search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாராயம்"

    • கள்ளசாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்தனர்.
    • போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மரக்காணம் எக்கியார் குப்பத்தில் கள்ள சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்தனர். இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் கள்ளசாராய விற்பனையை தடுக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் தமிழ்நாடு முழு வதும் உள்ள போலீசார் சாராயம் விற்பனை செய்து வந்த நபர்களை கண்டறிந்து கைது செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது கல்லாநத்தம் கிராமத்தில் சாராயம் விற்பனை செய்து வந்த மணி மகன் ராமச்ச ந்திரன் (வயது 38) என்பவ ரிடமிருந்து 110 லிட்டர் சாராயமும், தென்செட்டியந்தல் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகள் கீதா (34), ராஜா இவரது மனைவி சத்யா( 30 )ஆகியோரிடம் இருந்து 40 லிட்டர் சாராயமும், பைத்தந்துறை கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் பால கிருஷ்ணன் வயது 34 என்பவரிடமிருந்து 110 லிட்டர் சாராயமும் நாககு ப்பம் கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் சின்னதுரை (வயது 34) என்பவரிடமிருந்து 10 லிட்டர் சாராயமும் பறிமுதல் செய்து 5பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
    • 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 220 விட்டர் சாராயம் பறிமுதல்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் சாராய விற்பனை மற்றும் லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்கும் பொருட்டு பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் நாகூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது காரைக்காலில் இருந்து நாகையை நோக்கி 2 மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படி வந்த 2 பேரை வழிமறித்து போலீசார் சோதனை செய்தனர்.

    பின்னர் விசாரணையில் அவர்கள் தஞ்சாவூர் மேல திருப்பந்துருத்தி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராதா மகன் அரவிந்த் ராதா (வயது 24) என்பதும், நாகூர் வண்ணான்குளம் மேல்கரை அமிர்தா நகரை சேர்ந்த சித்திரவேல் மகன் அசோக்குமார் (33) என்பதும், அவர்கள் இருவரும் சாராயம் கடத்தி சென்றதும் தெரியவந்தது.

    தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த நாகூர் போலீசார் அரவிந்த்ராதா மற்றும் அசோக்குமாரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 220 விட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    • முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
    • புகார்களை 94882 94941 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தெரிவிக்கலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர மதுவிலக்கு காவல்துறை சார்பில் முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

    அதில் திருப்பூர் மாநகர பகுதியில் சாராயம் காய்ச்சுதல், வெளிமாநில மதுபானங்கள் விற்பனை செய்தல், போலி மதுபானம் தயாரித்தல், கஞ்சா பயிரிடுதல், கஞ்சா விற்பனை செய்தல், மதுவிற்பனை போன்ற குற்றங்கள் தொடர்பான புகார்களை 94882 94941 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தெரிவிக்கலாம். தகவல் தருபவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் மதுவிலக்கு போலீசார் மாநகர பகுதிகளில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • கள்ளச்சாராய மரணம் மிகப்பெரிய வேதனை அளிக்கிறது. முழு மது விலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.
    • முழு மதுவிலக்கை வலியுறுத்தி மக்கள் இயக்கத்தை தொடங்க இருக்கிறோம்.

    திருச்சி:

    பெரம்பலூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. இன்று விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற இரு அவைகளுக்கும் குடியரசு தலைவர் தான் தலைவராக இருக்கிறார். அரசியலமைப்பு சட்டமே அதை தான் உறுதிப்படுத்துகிறது. புதிதாக பாராளுமன்ற கட்டிடம் கட்டியுள்ள நிலையில் அதன் திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவரை அழைக்காதது அதிர்ச்சி அளிக்கிறது.

    திட்டமிட்டே உள்நோக்கத்தோடு குடியரசு தலைவர் புறக்கணிக்கப்பட்டுள்ளார். இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது. ஜனநாயக மரபை சிதைக்கும் வகையில் மோடி அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது.

