search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பதி"

    • திருப்பதி என்றாலே ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் தான் நினைவுக்கு வரும்.
    • இப்பகுதி பாடல்களைப் பாடுவதன் மூலம் பகவானிடம் சரணடைந்து பேறு பெறலாம்.

    திருப்பதி என்றாலே ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் தான் நினைவுக்கு வரும்.

    பிறவிக் குருடனாக இருந்தாலும் ஏழையாக இருந்தாலும், திருவேங்கட மலைக்குப் போய் சேவித்து நின்று பார்வையையும், செல்வத்தையும் சேர்த்து பெறலாம் என்கிறது ரிக் வேதம்.

    வேதங்கள் போற்றும் மகிமைகள் கொண்ட திருவேங்கடத்தின் சிறப்பையும் திருமாலின் புகழையும் ஸ்ரீவெங்கடேச சுப்ரபாதம் பாடுவதாகவே அமைகிறது.

    இறைவனின் பாத மலர்களின் புகழைப்பாடிக் கொண்டிருந்தாலே போதும்! உய்வடையலாம் என்ற மையக் கருத்துடன் ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாத பாடல்கள் முழுவதும் அமைந்துள்ளன.

    அதிகாலைப் பொழுதில் பள்ளி எழுந்தருள்வாயே என்று இறைவனை துயிலெழுப்பும் நிகழ்ச்சியே திருப்பள்ளி எழுச்சி தத்துவம் ஆகும்.

    எங்கள் உள்ளங்களில் ஆன்மீக விழிப்புணர்வை தந்தருள்க என்று இறைவனை வேண்டுவதாகவே சுப்ரபாதம் அமைகிறது.

    இப்படி இறைவனுக்கு திருப்பள்ளி எழுச்சிபாடுவது நாம் அஞ்ஞானத்திலிருந்து விழித்துக் கொள்வதற்கு உதவும் பள்ளி கொண்ட பரந்தாமனை முதன் முதலில் எழுப்பியது மகரிஷி விசுவாமித்திரர்தான்.

    எல்லோராலும் தற்போது உச்சரிக்கப்படும், "கௌசல்யா ஸூப்ரஜா, ராமா...!" என்று தொடங்கும் சுலோகம் மகரிஷி வால்மீகியின் வாக்கை வைத்தே புகழ் பெற்ற சுப்ரபாதம் பிறந்தது எனலாம்.

    சுமார் 675 ஆண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்தவர் அண்ணாமாச்சார்யா சுவாமிகள், வைணவ ஆச்சாரியார்களில் மேன்மை பெற்ற வேதாந்த தேசிக சுவாமிகளின் மைந்தர் வரதாச்சாரியார் சுவாமி சீடரே அண்ணன் சுவாமிகள்.

    தஞ்சாவூர் மாவட்டம் சீர்காழி அருகில் உள்ள திருநாங்கூரில் பிறந்து பகவானுக்கு தொண்டு செய்யும் பணியில் தன்னை ஈடுபடுத்திய அண்ணன் சுவாமிகள் மகிமைமிக்க இந்த ஸ்ரீவெங்கடேச சுப்ரபாதத்தை நான்கு பகுதிகளாக முதன் முதலில் பாடினார்.

    சுப்ரபாதத்தின் முதல் பகுதியான திருப்பதி ஏழுமலையானை துயிலெழுப்புவதாக உள்ள இந்த துயிலெழுப்பும் பாடல்கள் நம் மனதிலும் ஆன்மீக விழிப்புணர்வை எழுப்பும். "கமலாகுச" எனத் தொடங்கும் முதல் பகுதி வெங்கடேசனைப் புகழ்ந்து பாடும்.

    இரண்டாவது பகுதி ஸ்தோத்திரம் எனப்படுகிறது. மூன்றாவது பகுதியாக சரணாகதி பாடப்படுகிறது.

    இப்பகுதி பாடல்களைப் பாடுவதன் மூலம் பகவானிடம் சரணடைந்து பேறு பெறலாம்.

