search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்"

    • பொது இடத்தில் வைத்து பக்தர்கள் வழிபாடு நடத்திய பிறகு மீண்டும் ஊரை நோக்கி தேரை எடுத்துச் சென்றனர்.
    • தேரை வளைத்த நாகேஸ்வரராவ், டிராக்டர் டிரைவர் கண்டுளா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், சிலக்கலுபேட்டை அடுத்த யாதவல்லியில் மகா சிவராத்திரியை முன்னிட்டு டிராக்டரின் மேல் பிரம்மாண்ட தேர் தயார் செய்தனர்.

    அலங்கரிக்கப்பட்ட தேரில் சாமியை வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். பொது இடத்தில் வைத்து பக்தர்கள் வழிபாடு நடத்திய பிறகு மீண்டும் ஊரை நோக்கி தேரை எடுத்துச் சென்றனர்.

    அப்போது கொட்டப்ப கொண்டா என்ற இடத்தில் தேர் சென்றபோது மின்கம்பியில் உரசாமல் இருப்பதற்காக தேரின் மேல் பகுதியை லேசாக வளைத்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக தேர் திடீரென சரிந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் தேரை வளைத்த நாகேஸ்வரராவ், டிராக்டர் டிரைவர் கண்டுளா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    மேலும் டிராக்டரின் முன் பகுதி நொறுங்கியது. அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு குண்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    • 27 அடி உயரமுள்ள புதிய மரத்தேர் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    • தற்போது அந்த காலை தேரின் மேற்பகுதியில் பொருத்தும் பணி நடந்து வருகிறது.

    சுவாமிமலை:

    கும்பகோணம் அடுத்த திருப்புறம்பியத்தில் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான கரும்படு சொல்லியம்மை சமேத சாட்சிநாதசாமி கோவில் உள்ளது.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் கடந்த ஏப்ரல் 1-ந்தேதி முதல் ரூ.55 லட்சம் செலவில் 27 அடி உயரமுள்ள புதிய மரத்தேர் அமைக்கும் பணி தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த தேர் வடிவம் முழுவதும் அமைக்கப்பட்டு வருகிற மாசி மாதத்தன்று தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    அலங்கார கால் வடிவ மைக்கும் பணி முடிந்து தற்போது அந்த காலை தேரின் மேற்பகுதியில் பொருத்தும் பணி நடந்து வருகிறது.

    இதேபோல், திருச்சியில் உள்ள பிஹெச்எல் நிறுவனம் தேருக்கான சக்கரங்களை தயார் செய்து விட்டனர்.

    சக்கரங்கள் வந்தவுடன் அதனை தேரில் பொருத்தி வருகிற கார்த்திகை மாதம் கடைசி வாரத்தில் வெள்ளோட்டம் நடைபெறும் என கோவில் கண்கா ணிப்பாளர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    • தேரில் கருணாநிதியின் சிறப்புகளை விளக்கும் குறும்படம் திரையிடப்பட்டது.
    • தேர் முன்பு மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பலர் செல்பி எடுத்தனர்.

    தஞ்சாவூர்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பன்முக தன்மையை விளக்கிடும் வகையில் முத்தமிழ் தேர் நேற்று தஞ்சைக்கு வந்தது.

    தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகில வந்த தேருக்கு மாணவ-மாணவிகள் பொதுமக்கள் பலர் மலர் தூவி வரவேற்பு அளித்தனர். பின்னர் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது. இந்த ஊா்தி 'எழுத்தே எனது மூச்சு, எழுதுவதே எனது தினப்பழக்கம்' என முழங்கிய கருணாநிதி பயன்படுத்திய பேனா வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

