search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பித்ரு தர்ப்பணம்"

    • இந்த கோவில்களில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.
    • சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16-ந் தேதி திறக்கப்படுகிறது.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு கோவில் குளங்கள், ஆறுகள், கடற்கரை பகுதிகளில் இந்துக்கள் முன்னோர்களுக்கு பலி தர்ப்பணம் கொடுப்பார்கள். இந்த ஆண்டு ஆடி அமாவாசை வருகிற 17-ந் தேதி வருகிறது.

    இதையொட்டி கேரளாவில் அனைத்து கோவில்கள், நீர் நிலைகளில் பலி தர்ப்பணம் நடத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சிறிதும், பெரிதுமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.

    இந்த கோவில்களில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. குறிப்பாக ஏராளமான மக்கள் பலி தர்ப்பணம் நடத்தும் சபரிமலை பம்பை ஆறு, திருவல்லம் பரசுராமர் கோவில், சங்குமுகம் கடற்கரை, வர்க்கலை கடற்கரை உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்புடன் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    ஆடி மாத பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16-ந் தேதி திறக்கப்படுகிறது. 17-ந் தேதி முதல் 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆடி அமாவாசையான 17-ந் தேதி அதிகமான பக்தர்கள் வர வாய்ப்பு இருப்பதால் பம்பை ஆற்றில் பலி தர்ப்பணம் நடத்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக கூடுதல் பூசாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் அதிகாலை 2.30 மணி முதல் பலி தர்ப்பணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்ட ஜோதிட பஞ்சாங்கத்தை தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் வெளியிட்டார். நிகழ்ச்சியில் தேவஸ்தான கமிஷனர் பி.எஸ். பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • முதலில் பித்ருக்களைதான் வணங்க வேண்டும்.
    • இதற்கு ஒரு புராண உதாரணம் இருக்கிறது.

    பித்ரு வழிபாடு செய்யும் போது சிலருக்கு ஒரு சந்தேகம் ஏற்படலாம். கடவுளுக்கு முதலில் பூஜை, வழிபாடுகள் செய்ய வேண்டுமா? அல்லது நம் முன்னோர்களுக்கு முதலில் பூஜை செய்து வழிபட வேண்டுமா? என்பதே அது.

    முதலில் பித்ருக்களைதான் வணங்க வேண்டும். அதன் பிறகே தெய்வ வழிபாட்டில் ஈடுபட வேண்டும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஒரு புராண உதாரணமும் இருக்கிறது.

    பகவான் பாண்டுரங்கன் ஒரு தடவை தன் பக்தன் ஹரிதாசரைப்பார்க்க சென்றார். அப்போது ஹரிதாசர் வயதான தன் பெற்றோருக்கு பணி விடைகள் செய்து கொண்டிருந்தார்.

    பகவானை கண்டதும் ஹரிதாசர் தன் பணிவிடையை நிறுத்தவில்லை. பகவானை பார்த்து, 'சிறிது நேரம் காத்திருங்கள் நான் என் பணி விடைகளை முடித்து விட்டு வருகிறேன் என்று கூறி ஒரு செங்கலை சுட்டிக் காட்டினாராம்.

    உடனே பகவான் பாண்டுரங்கன் அந்த செங்கல் மீது ஏறி நின்று கொண்டார். ஹரிதாசர் பணி விடைகளை முடித்து விட்டு வந்த பிறகு அவருக்கு பகவான் ஆசி வழங்கினாராம்.

    எனவே நம் வீட்டு பெரியவர்களுக்கே முதலில் மரியாதை கொடுக்க வேண்டும் என்பது இதன் மூலம் உறுதியாகிறது. பெற்ற தாய்-தந்தையை பட்டினிப்போட்டு விட்டு கோவிலுக்கு சென்று அபிஷேகம், அன்னதானம் என்று செய்தால் ஒரு புண்ணியமும் கிடைக்காது என்பதை உணர வேண்டும்.

    ஆகையால் நீங்கள் எந்த மாதம் சிரார்த்தம் செய்ய வேண்டியது உள்ளதோ அந்த மாதம் மற்ற சுப நிகழ்ச்சிகள் இல்லாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். அதுபோல சிரார்த்தம் செய்யும் மாதங்களில் வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று சங்கல்பம் செய்து கொள்ளாமல் இருப்பது நல்லது.

    • நாட்டில் மொத்தம் 4 மணிகர்ணிகா தீர்த்தங்கள் உள்ளன.
    • மணிகர்ணிகா அஷ்டகத்துதியை மூன்று முறை படிக்க வேண்டும்.

    தர்ப்பணம் செய்து முடிந்ததும் ஸ்ரீ ஆதி சங்கரர் சொல்லிய ஸ்ரீ மணிகர்ணிகா அஷ்டகம் என்ற துதியை மணிகர்ணிகா குளத்தில் குளித்த பிறகு கூற வேண்டும்.

