search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொர்க்கவாசல் திறப்பு"

    • சயன மண்டபத்தில் சுவாமிக்கு விசேஷ பூஜைகள், சிறப்பு அபிஷேகம் நடந்தது.
    • மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் வழியாக சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அலங்காநல்லூர்:

    திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என அழைக்கப்படும் மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு வருடந்தோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 13-ந்தேதி பகல் பத்து உற்சவத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சுந்தரராஜபெருமாள் ஸ்ரீதேவி-பூதேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    விழாவின் சிகர நிகழச்சியான சொர்க்கவாசல் திறப்பு விழா இன்று அதிகாலை நடந்தது. இதில் மேளதாளம் முழங்க வர்ணக்குடை, தீவட்டி பரிவாரங்களுடன் காலை 5.10 மணிக்கு கள்ளழகர் என்கிற சுந்தரராஜ பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வந்து அங்குள்ள சயன மண்டத்தை சுற்றி வந்து அதே மண்டபத்தில் எழுந்தருளினார். 'முன்னதாக நம்மாழ்வார் பரமபத வாசல் வழியாக பெருமாளை வரவேற்கும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து சயன மண்டபத்தில் சுவாமிக்கு விசேஷ பூஜைகள், சிறப்பு அபிஷேகம் நடந்தது. சர்வ அலங்காரத்தில் சுந்தர ராஜபெருமாள் அருள்பாலித்தார். திருஅத்யயன உற்சவத்தின் முக்கிய நிகழ்வான பெருமாள் சொர்க்கவாசல் எழுந்தருளும் நிகழ்வை காண அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கள்ளழகர் கோவிலுக்கு வருகை தந்து நீண்ட நேரம் காத்திருந்து சொர்க்கவாசல் வழியாக வந்து சுந்தரராஜ பெருமாளை வணங்கினர்.

    இதைப்போலவே இந்த கோவிலின் உபகோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை அதே நேரத்தில் சொர்க்கவாசல் வழியாக சுவாமி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அங்கும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அப்பன் திருப்பதி போலீசார் செய்தி ருந்தனர்.

    மதுரை நகரின் மைய பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கூடலழகர் பெருமாள் கோவிலில் இன்று மாலை சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு மூலவர் கூடலழகருக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றன.

    காலை முதலே திரளான பக்தர்கள் கோவிலில் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர். சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு கோவில் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

    • சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பகதர்கள் பங்கேற்பார்கள்.
    • பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை திருவல்லிக் கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசியை யொட்டி நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பகதர்கள் பங்கேற்பார்கள். பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்படும்.

    இதன்படி இந்த ஆண்டும் பார்த்தசாரதி கோவிலில் பக்தர்களின் வசதிக்காக தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியையொட்டி இன்று அதிகாலை 2½ மணி அளவில் உபயதாரர்கள், கட்டணதாரர்கள் என 1,500 பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

    இதன் பின்னர் நாளை காலை 6 மணியில் இருந்து பொது தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். நாளை இரவு கோவில் நடை சாத்தப்படும் வரையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    கடந்த ஆண்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் 50 ஆயிரம் பேர் திரண்டிருந்தனர். இந்த ஆண்டு அதைவிட கூடுதல் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சுமார் 1 லட்சம் பக்தர்கள் நாளை பார்த்தசாரதி கோவிலில் திரள்வார்கள் என்று எதிர் பார்ப்பதால் தேவையான அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமையில் கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா, இணை கமிஷனர் தர்மராஜ் ஆகியோரது மேற்பார்வை யில் ராயப்பேட்டை உதவி கமிஷனர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு உள்ளனர். இவர்களோடு 6 துணை கமிஷனர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

     நாளை காலை 6 மணி தரிசனத்துக்கு இன்று இரவில் இருந்தே பக்தர்கள் கோவிலில் கூடுவார்கள் என்பதால் அவர்களின் வசதிக்காக 2 வரிசைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தெற்கு மாட வீதியில் இருந்து ஒரு வரிசையும், கிழக்கு கோபுரத்தின் எதிர் திசையில் இருந்து ஒரு வரிசையும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்த ஆண்டு சிறப்பு தரிசனம் கிடையாது என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்திருப்பதால் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கு வரும் அனைத்து பக்தர்களும் பொது தரிசன வரிசை வழியாகவே அனுமதிக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ள னர். 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    இதையொட்டி திரு வல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று பிற்பகலில் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து பாதுகாப்பு பணிகளை முடுக்கி விட உள்ளனர். இன்று இரவு முதல் நாளை இரவு வரை தொடர்ச்சியாக அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.

