search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Uniform Civil Code"

    • பிரதமர் நாட்டை ஒரு குடும்பத்துக்கு சமமாகக் குறிப்பிட்டுள்ளார்.
    • பொது சிவில் சட்டம் என்பது ஒரு அபிலாசை.

    புதுடெல்லி :

    காஷ்மீருக்கு சிறப்பு உரிமை அளிக்கும் அரசியல் சட்டத்தின் பிரிவு 370-ஐ நீக்குவது, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது, பொது சிவில் சட்டம் கொண்டு வருவது ஆகிய மூன்றும் பா.ஜ.க.வின் தேர்தல் இலக்கு திட்டங்களாக இருந்து வந்தது.

    இவற்றில் முதல் இலக்கை நிறைவேற்றி விட்டது. இரண்டாவது இலக்கை நிறைவேற்றி வருகிறது. மூன்றாவது இலக்கான பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதில்தான் இழுபறி நிலை நீடித்து வருகிறது.

    அடுத்த சில மாதங்களில் நாடு மக்களவை தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் இந்த விவகாரத்தை மத்தியில் அமைந்துள்ள பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி அரசு இப்போது கையில் எடுத்துள்ளது.

    அந்த வகையில், சமீபத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவது தொடர்பாக 22-வது மத்திய சட்டக்கமிஷன், பொதுமக்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்டுள்ள மத அமைப்புகளின் கருத்துக்களை கேட்க முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டது. அதே நேரத்தில் 21-வது மத்திய சட்டக்கமிஷன், இந்த தருணத்தில் பொது சிவில் சட்டம் என்பது தேவையற்றது, விரும்பத்தக்கது அல்ல என்று கருத்து தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

    இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம், போபாலில் நேற்று முன்தினம் பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார்.

    அப்போது அவர், "2 வகையான சட்டங்களால் நாட்டை வழிநடத்த முடியாது, பொது சிவில் சட்டம் அவசியம்" என ஆணித்தரமாக குறிப்பிட்டது, பெரும் அதிர்வுகளை அரசியல் அரங்கில் உருவாக்கி உள்ளது.

    இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் நேற்று கருத்து தெரிவித்து டுவிட்டரில் பதிவுகளை வெளியிட்டுள்ளார். அவற்றில் அவர் கூறி இருப்பதாவது:-

    பொது சிவில் சட்டம் கொண்டு வருவது பற்றி கருத்து வெளியிட்ட மரியாதைக்குரிய பிரதமர் நாட்டை ஒரு குடும்பத்துக்கு சமமாகக் குறிப்பிட்டுள்ளார். சுருக்கமாக அர்த்தப்படுத்தினால், அவரது ஒப்பீடு உண்மையாக இருக்கலாம். ஆனால் உண்மை மிகவும் மாறுப்பட்டது.

    குடும்பம் என்பது ரத்த உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளது. ஆனால் நாடு, அரசியல், சட்ட ஆவணமான அரசியல் சாசனத்தால் ஒன்றுபடுத்தப்பட்டுள்ளது.

    ஒரு குடும்பத்தில்கூட பன்முகத்தன்மை இருக்கிறது. இந்திய அரசியல் சாசனம், இந்திய மக்களிடையே பன்முகத்தன்மையை அங்கீகரித்துள்ளது.

    பொது சிவில் சட்டம் என்பது ஒரு அபிலாசை. அதை ஒரு செயல் திட்டத்தால் நாட்டை வழிநடத்தும் பெரும்பான்மை அரசால், மக்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்க முடியாது.

    பொது சிவில் சட்டம் கொண்டு வருவது ஒரு எளிதான நடவடிக்கை என்பது போல பிரதமர் அதை தோன்றச்செய்துள்ளார். அவர் கடந்த சட்டக்கமிஷன் அறிக்கையில், "இந்த தருணத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவது சாத்தியம் அல்ல" என்று கூறி இருப்பதை வாசிக்க வேண்டும்.

    நாடு தற்போது பா.ஜ.க.வின் வார்த்தைகளாலும், செயல்களாலும் பிளவுபட்டுள்ளது. பொதுமக்களிடம் பொது சிவில் சட்டத்தை திணித்தால் அது பிளவுகளை விரிவுபடுத்தி விடும்.

    பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாக பிரதமர் ஓங்கிக் குரல் கொடுத்திருப்பதன் நோக்கம், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், வெறுப்புணர்வு குற்றங்கள், பாகுபாடு, மாநிலங்களின் உரிமைகளை மறுத்தல் போன்ற பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதுதான். மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.

    நல்லாட்சி தருவதில் தோல்வி கண்டுவிட்டு, பா.ஜ.க. இப்போது வாக்காளர்களை பிளவுபடுத்தி, அடுத்த தேர்தல்களில் வெற்றிபெற பொது சிவில் சட்டத்தை களம் இறக்குகிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மணிப்பூர் கலவரத்தை பா.ஜ.க. கட்டவிழ்த்து விட்டுள்ளது.
    • எல்லை மாநிலங்கள் முழுவதும் இந்துக்கள் மட்டுமே இருக்க வேண்டும் என பா.ஜ.க. விரும்புகிறது.

    சென்னை :

    மணிப்பூர் கலவரத்திற்கு பா.ஜ.க.வே பொறுப்பு என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. பிரிவு சார்பில் அனைத்துக்கட்சி கண்டன கூட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு மாநில தலைவர் எம்.பி. ரஞ்சன் குமார் தலைமை தாங்கினார்.

    கண்டன கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் கட்சியின் மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, மனித நேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் புதுமடம் ஹலீம் ஆகியோர் மணிப்பூர் கலவரத்திற்கு பா.ஜ.க.வே காரணம் என கண்டன உரையாற்றினர்.

    கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:-

    மணிப்பூரில் மே மாதம் முதல் கலவரம் நடைபெறுகிறது. குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக 3 நாட்கள் கலவரம் நடந்து 2 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டவரை எப்படி காவல்துறை கையை கட்டிக்கொண்டு நின்றதோ, அதே போன்று மணிப்பூரில் இப்போது நடைபெறுகிறது.

    பிரதமர் மோடி நேற்றே தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டார். பொது சிவில் சட்டம் வேண்டும் என்று பிரசாரம் தொடங்கி உள்ளார். வட இந்தியாவில், அதை சொல்லி, இந்துக்கள்- முஸ்லிம்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கம். பல்வேறு மொழி, மதங்களை கொண்ட இந்தியாவில் பொது சிவில் சட்டம் என்பது சாத்தியம் இல்லை. ஒரு மதத்திலேயே ஒற்றுமை இல்லாதபோது எப்படி பொது சிவில் சட்டத்தை கொண்டு வரமுடியும்.

    நம் நாட்டிற்கு பொது சிவில் சட்டம் இப்போது தேவையில்லை. வளர்ச்சி அடைந்த பிறகு கொண்டு வரலாம். அப்போதும், அது தேவையா என்பதை நாம் பார்க்க வேண்டும். இவற்றை மக்களிடையே நாம் அழுத்தமாக சொல்லி பிரசாரம் செய்ய வேண்டும். பொது சிவில் சட்டம் வேண்டும் என்பவர்கள் ஒருபக்கமும், பொது சிவில் சட்டம் வேண்டாம் என்பவர்கள் ஒரு பக்கம் பிரிவார்கள். இதை வைத்து அரசியல் செய்ய பா.ஜ.க. பார்க்கிறது.

    எனவே, தேசம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றால் ஆர்.எஸ்.எஸ்.சையும் பா.ஜ.க.வைவும் அப்புறப்படுத்துவதை தவிர வேறு வழியில்லை. எல்லை மாநிலங்கள் முழுவதும் இந்துக்கள் மட்டுமே இருக்க வேண்டும் என பா.ஜ.க. விரும்புகிறது. இதற்காகவே மணிப்பூர் கலவரத்தை பா.ஜ.க. கட்டவிழ்த்து விட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர்கள் தளபதி பாஸ்கர், எஸ்.ஏ.வாசு, மாவட்டத் தலைவர் சிவ ராஜசேகரன், எஸ்.சி. துறை மாநில துணை தலைவர்கள் வின்சென்ட், நிலவன், மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கே.உமாபாலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • ஒருமித்த கருத்துடன் முன்னோக்கி செல்ல வேண்டும். ஒருமித்த கருத்து இல்லாமல் அதை செயல்படுத்த முடியாது.
    • இந்த பிரச்சினையில் பெரிய அளவில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

    பொது சிவில் சட்டம் அவசியம் என்று தெரிவித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் ஜாபியத் உலமா-இ-ஹிந்த் ஆகிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி இந்த சட்டத்திற்கு ஆதரவாக உள்ளது.

    இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சந்தீப் பதக் கூறியதாவது:-

    கொள்கை அளவில் நாங்கள் பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக இருக்கிறோம். அரசியலமைப்பு சட்டத்தின் 44வது பிரிவு நாட்டில் ஒரே மாதிரியான சிவில் சட்டம் இருக்க வேண்டும் என்பதை ஆதரிக்கிறது. ஆனால் இது அனைத்து மதங்களுடனும் தொடர்புடையது என்பதால், இந்த பிரச்சினையில் பெரிய அளவில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அனைத்து மதத்தினரிடம் இருந்தும், அரசியல் கட்சியினரிடம் இருந்தும் ஆலோசனைகளை பெறவேண்டும். ஒருமித்த கருத்துடன் முன்னோக்கி செல்ல வேண்டும். ஒருமித்த கருத்து இல்லாமல் அதை செயல்படுத்த முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    2024 பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டு பொது சிவில் சட்டம் என்ற ஆயுதத்தை பாஜக கையில் எடுத்துள்ள நிலையில், ஆம் ஆத்மி தலைவரின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    ஒரு குடும்பத்தில் ஒவ்வொருவருக்கு ஒரு சட்டம் இருந்தால் வீட்டை ஒழுங்காக நடத்த முடியாது, அதுபோல்தான் இரண்டு சட்டங்களில் நாடு இயங்க முடியாது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

    • பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
    • பொது சிவில் சட்டமானது சிறுபான்மையினரின் உரிமைகளை பாதிக்கும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கூறி வருகின்றன.

    நாட்டில் இந்துக்கள் பெரும்பான்மையாகவும், கிறிஸ்தவா்கள், முஸ்லிம்கள், சீக்கியா்கள், பவுத்தா்கள், சமணா்கள், பாா்சி இனத்தவா் ஆகியோா் சிறுபான்மையினராகவும் உள்ளனா்.

    திருமணம், விவாகரத்து, சொத்துப் பகிா்வு உள்ளிட்டவற்றுக்கான சட்டங்கள் இந்துக்கள், கிறிஸ்தவா்கள், முஸ்லிம்கள் ஆகியோருக்குத் தனித்தனியாக உள்ளன. அவ்வாறு சட்டங்கள் தனித்தனியாக இருப்பது நிா்வாகத்தில் பெரும் இடையூறுகளை ஏற்படுத்துவதாக மத்திய அரசு கூறி வருகிறது.

    மக்களிடையே ஒற்றுமை உணா்வை ஊக்குவிக்கும் நோக்கில் நாட்டில் அனைத்து சமூக மக்களுக்கும் பொதுவான சட்டங்களை வகுக்க அரசுகள் முயற்சிக்க வேண்டுமென அரசமைப்புச் சட்டத்தின் 44-வது பிரிவு வலியுறுத்துகிறது.

    அதன் அடிப்படையில், நாட்டில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய பா.ஜ.க. முன்னெடுத்து வருகிறது.

    கோவா, குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும், பொது சிவில் சட்டமானது சிறுபான்மையினரின் உரிமைகளை பாதிக்கும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கூறி வருகின்றன. அதை பாஜக நிராகரித்து வருகிறது.

    அடுத்த ஆண்டு பாராளுமன்ற தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், பொது சிவில் சட்ட விவகாரத்தை பா.ஜ.க. முக்கிய ஆயுதமாகக் கையில் எடுத்துள்ளதாக அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா். இந்த நிலையில், பொது சிவில் சட்டம் அவசியமானது என பிரதமா் மோடி கூறியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    • ம.தி.மு.க. சார்பில் நடைபெற்று வரும் கையெழுத்து இயக்கத்திற்கு தி.மு.க. உள்ளிட்ட எங்களின் கூட்டணி கட்சிகள் அனைவரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
    • எங்களுக்குள் எந்தவொரு பிரச்சனையும் இல்லை.