    அவ்வாறு வழிபட்டு பித்ரு தர்ப்பணமும் செய்பவர்கள் சவுபாக்கிய வாழ்வை வாழ்ந்து புத்திரர் பேரன்களைப் பெற்று இறை நலம் பெறுவார்கள். நாட்டில் மொத்தம் 4 மணிகர்ணிகா தீர்த்தங்கள் உள்ளன.

    1. வாரணாசி (காசியில்) விஸ்வநாதர் கோவிலில்- மணிகர்ணிகா கட்டம்.

    2. மதுரை திருப்புவனம்- பூவணநாதர் கோவிலில் மணிகணிகாகுளம்.

    3. தஞ்சை மாவட்டம் வேதாரண்யம் தர்ப்பாண்யேஸ்வரர் கோவிலில் மணிகர்ணிகா கங்கை.

    4. சென்னை திருநீர்மலை ரங்கநாதர் கோவில் மலை அடி வாரத்தில் -மணிகர்ணிகா திருக்குளம் என்னும் புஷ்கரணி.

    கந்தனுக்கு சரவணப் பொய்கையையே புனித நீரூற்று என்பது போன்று காசிக்கு சென்று மகாளய தர்ப்பணம் செய்த முழுப்பலனையும் பெற்றிட அவரவர் தகப்பனாரின் திதி நாளன்று மேற்சொன்ன மணிகர்ணிகாகளில் தர்ப்பணம் செய்தோ, அல்லது மகாளய அமாவாசையிலோ தர்ப்பண பூஜை செய்து மணிகர்ணிகா அஷ்டகத்துதியை மூன்று முறை படிக்க வேண்டும்.

    • பித்ரு வழிபாடு செய்வதற்கு பகீரனுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை.
    • கங்கையின் தண்ணீரால் பகீரதனின் பித்ரு வழிபாடுகள் நிறைவு பெற்றன.

    ஆதி காலத்தில் அயோத்தி நாட்டை இசுவாகு குலத்தைச் சேர்ந்த சகரர் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு சுமதி, கேசினி என்ற 2 மனைவிகள் இருந்தனர்.

    அவர்கள் இருவருக்கும் நீண்ட நாட்களாக குழந்தை பிறக்கவில்லை. இதனால் சகரர் இறைவனை நோக்கி தவம் இருந்தார். அதன் பயனாக சுமதிக்கு 60 ஆயிரம் குழந்தைகள் பிறந்தனர். கேசினிக்கு ஒரே ஒரு குழந்தை பிறந்தது.

    இதைத் தொடர்ந்து அரசர் சகரர் நாடு பிடிக்கும் ஆசையில் அசுவமேத யாகம் நடத்தினார். அவர் அனுப்பிய குதிரை திடீரென மாயமாகி விட்டது. அந்த குதிரையைத் தேடி சுமதயின் 60 ஆயிரம் மகன்களும் புறப்பட்டுச் சென்றனர். ஒரு குகை அருகில் குதிரை நிற்பதைக் கண்டனர். அந்த குகை அருகில் தவம் செய்து கொண்டிருந்த கபில முனிவர்தான் குதிரையை கடத்தி வந்து விட்டதாக தவறாக புரிந்து கொண்டனர்.

    கபில முனிவரின் தவத்தை கலைத்து சண்டைக்கு சென்றனர். இதனால் வெகுண்ட கபில முனிவர், 60 ஆயிரம் பிள்ளைகளையும் சாம்பலாகப் போகும் படி சாபமிட்டார். உடனே சுமதியின் 60 பிள்ளைகளும் சாம்பலாகிப் போனார்கள். கேசினின் ஒரே ஒரு மகன் அரசுரிமைக்கு வந்தான். அவனது மகன் பகீரதன். பகீரதன் அரச பதவிக்கு வந்தபோது பல்வேறு தடைகள் ஏற்பட்டன. அப்போது அவனுக்கு தன் மூதாதையர்கள் 60 ஆயிரம் பேர் சாம்பலாகிப் போனதும், அவர்களுக்கு தர்ப்பணம், சிரார்த்தம் எதுவும் செய்யப்படவில்லை என்பதும் தெரிய வந்தது.

    உடனே பகீரதன் தன் முன்னோர்கள் 60 ஆயிரம் பேருக்கும் தர்ப்பணம் கொடுத்து பித்ரு வழிபாடு செய்ய முடிவு செய்தான். இதற்காக காடுகள், மலைகளில் அலைந்து திரிந்து முன்னோர்களின் எலும்பு சாம்பலை சேகரித்தார்.

