search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thoothukudi firing"

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணாஜெகதீசனின் 4-ம் கட்ட விசாரணை நாளையுடன் நிறைவடைகிறது. #ThoothukudiFiring #ArunaJagadeesan
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பரிதாபமாக இறந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பாக தேசிய, மாநில மனித உரிமை கமிஷன் விசாரணை நடத்தியது. துப்பாக்கி சூடு தொடர்பான வழக்குகளை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.



    அவர் கடந்த ஜூன் மாதம் 4-ந் தேதி தூத்துக்குடிக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பிரமாண பத்திரங்கள் பெறப்பட்டன. அந்த பிரமாண பத்திரங்கள் அடிப்படையில் சம்மன் அனுப்பப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இதுவரை 3 கட்டமாக விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. மொத்தம் 24 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    4-வது கட்டமாக விசாரணை நேற்று முன்தினம் (17-ந்தேதி) தொடங்கியது. இதற்காக விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் தூத்துக்குடிக்கு வந்தார். அவர் தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணையை தொடங்கினார். 4-வது கட்ட விசாரணைக்காக மொத்தம் 33 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இதில் நேற்று முன்தினம் ஆஜராவதற்காக சம்மன் வழங்கப்பட்ட 8 பேரில் 7 பேர் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். நேற்று ஆஜராவதற்காக 8 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அவர்களில் 7 பேர் ஆணையம் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

    நீதிபதி அருணாஜெகதீசன் 3-வது நாளாக இன்றும் விசாரணை நடத்தினார். இதனால் விசாரணை நடக்கும் முகாம் அலுவலகம் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள். நீதிபதி அருணா ஜெகதீசனின் 4-ம் கட்ட விசாரணை நாளையுடன் நிறைவடைகிறது. #ThoothukudiFiring #ArunaJagadeesan

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரிக்கும் அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு மேலும் 6 மாத கால அவகாசம் அளித்து இன்று நீட்டிப்பு செய்துள்ளது தமிழக அரசு. #ThoothukudiFiring #ArunaJagadeesan #TNGovt
    சென்னை:

    தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ம் தேதி நடந்த போலீஸ் துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிர் இழந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்தது.
     
    கடந்த ஜூன் மாதம் 4-ம் தேதி இந்த ஆணையத்தின் முதற்கட்ட விசாரணை தொடங்கியது. பின்னர் பிரமாண பத்திரங்கள் பெறப்பட்டு, அதன் அடிப்படையில் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. 2-வது கட்ட விசாரணை கடந்த 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடந்தது.



    3-வது கட்ட விசாரணையில் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்கள், பலியானவர்களின் உறவினர்கள் உள்பட மொத்தம் 19 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அனைவரும் ஆஜராகி ஒரு நபர் விசாரணை ஆணையம் முன்பு வாக்குமூலம் அளித்தனர்.

    இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த, அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு மேலும் 6 மாதம் அவகாசம் நீட்டிப்பு செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

    ஏற்கனவே 3 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 6 மாத காலம் அவகாசம் வழங்கியுள்ளது. #ThoothukudiFiring #ArunaJagadeesan #TNGovt
    தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையத்தின் 3-ம் கட்ட விசாரணை இன்றுடன் நிறைவு பெற்றது. #Thoothukudifiring
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ந்தேதி நடந்த போலீஸ் துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிர் இழந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்தது.

    இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 4-ந்தேதி இந்த ஆணையத்தின் முதற்கட்ட விசாரணை தொடங்கியது. பின்னர் பிரமாண பத்திரங்கள் பெறப்பட்டு, அதன் அடிப்படையில் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. 2-வது கட்ட விசாரணை கடந்த 9-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நடந்தது.



    தற்போது 3-வது கட்டமாக தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் உள்ள ஒருநபர் ஆணைய முகாம் அலுவலகத்தில் நேற்று முன்தினம் விசாரணை தொடங்கியது. இதில் துப்பாக்கிசூட்டில் காயம் அடைந்தவர்கள், பலியானவர்களின் உறவினர்கள் உள்பட மொத்தம் 19 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. நேற்று முன்தினம் 7 பேர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். ஆனால் 5 பேர் மட்டுமே ஆஜர் ஆனார்கள். முருகேசுவரி, பாலையா ஆகியோர் ஆஜராகவில்லை.

    3-வது கட்ட விசாரணையின் 2-வது நாளான நேற்றும் 7 பேர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். இதில் தூத்துக்குடி தேவர் காலனியை சேர்ந்த ராமசந்திரன், முத்தம்மாள் காலனியை சேர்ந்த ராஜா, இந்திரா நகரை சேர்ந்த ராஜாசிங், கோவில்பிள்ளைவிளையை சேர்ந்த பெனிஸ்டன், திரேஸ்புரத்தை சேர்ந்த சிலுவை ஆகிய 5 பேர் ஆணைய அதிகாரி அருணா ஜெகதீசன் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். 2 பேர் வரவில்லை.