    புதிய பாராளுமன்ற கட்டிட அடிக்கல் நாட்டு விழாவின் போது அப்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை. தற்போது குடியரசு தலைவரும் அழைக்கப்படவில்லை. இது திட்டமிட்டு செய்த நடவடிக்கை தான். அதுமட்டுமில்லாமல் மே 28-ந்தேதி என்பது சாவர்க்கரின் பிறந்த நாளாக உள்ளது. சனாதன தர்மத்தை நிலைநாட்ட பெரிதும் பாடுபட்டவர் சாவர்க்கர். அவர் பிறந்த நாளில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு காரணங்களுக்காக நாங்கள் பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டோம் என அறிவித்துள்ளோம்.

    இந்த விழாவிற்கு குடியரசு தலைவரும் அழைக்கப்பட வேண்டும், திறப்பு விழா தேதியும் மாற்றப்பட வேண்டும். கர்நாடக தேர்தல் முடிவுகள் அகில இந்திய அளவில் பிரதிபலிக்கும். மோடி அரசுக்கு கர்நாடக மக்கள் அளித்த தீர்ப்பு அவர்களின் வெறுப்பு அரசியலுக்கு எதிரான தீர்ப்பு. கர்நாடகத்தில் ஹிஜாப் பிரச்சினை, முஸ்லீம்கள் இட ஒதுக்கீடு ரத்து போன்றவற்றை செய்து மக்களை பிளவுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். அதன் காரணமாக இந்துக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு அளித்து இந்துக்கள் தான் பா.ஜ.க.வை தோல்வி அடைய செய்தார்கள். 2024 பாராளுமன்ற பொதுத்தேர்தலில் இது பிரதிபலிக்கும்.

    கர்நாடக அமைச்சரவை பொறுப்பேற்பு விழாவில் எங்களுக்கு அவமரியாதை நடக்கவில்லை. முறைப்படி தான் எங்களுக்கு நாற்காலிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. கள்ளச்சாராய மரணம் மிகப்பெரிய வேதனை அளிக்கிறது. முழு மது விலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். முழு மதுவிலக்கை வலியுறுத்தி மக்கள் இயக்கத்தை தொடங்க இருக்கிறோம்.

    கள்ளச்சாராயத்தால் மரணம் அடைந்தவர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி அளித்திருப்பது முதலமைச்சர் அதை மனிதாபிமான அடிப்படையில் அணுகி இருக்கிறார் என்பதை தான் காட்டுகிறது. கள்ளசாராயத்தை ஊக்குவிக்கிறது என விமர்சிக்க கூடாது. பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தினால் அவர்களோடு நான் கைக்கோர்ப்பேன். பாராளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணி அமையக்கூடாது, அது நாட்டுக்கு நல்லதல்ல, அது அமைந்தால் சனாதன வாதிகளுக்கு தான் வலு சேர்க்கும். ஜாதி பெயரில் பட்டங்கள் வழங்குவது விளம்பரத்திற்காக செய்யும் வேலை, தேவையில்லாத வேலை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் பாரதிய ஜனதா மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.

    சென்னை:

    கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் பலியான சம்பவத்தை கண்டித்து சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் பாரதிய ஜனதா மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் கரு.நாகராஜன், சிறுபான்மையினர் அணியை சேர்ந்த தேசிய செயற்குழு உறுப்பினர்களும் புதுச்சேரி மாநில பொறுப்பாளருமான எம்.கே.கிளாரன்ஸ், வி.பி.துரைசாமி, செயலாளர் கராத்தே தியாகராஜன் மற்றும் டால்பின் ஸ்ரீதர், நடிகை நமீதா, முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் காயத்ரி தேவி, மாவட்ட தலைவர்கள் காளிதாஸ், சாய் சத்யன், தனசேகர் மற்றும் மாநில மகளிர் அணி மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • விஷச்சாராயம் குடித்ததில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பலர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.
    • மதுராந்தகம் டி.எஸ்.பியாக திண்டுக்கல் மாவட்டம், பழனி உட்கோட்டத்தில் பணியாற்றி வரும் சிவசக்தி என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

    மதுராந்தகம்:

    செய்யூரை அடுத்த சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெருங்கருணை, பேரம்பாக்கம், புத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 14-ந்தேதி ஏராளமானோர் கள்ளச்சாராயம் குடித்தனர். இதில் 2 பெண்கள் உள்பட 8 பேர் பரிதாபமாக இறந்தனர். ஏற்கனவே விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் அடுத்தடுத்து 14 பேர் பலியானார்கள் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் விஷச்சாராயம் குடித்ததில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பலர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.

    சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராம பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்காத மேல் மருவத்தூர் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த், சித்தாமூர் சப்-இன்ஸ்பெக்டர் மோகன சுந்தரம் ஆகியோர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    இதன் தொடர்ச்சியாக கள்ளச்சாராய விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்காத மதுராந்தகம் டி.எஸ்.பி. மணிமேகலை தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

    அவருக்கு பதிலாக மதுராந்தகம் டி.எஸ்.பியாக திண்டுக்கல் மாவட்டம், பழனி உட்கோட்டத்தில் பணியாற்றி வரும் சிவசக்தி என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

    • தமிழகத்தில் குவாட்டர் பாட்டில் ரூ.160க்கு குறைவாக கிடையாது.
    • புதுச்சேரியில் இருந்து கடத்தி செல்லப்படும் சாராயம், தமிழக கிராமங்களில் 100 மி.லி., பாக்கெட் ரூ. 50 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு அனுமதியுடன் 130 சாராய கடைகளும், 50 கள்ளுக்கடைகளும் இயங்கி வருகின்றன.

    இந்த கடைகளுக்கு, அரசுக்கு சொந்தமான சாராய வடி சாலை மூலமாக சாராயம் சப்ளை செய்யப்படுகிறது. தமிழகத்தில் சாராயம் விற்பனை கிடையாது. டாஸ்மாக் மதுபானங்கள் மட்டுமே விற்கப்படுகிறது. தமிழகத்தில் குவாட்டர் பாட்டில் ரூ.160க்கு குறைவாக கிடையாது.

    புதுச்சேரியில் இருந்து கடத்தி செல்லப்படும் சாராயம், தமிழக கிராமங்களில் 100 மி.லி., பாக்கெட் ரூ. 50 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    இன்னொரு பக்கம், வெளி மாநிலத்தில் புதுச்சேரிக்கு கள்ளத்தனமாக கொண்டு வரப்படும் ஆர்.எஸ்.எனப்படும் எரிசாராயம் தமிழக பகுதிகளுக்கு கேன் கேன்களாக கடத்தி செல்லப்படுகிறது.

    எரிசாராயத்தில் சரியான அளவு தண்ணீர் கலந்தால், மிதமான போதை தரும் சாராயமாக மாற்றலாம். ஆனால், கடத்தி செல்லும் சாராய வியாபாரிகள் போதைக்காக அதில் சில ரசாயனங்களை கலப்பதால் விஷ சாராயமாக மாறி விடுகிறது.

    தமிழக வியாபாரிகளுக்கு சாராயம் கடத்தி செல்வதற்காக தனிக் குழுக்கள் கடலுார், விழுப்புரம் மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது.

    புதுவையில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை இணைக்க 81 சாலை வழிகள் உள்ளது. இந்த கிராமபுற சாலைகள் வழியாகவும், சந்து பொந்துகள் வழியாகவும் எளிதாக சாராயம் கடத்துகின்றனர்.

    இந்த பாதைகள் அனைத்தும் கடலுார், விழுப்புரம் மாவட்ட மது விலக்கு போலீசாருக்கு நன்கு தெரியும்.இருந்தபோதும், இந்த வழிகளை விட்டுவிட்டு திண்டிவனம் புறவழிச்சாலையில் கிளியனுார், கடலுார் மஞ்சக்குப்பம், சோரியாங்குப்பம், கெகராம்பாளையம், திருக்கனுார் பகுதியில் சோதனைச் சாவடிகள் அமைத்து சோதனை மேற்கொள்கின்றனர்.