    கோவிலை சுற்றிலும் 10 இடங்களில் தீயணைப்பு கருவிகளுடன் 3 வாகனங்களில் 60 தீயணைப்பு வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 32 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலமாக போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வெயில் மற்றும் மழையால் பக்தர்கள் பாதிக்கப்படாமல் இருக்க தகரத்திலான தற்காலிக மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    கோவிலின் தெப்பக்குளத்தில் ரப்பர் படகுகளுடன் 10 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கோவிலை சுற்றிலும் தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பக்தர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு குடிநீர் விநி யோகம், தற்காலிக கழிப்பிட வசதி, தாய்மார்கள் பாலூட் டும் தற்காலிக அறை என மற்றும் கோவிலுக்கு உள்ளேயும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • அதிகாலை 4 மணியளவில் பரமபதவாசல் திறக்கப்படும்.
    • நள்ளிரவு வரை பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

    திருச்சி:

    திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுநதாண்டகத்துடன் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. பகல்பத்து, ராப்பத்து என 20 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் பிரதான நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு நாளை (சனிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

    முன்னதாக 13-ந்தேதி முதல் பகல்பத்து திருவிழா நடைபெற்றது. பகல் பத்து உற்சவம் 10-வது நாளான இன்றுடன் நிறைவு பெறுகிறது. சொர்க்கவாசல் திறப்புடன் நாளை ராப்பத்து உற்சவம் தொடங்குகிறது.

    இதையொட்டி உற்சவர் நம்பெருமாள் நாளை அதிகாலை 3 மணியளவில் ரத்தினஅங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து மூலஸ்தானத் திலிருந்து சிம்ம கதியில் புறப்பட்டு வெளியில் வருவார். தொடர்ந்து இரண்டாம் பிரகாரம் வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியே மூன்றாம் பிரகாரத்திற்கு வரும் நம்பெருமாள், துரைப்பிரதட்சணம் வழியாக பரமபதவாசல் பகுதிக்கு வருவார்.

    முன்னதாக விரஜா நதி மண்டபத்தில் அவர் வேத விண்ணப்பம் கேட்ட ருள்வார். அதனைத் தொடர்ந்து காலை 4 மணியளவில் பரமபதவாசல் திறக்கப்படும். அப்போது நம்பெருமாள் பக்தர்கள் புடைசூழ பரமபதவாசலைக் கடந்து மணல்வெளி, நடைப் பந்தல், தவுட்டரவாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரில் உள்ள திருக் கொட்டகைக்கு வருவார். அங்கு பெருமாள் சுமார் 1 மணிநேரம் பக்தர் களுக்கு சேவை சாதிப்பார்.

    அதன்பின் சாதரா மரியாதையாகி ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி நள்ளிரவு வரை பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். நள்ளிரவு 12 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு அதிகாலை 1.15 மணியளவில் மூலஸ்தானம் சேருவார்.

     வைகுண்ட ஏகாதசிவிழா வின் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றான மோகினி அலங்காரம் வைபவம் இன்று (22-ந் தேதி) நடந்தது. இதை முன்னிட்டு இன்று காலை உற்சவர் நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவில் அர்ச்சுன மண்டபத்திற்கு எழுந்தருளினார். மாலை 5 மணிக்குமேல் நான்காம் பிரகாரம் வலம் வந்து கருட மண்டபத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார், இரவு 8 மணிக்குமேல் ஆழ்வார், ஆச்சார்யர்கள் மரியாதை யான பின் 9 மணியளவில் மூலஸ்தானம் சேருவார். விழாவிற்கான ஏற்பாடு களை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரியப்பன் தலைமையில், அர்ச்சகர்கள், ஸ்தானீகர்கள், கைங்கர்யபரர்கள், அலு வலர்கள், பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் உள்ளிட்ட ஒருங் கிணைப்பாளர்கள் செய்துள்ளனர்.

     வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் விழா கோலம் பூண்டுள்ளது. ராஜகோபுரம் உள்ளிட்ட, 21 கோபுரங்கள், 7 பிரகாரங்கள் வண்ண, வண்ண மின் விளக்குகளால் அலங்கரிப்பட்டு ஜொலிக் கின்றன. மேலும், கோவில் வளாகத்திற்குள் மூலவர் ரங்கநாதர், சங்கு, சக்கரம், நாமம் போன்ற உருவங்களில் மின் விளக்குகள் ஜொலிக்கின்றன.

    சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை காண சுமார் 1 லட்சம் பக்தர்கள் வரு வார்கள் என்று எதிர் பார்க்கபப்டுகிறது. இன்று காலை முதலே கோவிலில் பக்தர்கள் குவிய தொடங்கி உள்ளனர். இதனால் கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பாதுகாப்பு பணிக்காக திருக்கோவில் ரெங்க விலாஷ் மண்டபம் அருகில் மாநகர காவல்துறை சார்பில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றது.

    • வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 7-ம் நாள்.
    • வெளிர் பச்சை நிற பட்டு உடுத்தி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளல்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 7-ம் நாளான நேற்று நம்பெருமாள் முத்து ஆண்டாள் கொண்டை, வைர காதுகாப்பு, வைர அபயஹஸ்தம், பங்குனி உத்திர பதக்கம், வைர, ரத்தின லட்சுமி பதக்கம், மகர கர்ண பத்ரம், புஜகீர்த்தி, ரங்கூன் அட்டிகை, சந்திர வில்லை, காசு மாலை, 2 வட முத்து மாலை, ஒட்டியாணம், அடுக்கு பதக்கங்கள்உள்ளிட்ட திரு ஆபரணங்கள் அணிந்து, வெளிர் பச்சை நிற பட்டு உடுத்தி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    • சுவாமி சிலை பட்டுத்திரையால் மூடப்பட்டது.
    • 4 மணிநேரமும் தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்தது.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 23-ந்தேதி வைகுண்ட ஏகாதசி நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு கோவில் தூய்மைப் பணி தொடங்கி 10 மணி வரை 4 மணி நேரம் சுத்திகரிப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதற்காக அதிகாலையில் சுவாமிக்கு திருப்பாவை நிவேதனம் செய்த பின், சுவாமி சிலை பட்டுத்திரையால் மூடப்பட்டது.

    அதன்பின் ஆனந்த நிலையத்தில் தொடங்கி, தங்க வாசல் வரை மற்றும் உபகோவில்கள், கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை உபகரணங்கள் உள்ளிட்டவை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டது.

    பிறகு, நாமகோபு, ஸ்ரீசூர்ணம், கஸ்தூரி, மஞ்சள், கற்பூரம், சந்தனப்பொடி, குங்குமம், கிச்சிலிக்கட்டை உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கலந்த புனித நீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது.

    அதன்பிறகு அர்ச்சகர்கள், சுவாமி சிலையை மறைத்திருந்த துணியை அகற்றி, சிறப்பு பூஜை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடத்தினர். கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்ற 4 மணிநேரமும் தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்தது.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தேவஸ்தான தலைவர் கருணாகர் ரெட்டி இதுகுறித்து கூறுகையில் பல நூறு ஆண்டுகளாக ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கருவறை மற்றும் உபகோவில்களின் சுவர்களில் எந்தவித அச்சுறுத்தலும் ஏற்படாத வகையில் வாசனை திரவியங்கள் தூவப்பட்டுள்ளன என்றார்.

    • `டைம் ஸ்லாட்’ தரிசன டோக்கன்கள் ரத்து.
    • டோக்கன்கள் உள்ள பக்தர்களுக்கு மட்டுமே திருமலையில் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    திருமலை:

    திருமலையில் உள்ள அன்னமய பவனில் வைகுண்ட துவார தரிசன ஏற்பாடுகள் குறித்து தேவஸ்தானத்தின் பல்வேறு துறை தலைவர்கள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. அதன் பிறகு தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 23-ந்தேதி அதிகாலை 1.45 மணிக்கு `சொர்க்கவாசல்' திறக்கப்படுகிறது. இந்தச் சொர்க்கவாசல் தரிசனம் ஜனவரி 1-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு நிறைவடைகிறது.

