுப்பிரமணியன் ஆகிேயாரது ஆலோசனை பேரில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஏப்ரல் மாதத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள மீன் மற்றும் இறைச்சி கடைகளில் சோதனை நடத்தினர்.

    அப்போது தராசுகளை மறுமுத்திரையிடாதது, தரப்படுத்தாத எடை அளவுகள் பயன்படுத்தியது, மறுபரிசீலனை சான்று காட்டி வைக்காதது, நிறுவன உரிமங்கள் புதுப்பிக்காதது ஆகியவற்றிற்காக 26 நிறுவனங்கள் மீது நட வடிக்கை எடுக்கப்பட்டது.

    குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட் லைட்டர்கள் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் பதிவுச்சான்று பெறாமல் பொட்டலப் பொருட்களை விற்பனை செய்த, அதிகபட்ச சில்லறை விலையைவிட கூடுதலாக விற்பனை செய்த 5 நிறுவனங்கள் சிக்கியது.

    குறைந்தபட்ச கூலிச் சட்டத்தின்கீழ் நடத்தப்பட்ட ஆய்வில் 14 உணவு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. அந்த நிறுவனங்களிடம் இருந்து 23 ஊழியர்களுக்கு ரூ.2 லட்சத்து 24 ஆயிரத்து 260 சம்பள நிலுவைத் தொகை பெற்று வழங்கப்பட்டது.

    மோட்டார் வாகனம் பழுதுபார்க்கும் தொழிற்கூடங்களில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 1 குழந்தை தொழிலாளர் மற்றும் 4 வளரிளம் பருவ ஊழியர்கள் மீட்கப்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பாக தொழிலாளர் துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி கூறுகையில், தொழிலாளர் நலச் சட்டங்களின் கீழ் பதிவுச் சான்று பெற, தராசுகளை முத்திரையிட labour.tn.gov.in இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 18 வயது நிறைவடையாத குழந்தைகளை அபாய கரமான தொழிலில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றமாகும்.அவ்வாறு செய்தால் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து ரூ.50 ஆயிரம் மற்றும் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடமுள்ளது. குழந்தை தொழிலாளர் குறித்து 1098, 155214 அல்லது ''Pencil portal'' இணையதளம் வழியாக புகார் செய்யலாம்.

    குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்பும் பெற்றோர்- பாதுகாவலர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க இயலும். எடை அளவைகள் மற்றும் பொட்டல பொருட்கள் விதிகளின் கீழ் முரண்பாடு தெரிய வந்தால் ரூ.500 முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    முத்திரையிடாத எடை அளவைகள் பயன்படுத்துவோர், அதிகபட்ச சில்லரை விலையைவிட கூடுதல் விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோர் பற்றி National Consumer Helpline எண். 1915 அல்லது இணைய தளத்தில் புகார் தெரிவிக்கலாம்.

    மேற்கண்ட தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி தெரிவித்துள்ளார்.

    • கடந்த மாதம் 6-ந் தேதி குற்றச்சாட்டுகளில் தொடர்புடையவர்களிடம் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
    • 7 பேரிடம் நேரடியாக விசாரணை நடத்தப்பட்டது.

    சேலம்:

    சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நியமனங்கள், இட ஒதுக்கீட்டு மீறல் உள்ளிட்டவை குறித்து புகார் எழுந்தது. இது தொடர்பாக பல்வேறு தரப்பினர், அமைப்பினர் உயர் கல்வித் துறைக்கு புகார் மனுக்களை அனுப்பி வைத்தனர்.

    இதனை தொடர்ந்து விசாரணை நடத்த உயர் கல்வித் துறை கூடுதல் செயலாளர் பழனிசாமி மற்றும் இணைச்செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் ஆகியோர் கொண்ட விசாரணைக் குழு அமைத்து அரசு உத்தரவிட்டது.

    இதை தொடர்ந்து கடந்த மாதம் 6-ந் தேதி குற்றச்சாட்டுகளில் தொடர்புடையவர்களிடம் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக இன்று பெரியார் பல்கலைக்கழக முறைகேடு தொடர்பாக புகார் அளித்த சேலம் மேற்கு தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ அருள், அம்பேத்கர் மக்கள் இயக்கம் மாநில தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை, பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் வைத்தியநாதன், தொழிலாளர் சங்கத் தலைவர் கனிவண்ணன், ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்த முத்து கண்ணன் உள்ளிட்ட 7 பேரிடம் நேரடியாக விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது பல்கலைக்க ழகத்தின் முறைகேடுகள் குறித்து விரிவாக அவர்கள் புகார் கூறினர். மேலும் உயர் பதவியில் உள்ளவர்கள் ஒரே நேரத்தில் 3 இடங்களில் பணிபுரிந்ததாகவும் கூறினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நியமிக்கப்பட்ட நூலகர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பணிகளில் உரிய தகுதி உள்ளவரை நியமிக்காமல் தகுதி இல்லாதவரை நியமித்துள்ளனர் என புகார் தெரிவித்தனர்.