    தேரில் இருந்த கருணாநிதி சிலைக்கு கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமையில் எம்.பி.க்கள் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் (தஞ்சாவூர்), ராமலிங்கம் (மயிலாடுதுறை), மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    தேரில் கருணாநிதியின் சிறப்புகளை விளக்கும் குறும்படம் திரையிடப்பட்டது. ஊா்தியின் உள்ளே கருணாநிதியின் கோபாலபுர இல்ல உள் அமைப்பு, அஞ்சுகம் அம்மாளின் சிலை, அதன் அருகில் கருணாநிதி இருக்கையில் அமா்ந்திருப்பது போன்ற சிலை, அவா் பயன்படுத்திய நூலகத்தின் மாதிரி வடிவமைப்பு போன்றவை இடம்பெற்றுள்ளன. மேலும் அவைகளை இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் கியூ ஆர் கோடு மூலம் பெறும் வசதி ஏற்படுத்தபட்டு உள்ளது.

    இந்த தேர் முன்பு மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பலர் செல்பி எடுத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர்கள் அஞ்சுகம்பூபதி (தஞ்சை), தமிழழகன் (கும்பகோணம்), மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி, ஆணையர் மகேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் அனுராப்பூநடராஜமணி, முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், அம்மா ப்பேட்டை ஒன்றியக்குழு பெருந்தலைவர் கே.வி.கலைச்செல்வன், ஒன்றிய செயலாளர் செல்வக்குமார், அம்மாபேட்டை பேரூராட்சி துணை தலைவர் தியாக.சுரேஷ், தகவல் தொழி ல்நுட்ப பிரிவு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ராதாகி ருஷ்ணன், கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஜெயபாண்டி, கிளை செயலாளர் ராஜேந்திர சோழன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முத்தமிழ் தேர் புதுக்கோட்டைக்கு வருகை
    • அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் வரவேற்றனர்

    புதுக்கோட்டை, 

    கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, 'முத்தமிழ்த்தேர்" என்ற அலங்கார ஊர்தி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை தந்தது. அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் முத்தமிழ்தேரை வரவேற்று, உள்ளே வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    இந்த அலங்கர ஊர்தியானது திருமயம் வட்டம், லேனாவிளக்கு மற்றும் புதுக்கோட்டை நகராட்சி, அண்ணாசிலை ஆகிய பகுதிகளில், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பார்வையிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்நிகழ்வுகளில், மாவட்ட கலெக்டர்மெர்சி ரம்யா, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர்செல்வி, புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், முன்னாள் எம்எல்ஏ கவிதைபித்தன், தாசில்தார் கவியரசன், நகர்மன்றத் துணைத் தலைவர் எம்.லியாகத் அலி, மாவட்ட சமூகநல அலுவலர் கோகு லப்பிரியா, மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயல ட்சுமிதமிழ்ச்செல்வன், மருத்துவரணி அமைப்பாளர் முத்துகருப்பன், இளைஞரணி அமைப்பாளர் சண்முகம், மாவட்ட கவுன்சிலர் ராமகிருஷ்ணன், நகர் மன்ற உறுப்பினர் மதியழகன், பழனிவேல், வர்த்தக அணி துணை த்தலைவர் ஆதிமூலம், த.சந்திரசேகரன், சாத்தையா,

    ஊராட்சி மன்ற தலைவர் கள், திருமயம் சிக்கந்தர் , குழிபிறை அழகப்பன், பெருங்களுர் சரண்யா ஜெய்சங்கர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • முருகன் கோவிலுக்கு புதிய வெள்ளி தேர்
    • திருப்பணி குழு கூட்டத்தில் முடிவு

