search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடகா சட்டசபை தேர்தல்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டி.கே. சிவக்குமாரை இறங்கி செல்லும்படி டெல்லி தலைமை அவரை கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
    • ராகுல் காந்தி ஆலோசனைகளை மேற்கொண்டும் எந்த முடிவும் எட்டப்படாமல் இருந்தது.

    கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையாவா, டி.கே.சிவக்குமாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்ததில் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு சித்தராமையாவிற்கும், டி.கே. சிவக்குமாருக்கும் இருப்பதாக அவர்கள் கூறி வந்தனர். இருவருமே முதல்-மந்திரி பதவியை பிடிக்க தீவிரமாக காய் நகர்த்தி வந்தனர். இதனால் டெல்லியால் யாரை முதல்வராக தேர்வு செய்வது என்று முடிவெடுக்க முடியாமல் போனது.

    சித்தராமையா, டிகே சிவக்குமார் இருவரும் டெல்லியில் முகாமிட்டு மல்லிகார்ஜூனா கார்கே உடன் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டனர். கடந்த 48 மணி நேரமாக மாறி மாறி ஆலோசனைகள் செய்யப்பட்டன. சித்தராமையாவிற்கு முதல்-மந்திரி பதவி கொடுக்கவில்லை என்றால் அவர் கட்சியை உடைத்து விடுவார். தனியாக கூட கட்சி தொடங்கும் நிலைக்கு செல்வார்.

    அதனால் டி.கே. சிவக்குமாரை இறங்கி செல்லும்படி டெல்லி தலைமை அவரை கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. ராகுல் காந்தி இதில் ஆலோசனைகளை மேற்கொண்டும் எந்த முடிவும் எட்டப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தான் சோனியா காந்தி இந்த விவகாரத்தில் தலையிட்டு இருக்கிறார். அவர் பேசிய பின்பே டி.கே. சிவக்குமார் துணை முதல்வராக இருக்க ஒப்புக்கொண்டுள்ளார். அவர் கொடுத்த சில வாக்குறுதிகளை டி.கே. சிவக்குமார் ஏற்றுக்கொண்டார். அதோடு டி.கே. சிவக்குமாருக்கு 4 பெரிய துறைகள் மொத்தமாக அமைச்சரவையில் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அவருடைய ஆதரவாளர்களுக்கு முக்கிய அமைச்சர்கள் பதவி வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ராகுல், கார்கே, கே.சி. வேணுகோபால் ஆகியோர் பேசியும் இறங்கி வராத டி.கே. சிவக்குமார் சோனியா காந்தி பேசிய பின்பே இறங்கி வந்துள்ளார்.

    • யாரை முதல்-மந்திரியாக தேர்வு செய்வது என்பது குறித்து புதிய எம்.எல்.ஏ.க்கள் அனைவரிடமும் எழுத்து பூர்வமாக கருத்து கேட்கப்பட்டது.
    • சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரிடமும் பல்வேறு திட்டங்களை காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    கர்நாடகா சட்டசபை தேர்தலில் 135 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ள போதிலும் முதல்-மந்திரி பதவியை ஏற்கப்போவது யார் என்பதை தீர்மானிக்க முடியாமல் தவித்து கொண்டு இருக்கிறது.

    கடந்த 13-ந்தேதி பிற்பகல் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதியான நிலையில் முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் விருப்பம் தெரிவித்தனர்.

    இதையடுத்து யாரை முதல்-மந்திரியாக தேர்வு செய்வது என்பது குறித்து புதிய எம்.எல்.ஏ.க்கள் அனைவரிடமும் எழுத்து பூர்வமாக கருத்து கேட்கப்பட்டது. அவை அனைத்தும் டெல்லி கொண்டு செல்லப்பட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரையும் காங்கிரஸ் மேலிடம் டெல்லிக்கு வரவழைத்தது. நேற்று அவர்கள் இருவரையும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது வீட்டுக்கு வர வழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரிடமும் பல்வேறு திட்டங்களை காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்தார். முதல்-மந்திரி பதவியை முதல் 2 ஆண்டுகள் ஒருவரும், மீதமுள்ள 3 ஆண்டுகளை மற்றொருவரும் ஏற்கும் வகையில் செயல்படலாம் என்று கூறினார்.

    இதை இருவரும் ஏற்க மறுத்து விட்டனர். இதைத் தொடர்ந்து சித்தராமையா முதல்-மந்திரியாகவும், டி.கே.சிவகுமார் துணை முதல்-மந்திரியாகவும் பொறுப்பு ஏற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க டி.கே.சிவகுமார் திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

    கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானவர்கள் சித்தராமையாதான் முதல்-மந்திரி ஆக வேண்டும் என்று எழுதி கொடுத்து இருப்பதாக தெரியவந்துள்ளது. அதன்பேரில் கார்கே, ராகுல் காந்தி மற்றும் கே.சி.வேணுகோபால் ஆகியோர் சித்தராமையாவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

    ஆனால் சோனியா, பிரியங்கா ஆகியோர் டி.கே.சிவகுமாருக்கு ஆதரவாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இதை அறிந்ததும் கார்கேவும் தனது நிலையை மாற்றிக்கொண்டு டி.கே.சிவகுமாருக்கு ஆதரவாக பேசி வருவதாக தெரிகிறது.

