search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நொய்யல் ஆறு"

    • நொய்யல் ஆற்றினை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் ரூ. 177 கோடியில் நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
    • மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

    திருப்பூர்:

    கோவை மாவட்டத்தில் தொடங்கி திருப்பூர் , ஈரோடு வழியாக கரூர் மாவட்டம் காவிரி ஆற்றில் கலக்கும் நொய்யல் ஆறு 158 கிலோமீட்டர் பயணிக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக சாய சலவை பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் காரணமாக நொய்யல் ஆற்று தண்ணீர் மாசு அடைந்த நிலையில் அதனை மீட்டெடுக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டது.

    தற்போது சுத்தகரிப்பு நிலையங்கள் மூலம் ஜீரோ டிஸ்சார்ஜ் முறையில் சாய சலவை பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சுத்தகரிப்பு செய்து மீண்டும் மறுசுழற்சி முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது . இதன் காரணமாக நொய்யல் ஆறு மீண்டும் சுத்தகரிக்கப்பட்டு வரக்கூடிய நிலையில் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நொய்யல் ஆற்றினை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் ரூ. 177 கோடியில் நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    நடந்து முடிந்த பொங்கல் பண்டிகைக்காக நொய்யல் ஆற்றங்கரையோரம் தூய்மைப்படுத்தி வண்ண ஓவியங்கள் வரைந்து இருபுறமும் காங்கிரீட் தளங்கள் அமைத்து சமத்துவ பொங்கல் விழா கலை நிகழ்ச்சிகள் என மூன்று நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடியது.

    இந்நிலையில் திருப்பூர் மணியகாரம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள நொய்யல் ஆற்றங்கரையோரம் சாய சலவை பட்டறையில் இருந்து சுத்தகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக சாய சலவை பட்டறையில் இருந்து வெளியேறும் சுத்தகரிக்கப்படாத சாய ஆலை நீர் நொய்யல் ஆற்றில் கலந்து வருகிறது.

    உடனடியாக இதனை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இல்லையெனில் சாய ஆலையிலிருந்து வெளியேறும் நச்சு தண்ணீர் காரணமாக தண்ணீரின் ஆக்ஸிஜன் அளவு குறைந்து தண்ணீரில் உள்ள மீன்கள் மற்றும் அந்த தண்ணீரை பயன்படுத்தும் கால்நடைகளுக்கு நோய் பரவும் ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

    • நாம் முயற்சி செய்தால், தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால், அரசு நிச்சயமாக நிதி ஒதுக்கி நொய்யல் ஆற்றை மீட்க செய்ய முடியும்.
    • கொங்கு செழிக்க வேண்டும் என்றால் நொய்யல் ஆற்றை மீட்டெடுக்க வேண்டும்.

    சென்னை:

    நொய்யல் ஆற்றை மீட்டெடுப்போம் என்ற தலைப்பில் பசுமைத்தாயகம் மற்றும் கொங்கு பகுதியில் உள்ள சமூகத்தொண்டு அமைப்புகள் சார்பில் கோவையில் கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட ஆறுகள் இருக்கின்றன.

    காவிரி ஆற்றில் தமிழ்நாட்டில் இருந்து, மேற்கு பகுதியில் இருந்து பவானி ஆறு, நொய்யல் ஆறு அமராவதி ஆறு கிளை ஆறுகளாக கலக்கின்றன.

    40 ஆண்டுகளுக்கு முன்பு நொய்யல் ஆற்றில் உள்ள நீரினை அள்ளி குடிக்கலாம். 2500 ஆண்டுகள் இந்த நொய்யாலாறுக்கு வரலாறு இருக்கிறது. அப்பொழுதே கிரேக்க, ரோமனியர்களுடன் வணிகம் செய்த தொல்லியல் ஆவணங்கள் இருக்கின்றன. அதன் பிறகு வந்த சேர சோழ பாண்டியர் மன்னர்களும் நொய்யல் ஆற்றுக்கு தேவையான நீர் மேலாண்மை திட்டங்களை வகுத்து பாதுகாத்து வந்து இருக்கிறார்கள். தற்போது நொய்யல் ஆறு சீர்கெட்டு கிடக்கிறது.

