search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழக எல்லையில் பட்டாசு கடையில் குவிந்த கர்நாடகா மக்கள்- புதிய ரகங்களை வாங்கிச் சென்றனர்
    X

    தமிழக எல்லையில் பட்டாசு கடையில் குவிந்த கர்நாடகா மக்கள்- புதிய ரகங்களை வாங்கிச் சென்றனர்

    • கர்நாடக பகுதி மக்கள் ஆண்டு தோறும் தமிழகத்திற்கு வந்து தான் தங்களுக்கு தேவையான பட்டாசுகளை வாங்கி செல்கின்றனர்.
    • ஆண்டுக்கு ஒரு முறை தான் குழந்தைகளுக்காக இங்கு பட்டாசுகளை வாங்க வருகிறோம் எனவும் அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    ஓசூர்:

    கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் கடந்த மாதம் 7 ந்தேதி பட்டாசு விற்பனை கடை மற்றும் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர், இதன் காரணமாக மாநில எல்லையான அத்திப்பள்ளி பகுதியில் இந்த வருடம் பட்டாசு விற்பனைக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

    மேலும் கர்நாடகா மாநிலத்தில் பட்டாசு அதிக விலைக்கு விற்கப்படுவதாக தெரிகிறது. இதன் காரணமாக அருகேயுள்ள தமிழக எல்லையான ஜூஜூவாடி பகுதியில் உள்ள பட்டாசு கடைகளில் விடுமுறை தினமான நேற்று மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து தேவையான பட்டாசுகளை வாங்கிச் சென்றனர்.

    இந்தாண்டு தமிழக அரசு 2 மணி நேரம் மட்டுமே தங்கள் வீடுகளில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளதால், தமிழக மக்கள் தற்போது பட்டாசுகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. ஆனால் கர்நாடக பகுதி மக்கள் ஆண்டு தோறும் தமிழகத்திற்கு வந்து தான் தங்களுக்கு தேவையான பட்டாசுகளை வாங்கி செல்கின்றனர்.

    குறிப்பாக கர்நாடகவில் விலை கூடுதலாக உள்ளதால் தொடர்ந்து தமிழகத்திற்கு படையெடுத்து வருகின்றனர். தவிர, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கடைகளில் மட்டுமில்லாமல் சாலைகளிலும் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. இந்த ஆண்டு புதிய ரக பட்டாசுகளும் அதிகளவில் வந்துள்ளதால் அதனை சிறுவர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர், பட்டாசுகளை பொறுத்த வரை இந்த வருடம் விலை ஏற்றம் என்பது சற்று குறைவாகவே காணப்படுகின்றது என பட்டாசு வாங்க வந்தவர்கள் தெரிவித்தனர்.

    குறிப்பிட்ட கடைகளில் மட்டும் வாங்க வருவதால் அவர்கள் அதிகளவில் தள்ளுபடி கொடுக்கிறார்கள் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். பெரும்பாலானோர் பட்டாசுகளை வாங்குவதற்கு கார்களில் வந்தனர். இதனால், கார்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லாததால் தேசிய நெடுஞ்சாலையோரமும் சர்வீஸ் சாலையிலும் கார்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசலும் அதே போல் கடைகளிலும் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. ஆண்டுக்கு ஒரு முறை தான் குழந்தைகளுக்காக இங்கு பட்டாசுகளை வாங்க வருகிறோம் எனவும் அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    Next Story
    ×