search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆயுள் தண்டனை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 1981-ம் ஆண்டு சத்பூர் என்ற கிராமத்தில் நடைபெற்ற வன்முறையில் பத்து பேர் கொல்லப்பட்டனர்.
    • நாட்டையே உலுக்கிய கொலை வழக்கில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

    90 வயது முதியவருக்கு ஃபிரோசாபாத் மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. 1981-ம் ஆண்டு பத்து பேரை கொலை செய்த வழக்கில் நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை வழங்கி இருக்கிறது. இதுதவிர குற்றவாளிக்கு ரூ. 55 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு இருக்கிறது. 42 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கொலை சம்பவம், நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    1981-ம் ஆண்டு சத்பூர் என்ற கிராமத்தில் நடைபெற்ற வன்முறையில் பத்து பேர் கொல்லப்பட்டனர். மேலும் இரண்டு பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. வன்முறை தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பத்து பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். அதன்படி இந்திய தண்டனை சட்டம் 302 மற்றும் 307 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கின் விசாரணை முதற்கட்டமாக மெயின்பூரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பிறகு ஃபிரோசாபாத் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை ஃபிரோசாபாத் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. நாட்டையே உலுக்கிய கொலை வழக்கில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

    பத்து பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ஒருவேளை அபராதம் செலுத்த தவறும் பட்சத்தில், சிறை தண்டனை மேலும் 13 மாதங்கள் வரை நீட்டிக்கப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    • மீனவ கிராமத்தினருக்குள் மோதல் ஏற்பட்ட காரணத்தினால் அ.தி.மு.க. பிரமுகர் பஞ்சநாதன் கொலை செய்யப்பட்டார்.
    • கடலூர் நீதிமன்றத்தில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் தேவனாம்பட்டினம் மற்றும் சோனாங்குப்பம் மீனவ கிராமத்தினருக்குள் மோதல் ஏற்பட்ட காரணத்தினால் அ.தி.மு.க. பிரமுகர் பஞ்சநாதன் கொலை செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் நேற்று கடலூர் நீதிமன்றத்தில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக கடலூர் மாவட்ட மீனவர்கள் இடையே பெரும் பரபரப்பு நிலவியது. இந்த நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரின் நேற்று முன்தினம் முதல் கடலூர் தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம், தாழங்குடா, கடலூர் துறைமுகம் மற்றும் சுற்றுவட்டார மீனவ கிராமத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் போலீசாருக்கும், மீனவர்களுக்கும் தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பெரும் பதட்ட நிலை காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் மீனவ கிராமத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக மீனவர் கிராம பகுதிகளில் பொதுமக்கள் கும்பலாக கூடுவதற்கு போலீசார் அனுமதி அளிக்காமல் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆற்று கரையோரம் மற்றும் துறைமுகம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுளுக்கு போலீசார் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் மீனவ கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • ஜமீலாபானு அலுவலகத்தில் புகுந்து அவருடைய மகள் அமிர்நிஷாவை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்.
    • பாதிக்கப்பட்ட தாய், மகளுக்கு மொத்தம் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

     திருப்பூர் :

    திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர் ஜமீலா பானு (வயது 40). இவர் திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் அரசு வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவருடைய மகள் அமிர்நிஷா (21). இவர் சேலத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார்.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந்தேதி மதியம் 2.20 மணிக்கு ஜமீலா பானு மற்றும் அவருடைய மகள் ஆகியோர் திருப்பூர் குமரன் ரோட்டில் தனியார் வணிக வளாகத்தில் உள்ள தங்களது வக்கீல் அலுவலகத்தில் இருந்து பணியாற்றிக்கொண்டிருந்தனர்.அப்போது திருப்பூர் பெரியதோட்டத்தை சேர்ந்த வக்கீல் ரகுமான்கான் (26) என்பவர் ஜமீலாபானு அலுவலகத்தில் புகுந்து அவருடைய மகள் அமிர்நிஷாவை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். மேலும் தடுக்க வந்த ஜமீலாபானுவுக்கும் தலை, கையில் வெட்டு விழுந்தது. அதன்பிறகு அங்கிருந்து ரகுமான்கான் தப்பினார்.

    இதில் படுகாயம் அடைந்த தாய்-மகள் இருவரையும் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதைத்தொடர்ந்து திருப்பூர் வடக்கு போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அமிர்நிஷா சேலம் கட்டக்கல்லூரியில் படிக்க சென்றபோது, ரகுமான் கான் அவருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் ரகுமான்கானை கைது செய்துள்ளனர்.

    இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த ரகுமான் கான் கோபத்தில் தாய்-மகளை வெட்டியது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் ரகுமான் கானை வடக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ரகுமான் கான் திருப்பூர் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதால் குண்டர் சட்டத்தில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து தமிழ்நாடு பார்கவுன்சில் அவரை வக்கீல் தொழில் செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. தாய்-மகளை அரிவாளால் வெட்டிக்கொலை செய்ய முயன்ற குற்றத்துக்காக ரகுமான் கானுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட தாய், மகளுக்கு மொத்தம் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் அத்துமீறி வக்கீல் அலுவலகத்துக்குள் நுழைந்த குற்–றத்–துக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், பெண்களை தொல்லை செய்த குற்றத்துக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார்.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் மாவட்ட குற்றத்துறை அரசு வக்கீல் கனகசபாபதி ஆஜராகி வாதாடினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த வழக்கில் உதவுவதற்காக பெண் வக்கீலகள் சத்யா, பூங்கொடி ஆகியோர் நியமிக்கப்பட்டு இருந்தனர்.இந்த வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஒரு மாதத்துக்குள் சாட்சி விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அதுபோல் கொலைமுயற்சி வழக்கில் மாவட்ட நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை வழங்குவது இதுவே முதல் முறை என்று வக்கீல்கள் தெரிவித்தனர்.

    • விஜயராமின் மனைவி சண்டை போட்டுக்கொண்டு அம்மா வீட்டுக்கு சென்று விட்டார்
    • வாக்குவாதத்தில் வீட்டில் இருந்த அருவா மனையால் தந்தை பாலுச்சாமியை விஜயராம் வெட்டினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலுசாமி (வயது 60) விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி வெள்ளையம்மாள். இவர்களது மகன் விஜயராம் (36).     இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. விஜயராமின் மனைவி சண்டை போட்டுக்கொண்டு அம்மா வீட்டுக்கு சென்று விட்டார். மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க அவருடைய அப்பா பாலுச்சாமி, அம்மா வெள்ளையம்மாளிடம் வலியுறுத்தினார்.

    இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் வீட்டில் இருந்த அருவா மனையால் தந்தை பாலுச்சாமியை விஜயராம் வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே பாலுசாமி இறந்துவிட்டார். மேலும், இவரது தாயார் வெள்ளையம்மாள் தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது  இதில் தந்தையை கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், தாயாரை தலையில் அடித்து காயம் ஏற்படுத்தியதற்காக 3 ஆண்டு சிறையும் ரூ.1000 அபராதமும் விதித்து நீீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து விஜய்ராமனை உளுந்தூர்பேட்டை போலீசார் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தகராறு முற்றிய நிலையில் மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துள்ளார்.
    • நீதிபதி சையத் பர்க்கத்துல்லா குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் ஜடையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சென்னையன் (வயது33). இவருக்கும், இவரது மனைவி ஆஷாவுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுவந்தது.

    இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தகராறு முற்றிய நிலையில் மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துள்ளார். படுகாயமடைந்த ஆஷா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    அரூர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்திருந்தனர். இது தொடர்பான வழக்கு தருமபுரி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இறுதிகட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் சென்னையன் குற்றம் செய்தது உறுதியானதையடுத்து நீதிபதி சையத் பர்க்கத்துல்லா குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். அரசு தரப்பில் வழக்கறிஞர் கல்பனா வாதாடினார். 

    • வெடிகுண்டு வைத்து கொன்றுவிடுவதாக அஸ்வத்தை வெங்கட்ரமணப்பா போதையில் மிரட்டியுள்ளார்.
    • 10 ஆண்டுகளுக்கு பின் வழக்கில் நீதிபதி ரோஸ்லின் துரை தீர்ப்பு அளித்தார்.

    ஓசூர்,

    கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் மாலூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடரமணப்பா (55). அதேபோல், கர்நாடக மாநிலம் மாஸ்தி பகுதியை அடுத்துள்ள தொட்ட ஹள்ளள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அஸ்வத் (35). இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவர்.

    வெங்கட்ரமணப்பா மற்றும் அஸ்வத் ஆகிய இருவரும் சூளகிரி அருகேயுள்ள ஏனுசோனை கிராமத்தில் ரவி என்பவருக்கு சொந்தமான கோழி பண்ணையில் கூடாரம் அமைக்கும் வேலை பார்த்து வந்தனர்.

    கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி, கோழிப்பண்ணையில் இருவரும் மது அருந்தியபோது, குடி போதையில் ஒருவருக்கொருவர் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.மேலும், வெடிகுண்டு வைத்து கொன்றுவிடுவதாக அஸ்வத்தை வெங்கட்ரமணப்பா போதையில் மிரட்டியுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த அஸ்வத், அரிவாளால் வெட்டி வெங்கடரமணப்பாவை கொலை செய்துள்ளார். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சூளகிரி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு கொலையாளி அஸ்வத்தை கைது செய்தனர். இந்த கொலை வழக்கு, ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பின் வழக்கில் நீதிபதி ரோஸ்லின் துரை தீர்ப்பு அளித்தார். அதில் கூலி தொழிலாளியை கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அஸ்வத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

    • இந்த வழக்கினை தருமபுரி மதிகோன்பாளையம் காவல்துறையினர் கொலை வழக்காக பதிவு செய்தனர்.
    • குற்றவாளி பாக்யராஜுக்கு 14 வருடம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி அருகே குண்டலப்பட்டி நடுவீதி பகுதியைச் சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி பாக்யராஜ் (வயது32). இவரது மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக குண்டலப்பட்டி ஓம் சக்தி கோவில் அருகே உள்ள சந்தோஷ் குமார் (35) என்பவரை கடந்த 13.9.2020 ஆம் வருடம் மாலை பாக்யராஜ் கத்தியால் குத்தினார். இதில் அவர் உயிரிழந்தார்.

    இந்த வழக்கினை தருமபுரி மதிகோன்பாளையம் காவல்துறையினர் கொலை வழக்காக பதிவு செய்தனர். இந்த வழக்கு தருமபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    நேற்று இறுதி கட்ட விசாரணை முடிவடைந்து பாக்யராஜ் குற்றவாளி என நிரூபணம் ஆனதை அடுத்து நீதிபதி மோனிகா குற்றவாளி பாக்யராஜுக்கு 14 வருடம் ஆயுள் தண்டனையும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

    • உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • வெள்ளிச்சந்தை போலீசார் எவரெஸ்ட் மீது இந்திய தண்டனைச் சட்டம் 302, 449 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    நாகர்கோவில்:

    வெள்ளிச்சந்தை அருகே கீழமுட்டம் அலங்கார மாதா தெருவை சேர்ந்தவர் எவரெஸ்ட் (வயது 23).

    இவர் அழிக்கால் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்தார். காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் சிறுமியை எச்சரித்தனர். இதனால் அவர் எவரெஸ்ட் உடன் பேசுவதை தவிர்த்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2013 -ம் ஆண்டு மே மாதம் 25-ந்தேதி சிறுமியின் வீட்டுக்கு சென்ற எவரெஸ்ட் அவரது உடலில் டீசலை ஊற்றி தீ வைத்தார். பின்னர் அங்கிருந்து எவரெஸ்ட் தப்பி ஓடிவிட்டார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அதே மாதம் 29-ந் தேதி சிறுமி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசார் எவரெஸ்ட் மீது இந்திய தண்டனைச் சட்டம் 302, 449 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட எவரெஸ்ட் ஜாமினில் விடுதலை ஆனார்.

    இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜோசப் ஜாய் இன்று தீர்ப்பு கூறினார். இதையடுத்து எவரெஸ்ட் கோர்ட்டில் ஆஜரானார்.

    தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட எவரெஸ்ட்டுக்கு கொலை வழக்கிற்காக ஆயுள் தண்டனையும், மரணம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக 10 வருடம் ஜெயில் தண்டனையும் மற்றும்ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். எவரெஸ்ட்டிற்கு தண்டனை அறிவிக்கப்பட்டதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை ஜெயிலுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் லிவிங்ஸ்டன் ஆஜரானார்.

    • மிட்டாய் தருகிறேன் என்று கூறி செல்வராஜ், சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.
    • சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் செல்வராஜூக்கு ஆயுள் தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு அளித்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் மேட்டுப்பாளையம் லத்துவாடி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 74). இவர் அந்த பகுதியில் பெட்டிக்கடை வைத்து உள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி 8 வயது சிறுமி மிட்டாய் வாங்க பெட்டிக்கடைக்கு சென்றாள்.

    அப்போது மிட்டாய் தருகிறேன் என்று கூறி செல்வராஜ், சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதுகுறித்து ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவர் செல்வராஜை கைது செய்தனர்.

    இந்த வழக்கு சேலம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் செல்வராஜூக்கு ஆயுள் தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு அளித்தார்.

    மேலும் ஆயுள் தண்டனை பெற்ற செல்வராஜை கோவை மத்திய ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி போலீசார், அவரை அழைத்துச் சென்று கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    • செந்தில்குமாா் மனைவியைக் கத்தியால் குத்தியுள்ளாா்.
    • அரசு தரப்பில் வக்கீல் ஜமீலாபானு ஆஜரானாா்.

    குண்டடம் :

    திருப்பூா் மாவட்டம் தாராபுரம் வட்டம் குண்டடத்தை அடுத்துள்ள மரவபாளையத்தைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (வயது 45), கூலி தொழிலாளி. இவரது மனைவி துளசிமணி (42). இவா்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், செந்தில்குமாா் அடிக்கடி மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதனிடையே மனைவியுடன் கடந்த 2019 ம் ஆண்டு ஜனவரி 20ந்தேதி தகராறில் ஈடுபட்டுள்ளாா். இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமாா் மனைவியைக் கத்தியால் குத்தியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த துளசிமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

    இது குறித்து குண்டடம் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனா்.இந்த வழக்கானது திருப்பூா் விரைவு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி பாலு தீா்ப்பு அளித்தாா்.இதில் குற்றம் சாட்டப்பட்ட செந்தில்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும் அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா். அரசு தரப்பில் வக்கீல் ஜமீலாபானு ஆஜரானாா்.