    ஆனால் பித்ரு வழிபாடு செய்வதற்கு பகீரனுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. உடனே அவன் சிவ பெருமானை நோக்கி தண்ணீருக்காக தவம் இருந்தான்.

    அவனது தவ வலிமையை மெய்ச்சிய சிவபெருமான், தன் தலையில் வைத்திருந்த கங்கையை பூமிக்குச் செல்ல உத்தரவிட்டார்.

    அதன்படி கங்கை நதியானது, பாகீரதி, அலக்நந்தா, ஜானவி, மந்தா கினி, பிண்டார், பதமா, பிரம்மா புத்திரா ஆகிய 7 நதிகளாகப் பிரிந்து தரையில் ஓடியது.

    கங்கை நதி வங்கக்கடலில் கலக்கும் இடமான சாகர் எனுமிடத்தில் அமர்ந்து பகீரதன் பித்ரு பூஜைகளை செய்தான். புண்ணிய நதியான, புனித நதியான கங்கையின் தண்ணீரால் பகீரதனின் பித்ரு வழிபாடுகள் நிறைவு பெற்றன. அதன்பிறகு வட மாநிலம் முழுவதும் பாயும் வகையில் கங்கை மாறியது. கீரதன் அன்று தொடங்கி வைத்த கங்கை நதியின் புனிதத் தன்மை இன்றும் தொடர்கிறது.

    கங்கை தண்ணீரை கைகளில் ஏந்தி முன்னோர் களை நினைத்து நீர் விடும்போது பித்ரு பூஜைக்கு தனி மகத்துவமே கிடைத்து விடுகிறது. எனவே வாழ்வில் ஒரு தடவையாவது கங்கையின் புனித தலங்களில் ஏதாவது ஒரு இடத்துக்கு சென்று பித்ரு பூஜை செய்ய வேண்டும். பித்ரு பூஜைக்காகவே கங்கை பூமிக்கு வந்தது என்பதை என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டும்.

    • இறந்த முன்னோர்களுக்கு பரிகார பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர்.
    • கோவிலின் பல்வேறு பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

    பவானியில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.

    இந்த கோவில் பின்பகுதியில் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி படித்துறையில் காவிரி, பவானி, கண்ணுக்கு புலப்படாத அமுதநதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வரும் இந்த கோவிலில் அமாவாசை தினத்தன்று உள்ளூர், வெளியூர் வெளி மாநில பக்தர்கள் வருகை தந்து தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம், எள்ளும் தண்ணியும் விடுதல், பிண்டம் விடுதல் என பல்வேறு வகையான பரிகார பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று ஆனி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு பரிகார பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர்.

    ஆனி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவிலின் பல்வேறு பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாதந்தோறும் அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது.
    • ராமநாத சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

    தென் கைலாயம் என்று போற்றப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். இங்குள்ள அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் நன்மை கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது.

    குறிப்பாக மாதந்தோறும் அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக அன்றைய நாளில் ராமேசுவரத்தில் வழக்கத்தை விட அதிகளவில் பக்தர்கள் திரளுவார்கள்.

    அதன்படி இன்று ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதலே நூற்றுக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்தனர். அங்கு அவர்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். அதன்பின் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடிய பக்தர்கள் ராமநாத சுவாமியையும், பர்வதவர்த்தினி அம்பாளையும் தரிசனம் செய்தனர்.

    அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை, கோவில், ரத வீதி உள்பட பல்வேறு இடங்களில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டமாக காட்சியளித்தது.

    பக்தர்களின் வருகையை முன்னிட்டு அவர்களுக்கு தேவையான வசதிகளை நகராட்சி, கோவில் நிர்வாகம் செய்திருந்தது. போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முன்னதாக ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு ராமநாத சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை மேல் உள்ள சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் செல்ல கடந்த 15-ந்தேதி முதல் 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டி ருந்தது.

    அமாவாசையான இன்று அதிகாலையிலேயே மலையடிவாரமான தாணிப் பாறையில் பெண்கள் உள்பட ஏராளமானோர் திரண்டனர். காலை 7 மணிக்கு வனத்துறையினரின் சோதனைக்கு பின் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். அமாவாசையை முன்னிட்டு சந்தன, சுந்தர மகாலிங்கத்துக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

    • கடற்கரையில் தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட்டனர்.
    • 22 தீர்த்தங்களிலும் பக்தர்கள் புனித நீராடினர்.

    புண்ணிய ஸ்தலமான ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதி களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது இந்துக்களின் கடமையாக கருதப்படுகிறது.

    குறிப்பாக மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுக்க அதிகளவில் பக்தர்கள் திரளுவார்கள். அதன்படி வைகாசி மாத அமாவாசையான இன்று (19-ந் தேதி) அதிகாலை முதலே அக்னி தீர்த்த கடலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். பின்னர் கடற்கரையில் தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட்டனர்.

