search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vigilance police"

    சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ. 3½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
    சென்னை:

    சென்னை சேப்பாக்கத்தில் கொதிகலன் (பாய்லர்) இயக்குனரக அலுவலகம் உள்ளது.

    இங்கு கணக்கில் வராத பணம் லட்சக்கணக்கில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த அலுவலகத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது கொதிகலன் இயக்குனரான சக்திவேல் என்பவரது காரில் இருந்து ரூ.3 லட்சத்து 14 ஆயிரம் சிக்கியது. மேலும் அலுவலகத்தில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்தும் போலீசார் சோதனையிட்டனர். அப்போது அவரிடம் ரூ.17 ஆயிரம் பணம் இருந்தது. அந்த பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அதே அலுவலகத்தில் துணை இயக்குனராக இருக்கும் சிவகுமாரின் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது ரூ.15 ஆயிரத்து 500 பணம் பிடிபட்டது. அலுவலக பணியாளர் ஒருவரிடமிருந்து ரூ.3500 சிக்கியது. இந்த 2 சோதனைகளிலும் மொத்தம் ரூ.3½ லட்சம் பணம் பிடிபட்டது. தொழில் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் கொதிகலன்கள் பயன்படுத்தக் கூடிய திறனுடன் உள்ளதா? என்பதை ஆய்வு செய்யும் பணியையே கொதிகலன் இயக்குனர் அலுவலகம் செய்து வருகிறது. தற்போது தீபாவளி நேரம் என்பதால் தொழில் நிறுவனங்களிடமிருந்து மாமூலாக இந்த பணம் பெறப்பட்டிருக்கலாம் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் கருதுகிறார்கள். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    அரசு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்தி இருக்கும் இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    முதலமைச்சர் பழனிசாமி மீதான் சிபிஐ விசாரணை குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் மேல்முறையீடு செய்யும் என்று தான் கூறவில்லை என முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார். #ADMK #Ponnaiyan #EdappadiPalaniswami #MKStalin
    சென்னை:

    சென்னை அண்ணாநகரில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் சி.பொன்னையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான புகாரில் சி.பி.ஐ. விசாரணையில் மேல்முறையீடு குறித்து நான் சொல்லாததை சொன்னது போல் மு.க. ஸ்டாலின் ஒரு குற்றச்சாட்டை கூறி இருக்கிறார்.

    அதாவது சி.பி.ஐ. விசாரணை குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் அப்பீல் செய்யும் என்ற கருத்தை நான் கூறியதாக சொல்லி இருக்கிறார். அது தவறான தகவல். உண்மைக்கு மாறானது.

    லஞ்ச ஒழிப்பு போலீஸ் என்பது ஒரு தன்னிச்சையான, தன்னாட்சி நிலையிலே செயல்படுகிற ஒரு அமைப்பு. உச்சநீதிமன்ற ஆணையின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் செயல்படுகிறது.

    இது அகில இந்திய அளவில் இருக்கிற ஒரு நடைமுறை. சி.பி.ஐ. என்ற அமைப்பு மைய அரசின் அமைப்பு என்ற போர்வையில் இருந்தாலும் நீதிமன்றம் ஒரு ஆணை வெளியிடும் போது நடுநிலை தவறாமல் செயல்படுவது தான் வழக்கமாக உள்ளது.

    இதிலே தன்னாட்சி அமைப்பான லஞ்ச ஒழிப்பு போலீஸ் மேல்முறையீடு செய்யும் என்று நான் கூறியதாக கூறி இருப்பது தவறு.

    என்னிடம் நிருபர்கள் கேட்ட போது அவர்கள் ஒருவேளை அப்பீல் செய்யலாம் என்று பொருள்பட தான் சொன்னேன். அதாவது மேல்முறையீடு செய்யலாம் செல்லாமலும் இருக்கலாம் என்பது தான் இதன் தத்துவம்.

    லஞ்ச ஒழிப்பு துறையை பொறுத்தவரை அது பாதிக்கப்பட்ட ஒரு அமைப்பு என்கிற உணர்வு அவர்களுக்கு வரும்போது அப்பீல் செல்வதா? செல்ல வேண்டாமா? என்று முடிவெடுக்கும் முழு அதிகாரம் அவர்களுக்கு உள்ளது. இதில் ஆட்சிக்கும் சம்பந்தம் இல்லை. அரசாங்கத்துக்கும் சம்பந்தம் இல்லை.


