search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thoothukudi firing"

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக வாஞ்சிநாதன் உள்பட 3 பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துப்பாக்கிசூடு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 243 வழக்குகளை பதிவு செய்த போலீசார் மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி, நாம் தமிழர்கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் உள்பட 250-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளனர். அவர்களில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்கள் தவிர மற்றவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதில் மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 6 பேர் மீது ஏற்கனவே தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் அதே அமைப்பை சேர்ந்த வக்கீல் வாஞ்சிநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக சிறையில் உள்ளவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு தூத்துக்குடி ஜே.எம். 3-வது கோர்ட்டில் போலீசார் மனுதாக்கல் செய்தனர். மாஜிஸ்திரேட் தமிழ்செல்வி விசாரணை நடத்தி முருகேஷ், சதீசை 1 நாள் காவலில் எடுக்கவும், வாஞ்சிநாதனை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் அனுமதி வழங்கினார். அதன் படி 3 பேரையும் போலீசார் இன்று காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் ஸ்டெர்லைட் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் மகேஷ் உள்பட 20 பேர் மீதான மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் அவர்களை பாதுகாப்புடன் மீண்டும் பாளை சிறைக்கு போலீசார் அழைத்து சென்றனர். ஏற்கனவே தேடப்பட்டு வரும் மக்கள் அதிகாரம் அமைப்பின் தூத்துக்குடி பொறுப்பாளர் வக்கீல் அரிராகவன் இதுவரை கைது செய்யப்படவில்லை.

    இதனால் முத்தம்மாள் காலனியில் உள்ள அவரது வீட்டை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக முன்னாள் கலெக்டர், எஸ்.பி.யிடம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கடந்த மே 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியாயினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இது சம்பந்தமாக சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானவர்களில் 4 பேர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இது குறித்து விசாரணை செய்வதற்காக மத்திய அரசின் தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணையம் முடிவு செய்தது. இதற்காக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முருகன் தலைமையில் விசாரணை ஆணையத்தினர் நேற்று தூத்துக்குடிக்கு வந்தனர். தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் விசாரணையை தொடங்கினர்.

    முன்னதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் முருகன் தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி, மாவட்ட வருவாய் அதிகாரி வீரப்பன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா, மாநகராட்சி கமி‌ஷனர் ஆலிப் ஜான் வர்க்கீஸ், சப்-கலெக்டர் பிரசாந்த் மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.

    விசாரணைக்காக துப்பாக்கி சூட்டில் பலியான தாழ்த்தப்பட்டோர் குடும்பத்தினர் நான்கு பேரும் வந்திருந்தனர். அவரிடம் துப்பாக்கி சூடு தொடர்பான அனைத்து விபரங்களையும் துணைத்தலைவர் முருகன் கேட்டார். அதற்கு அவர்கள் அளித்த பதில் மற்றும் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் உடனுக்குடன் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டது.

    துப்பாக்கிச் சூட்டில் இறந்த செல்வசேகரின் அக்கா சீதா, அவரது சகோதரர் வக்கீல் ஜெயகுமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டில் இறந்த காளியப்பனின் தாய் மகேஸ்வரி, கந்தையாவின் மனைவி செல்வமணி, ஜெயராமனின் மனைவி பாலம்மாள், மகள் நந்தினி ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக இன்று 2-வது நாளாக விசாரணை நடைபெற்றது. துப்பாக்கி சூடு நடைபெற்ற அன்று பணியில் இருந்த அதிகாரிகள், மருத்துவ கல்லூரி டீன், டாக்டர்கள் உள்ளிட்டோரிடம் இன்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்காக முன்னாள் கலெக்டர் வெங்கடேஷ் இன்று பகல் 10.54 மணிக்கு தாழ்த்தப்பட்டோர் ஆணையம் முன்பாக ஆஜரானார்.

    அவரிடம் தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை மேற்கொண்டது. அப்போது துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான பல்வேறு விவரங்களை ஆணைய துணைத்தலைவர் முருகன் கேட்டார். மேலும் துப்பாக்கி சூட்டிற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் அனுமதி அளித்தது எப்படி என்பது பற்றியும் முன்னாள் கலெக்டர் வெங்கடேசிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இந்த விசாரணை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அப்போது பணியில் இருந்த போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரனிடமும் விசாரணை நடத்தப்பட்டது. கலெக்டர் மற்றும் எஸ்.பி.யிடம் விசாரணை நடத்தப்பட்டதால் விசாரணை அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. விசாரணையின் அடுத்த கட்டமாக நாளை (சனிக்கிழமை) தற்போது பணியில் உள்ள அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட இருக்கிறது.

