search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேஸ்புக்"

    • டுவிட்டருக்கு போட்டியாக பேஸ்புக் நிறுவனும் புதிய செயலியை கொண்டுவர முயற்சி
    • சுவாரஸ்யமான உரையாடலில் மஸ்க் சண்டைக்கு இழுத்தார்

    மார்க் ஜூக்கர்பெர்க் தலைமையில் இயங்கி வரும் முகநூல் எனப்படும் பேஸ்புக் (Facebook) மற்றும் எலான் மஸ்க் தலைமையில் இயங்கி வரும் நுண்வலைப்பதிவு நிறுவனமான டுவிட்டர் (Twitter) ஆகியவை அமெரிக்காவில் இயங்கி வருகிறது.

    இதன் நிறுவனர்களுக்கிடையே அவ்வப்பொழுது சமூக வலைதளங்களில் வாக்குவாதங்கள் நடைபெறுவதுண்டு.

    சமீபத்தில் டுவிட்டருக்கு போட்டியாக முகநூல் நிறுவனம் ஒன்றை தொடங்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தது. வளர்ச்சி நிலையில் இருக்கும் இந்த முயற்சி "பி92 (P92)" என பெயரிடப்பட்டிருப்பதாக தெரிகிறது.

    இம்முயற்சியை மஸ்க் ரசிக்கவில்லை. முகநூல் நிறுவனருக்கு எதிராக பல கிண்டலான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.

    இதை உற்றுக் கவனித்து வந்த டுவிட்டர் ஆதரவாளர் ஒருவர், ''ஜூக்கர்பெர்க், ஜூ ஜிட்சூ எனப்படும் தற்காப்புக்கலை அறிந்தவர். சமீபத்தில் ஒரு போட்டியில் வென்றவர்" எனவே கவனமாக இருக்க வேண்டும் என்று மஸ்க்கை எச்சரித்தார்.

    இதை ஒரு வேடிக்கையாக எடுத்துக் கொண்ட எலான் மஸ்க் ''நேருக்கு நேர் ஒரு கூண்டுச் சண்டையை விரும்புவதாகவும், அதற்கு அவர் தயாரா?'' என மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு அழைப்பும் விடுத்திருக்கிறார்.

    இதற்கு பதிலளித்த மார்க் ஜூக்கர்பெர்க், "இடத்தை தெரிவிக்கவும்" என எதிர்கோரிக்கை விடுத்திருக்கிறார்.

    இவர்கள் இருவருக்கிடையேயான இந்த உரையாடல்கள், சமூக வலைத்தளங்களில் பயனாளிகளின் பல சுவாரஸ்யமான கருத்துக்களுக்கு வழி வகுத்திருக்கிறது.

    • போலீசாருக்கு முகநூல் நிறுவனம் சார்பில் எந்த பதிலும் அளிக்கவில்லை
    • வழக்கு விசாரணையை வருகிற 22-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

    பெங்களூரு :

    கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்தவர் சைலேஷ் குமார். இவர் சவுதி அரேபியாவில் கடந்த 25 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். இவர் தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு ஆதரவாக கருத்து பதிவிட்டிருந்தார். இதனால் அவருக்கு செல்போன் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது. இதனால் பயந்துபோன அவர் தனது முகநூல் கணக்கை நிரந்தரமாக நீக்கினார்.

    இதற்கிடையே அவரது முகநூல் பக்கத்தில் இருந்து சவுதி அரேபியா மன்னருக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து ஒன்று பதிவிடப்பட்டது. இதுதொடர்பாக சைலேஷ் குமாருக்கு சவுதி அரேபியாவில் 15 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார். இதுகுறித்து அறிந்ததும், மங்களூருவில் உள்ள அவரது மனைவி கவிதா, மங்களூரு போலீசில் புகார் அளித்தார். அப்போது தனது கணவர், முகநூல் பக்கத்தை நிரந்தரமாக நீக்கி விட்டதாகவும், போலி வலைத்தள கணக்கில் இருந்து சவுதி மன்னர் குறித்து அவதூறு கருத்து பதிவிடப்பட்டுள்ளதாகவும் கூறி இருந்தார்.