    நொய்யல் ஆற்றை காப்பாற்றுவது என்பது அரசு தான் செய்ய வேண்டும். அரசை நாம் அனைவரும் இணைந்து செய்ய வைப்போம். நாம் முயற்சி செய்தால், தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால், அரசு நிச்சயமாக நிதி ஒதுக்கி நொய்யல் ஆற்றை மீட்க செய்ய முடியும்.

    நொய்யல் ஆற்றின் மூலம் 45 லட்சம் ஏக்கர் அளவிற்கு விவசாயம் ஒரு காலகட்டத்தில் நடந்தது. ஆனால் இப்போது அதில் 35 சதவீதம் மட்டுமே விவசாயம் நடக்கிறது. இதனை நாம் 60, 70 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த நிலப்பகுதிக்கு ஏற்ப பயிர்களை நாம் தேர்வு செய்து விவசாயத்தை முன்னுக்கு கொண்டு வர வேண்டும்.

    'கொங்கு செழிக்கட்டும்', 'கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்' என்ற அந்த வாசகம் என்னால் மறக்க முடியாத ஒன்று. கொங்கு செழிக்க வேண்டும் என்றால் நொய்யல் ஆற்றை மீட்டெடுக்க வேண்டும். நொய்யல் ஆற்றை மீட்டெடுக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன.
    • குண்டும், குழியுமாக எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை ஊராட்சியில் புதுவெங்கரையாம்பாளையம் என்ற கிராமம் உள்ளது. திருப்பூர் - ஈரோடு மாவட்ட எல்லையை இணைக்கும் இந்த கிராமத்தின் அருகே நொய்யல் ஆறு செல்கிறது. இந்த நொய்யல் ஆற்றின் குறுக்கே ஒரு தாழ்வான தரைப்பாலம் கட்டப்பட்டு மேலே கான்கிரீட் தளத்தில் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் தாழ்வான தரைப்பாலத்தின் இருபுறமும் வாகனங்கள் போக்குவரத்து பாதுகாப்பிற்கு தடுப்புச்சுவர் எதுவும் கட்டப்படவில்லை.

    இந்த நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள கான்கிரீட் தரைப்பாலத்தை கடந்து காங்கயம், நத்தக்காடையூர் பகுதிகளில் இருந்து தினந்தோறும் கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன.

    மேலும் குட்டப்பாளையம், புது வெங்கரையாம்பாளையம், சத்திரக்காட்டுவலசு, கொல்லன்வலசு உட்பட சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த அரசு மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகள், ஊழியர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மாணவ -மாணவிகள், கிராம பொதுமக்கள் தங்களின் வாகன போக்குவரத்து வழிப்பாதையாக பயன்படுத்தி வருகின்றனர்.

    மேலும் இந்த தாழ்வான தரைப்பாலத்தில் அமைக்கப்பட்டு உள்ள கான்கிரீட் தள சாலை மிகவும் பழுதடைந்து கான்கிரீட் பெயர்ந்து, குண்டும், குழியுமாக எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

    மேலும் பலத்த மழைக்காலங்கள் மற்றும் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் அதிக அளவில் வேகமாக பாய்ந்து வரும் மழைநீர் இந்த நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள தாழ்வான தரைப்பாலத்தை மூழ்கடித்துபடி, மேலே சுமார் 20 அடி வரை உயர்ந்து சீறிப்பாய்ந்து செல்லும். அப்போது இந்த நொய்யல் ஆற்றில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு கனரக, இருசக்கர வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படும்.

    எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக துரித நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் புதுவெங்கரையாம்பாளையம் கிராமத்தில் நொய்யல் ஆற்றின் குறுக்கே பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ள தாழ்வான கான்கிரீட் தரைப்பாலத்தை முற்றிலும் இடித்து அகற்றி விட்டு, இருபுறமும் புதிய தடுப்பு சுவருடன் கூடிய மேம்பாலம் கட்டி சீரான வாகன போக்குவரத்து நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வாகன ஓட்டிகள், கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கோவை நகரில் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் நொய்யல் ஆற்றில் சேர்கிறது.
    • நொய்யல் ஆற்றின் ஓரம் உள்ள குளம், குட்டைகள் நீர் ஆதாரம் பெறும்.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க., தலைவர் செந்தில்வேல், முன்னாள் எம்.பி., ராதாகிருஷ்ணன் ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட திருப்பூர் மாநகராட்சி பஸ் நிலையத்திற்கு முன்னாள் நகர தந்தை பழனிசாமி கவுண்டர் பெயர் வைக்க வேண்டும்.பி.என்., ரோடு புது பஸ் நிலையத்திற்கு சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரன் பெயரும், புதிதாக கட்டப்பட்டுள்ள டவுன்ஹால் மாநாட்டு அரங்கத்துக்கு, அந்த இடத்தை வழங்கிய ரங்கசாமி செட்டியார் பெயரும் வைக்க வேண்டும்.

