search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையில் ரூ.75 ஆயிரம் சிக்கியது
    X

    வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையில் ரூ.75 ஆயிரம் சிக்கியது

    திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.75 ஆயிரம் சிக்கியது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் அருகே வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு வாகன சான்று புதுப்பித்தல், ஓட்டுனர் உரிமம் பெறுதல், ஓட்டுனர் உரிமை புதுப்பித்தல் உள்ளிட்டவற்றுக்கு பலர் வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் இந்த அலுவலகத்தில் பள்ளிகளின் வாகனச்சான்று ஆய்வு செய்யப்பட்டது தொடர்பாக ஆய்வு மேற்கொள்வதற்கு பறக்கும்படை அதிகாரியான விழுப்புரம் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் துரைசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் குண்டுமணி ஆகியோர் நேற்று வந்தனர். அவர்கள் அலுவலகத்தில் ஆய்வு செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது அலுவலகத்திற்குள் திடீரென திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமார், இன்ஸ்பெக்டர்கள் ரஜினிகாந்த், அருள்பிரசாத் மற்றும் போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்தனர். அலுவலகத்தில் இருந்து யாரும் வெளியே செல்லாதவாறும், வெளியே இருந்து யாரும் உள்ளே வராதவாறும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அலுவலகத்தில் போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை செய்தனர். மாலை 4.30 மணிக்கு தொடங்கிய சோதனை நள்ளிரவு வரை நீடித்தது.

    இந்த சோதனையில், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.75 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போக்குவரத்து அலுவலர் துரைசாமி மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    Next Story
    ×