    அதிகாலையில் நம் இல்லங்களில் ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதம் ஒலித்தால் வீட்டில் மங்களம் நிறையும். புரட்டாசி மாதம் முழுவதும் வீடுகளில் அதிகாலையில் சுப்ரபாதம் ஒலித்தால் திருமகள் கடாட்சமும் பெருகும்.

    திருவெங்கட முடையோனின் சன்னதியில் தினந்தோறும் காலை வேலைகளில் நடைபெறுகின்ற வைபவங்களை அழகுறக் கண்முன் நிறுத்துகின்ற ஆனந்த வலிமையும் சுப்ரபாதத்திற்கு உண்டு.

    கலியுக தெய்வமாகிய ஸ்ரீ வேங்கடநாதனை துதிப்போர் திருமகள் அருள்பெற்று வளமான வாழ்வுதனைப் பெறலாம் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை.

    ஓம் நமமோ நாராயணாயா...!

    • ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகை என்பதால் காலையில் பக்தர்கள் குறைந்த அளவு வந்திருந்தனர்.
    • பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர் விடுமுறை காரணமாக கடந்த சனிக்கிழமை முதல் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் குவிந்தனர்.

    நேற்று ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகை என்பதால் காலையில் பக்தர்கள் குறைந்த அளவு வந்திருந்தனர். மதியத்திற்கு மேல் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.


    இதனால் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை தரிசனத்திற்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர்.

    திருப்பதி:

    திருப்பதி மலை புனிதமாக கருதப்படுவதால் மலைக்கு பீடி சிகரெட் மது மாமிசம் மற்றும் டிரோன் கேமராக்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அரியானாவை சேர்ந்த தினேஷ் என்ற ராணுவ வீரர் தனது மனைவியுடன் நேற்று திருப்பதி மலைக்கு வந்தார். அவர் கொண்டு வந்த டிரோன் கேமரா மூலம் மலைப் பகுதியை படம் பிடித்தார்.


     விஜிலென்ஸ் அதிகாரிகள் வந்து ராணுவ வீரரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் மலைப்பகுதியை படம் பிடிக்க தடை உள்ளது தெரியாமல் டிரோன் கேமரா மூலம் படம் பிடித்ததாக தெரிவித்தார்.


     அவரை அதிகாரிகள் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

    • 20 பக்க பகவத் கீதை புத்தகத்தை அறிமுகப்படுத்துகிறது.
    • தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியிடப்படுகிறது.

    திருப்பதி:

    திருப்பதி தேவஸ்தானம் இளைஞர்களுக்காக 20 பக்க பகவத் கீதை புத்தகத்தை அறிமுகப்படுத்துகிறது. இந்த பகவத் கீதை தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியிடப்படுகிறது.

    பகவத்கீதையின் காலத்தால் அழியாத போதனைகள் 20 பக்கங்கள் கொண்ட அச்சிடப்பட்ட பதிப்பின் மூலம் எளிய மொழியில் மாணவர்களுக்குச் சென்றடையும்.

    ஒரு லட்சம் புத்தகங்கள் அச்சிட்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களில் உள்ள மாணவர்களிடையே அவர்களின் தார்மீக மற்றும் ஆன்மீக கல்விக்கு பங்களிக்கும் வகையில் விநியோகிக்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • `டைம் ஸ்லாட்’ தரிசன டோக்கன்கள் ரத்து.
    • டோக்கன்கள் உள்ள பக்தர்களுக்கு மட்டுமே திருமலையில் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    திருமலை:

    திருமலையில் உள்ள அன்னமய பவனில் வைகுண்ட துவார தரிசன ஏற்பாடுகள் குறித்து தேவஸ்தானத்தின் பல்வேறு துறை தலைவர்கள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. அதன் பிறகு தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 23-ந்தேதி அதிகாலை 1.45 மணிக்கு `சொர்க்கவாசல்' திறக்கப்படுகிறது. இந்தச் சொர்க்கவாசல் தரிசனம் ஜனவரி 1-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு நிறைவடைகிறது.

    22-ந்தேதி மதியம் 2 மணியில் இருந்து திருப்பதியில் உள்ள 9 மையங்களில் 90 கவுண்ட்டர்கள் மூலம் மொத்தம் 4 லட்சத்து 23 ஆயிரத்து 500 இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. இந்த டோக்கன்கள் திருமலையில் பக்தர்கள் வரிசையில் காத்திருக்காமல் சாமி தரிசனம் செய்யும் வகையில் வழங்குவோம்.

    திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம், சீனிவாசம் ஆகிய தங்கும் விடுதிகள், திருப்பதி கோவிந்தராஜசாமி சத்திரங்கள், அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், ராமச்சந்திரா புஷ்கரணி, இந்திரா மைதானம், ஜீவகோணா உயர்நிலைப் பள்ளி வளாகம், ராமாநாயுடு உயர்நிலைப் பள்ளி வளாகம், பைராகிப்பட்டிகை ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளி வளாகம், எம்.ஆர்.பள்ளி ஆகிய இடங்களில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும்.

    22-ந்தேதி தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட `டைம் ஸ்லாட்' தரிசன (எஸ்.எஸ்.டி.டோக்கன்கள்) டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளன.

    தரிசன டோக்கன்கள் உள்ள பக்தர்களுக்கு மட்டுமே திருமலையில் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திருமலையில் குறைந்த எண்ணிக்கையிலான அறைகள் மட்டுமே இருப்பதால், இந்த நாட்களில் பக்தர்களின் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு திருப்பதியில் அறைகளை பெற்றுக்கொள்ளுமாறு பக்தர்களை கேட்டுக்கொள்கிறோம்.

    கடந்த ஆண்டைபோலவே இந்த ஆண்டும் நேரில் வரும் புரோட்டோகால் வி.ஐ.பி.பக்தர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்குக் குறைந்த எண்ணிக்கையிலான பிரேக் தரிசனம் வழங்கப்படும். 10 நாட்கள் சிபாரிசு கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. டோக்கன் இல்லாதவர்கள் திருமலையை சுற்றி பார்க்கலாம்

    வைகுண்ட துவார தரிசனத்தின் பலன் 10 நாட்கள் நீடிக்கும். எனவே வி.ஐ.பி. பக்தர்கள் மற்றும் பிற பக்தர்கள் 10 நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் சாமி தரிசனம் செய்ய திட்டமிட வேண்டும், என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தர்கள் 24 மணி நேரத்துக்கு முன்னால் மட்டுமே திருமலைக்கு அனுமதிக்கப்படுவார்கள். தரிசன டோக்கன்கள் இல்லாத பக்தர்கள் திருமலைக்கு வரலாம். ஆனால், சாமி தரிசனம் செய்ய முடியாது. அவர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தலாம். மேலும் திருமலையில் உள்ள பல்வேறு இடங்களை சுற்றி பார்க்கலாம்.

    தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தர்கள் தங்கள் டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் சாமி தரிசனத்துக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுவாதி நட்சத்திரத்தையொட்டி நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம்.
    • கார்த்திகை மாத கடைசி ஞாயிறு பேடிஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

    திருமலை:

    திருமலை-திருப்பதி முதலாவது மலைப்பாதையில் 7-வது மைல் அருகில் அலிபிரி நடைபாதை ஓரம் லட்சுமிநரசிம்மர் கோவில் உள்ளது. ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தையொட்டி நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் நடப்பது வழக்கம்.

    அதன்படி நேற்று காலை சுவாதி நட்சத்திரத்தில் மூலவர் லட்சுமி நரசிம்மருக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், பன்னீர் ஆகிய சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. அதில் தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் பங்கேற்றனர்.

    அதேபோல் திருமலையில் ஏழுமலையான் கோவில் எதிரே உள்ள பேடிஆஞ்சநேயர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று மூலவர் பேடிஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடப்பது வழக்கம்.

    அதன்படி கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று பேடி ஆஞ்சநேயர் கோவிலில் மூலமூர்த்திக்கு காலை மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேன் ஆகிய சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபராதனை காண்பிக்கப்பட்டது.

