search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Breakfast for school student scheme"

    • திண்டுக்கல் சவுராஷ்டிராபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் இத்திட்டத்தை அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
    • திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட 14 பள்ளிகளில் 1165 மாணவ-மாணவிகளுக்கு உணவு வழங்கப்படுகிறது.

    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இதனைதொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் காலை சிற்றுண்டி திட்டம் இன்று தொடங்கியது.

    திண்டுக்கல் சவுராஷ்டிராபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் இத்திட்டத்தை அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் காந்திராஜன் எம்.எல்.ஏ, மேயர் இளமதி, துைணமேயர் ராஜப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கேசரி மற்றும் ரவா உப்புமா பரிமாறப்பட்டது. திண்டுக்கல், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள 48 அரசு பள்ளிகளில் இன்றுமுதல் 2328 மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட 14 பள்ளிகளில் 1165 மாணவ-மாணவிகளுக்கு உணவு வழங்கப்படுகிறது.

    மாநகராட்சிக்குட்பட்ட 14 பள்ளிகளுக்கும் திண்டுக்கல் நேருஜி நினைவு நகரவை பள்ளியில் அதிகாலையிலேயே உணவு தயாரிக்கப்படுகிறது. இங்கிருந்து 14 பள்ளிகளுக்கும் உணவு வேன்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. தயார் செய்த உணவு சுவையாக உள்ளதா என்பதை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சுவைத்து பார்த்தபின்பு மாணவர்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி உணவின் தரம் குறித்து அறிந்தபிறகே மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

    இத்திட்டம் குறித்து திண்டுக்கல் நாகல்நகரை சேர்ந்த ஸ்ரீலதா என்பவர் தெரிவிக்கையில், எனது மகள் சாந்தனாஸ்ரீ இப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். தினந்தோறும் சாதம் அல்லது உணவு மட்டுமே குழந்தைகளுக்கு வழங்கும் நிலை இருந்தது. தற்போது காலை சிற்றுண்டி மூலம் 6 நாட்களுக்கும் வெவ்வேறு உணவுகள் வழங்கப்படுவது குழந்தைகள் விரும்பி உண்ணும் வகையில் இருக்கும்.

    மேலும் பள்ளிக்கு செல்லும் அவசரத்தில் அரைகுறையாக சாப்பிட்டு குழந்தைகளை அனுப்பும் நிலை இருந்தது. இதனால் குழந்தைகளின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டு வந்தது. தற்போது அதுபோன்ற நிலை ஏற்படாமல் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்து வருகின்றனர். இத்திட்டம் மிகவும் வரவேற்பு பெரும் திட்டமாக உள்ளது என்றார்.

    இதேபோல கணேஷ் என்பவர் தெரிவிக்கையில், எனது மகன் பவனேஷ் இப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறான். தினந்தோறும் காலை உணவு குழந்தைகளுக்கு தயாரித்து கொடுப்பது என்பது பெண்களுக்கு மிகவும் சவாலான விசயமாக இருக்கும். குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள் கணவருக்கும், குழந்தைகளுக்கும் உணவு தயாரித்து கொடுத்துவிட்டு அதன்பின்னர் தங்களுக்கு தேவையான உணவை எடுத்துக்கொண்டு வேலைக்கு செல்வது என்பது பெரிய சவாலாக இருந்து வந்தது. தற்போது பெண்களுக்கு காலையில் ஏற்படும் அந்த பணிச்சுமை குறைக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தை மற்ற பள்ளிகளுக்கும் தொடங்கி நடைமுறைப்படுத்த வேண்டும். இதன்மூலம் ஆரோக்கியமான குழந்தைகள் சமுதாயம் உருவாகும் என்றார்.

    ×