    இந்த நிலையில் விசாரணையை தொடங்கிய மங்களூரு போலீசார், போலி முகநூல் கணக்கு தொடங்கியது குறித்து முகநூல் நிறுவனத்திடம் கடிதம் வாயிலாக தகவல் கேட்டுள்ளனர். ஆனால், போலீசாருக்கு முகநூல் நிறுவனம் சார்பில் எந்த பதிலும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டில், விசாரணையில் தாமதம் ஏற்படுவதை குறிப்பிட்டு கவிதா, கர்நாடக ஐகோர்ட்டை நாடினார்.

    இந்த வழக்கு கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி கிருஷ்ணா தீக்ஷித் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நேரில் ஆஜரான மங்களூரு போலீஸ் கமிஷனர் குல்தீப் குமார் ஜெயின் கூறுகையில், விசாரணைக்காக முகநூல் நிறுவனத்தை நாடியபோது அவர்கள் முறையாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று கூறினார்.

    இதையடுத்து நீதிபதி பேசுகையில், போலி கணக்குகள் குறித்து விசாரணை நடத்தும் போலீசாருக்கு உரிய ஒத்துழைப்பு வழங்காமல் இருந்தால், இந்தியாவில் முகநூல் நிறுவனத்தின் செயல்பாடுகள் முழுமையாக முடக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு வெளிநாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய குடிமகன் சைலேஷ் குமார் குறித்த அனைத்து தகவல்களையும் விசாரித்து சீல் வைக்கப்பட்ட ஆவணமாக கோர்ட்டில் சமர்பிக்குமாறு உத்தரவிட்டார்.

    மேலும் இந்த வழக்கு தொடர்பான முழுமையான தகவல்களை பெற்று சமர்ப்பிக்காமல் இருந்தால், சம்பந்தப்பட்ட வெளியுறவு துறை செயலாளருக்கு கோர்ட்டு சார்பில் தனிப்பட்ட சம்மன் அனுப்பப்படும் என மத்திய அரசை நீதிபதி எச்சரித்தார். இதையடுத்து அனைத்து ஆவணங்களையும் கோர்ட்டில் முகநூல் நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும் என கூறி, வழக்கு விசாரணையை வருகிற 22-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

    • இந்தியாவில் கடந்த வாரம் மெட்டா வெரிஃபைடு சேவை அறிவிக்கப்பட்டது.
    • மெட்டா வெரிஃபைடு சேவை அமெரிக்கா, கனடா, பிரிட்டன் என ஆறு நாடுகளில் கிடைக்கிறது.

    மெட்டா நிறுவனம் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட்களுக்கு வெரிஃபிகேஷன் பேட்ஜ் வழங்கும் திட்டத்தை ஜூன் 7 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதன் மூலம் பயனர்கள் மெட்டா வெரிஃபைடு சேவையை கட்டண முறையில் பெற்றுக் கொள்ள முடியும். இவ்வாறு கட்டணம் செலுத்தி வெரிஃபைடு சேவையை பெறுவோருக்கு புளூ டிக் மற்றும் கூடுதல் அம்சங்களை வழங்கி வருகிறது.

    இந்தியாவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஐஒஎஸ் மற்றும் ஆன்ட்ராய்டு செயலிக்கான வெரிஃபைடு சேவைக்கான கட்டணம் ரூ. 699 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து ரூ. 599 விலையில் வெப் வெர்ஷனுக்கான வெரிஃபைடு சேவை வரும் மாதங்களில் வெளியிடப்பட இருக்கிறது.

    மெட்டா வெரிஃபைடு சேவை அரசு அடையாள சான்று மூலம் வழங்கப்படுகிறது. வெரிஃபைடு சேவையின் கீழ் அக்கவுன்ட் பாதுகாப்பு, நேரடி அக்கவுன்ட் சப்போர்ட் மற்றும் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்தியாவில் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் வெரிஃபைடு பெறுவது எப்படி?

    ஆன்ட்ராய்டு அல்லது ஐஒஎஸ் சாதனத்தில் இன்ஸ்டாகிராம் அல்லது பேஸ்புக் செயலியை திறக்க வேண்டும்.

    வெரிஃபைடு பெற வேண்டிய ப்ரோஃபைலை க்ளிக் செய்ய வேண்டும்.

