search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலை சிற்றுண்டி திட்டம்"

    • 53 வழி தடங்களில் புதிதாக வாங்கப்பட்டுள்ள வாகனங்கள் மூலம் பள்ளிகளுக்கு காலை 8 மணிக்கு முன்னதாக உணவு வினியோகிக்கப்படும்.
    • உணவு தயாரிக்கும் பணியில் அம்மா உணவக ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    சென்னை:

    முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. அரசு பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் ஏழை மாணவ-மாணவிகள் காலை உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வருவதை தவிர்க்கவும், பள்ளி இடைநிற்றலை தடுக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    தமிழகத்தில் மாநகராட்சி பகுதிகளில் மட்டுமே முதல் கட்டமாக தொடங்கப்பட்ட காலை சிற்றுண்டி திட்டம் தற்போது விரிவாக்கம் செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் இத்திட்டத்தை வருகிற 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரிவுப்படுத்தும் வகையில் தொடங்கி வைக்கிறார்.

    சென்னையில் இத்திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது. தற்போது 38 மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளில் 5220 குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது.

    விரிவாக்கம் செய்வதன் மூலம் மொத்தம் 358 பள்ளிகளில் 65,030 மாணவ-மாணவிகள் பயன் அடைய உள்ளனர். சென்னை மாநகராட்சியுடன் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் செயல்பட்ட பள்ளிகள் இணைக்கப்பட்டதை தொடர்ந்து பயன்பெறுவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

    15 மண்டலங்களில் உள்ள மாநகராட்சி பள்ளிகளுக்கு காலை உணவை தயாரித்து குறிப்பிட்ட நேரத்திற்குள் கொண்டு செல்லும் வகையில் 35 இடங்களில் சமையல் கூடம் அமைக்கப்பட்டு தயாராக உள்ளது. 53 வழி தடங்களில் புதிதாக வாங்கப்பட்டுள்ள வாகனங்கள் மூலம் பள்ளிகளுக்கு காலை 8 மணிக்கு முன்னதாக உணவு வினியோகிக்கப்படும்.

    உணவு தயாரிக்கும் பணியில் அம்மா உணவக ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    முதலமைச்சர் காலை உணவு விரிவாக்க திட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை முதல் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி சுகாதாரமான முறையில் தயாரித்து வழங்க சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சமையல் கூடமும் பயன் அடையும் பள்ளிகளை மையமாக வைத்து நிறுவப்பட்டுள்ளது.

    செவ்வாய், வியாழக்கிழமைகளில் வினியோகிக்கப்படும் கிச்சடியுடன் இனி சாம்பார் சேர்த்து வழங்கப்படும். வெள்ளிக்கிழமையில் இதுவரையில் இனிப்பு வழங்கப்பட்டது. அவை நிறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் 60 ஆயிரம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆலோசனை கூட்டத்திற்கு நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் சிற்றுண்டி திட்டத்தின் கீழ் எவ்வாறு உணவு தயாரிக்க வேண்டும்? என்பது உள்ளிட்ட ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் நகராட்சியில் உள்ள நகராட்சி பள்ளிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில் அந்தத் திட்டப் பணியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார். நகராட்சி மேற்பார்வையாளர் கோமதிநாயகம் முன்னிலை வகித்தார். இதில் காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் எவ்வாறு உணவு தயாரிக்க வேண்டும்?. உணவு விநியோகம் செய்வது, குறிப்பிட்ட கால அளவில் உணவை பள்ளி மாணவர்களுக்கு அனுப்புவது குறித்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் காலை சிற்றுண்டி திட்டப் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • திண்டுக்கல் மாநகராட்சி தொடக்க பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட காலை சிற்றுண்டி திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
    • பள்ளியில் கழிப்பிடம் மற்றும் குடிநீர் வசதிகள் எவ்வாறு உள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

    திண்டுக்கல்:

    தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் அரசுமுறை பயணமாக திண்டுக்கல் வருகை தந்தார்.

    இன்று காலை திண்டுக்கல் மாநகராட்சி தொடக்க பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட காலை சிற்றுண்டி திட்டத்தை ஆய்வு செய்தார்.