    டெண்டர் விவகாரத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் சம்பந்தம் இல்லை. ஆளும் கட்சியான அ.தி.மு.க.வுக்கும் சிறிதளவும் சம்பந்தம் இல்லை. இதுதான் உண்மை நிலை. அதனால் மேல்முறையீடு என்பது லஞ்ச ஒழிப்பு துறை எடுக்க வேண்டிய முடிவு.

    இதில் தெளிவுப்பட ஆவணங்கள் பேசுகிறது. அன்றையதினம் நான் பேட்டி கொடுத்த போது சற்று பரபரப்பான சூழலாக இருந்தது. எந்த ஒரு விசாரணையாக இருந்தாலும், ஆரம்பகட்ட புலனாய்வு உண்டு. அதன் பிறகு தான் ஆழ்ந்த புலனாய்வு விசாரணை நடைபெறும்.

    ரோடு டெண்டரை பொறுத்தவரை தி.மு.க. ஆட்சியில் ‘பாக்ஸ்’ டெண்டர் நடைமுறை இருந்தது. இதில் யார்? என்ன தொகையை குறிப்பிடுகிறார்கள் என்பது கமிட்டிக்கு தெரியும். ஆட்சியாளர்களுக்கு தெரியும். தி.மு.க. ஆட்சியில் பல தவறுகள் நடந்தது அனைவருக்கும் தெரியும்.

    ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் இப்போது ஆன்லைன் டெண்டர் நடைமுறையில் உள்ளது. இதில் யார் மனு போடுகிறார்கள் எவ்வளவு தொகையை குறிப்பிடுகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. இதில் எந்த தவறுமே நடக்க முடியாது.

    முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நிர்வாக திறமையை, நேர்மையை, இந்தியாவே பாராட்டுகிறது. மத்திய அரசும் பாராட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #Ponnaiyan #EdappadiPalaniswami #MKStalin
    வேலூர் மண்டல நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையை அடுத்து துணை இயக்குனர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரியில் வேலூர் மண்டல நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மனைப்பிரிவுகளுக்கு அங்கீகாரம் அளித்தல், தொழிற்சாலைகள், நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் போன்றவற்றிற்கு கட்டிட வரைபட ஒப்புதல் வழங்குதல் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த அலுவலகத்தில் முறையற்ற பணப்பரிமாற்றம் நடைபெறுவதாக வந்த தகவலை தொடர்ந்து கடந்த 7-ந் தேதி இரவு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.3 லட்சத்து 28 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் துணை இயக்குனர் சுப்பிரமணியன் வள்ளலார் டபுள்ரோடு பகுதியில் வாடகைக்கு ஒரு வீடு எடுத்து அலுவலக பணிகளை மேற்கொண்டு வந்ததும் தெரியவந்தது. அந்த வீட்டிலும் சில ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர். இந்த நிலையில் ரூ.3 லட்சத்து 28 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது மற்றும் தனியாக அலுவலகம் நடத்தியது தொடர்பாக துணை இயக்குனர் சுப்பிரமணியன், அலுவலக மேற்பார்வையாளர் சதாசிவம் ஆகிய இருவரும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
    அமைச்சர் விஜயபாஸ்கர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி தி.மு.க. தலைமை நிலைய வக்கீல் அணி சார்பில் வக்கீல்கள் லஞ்ச ஒழிப்பு போலீசில் மனு அளித்துள்ளனர். #Vijayabaskar #DMK
    ஆலந்தூர்:

    அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ஏற்கனவே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அவரது வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

    ஆனால் சோதனை நடந்த பிறகு இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தி.மு.க. வக்கீல்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.

    இந்தநிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி தி.மு.க. தலைமை நிலைய வக்கீல் அணி சார்பில் வக்கீல்கள் முத்துகுமார், நீலகண்டன் ஆகியோர் இன்று பரங்கிமலை லஞ்ச ஒழிப்பு தலைமை அலுவலகத்துக்கு சென்று அதிகாரி ஜெயந்த் முரளியை சந்தித்து மனு அளித்தனர். அவர் புகார் மனுவை பெற்றுக்கொண்டு அதற்கான ஒப்புதல் சீட்டை அளித்தார்.