    செட்டிங்ஸ் -- அக்கவுன்ட் சென்டர் ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும்.

    மெட்டா வெரிஃபைடு ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். ஒருவேளை அம்சம் காணப்படவில்லை எனில், செயலியை அப்டேட் செய்ய வேண்டும்.

    கட்டண முறையை தேர்வு செய்ய வேண்டும்.

    அரசு அடையாள முகவரி மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    சரிபார்க்கப்பட்ட பிறகு, பயனர்களின் அக்கவுன்டில் வெரிஃபைடு பேட்ஜ் வழங்கப்பட்டு விடும்.

    வெரிஃபைடு பெற தேவையானவை:

    இந்தியாவில் மெட்டா வெரிஃபைடு பெற நினைப்போரின் வயது 18 அல்லது அதற்கும் அதிகமாக இருக்க வேண்டும். மேலும் நிறுவனம் சார்பில் பயனர் பதிவுகள் உறுதிப்படுத்தப்படும். இவற்றை தொடர்ந்து அரசு அடையாள சான்று வைத்திருக்க வேண்டும். இதில் அடையாள சான்றில் உள்ள புகைப்படம், பெயர் இன்ஸ்டாகிராம் அல்லது பேஸ்புக் அக்கவுன்ட் உடன் ஒற்றுப் போக வேண்டும்.

    பொது பிரபலங்கள், கிரியேட்டர்கள், பிரான்டுகள் அக்கவுன்ட் மற்றும் வெரிஃபைடு பெற விண்ணப்பிக்கலாம். தற்போது மெட்டா வெரிஃபைடு சேவை அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

    • இஸ்லாமாபாத் முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டது.
    • பாகிஸ்தான் முழுவதும் இணைய சேவை வழங்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

    இஸ்லாமாபாத்

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை கடந்த 9-ந் தேதி அந்த நாட்டின் துணை ராணுவத்தினர் அதிரடியாக கைது செய்தனர். இது அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு, நாடு முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டது.

    மேலும் பேஸ்புக், டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் முழுவதும் இணைய சேவை வழங்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் தொலைத்தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

    அதே சமயம் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாததால் அவற்றுக்கான தடை தொடருவதாக தொலைத்தொடர்பு ஆணையம் கூறியுள்ளது.

    • மெட்டா நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
    • இதுவரை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது.

    சான் பிரான்சிஸ்கோ :

    கொரோனா தொற்று மற்றும் உக்ரைன் போர் காரணமாக ஏற்பட்டுள்ள சர்வதேச பொருளாதார நெருக்கடியால் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து ஆள்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் கூகுள், மைக்ரோசாப்ட், டுவிட்டர், பேஸ்புக், டிஸ்னி, அமேசான், வால் ஸ்டிரீட் உட்பட பல நிறுவனங்களும் ஆள்குறைப்பை மேற்கொண்டுள்ளன. இதுவரை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது.

    பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. அதை தொடர்ந்து கடந்த மாதம் மேலும் 10,000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியது.

    இந்த நிலையில் தற்போது 3-வது கட்டமாக மேலும் 4,000 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய மெட்டா நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மெட்டா ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • மனைவியின் ஆபாச படங்களை பேஸ்புக்கில் பரப்பிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • பேஸ்புக்கில் போலி கணக்கை உருவாக்கி அதில் மனைவியின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்தார்.

    மதுரை

    மேலூர் நரசிங்கம் பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 27). இவருக்கு வண்டியூரை சேர்ந்த பெண்ணுடன் திருமணமானது.

    ராஜ்குமாருக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. அவர் இது குறித்து மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டார். இந்த நிலையில் ராஜ்குமார் பேஸ்புக்கில் போலி கணக்கை உருவாக்கி அதில் மனைவியின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்தார்.

    இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ராஜ்குமாரின் பேஸ்புக் பக்கம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதில் மனைவியின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்து பரப்பியது தெரிய வந்தது.

    இதையடுத்து மனைவி யின் ஆபாச படங்களை இணையதளத்தில் பரப்பிய ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

    • டொனால்டு டிரம்பின் பேஸ்புக், யூடியூப் கணக்கு 2 ஆண்டாக முடக்கப்பட்டிருந்தது.
    • முடக்கப்பட்ட டிரம்பின் பேஸ்புக், யூடியூப் பக்கங்கள் இன்று செயல்பாட்டிற்கு வந்துள்ளன.