    • சிண்டிகேட் கூட்டத்தில் அதிரடி நடவடிக்கை எடுத்து இதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
    • முறைகேட்டில் ஈடுபட்ட 8 ஆசிரியர்களும் கடந்த ஜனவரி மாதமே பணி நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

    சென்னை:

    பல்கலைக்கழக தேர்வில் அதிக மதிப்பெண் வழங்குவதாக கூறி மாணவர்களிடம் பணம் வசூலித்து முறை கேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத்தின் 8 பேராசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தலைமையில் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் அதிரடி நடவடிக்கை எடுத்து இதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

    இந்த 8 பேரில் மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட மண்டல மையங்களில் உள்ள ஆசிரியர்கள், கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி ஆசிரியர்கள் ஆகியோர் அடங்குவர்.

    மேலும் மூத்த பேராசிரியர்கள் 3 பேர் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஓய்வு பெறும்போது பேராசிரியர்களாக மட்டுமே ஓய்வு பெறுவார்கள்.

    முறைகேட்டில் ஈடுபட்ட 8 ஆசிரியர்களும் கடந்த ஜனவரி மாதமே பணி நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. தற்போது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    • இதில் வீடு கட்டும் திட்டம், தெரு மின்விளக்குகளை பராமரித்தல் ஆகியவற்றில் முறைகேடு நடந்துள்ளதை கண்டுபிடித்தனர்.
    • இந்த சம்பவத்தில் உடனடி நடவடிக்கை மேற்கொண்ட கலெக்டர் ஷ்ரவன்குமாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மூக்கனூர் ஊராட்சியில் பிரதம மந்திரி அவாஸ் யோஜனா வீடுகள் கட்டும் திட்டம் உள்ளிட்ட இதர திட்டங்களில் முறைகேடு நடந்துள்ளதாக பொதுமக்கள் புகார் தொிவித்தனர்.

    இது குறித்த விசாரணைக்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டதை அடுத்து ஊராட்சிகள் உதவி இயக்குனர் ரத்தினமாலா மற்றும் உதவி திட்ட அலுவலர் (வீடுகள் மற்றும் சுகாதாரம்) ராஜசேகர் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில் வீடு கட்டும் திட்டம், தெரு மின்விளக்குகளை பராமரித்தல் ஆகியவற்றில் முறைகேடு நடந்துள்ளதை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார் மற்றும் துணை தலைவர் சாந்தா ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊராட்சி கணக்கு, வழக்குகளை சரியாக பராமரிக்காத ஊராட்சி செயலாளர் செல்லதுரையை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார். இந்த சம்பவத்தில் உடனடி நடவடிக்கை மேற்கொண்ட கலெக்டர் ஷ்ரவன்குமாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். மேலும் மூக்கனூர் கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே பாதிக்கப்பட்ட பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து 108 தேங்காய் உடைத்தனர். பின்னர், பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடினர்.

    • தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் இதுபோன்ற குழப்பங்கள் தொடர்ந்து நடக்கிறது.
    • உறுப்பினர் ஒருவர் குற்றம் சாட்டினால் அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் பதில் தெரிவிக்க வேண்டுமே தவிர இது போன்று எதிர்ப்பு தெரிவிக்க கூடாது.

    சென்னை:

    தமிழக சட்ட சபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் டி.என்.பி.எஸ்.சி தேர்வில் முறை கேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டி பேசினார்.

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நில அளவையர் மற்றும் குரூப்-2 தேர்வுகள் நடத்தி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

    29 ஆயிரம் பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வுகள் நடத்தி கலந்தாய்வுகளையும் முடித்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட தனியார் மையத்தில் படித்த 700 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதன்மூலம் டி.என்.பி.எஸ்.சி தேர்வில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் இதுபோன்ற குழப்பங்கள் தொடர்ந்து நடக்கிறது. எனவே தேர்வு முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்த அரசை கேட்டுக்கொள்கிறேன்' என்றார்.

