search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திராவிட மாடல்"

    • தமிழ் வளர்ச்சிக்கு அனைத்து துறையினரும் கடுமையாக பாடுபட வேண்டும்.
    • சட்டக்கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும் பாடப்புத்தகங்கள் தமிழில் வழங்க வேண்டும்.

    மதுரை:

    ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணையை சேர்ந்த வக்கீல் தீரன் திருமுருகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கில் கூறியிருந்ததாவது:-

    தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கடைகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்கள், வணிக நிறுவனங்களில் அரசாணைப்படி, தூய தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான இடங்களில் இந்த அரசாணையை பின்பற்றி தமிழில் பெயர் பலகைகள் வைக்கவில்லை. அதை விசாரித்த ஐகோர்ட்டு, அரசாணையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டது.

    ஆனால் பல மாதங்கள் ஆகியும் இந்த உத்தரவு முறையாக அமல்படுத்தப்படவில்லை. எனவே கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றாத அரசு அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, அரசு அலுவலகங்களிலும், தொடர்புடைய அலுவலகங்களிலும் உள்ள பெயர் பலகைகள் அரசாணையின்படி உரிய முறையில் வைக்கப்பட்டு உள்ளன. ஆனால் இந்த அரசாணையை பின்பற்றி தனியார் நிறுவனங்கள், தங்கள் பெயர் பலகையை தமிழ், ஆங்கில மொழிகளில் வைப்பதில்லை. இது சம்பந்தமாக தனியார் நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறைதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என தெரிவித்தார்.

    இதையடுத்து நீதிபதிகள், "தமிழ் வளர்ச்சிக்கு அனைத்து துறையினரும் கடுமையாக பாடுபட வேண்டும். குறிப்பாக சட்டக்கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும் பாடப்புத்தகங்கள் தமிழில் வழங்க வேண்டும். மேலும், வழக்கு தொடர்பாக குறிப்பு எடுக்க பயன்படும் சட்ட புத்தகங்களையும் தமிழில் கொண்டு வர வேண்டும்" என்று கருத்து தெரிவித்தனர்.

    அதன் பின்னர், "தற்போது 'திராவிட மாடல்' என்ற சொல் பலதரப்பட்டவர்களாலும் பயன்படுத்தப்படுகிறது. அந்த திராவிட மாடலில் 'மாடல்' என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன? அந்த தமிழ் சொல்லை பயன்படுத்தாமல் ஏன் ஆங்கிலத்தில் பயன்படுத்துகிறார்கள்? முற்றிலும் தமிழிலே பயன்படுத்தலாம்" எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

    விசாரணை முடிவில், அரசாணையின்படி தமிழ், ஆங்கில மொழிகளில் பெயர் பலகை வைக்காமல், ஆங்கிலத்தில் மட்டுமே பெயர் பலகைகளை வைத்துள்ள நிறுவனங்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்து விரிவான அறிக்கையை தொழிலாளர் நலத்துறை செயலாளர் தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி மாதம் 16-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

    • அடுத்த தேர்தலில் தி.மு.க. காணாமல் போய்விடும் என்று முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேசினார்.
    • இந்த திராவிட மாடல் என்பது பூச்சாண்டி காட்டக்கூடிய வேலை.

    சிவகங்கை

    சிவகங்கை அரண்மனை வாயில் முன்பு எம்.ஜி.ஆர். 106-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்-சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தலைமையில் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் பங்கேற்று பேசியதாவது:-

    தி.மு.க. தலைவர் ஸ்டாலின் திராவிட மாடல் என்ற பெயரில் குடும்ப அரசியல் செய்து வருகிறார். ஒரு சாதாரண எளிய தலித் தி.மு.க. தொண்டனை வருகிற 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளராக ஸ்டாலினால் அறிவிக்க முடியுமா?

    வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் தலைவராக ஒரு சாதாரண எளிய தொண்டன் கட்சியின் கிளை செயலாளரை ஸ்டாலினால் அறிவிக்க முடியுமா? அப்படி சொன்னால்தான் திராவிட மாடல் ஆகும். இந்த திராவிட மாடல் என்பது பூச்சாண்டி காட்டக்கூடிய வேலை.

