search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்குவரத்து நெரிசல்"

    • தனியார் கண்டெய்னர் யார்டு அருகே கிராமமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த நாலூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாலூர் அண்ணாநகர், கம்மார்பாளையம், தெலுங்கு காலனி, கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

    இப்பகுதி பொதுமக்கள் போக்குவரத்திற்காக பொன்னேரி-மீஞ்சூர் நெடுஞ்சாலையில் இருந்து கிராமத்திற்கு செல்லும் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். அப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கண்டெய்னர் யார்டு,குளிர்பதன கிடங்குகளுக்கு வரும் கனரக வாகனங்களால் இந்த சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறி உள்ளது. மேலும் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையில் சேதமடைந்த சாலை தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்க லாயக்கற்று மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகின்றன.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் 12 வருடத்திற்கு முன்பு போடப்பட்ட சாலையை சீரமைக்க கோரியும், கண்டெய்னர் யார்டில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஏரியில் விடப்படுவதை கண்டித்தும், உயர்மின் கோபுரத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராவை அகற்ற கோரியும்,தனியார் கண்டெய்னர் யார்டு அருகே கிராமமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியே வந்த லாரியை சிறைபிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் குமார், வட்டாட்சியர் மதிவாணன் மறியலில் ஈடுபட்டுவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். ஒரு வாரத்தில் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து கிராமமக்கள் மறியில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • போக்குவரத்து நெரிசலால் பொது மக்கள் அவதி
    • அடிக்கடி வாகனங்கள் விபத்து ஏற்படுவதாக புகார்

    ஜோலார்பேட்டை:

    ஆந்திர மாநிலம், நெல்லூர் பகுதியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு காற்றாலை ஏற்றிக்கொண்டு கடந்த 5 நாட்களுக்கு முன்பு லாரி ஒன்று வந்தது. கடந்த 6 நாட்களுக்கு முன்பு நாட்டறம்பள்ளி தண்ணீர் பந்தல் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் நிறுத்தப்பட்டது.

    போக்குவரத்துக்கு இடை யூறாக, காற்றாலையுடன் லாரி நிற்ப்பதால், அங்கு அடிக்கடி வாகனங்கள் விபத்து ஏற்படுகிறது.

    சில சமயங்களில் சர்வீஸ் சாலை வழியாக லாரி உள்ளிட்ட வாகனங்கள் வரும்போது, கடந்த செல்ல வழி இல்லாமல் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர்.

    இது குறித்து காற்றாலை ஏற்றி வந்த லாரி டிரைவரிடம் விசாரித்த போது, கர்நாடக மாநிலத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய இடத்தில் சாலை பணிகள் நடை பெறுவதால் எங்களால் குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் தவித்து வருகிறோம்.

    சாலை சீரமைக்கப்பட்ட பிறகு தான் எங்களுக்கு அனுமதி கிடைக்கும். இதனால் வேறு வழியின்றி இதே இடத்தில் நிற்க வேண்டிய சூழல் உள்ளது என்றார். எனவே அதிகாரிகள் சர்வீஸ் சாலையில் நிற்க்கும் லாரியை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    • திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
    • திருமணம் போன்ற விஷேச நாட்களில் இந்த வாகன போக்குவரத்து எண்ணிக்கை 60 ஆயிரத்தை எட்டுகிறது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, அவிநாசி, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால், பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை எண் 81- ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்ற வண்ணம் உள்ளது. இதற்கிடையே திருமணம் போன்ற விஷேச நாட்களில் இந்த வாகன போக்குவரத்து எண்ணிக்கை 60 ஆயிரத்தை எட்டுகிறது. இந்த நிலையில் நேற்று (வியாழக்கிழமை) சுப முகூர்த்த நாள் என்பதால் கார் உள்ளிட்ட வாகனங்களின் எண்ணிக்கை, வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்த வண்ணம் சென்றது. இதனால் கோவை-திருச்சி மெயின் ரோட்டிலும், மங்கலம் ரோட்டிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அண்ணா நகர் முதல், பனப்பாளையம் தாராபுரம் ரோடு பிரிவு வரை, ஆயிரக்கணக்கான வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து சென்றன. இதற்கிடையே போக்குவரத்து போலீசார் மற்றும் சட்டம் -ஒழுங்கு போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். அப்படி இருந்தும் அதிகமான வாகன போக்குவரத்தால் பல்லடம் நகரை கடந்து செல்வதற்கு சுமார் 20 நிமிடங்களுக்கு மேலானது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.

    • பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பாலப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
    • நேற்று மாலை 4 மணி முதல் சாலையின் இரு புறமும் வாகனங்கள் அதிகரித்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    ஆலங்குளம்:

    நெல்லை - தென்காசி நான்கு வழிச் சாலைப் பணிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 70 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன.

    பாலப்பணிகள்

    ஆலங்குளம் தொட்டி யான்குளம் கரைப் பகுதியில் பாலப் பணிகள் மற்றும் பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பாலப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாகவும், பாலம் வேலை நடைபெறும் இடங்களில் வாகனங்கள் சென்று வர நெடுஞ்சாலைத்துறையினர் போதிய முன் ஏற்பாடுகள் செய்யாததால் இரு இடங்களிலும் அடிக்கடி, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

    இப்பகுதியில் சாலையை சீரமைத்து போக்குவரத்தை எளிதாக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் நெடுஞ்சாலைத்துறையினர் பொதுமக்களின் கோரிக்கை களைக் கண்டு கொள்ளவில்லை என கூறினர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை இப்பகுதியில் பெய்த கன மழையால் தொட்டியான்குளம் கரைப் பகுதியில் சாலை வலுவிழந்து சேதமடைந்தது. இதனால் இரு வாகனங்கள் சென்று வர வேண்டிய இடத்தில் ஒரு வாகனம் மட்டுமே சென்று வந்ததால் சாலை முழுவதும் சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் நேற்று மாலை 4 மணி முதல் சாலையின் இரு புறமும் வாகனங்கள் அதிகரித்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    தகவல் அறிந்து வந்த ஆலங்குளம் போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் சாலையில் மண் மற்றும் ஜல்லிக்கற்கள் போட்டு ஒரு புறமாக வாகனங்கள் செல்ல வழி செய்தனர்.

    சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக 5 கி. மீ தூரத்திற்கு வாகனங்கள் காத்திருந்து சென்றதால் நெல்லை மற்றும் தென்காசி ரயில் நிலையத்திற்கு சென்ற பயணிகள், மருத்துவமனைக்கு சென்ற நோயாளிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இரவானதால் சாலையை சீரமைப்பதில் தொய்வு ஏற்பட்டது.

    தொடர்ந்து இரவில் போலீசார் அப்பகுதியில் நின்று போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    நெடுஞ்சாலைத்துறை யின் பெரும் அலட்சியத்தால் ஆலங்குளத்தில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் பயணிகளும் கடும் அவதிக்குள்ளாயினர் என வாகன ஓட்டுனர்கள் புகார் தெரிவித்தனர்.

    • போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் பணியில் 12 இன்ஸ்பெக்டர்கள், 15 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர்.
    • தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து வழக்கம்போல் இருந்தது.

    மதுராந்தகம்:

    தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசித்த வெளிமாவட்டத்தை சேர்ந்த சுமார் 10 லட்சம் பேர் பஸ், கார், ரெயில்களில் சொந்த ஊர்களுக்கு சென்றனர். சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு செல்ல 16 ஆயிரம் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. இதேபோல் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்பிவரவும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    நேற்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் நேற்று மாலை முதல் கார் மற்றும் பஸ்களில் சென்னை வரத்தொடங்கினர். ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் சென்னை நோக்க வரத்தொடங்கியதால் நேற்று இரவு முதலே சென்னை புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படத்தொடங்கியது.

    இந்த போக்குவரத்து நெரிசல் விடிய, விடிய நீடித்தது. செங்கல்பட்டு மாவட்ட தொடக்க எல்லையான மதுராந்தகம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியில் ஏராளமான வாகனங்கள் இரவில் அணிவகுத்து நின்றன. இதையடுத்து வாகனங்களை விரைவாக சென்னை நோக்கி அனுப்புவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வழக்கம்போல் 5 கவுண்டர்களில் செல்லும் வாகனங்கள் கூடுதலாக 3 கவுண்டர்கள் வழியாக அனுப்பப்பட்டன. கூடுதல் கவுண்டர்கள் வழியாக வாகனங்கள் விரைந்து சென்றன. நள்ளிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் வாகனங்கள் மெதுவாக சென்றன.