    இதையடுத்து சபாநாயகர் அப்பாவு இதே பிரச்சினையை எழுப்ப சட்டமன்ற உறுப்பினர்கள் வேல் முருகன், நாகை மாலி ஆகியோரும் அனுமதி கேட்டு இருந்தனர். எனவே அவர்களும் அரசின் கவனத்தை ஈர்க்க ஒரு நிமிடம் பேச கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

    வேல்முருகன்:-அ.தி.மு.க. ஆட்சியில் டி.என்.பி.எஸ்.சி தேர்வை வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களும், அண்டை நாட்டை சேர்ந்த சிலரும் எழுதலாம் என்று கொண்டுவரப் பட்டதே இதுபோன்ற பிரச்சினைகளுக்கு காரணம் என்றார்.

    இதற்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட அவை முன்னவர் துரை முருகன், 'உறுப்பினர் ஒருவர் குற்றம் சாட்டினால் அதற்கு சம்பந்தப்பட்டவர் கள் பதில் தெரிவிக்க வேண்டுமே தவிர இது போன்று எதிர்ப்பு தெரிவிக்க கூடாது என்றார்.

    இதைத்தொடர்ந்து சபா நாயகர் அப்பாவு 'உறுப்பினர் வேல்முருகன் அப்போது (அ.தி.மு.க.) ஆட்சியில் நடந்ததாகத்தான் குறிப்பிட்டு பேசுகிறார். அதில் குற்றச்சாட்டு இருப்பதாக தெரியவில்லை' என்றார்.

    அப்போது குறுக்கிட்டு பேசிய எடப்பாடி பழனிசாமி டி.என்.பி.எஸ்.சி தேர்வில் மிகப்பெரிய தவறு நடந்துள்ளது என்று குறிப்பிட்டு சில வார்த்தைகளை தெரிவித்தார்.

    அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 'எதிர்க்கட்சி தலைவர் ஆதாரமில்லாமல் குற்றம் சுமத்தி சில வார்த்தைகளை கூறி இருக்கிறார். அந்த வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் ' என்றார்.

    அதை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் அந்த வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். இதையடுத்து எழுந்து பேசிய வேல் முருகன் எம்.எல்.ஏ., அ.தி. மு.க.வினரை பார்த்து கார சாரமாக கையை உயர்த்தியபடி பேசினார். அதற்கு பதில் அளித்து அ.தி.மு.க. வினரும் பேசியதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், வேல் முருகனை பார்த்து நேரடியாக இப்படி பேசக்கூடாது. நீங்கள் அமருங்கள்' என்றார்.

    இதைத்தொடர்ந்து மார்க்சிஸ்டு எம்.எல்.ஏ. நாகை மாலி, பா.ம.க. எம்.எல்.ஏ. அருள், இந்திய கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் ஆகியோரும் டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு தொடர்பாக தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

    இதற்கு பதில் அளித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார். அவர் கூறியதாவது:-

    டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு தொடர்பாக விரிவான விளக்கத்தை பின்னர் தான் தெரிவிக்க முடியும். தற்போது என்னிடம் ஓரளவு பதில் உள்ளது. அதை இந்த அவைக்கு தெரிவிக்கிறேன்.

    குறிப்பிட்ட சில மையங்களை சேர்ந்தவர்கள் தேர்வில் அதிக அளவில் தேர்ச்சி பெற்றிருப்பதாக வெளியான தகவல் தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் சிலரிடம் விரிவான விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