    திராவிட மாடல் என்ற பெயரில் குடும்ப அரசியல் செய்து வரும் தி.மு.க. அடுத்த தேர்தலில் காணா மல் போய்விடும்

    இவ்வாறு அவர் பேசி னார். இதில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் செல்வமணி, கருணாகரன், அருள்ஸ்டிபன், சிவாஜி , சிவசிவஸ்ரீதர், சேவியர், பழனிச்சாமி, கோபி, மண்டல தகவல் தொழி ல்நுட்ப இணை செயலாளர் தமிழ்செல்வன்.

    மகளிரணி செயலாளர் ஜாக்குலின், மாவட்ட மகளிரணி வெண்ணிலா சசிகுமார், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன், ஊராட்சி மன்ற தலைவர்கள் நாலுகோட்டை மணிகண்டன், மணிமுத்து, பாசறை பொருளாளர் சரவணன்.

    பாசறை இணை செயலாளர் சதீஸ்பாலு, கவுன்சிலர்கள் ராபர்ட், கிருஷ்ணகுமார், தாமு, மாணவரணி நகரசெய லாளர் ராஜபாண்டி, பாசறை இணை செயலாளர் மோசஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திராவிட மாடல் என்பது ஒரு மாதிரியாக இருக்கிறது. மாடல் என்பது தமிழா?
    • திராவிட மாடலுக்கு நல்ல தமிழ் பெயரை கண்டுபிடிக்க வேண்டும் என ஆளுநர் தமிழிசை கூறினார்.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 2 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். அதன்பின், கன்னியாகுமரியில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு தூத்துக்குடியில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள புறப்பட்டு வந்தார்.

    வரும் வழியில் அவர் நெல்லை விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அங்கு அவரை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    திராவிட மாடல் என்பதற்கு பதிலாக வேறு பெயரை பயன்படுத்திருக்க வேண்டும்.

    திராவிட மாடல் என்பது ஒரு மாதிரியாக இருக்கிறது. மாடல் என்பது தமிழா?

    திராவிட மாடலுக்கு பதிலாக முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மகன் நல்ல தமிழ் பெயரை கண்டுபிடிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • எண்ணும் எழுத்தும் திட்டத்தில் 3 லட்சம் பேர் பயனடைய இலக்கு
    • அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி என்ற 'புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-27' என்ற திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

    விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.கதிர்ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார் கார்த்திகேயன் அமலு விஜயன் (குடியாத்தம்), மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக பங்கேற்று திட்டத்தை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் மாற்று கல்வி கொள்கை நுழைந்து விடக்கூடாது என்று முதல்வர் கற்றுத்தந்துள்ளார். திராவிட மாடல் என்பது அனைவரும் படிக்க வேண்டும் என்பதுதான். 2011-ம் ஆண்டு கணக்கின்படி தமிழ்நாட்டில் படித்த ஆண்கள் 86 சதவீதம் ஆகவும், பெண்கள் 73 சதவீதம் ஆகவும் இருந்தனர்.

    இதை அதிகரித்து காட்ட வேண்டும். எழுத்தறிவு பெறும் சமுதாயம் மேம்பட்ட சமுதாயமாக இருக்கும். வேலூர் மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தில் 10,820 பேருக்கு எழுத்தறிவு அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் எண்ணும் எழுத்தும் திட்டம் 2021-22 ஆம் ஆண்டில் 3 லட்சம் பேர் பயனடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இலக்கை கடந்து 3.10 லட்சமாக எட்டப்பட்டுள்ளது. அதேபோல், 2022-23 -ம் ஆண்டின் இலக்காக 4.08 லட்சமாக இருக்கிறது. இதை 5 லட்சமாக மாற்றிக்காட்ட வேண்டும்.