    சாமளாபுரம் பாசன நீர் மேலாண்மை பாதுகாப்பு குழுவினர் அளித்த மனுவில், கோவை நகரில் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் நொய்யல் ஆற்றில் சேர்கிறது.இதை சுத்திகரிப்பு செய்து, மீண்டும் ஆற்றில் திறந்து விட்டால், நொய்யல் ஆற்றின் ஓரம் உள்ள குளம், குட்டைகள் நீர் ஆதாரம் பெறும். சுற்றுப்பகுதி விவசாயிகள் நிலத்தடி நீர் ஆதாரம் பெறுவர். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழ்நாடு மக்கள் மன்றம், பல்வேறு வகையில் நலிவடைந்துள்ள விசைத்தறி தொழிலுக்கு மின் கட்டண உயர்வு மேலும் அவதியை ஏற்படுத்துகிறது.விசைத்தறிகளுக்கான மின் கட்டண உயர்வு முடிவை திரும்ப பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.  

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நொய்யல் ஆற்றில் கட்டப்பட்ட 23 தடுப்பணைகளும், 31 குளங்களும் மட்டுமே வரலாற்றை சுமந்த வண்ணம் எஞ்சி உள்ளது.
    • வெள்ளப்பெருக்கால் நொய்யல் ஆற்றின் மூலம் நீர் பெறும் குளங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு நிரம்பி வருகிறது.

    திருப்பூர்:

    கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உற்பத்தியாகி திருப்பூர், ஒரத்துப்பாளையம் அணை வழியாக காவிரியில் கலக்கும் ஆறாக நொய்யல் உள்ளது. தென்மேற்கு பருவமழை காலத்தில் மட்டும் தண்ணீர் செல்லும் ஆறாக உள்ள நிலையில், மற்ற காலத்தில் கோவை, திருப்பூர் நகரங்களின் கழிவு நீர் செல்லும் வடிகாலாக மாறி விடுகிறது.

    நொய்யல் ஆற்றில் கொங்கு சோழர்கள் ஆட்சி காலமான 12-13ம் நூற்றாண்டுகளில் 45-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டப்பட்டு 50க்கும் மேற்பட்ட குளங்களுக்கு தண்ணீர் சென்று நிரம்பும் வகையில் இருந்துள்ளது.

    தற்போது நொய்யல் ஆற்றில் கட்டப்பட்ட 23 தடுப்பணைகளும், 31 குளங்களும் மட்டுமே வரலாற்றை சுமந்த வண்ணம் எஞ்சி உள்ளது. மீதமிருந்த குளங்கள் காணாமல் போயும், தடுப்பணைகள் உடைக்கப்பட்டும் உள்ளது.

    கடந்த ஒரு மாதமாக தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இந்த வெள்ளப்பெருக்கால் நொய்யல் ஆற்றின் மூலம் நீர் பெறும் குளங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு நிரம்பி வருகிறது.

    கடந்த 13 நாட்களில் நொய்யல் ஆற்றில் சென்ற வெள்ள நீரின் அளவு சுமார் 15 டி.எம்.சி.க்கு மேல் இருக்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஒவ்வொரு ஆண்டும் நொய்யல் ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் காரணமாக 20 டி.எம்.சி. வரை மழைத்தண்ணீர் காவிரி ஆற்றில் கலந்து வருகிறது.

    ஏற்கனவே கொங்கு சோழர்கள் ஆட்சி காலத்தில் நொய்யல் ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணைகள் மூலம் குளங்கள் நிரப்பபட்டாலும், இன்னும் ஏராளமான தடுப்பணைகள் உடைக்கப்பட்டும், உடைந்தும் கிடக்கிறது.

