search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தி திணிப்பு விவகாரம்: விமர்சனங்களை பா.ஜனதா நிராகரித்தது
    X

    இந்தி திணிப்பு விவகாரம்: விமர்சனங்களை பா.ஜனதா நிராகரித்தது

    • ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியையும், மாநில மொழிகளையும் முன்னிறுத்துவதில் எந்த தவறும் இல்லை.
    • ஒவ்வொரு மாநிலத்திலும் அங்குள்ள தாய்மொழியை மோடி அரசு ஊக்குவித்து வருகிறது.

    புதுடெல்லி :

    இந்தி பேசும் மாநிலங்களில், ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இந்தியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும், மற்ற மாநிலங்களில் மாநில மொழிகளே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற குழு சிபாரிசு செய்துள்ளது.

    இதற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்தியை திணித்து இன்னொரு மொழிப்போருக்கு வித்திட வேண்டாம் என்று அவர் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

    காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., விடுதலைச்சிறுத்தைகள், நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயனும் ஆட்சேபனை தெரிவித்தார். பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    இந்தநிலையில், இந்த எதிர்ப்புகளை பா.ஜனதா நிராகரித்துள்ளது. பா.ஜனதா பொதுச்செயலாளரும், தமிழ்நாடு பா.ஜனதாவின் மேலிட பொறுப்பாளருமான சி.டி.ரவி கூறியதாவது:-

    நாடாளுமன்ற குழு, ஆங்கிலத்துக்கு மாற்றாகத்தான் இந்தியை முன்னிறுத்துகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி போன்ற மாநில மொழிகளுக்கு மாற்றாக இந்தியை சிபாரிசு செய்யவில்லை.

    ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியையும், மாநில மொழிகளையும் முன்னிறுத்துவதில் எந்த தவறும் இல்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் அங்குள்ள தாய்மொழியை மோடி அரசு ஊக்குவித்து வருகிறது.

    கடிதம் எழுதிய தலைவர்கள், தமிழின் பெருமையையோ, மலையாளத்தின் பெருமையையோ வலியுறுத்தி கடிதம் எழுதி இருந்தால், பா.ஜனதா அதை வரவேற்கும்.

    ஆனால் அவர்கள் ஆங்கிலத்துக்கு ஆதரவாக கடிதம் எழுதி இருப்பது சரியல்ல. ஆங்கிலத்தை பயன்படுத்தும் மனப்பான்மையுடன் உள்ளனர். அவர்கள் காலனி மனப்பான்மையில் இருந்து வெளியே வரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×