    வாஷிங்டன்:

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப். இவர் 2017 முதல் 2021 ஆண்டு வரை அமெரிக்காவின் அதிபராக செயல்பட்டு வந்தார். 2021-ம் ஆண்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் தோல்வியடைந்து ஜோ பைடன் அமெரிக்க அதிபராக வெற்றிபெற்றார்.

    தனது தோல்வியை ஏற்க மறுத்த டொனால்டு டிரம்ப் தனது ஆதரவாளர்களிடம் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசினார். இதை அவர் தனது பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பினார். அவரது பேச்சையடுத்து ஜனவரி 6-ம் தேதி டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க பாராளுமன்றத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

    இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து வன்முறையை தூண்டியதாக டொனால்டு டிரம்பின் பேஸ்புக், யூடியூப் பக்கங்கள் முடக்கப்பட்டன.

    இந்நிலையில், 2 ஆண்டாக முடக்கப்பட்ட டொனால்டு டிரம்பின் பேஸ்புக், யூடியூப் பக்கங்கள் இன்று செயல்பாட்டிற்கு வந்துள்ளன.

    சமூக வலைதள பக்கங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ள நிலையில் டொனால்டு டிரம்ப் தனது பேஸ்புக், யூடியூப் பக்கங்களில் 'நான் திரும்ப வந்துவிட்டேன்' என பதிவிட்டு வீடியோ ஒன்றை இணைத்துள்ளார்.

    வரும் 2024-ம் ஆண்டு அமெரிக்க தேர்தலில் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

    • பாதிக்கப்பட்ட பெண் காஞ்சிபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்தார்.
    • விசாரித்தபோது சமூக வலைதளங்களில் நட்புடன் பழகி பல பெண்களிடம் மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது.

    காஞ்சிபுரம்:

    ஈரோடு பகுதியை சேர்ந்தவர் அலாவுதீன். இவர் நடிகர் ஒருவரின் பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி பேஸ்புக்கில் போலி கணக்கு தொடங்கினார்.

    பின்னர் காஞ்சிபுரத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு நட்பு அழைப்பு விடுத்தார். அதனை ஏற்றுக் கொண்ட பெண்ணிடம் வாட்ஸ் அப், பேஸ்புக்கில் நன்றாக பேசி பழகி வந்துள்ளார்.

    அப்பெண்ணின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வாங்கிக் கொண்ட அலாவுதீன் அதனை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும், குடும்பத்தினருக்கும் தெரிவித்து விடுவதாகவும் கூறி மிரட்டி சுமார் ரூ.2 லட்சம் வரை பணம் பறித்தார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் காஞ்சிபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி ஈரோடு பிபி. அக்ரகாரம் பகுதியை சேர்ந்த அலாவுதீன், அவருக்கு உதவியாக இருந்த சகோதரர் வாகித் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    இவர்களிடம் விசாரித்தபோது சமூக வலைதளங்களில் நட்புடன் பழகி பல பெண்களிடம் மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது. இவர்கள் மோசடிக்கு பயன்படுத்திய செல்போன் மற்றும் லேப்டாப்களை போலீசார் கைப்பற்றினார்கள். அவர்களிடம் வாக்குமூலம் பெற்று இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் இவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடுமாறு காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், மாவட்ட கலெக்டர் ஆர்த்திக்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்று அலாவுதீன், வாகித் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து ஓராண்டு சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார்.

    • விளம்பர வருவாயில் மந்தநிலையைக் கண்ட மெட்டா, மெட்டாவர்ஸ் எனப்படும் மெய்நிகர் ரியாலிட்டி தளத்திற்கு கவனம் செலுத்தியுள்ளது.
    • வருவாய் இழப்பை ஈடுசெய்யவும், பொருளாதார மந்த நிலையை கருத்தில் கொண்டும் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

    அமெரிக்கா:

    டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதும் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த உயர் அதிகாரிகள் முதல் தொழில்நுட்ப வல்லுநர்கள் வரை பலரையும் அதிரடியாக பணிநீக்கம் செய்தது. அதைத் தொடர்ந்து பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டாவும் பொருளாதார மந்த நிலையால் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றி 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்தது.

