search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் முறைகேடு
    X

    வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் முறைகேடு

    • திருச்சி மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அதிகாரிகள் பெயரை சொல்லி முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு
    • ஓராண்டாக ஆர்.டி.ஓ. நியமிக்கப்படாததால் பொதுமக்கள் அவதி

    திருச்சி,

    திருச்சி பிராட்டியூரில் திருச்சி மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் பழகுனர் உரிமம், ஓட்டுனர் உரிமம், புதிய வாகன பதிவு, வாகன உரிம பெயர் மாற்றம், வாகன அனுமதி சீட்டு,வாகன தகுதிச் சான்று, பொதுப்பணி வில்லை போன்ற பல்வேறு தேவைகளுக்கு பொதுமக்கள் வந்து செல்கிறார்கள்.மேற்கண்ட தேவைகளுக்கு ஆன்லைனில் அதற்குரிய கட்டணத்தை செலுத்தும் வசதி தற்போது நடைமுறையில் உள்ளது. முறைகேடுகளை தடுத்து பொதுமக்களுக்கு விரைவான சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆன்லைன் வசதி கொண்டுவரப்பட்டது.ஆனால் இப்போதும் புரோக்கர்களின் துணை இல்லாமல் பெரும்பாலான மக்களால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் எதையும் பெற முடியாத நிலையே நீடிக்கிறது.பேட்ஜ் எனப்படும் பொது வாகனங்களை இயக்குவதற்கான வில்லைகள் பெற்றுக் கொள்வதற்கு அரசு ரூ. 315 மட்டுமே கட்டணம் நிர்ணயித்துள்ளது.ஆனால் இதனை புரோக்கர்கள் வாயிலாக கூடுதல் தொகை செலவழிக்காமல் வாங்க இயலவில்லை.இவற்றையெல்லாம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில் பிராட்டியூர் திருச்சி மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த ஒரு வருட காலமாக வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நியமிக்கப்படவில்லை.அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கூடுதல் பொறுப்பினை வகித்து பணியாற்றி வருகின்றனர்.

    வாரத்தில் ஒன்றிரண்டு தினங்கள் மட்டுமே முழுநேர பணிகளை மேற்கொள்கிறார்கள். இதனால் பொதுமக்களும் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பல நாட்கள் காத்திருக்க வேண்டிய அவலம் நீடிக்கிறது.பெரும்பாலான பணிகளை போக்குவரத்து ஆய்வாளர்களே செய்து முடிக்கிறார்கள். இந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை பொருத்தமட்டில் காத்திருக்கும் மக்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. காத்திருப்பு பகுதியில் குறைந்த அளவு இருக்கைகளே உள்ளன.இதுபோன்ற சிக்கலான நிலைகளில் பொதுமக்கள் புரோக்கர்களை நாட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள்.இதனை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் சில புரோக்கர்கள் அதிகாரிகளின் பெயர்களை சொல்லி லஞ்சம் வாங்குவதாகவும் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் புலம்புகின்றனர்.இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க உடனடியாக வட்டார போக்குவரத்து அலுவலர் நியமிக்க வேண்டும் என பொதுமக்களும் ஊழியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×