    இவ்வாறு உடைக்கப்பட்ட தடுப்பணைகள் மூலம் அருகில் உள்ள குளங்களுக்கு நீர் கொண்டு செல்லப்பட்டதற்கான தடயங்கள் உள்ளது. அந்த குளங்களை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
    • நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    திருப்பூர் :

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்து வருகிறது. இதுபோல் கொங்கு மண்டலமான திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு குளங்களும் நிரம்பி வருகின்றன.

    இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான நொய்யல் ஆற்றில் கடந்த சில நாட்களாகவே வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. திருப்பூர் வளர்மதி பாலம் பகுதிகளில் நின்று வெள்ளத்தை பலரும் பார்த்து செல்கிறார்கள். கரைபுரண்டு வெள்ளம் செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுபோல் நொய்யல் ஆற்றில் கடந்த சில மாதங்களாகவே தூர்வாரும் பணிகள் நடந்ததால், எந்த ஒரு பாதிப்பும் இன்றி வெள்ளநீர் மாநகர் பகுதிகளில் சென்று கொண்டிருக்கிறது. இருப்பினும் நொய்யல் ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- நொய்யல் ஆறு கோவையில் இருந்து தொடங்கி திருப்பூர் வழியாக பல்வேறு மாவட்டங்களுக்கு செல்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் வெள்ளநீர் செல்லும் வகையில் இன்னும் கவனம் செலுத்தி தூர்வார வேண்டும். அவ்வாறு தூர்வாருவதன் மூலம் கடைகோடி பகுதிகள் வரை முழுவதுமாக உள்ள விவசாயிகளுக்கு போதுமான நீர் கிடைக்கும். அந்த பகுதிகளில் உள்ள குளங்களும் நிரம்பும் என்றனர்.

    • 4 நாட்களில் குளம் முழுமையாக நிரம்பியது.
    • மாணிக்காபுரம் குளத்துக்கும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே நொய்யல் ஆற்றின் மூலம் நீர் நிரம்பும் வகையில் சுமார் 320 ஏக்கர் பரப்பில் 16 அடிக்கு தண்ணீர் தேங்கும் வகையில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கத்தாங்கன்னி குளம் அமைந்துள்ளது. கடந்த 2 ஆண்டுக்கு முன் பொதுப் பணித்துறை சார்பில் குளம் முழுவதும் இருந்த சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு பெய்த பருவ மழையினால், நொய்யல் ஆற்றின் மூலம் நீர் நிரம்பும் வகையில் அமைந்துள்ள கத்தாங்கன்னி குளத்துக்கு பொதுப்பணித்துறையினர் நொய்யல் ஆற்று நீரைத் திறந்து விட்டனர்.

    4 நாட்களில் குளம் முழுமையாக நிரம்பியது. இதனை அடுத்து பாசனத்துக்கு திறந்து விட்டது போக மீதம் சுமார் 3 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்தது.இந்நிலையில் கடந்த கோடையின் போது குளம் வற்றும் நிலைக்கு சென்றது‌. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கன மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு காவிரிக்கு சென்றது.

    நொய்யலில் செல்லும் மழை நீரை குளத்துக்கு திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனைத்தொடர்ந்து கத்தாங்கன்னி தடுப்பணையில் இருந்து வெள்ள நீர் கடந்த வெள்ளி அன்று குளத்துக்கு திறந்து விடப்பட்டது. ஒரு அடிக்கு மட்டுமே நீர் இருந்த கத்தாங்கன்னி குளத்துக்கு கடந்த சில நாட்களாக நொய்யல் வெள்ள நீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக குளத்தில் சுமார் 7அடிக்கு மேல் தண்ணீர் மட்டம் உயர்ந்துள்ளது.

    இதே போல் நொய்யல் ஆற்றின் வடகரையில் ஊத்துக்குளி அருகே உள்ள அணைப்பாளையத்தில் 12 அடிக்கு தண்ணீர் தேங்கும் வகையில் 56 ஏக்கர் பரப்பளவில் அணைப்பாளையம் குளம் அமைந்துள்ளது. இக்குளத்தினை அப்பகுதி விவசாயிகள் ஒன்றிணைந்து சீமை கருவேல மரங்களை அகற்றி கரைகளை பலப்படுத்தி வைத்திருந்தனர்‌. தற்போது இந்த குளத்துக்கும் நொய்யல் ஆற்றில் இருந்து வெள்ள நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது குளத்தில் 2 அடிக்கு தண்ணீர் மட்டம் உயர்ந்துள்ளது.