    இந்த நிலையில் கர்நாடகா மாநில காங்கிரஸ் பொறுப்பாளரும், அகில இந்திய பொதுச்செயலாளர்களில் ஒருவருமான ரன்தீப்சுர்ஜிவாலாவும் டி.கே.சிவகுமாருக்கு ஆதரவு தெரிவித்து இருந்ததாக தெரியவந்துள்ளது.

    சித்தராமையா, டி.கே.சிவகுமார் இருவரில் யார் முதல்-மந்திரியாக தேர்வு பெறுவது என்ற விவகாரம் கர்நாடகா மாநில காங்கிரசை இரண்டு கோஷ்டிகளாக பிளவுபடுத்தி இருக்கிறது. அதன் எதிரொலி டெல்லி காங்கிரசிலும் கேட்க தொடங்கி உள்ளது. டெல்லி மேலிட காங்கிரஸ் தலைவர்களும் இந்த விவகாரத்தில் இரு பிரிவாக பிரிந்துள்ளனர்.

    பெரும்பாலான மூத்த தலைவர்கள் சித்தராமையாவுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். கர்நாடகா மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானவர்களின் விருப்பபடி சித்தராமையாவை முதல்-மந்திரியாக தேர்வு செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

    டி.கே.சிவகுமார் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் அது எதிர்காலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி விடக்கூடும் என்று அந்த காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். என்றாலும் சோனியா, பிரியங்கா இருவரது ஆதரவும் இருப்பதால் டி.கே.சிவகுமார் தனது நிலைபாட்டில் உறுதியாக இருக்கிறார்.

    மாநில காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் தேர்தலில் வெற்றி பெற வைத்து இருப்பதால் தனக்கே முதல்-மந்திரி பதவி தரப்பட வேண்டும் என்று டி.கே.சிவகுமார் தொடர்ந்து பிடிவாதமாக வலியுறுத்தி வருகிறார். தனது பிடிவாதத்தால் எந்த முடிவும் எடுக்க முடியாத நிலை நீடிக்கிறது.

    சித்தராமையா, டி.கே.சிவகுமார் இருவரும் விட்டுக்கொடுக்க மறுப்பதால் 4 நாட்களாக புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்ய முடியாமல் இழுபறி நீடிக்கிறது.

    புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்யும் பொறுப்பை காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் கார்கேவிடம் ஒப்படைத்து இருந்தனர். ஆனால் அவரால் இறுதி முடிவு எடுத்து செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவரது பேச்சை டி.கே.சிவகுமார் மற்றும் கர்நாடகா மாநில தலைவர்கள் ஏற்க மறுக்கிறார்கள்.

    இதையடுத்து இன்று (புதன்கிழமை) 4-வது நாளாக டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இன்று காலை ராகுல் காந்தி இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுத்தே தீர வேண்டும் என்று உறுதியான நிலைப்பாட்டுடன் களத்தில் இறங்கினார்.

    தன்னை வந்து சந்திக்கும்படி சித்தராமையா, டி.கே.சிவகுமார் இருவருக்கும் அழைப்பு விடுத்தார்.

    அதன்படி 11.30 மணிக்கு சித்தராமையா ராகுலை சந்தித்து பேசினார். கர்நாடகா காங்கிரஸ் கட்சிக்கு தனது பங்களிப்பை அப்போது அவர் விளக்கி கூறினார். ராகுல் தெரிவித்த சில திட்டங்களை ஏற்றுக்கொண்டு சித்தராமையா முதல்-மந்திரி பதவியை தனக்கே தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    அவரை தொடர்ந்து மதியம் 12.30 மணிக்கு ராகுல் காந்தியை டி.கே.சிவகுமார் வந்து சந்தித்தார். 75 வயதாகும் சித்தராமையா ஏற்கனவே 5 ஆண்டுகள் முதல்-மந்திரி பதவியில் இருந்து விட்டார். எனவே காங்கிரசை வெற்றி பெற வைத்த தனக்கே முதல்-மந்திரி பதவி தர வேண்டும் என்று தெரிவித்தார்.

    இரு தரப்பினரின் கருத்துக்களை கேட்ட ராகுல் காந்தி அடுத்தகட்டமாக சோனியா, கார்கேவுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அதன் பிறகு கர்நாடகா புதிய முதல்-மந்திரி யார் என்பதில் தீர்வு ஏற்படும் என்று தெரிகிறது. வெற்றி பெற்று 4 நாட்கள் ஆன பிறகும் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்ய முடியாததால் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காங்கிரஸ் கட்சியில் பிளவை ஏற்படுத்த விரும்பவில்லை.
    • என்னை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நான் மாநில தலைவராக ஒரு பொறுப்பை பெற்றிருக்கிறேன்.

    பெங்களூரு:

    224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து முதல்-மந்திரி பதவிக்கு கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா, மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது.

    நேற்று முன்தினம் பெங்களூருவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை கட்சி மேலிடத்திற்கு வழங்கி ஒரே வரியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அதன் அடிப்படையில் புதிய முதல்-மந்திரி யார் என்பதை காங்கிரஸ் மேலிடம் அறிவிக்க உள்ளது. பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் சித்தராமையாவை ஆதரித்து கருத்து கூறி இருப்பதாகவும், அதனால் சித்தராமையா புதிய முதல்-மந்திரியாக அறிவிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, பெரும்பான்மையான லிங்காயது, ஒக்கலிகர் சமூகங்களை சேர்ந்த மடாதிபதிகள் டி.கே.சிவக்குமாருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    இந்தநிலையில், காங்கிரஸ் மேலிடத்தின் அழைப்பின்பேரில் சித்தராமையா நேற்று மதியம் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் அவரது மகன் யதீந்திரா மற்றும் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட சில எம்.எல்.ஏ.க்களும் சென்றனர்.

