search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுப்ரீம் கோர்ட்டு"

    • பிரான்ஸ் ஊடகத்தில் வந்த செய்திகளை தொடர்ந்து வக்கீல் சர்மா, மனு தாக்கல் செய்தார்.
    • பிரான்ஸ் புலனாய்வாளர்களின் ஆவணங்களை வரவழைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    புதுடெல்லி:

    ரபேல் விமான ஒப்பந்த முறைகேடு புகார் தொடர்பாக மீண்டும் விசாரிக்க கோரிய மனுைவ சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    பிரான்ஸ் ஊடகத்தில் வந்த செய்திகளை தொடர்ந்து வக்கீல் சர்மா, ரபேல் ஒப்பந்தம் குறித்து மீண்டும் விசாரிக்க மனு தாக்கல் செய்தார். ரபேல் ஆர்டரை பெறுவதற்காக இடைத்தரகர் ஒருவருக்கு 1 மில்லியன் யூரோக்கள் வழங்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்திருப்பதாக பிரான்சில் தகவல் வெளியானது. இதன் அடிப்படையில், ரபேல் ஒப்பந்தத்தை மீண்டும் விசாரிக்க வேண்டும் எனவும், பிரான்ஸ் புலனாய்வாளர்களின் ஆவணங்களை வரவழைக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

    தலைமை நீதிபதி யு.யு.லலித், ரவீந்திர பட் ஆகியோர் தலைமையிலான பெஞ்ச் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    • இலவசங்களுக்கான நிதியை கட்டமைப்பு மேம்பாட்டுக்கு பயன்படுத்தலாம் என தலைமை நீதிபதி கருத்து
    • இந்தியா போன்றதொரு நாட்டில் இலவசங்களை கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது.

    புதுடெல்லி:

    தேர்தல் காலங்களில் இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளாக கொடுப்பதற்கு எதிராகவும், அதனை கட்டுப்படுத்தவும் வேண்டி அஸ்வினி உபாத்யாய் என்ற வழக்கறிஞர், சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைகளுக்கு கடந்த பிப்ரவரியில் தேர்தல் நடந்தபோது, இந்த வழக்கை அவர் தாக்கல் செய்தார்.

    அவர் தாக்கல் செய்த மனுவில், தேர்தலின்போது பொதுமக்களுக்கு பல்வேறு இலவசங்களை அரசியல் கட்சிகள் அறிவிக்கின்றன. இது ஓட்டு போடுவதற்காக மக்களுக்கு தரப்படும் லஞ்சமாகவே பார்க்க வேண்டும். இது நம் ஜனநாயக தேர்தல் நடைமுறையை சீர்குலைப்பதாக உள்ளது.

    மேலும், இந்த இலவசங்கள் பொது நிதியில் இருந்தே தரப்படுகின்றன. இதனால், மக்களின் தலையில் அதிக சுமை ஏறுகிறது. இவ்வாறு இலவச அறிவிப்புகளை வெளியிடும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய, கட்சி சின்னத்தை முடக்க நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும். இதற்கு தேவையான சட்டத்தை உருவாக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கு,சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் கிருஷ்ண முராரி, ஹீமா கோஹ்லி அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. முன்னர் நடந்த விசாரணைகளின்போது, இது மிகப்பெரும் பிரச்சினை என அமர்வு பலமுறை கூறியிருந்தது. கட்சிகள் இலவசங்களை அறிவிப்பதை தடுக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என தேர்தல் கமிஷன் கூறியது. இந்த விஷயத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என அமர்வு கேட்டிருந்தது.

    கடந்த வாரம் இந்த வழக்கு மீண்டும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இலவச அறிவிப்புகள், இலவச பொருட்கள் வினியோகம் ஆகியவை, நாட்டின் எதிர்கால பொருளாதாரத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

    மேலும் தங்களுடைய தேர்வை சுயமாக முடிவு செய்யும் வாக்காளர்களின் உரிமையும் பறிக்கப்படுகிறது என குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கூறுகையில், பல மாநிலங்கள் கடும் கடனில் உள்ள நிலையிலும், ஆட்சியை பிடிக்க அல்லது தக்கவைக்க இலவசங்கள் அறிவிக்கப்படுகின்றன. இதற்காகும் செலவு மக்கள் மீதே சுமத்தப்படுகிறது என்று இங்கு தெரிவிக்கப்பட்டது.