    தொடர்ந்து கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராடிய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். அமாவாசை நாளான இன்று ராமேசுவரத்தில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

    • இன்று வெள்ளிக்கிழமை அமாவாசை தினமாகும்.
    • அமாவாசை என்பது முன்னோருக்கான நாள்.

    வைகாசி சுக்கிரவார அமாவாசையில் விரதம் இருந்து நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் கேட்டதெல்லாம் கிடைக்கும், நினைத்ததெல்லாம் நிறைவேறும். இன்று வெள்ளிக்கிழமை அமாவாசை தினமாகும்.

    அமாவாசை என்பது முன்னோருக்கான நாள். பித்ருக்களுக்கான நாள். ஒவ்வொரு அமாவாசையிலும் தர்ப்பணம் செய்யச் சொல்லி, அறிவுறுத்துகிறது சாஸ்திரம். இதேபோல், வருடத்துக்கு 96 தர்ப்பணங்கள் என்றும் விவரிக்கிறது.

    அமாவாசையிலும் தமிழ் மாதப் பிறப்பிலும் தர்ப்பணம் செய்யவேண்டும். அமாவாசை அன்று விரதம் இருந்து முன்னோர்களின் படங்களுக்கு பூக்களிட்டு தூப தீப ஆராதனை காட்டி, நமஸ்கரித்து பிரார்த்தனை செய்யவேண்டும்.

    வைகாசி அமாவாசை விசேஷம். வெள்ளிக்கிழமைக்கு சுக்கிரவாரம் என்று பெயர். சுக்கிரவார அமாவாசை ரொம்பவே விசேஷம். இந்தநாளில், பித்ருக்களை நினைத்து தர்ப்பணம் செய்யுங்கள். எள்ளும் தண்ணீரும் விட்டு செய்யப்படுகிற தர்ப்பணத்தை, தில தர்ப்பணம் செய்வார்கள். தில தர்ப்பணம் என்பது எள் கொண்டு தர்ப்பணம் செய்வது!

    எனவே, அமாவாசை நாளில் விரதம் இருந்து தர்ப்பணம் செய்து, முன்னோரை ஆராதியுங்கள்.அவர்களுக்குப் பிடித்த உணவை நைவேத்தியமாகப் படைத்து வேண்டிக் கொள்ளுங்கள். அன்றைய நாளில், முன்னோரை நினைத்து ஐந்துபேருக்காவது உணவுப் பொட்டலம் வழங்குங்கள். தயிர்சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம் என ஏதேனும் உணவுப் பொட்டலம் வழங்குங்கள்.

    உங்கள் இல்லத்தில் உள்ள குறைகளையெல்லாம் போக்கியருள்வார்கள் பித்ருக்கள். கேட்ட வரங்களையெல்லாம் தந்தருள்வார்கள். நீங்கள் நினைத்ததையெல்லாம் நடத்தித் தந்தருள்வார்கள்.

    இன்று 19.5.2023 வெள்ளிக்கிழமை, அமாவாசை. மறக்காமல் தர்ப்பணம் செய்யுங்கள்.

    • ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிவபெருமானால் உருவாக்கப்பட்ட நகரம் காசி.
    • கோவிலின் பின்பக்கம் ஒரு தனி நந்தி, சுவற்றைப் பார்த்துள்ளார். இதுதான் ஆதி நந்தி.

    மூலவர்: காசி விஸ்வநாதர்

    அம்மன்/தாயார்: விசாலாட்சி

    தீர்த்தம்: கங்கையில் 64 தீர்த்தக் கட்டங்கள் உள்ளன. ஆதிகங்கை என்ற தீர்த்தக் குளம் உள்ளது. ஞான வாவி என்ற சிறுதீர்த்தக் கிணறு, மணிகர்ணிகா தீர்த்தம், சக்ரதீர்த்தம் முதலியன காசியில் உள்ள முக்கிய தீர்த்தங்கள்.

    பழமை: 2000-3000 வருடங்களுக்கு முன்

    புராண பெயர்: வாராணசி, பனாரஸ், ஆனந்த வனம், மகாமயானம், அவிமுக்தம்.

    திருவிழா: தை அமாவாசை, ஆடி அமாவாசை, தீபாவளி (அன்னக்கொடி உற்ஸவம்), ஹோலிப் பண்டிகை, சிவராத்திரி, நவராத்திரி.

    தல சிறப்பு: இந்தியாவில் 12ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் காசியே முதன்மையானது, அம்மனின் சக்தி பீடங்களில் இது மணிகர்ணிகா பீடமாகும். இங்குள்ள மூலவர் மரகதத்தால் ஆனவர் என்பது தனி சிறப்பு.

    ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிவபெருமானால் உருவாக்கப்பட்ட நகரம் காசி. இத்தலம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது. இவ்வூருக்கு வாரணாசி, மகாமயானம், அபிக்தம், ஆனந்த பவனம் ஆகிய பெயர்களும் உள்ளன. மிகவும் பழமை வாய்ந்த நகரம். வாரணா, ஹசி என்ற நதிகளுக்கும் இடையில் இவ்வூர் அமைந்துள்ளதால் வாரணாசி என்ற பெயர் வந்தது. இவ்வூரை பனாரஸ் என்றும் சொல்வார்கள். கல்வியை வழங்கும் கிரகமான புதன் காசிவிஸ்வநாதரைப் பூஜித்ததன் பயனாக நவக்கிரகங்களில் ஒருவராக கிரகபதவி பெற்றார். கல்வியில் சிறந்து விளங்க மாணவர்கள் காசிவிஸ்வநாதரை வழிபாடு செய்வது சிறப்பாகும். காசி என்றால் ஒளிநகரம் என்பது பொருள். காசியில் இறந்து போவது சொர்க்கத்தைத் தரும் என்று சொல்வார்கள். இங்கே இறந்து போகும் பறவைகள், மிருகங்கள் மற்றும் சகல ஜீவராசிகளுக்கும் மரணம் நேரும் போது அவற்றின் காதுகளில் ராமநாமத்தை சிவனே ஓதுகிறார் என்பது ஐதீகம். ஓம் என்ற பிரணவத்தை ஓதுவதாகவும் சொல்லப்படுவதுண்டு.

    இந்த கோவிலை முதன்முதலில் கட்டியது யார் எனக் கேட்டால் ஆச்சரியமாக இருக்கும். முகலாய சக்ரவர்த்தி அக்பர் தனது வருவாய்துறை அமைச்சர் தோடர்மால் மூலமாக கட்டினார். தோடர்மால் தனது குருவான நாராயண் பட் உதவியுடன் ஷகி கஜானா நிதியிலிருந்து இந்தப் பணியைச் செய்துள்ளார். ஆனால் காசி விஸ்வநாதர் கோவிலின் பழங்கால வரலாற்றிலும் கல்வெட்டுகளிலும் இதுபற்றிய தகவல்கள் ஏதுமில்லை. கி.பி 1034ம் ஆண்டு முதல் காசி விஸ்வநாதர் கோவில் பலமுறை முகலாய பேரரசர்களால் இடித்து தள்ளப்பட்டுள்ளது. இதை இந்துக்கள் திரும்பத் திரும்ப கட்டி வந்துள்ளனர். 1669-ல் அக்பரின் பேரன் அவுரங்கசீப் விஸ்வநாதர் கோவிலில் உள்ள சிருங்கர் மண்டபத்தின் சுவரை ஆதாரமாகக் கொண்டு கோவில் அருகில் ஒரு மசூதியையும் கட்டினார். இப்போதும் இந்த மசூதி இருக்கிறது. சிருங்கர் மண்டப சுவரை ஆதாரமாகக் கொண்டு மசூதி கட்டப்பட்டுள்ளதை கண்கூடாகப் பார்க்கலாம். இதிலிருந்து காசி கோவில் ஒரு புண்ணி சத்திரம் மட்டுமல்ல ஒற்றுமையின் சின்னம் என்பதும் நமக்கு புரிகிறது.

    இங்கு அன்ன பூரணி, சத்திய நாராயணர், டுண்டி ராஜவிநாயகர், சாட்சி விநாயகர், இராமர், அனுமன், சனிபகவான், துர்காதேவி, கவுடி மாதா, பைரவர், மகாகாளர், மகா காளி, பாண்டுரங்கன், நீலகண்டர், தண்டபாணீச்வரர் ஆகியோர் பரிவார மூர்த்திகளாக உள்ளனர். விசுவநாதர் கோவில் கர்ப்பகிருகம் வடநாட்டுப்பாணியில் கோபுரம் உயரமாகவும், கொடியுடனும் காணப்படுகிறது. மூலவர் விசுவநாத லிங்கம் சிறியதாக பூமி மட்டத்திலிருந்து ஒரு பள்ளத்தில் உள்ளார். பக்தர்கள் மண்டிபோட்டுக் குனிந்து விசுவநாதரைத் தொட்டு வழிபடுகின்றனர். லிங்கத்தின் தலையில் தங்கமுலாம் பூசப்பட்ட தாமிரத் தகடு பொருத்தப்பட்டுள்ளது. லிங்கத்தைச் சுற்றிலும் வெள்ளித் தகடுக் கட்டு அமைத்துள்ளார்கள். லிங்கத்தின் மேல் ஒரு பாத்திரம் கட்டித் தொங்க விட்டுள்ளார்கள். அதிலிருந்து கங்காதீர்த்தம் சொட்டுச் சொட்டாக லிங்கத்தின் மீது விழுந்து அபிஷேகம் செய்கிறது.