    அதுபோல் டி.கே.சிவக்குமாருக்கும் டெல்லி வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் இரவு 7.30 மணி அளவில் பெங்களூருவில் இருந்து விமானத்தில் டெல்லி செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவர் டெல்லி செல்லும் முடிவை திடீரென ரத்து செய்தார். சித்தராமையாவுக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்கும் என்று உறுதியாகி இருப்பதாகவும், இதனால் டி.கே.சிவக்குமார் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், அதனாலேயே அவர் டெல்லி செல்வதை தவிர்த்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

    இதை தொடர்ந்து டெல்லி மேலிட தலைவர்கள் டி.கே.சிவக்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். டி.கே.சிவக்குமாரிடம் போனில் பேசிய பிரியங்கா காந்தி பேச்சுவார்த்தைக்காக டெல்லி வருமாறு அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று டி.கே.சிவக்குமார் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். இன்று பிற்பகலில் டி.கே.சிவக்குமார் காங்கிரஸ் கட்சி தலைவர்களை சந்தித்து பேச உள்ளார்.

    முன்னதாக பெங்களூரு விமான நிலையத்தில் டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சி எனக்கு பலத்தை அளித்துள்ளது, மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். காங்கிரஸ் கட்சியினர் ஒற்றுமையாக உள்ளோம். காங்கிரஸ் என்னும் வீட்டில் நானும் ஒரு பகுதி. யார் முதுகிலும் நான் குத்தமாட்டேன். யாரையும் மிரட்ட மாட்டேன். காங்கிரஸ் கட்சியில் பிளவை ஏற்படுத்த நான் விரும்பவில்லை. என்னை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நான் மாநில தலைவராக ஒரு பொறுப்பை பெற்றிருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டெல்லியில் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகிய இருவரிடமும் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் ஆலோசனை நடத்துகிறார்கள். அதன்பின்னர் காங்கிரஸ் மேலிடம் புதிய முதல்-மந்திரியை அறிவித்து, பதவி ஏற்பு விழாவை வருகிற 18-ந் தேதி நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • சித்தராமையா, டி.கே. சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவுவதால் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
    • உடல்நலக்குறைவு காரணமாக நேற்று டி.கே.சிவகுமாரின் டெல்லி பயணம் ரத்தானது.

    பெங்களூரு:

    224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.

    முதல்-மந்திரி பதவி கேட்டு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் என 2 பேரும் பிடிவாதமாக இருப்பதால் யாரை ஆட்சியில் அமர வைப்பது என்று முடிவு எடுக்க முடியாமல் காங்கிரஸ் மேலிடம் திணறி வருகிறது.

    இந்தநிலையில், காங்கிரஸ் மேலிடத்தின் அழைப்பின்பேரில் சித்தராமையா நேற்று மதியம் 1 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் அவரது மகன் யதீந்திரா மற்றும் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட சில எம்.எல்.ஏ.க்களும் சென்றுள்ளனர்.

    அதுபோல் டி.கே.சிவக்குமாருக்கும் டெல்லி வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் டெல்லி செல்வதாக கூறினார். அவர் இரவு 7.30 மணி அளவில் பெங்களூருவில் இருந்து விமானத்தில் டெல்லி செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவர் டெல்லி செல்லும் முடிவை திடீரென ரத்து செய்தார்.

    சித்தராமையாவுக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்கும் என்று உறுதியாகி இருப்பதாகவும், இதனால் டி.கே.சிவக்குமார் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், அதனாலேயே அவர் டெல்லி செல்வதை தவிர்த்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

    சித்தராமையா, டி.கே. சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவுவதால் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. சித்தராமையா டெல்லி சென்ற நிலையில் டி.கே.சிவக்குமார் தனது பயணத்தை ரத்து செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் அடுத்த கர்நாடக முதல்-மந்திரி யார் என்பது குறித்து ஆலோசிக்க கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் இன்று டெல்லி செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

    உடல்நலக்குறைவு காரணமாக நேற்று டி.கே.சிவகுமாரின் டெல்லி பயணம் ரத்தான நிலையில் இன்று அவர் டெல்லி செல்கிறார்.

    பிரியங்கா காந்தி டி.கே.சிவகுமாரை டெல்லி வருமாறு அழைப்பு விடுத்துள்ள நிலையில் அவர் டெல்லி செல்வது குறிப்பிடத்தக்கது.

    • 135 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் சுமார் 70 சதவீதம் பேர் சித்தராமையாவுக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது.
    • கர்நாடக புதிய முதல்-மந்திரி தலைமையில் அமைச்சரவை பதவி ஏற்பு விழா வருகிற 18-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது. ஆனால் முதல்-மந்திரி பதவியை பெறுவதற்கு காங்கிரஸ் தலைவர்கள் சித்தராமையா, டி.கே.சிவக்குமாருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இவர்களில் யாரை முதல்-மந்திரியாக தேர்வு செய்வது என்பது குறித்து நேற்று பெங்களூரில் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தினார்கள். மாலை 6.30 மணிக்கு தொடங்கிய ஆலோசனை நள்ளிரவு 1.30 மணி வரை நீடித்தது.