    மேலும் சம்பவம் நடைபெற்ற இடங்களுக்கும் சென்று ஆணைய துணைத்தலைவர் முருகன் நேரில் சென்று ஆய்வு நடத்துகிறார். இதையடுத்து துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விரிவான அறிக்கையை ஆணையம் ஜனாதிபதியிடம் தாக்கல் செய்ய உள்ளது.


    தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் தூத்துக்குடியில் 3 நாட்கள் விசாரணை நடத்துகிறார். முதல் நாளான இன்று துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினர், பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்துகிறார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்தமாதம் (மே) 22-ந்தேதி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பொதுமக்கள் பேரணியாக சென்றனர். அப்போது தீ வைப்பு மற்றும் கல்வீச்சு சம்பவங்களில் போராட்டக்காரர்கள் ஈடுபட்டனர். அவர்களை ஒடுக்க போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    தூத்துக்குடியில் நடந்த மோதல், துப்பாக்கி சூடு, கலவரம் குறித்து மாநில மற்றும் தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். மேலும் கலவரம் நடந்த இடங்களை பார்வையிட்டனர்.

    தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர், போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினர், காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர்களை நேரில் சந்தித்து விசாரணை நடத்தினர்.

    மேலும் துப்பாக்கி சூடு நடந்தபோது பணியில் இருந்த தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஒரு வார காலம் கள விசாரணையில் ஈடுபட்ட அவர்கள், பின்பு விசாரணையை முடித்து கொண்டு டெல்லிக்கு புறப்பட்டனர். அவர்கள் தற்போது விசாரணை அறிக்கையை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    அதே போல் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஒரு நபர் விசாரணை கமி‌ஷன் நீதிபதி அருணா ஜெகதீசன் தூத்துக்குடி வந்து நேரடி விசாரணை நடத்தினார்.

    அவர் துப்பாக்கிசூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், அரசு துறை அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டார். மேலும் கலவரம் மற்றும் துப்பாக்கி சூடு நடந்த இடங்களை பார்வையிட்டு கள ஆய்விலும் ஈடுபட்டார். அவர் தனது அடுத்த கட்ட விசாரணையை அடுத்த மாதம் தூத்துக்குடியில் மீண்டும் தொடங்குகிறார்.

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரில் சாயர்புரம் அருகே உள்ள பேய்குளத்தை சேர்ந்த செல்வசேகர், தாளமுத்துநகர் காளியப்பன், மில்லர்புரம் சிலோன் காலனி கந்தையா, உசிலம்பட்டி ஜெயராமன் ஆகிய 4 பேர் மற்றும் காயமடைந்தவர்களில் சிலர் தாழ்த்தப்பட்டோர் பிரிவை சேர்ந்தவர்கள் ஆவர்.

    இதனால் அவர்கள் பலியானது குறித்து விசாரணை நடத்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் முருகன் தூத்துக்குடிக்கு வந்துள்ளனர். அவர் தனது விசாரணையை இன்று தொடங்கினர். அவர்கள் வருகிற 30-ந்தேதி வரை விசாரணையில் ஈடுபடுகிறார்.

    தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் முருகன் தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்துகிறார். விசாரணையின் முதல் நாளான இன்று, முதலில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    பின்பு தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான தாழ்த்தப்பட்டோரான செல்வசேகர், காளியப்பன், கந்தையா, ஜெயராமன் ஆகியோரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினார்.

    விசாரணையின் 2-வது நாளான நாளை (29-ந்தேதி) தூத்துக்குடியில் கலவரம் நடந்த போது கலெக்டராக இருந்த வெங்கடேஷ், போலீஸ் சூப்பிரண்டாக இருந்த மகேந்திரன் மற்றும் அதிகாரிகளுடன் துப்பாக்கி சூடு நடத்தியதிற்கான காரணம் உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து விசாரணை நடத்துகிறார்.