    இதில் பெரும்பாலும் யாரும் சிக்குவதில்லை. புதுச்சேரியில் திருடப்படும் 80 சதவீத பைக்குகள், கடலுார், விழுப்புரம் மாவட்ட சாராய கடத்தல் கும்பலுக்கு விற்கப்படுகிறது. திருட்டு பைக்குகளில் கிராமப்புற உட்புற சாலைகள் வழியாக சாராயம் ரெகுலராக கடத்தப்படுகிறது.

    போலீசார் மடக்கினால் சாராயத்துடன், பைக்கையும் விட்டு விட்டு தப்பி விடுகின்றனர்.

    • விஷச்சாராயம் விற்பனை செய்து கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளவர்களையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
    • சாராய விற்பனையில் தொடர்புடைய காவல் துறை, வருவாய் துறையினரையும் விசாரிக்க உள்ளனர்.

    விழுப்புரம்:

    மரக்காணத்தில் விஷச்சாராயம் குடித்து 14 பலியான வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை தொடங்கியது.

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்தில் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்த 14 பேர் பலியானார்கள்.55-க்கும் மேற்பட்டோர் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதுவை ஜிப்மர் மருத்துவமனை, புதுவை அரசு மருத்துவ மனை, மரக்காணம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    விஷச்சாராயம் குடித்து 14 பேரி பலியானதை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மதுவிக்கு டி.எஸ்.பி. பழனி, மரக்காணம் இன்ஸ்பெக்டர் அருள் வடிவழகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் தீபன், சீனிவாசன், மது விலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் மரிய சோபி மஞ்சுளா, சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன், மரக்காணம் போலீஸ் ஏட்டு மகாலிங்கம், தனிப்பிரிவு ஏட்டு ரவி, விஷச்சாராய விற்பனையை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லாத கிராம நிர்வாக அலுவலர் சதாசிவம், உதவியாளர் மாரிமுத்து ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    விஷச்சாராயம் விற்பனை தொடர்பாக மரக்காணம் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சாராய வியாபாரிகளான அமரன், முத்து, ஆறுமுகம், ரவி, மண்ணாங்கட்டி, குணசீலன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மேலும் சாராய வியாபாரிகளுக்கு மெத்தனால் சப்ளை செய்த முக்கிய குற்றவாளிகள் புதுவை முத்தியால்பேட்டை ராஜா என்கிற பர்கத்துல்லா, வில்லியனூர் ஏழுமலை, சென்னை திருவேற்காடு இளைய நம்பி ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மரக்காணம் போலீசார் கொலை வழக்காக மாற்றினார்கள்.

    இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து விசாரணை அதிகாரியாக விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி.கூடுதல் டி.எஸ்.பி. கோமதி நியமிக்கப்படார்.

    இதனை தொடர்ந்து மரக்காணம் போலீஸ் நிலையத்தில் இருந்து வழக்கு ஆவணங்கள் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.எஸ்.பி. கோமதியிடம் வழங்கப்பட்டது.

    இந்த ஆவணங்களை பெற்றுக் கொண்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று விசாரணையை தொடங்கினார்கள். அவர்கள் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் மெத்தனால் வழங்கிய ஆலைகளிலும் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    விஷச்சாராயம் விற்பனை செய்து கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளவர்களையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

    இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. ஜோஷி நிர்மல் குமார், போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி ஆகியோர் விழுப்புரத்தில் முகாமிட்டு இந்த வழக்குதொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள். சாராய விற்பனையில் தொடர்புடைய காவல் துறை, வருவாய் துறையினரையும் விசாரிக்க உள்ளனர். இதனால் போலீசார் கலக்கத்தில் உள்ளனர்.

    • செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனை கும்பலை கூண்டோடு பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர்.
    • கள்ளச்சாராயம் விற்ற வழக்கில் சித்தாமூர் அருகே உள்ள விளம்பூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரை போலீசார் பிடித்து உள்ளனர்.

    மதுராந்தகம்:

    மரக்காணம், சித்தாமூர் பகுதியில் விஷசாராயம் குடித்து இதுவரை மொத்தம் 22 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பலர் சிகிச்சையில் உள்ளனர்.

    மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் அருகே உள்ள பெருங்கரணை கிராமத்தை சேர்ந்த சின்னத்தம்பி அவரது மாமியார் வசந்தா மற்றும் பேரம்பாக்கம் பகுதியை சேர்ந்த வெண்ணியப்பன், சந்திரா , மாரியப்பன் ஆகியோர் விஷசாராயம் குடித்ததில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பலியானார்கள்.

    இதைத்தொடர்ந்து நேற்று மட்டும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சின்ன கயப்பாக்கத்தை சேர்ந்த சங்கர், பெருங்கரணையை சேர்ந்த தம்பு, முத்து ஆகிய 3 பேர் அடுத்தடுத்து பலியானார்கள். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்து உள்ளது.

    மேலும் பெருங்கரணை கிராமத்தை சேர்ந்த அஞ்சலி, ராஜீவ் உள்பட 4 பேர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது உடல்நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனை கும்பலை கூண்டோடு பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர். இதில் பா.ஜனதா நிர்வாகி சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ளச்சாராயம் விற்ற வழக்கில் சித்தாமூர் அருகே உள்ள விளம்பூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர் பா.ஜ னதா கட்சியில் செங்கல்பட்டு தெற்கு மாவட்டத்தின் ஓ.பி.சி அணியின் தலைவராக இருந்தார். அவருக்கு கள்ளச்சாராயம் விற்ற கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி? மெத்தனால் எப்படி கிடைக்கிறது? எங்கிருந்து கடத்தி வரப்படுகிறது? சாராயம் தயார் செய்யப்பட்டதும் எந்தெந்த பகுதியில் விற்கப்படுகிறது. இதன் பின்னணியில் உள்ள நபர்கள் யார்?யார்? என்ற விபரங்களை சேகரித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே கள்ளச்சாராயம் விற்றது தொடர்பாக மேலும் கருக்கந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த அமாவாசை, பனையூரை சேர்ந்த ராஜேஷ், ஓதியூரைச் சேர்ந்த வேலு, சந்துரு ஆகிய 4 பேரும் சிக்கி உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் கைதான பா.ஜனதா நிர்வாகி விஜயகுமார் உள்பட 5 பேரையும் சித்தாமூர் போலீசார் செய்யூர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்களை சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது 6 பரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    கைதான கள்ளச்சாராய வியாபாரிகளிடம் இருந்து 135 லிட்டர் மெத்தனால் கலந்த கள்ளசாராயம், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் சாராயம் விற்பவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷசாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்து உள்ளது.
    • விஷசாராயம் விற்றதாக அமாவாசை என்பவரை ஏற்கனவே போலீசார் கைது செய்து இருந்தனர்.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அருகே உள்ள சித்தாமூர் அடுத்த பெருங்கரணை, இருளர் பகுதியை சேர்ந்த சின்ன தம்பி (வயது 30), அவரது மாமியார் வசந்தா ஆகியோர் விஷசாராயம் குடித்து பலியானார்.

    அவர்களுடன் விஷ சாராயம் குடித்த சின்னத் தம்பியின் மனைவி அஞ்சலி (22)செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    இதேபோல் விஷசாராயம் குடித்ததில் சித்தாமூர் அடுத்த பேரம்பாக்கம் பகுதியை சேர்ந்த வென்னியம்பன் (65) , அவரது மனைவி சந்திரா (55) பெருங்கருணை கிராமத்தைச் சேர்ந்த முத்து (55) ஆகியோரும் அடுத்தடுத்து இறந்தனர்.

    இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷசாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்து உள்ளது.

    மேலும் விஷசாராயம் குடித்ததில் உடல் நிலை பாதிக்கப்பட்ட 5 பேர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விவகாரம் தொடர்பாக விஷசாராயம் விற்றதாக அமாவாசை என்பவரை ஏற்கனவே போலீசார் கைது செய்து இருந்தனர். அவரிடம் விசாரணை நடந்து வந்தது. அவர் செய்யூர் அருகே உள்ள ஊதியூர் கிராமத்தைச் சேர்ந்த வேலு என்பவரிடம் இருந்து சாராயத்தை வாங்கியதாக தெரிவித்தார்.