    • கோபமடைந்த சரத்குமார், பிரியங்காவின் தந்தை தங்கவேல், தம்பி நந்தகுமார் ஆகியோர் பார்த்திபனை கத்தியால் குத்தி கொலை செய்தனர்.
    • பார்த்திபன் கொலை வழக்கு தொடர்பாக தங்கவேல் மற்றும் சரத்குமார், நந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்தவர் தங்கவேல் (வயது 45), கூலி தொழிலாளி. இவரது மகள் பிரியங்கா. மகன் நந்தகுமார். பிரியங்கா சங்ககிரி அருகே உள்ள ஓட்டலில் பணியாற்றி வந்தார். பின்னர் பிரியங்காவிற்கு சரத்குமார் என்பவருடன் திருமணம் செய்து வைக்கப்பட்டு அவர்கள் தனியே வசித்து வந்தனர்.

    இதனிடையே தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் பார்த்திபன் (வயது 35) என்பவர் சங்ககிரி அருகே உள்ள கிரானைட் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் ஓட்டலுக்கு சென்றபோது இளம் பெண் பிரியங்காவிற்கும், பார்த்திபனுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    இதை அறிந்த பிரியங்காவின் கணவர் சரத்குமார் பார்த்திபனை கண்டித்தார். இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு பார்த்திபன் குடிபோதையில் பிரியங்காவின் வீட்டுக்கு சென்று அவரிடம் தகராறு செய்தார்.

    இதில் கோபமடைந்த சரத்குமார், பிரியங்காவின் தந்தை தங்கவேல், தம்பி நந்தகுமார் ஆகியோர் பார்த்திபனை கத்தியால் குத்தி கொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பார்த்திபன் கொலை வழக்கு தொடர்பாக தங்கவேல் மற்றும் சரத்குமார், நந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கு விசாரணை சேலம் முதலாவது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை அரசு வக்கீல் துரைராஜ் வாதிட்டு நடத்தினார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகநாதன் இன்று தீர்ப்பு கூறினார். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட தங்கவேல், சரத்குமார், நந்தகுமார் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

    • 1994-ம் ஆண்டு சீட்டு பணத் தகராறில் தனது தாயின் சகோதரரை கூட்டாளிகள் 4 பேருடன் சேர்ந்து வெட்டி கொலை செய்தார்.
    • மகன் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் சசிகுமார் தொடர்ந்து செல்போனில் பேசி வருவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    போரூர்:

    சென்னை சாலிகிராமம், அடுத்த தசரதபுரம் பகுதியை சேர்ந்தவர் சசி என்கிற சசிகுமார் (வயது49) ரவுடி.

    இவர் கடந்த 1994-ம் ஆண்டு சீட்டு பணத் தகராறில் தனது தாயின் சகோதரரை கூட்டாளிகள் 4 பேருடன் சேர்ந்து வெட்டி கொலை செய்தார். இவ்வழக்கில் சசிகுமார் உள்பட 5பேரையும் விருகம்பாக்கம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கில் சசிகுமார் உள்பட 5 பேருக்கும் கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

    கடந்த 2009-ம் ஆண்டு பரோலில் வந்த சசிகுமார் திடீரென தலைமறைவாகிவிட்டார் அவரை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். ஆனால் அவர் சிக்கவில்லை.

    இந்நிலையில் மகன் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் சசிகுமார் தொடர்ந்து செல்போனில் பேசி வருவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சசிகுமாரின் குடும்ப உறுப்பினர்களின் செல்போன் எண்ணை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது கோயமுத்தூர் மேட்டுப்பாளையத்தில் இருந்து கல்லூரியில் படித்து வரும் மகனிடம் சசிகுமார் அடிக்கடி பேசி வருவது தெரியவந்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் ஜார்ஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் மேட்டுப்பாளையம் விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த சசிகுமாரை கைது செய்தனர். தலைமறைவான சசிகுமார் மேட்டுப்பாளையம் சென்று முதலில் டிராவல்ஸ் கார் ஓட்டி வந்தார். தற்போது படிப்படியாக உயர்ந்து அங்கிருந்து கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு அனுப்பி வைக்கும் தொழில் செய்து வருவதும் தெரிய வந்தது.

    சுமார் 14 ஆண்டுகள் போலீசுக்கு தண்ணி காட்டி வந்த சசிகுமாரை போலீசார் பிடித்து உள்ளனர்.

    ×