    3-வது நாளில் (30-ந்தேதி) தற்போதைய தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்கிறார். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய விசாரணை குறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியதாவது:-

    தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் தூத்துக்குடியில் 3 நாட்கள் விசாரணை நடத்துகிறார். முதல் நாளான இன்று துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்துகிறார்.

    நாளை (29-ந்தேதி) முன்னாள் தூத்துக்குடி கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, காவல்துறை மற்றும் அரசு துறை அதிகாரி களிடமும், நாளை மறுநாள் தற்போதைய கலெக்டர் மற்றும் காவல் துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்துகிறார். மேலும் கலவரம் தொடர்பாக மனு அளிப்பவர்களிடம் மனு வாங்கி, அதன் மீதும் விசாரணை நடத்துவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    தூத்துக்குடி கலவரத்தில் துப்பாக்கிசூடு நடத்த போலீசார் பயன்படுத்திய துப்பாக்கிகள் கோவில்பட்டி முதலாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இன்று ஒப்படைக்கப்படுகிறது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கடந்த மாதம் 22-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு, தடியடி நடத்தினர். இதில் 13 பேர் உயிர் இழந்தனர்.

    துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன் தலைமையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வழக்கிற்கு தேவையான ஆவணங்களை சேகரிக்கும் பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. துப்பாக்கி சூடு வழக்கின் முக்கிய ஆவணங்களான பிரேத பரிசோதனை அறிக்கை கோர்ட்டு மூலம் பெறப்பட்டுள்ளது.

    தீவைப்பு மற்றும் கலவரத்தில் சேதம் அடைந்த அனைத்து கார்களும் தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. அவை அனைத்தும் விசாரணை அதிகாரிகள் மற்றும் தடயவியல் மூலம் சோதனை செய்யப்பட்டன.

    மேலும் கலவரம் நடந்த அனைத்து பகுதிகளிலும் தடயவியல் நிபுணர்கள், வெடிகுண்டு நிபுணர்கள், சி.பி.சி.ஐ.டி. போலீசார் அங்குலம் அங்குலமாக தடயங்களை தேடினர். இதில் 2 துப்பாக்கி தோட்டாக்கள், கண்ணாடி துண்டுகள், கற்கள் உள்பட பல தடயங்கள் சிக்கி உள்ளன.

    அதேநேரத்தில் கலவரம் நடந்த பல இடங்களில் மாநகராட்சி சார்பில் சுத்தம் செய்யப்பட்டு குப்பைகள் அகற்றப்பட்டு விட்டன. இந்த குப்பைகள் அனைத்தும் தருவைகுளம் குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு உள்ளன. இதனால் சி.பி.சி.ஐ.டி. போலீசார் குப்பைக்கிடங்கில் கடந்த 3 நாட்களாக தேடுதல் வேட்டை நடத்தினர்.

    கடந்த 5 நாட்களாக நடந்து வரும் தேடுதல் வேட்டையில் துப்பாக்கி தோட்டாக்கள் உள்ளிட்ட ஏராளமான தடயங்கள் சிக்கியுள்ளன. இதில் பல தடயங்கள் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

    இது தவிர 2 சாக்கு மூட்டைகளில் சந்தேகப்படும்படியான தடயங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. இதனை ஆய்வு செய்து வழக்குக்கு தொடர்புடைய ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேகரித்து வருகின்றனர்.

    மேலும் துப்பாக்கி சூட்டில் பயன்படுத்தப்பட்டதாக 303 ரக துப்பாக்கிகள் 5, எஸ்.எல்.ஆர். ரக துப்பாக்கிகள் 5, கைத்துப்பாக்கிகள் 3 ஆகியவை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டன. அவை தூத்துக்குடி ஆயுதப்படை மைதானத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.

