search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீகாளகஸ்தி"

    • உற்சவர் கங்கையம்மன்களுக்கு சிறப்புப் பூஜைகள் நடந்தன.
    • திருவிழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

    ஸ்ரீகாளஹஸ்தி:

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் ஏழு கங்கையம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. இதனால் நகரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏழு கங்கையம்மன் கோவிலில் உற்சவர் கங்கையம்மன்களுக்கு சிறப்புப் பூஜைகள் நடந்தன. பூஜைகள் முடிந்ததும் உற்சவர்களான ஏழு கங்கையம்மன்கள் எதிரே போடப்பட்டு இருந்த திரைகள் அகற்றப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

    இதையடுத்து உற்சவர் கங்கையம்மன்கள் அங்கிருந்து சிவன் கோவில் திருக்கல்யாண மண்டபம் நோக்கி ஒன்றன் பின் ஒன்றாக ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டனர். அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய உற்சவர்கள் ஊர்வலம் ஏழு பகுதிகளான ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் திருக்கல்யாண மண்டபம், பேரிவாரி மண்டபம், ஜெயராம் ராவ் வீதி, சன்னதி வீதி, பிராமண வீதி எனப்படும் தேர் வீதி, காந்தி வீதி, கொத்தப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு செல்ல சுமார் 3 மணி நேரம் ஆனது. உற்சவர் ஏழு கங்கையம்மன்கள் அந்தந்த நிலையை அடைந்ததும், அங்கு உற்சவர் ஏழு கங்கையம்மன்களுக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டன.

    திருவிழாவில் ஸ்ரீகாளஹஸ்தி நகர மக்கள், பக்தர்கள் மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மூலவர் ஏழு கங்கையம்மன் மற்றும் உற்சவர் ஏழு கங்கையம்மன்களை தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் நேர்த்திக்கடனாக ஆடுகள், கோழிகள் பலியிட்டனர். ஒருசில பக்தர்கள் கோவில் வாசலில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

    நிறைவாக உற்சவர் ஏழு கங்கையம்மன்களுக்கு பல்வேறு பூஜைகள் முடிந்ததும் இரவு 9 மணியளவில் மேளதாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு உற்சவர் ஏழு கங்கையம்மன்கள் மற்றும் மூலவர் ஏழு கங்கையம்மனுக்கு சிறப்புப்பூஜைகள் செய்து, ஊர்வலமாக எடுத்துச் சென்று இன்று (வியாழக்கிழமை) நீரில் கரைக்கப்படுகின்றன. இதோடு கோவில் திருவிழா நிறைவடைகிறது.

    கோவில் திருவிழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. திருவிழாவின்போது அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஸ்ரீகாளஹஸ்தியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நேற்று முன்தினத்தில் இருந்து இன்று காலை வரை நகருக்குள் பஸ்கள், லாரிகள் போன்ற கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. கனரக வாகனங்கள் புறவழிச்சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. சிவன் கோவில் நான்கு மாட வீதிகளில் ஆட்டோக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தன.

    ×