    இதேபோல் பரனூர் சுங்கச்சாவடியிலும் இரவு முதலே வாகனங்கள் அணிவகுத்து காத்திருந்தன. அங்கும் கூடுதல் கவுண்டர்கள் வழியாக சென்னைக்குள் அனுப்பப்பட்டன. சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் வாகனங்கள் மொத்தமாக செல்வதை தடுக்கும் வகையில் விழுப்புரம், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் வாகனங்களை நிறுத்தி அனுப்பி வைத்தனர். இன்று அதிகாலை வரை அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வாகனங்கள் அணிவகுத்து வந்து கொண்டு இருந்தன.

    சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் வெளியூர்களில் இருந்து வந்த பஸ்கள் அனைத்தும் வண்டலூரில் இருந்து மீஞ்சூர் புறவெளி வட்டச்சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. இதனால் தாம்பரம், பெருங்களத்தூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் இல்லை. எனினும் வண்டலூர் பகுதியில் ஏராளமான பயணிகள் இறங்கி மாறி சென்றதால் அங்கு கடுமையாகன நெரிசல் ஏற்பட்டது. கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சரிசெய்தனர். பயணிகள் செல்வதற்கு மாநகர பஸ்களும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. இதனால் தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து வழக்கம்போல் இருந்தது.

    கோயம்பேடு நோக்கி வந்த வாகனங்களால் கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் தொடங்கி 100அடி சாலையில் ஈக்காட்டுதாங்கல், அசோக் பில்லர், வடபழனி உள்ளிட்ட முக்கிய சந்திப்பில் அதிகாலை 4மணி முதலே கடும் நெரிசல் ஏற்பட்டது. காலை 6 மணிக்கு மேல் கோயம்பேடு காய்கறி மார்கெட்டில் இருந்து வரும் வாகனங்கள், ஆம்னி பஸ்கள், அலுவலகம் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு புறப்பட்டு செல்பவர்கள் என ஏராளமானோர் ஒரே நேரத்தில் பயணம் மேற்கொண்டதால் மதுரவாயல்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஸ்தம்பித்து நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் பணியில் 12 இன்ஸ்பெக்டர்கள், 15 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர். கோயம்பேடு-பூந்தமல்லி நெடுஞ்சாலை, 100 அடி சாலை பஸ் நிலைய சந்திப்பு, மெட்டுக்குளம் சந்திப்பு, காளியம்மன் கோவில் தெரு சந்திப்பு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ஏராளமான போலீசார் நெரிசலை சீரமைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

    • பஸ்கள் மற்றும் தங்களது சொந்த வாகனங்களில் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
    • போதுமான மாநகர பேருந்துகள் இயக்கப்படாதால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

    தாம்பரம்:

    கடந்த 12-ந் தேதி தீபாவளி பண்டிகை மற்றும் தொடர் விடு முறையை முடித்துக் கொண்டு தென் மாவட்ட மற்றும் வட மாவட்டங்களில் உள்ள பல ஊரிலிருந்து சென்னை நோக்கி அதிகப்படியான மக்கள் அரசு பேருந்து தனியார் வாகனங்கள் ஆம்னி பஸ்கள் மற்றும் தங்களது சொந்த வாகனங்களில் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    வண்டலூர் மீஞ்சூர் பைபாஸ் சாலையில் வாகனங்களை பிரித்து அனுப்புவதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. அங்கு போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்காக போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இரவு முதல் கனமழை பெய்து வருவதால் சாலை ஓரம் குளம் போல் மழை நீர் தேங்கி உள்ளது. பொதுமக்கள் வண்டலூரில் இறக்கிவிடப்பட்டு அங்கிருந்து தனியார் வாகனங்கள் ஆட்டோ, கால் டாக்சி உள்ளிட்ட வாகனங்கள் செல்கின்றனர்.

    போதுமான மாநகர பேருந்துகள் இயக்கப்படாதால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

    • சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, வண்டலூர் வெளிவட்ட சாலை பகுதியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
    • ஒரே நேரத்தில் சாலைகளில் படையெடுத்த வாகனங்களால் போக்குவரத்தை சீர் செய்யும் பணி போலீசாருக்கு கடும் சவாலாகவே இருந்தது.