    இதற்காக 9.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2025-ம் ஆண்டுக்குள் வெற்றிபெற்று தமிழ்நாடுதான் முதலிடத்தில் இருக்க வேண்டும். அதேபோல், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தையும் நிரூபித்துக்காட்ட வேண்டும். இதை ஆசிரியர்கள் தொண்டாக செய்து வெற்றிகரமான திட்டமாக மாற்ற வேண்டும்'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஒரு நாள் கருத்தரங்கம் நடை பெற்றது.
    • திராவிட இயக்க வரலாறுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை தி.மு.க. இளைஞரணி சார்பில் உடுமலை ராசி திருமண மண்டபத்தில் 'திராவிட மாடல்' பயிற்சி பாசறை ஒரு நாள் கருத்தரங்கம் நடை பெற்றது.

    அமைச்சர் மு.பெ. சாமிநாதன் துவக்கி வைத்தார்.மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மு.ஜெயக்குமார் வரவேற்றார். இதில் திராவிட இயக்க வரலாறுகள் குறித்து பேராசிரியர் சபாபதி மோகன், பேராசிரியர் கான்ஸ்டைன், வழக்கறிஞர் ராஜீவ் காந்தி ஆகியோர் விரிவாக எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயராமகிருஷ்ணன், தி.மு.க. இளைஞர் அணியை சேர்ந்த 420 பேர் கலந்து கொண்டனர்.

    • பெட்ரோல் குண்டு வீ்சி பா.ஜ.க.வினரின் பொருட்களையும் சேதப்படுத்தி இருக்கிறார்கள்.
    • பா.ஜ.க. தொண்டர்களை அமைதியாக இருக்க சொல்லி இருக்கிறோம்.

    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகே உள்ள கூட்டேரிப்பட்டில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டங்களை தமிழகத்தில் என்.ஜி.ஓ.க்கள் எதிர்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த என்.ஜி.ஓக்கள் எங்கு சென்றார்கள் என தெரியவில்லை. எல்லோருமே அமைதியாக இருக்கின்றனர்.

    ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் இந்தியாவில் காப்பரின் விலை 2 மடங்கு உயர்ந்திருக்கிறது. உலகம் முழுவதும் 40 சதவீதம் காப்பர் ஏற்றுமதி செய்து கொண்டிருந்த இந்தியா தற்போது சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது. காப்பர் விலை ஏற்றத்தால் அதை சார்ந்த பொருட்களின் விலையும் ஏறியுள்ளது.

    தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீ்சி இருப்பதோடு, பா.ஜ.க.வினரின் பொருட்களையும் சேதப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் பா.ஜ.க. தொண்டர்களை நாங்கள் அமைதியாக இருக்க சொல்லி இருக்கிறோம். தமிழ் மாடலா?, திராவிட மாடலா? என்பதை விவாதிக்க பா.ஜ.க. எப்போதுமே தயாராக இருக்கிறது.

    70 ஆண்டுகளில் தி.மு.க.வின் சாதனை திராவிட மாடல் என்று சொல்கிறார்கள். அதையும் விவாதிக்க தயாராக இருக்கிறோம். அமைச்சர் பொன்முடி நேரத்தையும், காலத்தையும் குறித்து சொன்னால் பா.ஜ.க. மாநில துணை தலைவர் ஒருவர் அவருடன் விவாதிக்க தயாராக வருவார்.

    அதே போல் தி.மு.க. தலைவர் எப்போது தயார் என்றாலும் அவர் குறிப்பிடும் இடத்துக்கு நான் வருகிறேன். இவை அனைத்தையும் நேரலையில் மக்கள் பார்க்க வேண்டும். நாங்கள் தயாராக இருக்கின்றோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சிறப்புமிக்க முப்பெரும் விழா இந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் நாள் பெருமைமிகு விருதுநகரில் நடைபெறுகிறது.
    • விழா பிரமாண்டமாக அமையும் என்பதில் துளியும் அய்யமில்லை.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    செப்டம்பர் மாதம் பிறந்தாலே கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவருக்கும் சிலிர்ப்பும் புத்துணர்ச்சிப் பெருக்கும் வந்து விடும்.