    அந்த துப்பாக்கிகளை வழக்கு விசாரணைக்காக சென்னை கொண்டு செல்ல வேண்டி உள்ளது. இதனால் அவற்றை கோர்ட்டில் ஒப்படைக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி கோவில்பட்டி முதலாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இன்று ஒப்படைக்கின்றனர்.
    தூத்துக்குடியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் இன்று 3-வது நாளாக சோதனை நடத்தினர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாயினர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 5 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன் தலைமையில் 5 வழக்குகளுக்கும் தலா ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இவர்கள் வழக்கு தொடர்பான ஆவணங்களை திரட்டி வருகிறார்கள். அதே நேரத்தில் துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் விவரங்களை பெறவும், துப்பாக்கிகளை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பவும் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. ஆனால் இதுவரை துப்பாக்கிகள் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் ஒப்படைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கலவரப்பகுதிகளில் ஆய்வு நடத்துவதற்காக சென்னையில் இருந்து தடயவியல் துறை கூடுதல் இயக்குனர் திருநாவுக்கரசர் தலைமையில் உதவி இயக்குனர்கள் விசாலாட்சி, மணிசேகர், வல்லுனர் சண்முகசுந்தரம், வெடிகுண்டு நிபுணர்கள் வாசுதேவன், பிள்ளை ஆகியோர் நேற்று முன்தினம் தூத்துக்குடிக்கு வந்தனர். 100-க்கும் மேற்பட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அதிரடி சோதனையை தொடங்கினர்.

    சி.பி.சி.ஐ.டி. போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் இன்று 3-வது நாளாக சோதனை நடத்தினர். துப்பாக்கி சூடு நடைபெற்ற கலெக்டர் அலுவலக பகுதியில் ஒரு குழுவினரும், திரேஸ்புரம், அண்ணாநகர் பகுதியில் மற்றொரு குழுவினரும், இதர பகுதியில் வேறு குழுவினரும் சோதனை நடத்தி வருகிறார்கள். மற்றொரு குழுவினர் ஸ்டெர்லைட் ஊழியர்கள் குடியிருப்பில் கார்கள் தீவைத்து எரிக்கப்பட்ட பகுதியில் ஆய்வு நடத்தினர். அதன்பிறகு கலெக்டர் அலுவலகம் முன்பு மெயின் ரோட்டிலும், இந்திய உணவுக்கழக குடோன் ரவுண்டானா பகுதியிலும் சோதனை நடத்தினர்.

    ஏற்கனவே நேற்று நடைபெற்ற சோதனையில் தூத்துக்குடி அண்ணாநகர் 6-வது தெருவில் ஒரு வீட்டின் மாடியில் உள்ள சுவரில் ஒரு தோட்டா துளைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அருகிலேயே இன்னொரு தோட்டாவும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தோட்டாக்களை இன்று போலீசார் சுவரில் இருந்து எடுத்து ஆய்வுக்கு அனுப்பினார்கள். இதுவரை நடைபெற்ற ஆய்வில் துப்பாக்கி சூடு தொடர்பான முக்கிய தடயங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளதாக சி.பி.சி.ஐ.டி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடைபெற்ற இடங்களை சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் கொண்ட குழுவினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். #Thoothukudifiring #CBCID
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கடந்த மாதம் 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியானார்கள். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான 5 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒவ்வொரு வழக்குக்கும் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளனர். 20 இன்ஸ்பெக்டர்களும் பணியமர்த்தப்பட்டு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

    சி.பி.சி.ஐ.டி போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் அபிநவும் தூத்துக்குடியில் முகாமிட்டு துப்பாக்கி சூடு நடந்த இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார்.

    இந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் இருந்து சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் கொண்ட குழுவினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் தூத்துக்குடிக்கு வந்தனர். தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடைபெற்ற இடங்களை அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.



    கலவரத்தின் போது தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் எரிக்கப்பட்ட வாகனங்கள், ஸ்டெர்லைட் குடியிருப்பில் தீவைத்து எரிக்கப்பட்ட வாகனங்களையும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் குழுவினர் பார்வையிட்டனர்.

    மேலும் துப்பாக்கி சூடு நடந்த இடங்கள், இந்திய உணவுக்கழக குடோன் பகுதி, அண்ணாநகர், திரேஸ்புரம், வி.வி.டி.சிக்னல், பனிமயமாதா ஆலய பகுதிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். அவர்களுடன் சென்ற தடயவியல் நிபுணர்கள் துப்பாக்கி சூடு நடந்த‌ பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தடயங்களை சேகரித்தனர்.

    ஏற்கனவே துப்பாக்கி சூட்டின்போது போலீசார் பயன்படுத்திய தோட்டாக்கள் சிலவற்றை கைப்பற்றியுள்ள நிலையில், எஞ்சிய தோட்டாக்களை போலீசாரிடம் இருந்து கைப்பற்றும் முயற்சியில் சி.பி.சி.ஐ.டி போலீசார் ஈடுபட்டுள்ளனர். #Thoothukudifiring #CBCID

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக போலீசரை விமர்சித்து வீடியோ வெளியிட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த நடிகை நிலானி எப்படி கைதானார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
    கோவை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி 100-வது நாள் நடந்த போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் இறந்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அப்போது சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த டி.வி. நடிகை நிலானி(வயது 34) என்பவர் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார்.