    சென்னை:

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை (12-ந்தேதி) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊர் புறப்பட்டு சென்றனர். சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஏற்கனவே நிரம்பிவிட்டன. சென்னையில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள், சிறப்பு வந்தே பாரத் ரெயில்கள் ஆகியவையும் உடனடியாக நிரம்பின.

    மேலும் சென்னையில் இருந்து இயக்கப்பட்ட அரசு விரைவு பஸ்கள், அரசு சிறப்பு பஸ்கள், ஆம்னி பஸ்கள் ஆகியவையும் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. கார் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் சென்றவர்களும் தீபாவளிக்கு ஒரு நாளுக்கு முன்பு சொந்த ஊரில் இருக்கும் வகையில் நேற்றே புறப்பட்டு சென்றனர்.

    சொந்த ஊருக்கு செல்ல ஒரே நேரத்தில் திரண்ட மக்கள் வெள்ளத்தால் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து சென்னையில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய போக்குவரத்து நெரிசல் இன்று அதிகாலை 2.15 மணி வரை சுமார் 10 மணி நேரத்துக்கு மேல் நீடித்தது.

    அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நேற்று சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களுடன், கூடுதலாக 1895 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதன் பிறகு பயணிகள் வருகை அதிகரித்ததால் கூடுதலாக 138 பஸ்கள் இயக்கப்பட்டன.

    ஆம்னி பஸ்களை பொறுத்தவரை வழக்கமாக இயக்கப்படும் 900 பஸ்களுடன் கூடுதலாக 700 பஸ்கள் இயக்கப்பட்டன. அதன் பிறகும் பயணிகள் வருகை இருந்ததால் மேலும் 80 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டன.

    இது தவிர கார்கள் உள்பட சொந்த வாகனங்களிலும் நேற்று ஏராளமானோர் சென்னையில் இருந்து புறப்பட்டு சொந்த ஊருக்கு சென்றனர். வழக்கமாக சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் சாலைகளில் பயணிக்கும் வாகனங்களை விட நேற்று 2 மடங்கு வாகனங்கள் ஒரே நேரத்தில் சென்றன. இதனால் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் சாலைகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறின.

    சென்னை கோயம்பேட்டில் இருந்து அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள் அனைத்தும் பூந்தமல்லி வழியாக வெளி வட்டச்சாலையில் திருப்பி விடப்பட்டு அங்கிருந்து நேராக வண்டலூர் சென்று பின்னர் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும் கார்கள் மற்றும் சொந்த வாகனங்களில் சென்ற பயணிகளும் வெளிவட்டச் சாலை வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.


    தாம்பரத்தில் இருந்து புறப்பட்ட பஸ்கள் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து புறப்பட்ட வாகனங்களால் பெருங்களத்தூரில் இருந்து வண்டலூர் வரை நெரிசல் காணப்பட்டது. பெருங்களத்தூர் வழியாக சென்ற பஸ்கள் மற்றும் வாகனங்களும், வெளிவட்டச்சாலை வழியாக சென்ற பஸ்கள் மற்றும் வாகனங்களும் வண்டலூர் பகுதியில் ஒரே நேரத்தில் சாலையை கடக்க திரண்டதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் உருவானது.

    சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, வண்டலூர் வெளிவட்ட சாலை பகுதியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    வண்டலூர் அருகேயுள்ள டோல்கேட்டில் இருந்து வண்டலூர் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையிலேயே அணிவகுத்து நின்றன. இந்த ஒரு கிலோ மீட்டர் தூரத்தை வாகனங்கள் கடக்க சுமார் 3 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை ஆனது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டனர்.

    இதற்கிடையே வண்டலூரை கடந்து சென்ற வாகனங்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலைய பகுதியில் இருந்து ஊரப்பாக்கம் வரை மீண்டும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறின. அரசு போக்குவரத்து கழக பஸ்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்குள் சென்று அங்கு பஸ்சுக்காக காத்திருந்த பயணிகளை ஏற்றி சென்றன.