    அந்த வகையில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமை உள்ளடக்கிய மெட்டா நிறுவனம் ஒரு புதிய சுற்று பணி நீக்கங்களுக்கு திட்டமிட்டு வருகிறது. மேலும் இந்த வாரத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை குறைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    உலகின் மிகப்பெரிய சமூக வலைதள நிறுவனமான மெட்டா, கடந்த நவம்பரில் 13 சதவீதம் ஊழியர்களை குறைத்துள்ளது. அதேபோல், மேலும் திறமையான நிறுவனமாக மாற்றும் முயற்சியிலும் மெட்டா ஈடுபட்டுள்ளது. அதன் முந்தைய சுற்றுகளில், மெட்டா நிறுவனம் 11,000 தொழிலாளர்களைக் குறைத்தது.

    இதுவே அந்த நிறுவனத்தின் முதல் பெரிய பணிநீக்கம் ஆகும். தனது நிறுவனத்தை சமன் செய்யவும், மேலாளர்களுக்கு தொகுப்புகளை வழங்கவும், தேவையற்றதாகக் கருதும் முழு குழுக்களை குறைக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது. அதன்படிதான் தற்போது 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பணிநீக்கம் செய்ய மெட்டா முடிவெடுத்துள்ளது.

    விளம்பர வருவாயில் மந்தநிலையைக் கண்ட மெட்டா, மெட்டாவர்ஸ் எனப்படும் மெய்நிகர் ரியாலிட்டி தளத்திற்கு கவனம் செலுத்தியுள்ளது. வருவாய் இழப்பை ஈடுசெய்யவும், பொருளாதார மந்த நிலையை கருத்தில் கொண்டும் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • கள்ளக்காதல் விவகாரம் வம்சிக்கு தெரிய வந்ததால் தனது மனைவியை கண்டித்தார்.
    • தாய் வீட்டிற்கு செல்வதாக வம்சியிடம் கூறிவிட்டு சென்ற மனைவி மீண்டும் திரும்பி வரவில்லை.

    திருப்பதி:

    திருப்பதி மாவட்டம், ரங்கம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வம்சி. ஆட்டோ டிரைவர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக் மூலம் தெலுங்கானா மாநிலம் கரீம் நகரை சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் வம்சிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    திருப்பதி அருகே உள்ள முஸ்லிம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் அன்வர். இவர் தனது ஆட்டோவை வம்சிக்கு வாடகைக்கு கொடுத்து இருந்தார். இதனால் அன்வர் வம்சியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போது வம்சியின் மனைவிக்கும் அன்வருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

    கள்ளக்காதல் விவகாரம் வம்சிக்கு தெரிய வந்ததால் தனது மனைவியை கண்டித்தார்.

    கடந்த மாதம் தனது தாய் வீட்டிற்கு செல்வதாக வம்சியிடம் கூறிவிட்டு சென்ற மனைவி மீண்டும் திரும்பி வரவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது தனது மனைவி அன்வருடன் குடும்பம் நடத்தி வருவது வம்சிக்கு தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த வம்சி உள்ளூரில் வசிக்க பிடிக்காமல் பெங்களூருக்கு சென்று ஆட்டோ ஓட்டி வந்தார்.

    அப்போது அன்வர் வம்சியின் மனைவியுடன் இருக்கும் போட்டோக்கள் பேஸ்புக்கில் பதிவிடப்பட்டு இருந்தது. இதனை கண்ட வம்சி இருவரும் இறந்துவிட்டதாகவும் உங்களுடைய ஆன்மா சாந்தி அடையட்டும் ரிப்ஸ் என பதிவிட்டு இருந்தார்.

    இதனை கண்டு ஆத்திரமடைந்த அன்வர் கடந்த மாதம் 8-ந் தேதி பெங்களூருக்கு சென்று வம்சியை கடத்தி திருப்பதிக்கு கொண்டு வந்தார். மறுநாள் திருப்பதி அருகே உள்ள ராயலாபுரத்தில் ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்று வம்சிக்கு மொட்டை அடித்தார்.

