search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karthikai Vanabhojana Mahotsavam"

    • பார்வேடு மண்டபத்தில் கார்த்திகை வனபோஜன மஹோற்சவம் நடந்தது.
    • ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரருக்கு அர்ச்சகர்கள் ஸ்நாபன திருமஞ்சனம் செய்தனர்.

    திருமலை:

    புனித கார்த்திகை மாதத்தில் சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வனபோஜன மஹோற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி நேற்று திருப்பதியை அடுத்த ஸ்ரீவாரிமெட்டில் உள்ள பார்வேடு மண்டபத்தில் கார்த்திகை வனபோஜன மஹோற்சவம் நடந்தது.

    அதற்காக, காலை 7 மணியளவில் சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் இருந்து உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரர் மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க, பலத்த பாதுகாப்புடன் ஊர்வலமாக ஸ்ரீவாரிமெட்டில் உள்ள பார்வேடு மண்டபத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

    அந்த மண்டபத்தில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரருக்கு அர்ச்சகர்கள் ஸ்நாபன திருமஞ்சனம் செய்தனர். மதியம் 12 மணியில் இருந்து மாலை 3 மணி வரை கார்த்திகை வனபோஜன மஹோற்சவத்தை நடத்தினர்.

    அப்போது கோவில் அர்ச்சகர் நாராயணாச்சாரியார் கூறியதாவது:-

    மகாவிஷ்ணு புனித கார்த்திகை மாதத்தில் நெல்லிமரத்தின் கீழே அமர்ந்து உணவு சாப்பிடுவதை விரும்புவார். அதைக் கொண்டாடும் வகையில் வைணவ கோவில்களில் கார்த்திகை வனபோஜன மஹோற்சவம் நடத்தப்பட்டு வருகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2013-2014ம் ஆண்டு முதல் தேவஸ்தானம் கார்த்திகை தாமோதர வனபோஜன உற்சவத்தை தொடங்கி நடத்தி வருகிறது.

    அதே ஆண்டில் இருந்து சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலிலும் கார்த்திகை வனபோஜன மஹோற்சவத்தை தொடங்கி தொடச்சியாக ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. வனபோஜனத்தில் பக்தர்கள் பங்கேற்று அன்னப்பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டால் நல்லது நடக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கார்த்திகை வனபோஜன மஹோற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அதிகாரிகள் அன்னப்பிரசாதம் வழங்கினர்.

    அதையொட்டி திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் அன்னமாச்சாரியார் திட்ட கலைஞர்கள் பலர் பங்ேகற்று அன்னமயாவின் சங்கீர்த்தனங்களை பாடினர்.

    ×