    கட்சிகள் இலவசப் பொருட்களை அறிவிப்பது, மிகப் பெரிய பொருளாதார பிரச்சினை என்பதில் சந்தேகமில்லை. இந்தப் பிரச்னை குறித்து, எந்த அரசியல் கட்சியும் பாராளுமன்றத்தில் பேசாது. அனைவருக்கும் இலவசங்கள் தேவை. இந்த விவகாரத்தில் ஒரு சரியான முடிவு எடுக்க வேண்டியது அவசியமாகும். இலவசங்களை எப்படி தவிர்ப்பது, தடுப்பது என்பது குறித்து, மத்திய அரசு, நிதி ஆயோக், நிதி கமிஷன் ஆகியவை ஆலோசனை கூட்டங்களை நடத்த வேண்டும். அவை பரிந்துரைகளை அளிக்க வேண்டும்.

    இதில் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்று தேர்தல் கமிஷனும், மத்திய அரசும் ஒதுங்கி கொள்ளக்கூடாது. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண, ஆலோசனைகளை வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில், மத்திய அரசு, நிதி ஆயோக், தேர்தல் கமிஷன், நிதி கமிஷன், ரிசர்வ் வங்கி, எதிர்க்கட்சிகள் என அனைவரும் தங்களுடைய கருத்தை, ஆலோசனைகளை தெரிவிக்க வேண்டும். அவற்றின் அடிப்படையில், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை உருவாக்க, மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பு ஒன்றை உருவாக்க உத்தரவிடப்படும் என்று கூறியிருந்தனர்.

    இந்த நிலையில் இன்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி என்.வி.ரமணா இருதரப்பு வாதங்களை கேட்டார். பின்னர் அவர் கூறுகையில், இலவசங்களுக்கான நிதியை கட்டமைப்பு மேம்பாட்டுக்கு பயன்படுத்தலாம். இலவசங்களும், சமூக நலத்திட்டங்களும் வெவ்வேறானவை. தேர்தலுக்கு முன் தேர்தல் அறிக்கையை அரசியல் கட்சிகள் அளிக்க வேண்டிய அவசியம் இல்லையா? இலவச திட்ட அறிவிப்புகள் தீவிரமான பிரச்சினை என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. இலவச அறிவிப்புகளால் மின்சாரத்துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.

    பட்டினியால் தவித்த மக்களுக்கு உணவளிக்க மத்திய அரசும் சில திட்டங்களை வைத்துள்ளது. இந்தியா போன்றதொரு நாட்டில் இலவசங்களை கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது.இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் பதிவை ரத்து செய்வது ஜனநாயக விரோத செயல் என்பதால் அதனை பரிசீலிக்க மாட்டோம்.

    ஒரு கட்சி ஆட்சிக்கு வரும்போது அந்த மாநிலத்தின் பொருளாதார நிலை என்ன என்பது பற்றி தெரியாது. மேலும் ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக தவறுகளை செய்யக்கூடாது. இலவச தேர்தல் வாக்குறுதிகளால் மின்சாரத்துறை உள்ளிட்ட அரசு துறைகள் கடுமையாக பாதிக்கப்படுகிறது என்றார்.

    • மாநிலம் முழுவதும் உள்ள நீர் நிலைகள், நீர் வழித்தடங்கள், கழிவு நீர் கால்வாய்களை 6 மாதங்களுக்குள் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
    • பணிகளை 3 மாதங்களுக்கு ஒரு முறை மறு ஆய்வு செய்ய வேண்டும். கடமை தவறும் அதிகாரிகள் மீது தமிழக அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தது.