    5 நட்சத்திர ஓட்டலில் நடந்த அந்த ஆலோசனை கூட்டத்தில் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரும் கலந்து கொண்டனர். அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரிடமும் யாரை முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்கள் என்று எழுத்து பூர்வமாக எழுதி தரும்படி கேட்கப்பட்டது.

    மினி ஓட்டெடுப்பு போன்று இது நடந்தது. எம்.எல்.ஏ.க்கள் எழுதி கொடுத்த வாக்குகளுடன் மேலிட தலைவர்கள் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றனர். டெல்லியில் இன்று எம்.எல்.ஏ.க்கள் யாருக்கு ஆதரவாக முடிவு தெரிவித்துள்ளனர் என்பது ஆய்வு செய்யப்படும்.

    அதன்பிறகு புதிய முதல்-மந்திரி யார் என்பதை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவிப்பார். கார்கேவுக்கு இந்த அதிகாரத்தை வழங்கி நேற்று நடந்த கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    135 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் சுமார் 70 சதவீதம் பேர் சித்தராமையாவுக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவர் மீண்டும் முதல்-மந்திரியாக தேர்வு பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    அதே சமயத்தில் டி.கே.சிவக்குமாருக்கு மேலிட தலைவர்களின் ஆதரவு இருக்கிறது. எனவே புதிய முதல்-மந்திரி யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இதற்கிடையே கர்நாடக புதிய முதல்-மந்திரி தலைமையில் அமைச்சரவை பதவி ஏற்பு விழா வருகிற 18-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சர்களாக 33 பேர் தேர்வாக வாய்ப்பு உள்ளது.

    இதற்கிடையே தங்களுக்கு துணை முதல்-மந்திரி உள்பட 5 முக்கிய இலாக்காக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு மந்திரிகள் பதவி வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகள் காங்கிரஸ் தலைவருக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • ராஜஸ்தானில் முன்னாள் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே அம்மாநிலத்தில் மக்கள் விரும்பும் தலைவராக முன்னணியில் உள்ளார்.
    • வசுந்தரா ராஜே கடந்த ஒரு வருடமாக அம்மாநில காங்கிரஸ் அரசாங்கத்திற்கு எதிராக தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

    புதுடெல்லி:

    கர்நாடகாவில் ஆட்சியை இழந்த பா.ஜனதாவுக்கு தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியை அளித்துள்ளது. தோல்விக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.

    குறிப்பாக கர்நாடகாவில் கட்சியின் அடித்தளமாக விளங்கும் லிங்காயத்து சமூகத்தின் வாக்குகளை பா.ஜனதா பெருவாரியாக இழந்திருப்பது அக்கட்சிக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    அந்த சமூகத்தை சேர்ந்த கட்சியின் மூத்த தலைவராக எடியூரப்பா பதவி விலகியது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது தேர்தல் முடிவுகளில் தெரியவந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

    இதேபோல காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடகா மாநில மூத்த தலைவர்களான சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோருடன் இணைந்து தீவிர தேர்தல் பிரசாரம் செய்ததும் அக்கட்சிக்கு கை கொடுத்துள்ளது.

    இந்நிலையில் கர்நாடகா தேர்தல் முடிவுகள் கற்று தந்த பாடத்தை அடிப்படையாக கொண்டு பா.ஜனதா கட்சி அடுத்து வர உள்ள ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மாநிலங்களில் கட்சி தலைமையின் பங்கு தொடர்பாக புதிய திட்டங்களை செயல்படுத்த ஆலோசனை நடத்தி வருகிறது.

    குறிப்பாக ராஜஸ்தான் மற்றும் மத்தியபிரதேச மாநிலங்களில் கட்சியின் தலைமையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பலர் கட்சிக்குள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் மத்திய பிரதேசத்தை பொறுத்தவரை முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் ஆட்சியை தக்க வைக்க பா.ஜனதா பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது.

    அம்மாநிலத்தில் செயல்படுத்தி உள்ள புதிய நலதிட்டங்கள் பற்றியும், அவற்றை பற்றிய பிரசாரத்தை வலுப்படுத்தவும் கட்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதேபோல ராஜஸ்தானில் முன்னாள் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே அம்மாநிலத்தில் மக்கள் விரும்பும் தலைவராக முன்னணியில் உள்ளார்.

    ஆனால் தேசிய தலைமை அவருக்கு உரிய முக்கியத்துவத்தை அளிக்கவில்லை என்ற பொதுவான கருத்தும் உள்ளது. எனவே ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்காக யாரை முன்நிறுத்தலாம் என்பது தொடர்பாகவும் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது.

    குறிப்பாக வசுந்தரா ராஜே கடந்த ஒரு வருடமாக அம்மாநில காங்கிரஸ் அரசாங்கத்திற்கு எதிராக தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இதற்கிடையே அம்மாநிலத்தில் முதல்-மந்திரி அசோக் கெலாட்-துணை முதல்-மந்திரி சச்சின் பைலட் ஆகியோரிடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

    இந்நிலையில் இதனை தங்களுக்கு, சாதகமாக பயன்படுத்தி மாநில தலைவர்களுக்கும் முக்கியத்துவம் அளித்து கட்சியை வலுப்படுத்த பா.ஜனதா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    • கர்நாடக தேர்தலில் வெற்றி பெறுவது கடினம். மக்கள் மனங்களை வெல்வது என்பது இன்னும் கடினமானது.
    • பிரதமர் தோற்று விட்டார். கர்நாடக மக்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

    புதுடெல்லி:

    தென் மாநிலங்களில் கர்நாடக மாநிலத்தில் மட்டுமே பா.ஜ.க. ஆட்சி நடந்து வந்தது. அங்கு 10-ந் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 136 இடங்களில் அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.

