search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தி"

    • ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ளது.
    • ஸ்ரீ சக்தி திரையரங்கம் முன்பு வருகிற 4-ந் தேதி அன்று மாலை 6மணியளவில் நடைபெற உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு மாவட்டதி.மு.க. செயலாளரும் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான செல்வராஜ் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ளது. அதன்படி திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருப்பூர் வாலிபாளையம் யூனியன் மில் சாலை ஸ்ரீ சக்தி திரையரங்கம் முன்பு வருகிற 4-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 6மணியளவில் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான செல்வராஜ் தலைமையில் நடைபெற உள்ளது.

    கூட்டத்தில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்.பி., மற்றும் தலைமை கழக பேச்சாளர் தாம்பரம் ஜின்னா சிறப்புரையாற்றுகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாளை 3-ந்தேதி இந்தி திணிப்பை ஏன் எதிர்க்க வேண்டும் என்கின்ற தலைப்பில் தலைமை கழகத்தால் அனுப்பப்பட்ட துண்டு பிரசுரங்கள் வீடு வீடாக வழங்கப்படவுள்ளது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வீடு வீடாக பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கவுள்ளார். இதில் மாவட்ட நிர்வாகிகள், மாநகர நிர்வாகிகள், நகர, பகுதி, ஒன்றிய, பேரூர், வட்ட கழக நிர்வாகிகள், இந்நாள் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், தொ.மு.ச., நிர்வாகிகள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் அனைவரும் கலந்துகொண்டு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டுமெனவும், நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பெரும் திரளாக கலந்துகொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

    • இந்தி திணிப்பு, புதிய கல்விக் கொள்கையை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.
    • ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    தஞ்சாவூர்:

    இந்தி திணிப்பு, புதிய கல்விக் கொள்கையை கண்டித்து இன்று காலை தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவ -மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் அர்ஜுன், மாவட்ட துணை செயலாளர் பிரேம் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் இந்தி திணிப்பை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் ஏராளமான மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இந்த ஆர்பாட்டத்தால் தஞ்சையில் பரபரப்பு ஏற்பட்டது.

    • இந்தி மொழியை கொண்டு வரும் மற்றொரு வடிவமாக புதிய தேசிய கல்விக்கொள்கை அமைந்துள்ளது.
    • காலை 9 மணிக்கு தாராபுரம் அண்ணா சிலை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    திருப்பூர் :

    இந்தியை திணிக்கும் மத்திய அரசை கண்டித்து தி.மு.க. திருப்பூர் தெற்கு இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் தாராபுரத்தில் நாளை (சனிக்கிழமை) காலை நடக்கிறது.

    இது குறித்து தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், மாநகராட்சி 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தி மொழியை கொண்டு வரும் மற்றொரு வடிவமாக புதிய தேசிய கல்விக்கொள்கை அமைந்துள்ளது. இந்த திட்டத்தை தி.மு.க. இளைஞர் அணியும், மாணவர் அணியும் கடுமையாக எதிர்க்கிறது. இந்தி திணிப்பு திட்டத்தையும், ஒரே பொது நுழைவுத்தேர்வு திட்டத்தையும் மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, மத்திய அரசை கண்டித்து திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு தாராபுரம் அண்ணா சிலை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, கிளை நிர்வாகிகள், இளைஞர் அணி மாணவர் அணி நிர்வாகிகள், இன்னாள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட கழக பிரதிநிதிகள், துணை அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு வெற்றியடைய செய்ய வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    • ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியையும், மாநில மொழிகளையும் முன்னிறுத்துவதில் எந்த தவறும் இல்லை.
    • ஒவ்வொரு மாநிலத்திலும் அங்குள்ள தாய்மொழியை மோடி அரசு ஊக்குவித்து வருகிறது.

    புதுடெல்லி :

    இந்தி பேசும் மாநிலங்களில், ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இந்தியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும், மற்ற மாநிலங்களில் மாநில மொழிகளே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற குழு சிபாரிசு செய்துள்ளது.

    இதற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்தியை திணித்து இன்னொரு மொழிப்போருக்கு வித்திட வேண்டாம் என்று அவர் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

    காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., விடுதலைச்சிறுத்தைகள், நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயனும் ஆட்சேபனை தெரிவித்தார். பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    இந்தநிலையில், இந்த எதிர்ப்புகளை பா.ஜனதா நிராகரித்துள்ளது. பா.ஜனதா பொதுச்செயலாளரும், தமிழ்நாடு பா.ஜனதாவின் மேலிட பொறுப்பாளருமான சி.டி.ரவி கூறியதாவது:-

    நாடாளுமன்ற குழு, ஆங்கிலத்துக்கு மாற்றாகத்தான் இந்தியை முன்னிறுத்துகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி போன்ற மாநில மொழிகளுக்கு மாற்றாக இந்தியை சிபாரிசு செய்யவில்லை.

    ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியையும், மாநில மொழிகளையும் முன்னிறுத்துவதில் எந்த தவறும் இல்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் அங்குள்ள தாய்மொழியை மோடி அரசு ஊக்குவித்து வருகிறது.

    கடிதம் எழுதிய தலைவர்கள், தமிழின் பெருமையையோ, மலையாளத்தின் பெருமையையோ வலியுறுத்தி கடிதம் எழுதி இருந்தால், பா.ஜனதா அதை வரவேற்கும்.

    ஆனால் அவர்கள் ஆங்கிலத்துக்கு ஆதரவாக கடிதம் எழுதி இருப்பது சரியல்ல. ஆங்கிலத்தை பயன்படுத்தும் மனப்பான்மையுடன் உள்ளனர். அவர்கள் காலனி மனப்பான்மையில் இருந்து வெளியே வரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நீண்ட நாட்களுக்கு முன்பே அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடகாவில் இந்தியை அறிமுகப்படுத்தி விட்டனர்.
    • இந்தி மொழி மீது மத சாயமோ, அரசியல் சாயமோ பூசுவது உகந்தது அல்ல.

    திருப்பூர் :

    இந்து முன்னேற்ற கழக மாநில தலைவர் கே.கோபிநாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் இந்தி மொழியை அறிமுகப்படுத்துவதை இந்து முன்னேற்ற கழகம் வரவேற்கிறது. நீண்ட நாட்களுக்கு முன்பே அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடகாவில் இந்தியை அறிமுகப்படுத்தி விட்டனர். இந்தி மொழியை ஒரு மொழியாக அனைவரும் பார்க்க வேண்டும். அம்மொழி மீது மத சாயமோ, அரசியல் சாயமோ பூசுவது உகந்தது அல்ல. இந்தியை எதிர்க்கும் தலைவர்களின் மகன், மகள்களும் மற்றும் பேரக்குழந்தைகளும் இந்தி மொழியை கற்றுக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    மேலும் திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற வகையில் தமிழகம் மட்டுமல்லாது பரந்த நமது இந்தியாவில் பயணம் செய்வதற்கு மொழி ஒரு தடையாக இருக்கக்கூடாது. எனவே நம்முடைய எதிர்கால குழந்தைகளின் அறிவு மற்றும் அவர்களின் நலன் கருதி இந்தி மொழியை அரசியல் ஆக்காமல் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நமது நாட்டில் பல மொழிகள் உள்ளன.
    • ஒரு மொழியை மட்டும் நாட்டின் மொழியாக அறிவிக்க முடியாது.

    திருவனந்தபுரம் :

    இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு முயற்சியை மத்திய பா.ஜ.க. அரசு கையில் எடுத்திருப்பது, அந்த மொழி பேசாத மாநிலங்களின் எதிர்ப்புக்கு வழிவகுத்துள்ளது.

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு, ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் கடந்த மாதம் ஒரு அறிக்கை அளித்தது. அதில், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் போன்றவற்றிலும், மத்திய பல்கலைக்கழகங்களிலும் கட்டாயமாக இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும்; ஆங்கிலம் உள்ள இடங்களில் இந்தியை இடம்பெற செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்தது.

    இதுகுறித்து பல்வேறு ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இது இந்தி திணிப்பு முயற்சியாக பார்க்கப்படுவதால், இந்தி பேசாத மாநிலங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விவகாரத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் எதிர்ப்புக்குரலை பதிவு செய்தார். இந்த முயற்சிக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருந்த முக்கிய அம்சங்கள்:-

    * இந்திய துணை கண்டத்தின் பெருமையும், வலிமையும் பன்முகத்தன்மைதான். 'ஒரே நாடு' என்ற பெயரில் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணவு, ஒரே கலாசாரம் என நிறுவிட வேண்டும் என்று மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து செயல்படுவது, இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிக்கக் கூடியதாகும்.

    * 'பாரத் மாதா கீ ஜே' என்று நாடாளுமன்ற அவையில் அதனை ஒரு அரசியல் கோஷமாக்கி குரல் எழுப்பிக்கொண்டே இந்திக்கு தாய்ப்பாலும், இந்தியாவின் மற்ற மொழிகளுக்கு கள்ளிப்பாலும் புகட்ட நினைப்பது, இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது. இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு பேராபத்தை விளைவிக்கக் கூடியது.

    * வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மை கொண்ட இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளைச் சரிசமமாக நடத்திட வேண்டும். அனைத்து மொழிகளும் மத்திய அரசின் அலுவல் மொழி என்ற நிலையை எட்டிட வேண்டும். அதற்கு நேர் எதிரான மூர்க்கத்தனமான நிலைப்பாட்டை எடுத்து, இந்தியை கட்டாயமாக்க முயன்று, இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இதன் எதிரொலியாக இந்த விவகாரத்தில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது கண்டனத்தை பதிவுசெய்து பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறி உள்ள முக்கிய அம்சங்கள்:-

    * நமது நாட்டில் பல மொழிகள் உள்ளன. அப்படி இருக்கும்போது ஒரு மொழியை மட்டும் நாட்டின் மொழியாக அறிவிக்க முடியாது. உயர்கல்வி நிறுவனங்களில் இந்தியை முக்கிய பயிற்றுமொழி ஆக்க முடியாது.

    * இது வேலை தேடுவோர்களையும், மாணவர்களையும் பயத்தில் ஆழ்த்தி உள்ளது. எனவே மத்திய அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளில் வினாத்தாள்கள் அரசியல் சாசனத்தின் 8-வது அட்டவணையில் உள்ள எல்லா மொழிகளிலும் இருக்க வேண்டும்.

    * இளைய தலைமுறையினர் தங்கள் தாய்மொழி தவிர்த்து பிற மொழிகளைக் கற்றுக்கொள்ள ஊக்கப்படுத்தலாம். அதே வேளையில் ஒரு மொழியை திணிக்கும் முயற்சி என்பது பொதுவாக மக்களிடமும், குறிப்பாக வேலை தேடுவோர் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தி விடும்.

    'பிரதமர் தலையிட வேண்டும்'

    * மற்ற மொழிகளை காட்டிலும், எந்த ஒரு குறிப்பிட்ட மொழியையும் பயிற்றுமொழியாக்க முன்னுரிமை தரக்கூடாது. அப்படி செய்வது திணிப்பாகவே பார்க்கப்படும். அது, நமது கூட்டுறவு கூட்டாட்சி முறைக்கு நல்லதல்ல.

    * இந்த விவகாரத்தில் நீங்கள் கூடிய விரைவில் தலையிட்டு, தேவையான, சரிப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.

    தெலுங்கானாவும் எதிர்ப்பு

    இந்தி திணிப்பு முயற்சிக்கு தெலுங்கானா மாநிலமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக, அங்கு ஆளுங்கட்சியாக உள்ள தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் செயல் தலைவரும், முதல்-மந்திரி சந்திரசேகரராவின் மகனுமான கே.டி.ராமாராவ் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    இந்தியாவுக்கு தேசிய மொழி என்று ஒன்று கிடையாது. பிற அலுவல் மொழிகளுடன் இந்தியும் ஒன்று. ஐ.ஐ.டி.களிலும், பிற மத்திய வேலை வாய்ப்பு தேர்வுகளிலும், இந்தியை கட்டாயமாக திணிப்பதின்மூலம், பா.ஜ.க. கூட்டணி அரசு கூட்டாட்சி உணர்வினை மீறுகிறது.

    மொழியை தேர்வு செய்வதற்கு இந்தியர்களுக்கு வாய்ப்பு இருக்க வேண்டும். இந்தி திணிப்பு கூடாது என்றே நாங்கள் சொல்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இந்தி திணிப்பு முயற்சிக்கு எதிராக தென் மாநிலங்கள் போர்க்கொடி உயர்த்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இந்தி திணிப்பு தமிழகத்தில் ஒரு நாளும் வெற்றி பெறாது என்று திருநாவுக்கரசர் எம்.பி. தெரிவித்தார்.
    • யார் வேண்டுமானாலும் தேவர் நினைவிடத்துக்கு வரலாம்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் மற்றும் திருச்சி பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட கலெக்டர் கவிதா ராமு முன்னிலையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பிறகு திருநாவுக்கரசர் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு பிரதமர் வருவது என்பது அவருடைய முடிவு. யார் வேண்டுமானாலும் தேவர் நினைவிடத்துக்கு வரலாம்.

    காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் எந்த அணியையும் சாராமல் நடுநிலைமையாகத்தான் உள்ளனர். பிரசாரத்துக்கு வரும் வேட்பாளர்களுக்கு ஆதரவு கொடுப்பது என்பது அந்தந்த நிர்வாகிகளின் முடிவை பொருத்தது.