    குளத்துக்கு நீர் வரும் பாதையில் ஆகாயத்தாமரை மற்றும் திருப்பூர் நகரின் பிளாஸ்டிக் குப்பைகள் அடைத்து கொண்டதால்,தண்ணீர் வாய்க்கால் உபரி போக்கி வழியாக, குளத்துக்கு திறந்து விடப்பட்ட நீரில் பெரும் பகுதி மீண்டும் நொய்யலுக்கே செல்வதால் குளத்துக்கு நீர் வரத்து குறைவாக உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். குப்பைகளை அகற்றி குளம் முழுமையாக நிரம்ப அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேபோல் மாணிக்காபுரம் குளத்துக்கும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்து நொய்யல் ஆற்றில் வெள்ள நீர் வந்தால் 4 நாட்களில், ஆற்றின் மூலம் நீர் பெறும் குளங்கள் அனைத்தும் நிரம்பும். அதே நேரத்தில் நொய்யலில் வெள்ளம் வரும்போது அதை பயன்படுத்தி கடந்த காலங்களில் சாய நீரை ஆற்றில் திறந்து விட்ட சம்பவங்களும் நடைபெற்றதால்,மாசுகட்டுப்பாட்டு துறையினர் சாய கழிவு நீர் நொய்யலில் திறந்து விடாமல் இருப்பதை உறுதி செய்ய தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு குளங்கள் நிறைய உதவி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திடீர் மழை வெள்ளத்தால் அணைப்பாளையம் தரைப்பாலத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
    • தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை கருணை காட்டினால் நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் குளிர் மற்றும் கோடை பருவத்தில் இயல்பான அளவை காட்டிலும் அதிக மழை பெய்துள்ளது.தென்மேற்கு பருவமழை துவங்கியதும், ஜூன் மாதம் பெய்ய வேண்டிய மழை பெய்துள்ளது. அதற்கு பிறகு பருவமழை ஏமாற்றிவிட்டது. கடந்த சில நாட்களாக திடீரென கருமேகம் திரண்டு, மழைக்கான அறிகுறி தென்படுவதும், பலத்த காற்று காரணமாக மழை பொய்த்து போவதுமாக சென்று கொண்டிருக்கிறது.

    மானாவாரி சாகுபடியை துவக்க முடியாமல் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.திருப்பூரின் நிலை இப்படியிருந்தாலும் கோவை மாவட்ட பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழையால், நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 3நாட்களுக்கு முன் சித்திரைச்சாவடி பகுதிகளை உற்சாகத்துடன் கடந்து வந்த புது வெள்ளம், திருப்பூரை வந்தடைந்தது.திருப்பூர் நகரப்பகுதிக்குள் நுழைந்த மழைநீர்கழிவுநீருடன் கலந்து, கருப்புநிறமாக ஆர்ப்பரித்து பாய்ந்தோடுகிறது. நொய்யல் வெள்ளத்தால் மங்கலம் நல்லம்மன் தடுப்பணை, திருப்பூர் அணைமேடு, அணைக்காடு தடுப்பணைகளில், வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடியது. திடீர் மழை வெள்ளத்தால் அணைப்பாளையம் தரைப்பாலத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    திருப்பூர் மாநகருக்குள் நுழைந்த மழை வெள்ளத்தை பார்க்க ஆர்வமாக சென்று பொதுமக்கள் பார்வையிட்டனர். ஆனால் கருப்பு நிறத்தில் தண்ணீர் பாய்ந்தோடியதால் மக்கள் மகிழ்ச்சியில்லாமல் பார்த்து திரும்பினர்.மதியத்திற்கு பின் நொய்யலில் பாய்ந்தோடிய வெள்ளம் தெளிந்த நிலையில் இருந்தது. கருப்பு நிறம் மாறி மழை வெள்ளமாக பாய்ந்தோடியது.இருப்பினும், நொய்யல் ஆற்றில் தேங்கிய சாக்கடை கழிவுகள் அடித்துச்செல்லப்படுகிறது. அடுத்து புது வெள்ளம் பாய்ந்து வந்தால் அருகே உள்ள குளங்களுக்கு தண்ணீர் எடுக்கலாம் என தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    நொய்யல் ஆறு மாவட்டத்தில் நுழையும், சாமளாபுரம் பகுதிகளில் ஆகாயத்தாமரை அதிகம் படர்ந்துள்ளது. ஆற்றின் ஒரு அங்குலம் கூட கண்ணில் தெரியாதபடி ஆகாயத்தாமரை அடர்த்தியாக ஆக்கிரமித்துள்ளது. திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆற்றில் படர்ந்திருந்த ஆகாயத்தாமரை, தண்ணீரில் அடித்துவரப்பட்டது. அவ்வாறு, அடித்துவரப்பட்ட ஆகாயத்தாமரை அக்ரஹாரப்புதூர் பாலத்தை முழுமையாக அடைத்துவிட்டது.