    குழந்தைகளுக்கு தானே உணவு வழங்கி அந்த உணவின் தரத்தையும் ஆய்வு செய்தனர். குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட உணவை சாப்பிட்டு விட்டு தினமும் நல்ல உணவு வழங்கப்படுகிறதா? என குழந்தைகளிடம் கேட்டார். அதற்கு குழந்தைகள் நன்றாக உணவு தயாரித்து குறிப்பிட்ட நேரத்துக்குள் பள்ளி வந்தவுடன் கிடைக்கிறது என்று தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர். பின்னர் அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

    பின்னர் பள்ளியில் கழிப்பிடம் மற்றும் குடிநீர் வசதிகள் எவ்வாறு உள்ளது என ஆய்வு மேற்கொண்டார். குழந்தைகளுக்கு சுகாதாரமான முறையில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினர்.

    அதன்பின் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்ட வீரர், வீராங்கனைகளுடன் கலந்துரையாடி என்னென்ன வசதிகள் தேவை என்பதை கேட்டறிந்தார். அதனை உடனடியாக நிறைவேற்றி தர நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார். அதன்பின் திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் தி.மு.க. கட்சி கொடி ஏற்றி வைத்து இளைஞர் அணி உறுப்பினர்கள் சேர்க்கைக்கான அடையாள அட்டைகள், நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    அதனைத் தொடர்ந்து வாலிபால் மைனதானத்தின் கேலரிக்கான அடிக்கல்லை நட்டு வைத்தார். பின்னர் வேடசந்தூரில் நடந்த தி.மு.க. கொடியேற்று விழாவில் பங்கேற்றார். பிற்பகலில் இடைய கோட்டையில் கின்னஸ் சாதனை நிகழ்ச்சியாக 117 ஏக்கரில் 6 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழாவில் பங்கேற்கிறார்.

    இன்று மாலையில் திண்டுக்கல்லில் நடக்கும் நிகழ்ச்சியில் தி.மு.க. மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்குகிறார். அதனைத் தொடர்ந்து சிறுமலை பிரிவு, சாணார்பட்டி, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் தி.மு.க. கட்சி கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்குகிறார்.

    முன்னதாக திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையான கொடைரோடு சுங்கச்சாவடி பகுதியில் அமைச்சர்கள் இ.பெரி யசாமி, அர.சக்கரபாணி தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் செந்தில்குமார், காந்திராஜன், மேயர் இளமதி உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • மதுரையில் 15-ந் தேதி முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம் தொடங்கப்பட்டது.
    • தேனி மாவட்டத்தில் 2633 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்

    தேனி:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் 15-ந் தேதி முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

    அதனைத் தொடர்ந்து நேற்று தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் கடமலை-மயிலை ஊராட்சி ஒன்றியம், ஆத்தாங்கரைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட இராஜேந்திரா நகர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் காலை உணவுத் திட்டத்தினை மாணவ- மாணவிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்து அவர்களுடன் உணவு அருந்தினார்.

    அப்போது கலெக்டர் தெரிவித்ததாவது:-

    சத்துணவுத் திட்டம் குழந்தைகளைத் தவறாமல் பள்ளிக்குச் செல்லத் தூண்டுவது மட்டுமல்லாமல் வகுப்பறையில் பசியின்றிப் படிக்கவும் உதவுகிறது. மேலும், குழந்தைகளின் ஆரோக்கியத்தினை உறுதிப்படுத்தி, கற்றல் ஆர்வத்தினை அதிக்கப்படுத்துகிறது. ஒவ்வொரு நாளும் சத்தாண உணவினை வழங்குவது குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாட்டினை நிவர்த்தி செய்து அதன் மூலம் மனித வளர்ச்சியை மேம்படுத்திடும் வகையில் சத்துணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதனைத் தொடர்ந்து "கல்வி என்பது ஒருவருடைய மனதினைத்திறவுகோல், ஊட்டச்சத்துடன் கூடிய கல்வி என்பது குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அடித்தளமாகிறது" என்பதனை கருத்தில் கொண்டு அரசுப்பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-வகுப்பு வரை பயிலுகின்ற ஏழை மாணவ-மாணவிகளின் கல்வியினை ஊக்கப்படுத்திடவும் ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கிடவும் கற்றல் இடைநிற்றலைத் தவிர்த்திடும் பொருட்டு, முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் புரட்சிகரமான திட்டமாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    அதனடிப்படையில் தேனி மாவட்டத்திற்குட்பட்ட க.மயிலாடும்பாறை வட்டாரத்தில் செயல்பட்டு வரும் 51 அரசு ஆரம்பப்பள்ளிகளில் பயிலுகின்ற 1,342 மாணவர்களுக்கும், 1,291 மாணவிகளுக்கும் என மொத்தம் 2,633 மாணவ-மாணவியகளுக்கு வழங்கப்படவுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, திங்கள் கிழமை ரவா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார், செவ்வாய் கிழமை சேமியா காய்கறி கிச்சடி மற்றும் சாம்பார், புதன் கிழமை வெண்பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார், வியாழக்கிழமை அரிசி உப்புமா மற்றும் காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமை கோதுமை ரவா கிச்சடி சாம்பார் மற்றும் ரவா கேசரி வழங்கப்படவுள்ளது. இதுபோன்று அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை கொண்டு, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை நல்லமுறையில் கல்வி கற்கச் செய்திட வேண்டும் என தெரிவித்தார்.