    கோவிலின் பின்பக்கம் ஒரு தனி நந்தி, சுவற்றைப் பார்த்துள்ளார். இதுதான் ஆதி நந்தி. ஆதி விசுவநாதர் கோவிலிருந்த இடத்தில் மசூதி உள்ளது. அந்த நந்தியின் அருகேதான் ஞானவாவி என்ற தீர்த்தக் கிணறு உள்ளது. இப்போதுள்ள காசி விஸ்வநாதர் கோவில் 1777ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தூர் ராணி அகல்யாபாய் இக்கோயிலைக் கட்டினார். இந்த கோவில் மிகவும் சிறிய கோவில் தான். குறுகலான பாதையில் சென்று கோவிலை அடைய வேண்டும். பூஜை பொருட்களைக் கொண்டு பக்தர்களே ஆராதனைகள் அனைத்தையும் செய்யலாம். அர்ச்சகரிடம் கொடுத்து பூஜிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அன்னபூரணி கோவிலும், விசாலாட்சி கோவிலும் தனியே சிறிது தொலைவில் உள்ளன. விசாலாட்சி கோவில் நமது தென்னாட்டுப் பாணியில் உள்ளது. இங்கே நவக்கிரகங்களும் உள்ளன. அன்னபூரணி அம்பாள் கோவிலில் தீபாவளி அன்று அன்னக்கொடி உற்சவம் நடக்கும். அப்போது, அம்பாள் லட்டுத்தேரில் பவனி வருவாள்.

    பிரார்த்தனை:

    வியாச காசியில், வியாசர் வழிபட்ட சிவலிங்கத்தை வழிப்பட்டால் தான், காசிக்கு வந்த முழுப் பலனையும் அடையலாம். காசிக் காவலர் பைரவர் கோயிலில், காசிக் கயிறு என்னும் கறுப்புக் கயிறு கட்டிக் கொண்டால், நம்மைத் தீய சக்திகள் அண்டாது. கங்கையில் நீராடினால் நமது தேகம் புனிதம் அடைகிறது. விசுவநாதரைத் தரிசித்தால் உயிர் புனிதம் அடைகிறது. ஞான வாவியைத் தரிசித்தால் அறிவு புனிதம் அடைகிறது - என்று முனிவர்கள் பலர் கூறியுள்ளனர்.

    நேர்த்திக்கடன்:

    பக்தர்கள் இங்குள்ள தீர்த்தக் கரையில் தம் முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்து நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.

    • நம் பித்ருக்கள் சக்தி நிறைந்தவர்கள்.
    • மதிய வேளை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது.

    அமாவாசை திதி மறைந்த நம் முன்னோர்களுக்காக விரதம் இருந்து வழிபடுவதற்குரிய நாளாகும் அன்றைய தினம் நம்முடைய முன்னோர்களின் பசியும், தாகமும் அதிகரிக்கும் என்றும், அந்த பசியைப் போக்க கருப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம் செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால் அவர்களின் பசி அடங்கி, நமக்கு ஆசிகளை வழங்குவார்கள் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    அமாவாசை தோறும், ஒவ்வொரு வீட்டு வாசலிலும், முன்னோர்கள் நின்று கொண்டு எள் தண்ணீர் பெறுவதற்காக காத்துக் கொண்டிருப்பார்களாம். அன்றைய தினம் விரதம் இருப்பவர்கள் வாசலில் கோலம் போடக்கூடாது. மாமிசம் சாப்பிடக்கூடாது வெங்காயம், பூண்டு சாப்பிடக்கூடாது. அமாவாசை அன்று யாரையும் கோபமாக பேசக்கூடாது.

    மாதுர்காரகனாகிய சந்திரனும், பிதுர்காரகனாகிய சூரியனும் ஒன்றாக இணையும் காலமே அமாவாசை. அந்த தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து உணவு படையலிட்டு அவர்களின் ஆசி பெறும் போது, நமது பாக்ய ஸ்தானம் வலிமை பெறும். இதன் மூலம் திருமணத்தடை, குழந்தை பிறப்பு தாமதம், வறுமை, நீடித்த நோய், கடன் தொல்லை போன்ற பிரச்சினைகளை நீக்கி கர்மவினைகளுக்குப் பரிகாரம் தேடிக் கொள்ளலாம். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க விரதம் இருக்கும் இந்த நாளில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.