    அதில் போலீஸ் சீருடை அணிந்திருந்த நிலானி, நம்நாட்டில் நடக்கும் சம்பவங்கள் வேதனை அளிக்கிறது. 10 பேரை கொன்று உள்ளனர். அமைதியான வழியில் போராடுகிறோம். நான் படப்படிப்பில் இருக்கிறேன். இல்லையென்றால் தூத்துக்குடி சென்று போராட்டத்தில் பங்கேற்று இருப்பேன். நான் காவல்துறை உடை அணிந்து இருப்பதற்காக வெட்கப்படுகிறேன். உடம்பு கூசுகிறது.

    அடுத்து ஒரு போராட்டம் வெடித்தால் அது அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருக்கவேண்டும் என்றும் 7.14 நிமிடம் ஓடக்கூடிய வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டு இருந்தார். போலீஸ் ஒருவரே இப்படி பேசி இருப்பதாக கருதி இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இதுகுறித்து ரிஷி என்பவர் கடந்த மே 22-ந் தேதி வடபழனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் நிலானி மீது வன்முறையை தூண்டுதல், ஆள் மாறாட்டம் செய்தல், அரசுக்கு எதிராக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து நிலானி தன்னிலை விளக்கமாக மறுநாள் ஒரு வீடியோ காட்சியை வெளியிட்டிருந்தார்.

    பின்னர், போலீசார் தேடுவதை அறிந்து அவர் தலைமறைவானார். அவரை கைது செய்ய வடபழனி இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    சைபர் கிரைம் உதவியுடன் தனிப்படை போலீசார் நிலானி மற்றும் அவரது உறவினர்களின் செல்போன் எண்ணை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதில் நிலானி, குன்னூர் அருகே கம்பிசோலை பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, நேற்று குன்னூர் வந்து நிலானியை கைது செய்தனர்.

    பின்னர் அவரை வெலிங்டன் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். கடந்த 29 நாட்களாக பல்வேறு இடங்களில் தலைமறைவாக இருந்த அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு குன்னூருக்கு வந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவரை குன்னூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுந்தரராஜன் முன்னிலையில் ஆஜர்படுத்தி சென்னைக்கு அழைத்து சென்றனர். #Thoothukudifiring
    தூத்துக்குடி கலவரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க கேட்ட மனு மீதான விசாரணையை ஐகோர்ட்டு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
    மதுரை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் நோக்கி நடைபெற்ற பேரணியில் வன்முறை வெடித்தது. போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தினர்.

    துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். தடியடியில் ஏராளமானோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்ட 15 பேர் சி.பி.ஐ. விசாரணை கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    அதில், துப்பாக்கி சூடு, வன்முறை குறித்து, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தால் உண்மை நிலை வெளிவராது. சி.பி.ஐ. விசாரித்தால் தான் வழக்கின் உண்மை நிலை தெரியவரும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும்.

    எனவே சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர்.

    இந்த மனு நீதிபதிகள் செல்வம், பஷீர் அகமது முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு உள்ளதாகவும் அந்த வழக்குடன் இதுவும் சேர்த்து விசாரிக்கப்படும் என்றும் கூறிய நீதிபதிகள் விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர். #ThoothukudiFiring #MaduraiHighCourt
    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டதை விட தொண்டர்கள் அதிகமாக கலந்து கொண்டதாக 1720 பேர் மீது தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்ற கிளை ரத்து செய்தது.
    மதுரை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அர்ச்சுணன் மதுரை ஐகோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருந்ததாவது:-

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து கடந்த 18-ந் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் தூத்துக்குடியில் பொதுக்கூட்டம் நடந்தது.

    இதில் கட்சியின் மத்திய ஆலோசனை குழு உறுப்பினர் பிருந்தாகாரத் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டதை விட தொண்டர்கள் அதிகம் கலந்து கொண்டதாக தூத்துக்குடி தெற்கு போலீசார் கட்சி தொண்டர்கள் 1720 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இது சட்ட விரோதமானது. எனவே அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டுகிறேன்.

    மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனு இன்று நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் மனுதாரர் கட்சியை சேர்ந்த 1720 பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை சம்பந்தப்பட்ட போலீசார் ரத்து செய்து அது தொடர்பான அறிக்கையை தூத்துக்குடி மாவட்ட நீதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டார். #Thoothukudifiring #MaduraiHighCourt
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது துப்பாக்கி சூடு நடத்தியது பதட்டத்தில் நடத்தியது மாதிரி தெரியவில்லை. அரசுக்கே உரிய ராஜகோபத்தோடு செய்தது போல இருக்கிறது என்று கமல்ஹாசன் கூறினார். #Thoothukudifiring #Kamalhaasan
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாரப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    போராட்டங்களின் போது அப்பாவி மக்கள் ரத்தம் சிந்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். போராட்டம் ஒரு போதும் வன்முறையாக மாறிவிடக் கூடாது.



    தூத்துக்குடி போராட்டத்தின் போது எதைப் பற்றியும் யோசிக்காமல் துப்பாக்கி சூடு நடத்தியது போல தெரிகிறது. இது பதட்டத்தில் நடத்திய துப்பாக்கி சூடு மாதிரி தெரியவில்லை. அரசுக்கே உரிய ராஜகோபத்தோடு செய்தது போல இருக்கிறது.

    போராட்டங்கள் இல்லாமல் எதுவும் நடக்காது. போராடாமல்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததா? வெள்ளைக்காரர்கள் இந்த விளையாட்டு போரடித்து விட்டது என்று நினைத்து சுதந்திரத்தை கொடுத்துவிட்டு போய் விட்டதாக நினைக்கிறார்களா? எனவே போராட்டமே கூடாது என்று சொல்லாதீர்கள். சுட்டுக் கொல்லாதீர்கள். நம்மிடம் உள்ள நிறைய போராட்டங்கள் பழைமை வாய்ந்தவை.

    அதனால்தான் மக்கள் நீதி மய்யத்தில் உண்ணாவிரத போராட்டம் கிடையாது என்று அறிவித்துள்ளோம். இன்னும் ஏராளமான புதிய போராட்ட வடிவங்கள் வரவேண்டும். ஆனால் ரத்தம் சிந்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

    விஸ்வரூபம் படத்தின் எதிர்ப்பு அரசியலுக்கு பின்னால் இருந்தது யார்? என்று அனைவருக்கும் தெரியும். மரணம் ஒருவரை எல்லா வகையிலும் குற்றமற்றவராக்கி விடாது. தகாத வார்த்தைகளையெல்லாம் பேசினார்கள்.

    ஒரு படத்தின் டிரெயிலர் காட்சிகளை மட்டும் வைத்து முழுப்படத்தையும் விமர்சிக்கக் கூடாது. முஸ்லிம்களை தாக்கி படம் எடுக்க நான் பா.ஜனதா கட்சியிலா சேர்ந்திருக்கிறேன்.

    நான் எதை செய்தாலும் அதை தவறு என்று முழக்கமிடுவது ஒரு அரசியல் தான். எல்லா மதத்திலும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருக்கிறார்கள். பகுத்தறிவாதிகளிலும் கூட அதுபோல உள்ளனர். அரசியலில் சினிமாவும், சினிமாவில் அரசியலும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

    அனைத்து திட்டங்களையும் மக்கள் எதிர்ப்பது தவறு. தூத்துக்குடியை போல சென்னை காமராஜர் துறைமுகத்துக்காக ஒரு ஆற்றையே ஆக்கிரமித்துள்ளனர். முன்னேற்றத்தால் நகரத்துக்கு பாதிப்பு வருவதை அனுமதிக்க முடியாது.

    பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பல கோடி மக்களை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை நான் இழக்க விரும்பவில்லை. அந்த நிகழ்ச்சியின் மூலமாக ஓரளவுக்கு அரசியல் உரையாடலை நிகழ்த்த முடியும் என்று எண்ணுகிறேன்.

    தனிமனித உரிமைகள் எப்போதும் காக்கப்பட வேண்டும். ஆதார் கார்டே வேண்டாம் என்று சொல்லக் கூடாது. அதனை வரையறுக்க வேண்டும். சந்தேகங்களை கேள்விகளாக முன் வைக்க வேண்டும். இந்த வி‌ஷயத்தில் மக்கள் நீதி மய்யம் தீவிரமாக செயல்படுகிறது.