    ஆம்! இது நமக்கான மாதம்; திராவிடர்க்கான மகத்தான மாதம் என்ற எண்ணம் நம் உணர்வெங்கும் ஊற்றெடுத்து ஓடும். ஈரோட்டுப் பூகம்பம்-பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த மாதம், செப்டம்பர் மாதம்தான். அவருடைய லட்சியப் படையின் இணையற்ற தளபதியாக இயங்கிய பேரறிஞர் அண்ணா பிறந்த மாதமும் செப்டம்பர் மாதம்தான்.

    பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட நம் உயிரினும் மேலான இயக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்த மாதமும் செப்டம்பர் மாதம்தான். அதனால் செப்டம்பர் மாதம் என்பது திராவிட இயக்கத்தின் தனிச் சொந்த மாதம்.

    நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர், செப்டம்பர் மாதத்தில் முப்பெரும் விழாவை முன்னெடுத்து, கழகத்தின் கொள்கை, பார்மீது பட்டி தொட்டியெங்கும் முழங்கும் சீர்மிகு திருவிழாவாக நடத்தி, நமக்கெல்லாம் நல்வழி காட்டியிருக்கிறார். கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம், பேச்சரங்கம் உள்ளிட்ட இன்னும் பல வழிகளிலும் தலைவர் கலைஞரின் நேரடியான எழுச்சிப் பங்கேற்புடன் நடைபெற்ற முப்பெரும் விழாக்கள் எத்தனையெத்தனை! அத்தனையும் அவரைப் போலவே, நம் நெஞ்சை விட்டு சற்றும் நீங்காமல் பசுமையாகவே இருக்கின்றன.

    இத்தனை சிறப்புமிக்க முப்பெரும் விழா இந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் நாள் பெருமைமிகு விருதுநகரில் நடைபெறுகிறது. விழா பிரமாண்டமாக அமையும் என்பதில் துளியும் அய்யமில்லை.

    ஆயிரமாயிரமாய், லட்சோப லட்சமாய் திரண்டு வரும் உடன்பிறப்புகளாம் உங்களின் வருகையால், கடல் இல்லா விருதையில், பொங்கு மாங்கடல் புகுந்ததோ என நினைக்கும் அளவுக்கு முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற உங்களில் ஒருவனான நான், கழகத் தலைவர் என்ற முறையில் அன்புடனும் பாசத்துடனும் அழைக்கிறேன்.

    செப்டம்பர் 15, நம் கழகத்தை உருவாக்கிய பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் பிறந்தநாள். அதனை மனதில் கொண்டு, அரசு தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி வழங்குகிற மகத்தான புதிய திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன்பே பள்ளிகளில் இலவச உணவு வழங்கிய இயக்கம்தான் திராவிட இயக்கம். அன்று நீதிக்கட்சி இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் செயல்பட்டது.

    அந்த நீதிக்கட்சியின் நீட்சியாக, கழகத்தின் திராவிட மாடல் அரசு, இந்தியாவுக்கே முன்னோடித் திட்டமாக காலைச் சிற்றுண்டித் திட்டத்தைத் தொடங்குகிறது. சங்கத் தமிழ் வளர்த்த மாமதுரையில் அதனைத் தொடங்கிவைத்து, அதன்பின் மாலையில் விருதுநகரில் உங்களை சந்திக்கும் விருப்பம் மேலிட ஓடோடி வருவேன். உடன் பிறப்புகளான உங்களையும், உங்களில் ஒருவனான என்னையும் 'விருதை' அழைக்கிறது.

    முப்பெரும் விழாவில் கழகத்தின் மூத்த முன்னோடிகளை மதித்துப் போற்றும் பண்பின் அடிப்படையில் விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன. இந்த ஆண்டு பெரியார் விருது பெறுபவர் மிசா காலத்தில் தன் கணவரை சிறையில் அடைத்தபோதும் கலங்கி நிற்காமல் கழகம் காக்கும் பணியில் ஈடுபட்ட சம்பூர்ணம் சாமிநாதன் பதவிப் பொறுப்புகளைவிட கழகக் கொள்கை வழிப் பயணமே லட்சிய வாழ்வின் அடையாளம் எனச் செயலாற்றும் கோவை இரா.மோகன், அண்ணா விருது பெறவிருக்கிறார்.