    இதையடுத்து விஷ சாராயம் விற்றதாக வேலுவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    இதற்கிடையே விஷ சாராயத்தை விற்ற அமாவாசையும் குடித்து இருந்தார். இதில் அவரது உடல் நிலையும் சற்று பாதிக்கப்பட்டு உள்ளது. நேற்று மாலை அவரையும் போலீசார் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து உள்ளனர்.

    இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் சாராய வேட்டை நடந்து வருகிறது. விஷசாராயத்தை மேலும் வேறுயாராவது குடித்து இருந்தால் அவர்களையும் சிகிச்சைக்கு அனுப்ப விசாரித்து வருகின்றனர்.

    கள்ளச்சந்தையில் மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் குறித்த விபரங்களையும் சேகரித்து வருகிறார்கள். இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு உள்ளார். எனவே செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பை காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சதாகர் கூடுதலாக கவனிப்பார் என்று அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சரவணன் வேலைக்கு சென்று விட்டு அளவுக்கு அதிகமாக சாராயம் குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
    • கிளியனூர் மற்றும் வானூர் பகுதியில் கள்ளச்சாராயம் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது.

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே கோவடி பஜன கோவில் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 60) கூலித்தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.

    இந்நிலையில் நேற்று சரவணன் வேலைக்கு சென்று விட்டு அளவுக்கு அதிகமாக சாராயம் குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது நிலை தடுமாறி மயங்கி கீழே விழுந்தார். உடனே வீட்டில் இருந்தவர்கள் சரவணனை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சரவணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். மேலும் சரவணனின் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மற்றொரு சம்பவம்...

    இதேபோல் மொளச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் விநாயகம் (38) கூலி தொழிலாளி. இவரும் நேற்று அளவுக்கு அதிகமாக சாராயம் குடித்துவிட்டு வீட்டிற்கு சென்று மயங்கி கீழே விழுந்தார். உடனே வீட்டில் இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த இரண்டு சம்பவங்களை குறித்து தகவல் அறிந்த கிளியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    பஜன கோவிலை சேர்ந்த சரவணன் இறந்ததை தொடர்ந்தும், அவரது உறவினர்கள் இன்று காலை புதுவையில் இருந்து திண்டிவனம் செல்லும் நான்கு வழி சாலையில் கோவடி மெயின் ரோட்டில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    கிளியனூர் மற்றும் வானூர் பகுதியில் கள்ளச்சாராயம் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. சாராயம் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த சாலை மறியல் நடைபெற்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை அறிந்த கிளியனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டு வந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் சாலைமறியலை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வந்தது.

    • சாராயம் காய்ச்சிய ஊறல்களை அழித்தனர்.
    • மாவட்டம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

    திருவாரூர்:

    செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து பலர் பலியான நிலையில், தமிழகம் முழுவதும் சட்டவிரோத சாராய விற்பனை குறித்து போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.

    அந்த வகையில், திருவாரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்பவர்கள், வெளி மாநில சாராயம், வெளி மாநில மது பாட்டில்கள் விற்பனை செய்பவர்கள் குறித்து அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

    இதில் திருவாரூர் மாவட்டம் வடுவூர் வீரமணி (35), சிவக்குமார் (38) ஆகிய இருவரும் வயலில் ஊறல் வைத்து சாராயம் காய்ச்சுவது தெரியவந்தது.

    உடனடியாக இருவரையும் கைது செய்த போலீசார் சாராயம் காய்ச்சிய ஊறல்களை அழித்தனர்.

    தொடர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில் வலங்கைமான் வரதராஜன், பெரும்படுகை சிங்காரவேல், வடபாதிமங்கலம் முருகானந்தம், நன்னிலம் ஜெயபரணி, சேது பாண்டியன் உட்பட மாவட்ட முழுவதும் 44 பேரை கைது செய்தனர்.

    தொடர்ந்து மாவட்ட முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

    சாராயம் காய்ச்சி விற்பனை செய்தல் மற்றும் வெளிமாநில மது பாட்டில்களை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்

    ×