    அடுத்த ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த வெற்றி காங்கிரஸ் கட்சிக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கவும் இந்த வெற்றி, காங்கிரஸ் கட்சிக்கு ஊக்கம் அளிப்பதாக அமைந்துள்ளது.

    இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது தொடர்பாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி விட்ட முன்னாள் மத்திய மந்திரியும், மாநிலங்களவை எம்.பி.யுமான கபில் சிபல் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறி இருப்பதாவது:-

    கர்நாடக தேர்தலில் வெற்றி பெறுவது கடினம். மக்கள் மனங்களை வெல்வது என்பது இன்னும் கடினமானது. இனி வரும் 5 ஆண்டுகளுக்கு வெளிப்படையாகவும், நேர்மையாகவும், பாரபட்சம் இல்லாமலும் நடந்து கொள்வதன் மூலம் மக்களின் இதயங்களை வெல்லுங்கள்.

    இது எதுவுமே இல்லாததால்தான் பா.ஜ.க. தோல்வியைத் தழுவியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக தேர்தல் முடிவு வெளியானதும் கபில் சிபல் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அந்த பதிவில் அவர், "பிரதமர் தோற்று விட்டார். கர்நாடக மக்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். 40 சதவீத கமிஷன், தி கேரளா ஸ்டோரி, பிரிவினைவாத அரசியல், அராஜகம், பொய்மை ஆகியவற்றுக்கு இனி இடம் இல்லை. வெற்றி பெற காங்கிரஸ் தகுதியானதுதான்" என குறிப்பிட்டுள்ளார்.

    • ஆளும் கட்சியாக இருந்த பா.ஜனதாவுக்கு எதிரான மனநிலையும், காங்கிரசின் கவர்ச்சிகரமான அறிவிப்புகளும் காங்கிரசை கைதூக்கி விட்டுள்ளது.
    • பா.ஜனதாவின் வாக்கு 36 சதவீதத்தில் இருந்து அதிகரிக்கவில்லை. ஆனால் காங்கிரசுக்கு 5 சதவீதம் அதிகரித்துள்ளது.

    கர்நாடகத்தில் காங்கிரசின் வெற்றி பெரு விரலை உயர்த்தி கர்வப்பட வைத்துள்ளது. அதேநேரத்தில் பா.ஜனதாவுக்கு பாடத்தையும் கற்றுக்கொடுத்துள்ளது.

    137 ஆண்டுகள் பழமையான பாரம்பரிய கட்சி என்று மார்தட்டினாலும் 2014 மற்றும் 2019 பாராளுமன்ற தேர்தல்களில் மிகப்பெரிய தோல்வியை காங்கிரஸ் கட்சி சந்தித்தது.

    மோடி என்ற மிகப்பெரிய ஜாம்பவானின் முன்பு கையின் ஜம்பம் பலிக்காமல் போனது என்பதே உண்மை.

    இனி காங்கிரஸ் கரை சேருமா? என்ற எண்ணம் சொந்த கட்சியினரிடமே ஏற்பட்டிருந்த நிலையில் 2018-ல் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஆட்சியை பிடித்தது.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 'கை' ஓங்கியிருக்கும் நிலையில் காங்கிரசுக்கு புது நம்பிக்கை கொடுத்துள்ளது. காங்கிரஸ், உள்ளூர் அரசியலை கையில் எடுத்து லாவகமாக அரசியல் செய்தது.

    1980-ல் பா.ஜனதா தொடங்கப்பட்டதில் இருந்து இப்போதுதான் இவ்வளவு பெரிய ஊழல் புகாரில் சிக்கியது. காங்கிரஸ் அதை கையில் எடுத்தது. 40 சதவீத கமிஷன் அரசு என்ற கோஷம் சாதாரண மக்கள் வரை சென்றடைந்தது.

    அதை உடைக்க மோடி என்ற பிம்பத்தை மட்டுமே பா.ஜனதா நம்பியது. ஆனால் சட்டமன்ற தேர்தலில் மக்கள் அதை நிராகரித்துவிட்டார்கள். பா.ஜனதாவில் உள்ளூர் தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள்.

    ஆனால் காங்கிரஸ் உள்ளூர் தலைவர்களையே நம்பியது. முன்னாள் முதல்வர் சித்தராமையாவும், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரும் தங்களுக்குள் இருக்கும் கவுரவ பிரச்சினைகளை ஒதுக்கி வைத்துவிட்டு தீவிரமாக பணியாற்றியதும் காங்கிரஸ் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

    சமூக ரீதியான பிரச்சினைகள் காங்கிரசுக்கு கை கொடுத்திருக்கிறது. மாண்டியா, ஹசன் பகுதியில் உள்ள ஒக்கலிகர் சமூகம் காங்கிரசுக்கு பெருமளவில் ஆதரவு அளித்துள்ளது. லிங்காயத்து சமூக ஆதரவு எதிர்பார்த்த அளவு பா.ஜனதாவுக்கு கிடைக்காமல் போனது.

    லிங்காயத்து சமூகத்தின் முகமாக பார்க்கப்படும் எடியூரப்பா தேர்தல் அரசியலில் இருந்து விலகிவிட்டார். அதேபோல் பா.ஜனதாவில் வாய்ப்பு மறுக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், சவடி ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததும் லிங்காயத்து சமூக வாக்குகள் காங்கிரசுக்கு கிடைக்க உதவி புரிந்தது.