    மத்திய அரசு இந்தியை மீண்டும் திணிக்க முயற்சி செய்வது கண்டனத்துக்குரியது. இந்தி திணிப்பு தமிழகத்தில் ஒரு நாளும் வெற்றி பெறாது. அவ்வாறு முயற்சி செய்தால் போராட்டம் வெடிக்கக்கூடிய சூழல் ஏற்படும்.

    சட்டப்பேரவையில் அ.தி.மு.க.வினருக்கு இருக்கை ஒதுக்குவது தொடர்பாக சட்டப்பேரவை தலைவர் என்ன முடிவு எடுக்க உள்ளார் என்பதை அறிய ஆவலாக உள்ளேன் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் மாவட்ட வளர்ச்சி 

    • மாநில மொழிகளுக்கு எதிராக இந்தியை நிறுத்த தவறான பிரசாரம் நடந்து வருகிறது.
    • நாட்டில் உள்ள எந்த மொழிக்கும் இந்தி போட்டியாளராக இருக்க முடியாது.

    சூரத் :

    குஜராத் மாநிலம் சூரத்தில் அகில இந்திய அலுவல் மொழி மாநாடு நடைபெற்றது. அதில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-

    மாநில மொழிகளுக்கு எதிராக இந்தியை நிறுத்த தவறான பிரசாரம் நடந்து வருகிறது. இந்தியும், குஜராத்தியும் போட்டியாளர்கள், இந்தியும், தமிழும் போட்டியாளர்கள், இந்தியும், மராத்தியும் போட்டியாளர்கள் என அவர்கள் பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    நாட்டில் உள்ள எந்த மொழிக்கும் இந்தி போட்டியாளராக இருக்க முடியாது. நாட்டில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் இந்தி நண்பன் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    இந்தி செழுமை அடையும்போதுதான் மாநில மொழிகளும் செழுமை அடையும். இந்தியையும் ஒன்றாக வைத்துக்கொண்டே மாநில மொழிகளை வலுப்படுத்துவது அவசியம்.

    மொழிகள் இணைந்து இருப்பதன் அவசியத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். மற்ற மொழிகளில் இருந்து வார்த்தைகளை எடுத்துக் கொள்ளும் அளவுக்கு இந்தியை நெகிழ்வுத்தன்மை கொண்டதாக ஆக்க வேண்டும்.

    மொழிகளின் ஒருங்கிணைப்பை நாம் ஏற்றுக்கொள்ளாதவரை நமது சொந்த மொழியில் நாட்டை வழிநடத்தும் கனவை நனவாக்க முடியாது.

    அனைத்து மொழிகளையும், தாய்மொழியையும் உயிர்ப்புடனும், செழிப்பாகவும் வைத்துக்கொள்வது நமது நோக்கமாக இருக்க வேண்டும். எல்லா மொழிகளின் செழிப்பில்தான் இந்தியும் செழிப்பாக இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மத்திய பிரதேச மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் இந்தி, ஆங்கிலம் மற்றும் ஹிங்கிலீஸ் ஆகிய மொழிகளில் தேர்வு எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    போபால்:

    மத்திய பிரதேச மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் அம்மாநிலத்தில் 312 கல்லூரிகள் உள்ளன. எம்.பி.பி.எஸ், ஆயுர்வேத மருத்துவம் மற்றும் பல பட்டய படிப்புகள் இப்பல்கலைக்கழகத்தின் கீழ் பயிற்று விக்கப்படுகிறது. இந்நிலையில், இனிவரும் தேர்வுகளை மாணவர்கள் இந்தி, ஆங்கிலம் மற்றும் ஹிங்கிலீஷ் ஆகிய மொழிகளில் எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஹிங்கிலீஸ் என்பது இந்தியையும் இங்கிலீஷையும் கலந்து எழுதும் வகையாகும். அதாவது பேசும் இந்தியை ஆங்கில எழுத்தில் எழுதும் முறை. தமிழ் உள்ளிட்ட எல்லா பிராந்திய மொழிகளும் இவ்வாறு எழுதப்பட்டு வருகிறது. கிராமப்புற பகுதிகளில் இருந்து வரும் மாணவர்கள் தங்களுக்கு பதில் தெரிந்தும் ஆங்கில புலமை இல்லாததால் பதில் எழுத சிரமப்படுகின்றனர்.

    இதன் காரணமாக இந்தியையும் ஆங்கிலத்தையும் கலந்து எழுத அனுமதித்துள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. 
    ×