    டி.என்.பி.எஸ்.சி.யில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறோம். உதாரணத்துக்கு ஒன்றை சொல்கிறேன். என்னிடம் ஒரு கோப்பு வந்துள்ளது. அதில் 7 ஆயிரம் பேரை தேர்வு செய்ய 21 லட்சம் பேர் விண்ணப்பித்து இருப்பதாகவும், அந்த தேர்வை நடத்த ரூ.42 கோடி செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அப்போது நான் இது ஏற்புடையதல்ல என்று அதிகாரிகளிடம் தெரிவித்தேன். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் அரசே சில சீர்திருத்தங்களை செய்ய உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 50 ஏக்கர் நிலத்தில் இருந்த செம்மண் எடுக்கப்பட்டுள்ளது.
    • இடுபொருள் மானியம் உள்ளிட்ட நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடலூர்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட நகர ஒன்றிய வட்ட செயலாளர்கள் கூட்டம் கடலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் மாவட்ட குழு உறுப்பினர் ராஜா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மாதவன் , மாநில குழு உறுப்பினர் ரமேஷ் பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உதயகுமார், ரவிச்சந்திரன், அசோகன், தேன்மொழி, ராஜேஷ் கண்ணன் , தண்டபாணி, பாலமுருகன், ஜெயபாண்டியன், ஏழுமலை, விஜய், பஞ்சாசரம், அன்பழகன், ஆழ்வார் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பண்ருட்டி ஒன்றியத்தில் உள்ள சேதமைடைந்த முந்திரி பயிர்களை தோட்டக்கலைத் துறை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுப்பு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இடுபொருள் மானியம் உள்ளிட்ட நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடலூர் எம். புதூர், திருவந்திபுரத்தில் செம்மண் குவாரிகள் அமைக்கப்பட்டு 50 ஏக்கர் நிலத்தில் இருந்த செம்மண் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது கொண்டங்கி ஏரி உள்ள பகுதியில் நடுவீரப்பட்டு உள்ளிட்ட இடங்களில் தினசரி நூற்றுக்கணக்கான லாரிகளில் செம்மண் பாதுகாப்பு இன்றி எடுத்துச் செல்லப்படுகிறது. இதற்கு முறையாக அனுமதி பெற்றுள்ளதா என்பதை சுரங்கத்துறையும் மாவட்ட நிர்வாகமும் தெளிவுப்படுத்த வேண்டும். எனவே இதனை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் முறைகேடுகளாக நடக்கும் மண் குவாரிகளை இழுத்து முடவும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக மண் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • காஞ்சிபுரம் மவாட்டத்தில் உள்ள நல்லுறவு கூடத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • நேரடி கொள்முதல் மையங்களில் ஏக்கருக்கு 30 மூட்டை மட்டுமே நெல் கணக்கிட்டு எடுக்கப்படுகிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நல்லுறவு கூடத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்களின் குறைகளை தெரிவித்தனர்.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நேரு கூறுகையில், "நேரடி கொள்முதல் மையங்களில் ஏக்கருக்கு 30 மூட்டை மட்டுமே நெல் கணக்கிட்டு எடுக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 35 மூட்டைகளாவது நெல் கணக்கிட்டு எடுக்க வேண்டும்" என்றார். ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ராமராஜபுரம் பகுதியை சேர்ந்த ஒருவர் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் ஏரி குளங்களில் மீன் பிடிக்க ஏலம் விடுவதில் முறைகேடுகள் நடப்பதாக புகார் தெரிவித்தார்.

    ரூ.4 லட்சத்துக்கும் அதிகமாக ஏலம் போக வேண்டிய ஏரி மீன்களை உள்ளூர் பிரமுகர்கள் சிலருடன் அதிகாரிகள் சிண்டிகேட் அமைத்துக்கொண்டு ரூ.28 ஆயிரத்துக்கு மட்டுமே ஏலம் விடுவதாக புகார் தெரிவித்தார்.

    • மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெறாமல் அரிசி ஆலை இயங்கி வந்தது தெரிய வந்தது.
    • சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் அரிசி ஆலை இயக்கத்தை நிறுத்த வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி சிங்கனூர் பகுதியில் தனியார் அரிசி ஆலை செயல்பட்டு வருகிறது. அரிசி ஆலையால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் கூறி வந்தனர். உரிய அனுமதி இன்றியும், விதிமுறைகளை மீறி இயங்கி வரும் அரிசி ஆலையின் உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தும், அரிசி ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.இதையடுத்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் அரிசி ஆலையை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ( திருப்பூர் தெற்கு ) சுற்றுச்சூழல் பொறியாளர் சாமிநாதன் அறிவுறுத்தலின்படிஉதவி சுற்றுச்சூழல் பொறியாளர் வனஜா தலைமையில் அதிகாரிகள் அரிசி ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெறாமல் அரிசி ஆலை இயங்கி வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், அந்த ஆலையின் மின் இணைப்பை துண்டிக்க, மின்வாரியத்திற்கு பரிந்துரை செய்தனர். பரிந்துரையின் பேரில் அரிசி ஆலையின் மின் இணைப்பை மின்வாரிய அதிகாரிகள் துண்டித்தனர். இந்த நிலையில் மின் இணைப்பை துண்டித்த பின்னும் இரவு நேரங்களில் ஜெனரேட்டர் மூலம் அந்த அரிசி ஆலை இயங்குவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உரிய அனுமதி இன்றி செயல்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் அரிசி ஆலை இயக்கத்தை நிறுத்த வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    ×