என் மலர்
உள்ளூர் செய்திகள்

நண்பரை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை
- வெடிகுண்டு வைத்து கொன்றுவிடுவதாக அஸ்வத்தை வெங்கட்ரமணப்பா போதையில் மிரட்டியுள்ளார்.
- 10 ஆண்டுகளுக்கு பின் வழக்கில் நீதிபதி ரோஸ்லின் துரை தீர்ப்பு அளித்தார்.
ஓசூர்,
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் மாலூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடரமணப்பா (55). அதேபோல், கர்நாடக மாநிலம் மாஸ்தி பகுதியை அடுத்துள்ள தொட்ட ஹள்ளள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அஸ்வத் (35). இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவர்.
வெங்கட்ரமணப்பா மற்றும் அஸ்வத் ஆகிய இருவரும் சூளகிரி அருகேயுள்ள ஏனுசோனை கிராமத்தில் ரவி என்பவருக்கு சொந்தமான கோழி பண்ணையில் கூடாரம் அமைக்கும் வேலை பார்த்து வந்தனர்.
கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி, கோழிப்பண்ணையில் இருவரும் மது அருந்தியபோது, குடி போதையில் ஒருவருக்கொருவர் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.மேலும், வெடிகுண்டு வைத்து கொன்றுவிடுவதாக அஸ்வத்தை வெங்கட்ரமணப்பா போதையில் மிரட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அஸ்வத், அரிவாளால் வெட்டி வெங்கடரமணப்பாவை கொலை செய்துள்ளார். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சூளகிரி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு கொலையாளி அஸ்வத்தை கைது செய்தனர். இந்த கொலை வழக்கு, ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பின் வழக்கில் நீதிபதி ரோஸ்லின் துரை தீர்ப்பு அளித்தார். அதில் கூலி தொழிலாளியை கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அஸ்வத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.






