search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சொந்த ஊருக்கு செல்ல திரண்ட மக்கள் வெள்ளம்: சென்னையில் 10 மணி நேரம் நீடித்த போக்குவரத்து நெரிசல்
    X

    சொந்த ஊருக்கு செல்ல திரண்ட மக்கள் வெள்ளம்: சென்னையில் 10 மணி நேரம் நீடித்த போக்குவரத்து நெரிசல்

    • சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, வண்டலூர் வெளிவட்ட சாலை பகுதியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
    • ஒரே நேரத்தில் சாலைகளில் படையெடுத்த வாகனங்களால் போக்குவரத்தை சீர் செய்யும் பணி போலீசாருக்கு கடும் சவாலாகவே இருந்தது.

    சென்னை:

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை (12-ந்தேதி) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊர் புறப்பட்டு சென்றனர். சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஏற்கனவே நிரம்பிவிட்டன. சென்னையில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள், சிறப்பு வந்தே பாரத் ரெயில்கள் ஆகியவையும் உடனடியாக நிரம்பின.

    மேலும் சென்னையில் இருந்து இயக்கப்பட்ட அரசு விரைவு பஸ்கள், அரசு சிறப்பு பஸ்கள், ஆம்னி பஸ்கள் ஆகியவையும் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. கார் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் சென்றவர்களும் தீபாவளிக்கு ஒரு நாளுக்கு முன்பு சொந்த ஊரில் இருக்கும் வகையில் நேற்றே புறப்பட்டு சென்றனர்.

    சொந்த ஊருக்கு செல்ல ஒரே நேரத்தில் திரண்ட மக்கள் வெள்ளத்தால் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து சென்னையில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய போக்குவரத்து நெரிசல் இன்று அதிகாலை 2.15 மணி வரை சுமார் 10 மணி நேரத்துக்கு மேல் நீடித்தது.

    அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நேற்று சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களுடன், கூடுதலாக 1895 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதன் பிறகு பயணிகள் வருகை அதிகரித்ததால் கூடுதலாக 138 பஸ்கள் இயக்கப்பட்டன.

    ஆம்னி பஸ்களை பொறுத்தவரை வழக்கமாக இயக்கப்படும் 900 பஸ்களுடன் கூடுதலாக 700 பஸ்கள் இயக்கப்பட்டன. அதன் பிறகும் பயணிகள் வருகை இருந்ததால் மேலும் 80 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டன.

    இது தவிர கார்கள் உள்பட சொந்த வாகனங்களிலும் நேற்று ஏராளமானோர் சென்னையில் இருந்து புறப்பட்டு சொந்த ஊருக்கு சென்றனர். வழக்கமாக சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் சாலைகளில் பயணிக்கும் வாகனங்களை விட நேற்று 2 மடங்கு வாகனங்கள் ஒரே நேரத்தில் சென்றன. இதனால் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் சாலைகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறின.

    சென்னை கோயம்பேட்டில் இருந்து அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள் அனைத்தும் பூந்தமல்லி வழியாக வெளி வட்டச்சாலையில் திருப்பி விடப்பட்டு அங்கிருந்து நேராக வண்டலூர் சென்று பின்னர் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும் கார்கள் மற்றும் சொந்த வாகனங்களில் சென்ற பயணிகளும் வெளிவட்டச் சாலை வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.


    தாம்பரத்தில் இருந்து புறப்பட்ட பஸ்கள் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து புறப்பட்ட வாகனங்களால் பெருங்களத்தூரில் இருந்து வண்டலூர் வரை நெரிசல் காணப்பட்டது. பெருங்களத்தூர் வழியாக சென்ற பஸ்கள் மற்றும் வாகனங்களும், வெளிவட்டச்சாலை வழியாக சென்ற பஸ்கள் மற்றும் வாகனங்களும் வண்டலூர் பகுதியில் ஒரே நேரத்தில் சாலையை கடக்க திரண்டதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் உருவானது.

    சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, வண்டலூர் வெளிவட்ட சாலை பகுதியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    வண்டலூர் அருகேயுள்ள டோல்கேட்டில் இருந்து வண்டலூர் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையிலேயே அணிவகுத்து நின்றன. இந்த ஒரு கிலோ மீட்டர் தூரத்தை வாகனங்கள் கடக்க சுமார் 3 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை ஆனது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டனர்.

    இதற்கிடையே வண்டலூரை கடந்து சென்ற வாகனங்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலைய பகுதியில் இருந்து ஊரப்பாக்கம் வரை மீண்டும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறின. அரசு போக்குவரத்து கழக பஸ்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்குள் சென்று அங்கு பஸ்சுக்காக காத்திருந்த பயணிகளை ஏற்றி சென்றன.

    நேற்று மாலையில் இருந்து இரவு வரை சுமார் 1500-க்கும் மேற்பட்ட அரசு போக்குவரத்து கழக பஸ்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்குள் புகுந்து பயணிகளை ஏற்றி சென்றன. மேலும் சென்னையில் இருந்து சென்ற ஆம்னி பஸ்களும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்குள் சென்று முன்பதிவு செய்திருந்த பயணிகளை ஏற்றி சென்றன.

    இதனால்அந்த பஸ்கள் வெளியே வரும் பகுதியில் இருந்து ஊரப்பாக்கம் வரை போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. அதன் பிறகும் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கபெருமாள் கோவில் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதிகளில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்த படியே சென்றன.

    குறிப்பாக மறைமலைநகரில் இருந்து சிங்கபெருமாள் கோவில் வரை சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு பஸ்கள் மற்றும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் பாலப்பணிகள் வேலை நடைபெறுகிறது. மேலும் அந்த பகுதியில் ஸ்ரீபெரும்புதூருக்கு செல்லும் சாலையில் ரெயில் தண்டவாளத்தை கடக்க வாகனங்கள் சுமார் 10 நிமிடம் முதம் 30 நிமிடம் வரை காத்திருந்தன.

    தண்டவாளத்தை கடக்கும் வாகனங்களும் அதிக அளவில் வந்ததால் சிங்கபெருமாள் கோவில் பகுதியில், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணி வகுத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் வாகனங்கள் அந்த இடத்தை கடக்க அதிக நேரம் ஆனது.

    இதனால் நேற்று சென்னை நகரில் இருந்து சொந்த ஊருக்கு சென்ற பயணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திக்குமுக்காடினார்கள்.

    போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட பகுதிகளில் போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். ஆனாலும் ஒரே நேரத்தில் சாலைகளில் படையெடுத்த வாகனங்களால் போக்குவரத்தை சீர் செய்யும் பணி போலீசாருக்கு கடும் சவாலாகவே இருந்தது.

    நள்ளிரவை தாண்டிய பிறகு சாலைகளில் வரும் வாகனங்கள் குறையத் தொடங்கின. அதன் பிறகு போக்குவரத்து ஓரளவு சீராகத் தொடங்கியது. தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கப்பெருமாள் கோவில் ஆகிய பகுதிகளில் அதிகாலை 2.15 மணிக்கு பிறகே போக்குவரத்து சீரானது.

    செங்கல்பட்டு அருகே பரனூர் சோதனை சாவடியில் வழக்கமாக 6 வழிப்பாதையில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வந்தது. தீபாவளி போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு நேற்று 8 வழிப்பாதையிலும் வாகனங்கள் சென்றன. இதனால் செங்கல்பட்டை தாண்டியபிறகு எந்த நெரிசலும் இல்லாமல் வாகனங்கள் சென்றன. அதிகாலைக்கு பிறகு இன்று காலை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை. போக்குவரத்து சீராக காணப்பட்டது.

    இதேபோல் சென்னை கிழக்கு கடற்கரை சாலை வழியாக வாகனங்களில் வெளியூர் சென்ற பயணிகளால் சென்னை திருவான்மியூர், சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், செம்மஞ்சேரி பகுதிகளில் நேற்று இரவு கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

    Next Story
    ×