    இதுபற்றி வக்கீல்கள் முத்துக்குமார், நீலகண்டன் கூறுகையில், ‘‘வருமான வரித்துறை அளித்த பரிந்துரைப் படி அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளோம்’’ என்றனர். #Vijayabaskar
    குட்கா ஊழல் தொடர்பான ஆவணங்களை வழங்குமாறு லஞ்ச ஒழிப்பு துறைக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியிருந்த நிலையில் அனைத்து ஆவணங்களையும் சி.பி.ஐ.க்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #GutkaScam
    சென்னை:

    சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் குட்கா புகையிலை பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனால் தடையை மீறி குட்கா விற்பனை நடைபெற்றது.

    இந்த நிலையில் வரி ஏய்ப்பு தொடர்பாக வருமான வரித்துறையினர் செங்குன்றத்தில் சில குடோன்களில் சோதனையிட்டபோது அங்கு ரகசியமாக குட்கா போதை பொருள் தயாரித்து பொட்டலங்களாக மாற்றப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

    உயர் போலீஸ் அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு குட்கா விற்பனைக்கு அனுமதி அளித்தது தெரியவந்தது. மேலும் குடோனில் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் யார்- யாருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்ற பட்டியல் இடம் பெற்று இருந்தது.

    இந்த விவகாரத்தை தி.மு.க. சட்டசபையில் கிளப்பியது. இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.

    வழக்கு தொடர்பான ஆவணங்களையும் சேகரித்தது. அதில் குட்கா ஊழலில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் பெயர்கள் இடம் பெற்று இருந்தன.

    இதற்கிடையே குட்கா ஊழலில் உயர் போலீஸ் அதிகாரிகள் மீது புகார் கூறப்படுவதால் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. வழக்கு தொடர்ந்தது. இதை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டு சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட்டது.

    இதையடுத்து வழக்கு விசாரணை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் ஒப்படைத்தனர்.

    இதற்கிடையே குட்கா ஊழலில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து அமலாக்கப்பிரிவு தனியாக விசாரணை நடத்தி வருகிறது.

    வழக்கு தொடர்பான ஆவணங்களை தங்களுக்கு வழங்குமாறு லஞ்ச ஒழிப்பு துறைக்கு அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கடிதம் எழுதினர். ஆனால் வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏற்கனவே சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்து விட்டதாகவும், தங்களிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை என்றும் லஞ்ச ஒழிப்பு துறை மறுத்துவிட்டது.

    இதுபற்றி மாநில லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கூறும்போது, வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சி.பி.ஐ.க்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது. மத்திய அரசின் ஒரு விசாரணை அமைப்புக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்பு 2-வது விசாரணை அமைப்புக்கு அனுப்பி வைக்க தேவையில்லை என்றனர்.

    இதை மறுத்த மத்திய விசாரணை அதிகாரிகள் அதுபோன்ற விதிகளோ, தகவல் பரிமாற்ற வழிமுறைகளோ எதுவும் கிடையாது என்றனர்.  #GutkaScam
    திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.75 ஆயிரம் சிக்கியது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் அருகே வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு வாகன சான்று புதுப்பித்தல், ஓட்டுனர் உரிமம் பெறுதல், ஓட்டுனர் உரிமை புதுப்பித்தல் உள்ளிட்டவற்றுக்கு பலர் வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் இந்த அலுவலகத்தில் பள்ளிகளின் வாகனச்சான்று ஆய்வு செய்யப்பட்டது தொடர்பாக ஆய்வு மேற்கொள்வதற்கு பறக்கும்படை அதிகாரியான விழுப்புரம் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் துரைசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் குண்டுமணி ஆகியோர் நேற்று வந்தனர். அவர்கள் அலுவலகத்தில் ஆய்வு செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது அலுவலகத்திற்குள் திடீரென திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமார், இன்ஸ்பெக்டர்கள் ரஜினிகாந்த், அருள்பிரசாத் மற்றும் போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்தனர். அலுவலகத்தில் இருந்து யாரும் வெளியே செல்லாதவாறும், வெளியே இருந்து யாரும் உள்ளே வராதவாறும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அலுவலகத்தில் போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை செய்தனர். மாலை 4.30 மணிக்கு தொடங்கிய சோதனை நள்ளிரவு வரை நீடித்தது.

    இந்த சோதனையில், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.75 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போக்குவரத்து அலுவலர் துரைசாமி மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    ×