    • திண்டுக்கல் சவுராஷ்டிராபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் இத்திட்டத்தை அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
    • திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட 14 பள்ளிகளில் 1165 மாணவ-மாணவிகளுக்கு உணவு வழங்கப்படுகிறது.

    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இதனைதொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் காலை சிற்றுண்டி திட்டம் இன்று தொடங்கியது.

    திண்டுக்கல் சவுராஷ்டிராபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் இத்திட்டத்தை அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் காந்திராஜன் எம்.எல்.ஏ, மேயர் இளமதி, துைணமேயர் ராஜப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கேசரி மற்றும் ரவா உப்புமா பரிமாறப்பட்டது. திண்டுக்கல், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள 48 அரசு பள்ளிகளில் இன்றுமுதல் 2328 மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட 14 பள்ளிகளில் 1165 மாணவ-மாணவிகளுக்கு உணவு வழங்கப்படுகிறது.

    மாநகராட்சிக்குட்பட்ட 14 பள்ளிகளுக்கும் திண்டுக்கல் நேருஜி நினைவு நகரவை பள்ளியில் அதிகாலையிலேயே உணவு தயாரிக்கப்படுகிறது. இங்கிருந்து 14 பள்ளிகளுக்கும் உணவு வேன்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. தயார் செய்த உணவு சுவையாக உள்ளதா என்பதை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சுவைத்து பார்த்தபின்பு மாணவர்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி உணவின் தரம் குறித்து அறிந்தபிறகே மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

    இத்திட்டம் குறித்து திண்டுக்கல் நாகல்நகரை சேர்ந்த ஸ்ரீலதா என்பவர் தெரிவிக்கையில், எனது மகள் சாந்தனாஸ்ரீ இப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். தினந்தோறும் சாதம் அல்லது உணவு மட்டுமே குழந்தைகளுக்கு வழங்கும் நிலை இருந்தது. தற்போது காலை சிற்றுண்டி மூலம் 6 நாட்களுக்கும் வெவ்வேறு உணவுகள் வழங்கப்படுவது குழந்தைகள் விரும்பி உண்ணும் வகையில் இருக்கும்.

    மேலும் பள்ளிக்கு செல்லும் அவசரத்தில் அரைகுறையாக சாப்பிட்டு குழந்தைகளை அனுப்பும் நிலை இருந்தது. இதனால் குழந்தைகளின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டு வந்தது. தற்போது அதுபோன்ற நிலை ஏற்படாமல் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்து வருகின்றனர். இத்திட்டம் மிகவும் வரவேற்பு பெரும் திட்டமாக உள்ளது என்றார்.

    இதேபோல கணேஷ் என்பவர் தெரிவிக்கையில், எனது மகன் பவனேஷ் இப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறான். தினந்தோறும் காலை உணவு குழந்தைகளுக்கு தயாரித்து கொடுப்பது என்பது பெண்களுக்கு மிகவும் சவாலான விசயமாக இருக்கும். குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள் கணவருக்கும், குழந்தைகளுக்கும் உணவு தயாரித்து கொடுத்துவிட்டு அதன்பின்னர் தங்களுக்கு தேவையான உணவை எடுத்துக்கொண்டு வேலைக்கு செல்வது என்பது பெரிய சவாலாக இருந்து வந்தது. தற்போது பெண்களுக்கு காலையில் ஏற்படும் அந்த பணிச்சுமை குறைக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தை மற்ற பள்ளிகளுக்கும் தொடங்கி நடைமுறைப்படுத்த வேண்டும். இதன்மூலம் ஆரோக்கியமான குழந்தைகள் சமுதாயம் உருவாகும் என்றார்.