    22-ந்தேதி மதியம் 2 மணியில் இருந்து திருப்பதியில் உள்ள 9 மையங்களில் 90 கவுண்ட்டர்கள் மூலம் மொத்தம் 4 லட்சத்து 23 ஆயிரத்து 500 இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. இந்த டோக்கன்கள் திருமலையில் பக்தர்கள் வரிசையில் காத்திருக்காமல் சாமி தரிசனம் செய்யும் வகையில் வழங்குவோம்.

    திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம், சீனிவாசம் ஆகிய தங்கும் விடுதிகள், திருப்பதி கோவிந்தராஜசாமி சத்திரங்கள், அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், ராமச்சந்திரா புஷ்கரணி, இந்திரா மைதானம், ஜீவகோணா உயர்நிலைப் பள்ளி வளாகம், ராமாநாயுடு உயர்நிலைப் பள்ளி வளாகம், பைராகிப்பட்டிகை ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளி வளாகம், எம்.ஆர்.பள்ளி ஆகிய இடங்களில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும்.

    22-ந்தேதி தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட `டைம் ஸ்லாட்' தரிசன (எஸ்.எஸ்.டி.டோக்கன்கள்) டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளன.

    தரிசன டோக்கன்கள் உள்ள பக்தர்களுக்கு மட்டுமே திருமலையில் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திருமலையில் குறைந்த எண்ணிக்கையிலான அறைகள் மட்டுமே இருப்பதால், இந்த நாட்களில் பக்தர்களின் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு திருப்பதியில் அறைகளை பெற்றுக்கொள்ளுமாறு பக்தர்களை கேட்டுக்கொள்கிறோம்.

    கடந்த ஆண்டைபோலவே இந்த ஆண்டும் நேரில் வரும் புரோட்டோகால் வி.ஐ.பி.பக்தர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்குக் குறைந்த எண்ணிக்கையிலான பிரேக் தரிசனம் வழங்கப்படும். 10 நாட்கள் சிபாரிசு கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. டோக்கன் இல்லாதவர்கள் திருமலையை சுற்றி பார்க்கலாம்

    வைகுண்ட துவார தரிசனத்தின் பலன் 10 நாட்கள் நீடிக்கும். எனவே வி.ஐ.பி. பக்தர்கள் மற்றும் பிற பக்தர்கள் 10 நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் சாமி தரிசனம் செய்ய திட்டமிட வேண்டும், என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தர்கள் 24 மணி நேரத்துக்கு முன்னால் மட்டுமே திருமலைக்கு அனுமதிக்கப்படுவார்கள். தரிசன டோக்கன்கள் இல்லாத பக்தர்கள் திருமலைக்கு வரலாம். ஆனால், சாமி தரிசனம் செய்ய முடியாது. அவர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தலாம். மேலும் திருமலையில் உள்ள பல்வேறு இடங்களை சுற்றி பார்க்கலாம்.

    தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தர்கள் தங்கள் டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் சாமி தரிசனத்துக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 5-ம் நாள்.
    • திருவாபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 5-ம் நாளான நேற்று நம்பெருமாள் சவுரி கொண்டை, ரத்தின நெத்திச்சூடி, ரத்தின காது காப்பு, ரத்தின அபயஹஸ்தம், விமான பதக்கம், முத்துமாலை, பவள மாலை, காசு மாலை, ரத்தின அடுக்கு பதக்கங்கள் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    • வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 5-ம் நாள் இன்று.
    • வெண்பட்டு உடுத்தி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 4-ம் நாளான நேற்று `கண்ணனெனும் கருந் தெய்வம்' பாசுரத்திற்கு ஏற்ப நம்பெருமாள் முத்து சாய் கிரீடம், ரத்தின காது காப்பு, ரத்தின அபயஹஸ்தம், பங்குனி உத்திர பதக்கம், சந்திரகலா, பருத்திப்பூ பதக்கம், நகரி, ஆறு வட முத்துமாலை, காசு மாலை, அடுக்கு வைர மகர கண்டிகை பதக்கங்கள், வைர ரங்கூன் அட்டிகை உள்ளிட்ட திரு ஆபரணங்கள் அணிந்து பின் சேவையாக, புஜ கீர்த்தி, வெண்பட்டு உடுத்தி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    • வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் இரண்டாம் நாள்.
    • அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் இரண்டாம் நாளான நேற்று காலை நம்பெருமாள் முத்து கிரீடம், ரத்தின காதுகாப்பு, நெல்லிக்காய் மாலை, காசு மாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து சர்வ அலங்காரத்துடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு ராமானுஜர், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் பின்தொடர பக்தர்கள் புடைசூழ ராஜமகேந்திரன் திருச்சுற்று வழியாக அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

    • பகல் பத்து உற்சவம் நேற்று தொடங்கியது.
    • 10-ம் நாள் வரை மூலவர் மீசையின்றி சேவை சாதிப்பார்.

