search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனைவரும் படிக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல்
    X

    அனைவரும் படிக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல்

    • எண்ணும் எழுத்தும் திட்டத்தில் 3 லட்சம் பேர் பயனடைய இலக்கு
    • அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி என்ற 'புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-27' என்ற திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

    விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.கதிர்ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார் கார்த்திகேயன் அமலு விஜயன் (குடியாத்தம்), மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக பங்கேற்று திட்டத்தை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் மாற்று கல்வி கொள்கை நுழைந்து விடக்கூடாது என்று முதல்வர் கற்றுத்தந்துள்ளார். திராவிட மாடல் என்பது அனைவரும் படிக்க வேண்டும் என்பதுதான். 2011-ம் ஆண்டு கணக்கின்படி தமிழ்நாட்டில் படித்த ஆண்கள் 86 சதவீதம் ஆகவும், பெண்கள் 73 சதவீதம் ஆகவும் இருந்தனர்.

    இதை அதிகரித்து காட்ட வேண்டும். எழுத்தறிவு பெறும் சமுதாயம் மேம்பட்ட சமுதாயமாக இருக்கும். வேலூர் மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தில் 10,820 பேருக்கு எழுத்தறிவு அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் எண்ணும் எழுத்தும் திட்டம் 2021-22 ஆம் ஆண்டில் 3 லட்சம் பேர் பயனடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இலக்கை கடந்து 3.10 லட்சமாக எட்டப்பட்டுள்ளது. அதேபோல், 2022-23 -ம் ஆண்டின் இலக்காக 4.08 லட்சமாக இருக்கிறது. இதை 5 லட்சமாக மாற்றிக்காட்ட வேண்டும்.

    இதற்காக 9.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2025-ம் ஆண்டுக்குள் வெற்றிபெற்று தமிழ்நாடுதான் முதலிடத்தில் இருக்க வேண்டும். அதேபோல், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தையும் நிரூபித்துக்காட்ட வேண்டும். இதை ஆசிரியர்கள் தொண்டாக செய்து வெற்றிகரமான திட்டமாக மாற்ற வேண்டும்'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×