    தண்ணீர் செல்லும் குழாய்கள் முழுமையாக அடைத்ததால், தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. சூலூர் மற்றும் அவிநாசி ஒன்றிய பகுதிகளை இணைக்கும் பாலத்தில், போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஆகாயத்தாமரையை அகற்றாவிட்டால், அந்த ரோட்டை யாருமே பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தண்ணீர் குறைந்ததும், பொக்லைன் மூலமாக ஆகாயத்தாமரையை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள, தடுப்பணைகள் நிரம்பி வழிந்தன. மங்கலம் நல்லம்மன் தடுப்பணையில், புது வெள்ளம் பாய்ந்து ஆர்ப்பரித்து சென்றது.மழை வெள்ளப்பெருக்கால், அணையில் இருந்து வழிந்தோடிய தண்ணீரில் வெண்ணிற நுரை ஏற்பட்டது. தண்ணீரின் வேகத்துக்கு ஏற்ப நுரை பொங்கி பரவியதால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.கோவை மாவட்ட கிழக்கு பகுதியில், சூலூர் தாலுகா பகுதிகளில் ரசாயனங்கள் ஆற்றில் கலப்பதால் இத்தகைய சீர்கேடு ஏற்படுகிறது.ஆற்றில் ஆபத்தான கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டுமென விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    திருப்பூர் பசுமை ஆர்வலர்களின் முயற்சியால், மாசுபட்டிருந்த நொய்யல் ஆறு மீட்டெடுக்கப்பட்டது. மாநகராட்சி மற்றும் தன்னார்வலர் முயற்சியால், ஆண்டு தோறும் ஆற்றை தூர்வாரி பருவமழைக்கு முன்னதாக, 'பளிச்'சென மாற்றிவிடுவார்கள்.இந்தாண்டு பருவமழையும் வந்துவிட்டது.கோடை மழையே போதும் போதும் என்ற அளவுக்கு வாரி வழங்கி சென்றுள்ளது. தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை கருணை காட்டினால் நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.

    திருப்பூரை சுற்றிலும் உள்ள குளம், குட்டைகளை நிரப்பிவிடலாம்.இருப்பினும் இந்தாண்டு திருப்பூர் நகரப்பகுதியில் நொய்யல் ஆறு தூர்வாரி சுத்தப்படுத்தாமல், புதர்மண்டி காணப்படுகிறது. சில இடங்கள்நொய்யல் ஆறா, சோலையா என்று கேட்கும் அளவுக்கு புதர்மண்டி காணப்படுகிறது.மழை வெள்ளம் தடையின்றி செல்ல ஏதுவாக, நகரப்பகுதியில் நொய்யல் ஆற்றை தூர்வாரி சுத்தப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    திருப்பூர் சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 300-க்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் கறிக்கோழிகள் கோவை, திருப்பூர் மற்றும் கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது.சில பண்ணைகளில் இடநெருக்கடி மற்றும் நோயின் காரணமாக அடிக்கடி கறிக்கோழிகள் இறப்பது வாடிக்கையாக உள்ளன. இவ்வாறு இறக்கும் கோழிகளை பண்ணை உரிமையாளர்கள் சிலர் அருகில் உள்ள சிறு தடுப்பணைகள், பி.ஏ.பி., பிரதான வாய்க்கால் மற்றும் ரோட்டோரங்களில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக கொட்டி செல்கின்றனர்.