    சென்னை:

    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருமொழித் திருநாள் என்னும் பகல் பத்து உற்சவத்துடன் நேற்று தொடங்கியது. நேற்று வேங்கட கிருஷ்னன் திருக்கோலத்தில் பெருமாள் மாடவீதிகளை வலம் வந்து அருள்பாலித்தார்.

    10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் உற்சவர், வேணுகோபாலன், காளிங்க நர்த்தனர், சக்கரவர்த்தி திருமகன், ஏணிக் கண்ணன், பரமபத நாதன், பகாசு ரவதம், ராமர் பட்டாபிஷேகம், முரளி கண்ணன், நாச்சியார் ஆகிய திருக்கோலங்களில் மாட வீதிகளை வலம் வந்து அருள் பாலிக்கிறார். பகல் பத்து விழாவில் 6-ம் நாள் மாலை முதல் 10-ம் நாள் வரை மூலவர் மீசையின்றி சேவை சாதிப்பார்.

    வைகுண்ட ஏகாதசியான வருகிற 23-ந்தேதி (சனிக்கிழமை) சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அன்று அதிகாலை 4.30 மணிக்கு நடைபெறும் சொர்க்க வாசல் திறப்பின் போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்கிறார்கள். அன்று இரவு 11.30 மணிக்கு பார்த்தசாரதி சுவாமி நம்மாழ்வாருடன் பெரிய வீதி புறப்பாடும் நடக்கிறது.

    வைகுண்ட ஏகாதசியை யொட்டி 23-ந்தேதி அதி காலை 2.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை பக்தர்கள் மூலவரை தரி சனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    பின்னர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் திருவாய்மொழித் திருநாள் எனப்படும் ராப் பத்து உற்சவம் வருகிற 24-ந்தேதி முதல் ஜனவரி 2-ந்தேதி வரை நடக்கிறது.

    • வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது.
    • திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நாளை தொடங்குகிறது.

    திருச்சி:

    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது. பகல்பத்து, ராபத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

    பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருவிழா நாளை மறுநாள் (புதன்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி நம்பெருமாள் அன்று காலை 7 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 7.30 மணிக்கு அர்ஜூன மண்டபம் வந்தடைவார்.

    காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடுவார்கள். இரவு 7 மணிக்கு அர்ஜூன மண்ட பத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.

    பகல் பத்தின் முதல் நாள் முதல் மூலவர் ரெங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளிப்பார். இந்த முத்தங்கி சேவை தொடர்ந்து 20 நாட்களுக்கு நடைபெறும். இதேபோல் பகல் பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் அர்ஜூன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாளான வருகிற 22-ந் தேதி நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

    23-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசலில் எழுந்தருளுவார். இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளுடன் பரமபதவாசலை கடந்து செல்வார்கள். சொர்க்கவாசல் 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 29-ந் தேதி மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 30-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு இல்லை. சொர்க்கவாசல் திறப்பு தினமான 23-ந் தேதி முதல் ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது.

    ராப்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். ராப்பத்து ஏழாம் திருநாளான 29-ந் தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திருநாளான 30-ந் தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான ஜனவரி 1-ந்தேதி தீர்த்தவாரியும், 2-ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெறும். இத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவுபெறும்.

    • திருப்பத்தூர் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள், விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத நின்ற நாராயண பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சியைத் தொடர்ந்து உற்சவரான நாராயண பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத நாராயண பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் கோவிந்தா முழக்கத்துடன் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

    அதன் வழியாக சுவாமி வலம் வந்து கோவிலை 3 முறை சுற்றி வந்தது. சுவாமியைத் தொடர்ந்து ஏராளமான பெண்கள், பக்தர்கள் சொர்க்க வாசல் வழியாக கோவிலை வலம் வந்தனர். பின்னர் பெருமாள் திருநாள் மண்டபத்தில் ஊஞ்சலில் வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள், விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

    ×