    நம் பித்ருக்கள் சக்தி நிறைந்தவர்கள். அவர்கள் ஆசீர்வாதத்தால் புண்ணியமும் செல்வமும் கிடைக்கும். எனவே நம்முடைய வீட்டு வாசலில் காத்திருக்கும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். காலை 6.30 மணிக்குள் தர்ப்பணம் கொடுப்பது நல்லது. அப்படி கொடுக்க முடியாதவர்கள் சூரியன் மறைவதற்குள் தர்ப்பணம் கொடுக்கலாம். ராகுகாலம், எமகண்டம் ஆகியவை தர்ப்பணத்துக்கு பொருந்தாது. மதிய வேளை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது. தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், மூன்று தலைமுறையின் பெயர்களை கூற வேண்டும்.

    தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடிதான் கொடுக்க வேண்டும். தர்ப்பணம் செய்யும்போது, கருப்பு எள்ளை மற்றவர்களிடம் இருந்து கடனாக வாங்கக்கூடாது. நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது அதேபோல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. நீரில் இருப்பவர்கள் நீரிலும், கரையில் இருப்பவர்கள் கரையிலும் தான் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

    அமாவாசை வழிப்பாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அன்று காகத்துக்கு சாதம் வைத்து அது சாப்பிட்டப் பின்னரே அனைவரும் சாப்பிடும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. சனீஸ்வர பகவானின் வாகனமான காகம், யமலோகத்தின் வாசலில் இருப்பதாகவும், அது யமனின் தூதுவன் எனவும் கூறப்படுகிறது. காகத்துக்கு சாதம் வைத்தால், யமலோகத்தில் வாழும் நமது முன்னோர்கள் அமைதியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. காகம் சாதத்தை எடுக்காவிட்டால், முன்னோர்களுக்கு ஏதோ மனக்குறை இருப்பதாக கருதுவது மக்களின் நம்பிக்கை.

    அமாவாசையன்று பித்ருக்கள் வழிபாட்டின் போது, வீட்டில் முன்னோர்களின் படத்துக்கு துளசி மாலையோ, துளசி இலையோ சமர்ப்பிக்க வேண்டும். இது மகா விஷ்ணுவை மகிழ்விக்கும். இதனால் பித்ருக்களுக்கு விஷ்ணுவின் ஆசி கிடைக்கும். அவர்கள் மகிழ்ச்சியில் தமது சந்ததியினரை வாழ்த்துவார்கள். அதன் மூலம் நமது துயர்நீங்கி வாழ்வில் சுபீட்சம் ஏற்படும்.

    முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த அமாவாசை தினத்தில் வீட்டு வாசலில் கோலம் போடுவதைத் தவிர்க்கவேண்டும். முன்னோரை வழிபட்ட பிறகே தெய்வ வழிபாடுகள் தொடர வேண்டும் என்பதால், அமாவாசை தினத்தில் வீட்டு வாசலில் கோலம் போடுவதில்லை. கோலங்கள் தெய்வ வழிபாட்டுக்கு உரியவை என்பதுடன், மகிழ்ச்சியின் வெளிப்பாடாகவும் இருப்பவை. எனவே முன்னோர்களை இழந்து அவர்களின் பிரிவால் வாடும் நாம் திதி, அமாவாசை தினங்களில் கோலம் போடுவதைத் தவிர்க்க வேண்டும்.

    • இந்த மாதம் முழுவதும் கடலாடும் மாதம் என்றும், தீர்த்தமாடும் மாதம் என்று கூறப்படுகிறது.
    • மகம் நட்சத்திரத்தை பித்ருதேவா நட்சத்திரம் என்றும் அழைப்பார்கள்.

    தமிழ் மாதங்களில் விசேஷமானதாக கருதப்படுவது மாசி மாதம் ஆகும். இந்த மாதம் முழுவதும் கடலாடும் மாதம் என்றும், தீர்த்தமாடும் மாதம் என்று கூறப்படுகிறது. அதன்படி இன்று மாசி மக தினமாகும். மகம் நட்சத்திரம் இன்று இரவு 9.30 மணி முதல் இன்று நள்ளிரவு 12.05 வரை நீடிக்கிறது.

    மாசிமகம் அன்று சிவபெருமானையும், ஸ்ரீவிஷ்ணு பகவானையும், பித்ருக்களையும் வணங்கினால் 7 ஜென்ம தோஷங்கள் நீங்கி சகல நலன்களையும் பெற்று வளமான வாழ்க்கை அமையும் என்பது நம் பிக்கை. மகம் நட்சத்திரத்தை பித்ருதேவா நட்சத்திரம் என்றும் அழைப்பார்கள்.

    சிவன், விஷ்ணு, முருகன் என முப்பெரும் தெய்வங்களுக்கு உகந்த இந்த நன்னாள், தோஷம் நீக்கும் புண்ணிய நாளாகவும் கருதப்படுகிறது. இந்த நாளில் புண்ணிய ஸ்தலங்களை தரிசிப்பதும், புண்ணிய நதிகள், தீர்த்தங்களில் நீராடுவதும் பாவங்களை போக்கும் என்பது ஐதீகம்.