    அதில் திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி, பறக்கும் படை அதிகாரி நந்தகிஷோர், பேஷ்கார் ஸ்ரீஹரி மற்றும் அதிகாரிகள், அர்ச்சகர்கள், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    • பார்வேடு மண்டபத்தில் கார்த்திகை வனபோஜன மஹோற்சவம் நடந்தது.
    • ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரருக்கு அர்ச்சகர்கள் ஸ்நாபன திருமஞ்சனம் செய்தனர்.

    திருமலை:

    புனித கார்த்திகை மாதத்தில் சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வனபோஜன மஹோற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி நேற்று திருப்பதியை அடுத்த ஸ்ரீவாரிமெட்டில் உள்ள பார்வேடு மண்டபத்தில் கார்த்திகை வனபோஜன மஹோற்சவம் நடந்தது.

    அதற்காக, காலை 7 மணியளவில் சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் இருந்து உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரர் மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க, பலத்த பாதுகாப்புடன் ஊர்வலமாக ஸ்ரீவாரிமெட்டில் உள்ள பார்வேடு மண்டபத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

    அந்த மண்டபத்தில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரருக்கு அர்ச்சகர்கள் ஸ்நாபன திருமஞ்சனம் செய்தனர். மதியம் 12 மணியில் இருந்து மாலை 3 மணி வரை கார்த்திகை வனபோஜன மஹோற்சவத்தை நடத்தினர்.

    அப்போது கோவில் அர்ச்சகர் நாராயணாச்சாரியார் கூறியதாவது:-

    மகாவிஷ்ணு புனித கார்த்திகை மாதத்தில் நெல்லிமரத்தின் கீழே அமர்ந்து உணவு சாப்பிடுவதை விரும்புவார். அதைக் கொண்டாடும் வகையில் வைணவ கோவில்களில் கார்த்திகை வனபோஜன மஹோற்சவம் நடத்தப்பட்டு வருகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2013-2014ம் ஆண்டு முதல் தேவஸ்தானம் கார்த்திகை தாமோதர வனபோஜன உற்சவத்தை தொடங்கி நடத்தி வருகிறது.

    அதே ஆண்டில் இருந்து சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலிலும் கார்த்திகை வனபோஜன மஹோற்சவத்தை தொடங்கி தொடச்சியாக ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. வனபோஜனத்தில் பக்தர்கள் பங்கேற்று அன்னப்பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டால் நல்லது நடக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கார்த்திகை வனபோஜன மஹோற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அதிகாரிகள் அன்னப்பிரசாதம் வழங்கினர்.

    அதையொட்டி திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் அன்னமாச்சாரியார் திட்ட கலைஞர்கள் பலர் பங்ேகற்று அன்னமயாவின் சங்கீர்த்தனங்களை பாடினர்.

    • உற்சவர் கங்கையம்மன்களுக்கு சிறப்புப் பூஜைகள் நடந்தன.
    • திருவிழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

    ஸ்ரீகாளஹஸ்தி:

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் ஏழு கங்கையம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. இதனால் நகரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏழு கங்கையம்மன் கோவிலில் உற்சவர் கங்கையம்மன்களுக்கு சிறப்புப் பூஜைகள் நடந்தன. பூஜைகள் முடிந்ததும் உற்சவர்களான ஏழு கங்கையம்மன்கள் எதிரே போடப்பட்டு இருந்த திரைகள் அகற்றப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

    இதையடுத்து உற்சவர் கங்கையம்மன்கள் அங்கிருந்து சிவன் கோவில் திருக்கல்யாண மண்டபம் நோக்கி ஒன்றன் பின் ஒன்றாக ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டனர். அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய உற்சவர்கள் ஊர்வலம் ஏழு பகுதிகளான ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் திருக்கல்யாண மண்டபம், பேரிவாரி மண்டபம், ஜெயராம் ராவ் வீதி, சன்னதி வீதி, பிராமண வீதி எனப்படும் தேர் வீதி, காந்தி வீதி, கொத்தப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு செல்ல சுமார் 3 மணி நேரம் ஆனது. உற்சவர் ஏழு கங்கையம்மன்கள் அந்தந்த நிலையை அடைந்ததும், அங்கு உற்சவர் ஏழு கங்கையம்மன்களுக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டன.