    உயிர்நிகர் தலைவர் கலைஞரின் கண்ணசைவுக் கேற்பக் களமிறங்கி அயராது கழகப் பணியாற்றி இன்று கழகத்தின் பொருளாளராக இருக்கின்ற டி.ஆர்.பாலு எம்.பி. கலைஞர் விருது பெறவிருக்கிறார். அருகில் உள்ள புதுச்சேரி மாநிலத்தில் கழகத்தினை வளர்ப்பதில் பெரும்பங்காற்றிய புதுச்சேரி சி.பி.திருநாவுக்கரசு, பாவேந்தர் விருது பெறவிருக்கிறார்.

    கழகமே உயிர்மூச்சென வாழும் உடன்பிறப்புகளில் ஒருவரும் தலைமையின் கட்டளையை நிறைவேற்றுவதில் துடிப்புடன் செயலாற்றியவருமான குன்னூர் சீனிவாசன், பேராசிரியர் விருது பெறவிருக்கிறார்.

    இந்த இனிய நிகழ்வில், இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில், ஆட்சியியல் இலக்கணத்தைப் படைத்திருக்கும் கழகத்தின் திராவிட மாடல் அரசு பற்றிய எனது எண்ண ஓட்டங்கள் அடங்கிய புத்தகம் வெளியிடப்படவிருக்கிறது.

    முத்தாய்ப்பாக, முத்தமிழறிஞர் கலைஞர் முரசொலியில் எழுதிக் குவித்த உடன்பிறப்புகளுக்குக் கடிதங்களின் 54 தொகுதிகள் வெளியிடப்பட இருக்கின்றன. அவருடைய அந்தக் கடிதங்களின் கண்ணசைவில்தானே, கடைக்கோடித் தொண்டனையும், தன் குடும்பத்துடன், முப்பெரும் விழாவுக்கு அழைத்து வந்தது.

    'உடன்பிறப்பே..' என்று அவர் அழைத்தால், செவி மடுத்துச் செயலாற்றாத தொண்டர்கள் உண்டோ!

    எந்த நிலையிலும் அவர் அழைப்பினைத் தட்டாமல், எதையும் எதிர்பாராமல் ஓடோடி வந்த உடன்பிறப்புகளால்தானே, இன்று இந்த இயக்கம், இந்தியாவுக்கு வழிகாட்டும் வகையில் சிறந்தோங்கி விளங்குகிறது!

    நெருக்கடிகளிலும் சோதனைகளிலும் கழகத்தைக் கட்டிக் காத்த கலைஞரின் அன்பு உடன் பிறப்புகளை, உங்களில் ஒருவனாக நானும் அன்புடன் அழைக்கிறேன். செப்டம்பர் 15 அன்று விருதை நோக்கி விரைந்து வருக.. வெற்றி வரலாறு படைத்திடுவோம்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கடிதத்தில் கூறி உள்ளார்.

    • காரைக்குடியில் திராவிட மாடல் பயிற்சி கருத்தரங்கம் நடந்தது.
    • இதில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்றார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் காரைக்குடியில் திராவிட மாடல் குறித்த பயிற்சி கருத்தரங்கு கூட்டம் நடந்தது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார் வரவேற்றார். அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை தாங்கினார். திராவிட இயக்க வரலாற்றை எதிர்கால சந்ததியினர் தெரிந்துகொள்ளும் வகையில் நடந்த இந்த கருத்தரங்கில், ''திராவிட இயக்க வரலாறு'' என்ற தலைப்பில் பேராசிரியர் சுப.வீரபாண்டியனும், ''மாநில சுயாட்சி'' என்ற தலைப்பில் மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் கருணாவும் பேசினர்.