    புதுடெல்லி:

    மழைக்காலங்களில் மழை நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க நவீன நீர் மேலாண்மை தொழில்நுட்பத்தை ஏற்படுத்தக்கோரி வி.பி.ஆர்.மேனன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க தலைமை செயலாளர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்புக்குழுவை அமைக்க வேண்டும்.

    மாநிலம் முழுவதும் உள்ள நீர் நிலைகள், நீர் வழித்தடங்கள், கழிவு நீர் கால்வாய்களை 6 மாதங்களுக்குள் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

    இந்த பணிகளை 3 மாதங்களுக்கு ஒரு முறை மறு ஆய்வு செய்ய வேண்டும். கடமை தவறும் அதிகாரிகள் மீது தமிழக அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தது.

    இந்த உத்தரவை முறையாக அமல்படுத்தவில்லை எனக்கூறி வி.பி.ஆர்.மேனன் சென்னை ஐகோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

    அந்த மனு மீதான விசாரணைக்கு தடைகோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டு மேல்முறையீடு செய்தது. அந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அப்துல் நசீர், ஜே.கே.மகேஸ்வரி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    மனுவை பரிசீலித்த நீதிபதிகள் சென்னை ஐகோர்ட்டு நீர்வளத்துறை செயலாளர், வருவாய் செயலாளர் உள்ளிட்டோருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள கோர்ட்டு அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதித்தனர்.

    மேலும் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தொடர்பாக பதிலளிக்க வி.பி.ஆர்.மேனனுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.

    • கல்வியுடன் பேச்சு திறமையை மாணவர்களுக்கு கற்று கொடுக்க வேண்டும்
    • ஆசிரியர்களுக்கு, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ராமசுப்பிரமணியன் அறிவுரை

    நாகர்கோவில்:

    தக்கலை. ஆர்.பி. ராஜ லெட்சுமி இந்து வித்யாலயா பள்ளியின் புதிய கட்டிடம் புலியூர்குறிச்சியில் கட்ட ப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. விசுவ இந்து வித்யாகேந்திரா நிறு வன தலைவர் வேதாந்தம் தலைமை தாங்கினார்.

    பொதுசெயலாளர் கிரிஜா சேஷாத்ரி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ராமசுப்பிரமணியன் கலந்து கொண்டு பள்ளியின் புதிய கட்டிடத்தை குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

    மேலும் இந்து வித்யாலயா பள்ளிகளின் இணைய வலைதளத்தை தொடங்கி வைத்து பேசினார். அப் போது அவர் கூறியதாவது:

    சத்தியம் மூன்று பரிணா மங்களை கொண்டது. அது உண்மை, வாய்மை, மெய்மை ஆகும். உள்ளத்தில் ஒளி இருக்குமானால் உண்மையி ருக்கும், பேச்சில் உண்மை இருந்தால் வாய்மை இருக்கும். செயலில் உண்மை இருந்தால் மெய்மை இருக்கும். பேச்சில் சாமர்த்தியம் கொண்ட வர்கள் பொய் பேசினாலும் மெய்யாகி விடுகிறது.

    பேசத் தெரியாதவர்கள் உண்மை பேசினாலும் அது பொய்யாகி விடுகிறது. ஆகவே ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வி யோடு பேச்சு திறனையும் கற்றுக்கொடுக்க வேண்டும். பிள்ளைகளின் ரோல் மாடலாக பெற்றோர்கள் ஏன் இருக்கக்கூடாது. குழந்தைகள் நாம் சொல்வதை கேட்டு வளர்வதில்லை. நம் செயல்பாட்டை பார்த்து தான் வளர்கிறார்கள். பெற்றோ ர்கள் பிள் ளைகளிடம் பொய் பேசக்கூடாது என கூறிவிட்டு, வீட்டின் டெலிபோன் அழைப்பை எடுக்கும் பிள்ளைகளிடம் அப்பா வீட்டில் இல்லை என கூறு என்று பொய் பேச சொல்கிறார்கள்.