    • 1,543 அரசு துவக்கப்பள்ளிகளில் படிக்கும் 1.15 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.
    • பிரத்யேகமாக கண்காணிப்பு குழு அமைக்கப்படுகிறது.

    குண்டடம்:

    பள்ளி குழந்தைகளுக்கு மதியம் பள்ளியில் சத்துணவு வழங்கப்படுகிறது. ஏழை குழந்தைகள் பலர் காலையில் உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வருகின்றனர் என்ற குறைபாடு உள்ளது. இதனை போக்கும் வகையில், துவக்கப்பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் அமலுக்கு வர உள்ளது.முதல்கட்டமாக 1,543 அரசு துவக்கப்பள்ளிகளில் படிக்கும் 1.15 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.

    திருப்பூர் மாவட்டத்தில், குண்டடம் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகள் இதற்கு தேர்வாகியுள்ளன. சிற்றுண்டி, காலை 8:15 மணிக்கு முன்னரே, தயாரிக்கப்பட வேண்டும்.இத்திட்டத்துக்கு மாவட்ட வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பள்ளிகள், சமையல் செய்து அனுப்புவதற்கான கூடங்கள், கிழமைதோறும் என்னென்ன உணவுகள் தயாரிக்க வேண்டுமென்ற பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.பட்டியலில் உள்ள உணவுகளில், மாணவர்கள் விரும்பும் உணவு வகைகளை, பள்ளி மேலாண்மை குழுவினரின் பரிந்துரையின் பேரில் தேர்வு செய்து, சமைத்து தர வேண்டும். இதற்காக பிரத்யேகமாக கண்காணிப்பு குழு அமைக்கப்படுகிறது.

    கிராமப்புறங்களை சேர்ந்த பள்ளிகளுக்கு ஊராட்சி தலைவர் கண்காணிப்பு குழு தலைவராகவும், பள்ளி தலைமையாசிரியர் ஒருங்கிணைப்பாளராகவும், பள்ளி மேலாண்மை குழு தலைவர், உறுப்பினர் ஆகியோர் உறுப்பினர்களாகவும் இருக்க வேண்டும்.நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளுக்கு கண்காணிப்பு குழு தலைவராக ஆணையரால் நியமிக்கப்பட்ட அலுவலரும், தலைமையாசிரியர் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவர். திட்டம் குறித்து பெற்றோர்களுக்கு எடுத்துரைப்பதோடு அதன் தரம் குறித்து, கண்காணிப்பு குழு ஆய்வு செய்ய வேண்டும். இதுதொடர்பான கூட்டம் அந்தந்த பள்ளிகளில் நடத்தப்படுகிறது.

    • கொடைக்கானலில் காலை சிற்றுண்டி திட்டம் குறித்து சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்தனர்.
    • மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிக ளிலும் வருகிற 16-ந் தேதி முதல் காலை சிற்றுண்டி வழங்கு வதற்கான ஏற்பாடு கள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன.

    கொடைக்கானல்:

    தமிழகம் முழுவதும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் இடைநின்றலை தவிர்க்கும் வகையில் அவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை வருகிற 15-ந் தேதி மதுரையில் நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    அதனைத் தொடர்ந்து 16-ந் தேதி மற்ற மாவட்ட ங்களில் அமைச்சர்கள், கலெக்டர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்று இந்த திட்டத்தை தொடங்கி வைக்கின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலும் காலை சிற்றுண்டி வழங்கு வதற்கான பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடர்ந்து நடந்து வந்தது.

    சிற்றுண்டி தயாரிக்கும் சமையலர்கள் எந்தவகை யான உணவு தயார் செய்ய வேண்டும் என்பது குறித்த வழிகாட்டு கையேடுகள் வழங்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டன. கொடைக்கானல் ஊராட்சி தொடக்கப்பள்ளிகளில் சுகாதாரத்துறையினர் சிற்றுண்டி தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் சரியான அளவில் உள்ளதா? என்றும் அவற்றின் தரம் குறித்தும் ஆய்வு செய்தனர்.