    வழக்கமாக மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு வாக்களிக்கும் இஸ்லாமியர்கள் இந்த முறை காங்கிரசுக்கு ஆதரவாக திரும்பி இருக்கிறார்கள்.

    காங்கிரசின் கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளான பஸ்களில் பெண்கள் இலவச பயணம், மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும், 200 யூனிட் இலவச மின்சாரம், 10 கிலோ இலவச அரிசி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1500 என்ற அறிவிப்புகள் மக்களை வெகுவாக கவர்ந்ததும் ஒரு காரணம்.

    கர்நாடக தேர்தல் வெற்றி என்பது அந்த கட்சிக்கு சில மலரும் நினைவுகளையும் கண்முன் கொண்டு வந்துள்ளது. 1969-ல் பெங்களூருவில் நடந்த காங்கிரஸ் காரியகமிட்டி கூட்டத்தில் சிண்டிகேட் மூலம் இந்திரா காந்தி வெளியேற்றப்பட்டார்

    அப்போது காங்கிரசின் சின்னம் பசுவும் கன்றும். கட்சி பிளவுபட்டதை அடுத்து இந்திரா கை சின்னத்தை சிக்மகளூருவில் அறிமுகப்படுத்தினார். அதாவது 1978-ல் அந்த தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் இந்திரா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    அதன்பிறகு 1980 பாராளுமன்ற தேர்தலில் கை சின்னத்தில் நாடு முழுவதும் காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றது. மீண்டும் ஆட்சியை பிடித்தது. அதேபோல் 1999 பாராளுமன்ற தேர்தலில் பெல்லாரி தொகுதியில் சோனியா காந்தி போட்டியிட்டு தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா தலைவர் மறைந்த சுஷ்மா சுவராஜை தோற்கடித்தார்.

    கடந்த கால இந்த வரலாற்று நிகழ்வுகளை சிக்மங்களூரில் நடந்த பிரசாரத்தின் போது பிரியங்கா காந்தி குறிப்பிட்டு பேசினார். பாட்டிக்கு மறுவாழ்வு கொடுத்த மாநிலம் கர்நாடகா.

    அதே போல் மீண்டும் காங்கிரசுக்கு கை கொடுங்கள் என்று உருக்கமாக பேசினார். இதுவும் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்த தவறவில்லை. சிக்மங்களூரில் அனைத்து தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றி இருக்கிறது.

    ஆளும் கட்சியாக இருந்த பா.ஜனதாவுக்கு எதிரான மனநிலையும், காங்கிரசின் கவர்ச்சிகரமான அறிவிப்புகளும் காங்கிரசை கைதூக்கி விட்டுள்ளது. அதேநேரம் பா.ஜனதாவின் வாக்கு 36 சதவீதத்தில் இருந்து அதிகரிக்கவில்லை. ஆனால் காங்கிரசுக்கு 5 சதவீதம் அதிகரித்துள்ளது.

    1985 முதல் 38 ஆண்டுகளாக ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் மாறி மாறி ஆட்சிக்கு வருவதுதான் வரலாறு. கடைசியாக 1999 தேர்தலில் 132 தொகுதிகளை பெற்று காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. அப்போது எஸ்.எம்.கிருஷ்ணா முதல்வராக இருந்தார். அதன்பிறகு 24 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதுதான் தனி மெஜாரிட்டியுடன் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

    • 2008-ம் ஆண்டு கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சி அமைத்தபோது காங்கிரஸ் சார்பில் சித்தராமையாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டது.
    • 2006-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை 8 ஆண்டு காலம் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தை இழந்திருந்தது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் அமோக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் இருவருமே கடுமையாக உழைத்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை வளர்த்து வெற்றியின் பாதைக்கு கொண்டு சென்ற பெருமை இவர்கள் இருவருக்கும் உண்டு.

    கர்நாடக காங்கிரசில் இருபெரும் தலைவர்களாக இருக்கும் சித்தராமையா, டி.கே.சிவகுமார் ஆகியோர் அரசியலில் கடந்து வந்த பாதை வருமாறு:-

    கர்நாடகாவில் குறிப்பிட்ட வாக்கு வங்கியை கொண்ட குருபா ஜாதியை சேர்ந்தவர் சித்தராமையா. இவர் ஆரம்பத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார்.

    கடந்த 2004-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி அமைத்தது. அப்போது சித்தராமையா மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னணி தலைவராக இருந்தார். இதையடுத்து அவருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டது.

    ஆனால் கூட்டணி ஆட்சியின்போது தனக்கு முதல் மந்திரி பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு முதல் மந்திரி பதவி வழங்கப்படவில்லை. இதனால் அவர் அதிருப்தியில் இருந்தார்.

    மேலும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடாவுடன் அவருக்கு மோதல் ஏற்பட்டது. இதையடுத்து சித்தராமையா அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

    பின்னர் 2006-ம் ஆண்டு சித்தராமையா காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். தனது செல்வாக்கை பயன்படுத்தி காங்கிரஸ் கட்சியில் முக்கிய இடத்துக்கு வந்தார்.

    2008-ம் ஆண்டு கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சி அமைத்தபோது காங்கிரஸ் சார்பில் சித்தராமையாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டது.

