search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கள்ளக்குறிச்சி அதிருப்தியை சரி செய்த காலை சிற்றுண்டி திட்டம்
    X

    கள்ளக்குறிச்சி அதிருப்தியை சரி செய்த காலை சிற்றுண்டி திட்டம்

    • தமிழக அரசின் காலை சிற்றுண்டி நடவடிக்கை ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • காலை சிற்றுண்டி திட்டத்தை எல்லா கட்சிகளும் வரவேற்று இருப்பது தி.மு.க. மூத்த தலைவர்களிடம் மிகுந்த திருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

    கள்ளக்குறிச்சி அருகே மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் தமிழக அரசு மீது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக தமிழக உளவுப்பிரிவு மீது பல விதமான விமர்சனங்கள் எழுந்தன. மேலும் உரிய அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்ற ஆதங்கமும் மக்கள் மத்தியில் பொது இடங்களில் விவாதப்பொருளாக இருந்தது.

    தமிழக மக்களின் இந்த மனநிலையை உளவுத்துறை தகவல்கள் மூலம் தமிழக அரசு துல்லியமாக தெரிந்து கொண்டது. மக்களிடம் நிலவும் மனக்குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டுமானால், மக்களின் மனம் குளிரும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது.

    அப்போது 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் கையில் எடுக்கப்பட்டது. சுமார் 34 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து இந்த திட்டத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பச்சைக்கொடி காட்டினார். சமீபத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டது.

    தமிழக அரசின் இந்த நடவடிக்கை ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெரும்பாலான பள்ளி மாணவர்கள் காலை உணவு சாப்பிடாமலேயே பள்ளிக்கு வரும் நிலையில், இனி தங்கள் குழந்தைகள் காலையிலும் பள்ளிக்கூடத்தில் வயிறார சாப்பிடுவார்கள் என்று பெண்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.

    காலை சிற்றுண்டி திட்டத்தை எல்லா கட்சிகளும் வரவேற்று இருப்பது தி.மு.க. மூத்த தலைவர்களிடம் மிகுந்த திருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட கறையை காலை சிற்றுண்டி மூலம் சரி செய்து விட்டதாக கருதுகிறார்கள். இந்த திட்டத்தை மிகச் சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறாராம்.

    Next Story
    ×