    நேற்று மாலையில் இருந்து இரவு வரை சுமார் 1500-க்கும் மேற்பட்ட அரசு போக்குவரத்து கழக பஸ்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்குள் புகுந்து பயணிகளை ஏற்றி சென்றன. மேலும் சென்னையில் இருந்து சென்ற ஆம்னி பஸ்களும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்குள் சென்று முன்பதிவு செய்திருந்த பயணிகளை ஏற்றி சென்றன.

    இதனால்அந்த பஸ்கள் வெளியே வரும் பகுதியில் இருந்து ஊரப்பாக்கம் வரை போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. அதன் பிறகும் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கபெருமாள் கோவில் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதிகளில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்த படியே சென்றன.

    குறிப்பாக மறைமலைநகரில் இருந்து சிங்கபெருமாள் கோவில் வரை சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு பஸ்கள் மற்றும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் பாலப்பணிகள் வேலை நடைபெறுகிறது. மேலும் அந்த பகுதியில் ஸ்ரீபெரும்புதூருக்கு செல்லும் சாலையில் ரெயில் தண்டவாளத்தை கடக்க வாகனங்கள் சுமார் 10 நிமிடம் முதம் 30 நிமிடம் வரை காத்திருந்தன.

    தண்டவாளத்தை கடக்கும் வாகனங்களும் அதிக அளவில் வந்ததால் சிங்கபெருமாள் கோவில் பகுதியில், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணி வகுத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் வாகனங்கள் அந்த இடத்தை கடக்க அதிக நேரம் ஆனது.

    இதனால் நேற்று சென்னை நகரில் இருந்து சொந்த ஊருக்கு சென்ற பயணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திக்குமுக்காடினார்கள்.

    போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட பகுதிகளில் போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். ஆனாலும் ஒரே நேரத்தில் சாலைகளில் படையெடுத்த வாகனங்களால் போக்குவரத்தை சீர் செய்யும் பணி போலீசாருக்கு கடும் சவாலாகவே இருந்தது.

    நள்ளிரவை தாண்டிய பிறகு சாலைகளில் வரும் வாகனங்கள் குறையத் தொடங்கின. அதன் பிறகு போக்குவரத்து ஓரளவு சீராகத் தொடங்கியது. தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கப்பெருமாள் கோவில் ஆகிய பகுதிகளில் அதிகாலை 2.15 மணிக்கு பிறகே போக்குவரத்து சீரானது.

    செங்கல்பட்டு அருகே பரனூர் சோதனை சாவடியில் வழக்கமாக 6 வழிப்பாதையில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வந்தது. தீபாவளி போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு நேற்று 8 வழிப்பாதையிலும் வாகனங்கள் சென்றன. இதனால் செங்கல்பட்டை தாண்டியபிறகு எந்த நெரிசலும் இல்லாமல் வாகனங்கள் சென்றன. அதிகாலைக்கு பிறகு இன்று காலை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை. போக்குவரத்து சீராக காணப்பட்டது.

    இதேபோல் சென்னை கிழக்கு கடற்கரை சாலை வழியாக வாகனங்களில் வெளியூர் சென்ற பயணிகளால் சென்னை திருவான்மியூர், சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், செம்மஞ்சேரி பகுதிகளில் நேற்று இரவு கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

    • விட்டு விட்டு பலத்த மழையாக கொட்டியது.
    • மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் அவதி அடைந்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் இன்று அதிகாலை 5 மணி முதல் பரவலாக மழை பெய்தது. காலை 7 மணி வரை விட்டு விட்டு பலத்த மழையாக கொட்டியது. பின்னர் சாரல் மழையாக நீடித்தது. இதேபோல் காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், சுங்குவார் சத்திரம், ஓரகடம், பாலு செட்டி சத்திரம், சாலவாக்கம், என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டியது.

    திடீர் மழையால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் அவதி அடைந்தனர். போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    • ஆலங்குளத்தில் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் எப்போதும் அதிகரித்து காணப்படும்.
    • போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் பேரிகார்டுகள் உடனடியாக வைக்கப்பட்டன.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் எப்போதும் அதிகரித்து காணப்படும். இதன்காரணமாக அங்கு ஏற்படும் விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் ஆங்காங்கே பேரிகார்டுகள் வைக்க போலீசார் முடிவு செய்தனர்.