    மகம் நட்சத்திரத்தின் அதிதேவதை பித்ருக்கள். ஆகையால் அன்றைய தினம் பித்ருக்கள் வழிபாடு செய்ய முன்னோர்களின் ஆசி கிடைக்கும். கும்பகோணம், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் தர்ப்பணம், பிதுர் கடன் செய்வது நன்மை தரும்.

    அந்த வகையில் திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் அம்மா மண்டபத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அங்கு தயார் நிலையில் இருந்த சிவாச்சாரியார்கள், புரோகிதர்கள் மூலம் தங்களது முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்து திரளானோர் வழிபாடு நடத்தினர். பின்னர் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ரெங்கநாதரையும், மலைக்கோட்டை தாயுமான சுவாமியையும் வழிபட்டனர். திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினத்தில் உள்ள வெள்ளி கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். திரும்பிய திசையெல்லாம் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது. அவர்கள் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கடலில் புனித நீராடி வழிபட்டனர்.

    இதேபோல் விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் அருகே ஓடும் மணிமுக்தா ஆற்றில் திரளான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு நடத்தினர். புரோகிதர்கள் மூலம் தர்ப்பணமும் கொடுத்தனர்.

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மகாமக குளத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதேபோல் வேதாரண்யம் கடலில் புனித நீராடிய பக்தர்கள் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் வழிபாடு நடத்தினர்.

    ஈரோடு மாவட்டத்தில் பவானி கூடுதுறை மற்றும் கொடுமுடி காவிரி ஆறு பகுதிகளில் திரளான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டதோடு, இருகரை தொட்டுச்செல்லும் காவிரி ஆற்றில் புனித நீராடினார்கள்.

    இதேபோல் ராமேஸ்வரர் அக்னிதீர்த்த கடலில் இன்று மாசி மகம் தினத்தை முன்னிட்டு ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் குவிந்தனர். அவர்களும் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டதோடு, 21 தீர்த்தங்களிலும் புனித நீராடினர். தொடர்ந்து ராமநாதசுவாமியை வழிபட்டனர்.

    மேலும் கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் பகுதிகள், நெல்லை தாமிரபரணி ஆறு மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நதிகள், கோவில் குளங்களில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.

    இந்த தினத்தில் பல கோவில்களில் உற்சவ மூர்த்தியுடன் மக்களும் நீர்நிலைகளில் மூழ்கி வழிபாடு நடத்தும் தீர்த்தவாரி நடைபெற்றது. புனித நீராட்டு மற்றும் வழிபாட்டுடன் சில தான தர்மங்களையும் செய்வதால் பாவங்கள் நீங்கி அனைத்து வளங்களும் கிடைக்கப் பெறுவது உறுதி.

    அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவது தான் மாசி மகம் என்பதால், பலர் தங்களால் இயன்ற அன்னதானம் செய்தனர். அதுமட்டுமின்றி சிவபெருமான் வருண பகவானுக்கு சாப விமோசனம் அளித்ததும் இந்தநாளில்தான் என்பதால் மழை வளம் பெருகி, அனைவரும் சுபிக்ஷமாக இருக்க மாசிமக வழிபாடு சிறந்ததாகும்.

    • வீரராகவ பெருமாளை நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.
    • இன்று மாலை 6 மணிக்கு தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது.

    திருவள்ளூரில் உள்ள வீரராகவபெருமாள் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

    இக்கோவிலுக்கு அமாவாசை தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    இன்று மாசி அமாவாசை என்பதால் நேற்று இரவு முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சென்னை, காஞ்சீபுரம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து கோவில் மற்றும் குளக்கரையில் குவிந்தனர்.

    இன்று அதிகாலை அவர்கள் கோவில் குளக்கரையில், தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பின்னர் கோவிலில் கண்ணாடி மண்டபத்தில் எழுந்தருளிய உற்சவர் வீரராகவ பெருமாள் மற்றும் மூலவர் வீரராகவ பெருமாளை நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.

    இன்று மாலை 6 மணிக்கு வீரராகவர் கோவிலில் தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது. இந்த தெப்ப உற்சவத்தில் உற்சவர் வீரராகவ பெருமாள், கோவில் குளத்தைச் சுற்றி வந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் கட்சி அளிப்பார்.திருவள்ளூர் கட்டபொம்மன் தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. இதேபோல் ராஜாஜிபுரம் காளமேகம் தெருவில் உள்ள ஓம் ஸ்ரீ பவானி அம்மன், ஓம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரிஅம்மன் கோவில், புட்லூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், ஒதப்பை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், மேல்நல்லாத்தூர் அங்காள பரமேஸ்வரி கோவில் ஆகிய கோவில்களில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    ×