    ராம்ஜிநகர்

    திருச்சி அருகே உள்ள பிரசித்தி பெற்ற குமார வயலூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்காக தற்போது கோவில் கோபுரம், உள் பிரகாரம் கோவிலுக்கு சொந்தமான திருமண மண்டபங்கள் தெப்பக்குளம் ஆகிய இடங்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இது சம்பந்தமான திருப்பணி குழு ஆலோசனை கூட்டம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கோவிலுக்கு புதிதாக வெள்ளித் தேர் செய்வது, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக துலாபாரம் அமைப்பது , புதிய கொடிமரம் அமைப்பது, மேலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது போன்ற பல்வேறு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    இக்கூட்டத்தில் இணை ஆணையர் ஹரிஹரன், செயற்பொறியாளர் தியாகராஜன், உதவி செயற்பொறியாளர் அழகுமணி, கோவில் அறங்காவலர் குழு தலைவர் ரமேஷ், அறங்காவலர் குழு உறுப்பினர் கொத்தட்டை ஆறுமுகம், நாச்சி குறிச்சி ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ், கோவில் நிர்வாக அதிகாரி அருண் பாண்டியன் மற்றும் உபயதாரர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பழமை வாய்ந்த தேருக்கு பதிலாக இந்த ஆண்டு புதிதாக தேர் செய்யப்பட்டு விழாவும் நடத்தி முடிக்கப்பட்டது.
    • விழா காலங்களில் மட்டுமே பொது மக்களை தேரை பார்த்து தரிசனம் செய்ய இயலும்.

    உடுமலை:

    உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இயங்கி வருகின்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறும். அதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தேரில் எழுந்தருளியிருக்கும் மாரியம்மன் சூலத்தேவரை தரிசனம் செய்து மகிழ்வார்கள். பழமை வாய்ந்த தேருக்கு பதிலாக இந்த ஆண்டு புதிதாக தேர் செய்யப்பட்டு விழாவும் நடத்தி முடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நிலையில் நிறுத்தப்பட்டுள்ள தேரை பாதுகாக்கும் பணி கோவில் நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்டது.

    அதன் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் தேரை பொதுமக்கள் பார்த்து ரசிக்கும் வகையில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கண்ணாடியில் செய்யப்பட்ட கூண்டு அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்பாக கொட்டகை அமைத்து தேர் மூடப்பட்டிருக்கும். இதனால் விழா காலங்களில் மட்டுமே பொது மக்களை தேரை பார்த்து தரிசனம் செய்ய இயலும்.

    ஆனால் கோவில் நிர்வாகத்தின் புதிய முயற்சியால் நாள்தோறும் கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் ஆண்டு முழுவதும் 3 புறங்களில் இருந்து தேரை பார்த்து தரிசனம் செய்யலாம் என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • ஒவ்வொரு சக்கரமும் 400 டன் எடை கொண்டது.
    • ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

    * ஆண்டாள் கோவில் தேரில் ராமாயணம், மகாபாரதம் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. அதேபோல ஆண்டாளின் வாழ்க்கை வரலாறு, 64 கலைகள் குறித்த சிற்பங்கள் அனைத்தும் இந்தத் தேரில் செதுக்கப்பட்டுள்ளன.

    * பொதுவாக அனைத்து கோவில்களிலும் சுவாமி, அம்பாளுக்கு தனித்தனியாக தேர் இருக்கும். ஆனால் ஆண்டாள் கோவிலில் பெருமாளும், அம்பாளும் ஒரு சேர மணக்கோலத்தில் காட்சி அளிப்பதால் இந்த கோவிலில் ஒரே தேரில் ஆண்டாளும், ரெங்கமன்னாரும் மணக்கோலத்தில் எழுந் தருளுகின்றனர். இது வேறு எங்கும் இல்லாத ஒரு தனி சிறப்பு ஆகும்.

    * ஆடி மாதம் ஆண்டாள் பிறந்த ஆடிப்பூர நட்சத்திரத்தன்று தேரோட்டம் நடைபெறும். இதற்காக வைகாசி மாதம் தேரை சரி செய்யும் பணி தொடங்கி விடும். இதையடுத்து அலங்கார பணி ஆடி மாதம் வரை நடைபெறும்.

    * 1970-1980-ம் ஆண்டு காலக்கட்டத்தில் ஒரு முறை ஆடி மாதம் தேரோட்டம் தொடங்கி ஐப்பசி மாதம் நிறைவடைந்துள்ளது. சுமாா் 4 மாதங்கள் கழித்து தேர் நிலைக்கு வந்துள்ளது. அந்த 4 மாத காலமும் பக்தர்களின் கூட்டம் குறையாமல் இருந்ததாம்.