    எந்த கல்வி மாணவர்களை ஒழுக்க பாதைக்கு அழைத்து செல்கிறதோ அந்த கல்வியை ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். ஆண் கள் போதிக்கும் கல்வியில் இருக்கும் ஒழுக்கத்தை விட பெண்கள் போதிக்கும் கல்வியில் ஒழுக்கம் அதி கமாக இருக் கும். இந்த பள்ளியில் பெண் ஆசிரியர்களே. அதிகமாக இருக்கிறார்கள் இதனால் இங்கு பயிலும் பிள்ளைகள் நல்ல ஒழுக் கம் கொண்டவர்களாக இருப்பா ர்கள்.

    மனிதன் ஒரு நிலையில் இருக்கும் போது பணத்தி ற்கும், புகழுக்கும் ஆசைப்ப டுவார்கள் அவர்களின் அடுத்த நிலை என்பது எதையா வது சாதிக்க வேண்டும் என்பதாக இருக்கும். அப்படிப்பட்ட சிந்தனை கொண்டவர்கள் தான் இந்த பள்ளியை வழிநடத்தி செல்பவர்கள் அவர்களின் பணி தொடர வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் பங்கேற்ற வெள்ளிமலை சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ் ஆசியுரை வழங்கினார். விசுவ ஹிந்து வித்யாகேந்திர இணை பொதுச்செய லாளர் கிருஷ்ணமாச்சாரி, உறுப்பினர் கோபால் கமலம்மாள், ஓய்வுபெற்ற கலெக்டர் செல்லமுத்து ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    விழாவில் பள்ளியின் மூத்த ஆசிரியர்கள் மற்றும் கட்டுமான என்ஜினீயர்கள் கவுரவிக்கப்பட்டனர். பள்ளி யின் ஒருங்கிணைப்பா ளர்கள் சின்னதங்கம், மணி, அனைத்து பள்ளிக ளின் முதல்வர்கள், மாணவ மாணவிகள் பெற்றோர்கள். வி.பி.ஆர் நிறுவனத்தின் என்ஜினீயர் ராஜ சேகர், கட்டிட ஒருங்கிணைப்பா ளர்கள் ராமகிருஷ்ணன், ஸ்ரீதர், ராம சப்பு செல்ல த்துரை ஐ.ஏ.எஸ், மேற்பார்வையாளர்களான என்ஜினியர்கள் ரஞ்சித் ராஜா, விக்னேஷ், பிரபு, அனீஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி முதல்வர் மாலதி நன்றி கூறினார்.

    இயந்திரத்தில் சின்னம் தெளிவாக இல்லை என்று கூறி நாம் தமிழர் கட்சி சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது. #NaamThamizharKatchi #LokSabhaElections2019

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலிலும், சட்டசபை இடைத்தேர்தலிலும் சீமானின் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது.

    அந்த கட்சிக்கு ‘கரும்பு விவசாயி’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம் ஆகியவை அச்சிடப்பட்ட பேப்பர்கள் ஓட்டுவது வழக்கம்.

    அப்படி ஓட்டப்பட்ட நாம் தமிழர் கட்சியின் சின்னமான கரும்பு விவசாயி சின்னம் தெளிவாக இல்லை என்று அந்த கட்சி புகார் தெரிவித்தது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு எந்த பலனும் இல்லை.

     


    இந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரத்தில் தங்களது சின்னம் தெளிவாக இருக்கு மாறு செய்ய தேர்தல் கமி‌ஷனுக்கு உத்தரவிடக் கோரி நாம் தமிழர் கட்சி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    அந்த கட்சியின் பொதுச் செயலாளர் என்.சந்திரசேகரன் இந்த மனுவை தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது. #NaamThamizharKatchi #LokSabhaElections2019

    பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி உறவு வைப்பதும் கற்பழிப்பே என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. #supremecourt

    புதுடெல்லி:

    சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்த டாக்டர் ஒருவர் ஒரு பெண்ணுடன் பழகி வந்தார். அந்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறி தாம்பத்திய உறவிலும் ஈடுபட்டார்.