    திருவிழாவில் ஸ்ரீகாளஹஸ்தி நகர மக்கள், பக்தர்கள் மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மூலவர் ஏழு கங்கையம்மன் மற்றும் உற்சவர் ஏழு கங்கையம்மன்களை தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் நேர்த்திக்கடனாக ஆடுகள், கோழிகள் பலியிட்டனர். ஒருசில பக்தர்கள் கோவில் வாசலில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

    நிறைவாக உற்சவர் ஏழு கங்கையம்மன்களுக்கு பல்வேறு பூஜைகள் முடிந்ததும் இரவு 9 மணியளவில் மேளதாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு உற்சவர் ஏழு கங்கையம்மன்கள் மற்றும் மூலவர் ஏழு கங்கையம்மனுக்கு சிறப்புப்பூஜைகள் செய்து, ஊர்வலமாக எடுத்துச் சென்று இன்று (வியாழக்கிழமை) நீரில் கரைக்கப்படுகின்றன. இதோடு கோவில் திருவிழா நிறைவடைகிறது.

    கோவில் திருவிழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. திருவிழாவின்போது அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஸ்ரீகாளஹஸ்தியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நேற்று முன்தினத்தில் இருந்து இன்று காலை வரை நகருக்குள் பஸ்கள், லாரிகள் போன்ற கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. கனரக வாகனங்கள் புறவழிச்சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. சிவன் கோவில் நான்கு மாட வீதிகளில் ஆட்டோக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தன.

    • கபிலேஸ்வரர் கோவிலில் நேற்று லட்ச வில்வார்ச்சனை
    • உற்சவர் சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா

    திருமலை:

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் நேற்று லட்ச வில்வார்ச்சனை நடந்தது. அதையொட்டி நேற்று அதிகாலை 3 மணிக்கு மூலவரை சுப்ர பாதத்தில் துயிலெழுப்பி அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை நடந்தது. அதன்பிறகு காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை லட்ச வில்வார்ச்சனை நடந்தது.

    மாலை உற்சவர் சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதில் கோவில் அதிகாரிகளும், பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • திருமலையில், வசந்த மண்டபத்தில் விஷ்ணு சாளக்கிராம பூஜை.
    • வாசனை திரவியங்களால் சாளக்கிராம கற்களுக்கு சிறப்பு அபிஷேகம்.

    திருமலை:

    உலக மக்கள் நன்மைக்காக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருமலையில் உள்ள வசந்த மண்டபத்தில் விஷ்ணு சாளக்கிராம பூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சி ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் மாலை 3 மணியில் இருந்து 4.30 மணி வரை ஒளிப்பரப்பப்பட்டது.

    முன்னதாக கோவிலில் இருந்து உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமியை நான்கு மாடவீதிகள் வழியாக வசந்த மண்டபத்துக்கு கொண்டு வந்தனர்.

    அங்கு உற்சவர்கள் முன்னிலையில் பிரதான அர்ச்சகர்கள் விஷ்ணு சாளக்கிராம பூஜை, பிரார்த்தனை சூக்தம், அஷ்டதிக் பாலக பிரார்த்தனை, நவக்கிரக பிரார்த்தனைகளுடன் பூஜையை தொடங்கினர். வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓத அர்ச்சகர்கள் பால், தயிர், சந்தனம், மஞ்சள் மற்றும் பிற வாசனை திரவியங்களால் சாளக்கிராம கற்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.

    அதன்பின் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்கும், சாளக்கிராமங்களுக்கும் ஆரத்தி காண்பித்தனர். இதையடுத்து பிரசாதம் வழங்கி வேத மந்திரம் மற்றும் மங்களத்துடன் பூஜை முடிந்தது.

    சாளக்கிராமம் மகாவிஷ்ணுவின் உண்மையான அவதாரம். சாளக்கிராம பூஜையால் அனைத்து மக்களையும் காத்து, அவர்களின் துன்பங்கள் நீங்கும். சாளக்கிராமங்களில் செய்யப்படும் அபிஷேக தீர்த்தத்தை உட்கொண்டால், சகல பாவங்களும் நீங்கும், சகல நோய்களும் விலகும் என்பது ஐதீகம் என்று பண்டிதர் ராமகிருஷ்ண சேஷசாயி கூறினார்.

