search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காமன்வெல்த் போட்டி"

    • அன்னு ராணி 4வது வாய்ப்பில் 60 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து 3வது இடத்தை பிடித்தார்.
    • ஆஸ்திரேலியாவின் கெல்சி-லீ பார்பர், 64.43 மீட்டர் இலக்கை எட்டி தங்கம் வென்றார்.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இதில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது. இன்று குத்துச்சண்டை பிரிவில் 2 தங்கம், மும்முறை தாண்டுதல் போட்டியில் தங்கம், வெள்ளி என இந்திய வீரர்கள் பதக்கங்கள் வென்றனர்.

    இந்நிலையில், ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை அன்னு ராணி வெண்கலப் பதக்கம் வென்றார். 4வது வாய்ப்பில் அவர் தனது அதிகபட்ச தூரமான 60 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து 3வது இடத்தை பிடித்தார். இதன்மூலம் காமன்வெல்த் ஈட்டி எறிதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அன்னு ராணி பெற்றுள்ளார்.

    உலக சாம்பியன் கெல்சி-லீ பார்பர் (ஆஸ்திரேலியா), 64.43 மீட்டர் இலக்கை எட்டி தங்கம் வென்றார். அதே நாட்டின் மற்றொரு வீராங்கனை மெக்கென்சி லிட்டில் (64.27 மீ) வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    இதேபோல் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் வேகநடை போட்டியில் இந்திய வீரர் சந்தீப் குமார் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் இந்தியா 16 தங்கம், 12 வெள்ளி, 19 வெண்கலம் என 47 பதக்கங்களைப் பெற்று பதக்க பட்டியலில் ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறது.

    • காமன்வெல்த் பேட்மிண்டன் போட்டியில் இன்று இந்தியா 2 பதக்கத்தை உறுதி செய்துள்ளது.
    • பி.வி.சிந்து மற்றும் லக்‌ஷயா சென் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது.

    இன்று நடைபெற்ற பேட்மிண்டன் பெண்களுக்கான அரையிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சிங்கப்பூர் வீராங்கனையை 21-19, 21-17 என்ற கணக்கில் தோற்கடித்து இறுதிப்போடிக்கு முன்னேறினார்.

    இதேபோல், ஆண்களுக்கான அரையிறுதியில் இந்தியாவின் லக்‌ஷயா சென், சிங்கப்பூர் வீரரை 21-10, 18-21, 21-16 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இதையடுத்து, பேட்மிண்டன் பிரிவில் இரு பதக்கங்கள் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

    • காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் இன்று இந்தியா 2 தங்கப்பதக்கம் வென்றது.
    • இதன்மூலம் இந்தியா 15 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலம் என 43 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் நீத்து காங்காஸ் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இங்கிலாந்து வீராங்கனைக்கு எதிரான போட்டியில் நீத்து கங்காஸ் 5-0 என்ற கணக்கில் வென்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

    இதேபோல், ஆண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அமித் பங்கால் தங்கம் வென்று அசத்தினார். இதன்மூலம் இந்தியா 15 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலம் என 43 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    • காமன்வெல்த்தின் மகளிர் ஹாக்கி வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டம் நடைபெற்றது.
    • இதில் நியூசிலாந்தை ஷூட் அவுட் முறையில் 2-1 என இந்தியா வீழ்த்தி வெண்கலம் வென்றது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தியா இதுவரை 13 தங்கம், 11 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 40 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது.

    இந்நிலையில், மகளிருக்கான ஹாக்கியில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி - நியூசிலாந்து அணியை எதிர் கொண்டது. இதில் 1-1 என இரு அணிகளும் சமனிலை வகித்தன.

    இதையடுத்து, ஷூட் அவுட் முறை நடத்தப்பட்டது. இதில் 2 - 1 என்ற கணக்கில் இந்தியா வென்று, வெண்கலப் பதக்கத்தை உறுதிசெய்தது.

    இதன்மூலம் இந்தியா 13 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலம் என 41 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    • இறுதிச் சுற்றில் நைஜீரிய வீராங்கனை தோல்வி.
    • காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா 13 தங்கம் வென்றுள்ளது.