    இந்த நிலையில் வேறு ஒரு பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் அந்த டாக்டர் மீது புகார் கொடுத்தார்.

    அதன்படி கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவம் 2013-ம் ஆண்டு நடந்தது.

    இதன் பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணும் வேறு ஒருவரை திருமணம் செய்து குடும்ப வாழ்க்கைக்கு சென்று விட்டார்.

    டாக்டர் மீதான வழக்கில் கீழ் கோர்ட்டு அவர் மீது கற்பழிப்பு குற்றப்படி 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது.

    இதை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். அங்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டது.

    இறுதியாக டாக்டர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். நீதிபதிகள் நாகேஷ்வரராவ், எம்.ஆர்.ஷா ஆகியோர் முன்னிலையில் விசாரணை நடந்து வந்தது.

    அப்போது டாக்டர் தரப்பில் வாதாடிய வக்கீல் சம்பந்தப்பட்ட டாக்டர் அந்த பெண்ணின் சம்மதத்துடன் தான் தாம்பத்திய உறவு வைத்திருந்தார். இது கற்பழிப்பு குற்றமாக கருத முடியாது என்று வாதாடினார்.

    அதற்கு நீதிபதிகள், இதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறி கற்பழிப்பு குற்றத்தை உறுதி செய்தார்கள். 10 ஆண்டுகள் விதிக்கப்பட்ட தண்டனை 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

    ஆனாலும், ஒரு பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றி உறவு கொண்டது கற்பழிப்பு குற்றமாகவே கருதப்படும் என்று நீதிபதிகள் கூறினார்கள்.

    குற்றவாளியான டாக்டருக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயமாகி இருக்கிறது. அதை மறைத்து சம்பந்தப்பட்ட பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி தாம்பத்திய உறவு வைத்து இருக்கிறார்.

    அதாவது வேண்டும் என்றே திட்டமிட்டு அந்த பெண்ணை ஏமாற்றி நம்ப வைத்து தனது பசிக்கு விருந்தாக்கி இருக்கிறார்.

    பெண்ணின் கற்பு என்பது சாதாரண வி‌ஷய மல்ல, கற்பழிப்பு என்பது கிட்டத்தட்ட ஒரு கொலைக்கு சமமானது. கொலை நடக்கிறது என்றால் ஒருவருடைய உடல் அழிக்கப்படுகிறது.

    ஆனால், கற்பழிப்பில் ஒரு பெண்ணுக்கு களங்கம் ஏற்படுத்தப்படுகிறது. அவருடைய மரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்தப்படுகிறது. உதவியற்ற ஆன்மாவாக அவர் சுற்றித்திரிய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார். ஒரு மிருகத்தின் நிலைக்கு அவர் தள்ளப்படுகிறார். அவருடைய வாழ்க்கை முழுவதும் இந்த பாதிப்பு தொடர்கிறது.

    எனவே, கடுமையான குற்றத்தின் அடிப்படையில் கற்பழிப்பு குற்றவாளிகளை தண்டிக்க வேண்டியுள்ளது.

    பாதிக்கப்பட்ட பெண் தற்போது வேறு ஒருவரை திருமணம் செய்து அவர் குடும்ப வாழ்க்கை நடத்தினாலும் கூட அவருக்கு இழைக்கப்பட்ட குற்றம் அழிந்து போவதில்லை. எனவே, சம்பந்தப்பட்ட குற்றவாளி தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள். #supremecourt

    இஸ்ரோவில் உளவு பார்த்ததாக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என தீர்ப்பு வந்ததை அறியாமலேயே விஞ்ஞானி சந்திரசேகர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #ISRO #ScientistNambiNarayan #ScientistKChandrasekhar
    திருவனந்தபுரம்:

    இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ’வில் விஞ்ஞானியாக பணியாற்றியவர், கே.சந்திரசேகர். இஸ்ரோவின் விண்வெளித் திட்டங்கள் குறித்த ரகசியங்களை 1994-ம் ஆண்டு விஞ்ஞானிகள் நம்பி நாராயணன் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் வெளிநாடுகளுக்கு பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி விசாரணை மேற்கொண்ட கேரள மாநில போலீசார் அவர்களை கைது செய்தது.