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மங்களாசாசனம் பெற்ற கோவில்களில் இத்தலமும் ஒன்றாகும். இங்குள்ள மூலவர் வடபத்ரசயனர் (ரெங்கமன்னார்). இவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் ஒரு சேர காட்சி அளிப்பது இந்த தலத்திற்கு மேலும் பெருமை சேர்க்கிறது.

    வரலாற்று சிறப்புமிக்க இந்தக் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்றாலும் ஆண்டாள் பிறந்த ஆடிப்பூர திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறும். இந்த திருவிழா 9 நாட்கள் நடைபெறும். 9-ம் நாள் காலையில் தேரோட்டம் நடைபெறும். அன்றைய தினம் இரவு கொடி இறக்கப்பட்டு விழா நிறைவடைகிறது.

    ஆண்டாள் கோவில் எந்த அளவிற்கு பிரசித்தி பெற்றதோ, அதே அளவிற்கு இங்குள்ள தேருக்கும் சிறப்புகள் பல உண்டு.

    இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (சனிக்கிழமை) காலை 8.05 மணிக்கு நடைபெறுகிறது. இந்த தேரோட்ட திருவிழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

    ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தக் கோவிலில் தேரோட்டம் நடைபெற்று உள்ளது. ஆண்டாள் கோவில் தேர், தமிழகத்தின் 2-வது பெரிய தேர் ஆகும்.

    பழங்காலத்தில் இருந்த தேர் சிதிலமடைந்த காரணத்தால், தற்போதுள்ள புதிய தேர் செய்யப்பட்டுள்ளது.

    திருவரங்கத்தில் ஸ்ரீரெங்க நாராயணனார் என்ற ஜீயர் இருந்தார். அவருடைய கனவில் ஆண்டாள் தோன்றி, தனக்கு தேர் செய்து தரும்படி கேட்டுள்ளார். அதற்கு அந்த ஜீயர், "நானே தினமும் மண் பாத்திரத்தில் சாப்பாடு வாங்கி உணவு அருந்தி வருகிறேன். என்னால் எப்படி தேர் செய்ய முடியும். அந்த அளவிற்கு என்னிடம் பொருட்செல்வம் இல்லை" என்றார்.

    அதற்கு ஆண்டாள், "உனக்கு வேண்டிய அத்தனையும் நான் தருகிறேன்" என கூறி விட்டு மறைந்தார்.

    மறுநாள் காலையில் திருவரங்கம் ஜீயருக்கு, பல்லக்கில் ஒரு ஓலை வருகிறது. அந்த ஓலையில் 'வானமாமலையில் பட்டம் ஏற்றுக்கொள்ள வரவும்' என கூறப்பட்டு இருந்தது. உடனே அந்த ஜீயர் ஸ்ரீரெங்க பெருமாளிடம் போய் "நான் பட்டம் ஏற்றுக்கொள்ளலாமா?" என உத்தரவு கேட்கிறார். பெருமாளும் அதற்கு இசைவு தெரிவித்ததால், ஜீயர் அந்த பட்டத்தை ஏற்றுக்கொண்டார்.

    இதையடுத்து அவர் வானமாமலையில் ஜீயராக பட்டம் ஏற்க பல்லக்கில் செல்கிறார். அங்கு மொத்தம் 30 பட்டங்கள் உண்டு. ஒவ்வொரு பட்டத்திற்கும் ஒரு பெயர் சூட்டப்படும். அதன்படி இவர் பட்டம் ஏற்ற பிறகு 'பட்டார்பிரான் ஜீயர்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பட்டார்பிரான் என்பது பெரியாழ்வாரின் நாமம் ஆகும். அவர் பட்டம் ஏற்ற மறுநாள் பெரிய சூறாவளி காற்றடித்து, தற்போதைய திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரியில் தேக்கு மரங்கள் சாய்ந்தன. புதிய ஜீயர் பட்டம் ஏற்ற பிறகு இவ்வாறு அசம்பாவிதமாக மரங்கள் சாய்ந்து விழுகிறதே என ஊர்மக்கள் வருந்தினர்.