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 72 நாடுகள் பங்கேற்றுள்ளன.

    இதில் பாரா டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பவினா படேல், நைஜீரிய வீராங்கனை இஃபேச்சுக்வுடே இக்பியோ வை எதிர் கொண்டார். இப்போட்டியில் 5-3 என்ற கணக்கில் வெற்றி பெற்ற பவினா படேல் தங்கப்பதக்கம் வென்றார். 


    இதே பிரிவில் இந்திய வீராங்கனை சோனல்பென் படேல், இங்கிலாந்தின் சூ பெய்லியை 3-5 என்ற கணக்கில் தோற்கடித்து இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்தார்.

    காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஒற்றையர் பிரிவில் இது எனது முதல் பதக்கம் என்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் இந்தப் பதக்கத்தை எனது கணவர், குடும்பத்தினர், பயிற்சியாளர் மற்றும் அனைத்து நாட்டு மக்களுக்கும் அர்ப்பணிக்கிறேன் என்றும் சோனல்பென் படேல் தெரிவித்துள்ளார். இந்தியா காமன்வெல்த் போட்டிகளில் இதுவரை 13 தங்கம் வென்றுள்ளது.

    • காமன்வெல்த் விளையாட்டில் ஹாட்ரிக் தங்கம் வென்றுள்ளார் வினேஷ் போகத்
    • லான் பவுல் போட்டியில் இந்திய ஆடவர் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர்கள் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர். இன்று லான் பவுல் போட்டியில் இந்திய ஆடவர் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. முன்னதாக, பெண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் வேகநடை போட்டியில் இந்திய பிரியங்கா கோஸ்வாமி வெள்ளிப் பதக்கம் வென்றார். 3000 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் அவினாஷ் சேபிள் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    இந்நிலையில், மல்யுத்தப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம் கிடைத்தது. 57 கிலோ எடைப்பிரிவு ஆண்களுக்கான மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

    இதேபோல் 53 கிலோ எடைப்பிரிவு பெண்களுக்கான மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தங்கம் வென்று அசத்தினார். இதன்மூலம் காமன்வெல்த் விளையாட்டில் தொடர்ந்து மூன்று முறை தங்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகத் பெற்றுள்ளார்.

    • வடக்கு அயர்லாந்து அணி 18-5 என வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.
    • இந்திய அணியில் சுனில் பகதூர், நவ்னீத் சிங், சந்தன் குமார் சிங், தினேஷ் குமார் இடம்பெற்றிருந்தனர்.

    பர்மிங்காம்:

    காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இன்று லான் பவுல் இறுதிச்சுற்று நடைபெற்றது. இதில் இந்தியா, வடக்கு அயர்லாந்து அணிகள் மோதின. ஒவ்வொரு அணியிலும் 4 வீரர்கள் இடம்பெற்றனர். இதில் வடக்கு அயர்லாந்து அணி 18-5 என வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

    இந்திய அணியில் சுனில் பகதூர், நவ்னீத் சிங், சந்தன் குமார் சிங், தினேஷ் குமார் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

    • 10 ஆயிரம் மீட்டர் வேகநடை போட்டியில் பிரியங்கா கோஸ்வாமி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
    • 3000 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் அவினாஷ் பந்தய துரத்தை 8.11 நிமிடங்களில் கடந்தார்.

    பிரிட்டன்:

    காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் ஆதிக்கம் தொடர்கிறது. இன்று பெண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் வேகநடை போட்டியில் இந்திய வீராங்கனை பிரியங்கா கோஸ்வாமி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

    இந்நிலையில், இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. 3000 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் அவினாஷ் சேபிள் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இவர் பந்தய துரத்தை 8 நிமிடம் 11.20 வினாடிகளில் கடந்தார். இது அவரது தனிப்பட்ட சாதனை மற்றும் தேசிய சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.