    இவ்வாறு கமல் கூறியுள்ளார். #Thoothukudifiring #Kamalhaasan #MakkalNeedhiMaiam
    துப்பாக்கி சூடு நடந்த 30-வது நாளையொட்டி தூத்துக்குடியில் இன்று மவுன ஊர்வலம் மற்றும் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியானதால் போலீஸ் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த மே மாதம் 22-ந்தேதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். அப்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் ஏற்பட்ட மோதலில் வன்முறை வெடித்தது. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    அரசு மற்றும் தனியார் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. கலெக்டர் அலுவலகமும் சூறையாடப்பட்டது. இதனால் தூத்துக்குடியில் பதட்டம் உண்டானது. பதட்டத்தை தணிக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தார்கள். துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன. இதை தொடர்ந்து தூத்துக்குடியில் சகஜ நிலை திரும்பியது.

    இதனிடையே துப்பாக்கி சூடு நடந்த 30-வது நாளையொட்டி தூத்துக்குடியில் இன்று வியாபாரிகள் அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். சங்க அலுவலகத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள் தவிர வேறு யாரும் பங்கேற்க அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அதே வேளையில் போராட்டம் நடைபெற்ற பல்வேறு பகுதியில் இன்று மவுன ஊர்வலம் மற்றும் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் பலியானவர்களின் குடும்பத்தினர் கலந்துகொண்டு துப்பாக்கி சூட்டில் பலியானவர்களை அஞ்சலி செலுத்த உள்ளதாகவும் தகவல் பரவியது.

    இதனால் அசம்பாவிதம் நிகழக்கூடாது என்று கருதி தூத்துக்குடியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. போலீஸ் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேசுவரன், டி.ஐ.ஜி.கள் பிரதீப்குமார், கபில்குமார் சரத்கார் ஆகியோர் தலைமையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் அருண்சக்திகுமார் (நெல்லை), முரளிரம்பா (தூத்துக்குடி) மற்றும் 10 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் தூத்துக்குடியில் முகாமிட்டு உள்ளனர்.

    தூத்துக்குடி நகர் பகுதிகளில் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். போலீசார் நகரின் முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டு உள்ளனர். மேலும் ரோந்துபணியிலும் போலீசார் ஈடுபட்டு உள்ளார்கள். இதனால் தூத்துக்குடியில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டு உள்ளது.

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் மனிதாபிமானமற்றது. அரசியல் விதிகளுக்கு எதிரானது என்று சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர் மேதாபட்கர் கூறினார். #sterliteprotest #ThoothukudiFiring #MedhaPatkar
    தூத்துக்குடி:

    சுற்றுபுறச்சூழல் ஆர்வலர் மேதாபட்கர் இன்று தூத்துக்குடிக்கு வந்தார். தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை அவர் பார்த்து ஆறுதல் கூறினார். மேலும் பலியானவர்களின் குடும்பத்தினரையும் அவர் சந்தித்து பேசினார். அவர்களிடம் நடந்த விவரங்களை கேட்டறிந்தார்.

    முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் மனிதாபிமானமற்றது. அரசியல் விதிகளுக்கு எதிரானது. 1998-ம் ஆண்டு முதல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தொடர்ந்துகொண்டிருந்தது.



    எத்தனை தீர்ப்புகள் வழங்கினாலும் கார்ப்பரேட் ஆலைகளுக்கு ஆதரவாக மத்திய அரசு சுற்றுச் சூழல் விதிகளை குறைத்து கொண்டே வந்தனர். ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதியாவது கிடைத்தது.

    தற்போது நடக்கும் ஆட்சிக்கு மக்கள் பிரச்சனை கூட தெரியவில்லை. இந்த போராட்டத்தில் நடந்த வன்முறை வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்திய நிறுவனம் இல்லாத வேதாந்தா குழுமம் நம்பிக்கை தன்மையை இழந்துவிட்டது.

    நர்மதா அணை கட்டும் பணியின் போது மக்களின் பிரச்சனையை புரியாமல் மோடி நடந்தது போல் இங்கு இப்போது நடந்துள்ளது. நடந்த வன்முறையை காரணம் காட்டி நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது நடவடிக்கையை நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #sterliteprotest #ThoothukudiFiring #MedhaPatkar

    ×