    இதையடுத்து போலீசாரின் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் ஆலங்குளத்தில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனம் சார்பில் பேரிகார்டுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கார்த்திகா ஸ்டோர்ஸ் உரிமையாளர் எஸ்.எம்.டி. ரத்தினசாமி தலைமை தாங்கினார்.

    வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தென்காசி மாவட்டத் தலைவர் டி.பி.வி. வைகுண்டராஜா, செயலாளர் வி.கணேசன், பொருளாளர் ஐ.வி.என்.கலைவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆலங் குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபால் பர்ணபாஸ், இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது ஆகியோரிடம் 8 பேரிகார்டுகள் ஒப்படைக்கப்பட்டன.

    இதைத் தொடர்ந்து, ஆலங்குளம் பிரதான சாலை மற்றும் அம்பாசமுத்திரம் சாலை ஆகியவற்றில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் பேரிகார்டுகள் உடனடியாக வைக்கப்பட்டன.

    • கர்நாடக பகுதி மக்கள் ஆண்டு தோறும் தமிழகத்திற்கு வந்து தான் தங்களுக்கு தேவையான பட்டாசுகளை வாங்கி செல்கின்றனர்.
    • ஆண்டுக்கு ஒரு முறை தான் குழந்தைகளுக்காக இங்கு பட்டாசுகளை வாங்க வருகிறோம் எனவும் அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    ஓசூர்:

    கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் கடந்த மாதம் 7 ந்தேதி பட்டாசு விற்பனை கடை மற்றும் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர், இதன் காரணமாக மாநில எல்லையான அத்திப்பள்ளி பகுதியில் இந்த வருடம் பட்டாசு விற்பனைக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

    மேலும் கர்நாடகா மாநிலத்தில் பட்டாசு அதிக விலைக்கு விற்கப்படுவதாக தெரிகிறது. இதன் காரணமாக அருகேயுள்ள தமிழக எல்லையான ஜூஜூவாடி பகுதியில் உள்ள பட்டாசு கடைகளில் விடுமுறை தினமான நேற்று மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து தேவையான பட்டாசுகளை வாங்கிச் சென்றனர்.

    இந்தாண்டு தமிழக அரசு 2 மணி நேரம் மட்டுமே தங்கள் வீடுகளில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளதால், தமிழக மக்கள் தற்போது பட்டாசுகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. ஆனால் கர்நாடக பகுதி மக்கள் ஆண்டு தோறும் தமிழகத்திற்கு வந்து தான் தங்களுக்கு தேவையான பட்டாசுகளை வாங்கி செல்கின்றனர்.

    குறிப்பாக கர்நாடகவில் விலை கூடுதலாக உள்ளதால் தொடர்ந்து தமிழகத்திற்கு படையெடுத்து வருகின்றனர். தவிர, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கடைகளில் மட்டுமில்லாமல் சாலைகளிலும் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. இந்த ஆண்டு புதிய ரக பட்டாசுகளும் அதிகளவில் வந்துள்ளதால் அதனை சிறுவர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர், பட்டாசுகளை பொறுத்த வரை இந்த வருடம் விலை ஏற்றம் என்பது சற்று குறைவாகவே காணப்படுகின்றது என பட்டாசு வாங்க வந்தவர்கள் தெரிவித்தனர்.

    குறிப்பிட்ட கடைகளில் மட்டும் வாங்க வருவதால் அவர்கள் அதிகளவில் தள்ளுபடி கொடுக்கிறார்கள் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். பெரும்பாலானோர் பட்டாசுகளை வாங்குவதற்கு கார்களில் வந்தனர். இதனால், கார்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லாததால் தேசிய நெடுஞ்சாலையோரமும் சர்வீஸ் சாலையிலும் கார்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசலும் அதே போல் கடைகளிலும் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. ஆண்டுக்கு ஒரு முறை தான் குழந்தைகளுக்காக இங்கு பட்டாசுகளை வாங்க வருகிறோம் எனவும் அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    • மதுரவாயல் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக இன்று காலையில் இருந்தே கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
    • சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலையில் பலத்த மழை பெய்தது. அதன் பிறகும் பல இடங்களில் மழை விட்டு விட்டு பெய்தது. இதன் காரணமாக சென்னையில் இன்று பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. சென்னை மதுரவாயல் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக இன்று காலையில் இருந்தே கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