    வில்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் சுகாதாரத்துறை அலு வலர் லாரன்ஸ் தலைமை யிலான அலுவல ர்கள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இதே போல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிக ளிலும் வருகிற 16-ந் தேதி முதல் காலை சிற்றுண்டி வழங்கு வதற்கான ஏற்பாடு கள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன.

    • காலை சிற்றுண்டி திட்டம், முதல் கட்டமாக, 1,545 அரசு தொடக்க பள்ளிகளில் படிக்கும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவர்களுக்கு வருகிற 15-ந்தேதி முதல் வழங்கப்பட உள்ளது.
    • முன்னோடி பயிற்சியாளர்களுக்கு சுவையான மற்றும் ஊட்டச்சத்து மிகுந்த சிற்றுண்டி தயாரிப்பது குறித்து பிரபல சமையல்கலை நிபுணர் தாமு என்கிற தாமோதரன் பயிற்சி அளித்தார்.

    சென்னை:

    மாணவர்கள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்தல், மாணவர்களின் வருகையை அதிகரித்தல், ஊட்டச்சத்தை உயர்த்துதல், வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் போன்ற குறிக்கோள்களை அடிப்படையாக கொண்டு அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை நேரத்தில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம், முதல் கட்டமாக, 1,545 அரசு தொடக்க பள்ளிகளில் படிக்கும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவர்களுக்கு வருகிற 15-ந்தேதி முதல் வழங்கப்பட உள்ளது.

    இதையடுத்து சத்தான சிற்றுண்டிகளை தயாரிப்பதற்கான பயிற்சியும் தொடங்கியுள்ளது. சென்னையை அடுத்த மறைமலைநகரில், முன்னோடி பயிற்சியாளர்களுக்கு சுவையான மற்றும் ஊட்டச்சத்து மிகுந்த சிற்றுண்டி தயாரிப்பது குறித்து பிரபல சமையல்கலை நிபுணர் தாமு என்கிற தாமோதரன் பயிற்சி அளித்தார்.

    இதில், தமிழகம் முழுவதிலும் இருந்து முன்னோடி பயிற்சியாளர்கள் 51 பேர் கலந்துகொண்டனர். அவர்களுக்கு, ரவா பொங்கல், வெண் பொங்கல், கோதுமை ரவா கிச்சடி, அரிசி உப்புமா, சோள ரவா கிச்சடி, சோள ரவா உப்புமா, ரவா கிச்சடி, ரவா உப்புமா, சேமியா கிச்சடி, சேமியா உப்புமா, ரவா கேசரி, சேமியா கேசரி உள்பட 14 வகையான உணவு வகைகள் தயாரிப்பது பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.

    பயிற்சி பெற்ற 51 முன்னோடி பயிற்சியாளர்களும் அவர்களுக்குரிய மாவட்டங்களுக்கு சென்று பிற சமையல் நிபுணர்களுக்கு, பயிற்சி அளிக்க உள்ளனர்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் சுய உதவி குழுக்களை சேர்ந்த 2 அல்லது 3 சமையல் நிபுணர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு உணவு தயாரிப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • முதற்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
    • 1,545 பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

    இதில் முதல்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    அதன்படி, அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை வரும் செப்டம்பர் 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    முதற்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த 1,545 பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை சிற்றுண்டி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை மாநகராட்சியில் 36 பள்ளிகளில் 5941 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது.

    14 மாநகராட்சிகளில் 318 பள்ளிகளில் 37,740 மாணவ, மாணவியர்களுக்கும், 23 நகராட்சிகளில் 163 பள்ளிகளில் 17,427 மாணவ, மாணவியர்களுக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • காலை 6.30 மணிக்கு பள்ளிக்கு வரும் சமையல் பணியாளர்கள் 4 பேர் உணவு தயாரிப்பு பணிகளை நாள்தோறும் காலை 8.45 மணிக்குள் முடித்து விடுகின்றனர்.
    • ஒரு மாதத்துக்கான வேலைநாட்களின் எண்ணிக்கைக்கேற்ப தன்னார்வலர்களிடம் சமையல் பொருட்களை வழங்குகிறோம்.