    வம்சிக்கு மொட்டை அடிக்கும் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவவிட்டார். இந்த வீடியோவை பார்த்தவர்கள் வம்சிக்கு மொட்டை அடித்து கழுத்தை அறுத்து கொலை செய்ததாக கருதி ஆட்டோ டிரைவர்கள் போலீசில் புகார் செய்தனர். ஆனால் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட வம்சி பெங்களூரில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    • எலான் மஸ்க், டுவிட்டரில் டிரம்ப் மீதான தடையை நீக்கினார்.
    • டிரம்ப் மீண்டும் விதிமுறைகளை மீறினால் அவரது கணக்கு முடக்கப்படும்.

    வாஷிங்டன் :

    அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு வெற்றிக்கான சான்றிதழ் வழங்குவதற்காக 2021-ம் ஆண்டு ஜனவரி 6-ந் தேதி நாடாளுமன்றம் கூடியது. அப்போது தேர்தலில் தோல்வி அடைந்த முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து டிரம்ப் தனது பதிவுகள் மூலம் வன்முறையை தூண்டியதாக கூறி பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தள நிறுவனங்கள் அவரது கணக்கை முடக்கின. இந்த சூழலில் கடந்த ஆண்டு டுவிட்டரை பெரும் தொகை கொடுத்து வாங்கிய எலான் மஸ்க், டுவிட்டரில் டிரம்ப் மீதான தடையை நீக்கினார். இதனையடுத்து நவம்பர் மாதம் முதல் டிரம்பின் டுவிட்டர் கணக்கு மீண்டும் செயல்பட தொடங்கியது.

    இந்த நிலையில் டுவிட்டரை தொடர்ந்து, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் நிறுவனங்களின் தாய் நிறுவனமான மெட்டா டிரம்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அகற்றுவதாக கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அறிவித்தது. அதன்படி டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் நேற்று முதல் செயல்பட தொடங்கின. டிரம்ப் மீண்டும் விதிமுறைகளை மீறினால் அவரது கணக்கு ஒரு மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை முடக்கப்படும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

    பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் மீண்டும் செயல்பட தொடங்கினாலும் டிரம்ப் அவற்றை பயன்படுத்துவாரா என்பது உறுதியாக தெரியவில்லை. ஏனெனில் அவர் தனக்கென பிரத்தியேகமாக 'டுரூத் சோஷியல்' என்கிற சமூக வலைத்தளத்தை உருவாக்கி பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    • டுவிட்டர் கணக்குகளை சரி செய்யும் முயற்சியில் அந்த நிறுவனம் ஈடுபட்டு உள்ளது.
    • உலகம் முழுவதும் திடீரென டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.

    உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் சமூக ஊடக தளமான பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாரகிராம் பயன்படுத்தி வருகின்றனர். இதில் அவர்கள் தங்கள் கருத்துக்கள் மற்றும் புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.

    இந்தநிலையில் இன்று திடீரென ஆயிரக்கணக்கான பேஸ்புக், டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன. அமெரிக்காவை சேர்ந்த பயனர்களின் சமூக வலைதள கணக்குகள் தான் அதிக அளவு முடக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பயனர்கள் புதிய டுவிட்டுகளை பதிவு செய்ய முடியாமல் தவித்தனர்.

    அவர்களுக்கு நீங்கள் பதிவு அனுப்புவதற்கான தினசரி வரம்பை தாண்டிவிட்டீர்கள். அதனால் டுவிட் செய்ய முடியாது என குறுஞ்செய்தி வந்தது. இதனால் பயனர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதே போல பேஸ்புக்கில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணக்குகளும், 7 ஆயிரம் இன்ஸ்டாரகிராம் கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளன.

    இதையடுத்து டுவிட்டர் கணக்குகளை சரி செய்யும் முயற்சியில் அந்த நிறுவனம் ஈடுபட்டு உள்ளது. இதுதொடர்பாக அந்த நிறுவனம் கூறும்போது "சிலருக்கு டுவிட்டர் எதிர்பார்த்தபடி செயல்படாமல் இருக்கலாம். இதற்காக மன்னிக்கவும், இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என தெரிவித்து உள்ளது.

    உலகம் முழுவதும் திடீரென டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.

    ×