    ஜீயரும் மனம் வருந்தியபடி பெருமாளிடம் சென்று இதுகுறித்து சொல்லி வழிபட்டார். அன்றைய தினம் இரவு ஆண்டாள் கனவில் தோன்றி, 'சாய்ந்த தேக்கு மரங்களை எல்லாம் சேர்த்து எனக்கு தேர் செய்ய வேண்டும்' எனவும், 'அதற்காகத்தான் நான் உனக்கு பட்டம் கொடுத்து உள்ளேன்' எனவும் கூறினார்.

    ஆண்டாளின் உத்தரவுப்படி அந்த தேக்கு மரங்கள் அனைத்தும் யானைகள் மூலமாக ஸ்ரீவில்லிபுத்தூர் கொண்டு வரப்பட்டன. அதன்பிறகு இந்த தேர் வடிவமைக்கப்பட்டது. 9 சக்கரங்களுடன் ஜீயர் தேரை வடிவமைத்தார். பின்னர் நாளடைவில் சக்கரம் முறிய ஆரம்பித்தது. ஆதலால் தேர் நிலைக்கு வர 6 மாதம் முதல் 8 மாதம் வரை ஆனது. பின்னர் 1986-ம் ஆண்டு இந்த தேருக்கு 4 பக்கமும் இரும்பு சக்கரம் பொருத்தப்பட்டன. ஒவ்வொரு சக்கரமும் 400 டன் எடை கொண்டது. இந்த சக்கரம் பொருத்திய பிறகு ஒரு வாரத்திற்குள் தேர் நிலைக்கு வந்தது. பின்னர் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தி, புல்டோசர் எந்திரம் மூலம் தள்ளப்பட்டு, தற்போது தேர் ஒரே நாளில் நிலைக்கு வந்து விடுகிறது.

    • தமிழகம் மற்றும் வட மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் இதனை பார்வையிட வருகிறார்கள்.
    • வள்ளுவர் கோட்டம் பராமரிப்பு செய்யப்படாத நிலையை கண்டு சுற்றுலாப் பயணிகள் முகம் சுளித்து வருகிறார்கள்

    சென்னை மாநகரத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள வள்ளுவர் கோட்டம் திகழ்ந்து வருகிறது. சென்னையின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த வள்ளுவர் கோட்டம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரின் நினைவை போற்றும் வகையில் கட்டப்பட்ட ஒரு வரலாற்று நினைவு சின்னம் ஆகும்.

    அற்புத கலைப்படைப்பு

    1975-ல் தமிழகத்தில் திமுக ஆட்சியின் போது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் இது கட்டப்பட்டதாகும். புகழ்பெற்ற வள்ளுவர் கோட்டத்தின் கட்டுமானம் அற்புதமான கலைப்படைப்பாக திகழ்கிறது.

    தமிழகம் மற்றும் வட மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் இதனை பார்வையிட வருகிறார்கள். இதன் நுழைவு கட்டணம் ரூ.10 ஆகும். வள்ளுவர் கோட்டத்தின் கட்டுமான அமைப்பு, கல்தேர் ஆகியவற்றின் அதிசயங்களை கண்டு பார்வையாளர்கள் வியந்து வருகிறார்கள்.

    கல்தேர்

    இந்த கல்தேர் 39 மீட்டர் உயரம் கொண்டது. கருங்கற்களால் உருவாக்கப்பட்ட இந்த கல்தேர் பல்வேறு சிறப்புகள் வாய்ந்தது ஆகும். சிறந்த கட்டிட சிற்பக்கலை நிபுணரான கணபதி ஸ்தபதி இதனை அழகாக செதுக்கி வடிவமைத்து கட்டி உள்ளார்.