    மாவட்ட துணை செயலாளர்கள் சேங்கை மாறன், மணிமுத்து, ஜோன்ஸ்ரூசோ, மாவட்ட பொருளாளர் துரைராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சேதுபதி ராஜா, சிக்கந்தர் பாதுஷா, பொற்கோ, ரவி, காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்து துரை, துணை தலைவர் குணசேகரன், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஆனந்த், பள்ளத்தூர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். துணை அமைப்பாளர் துஷாந்த் பிரதீப்குமார் நன்றி கூறினார்.

    • ஏழை எளிய ஓதுக்கப்பட்ட மக்களுக்காக திட்டங்களை தீட்டி தமிழக மக்களுக்கு பணியாற்றியவர் கலைஞர் என்று அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
    • இந்த ஆட்சியில் நரிக்குறவர்களுக்கு வீட்டு மனை பட்டா, வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி மாணவரணியினருக்கான திராவிட மாடல் பயிற்சி அரங்கம் எட்டையபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது.

    அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார். மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் தொண்டரணி அமைப்பாளர் உமாதேவி வரவேற்புரையாற்றினார்.

    கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

    தி.மு.க. திராவிடமாடல் ஆட்சி என்பது அனைவருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது தான்.

    ஏழை எளிய ஓதுக்கப்பட்ட மக்களுக்காக திட்டங்களை தீட்டி தமிழக மக்களுக்கு பணியாற்றியவர் கலைஞர். எங்களுக்கு எம்மதமும் சம்மதம் மதஉணர்வை மதிக்கிறோம். மதவெறியை எதிர்க்கிறோம்.

    இந்த மொழியை அழிக்க வேண்டும் என்றால் இனத்தை அழிப்பதற்கு சமம். அதை மீட்டெடுக்கும் வகையில் தமிழ் மொழி செம்மொழி அந்தஸ்தை ஏற்படுத்தியவர் கலைஞர்.

    இந்த ஆட்சியில் நரிக்குறவர்களுக்கு வீட்டு மனை பட்டா, வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

    கோவில் கோபுரத்தை பார்த்து கும்பிட்டு சென்றவர்களை உள்ளே செல்ல முடியாத நிலை இருந்ததை மாற்றியது தி.மு.க. தான். இதுபோல் பல சாதனைகளை முன்நிறுத்தி மக்களுக்காக உழைத்தது தி.மு.க. தான். நம்முடைய முதல்-அமைச்சர் 24 மணிநேரத்தில் 20 மணி நேரமும் நாட்டுமக்களுக்காக உழைக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.

    தி.மு.க. மாநில செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜுவ்காந்தி, மாநில திட்டத் துணைத்தலைவர் ஜெயரஞ்சன் ஆகியோர் மாணவ, மாணவிகளிடையே பேசினர்.

    அப்போது சுதந்திர தினம், குடியரசு தினம், சமூக நீதி, மண்டல் கமிஷன், காவிரி நீர் பங்கீடு குறித்து டிவிசன் உருவாக்கிய பிரதமர் யார்?, தி.மு.க. தோன்றிய காலம் உள்ளிட்ட பல்வேறு கடந்த கால கருத்துகளை மாணவ மாணவிகளுக்கு தெரியும் வகையில் அதன் கருத்துகளை அவர்கள் மத்தியில் பேசி அதற்கான கேள்வி- பதில்களுக்கு சரியான விடை தெரிவிக்க வேண்டும் என்றார்.

    அதற்கு சரியான பதிலளித்த மாணவ, மாணவிகள் 100 பேருக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைச்சர் கீதாஜீவன், ஜெயரஞ்சன், ராஜுவ்காந்தி, மேயர் ஜெகன் பெரியசாமி ஆகிேயார் கைகடிகாரம் வழங்கினர்.

    கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர்கள் ஆறுமுகம், ராஜ்மோகன், செல்வின், பொருளாளர் ரவீந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, ராஜா, துணை மேயர் ஜெனிட்டா, மாநகரட்சி மண்டலத்தலைவர்கள் அன்னலட்சுமி, கலைச்செல்வி, மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், மாவட்ட அணி அமைப்பாளர்கள் கஸ்தூரிதங்கம், அன்பழகன், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    ×