    இது குறித்து வட்டார சுகாதாரத்துறையினர் கூறியதாவது:-

    பண்ணைகளில் இறக்கும் கோழிகள் மற்றும் கோழி கழிவுகளை ஆழமாக குழி தோண்டி புதைத்து அதன் மீது பிளீச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும். இதனை விடுத்து இறந்த கோழிகளை ரோட்டோரம் கொட்டுவது, குடியிருப்பு பகுதிகளில் வீசி எறிவது, ஓட்டல், தள்ளுவண்டி கடைக்காரர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்வது போன்றவை சட்ட விரோதமான செயல். இதனை செய்பவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • பாலம் பழுதடைந்திருந்த நிலையில் அருகிலேயே மற்றொரு தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
    • கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் மற்றும், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    கோவை:

    கோவை சிங்காநல்லூர்-வெள்ளலூர் இடையே நொய்யல் ஆற்றின் மீது தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே இப்பகுதியில் இருந்த பாலம் பழுதடைந்திருந்த நிலையில் அருகிலேயே மற்றொரு தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.மேலும், பழுதடைந்த பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. பாலத்தின் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதனிடையே கோவையில் தற்போது பருவமழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.இதனால் வெள்ளலூரில் உள்ள தரப்பாலத்தின் மீது ஆற்று நீர் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அந்த வழியாக செல்ல அச்சமடைந்துள்ளனர்.

    சிங்காநல்லூரில் இருந்து வெள்ளலூர் செல்லும் பிரதான சாலையாக உள்ள இந்த சாலையில் தரைப்பாலம் அவ்வப்போது ஆற்று நீரில் மூழ்கிவிடுவதால் குறித்த நேரத்திற்குள் பயணிக்க முடியமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    நேற்று பெய்த மழையில் தரைப்பாலம் மூழ்கும் அளவுக்கு நொய்யலில் தண்ணீர் சென்றது. இந்த நிலையில் கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் மற்றும், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது வெள்ளலூரில் மேம்பாலம் விரைந்து அமைக்க மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    • 27 பேர் வீட்டுக்கான தொகையை அவர்களாகவேசெலுத்தினர்.
    • 6 பேர் தங்கள் வீடுகளைக் காலி செய்து பொருட்களை எடுத்துச் சென்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூரில் நொய்யல் ஆற்றின் கரை மற்றும் நீர் வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற உரிய துறை மூலம் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது.காயிதே மில்லத் நகரில் கரையோரம் உள்ள 108 வீடுகளுக்கு சில மாதம் முன், காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டது.இங்கு வசித்தோருக்கு வீரபாண்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதில் 27 பேர் வீட்டுக்கான தொகையை அவர்களாகவேசெலுத்தினர்.மேலும் 60க்கும் மேற்பட்டோருக்கு கடனுதவி ஏற்பாடு செய்யப்பட்டது. இவர்களுக்கு வீடு ஒதுக்கப்பட்ட நிலையில்ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தினர்.அதன்படி போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி, பொதுப்பணித்துறை, மின் வாரியம், வருவாய் துறையினர் அங்கு சென்றனர்.

    அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு பெற்ற சிலர் தங்களுக்கு மின் இணைப்பு கிடைக்கவில்லை.வீடு வெள்ளையடிக்க வேண்டும். சுத்தம் செய்ய வேண்டும். தற்போதுள்ள வீடு காலி செய்ய ஆள் மற்றும் வாகன வசதியில்லை என்று கூறினர்.மின் இணைப்பு பெற உடனடியாக அதே இடத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும், ஒரே நாளில் மின் இணைப்பு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

    ஒரு சிலர் பொருட்களை கொண்டு செல்ல வசதியில்லை என்றபோது அவர்களுக்கு மாநகராட்சி ஊழியர்கள் உதவினர்.வீடு ஒதுக்கீடு பெற்ற 6 பேர் தங்கள் வீடுகளைக் காலி செய்து பொருட்களை எடுத்துச் சென்றனர். அந்த வீடுகள் அடையாளம் காணப்பட்டது.பிற வீடுகளையும் உடனடியாக காலி செய்ய அதிகாரிகள் உரிய அறிவுரை வழங்கினர். அனைத்து வீடுகளும் பொருட்கள் அகற்றி காலி செய்து கொள்ள அதிகாரிகள் சில நாள் அவகாசம் வழங்கினர். அதன் பின் இடித்து அகற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    ×