    சாளக்கிராம பூஜையில் தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி தம்பதியர் மற்றும் தர்மகிரி வேத பள்ளியின் வேத பண்டிதர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அனைத்து வகை பிரசாதம் மற்றும் பனியாரம் தயாரிக்கும் பணி அனுபவம்.
    • தேர்வு செய்யப்படுபவர்களுக்கான மாத ஊதியம் குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிக்கும் பணிக்கு ஆட்சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, அனைத்து வகை பிரசாதம் மற்றும் பனியாரம் தயாரிக்கும் பணியில் 5 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்கள் மற்றும் எழுதப் படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.21,139 மாத ஊதியம் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் ஒரு கண்டிஷன். வைஷ்ண பிராமணர்கள் மட்டுமே ஆகம விதிப்படி விண்ணப்பிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மலர்கள் நிரப்பப்பட்ட கூடைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன.
    • ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்கு புஷ்பார்ச்சனை.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் இரவு புஷ்ப யாகத்துக்கான அங்குரார்ப்பணம் நடந்தது. அதன் ஒரு பகுதியாக வசந்த மண்டபத்தில் சேனாதிபதி உற்சவம், மிருதங்கரஹணம், ஆஸ்தானம் மற்றும் யாக சாலையில் அங்குரார்ப்பண நிகழ்ச்சி நடந்தது.

    இந்தநிலையில் நேற்று மதியம் பூந்தோட்ட அலுவலகத்தில் பல்வேறு வகையான மலர்களை தனித்தனியாக சேகரித்து, கூடைகளில் நிரப்பப்பட்டன. அந்த மலர்களுக்கு தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி சிறப்புப்பூஜைகள் செய்தார். பூஜைகள் முடிந்துதும் பூந்தோட்ட அலுவலகத்தில் இருந்து ஏழுமலையான் கோவிலுக்கு மலர்கள் நிரப்பப்பட்ட கூடைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன.

    அப்போது தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி பேசுகையில், மொத்தம் 8 டன் எடையிலான 17 வகையான மலர்கள் மற்றும் இலைகளால் மதியம் 1 மணியில் இருந்து மாலை 5 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்கு புஷ்பார்ச்சனை எனப்படும் புஷ்ப யாகம் நடத்தப்பட்டது.

    அதில் 4 டன் மலர்கள் தமிழகத்தில் இருந்தும், தலா 2 டன் மலர்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இருந்தும் வந்தன. முன்னதாக காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்கு ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்பட்டது, என்றார்.

    புஷ்ப யாகத்தில் கோவில் துணை அதிகாரி லோகநாதம், தோட்டக்கலைத்துறை இயக்குனர் சீனிவாசலு, பறக்கும் படை அதிகாரி நந்தகிஷோர், பேஷ்கார் ஸ்ரீஹரி, பார்பதீடர் உமா மகேஸ்வரரெட்டி மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    திருச்சானூர்

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 10-ந்தேதியில் இருந்து 18-ந்தேதி வரை வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்தது. அதையொட்டி நடந்த நித்ய கைங்கர்யங்களில் அர்ச்சகர்கள், அதிகாரிகள் அல்லாதவர்கள் மற்றும் பக்தர்கள் செய்த தவறுகளால் ஏற்படுகின்ற தோஷ நிவர்த்திக்காக புஷ்ப யாகம் செய்வது வழக்கம்.

    இந்தநிலையில் நேற்று காலை அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், நெய், தேன், இளநீர் போன்ற சுகந்த திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. மதியம் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து கோவிலுக்கு பல்வேறு மலர்கள் நிரப்பப்பட்ட கூடைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.

    கோவில் அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் மாலை 5 மணியில் இருந்து இரவு 8 மணி வரை 3 டன் எடையிலான பல்வேறு அலங்கார, பாரம்பரிய மலர்களால் புஷ்ப யாக மகோற்சவம் நடத்தப்பட்டது. அதில் அதிகாரிகள், பக்தர்கள் பங்கேற்றனர்.

    ×