search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை மாநகரில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய 65 சிக்னல்கள் அடையாளம் காணப்பட்டன
    X

    சென்னை மாநகரில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய 65 சிக்னல்கள் அடையாளம் காணப்பட்டன

    • 65 சிக்னல்களிலும் பரபரப்பான நேரங்களில் 10 நிமிடங்கள் வரையில் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பது தெரியவந்துள்ளது.
    • போக்குவரத்து சிக்னல் இல்லாமல் வாகனங்கள் செல்வதற்கு வழி ஏற்படுத்துவது குறித்தும் போலீசார் ஆலோசனை நடத்தினர்.

    சென்னை:

    சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை தீர்ப்பதற்காக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் போக்குவரத்து சிக்னலில் நீண்ட நேரமாக காத்திருப்பதும் நெரிசலுக்கு ஒரு காரணம் என்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக போக்குவரத்து போலீசார் சென்னை மாநகர் முழுவதும் போக்குவரத்து சந்திப்புகளில் அதிரடி ஆய்வு நடத்தினர்.

    இதில் சென்னை மாநகர் முழுவதும் 65 சிக்னல்களில் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து அது போன்ற சிக்னல்களில் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டியது என்பது பற்றியும் போலீசார் ஆய்வு செய்தனர். இதில் இந்த 65 சிக்னல்களிலும் பரபரப்பான நேரங்களில் 10 நிமிடங்கள் வரையில் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதும் தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து போக்குவரத்து சிக்னல் இல்லாமல் வாகனங்கள் செல்வதற்கு வழி ஏற்படுத்துவது குறித்தும் போலீசார் ஆலோசனை நடத்தினர். இதில் சிக்னலை கடந்து நேராக செல்லும் வாகனங்கள் எத்தனை? வளைவில் திரும்பி செல்லும் வாகனங்கள் எத்தனை? என்றும் ஆய்வு செய்யப்பட்டது. இதில் நேராக செல்லும் வாகனங்கள் அதிக அளவிலும் வளைவில் செல்லும் வாகனங்கள் குறைந்த அளவிலும் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சிக்னல்களை மூடிவிட்டு யூ வளைவில் திரும்புவதை தடுத்து அந்த வாகனங்கள் சில அடி தூரம் சென்று மீண்டும் திரும்பி வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஏற்பாடுகளை ஸ்பென்சர் சந்திப்பு மற்றும் தி.நகர் சிக்னல் ஆகிய இடங்களில் போலீசார் அமல்படுத்தி இருக்கிறார்கள். இது தொடர்பாக போலீசார் கூறும்போது, 'கோவை மாநகரில் இதுபோன்று சிக்னல்களில் போக்குவரத்து மாற்றங்களை மேற்கொண்டதில் நல்ல பலன் கிடைத்திருப்பதாகவும் அந்த முறையை சென்னையில் தற்போது அமல்படுத்த முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறும்போது, சென்னை மாநகர் முழுவதும் இது போன்று மேலும் பல சிக்னல்களை அணைத்து விட்டு வாகனங்களை இயக்க முடியுமா? என்பது பற்றி தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறோம் என்று தெரிவித்தனர்.

    இந்த போக்குவரத்து மாற்றம் வாகனங்களுக்கு சில அசவுகரியங்களை ஏற்படுத்தினாலும் சிக்னல்களில் நேராகச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு வசதியாக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    இதன் மூலம் சென்னை மாநகரில் விரைவில் பல்வேறு சாலைகளில் உள்ள போக்குவரத்து சிக்னல்கள் அணைத்து வைக்கப்பட்டு வாகனங்கள் இயக்கப்படும் என்று தெரிகிறது. இது தொடர்பாக போலீசார் ஆய்வு நடத்தி முடிவுகளை மேற்கொள்ள உள்ளனர்.

    Next Story
    ×