    பின்னர் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை என சந்திரசேகர் மற்றும் நம்பி நாராயணன் போன்றோரை சிபிஐ விடுதலை செய்தது. மேலும் கேரள போலீஸ் அதிகாரிகள் சட்டவிரோதமாக அவர்களை கைது செய்ததாகவும் கூறியது.

    இதற்கிடையே, தன்னை தேவையின்றி கைது செய்து, சித்ரவதைக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாக்கிய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நம்பி நாராயணன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த கேரள ஐகோர்ட்டு, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து 1998-ல் நம்பி நாராயணன் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நம்பி நாராயணன் உள்ளிடோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அடிப்படை ஆதாரமற்றது என கூறி மனரீதியாக துன்புறுத்தப்பட்ட நம்பி நாராயணனுக்கு கேரள அரசு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

    மேல்முறையீட்டு வழக்கை மிகவும் எதிர்ப்பார்த்திருந்த சந்திரசேகர் தீர்ப்பு வெளியான தினமான கடந்த வெள்ளி அன்று காலையில் திடீரென கோமா நிலைக்கு சென்றார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்திரசேகர் கடந்த ஞாயிறு அன்று உயிரிழந்தார்.

    இது தொடர்பாக அவர் மனைவி விஜயம்மா கூறுகையில், ’தீர்ப்பு வெளியான அன்று அவர் திடீரென கோமா நிலைக்கு சென்றார். தீர்ப்பில் நிச்சயம் வெற்றி பெற்று விடுவோம் என அவர் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தார், ஆனால் இந்த வழக்கு தொடரப்பட்டதற்கான பின்னனி அறிந்து கொள்ளாமல் அவர் மறைந்து விட்டார். இந்த வழக்கினால் நாங்கள் மிகவும் துன்பத்திற்கு ஆளானோம்’ என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    இஸ்ரோவில் உளவு பார்த்ததாக தன் மீது சுமத்தப்பட்ட களங்கம் நீங்கியதை அறியாமலேயே விஞ்ஞானி சந்திரசேகர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #ISRO #ScientistNambiNarayan #ScientistKChandrasekhar
    அசாமில் குடியிருப்போர் விவகாரம் தொடர்பாக வரைவு பதிவேடு அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக்கூடாது என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #AssamNRC #SupremeCourt
    புதுடெல்லி:

    அசாம் மாநிலத்தில் வசிப்போர் பற்றிய தேசிய குடிமக்கள் இறுதி வரைவு பதிவேடு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சம் பேர் அசாமை சேர்ந்தவர்கள் அல்ல என்பதும் இவர்கள் வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக அசாமில் குடி புகுந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.

    இந்த நிலையில், அசாம் குடிமக்கள் பதிவேட்டின் ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜெலா நேற்று முன்தினம் இறுதி வரைவு பதிவேட்டின் தற்போதைய நிலை குறித்து விரிவான அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார். இதன் மீது நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் ஆர்.எப்.நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரணை நடத்தியது.



    அப்போது நீதிபதிகள் கூறுகையில், “வரைவு இறுதி பதிவேடு தொடர்பாக மத்திய அரசு நிலையான இயக்க நடைமுறையை உருவாக்கி அதை கோர்ட்டின் ஒப்புதலுக்காக வருகிற 16-ந் தேதி தாக்கல் செய்யவேண்டும். மேலும், விடுபட்டு உள்ளவர்களின் பெயர்களை சேர்க்க மற்றும் இது தொடர்பான ஆட்சேபங்களை தெரிவிக்க உள்ளூர் பதிவாளர் ஒருவர் மூலம் நோட்டீஸ் அளிக்கப்படவேண்டும். இந்த பதிவேடு தொடர்பாக கட்டாய நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது. ஏனென்றால் இது வெறும் ஒரு வரைவு பதிவேடுதான்” என்று உத்தரவிட்டனர்.  #AssamNRC #SupremeCourt
    1,300 டாஸ்மாக் கடைகளை மூடும் விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. #Tasmac #SupremeCourt #ChennaiHighCourt
    புதுடெல்லி:

    தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் சுமார் 3 ஆயிரம் மதுக்கடைகள் மூடப்பட்டன.