    வள்ளுவர் கோட்டத்தின் ஆடிட்டோரியத்தில் ஒரே நேரத்தில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் அமரும் இடவசதி உள்ளது. வள்ளுவர் கோட்டத்தில் உள்ள மண்டபம் மிகவும் தனித்துவ அம்சம் கொண்டது. எந்த தூணின் துணையும் இல்லாமல் நிற்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது.

    திருக்குறளில் 133 அதிகாரங்கள் 1330 பாடல்களை இங்குள்ள மண்டபத்தின் சுற்றுப்புற பகுதிகளில் பார்வையாளர்களை கவரும் வகையில் கிரானைட் கற்களில் பொறித்து வைக்கப்பட்டுள்ளன. இதனை கண்டு பார்வையாளர்கள் வியந்து வருகிறார்கள்.

    புதுப்பிப்பு பணி

    இந்த நிலையில் வள்ளுவர் கோட்டத்தை ரூ.30 கோடி செலவில் நவீன முறையில் சீரமைக்கு பொதுப் பணித்துறை சார்பில் திட்டமிடப்பட்டது. இந்த பணிகள் விரைவில் தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை.

    வள்ளுவர் கோட்டம் பராமரிப்பு செய்யப்படாத நிலையை கண்டு சுற்றுலாப் பயணிகள் முகம் சுளித்து வருகிறார்கள். பராமரிப்பு பணிகள் எதுவும் செய்யப்படாததால் ஆங்காங்கே குப்பைகளாக காட்சி அளிக்கிறது. கட்டிடத்திற்கு வர்ணம் பூசி பராமரிப்பு செய்ய வேண்டும்.

    அடிப்படை வசதிகள்

    பார்வையாளர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். வள்ளுவர் கோட்டத்தில் உள்ள கலையரங்கம் குளிர்சாதன வசதியோடு நவீன முறையில் புதுப்பிக்கப்பட வேண்டும். இங்குள்ள கலை அரங்கத்தில் கலை நிகழ்ச்சிகள் மீண்டும் நடத்தப்படும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    சென்னை வள்ளுவர் கோட்டம் கட்டிடம் சரிவர பராமரிப்பு செய்யப்படாததால் பாழடைந்து வருகிறது. இங்குள்ள மண்டபத்தின் மின் விசிறிகள் அனைத்தும் பழுதாகி உள்ளன. எக்ஸாஸ்டர் பேன்கள் அனைத்தும் ஒயர்கள் அறுந்து கிடக்கின்றன. தரைகள் அனைத்தும் தூசி அடைந்து உள்ளன.

    காதல் ஜோடிகள்

    பராமரிப்பு பணிகள் செய்யாததால் கட்டிடங்களில் மழைத் தண்ணீர் தேங்கி பழுதடைந்து வருகிறது. இங்கு பாதுகாவலர் வசதிகள் செய்யப்படவில்லை. இதனால் காதல் ஜோடிகள் மறைவான இடங்களில் அமர்ந்து காதல் லீலைகள் புரியும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனை கண்டு பொது மக்கள் இங்கு வர பயப்படுகிறார்கள். சமூக விரோத செயல்கள் நடைபெறும் வகையில் உள்ளன. உடனடியாக இங்கு பாதுகாவலர்கள் நியமித்து ஒழுங்கு படுத்த வேண்டும். பழமையான கட்டிடத்தை புதுப்பித்து பாதுகாக்க வேண்டும்.

    இங்குள்ள வளாகம் முழுவதும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்கள் போல காட்சி அளிக்கின்றன.