    வெள்ளக்கோவில்:

    தமிழக அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை அறிவித்துள்ளது. முதல்கட்டமாக 1,545 தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளதாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இந்தநிலையில் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே சிலம்பக்கவுண்டன்வலசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் நடைமுறை கடந்த ஆண்டு காமராஜர் பிறந்தநாளன்றே தொடங்கப்பட்டு விட்டது. கொரோனா கட்டுப்பாடு தளர்வுக்குப் பிறகு, பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் இந்த பள்ளியில் காலை உணவு வழங்கும் நடைமுறை தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதுதொடர்பாக பள்ளி ஆசிரியர்கள் கூறும்போது, குழந்தைகள் நாள்தோறும் காலையில் சாப்பிடாமல் பள்ளிக்கு வருவதால் பாடங்களை போதிய அளவில் கவனிக்க முடியாத நிலை இருந்தது. பாடம், விளையாட்டு உட்பட பள்ளி செயல்பாடுகளில் போதிய விருப்பமின்றி இருப்பதைக் கண்டறிந்து, கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை 15-ந்தேதி காமராஜர் பிறந்த நாளன்று காலை உணவுத் திட்டத்தை தொடங்கினோம். இன்றைக்கு பெற்றோர் மத்தியிலும், சக அரசுப் பள்ளிகளின் மத்தியிலும் இந்த திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்றனர்.

    சிலம்பகவுண்டன்வலசு அரசு தொடக்கப்பள்ளி ஈராசிரியர் பள்ளி. மொத்த மாணவர் எண்ணிக்கை 16 பேர் தான். ஊரின் மக்கள் தொகையும் மிக சொற்ப அளவிலேயே உள்ளது. மேலும் செங்காளிபாளையம், காங்கயம்பாளையம், கண்ணபுரம் என 3 தொடக்கப்பள்ளிகள் அடுத்தடுத்த கிராமங்களில் இருப்பதால் மாணவர்களின் எண்ணிக்கை உயரவில்லை என்கின்றனர் கிராம மக்கள்.

    காலை 6.30 மணிக்கு பள்ளிக்கு வரும் சமையல் பணியாளர்கள் 4 பேர் உணவு தயாரிப்பு பணிகளை நாள்தோறும் காலை 8.45 மணிக்குள் முடித்து விடுகின்றனர். தொடர்ந்து குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுகிறது. இட்லி, சப்பாத்தி, தோசை, பூரி, காளான் கிரேவி, குருமா உள்ளிட்டவை காலை சிற்றுண்டியாக குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த பள்ளியில் படித்து உயர்கல்விக்காக ஓலப்பாளையம் உயர்நிலைப்பள்ளிக்கு சென்று வரும் ஏழை குழந்தைகளும் இங்கு வந்து சாப்பிட்டு பயனடைந்து செல்கின்றனர். மதியம் 3 மணிக்கு நாள்தோறும் கீரை, பால், சுண்டல் இவற்றில் ஏதேனும் ஒன்றை வழங்குகிறார்கள்.

    இதுதொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரபாகர் கூறும்போது, 12 ஆண்டுகளுக்கு முன் பள்ளியில் சேர்ந்தபோது, மாணவர்களின் எண்ணிக்கை 6 ஆக இருந்தது. தொடர்ந்து 20 பேருக்குள் மட்டுமே மாணவர் எண்ணிக்கை இருந்தது.

    இதனால் மதிய உணவுத் திட்டத்துக்காக வழங்கப்படும் கியாஸ் சிலிண்டர் கிடைக்கவில்லை. மிகவும் சிரமப்பட்டு ஊரில் உள்ள தன்னார்வலர்கள் உதவியுடன், பள்ளிக் குழந்தைகள் தொடர்ந்து பசியின்றி இருக்க வேண்டும் என்ற கனவோடு ரூ.35 ஆயிரம் மதிப்பில் நிதி திரட்டப்பட்டு சமையல் பாத்திரங்கள் வாங்கப்பட்டன. தன்னார்வலர்கள் மற்றும் ஊர் மக்களின் முழு ஒத்துழைப்பும் தான் இத்திட்டம் வெற்றி பெற முக்கியக் காரணம்.

    அதேபோல் காலை உணவுத் திட்டத்துக்காக யாரிடமும் பணம் பெறுவதில்லை. ஒரு மாதத்துக்கான வேலைநாட்களின் எண்ணிக்கைக்கேற்ப தன்னார்வலர்களிடம் சமையல் பொருட்களை வழங்குகிறோம்.