    அதன் பின்னர், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்யப்பட்டு, அடைக்கப்பட்ட மதுக்கடைகளில் பல மீண்டும் திறக்கப்பட்டன. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து வக்கீல்களுக்கான சமூகநீதிப்பேரவையின் தலைவர் கே.பாலு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.



    இதை விசாரித்த ஐகோர்ட்டு ‘தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து, அதுகுறித்த முறையான அறிவிப்பு வெளியிடாமல், அந்த சாலைகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு இருந்தால், அப்படிப்பட்ட கடைகளை உடனடியாக மூட வேண்டும்’ என கடந்த 28-ந்தேதி உத்தரவிட்டது. வகைமாற்றம் செய்யாமல் புதிதாக டாஸ்மாக் கடைகளை திறக்கவும் தடை விதித்த நீதிபதிகள், நட்சத்திர ஓட்டல்களில் உள்ள மதுபான விடுதிகளுக்கு எந்த தடையும் இல்லை என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.

    இதனால் 1,300 மதுக்கடைகள் மூடும் நிலை ஏற்பட்டது. எனவே சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனுவில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுக்கடைகள் திடீரென்று மூடப்படுவதால் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்த தமிழக அரசு, மதுவால் ஏற்படும் சாலை விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியிருந்தது.

    இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் மூத்த வக்கீல்கள் முகுல் ரோத்தகி, யோகேஷ் கன்னா ஆகியோர் ஆஜரானார்கள்.

    அவர்கள் தங்கள் வாதத்தில், ‘டாஸ்மாக் கடைகள் மூடும் விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு வழங்கி உள்ள தீர்ப்பு சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக அமைந்துள்ளது. சண்டிகர் தொடர்பான வழக்கின் தீர்ப்புக்கு தமிழக அரசு தாக்கல் செய்த விளக்கம் கோரும் மனுவின் மீது சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில்தான் நகராட்சி பகுதிகளில் புதிதாக மதுக்கடைகள் திறக்கப்பட்டன. எனவே சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறினர்.

    ஆனால் மனுதாரர் கே.பாலு மற்றும் அவரது சார்பில் ஆஜரான வக்கீல் தனஞ்செயன் தங்கள் வாதத்தில், ‘சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் நகராட்சி பகுதிகளில் செல்லும் நெடுஞ்சாலைகளுக்கு முழு விதிவிலக்கு அளிக்கவில்லை. ஆனால் தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தவறாக புரிந்து கொண்டு, இரவோடு இரவாக 1,300 மதுக்கடைகளை நகராட்சி பகுதிகளில் திறந்துள்ளது’ என்று குற்றம் சாட்டினர்.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தங்கள் உத்தரவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது எனக்கூறியதுடன், சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது எனவும் உத்தரவு பிறப்பித்தனர்.

    அவர்கள் மேலும் கூறுகையில், ‘நகராட்சி பகுதிகளில் வரும் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் திறப்பது குறித்து கடைவாரியாகத்தான் முடிவெடுத்து இருக்க வேண்டும். ஒரே உத்தரவில் இத்தனை கடைகள் திறந்துள்ளதை அனுமதிக்க முடியாது. எனவே சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய உத்தரவை அடிப்படையாக கொண்டு புதிய உத்தரவை பிறப்பித்து அதை சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டனர்.

    பின்னர் இந்த வழக்கின் விசாரணையை 23-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 
    ×