    திருச்சி:

    தமிழ்நாடு கவர்னர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யுமாறு இந்திய குடியரசு தலைவரை கேட்டுக்கொள்ளும் வகையில், ம.தி.மு.க. சார்பில், திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் இன்று கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

    இதனை ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அண்ணா சிலையிலிருந்து சிங்காரத்தோப்பு, பூம்புகார் விற்பனை நிலையம் வரை அவர் நடந்து சென்று பொதுமக்களிடையே கையெழுத்து வாங்கினார். பின்னர் துரை வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக கவர்னரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி ம.தி.மு.க. சார்பில் நடைபெற்று வரும் கையெழுத்து இயக்கத்திற்கு தி.மு.க. உள்ளிட்ட எங்களின் கூட்டணி கட்சிகள் அனைவரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். எங்களுக்குள் எந்தவொரு பிரச்சனையும் இல்லை.

    நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், மணிப்பூர் கலவரம் இதற்கெல்லாம் பதில் கூறாமல், மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக பா.ஜ.க.வினர் பொது சிவில் சட்டம் குறித்து இப்போது பேசுகிறார்கள்.

    நான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்தும், எந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பது குறித்தும் எங்கள் கட்சி தலைமையும், கூட்டணி கட்சி தலைமையும் முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொதுசிவில் சட்டம் அவசியம் என்று கருத்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
    • பொது சிவில் சட்டத்தை பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு கொண்டு வருவோம் என்று மத்திய மந்திரி ராமதாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம் மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது.

    இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி மத்திய பிரதேசத்தில் நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். நாடு முழுவதும் வாக்கு சாவடிகளில் சிறப்பாக செயல்பட்ட பா.ஜனதா நிர்வாகிகளிடம் அவர் உரையாற்றினார்.

    அப்போது பிரதமர் மோடி, 'நாட்டின் சீரான வளர்ச்சிக்கு பொதுசிவில் சட்டம் அவசியம் என்று கருத்து தெரிவித்தார். வாக்கு வங்கி அரசியலுக்காக பொது சிவில் சட்டத்தை சிலர் எதிர்ப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

    கோவா, குஜராத், உள்ளிட்ட பா.ஜனதா ஆளும் மாநிலங்கள் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த முன் வந்துள்ள நிலையில் பிரதமர் மோடியின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    பொது சிவில் சட்டம் அவசியம் என்று தெரிவித்த பிரதமர் மோடியின் இந்த கருத்துக்கு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் ஜாபியத் உலமா-இ-ஹிந்த் ஆகிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    பொது சிவில் சட்டம் தொடர்பாக பிரதமர் தெரிவித்த கருத்து தொடர்பாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் நேற்று இரவு அவசரமாக ஆலோசனை நடத்தியது.

    பொதுசிவில் சட்டம் தொடர்பான சட்ட அம்சங்களை அவர்கள் விவாதித்தனர். 3 மணி நேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    வக்கீல்கள், நிபுணர்களின் கருத்துக்களை கருத்தில் கொண்டு சட்ட ஆணையத்திடம் வரைவு முன்மொழிவை சமர்பிப்பது என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் செய்தி தொடர்பாளர் இலியாஸ் இது தொடர்பாக கூறியதாவது:-

    அனைவருக்கும் அவர்களின் மதம் மற்றும் மரபு சட்டங்களை பின்பற்றுவதற்கான பாதுகாப்பையும், சுதந்திரத்தையும் அரசியல் அமைப்பு வழங்குகிறது.

    ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதை வலியுறுத்தும் வகையில் பொதுசிவில் சட்டம் குறித்த பிரதமரின் கருத்துக்கள் அரசியலமைப்பின் உணர்வோடு பொருந்தவில்லை. அரசியலமைப்புக்கு இது எதிரானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஜாமியத் உலமா அமைப்பின் பிரதிநிதியும் இதே கருத்தை தெரிவித்துள்ளார்.

    பொதுசிவில் சட்டம் அவசியம் என்று கருத்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    இதற்கிடையே பொது சிவில் சட்டத்தை பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு கொண்டு வருவோம் என்று மத்திய மந்திரி ராமதாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

    • எதிர்க்கட்சியினர் பொது சிவில் சட்டத்திற்கெதிராக வாக்குவங்கி அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பாராளுமன்ற கூட்டத்தொடரில் பொது சிவில் சட்ட மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யலாம் என தெரிகிறது.

    பிரதமர் நரேந்திர மோடி, இன்று மத்தியபிரதேச மாநிலத்தில் 5 வந்தே பாரத் ரெயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்பு, நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கட்சித் தொண்டர்களிடம் உரையாற்றினார். பின்னர் கேள்வி-பதில் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை பல முறை சாடினார்.