    மழை சற்று ஓய்ந்திருந்த நேரத்தில் அனைத்து வாகனங்களும் ஒரே நேரத்தில் சாலையில் செல்லத்தொடங்கியதால் நேரம் செல்லச்செல்ல போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது. மதுரவாயல்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இன்று காலையில் வாகனங்கள் நெரிசல் காரணமாக ஊர்ந்தே சென்றன. அங்கு சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள். இதையடுத்து அங்கு போக்குவரத்தை சரி செய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர்.

    • 65 சிக்னல்களிலும் பரபரப்பான நேரங்களில் 10 நிமிடங்கள் வரையில் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பது தெரியவந்துள்ளது.
    • போக்குவரத்து சிக்னல் இல்லாமல் வாகனங்கள் செல்வதற்கு வழி ஏற்படுத்துவது குறித்தும் போலீசார் ஆலோசனை நடத்தினர்.

    சென்னை:

    சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை தீர்ப்பதற்காக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் போக்குவரத்து சிக்னலில் நீண்ட நேரமாக காத்திருப்பதும் நெரிசலுக்கு ஒரு காரணம் என்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக போக்குவரத்து போலீசார் சென்னை மாநகர் முழுவதும் போக்குவரத்து சந்திப்புகளில் அதிரடி ஆய்வு நடத்தினர்.

    இதில் சென்னை மாநகர் முழுவதும் 65 சிக்னல்களில் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து அது போன்ற சிக்னல்களில் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டியது என்பது பற்றியும் போலீசார் ஆய்வு செய்தனர். இதில் இந்த 65 சிக்னல்களிலும் பரபரப்பான நேரங்களில் 10 நிமிடங்கள் வரையில் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதும் தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து போக்குவரத்து சிக்னல் இல்லாமல் வாகனங்கள் செல்வதற்கு வழி ஏற்படுத்துவது குறித்தும் போலீசார் ஆலோசனை நடத்தினர். இதில் சிக்னலை கடந்து நேராக செல்லும் வாகனங்கள் எத்தனை? வளைவில் திரும்பி செல்லும் வாகனங்கள் எத்தனை? என்றும் ஆய்வு செய்யப்பட்டது. இதில் நேராக செல்லும் வாகனங்கள் அதிக அளவிலும் வளைவில் செல்லும் வாகனங்கள் குறைந்த அளவிலும் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சிக்னல்களை மூடிவிட்டு யூ வளைவில் திரும்புவதை தடுத்து அந்த வாகனங்கள் சில அடி தூரம் சென்று மீண்டும் திரும்பி வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஏற்பாடுகளை ஸ்பென்சர் சந்திப்பு மற்றும் தி.நகர் சிக்னல் ஆகிய இடங்களில் போலீசார் அமல்படுத்தி இருக்கிறார்கள். இது தொடர்பாக போலீசார் கூறும்போது, 'கோவை மாநகரில் இதுபோன்று சிக்னல்களில் போக்குவரத்து மாற்றங்களை மேற்கொண்டதில் நல்ல பலன் கிடைத்திருப்பதாகவும் அந்த முறையை சென்னையில் தற்போது அமல்படுத்த முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறும்போது, சென்னை மாநகர் முழுவதும் இது போன்று மேலும் பல சிக்னல்களை அணைத்து விட்டு வாகனங்களை இயக்க முடியுமா? என்பது பற்றி தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறோம் என்று தெரிவித்தனர்.

    இந்த போக்குவரத்து மாற்றம் வாகனங்களுக்கு சில அசவுகரியங்களை ஏற்படுத்தினாலும் சிக்னல்களில் நேராகச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு வசதியாக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    இதன் மூலம் சென்னை மாநகரில் விரைவில் பல்வேறு சாலைகளில் உள்ள போக்குவரத்து சிக்னல்கள் அணைத்து வைக்கப்பட்டு வாகனங்கள் இயக்கப்படும் என்று தெரிகிறது. இது தொடர்பாக போலீசார் ஆய்வு நடத்தி முடிவுகளை மேற்கொள்ள உள்ளனர்.

    ×