    இங்குள்ள நீரூற்றுகுளம் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. மேலும் வளாகம் முழுவதும் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும். இது குறித்து தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இக்கட்டிடத்தை புதுப்பிக்க பொதுப் பணித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பல்வேறு நவீன வசதிகளை செய்து தர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • முருக்கன்குடி கிராமத்தில் மாரியம்மன் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்துள்ள முருக்கன்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த கோவிலுக்கென்று தனியாக தேர் இல்லாததால் விழாக்காலங்களில் அருகே உள்ள கோவிலுக்கு சொந்தமான தேரை கொண்டு வந்து தேரோட்டம் நடத்தப்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் மகா மாரியம்மன் கோவிலுக்காக புதிய தேர் செய்து தேரோட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர்.

    அதன்படி ரூ.20 லட்சம் மதிப்பில் புதிதாக தேர் செய்யப்பட்டது. இதையடுத்து தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சியையொட்டி நேற்று கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு யாக பூஜை நடைபெற்றது. இதனைதொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. இந்த தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் செய்து இருந்தனர்.

    • துங்கபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு ரூ.35 லட்சத்தில் புதிய தேர் செய்யும் பணி தொடங்கபட்டது
    • இன்னும் 3 மாதத்தில் கோவில் தேர் செய்யப்பட்டு வெள்ளோட்டம் நடைபெறும்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா துங்கபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிதாக தேர் செய்ய வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கலியபெருமாள் புதிதாக தேர் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யவேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்ததை ஏற்று புதிதாக தேர் செய்ய ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து தேர் செய்ய முதற்கட்டமாக ரூ.9 லட்சம் வழங்கப்பட்டு தேர் செய்யும் பணி துவங்கி நடந்து வருகிறது.

    தற்போது மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கலியபெருமாள் 2-ம் கட்டமாக ரூ. 5 லட்சத்து 60 ஆயிரத்திற்கான காசோலையை கோயில் தர்மகர்த்தா ராஜாங்கம், ஸ்தபதி மணிகண்டன் ஆகியோரிடம் வழங்கினார். பின்னர் கலியபெருமாள் கூறுகையில், வரதராஜ பெருமாள் கோயிலுக்கு புதிதாக தேர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தேர் தரமான கட்டுமானத்துடன் அமைக்கப்பட்டு வருகிறது. இன்னும் 3 மாதத்தில் கோவில் தேர் செய்யப்பட்டு வெள்ளோட்டம் நடைபெறும் என தெரிவித்தார். நிகழ்ச்சியின்போது கோவில் செயல் அலுவலர் (பொ) ஹேமாவதி உடனிருந்தார்.

    • புனித அடைக்கல அன்னை ஆலய தேர் பவனி நடைபெற்றது.
    • ஆலயத்தில் கடந்த 11-ந் தேதி ஆலய பங்கு தந்தை பாபியன் கூட்டுப் பாடல் திருப்பலி பூஜையு டன் கொடியேற்றம் நடைபெற்றது.

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே வேங்கிடகுளம் புனித அடைக்கல அன்னை ஆலயம் உள்ளது. ஆலயத்தில் கடந்த 11-ந் தேதி ஆலய பங்கு தந்தை பாபியன் கூட்டுப் பாடல் திருப்பலி பூஜையு டன் கொடியேற்றம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, தினந்தோறும் கிராம பொதுமக்களால் காலை முதல் மாலை வரை தேர் பவனி மற்றும் நவநாள் திருப்பலி, மன்றாட்டு பாடல் பாடி கலை நிகழ்ச்சி நடந்தது. வேங்கிடகுளம் பங்குத்தந்தை பபியான் மற்றும் கிராம பங்கு தந்தையர்கள் அருட்சகோதரிகள் விழா கூட்டுப்பாடல் திருப்பலியுடன் தேர்பவனி நடந்தது. இதனை தொடர்ந்து, சிறுமிகளுக்கு முதல் திருவிருந்து நடைபெற்றது. தொடர்ந்து, நடந்த தேர் பவனி நான்கு வீதிகள் வழியாக சுற்றி வந்து கோவிலை வந்தடைந்தது. இதில் கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பங்கு தந்தையர்கள், அருட் சகோதரிகள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    • முக்கிய நிகழ்ச்சியான செம்பவள பஞ்சவர்ண தேர் வீதி உலா 27-ந் தேதி நடக்கிறது

    கன்னியாகுமரி :

    என்.ஜி.ஓ. காலனி அருகே உள்ள உடையப்பன் குடியிருப்பு பகுதியில் ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆனி மாத செம்ப வள பஞ்சவர்ண தேர் திருவிழா நாளை மறுநாள் (17-ந் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 27-ந் தேதி (திங்கள்கிழமை) வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது.