    • 10 ஆயிரம் மீட்டர் வேகநடை போட்டியில் பிரியங்கா கோஸ்வாமி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
    • இறுதிச்சுற்றில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனை பாவனா 8வது இடத்தைப் பிடித்தார்.

    பிரிட்டன்:

    காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு இன்று மேலும் ஒரு பதக்கம் கிடைத்தது. பெண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் வேகநடை போட்டியில் இந்திய வீராங்கனை பிரியங்கா கோஸ்வாமி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இவர் பந்தய தூரத்தை 43 நிமிடம் 38.83 வினாடிகளில் கடந்தார். காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றார்.

    இப்போட்டியில் ஆஸ்ரேலியாவின் ஜெமிமா (42:34.30) தங்கப்பதக்கமும், கென்ய வீராங்கனை எமிலி (43:50.86) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

    இப்போட்டியின் இறுதிச்சுற்றில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனை பாவனா (47:14.13) 8வது இடத்தைப் பிடித்தார்.

    காமன்வெல்த் வேகநடை போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் ஹர்மிந்தர் சிங் ஆவார். இவர் 2010ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில், 20 கிமீ வேகநடை போட்டியில் வெண்கலம் வென்றார்.

    • மல்யுத்தப் போட்டிகளில் அன்ஷு மாலிக் வெள்ளி, திவ்யா காக்ரன், மோகித் கிரேவால் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
    • மல்யுத்தத்தில் மட்டும் ஒரே நாளில் இந்தியர்கள் 6 பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்துள்ளனர். அவர்களுக்கும் பாராட்டுகள்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் மல்யுத்த ஆட்டத்தில் பஜ்ரங் புனியா, தீபக் புனியா, சாக்‌ஷி மாலிக் ஆகிய மூவரும் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர். ஒரே நாளில், ஒரே ஆட்டத்தில் மூன்று தங்கப் பதக்கங்களை இந்தியாவுக்கு வென்று கொடுத்த மூவருக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள்.

    மல்யுத்தப் போட்டிகளில் அன்ஷு மாலிக் வெள்ளி, திவ்யா காக்ரன், மோகித் கிரேவால் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களையும் கைப்பற்றியுள்ளனர். மல்யுத்தத்தில் மட்டும் ஒரே நாளில் இந்தியர்கள் 6 பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்துள்ளனர். அவர்களுக்கும் பாராட்டுகள்.

    ஒரே நாளில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றதன் மூலம் பதக்கப் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தடகளம், ஆக்கி, பாட்மிண்டன் போட்டிகளிலும் இந்தியா வெற்றிகளைக் குவித்து பதக்கப்பட்டியலில் மேலும் முன்னேற வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் தங்கப் பதக்கம் 7 ஆக உயர்ந்துள்ளது.
    • அன்ஷு மாலிக் 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    பிரிட்டன்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது.நேற்று வரை இந்தியா 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களைப் பெற்றிருந்தது.

    இந்நிலையில், இன்று இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. ஆண்கள் 65 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் இந்தியாவின் தங்கப் பதக்கம் 7 ஆக உயர்ந்துள்ளது.

    இன்று 21வது பிறந்தநாளைக் கொண்டாடும் இளம் வீராங்கனை அன்ஷு மாலிக், மகளிர் 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.  

    • வேல்ஸ் அணியை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
    • இந்தியா இதுவரை 6 தங்கம் உள்பட 20 பதக்கங்களை வென்றுள்ளது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்துவருகிறது.

    இந்தியா இந்த காமன்வெல்த் போட்டியில் இதுவரை 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என 20 பதக்கங்களை வென்றுள்ளது.

    இந்நிலையில், நேற்று நடந்த கடைசி குரூப் ஆட்டத்தில் இந்திய அணி வேல்ஸ் அணியுடன் மோதியது. இதில் இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் சிங் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். இந்திய வீரர்களின் வேகத்துக்கு வேல்ஸ் அணியால் ஈடுகொடுக்க முடியவில்லை.

    இறுதியில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

    அரையிறுதியில் இந்தியா பலம்வாய்ந்த நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

    ×