    கொரோனாவுக்கு பின், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட கடந்த ஆண்டு நவம்பர் 11-ந் தேதி தொடங்கி, கடந்த 8 மாதங்களாக தொடர்ந்து காலை உணவை அனைத்து வேலை நாட்களிலும் வழங்குகிறோம். எங்கள் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைவுதான். ஆனால் ஒருவேளை உணவின்றி பள்ளிக்கு வரக்கூடாது என்பதற்காக தொடர்ந்து தொய்வின்றி இந்த திட்டத்தை நடத்தி வருகிறோம். பள்ளி மேலாண்மைக்குழுவும், பெற்றோரும் ஒத்துழைப்பு அளிப்பதால் காலை உணவுத்திட்டம் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது என்றார்.

    • தமிழக அரசின் காலை சிற்றுண்டி நடவடிக்கை ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • காலை சிற்றுண்டி திட்டத்தை எல்லா கட்சிகளும் வரவேற்று இருப்பது தி.மு.க. மூத்த தலைவர்களிடம் மிகுந்த திருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

    கள்ளக்குறிச்சி அருகே மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் தமிழக அரசு மீது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக தமிழக உளவுப்பிரிவு மீது பல விதமான விமர்சனங்கள் எழுந்தன. மேலும் உரிய அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்ற ஆதங்கமும் மக்கள் மத்தியில் பொது இடங்களில் விவாதப்பொருளாக இருந்தது.

    தமிழக மக்களின் இந்த மனநிலையை உளவுத்துறை தகவல்கள் மூலம் தமிழக அரசு துல்லியமாக தெரிந்து கொண்டது. மக்களிடம் நிலவும் மனக்குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டுமானால், மக்களின் மனம் குளிரும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது.

    அப்போது 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் கையில் எடுக்கப்பட்டது. சுமார் 34 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து இந்த திட்டத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பச்சைக்கொடி காட்டினார். சமீபத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டது.

    தமிழக அரசின் இந்த நடவடிக்கை ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெரும்பாலான பள்ளி மாணவர்கள் காலை உணவு சாப்பிடாமலேயே பள்ளிக்கு வரும் நிலையில், இனி தங்கள் குழந்தைகள் காலையிலும் பள்ளிக்கூடத்தில் வயிறார சாப்பிடுவார்கள் என்று பெண்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.

    காலை சிற்றுண்டி திட்டத்தை எல்லா கட்சிகளும் வரவேற்று இருப்பது தி.மு.க. மூத்த தலைவர்களிடம் மிகுந்த திருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட கறையை காலை சிற்றுண்டி மூலம் சரி செய்து விட்டதாக கருதுகிறார்கள். இந்த திட்டத்தை மிகச் சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறாராம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 1545 அரசு பள்ளிகளில் படிக்கும் 1,14,095 குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • சென்னை மாநகராட்சி பகுதியில் 36 பள்ளிகளில் 5941 மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்க பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்துக்கு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    அதில் 1545 அரசு பள்ளிகளில் படிக்கும் 1,14,095 குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செயல்படுத்த அனுமதி அளித்துள்ளனர்.

    இந்த திட்டத்துக்கு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் என்று பெயரிடப்பட்டு உள்ளது.

    இதில் சென்னை மாநகராட்சி பகுதியில் 36 பள்ளிகளில் 5941 மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்க பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.

    இதே போல் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிகளின் எண்ணிக்கையும் பட்டியலிடப்பட்டு உள்ளது.

    ரவா உப்புமா, சேமியா உப்புமா, அரிசி உப்புமா, கோதுமை ரவா உப்புமா இவற்றில் ஏதாவது ஒன்று.

    ரவா காய்கறி கிச்சடி, சேமியா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா காய்கறி கிச்சடி

    ரவா பொங்கல், வெண் பொங்கல், காய்கறி சாம்பார்

    சேமியா உப்புமா, அரிசி உப்புமா, ரவா உப்புமா, கோதுமை ரவா உப்புமா, காய்கறி சாம்பார்

    ஏதாவது ஒரு கிச்சடி வகையுடன் ரவா கேசரி, சேமியா கேசரி, வாரத்தில் 2 நாட்கள் உள்ளூரில் கிடைக்கும் சிறு தானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவை வழங்கவும் அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×