    முதல் நாள் காலை மங்கல இசை, பணிவிடை, உகப்படிப்பு ஆகியவற்றை தொடர்ந்து காலை 5.30 மணிக்கு அதிர்வேட்டுகள் முழங்க திருக்கொடி ஏற்றுதல் நிகழ்ச்சி நடை பெறுகிறது. 7 மணிக்கு அன்னதர்மமும், 8 மணிக்கு கோலப்போட்டி நிகழ்ச்சியும் நடக்கிறது.

    கோலப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு அப்டா மார்க்கெட் தலை வர் பால்ராஜ் பரிசு கள் வழங்குகிறார். இரவு 7 மணிக்கு இனிமம் வழங்கு தலும் 8.30 மணிக்கு சிறுவர்- சிறுமியருக்கான கலை நிகழ்ச்சிகளும் நடை பெறுகிறது.

    தொடர்ந்து தினமும் சிறப்பு தீபாராதனைகள், வழிபாடுகள், அய்யா பவனி வருதல் போன்றவை நடக்கின்றன.5-ம் திருநாள் இரவு 8 மணிக்கு முகிலன்விளை பிரம்மசக்தி அம்மன் பஜனை குழுவினர் வழங்கும் மாபெரும் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    7-ம் நாள் திருவிழா நாள் இரவு 8 மணிக்கு அய்யாவின் அருளிசை புலவர் ஸ்ரீ குரு ஜி. என்.சிவச்சந்திரன் ஆன்மீக அருளிசை கச்சேரியும் நடைபெறுகிறது.

    9-ம் திருவிழா நாளில் இதுவும் நியாயம்தானா? எனும் சமூக நாடகம் நடை பெறுகிறது.

    10-ம் திருவிழா நாள் இரவு 8 மணிக்கு விஜய் டி.வி சூப்பர் சிங்கர் முபிதாவுடன் இணைந்து திரைப்பட பின்னணி பாடகி விஜிதா சுரேசாமின் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சிநடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செம்பவள பஞ்சவர்ண தேர் வீதி உலா 27-ந் தேதி (திங்கட் கிழமை) நடக்கிறது. மாலை 3 மணிக்கு ஆஞ்சநேயர் தேர் முன்னே செல்ல தெய்வத்திரு டாக்டர் எஸ்.லெட்சுமணனால் ஆரம்பிக்கப்பட்ட செம்பவள பஞ்சவர்ண தேர் வீதி உலா வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    செம்பவள பஞ்சவர்ண தேர் பவனியின்போது மோர் தர்மம், பழத்தர்மமும், கோயில் விளை சந்திப்பில் வைத்து அன்னதர்மமும் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு தேர் கோவில் முன் வந்து சேரும்.

    இரவு 2 மணிக்கு கொடி யிறக்கும் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து இனிப்பு வழங்குதலும் நடைபெறுகிறது.

    தேர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் தலைவர் தங்ககிருஷ்ணன், உப தலைவர் சந்திரசேகர், செயலாளர் துரைச்சாமி, இணைச் செயலாளர் சிவசுப்பிரமணியன், பொருளாளர் உதயகுமார், துணை பொருளாளர் ராமகிருஷ்ணன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் கிருஷ்ணமணி நாராயணப்பெருமாள், மணிகண்டன், ஸ்ரீதர், நாராயண மணி, ராஜேஸ்வரன், சுரேந்திரன் தங்கலிங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

    ×