    2006-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை 8 ஆண்டு காலம் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தை இழந்திருந்தது. காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்த அக்கட்சி தலைவர்களுடன் சித்தராமையாவும் கடுமையாக உழைத்தார். அவரது உழைப்பின் பலனாக 2013-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்றது.

    இதனால் சித்தராமையாவுக்கு முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டது. 5 ஆண்டு காலம் அவரது ஆட்சி நீடித்தது.

    அதன்பிறகு 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியது. ஆனாலும் மதசார்பற்ற ஜனதா தளம் தலைமையில் காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சியை அமைத்தது. கூட்டணி அரசில் சித்தராமையாவுக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை. ஆனாலும் இரு கட்சிகளின் முன்னணி தலைவர்கள் அங்கம் வகிக்கும் ஒருங்கிணைப்பு குழு தலைவராக சித்தராமையா பணியாற்றினார்.

    2019-ம் ஆண்டு மதசார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து பா.ஜனதா ஆட்சிக்கு வந்தது. அப்போது சித்தராமையாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டது.

    எதிர்க்கட்சி தலைவராக சித்தராமையா திறம்பட பணியாற்றினார். பா.ஜனதா ஆட்சியின் முறைகேடுகளை சட்டசபையிலும், மக்கள் மத்தியிலும் சித்தராமையா பகிரங்கப்படுத்தினார்.

    பா.ஜனதாவின் கொள்கைகளை அவர் துணிவுடன் எதிர்த்தார். இதையடுத்து அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகியது. இது காங்கிரசின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

    மேலும் சித்தராமையா தேர்தல் பிரசாரத்தின்போது இது தனது கடைசி தேர்தல் என்று கூறி இருந்தார். எனவே தனக்கு மீண்டும் முதல்-மந்திரி பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் சித்தராமையா காத்திருக்கிறார்.

    டி.கே.சிவகுமார்

    கர்நாடகாவில் 2-வது பெரிய சமூகமான ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர் டி.கே.சிவகுமார். இவர் சித்தராமையாவுக்கு துணையாக இருந்து கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தினார். இவர் மாணவ பருவத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களுள் ஒருவராக வளர்ந்து வந்தார். 1989-ம் ஆண்டு முதல் சாந்தனூர், கனகபுரா தொகுதிகளில் தொடர்ந்து 8 முறை வெற்றி பெற்றுள்ளார். இவர் நேரு குடும்பத்தின் செல்லப் பிள்ளையாகவும் விளங்கி வருகிறார்.

    டி.கே.சிவகுமார் அரசியலில் ராஜீவ் காந்தியால் அடையாளம் காட்டப்பட்டு சோனியா காந்தியால் வளர்த்தெடுக்கப்பட்டவர்.

    கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக தினேஷ் குண்டுராவ் பதவியில் இருந்தபோது 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியதால் அதற்கு பொறுப்பேற்று தனது தலைவர் பதவியை தினேஷ் குண்டுராவ் ராஜினாமா செய்தார்.

    இதையடுத்து 2020-ம் ஆண்டு கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக டி.கே.சிவகுமார் நியமிக்கப்பட்டார்.

    கடந்த 3 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியை தொண்டர்கள் பலம் கொண்ட கட்சியாக மாற்ற டி.கே.சிவகுமார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். பா.ஜனதா அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தினார். மேலும் விலைவாசி உயர்வை கண்டித்தும், மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்த கோரியும் போராட்டங்களில் ஈடுபட்டார்.

    பா.ஜனதா கட்சியின் குறைபாடுகளை மக்கள் மத்தியில் சுட்டிக்காட்டி அதிர்வலைகளை ஏற்படுத்தினார். இதன்மூலம் கர்நாடகாவில் சரிந்து கிடந்த காங்கிரசின் செல்வாக்கை மீட்டெடுத்தார். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ள இந்த வெற்றியானது தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி கொண்டர்களுக்கு புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.

    எனவே முதல்-மந்திரி பதவி தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் டி.கே.சிவகுமார் காத்திருக்கிறார்.

    • தமிழர்கள் அதிகமாக வசிக்கும் தொகுதிகளிலும் பா.ஜனதா தோல்வியையே தழுவி இருக்கிறது.
    • புலிகேசிநகர் (தனி), கோலார் தங்க வயல் (தனி), ஜெயநகர், ஹனூர் ஆகிய தொகுதிகளில் தமிழ் வேட்பாளர்கள் தோல்வியை தழுவியது தமிழ் ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    கர்நாடகத்தில் சிக்மங்களூர், கோலார், மாண்டியா, ராம்நகர், குடகு, மைசூரு உள்பட 8 மாவட்டங்களில் ஒரு தொகுதியில் கூட பா.ஜனதா வெற்றி பெறாதது அந்த கட்சியினரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

    இதேபோல் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் தொகுதிகளிலும் பா.ஜனதா தோல்வியையே தழுவி இருக்கிறது. புலிகேசிநகர் (தனி), கோலார் தங்க வயல் (தனி), ஜெயநகர், ஹனூர் ஆகிய தொகுதிகளில் தமிழ் வேட்பாளர்கள் தோல்வியை தழுவியது தமிழ் ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    ராமநகரா, நரசிம்ஹ ராஜா, பெல்காம் வடக்கு, சிவாஜி நகர், சாம்ராஜ் பேட், குல்பர்கா வடக்கு, மங்களூரு, சாந்திநகர், பிதூர் ஆகிய 9 தொகுதிகளில் இஸ்லாமிய வேட்பாளர்களை காங்கிரஸ் களம் இறக்கியது. அவர்கள் அனைவரும் வெற்றி பெற்றுள்ளார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை 5.30 மணிக்கு பெங்களூருவில் நடக்கிறது.
    • சித்தராமையாவுக்கும், டி.கே.சிவக்குமாருக்கும் இடையே முதல்-மந்திரி பதவியை பெறுவதில் கடும் போட்டி நிலவுகிறது.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

    224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடந்தது. ஓட்டு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. நள்ளிரவில்தான் இறுதி முடிவு அறிவிக்கப்பட்டது.