    அப்போது பொது சிவில் சட்டம் (UCC) மற்றும் முத்தலாக் விவகாரத்தில், முஸ்லிம்களை தூண்டிவிட்டு தவறாக வழி நடத்துவதாக எதிர்க்கட்சிகளை கடுமையாக தாக்கினார்.

    "பொது சிவில் சட்டம் என்ற பெயரில் மக்களை தூண்டி விடுகின்றனர். ஒரு நாடு எவ்வாறு இரண்டு சட்டங்களால் இயங்க முடியும்? அரசியல் சாசனம், பொது சிவில் சட்டத்தை குறித்தும், சம உரிமை குறித்தும் பேசுகிறது. உச்ச நீதிமன்றமும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், இவர்கள் (எதிர்க்கட்சிகள்) பொது சிவில் சட்டத்திற்கெதிராக வாக்குவங்கி அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்" என்றார் மோடி.

    பிரதமர் இவ்வாறு பேசியிருப்பதன் மூலம், வரவிருக்கும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் பொது சிவில் சட்ட மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யலாம் என்ற கருத்து உருவாகி வருகிறது.

    22வது சட்ட கமிஷன், ஜூன் 14 அன்று, இந்த பொது சிவில் சட்டம் தொடர்பான வரைவு மசோதா குறித்து மக்கள் தங்கள் கருத்துக்களையும், பரிந்துரைகளையும், 30 நாட்களுக்குள் தெரிவிக்குமாறு கேட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பொது சிவில் சட்டத்துக்கான சாத்தியக் கூறுகள் குறித்து 21வது சட்ட ஆணையம் ஆராய்ந்தது.
    • மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு மத்திய மந்திரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் கிரிமினல் குற்றங்களுக்கு மட்டுமே ஒரே விதமான சட்டம் இருக்கிறது. சிவில் என்று சொல்லப்படக்கூடிய திருமணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் நாடு முழுவதும் வெவ்வேறு விதமான சட்டப்பிரிவுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவை அனைத்தையும் மாற்றி விட்டு பொது சிவில் சட்டம் என்று ஒரே மாதிரியான சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பதை நீண்ட நாட்களாக பல்வேறு தரப்பினர் கோரிக்கையாக வைத்து வருகின்றனர். பொது சிவில் சட்டத்துக்கான சாத்தியக் கூறுகள் குறித்து 21வது சட்ட ஆணையம் ஆராய்ந்தது.

    இந்த நிலையில் நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். பொது சிவில் சட்டம் தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அவர் பதில் அளித்துள்ளார்.

    பொது சிவில் சட்டத்துக்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அது தொடர்பான பல்வேறு பிரச்சனைகளை ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்குமாறு 21வது சட்ட ஆணையத்திடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. 21வது சட்ட ஆணையத்தின் பதவிக்காலம் 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 31 அன்று முடிவடைந்துவிட்டது. சட்ட ஆணையத்திடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, பொது சிவில் சட்டம் தொடர்பான விஷயத்தை 22வது சட்ட ஆணையம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளலாம்' என்றும் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

    • குழு அமைப்பது என மாநில அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்.
    • உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படுகிறது.

    நாடு முழுவதும் உள்ள அனைத்து மதத்தை சேர்ந்த மக்களுக்கு ஒரே மாதிரியான உரிமைகளை அளிக்கும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மாநில பாஜக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஆமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி, உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரே மாதிரியான குடிமைச் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து மதிப்பீடு செய்ய, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் கீழ், ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

    அதேபோல் ஒரு குழுவை அமைக்கும் திட்டத்திற்கு குஜராத் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த குழுவுக்கு அம்மாநில உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமை வகிப்பார் என்றும், இதில் 3 முதல் 4 உறுப்பினர்கள் வரை இடம் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் குஜராத் அரசின் இந்த அறிவிப்புக்கு அம்மாநில காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாஜக அரசின் இந்த முடிவு சட்டசபை தேர்தலுக்கு முன்பான ஒரு ஏமாற்று வேலை என்று குஜராத் காங்கிரஸ் மூத்த தலைவர் அர்ஜுன் மோத்வாடியா குறிப்பிட்டார். இதுபோன்ற சட்டங்களை இயற்றும் அதிகாரம் மாநில சட்டமன்றத்திற்கு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    ×