    காங்கிரஸ் கட்சி 223 தொகுதிகளில் போட்டியிட்டு 135 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்தது. 1999-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் காங்கிரஸ் 132 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றுள்ளது.

    காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் 34 ஆண்டுகளுக்கு பிறகு அதிக தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. கடைசியாக 1989 தேர்தலில் 178 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. அதன் பிறகு தற்போது சாதனை வெற்றியை பெற்று முத்திரை பதித்தது.

    ஆளும் பா.ஜனதா அனைத்து தொகுதியிலும் போட்டியிட்டு 65 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்தது. மதசார்பற்ற ஜனதா தளம் 19 தொகுதியை கைப்பற்றியது. சுயேட்சை மற்றும் இதர கட்சிகள் 4 இடங்களில் வென்றன.

    ஜெயநகர் தொகுதியில் முதலில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி 294 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    பின்னர் மறுவாக்கு எண்ணிக்கையில் பா.ஜனதா வேட்பாளர் சி.கே.ராமமூர்த்தி 17 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக கூறியதால் அங்கு குழப்பம் ஏற்பட்டது. இதனால் நள்ளிரவில்தான் இறுதி முடிவு அறிவிக்கப்பட்டது.

    ஆட்சி அமைக்க 113 இடங்களே தேவை. ஆனால் காங்கிரஸ் 135 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. அந்த கட்சிக்கு 42.88 சதவீத ஓட்டுகள் கிடைத்தது.

    2018-ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் காங்கிரசுக்கு 55 இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளது. கடந்த தேர்தலில் 80 இடங்களில் அந்த கட்சி வெற்றி பெற்று இருந்தது.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தொங்கு சட்டப்பேரவை அமைய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து இருந்தன. ஆனால் கணிப்புகளை தாண்டி காங்கிரஸ் தனி பெரும்பான்மை பெற்றது.

    பிரதமர் நரேந்திர மோடி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் செய்தும் பா.ஜனதா கடும் வீழ்ச்சியை சந்தித்தது.

    36 சதவீத ஓட்டுகளை பெற்று 65 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த முறை அந்த கட்சி 38 இடங்களை இழந்தது.

    எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் இதர கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைக்கும் கனவில் இருந்த குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 13.29 சதவீத ஓட்டுகளே பெற்றது. இந்த தேர்தலில் 18 இடங்களை அந்த கட்சி இழந்தது.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை 5.30 மணிக்கு பெங்களூருவில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி தேர்ந்து எடுக்கப்பட உள்ளார். அகில இந்திய பார்வையாளர்கள் இதற்காக பெங்களூரு வந்துள்ளனர். அவர்களது மேற்பார்வையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்படுகிறது.

    கர்நாடக முதல்-மந்திரி பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையாவுக்கும், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கும் இடையே முதல்-மந்திரி பதவியை பெறுவதில் கடும் போட்டி நிலவுகிறது.

    இரு தரப்பு ஆதரவாளர்களும் முதல்-மந்திரி பதவியை வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் யாரை தேர்வு செய்கிறார்களோ அவரே முதல்-மந்திரி ஆவார்.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு முதல்-மந்திரி தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.

    சித்தராமையாவுக்கும், டி.கே.சிவக்குமாருக்கும் இடையே போட்டி நிலவினாலும் முதல்-மந்திரியை ஒரு மனதாக தேர்வு செய்யவே காங்கிரஸ் மேலிடம் விரும்புகிறது. இது தொடர்பாக மேலிட பார்வையாளர்கள் நேற்று இரவு இருவரிடமும் ஆலோசனை மேற்கொண்டனர். இதனால் ஒருமனதாக முதல்-மந்திரி தேர்வு செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இரு தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் தனித்தனியாகவும் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    முதல்-மந்திரி தேர்வுக்கு பிறகு கவர்னரை சந்தித்து காங்கிரஸ் ஆட்சி அமைக்க உரிமை கோரும். கர்நாடக புதிய முதல்-மந்தரி பதவி ஏற்பு விழா வருகிற 17 அல்லது 18-ந் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • கர்நாடகா தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரசுக்கு கனிமொழி எம்.பி. வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • காங்கிரஸ் பெற்ற வெற்றியானது மதச்சார்பற்ற சக்திகளை நம்புபவர்களுக்கு, நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக விளங்குகிறது என கூறியுள்ளார்.

    இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கர்நாடகா சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் 223 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் காங்கிரஸ் 84 தொகுதிகளில் வெற்றியும் 54 தொகுதிகளில் முன்னிலையும் வகிக்கிறது.

    இந்நிலையில் கர்நாடகா தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரசுக்கு கனிமொழி எம்.பி. வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:-

    கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றியானது மதச்சார்பற்ற சக்திகளை நம்புபவர்களுக்கு, நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக விளங்குகிறது என கூறியுள்ளார்.

    ×