    இந்நிலையில் இன்று ஒரு நபர் விசாரணை ஆணையம் முன்பு எஞ்சியவர்கள் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். இதைத்தொடர்ந்து நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையத்தின் 3-ம் கட்ட விசாரணை இன்றுடன் நிறைவு பெற்றது. #Thoothukudifiring


    மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவரை மாற்றி உள்ளதால் ஸ்டெர்லைட்டை ஆலையை திறக்க அரசு துணை போகிறதா? என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். #Ramadoss #Sterlite

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சுற்றுச் சூழல்துறை செயலாளராகவும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவராகவும் திறம்பட பணியாற்றி வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி நசிமுதீன் அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

    ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்காக அந்த ஆலையின் நிர்வாகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், திடீரென செய்யப்பட்டுள்ள இந்த இடமாற்றம் கண்டிக்கத்தக்கது.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு உள்ளிட்ட யாராலும், எதுவும் செய்ய முடியாது என்ற அதிகாரத்திமிரில் அதன் நிர்வாகம் இருந்தபோது, அது செய்துள்ள விதிமீறல்கள் அனைத்தையும் பட்டியலிட்டு அந்த ஆலையை மூடும்படி கடந்த மே 23-ந் தேதி ஆணையிட்டவர் நசிமுதீன் ஆவார்.

    அந்த ஆணையின் அடிப்படையில்தான் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்காக ஆணையை மே 29ஆம் தேதி தமிழக அரசு பிறப்பித்தது. கடந்த 15 மாதங்களாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக உள்ள அவருக்குத் தான் ஆலையின் அத்துமீறல்கள் குறித்த விவரங்கள் அத்துபடியாகும்.


    ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நசிமுதீனுக்கு இருக்கும் புரிதலும், அனுபவமும் புதிய அதிகாரி ‌ஷம்பு கல்லோலிகருக்கு இருக்க வாய்ப்பில்லை.

    அடுத்த 10 நாட்களில் தேசியப் பசுமைத் தீர்ப்பாய குழுவின் விசாரணை தொடங்கவுள்ள நிலையில், அதற்குள்ளாக ஸ்டெர்லைட் குறித்த அனைத்து பின்னணி தகவல்களையும் அறிந்து கொண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்வது சாத்தியமற்றதாகும். இது ஸ்டெர்லைட் விவகாரத்தில் பின்னடைவை ஏற்படுத்தும்.

    ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதிப்பதில் தமிழக அரசுக்கு தொடக்கத்தில் இருந்தே விருப்பம் இல்லை. மக்கள் எழுச்சிக்கும், அரசியல் அழுத்தத்துக்கும் பணிந்து தான் ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு தடை விதித்தது. இப்போது ஸ்டெர்லைட் தடை விலக வேண்டும் என்பதற்காகவே இத்தகைய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வதாகத் தெரிகிறது.

    ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடைதான் அப்பகுதி மக்களுக்கு நிம்மதியையும், மகிழ்ச்சியை யும் அளித்துள்ளது. தமிழக அரசு இப்போது இழைத்து வரும் துரோகங்கள் மற்றும் தவறுகளால் ஸ்டெர்லைட் ஆலைக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டால் அதையும், அதனால் ஏற்படும் தீய விளைவுகளையும் அங்குள்ள மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது.

    எனவே, சுற்றுச் சூழல் துறை செயலாளர் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவியிலிருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி நசிமுதீனை இடம் மாற்றும் முடிவை கைவிட்டு, ஸ்டெர்லைட் சிக்கல் ஓயும் வரை அப்பதவியில் அவர் நீடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக காவல்துறை மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வரும் நிலையில், இதுபற்றி சிபிஐ விசாரணை நடத்தப்படவேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #ThoothukudiFiring #CBIProbeThoothukudiFiring #MadrasHC
    சென்னை:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, கடந்த மே மாதம் 22-ந் தேதி அங்கு நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. அப்போது போலீசார் நடத்திய தடியடி, துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலி ஆனார்கள். இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு மே 28-ந் தேதி உத்தரவிட்டது. அதன்படி அந்த ஆலைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.



    அதேசமயம் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்படவேண்டும், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் பல்வேறு பொதுநல வழக்குகள் சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் தொடரப்பட்டன.

    இந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டு இடைக்கால உத்தரவுகளும் வழங்கப்பட்ட நிலையில் இந்த வழக்குகள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன. வழக்கு விசாரணையின்போது துப்பாக்கி சூடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தலாம் என்று நீதிபதிகள் ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில், இவ்வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, துப்பாக்கி சூடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட 6 பேர் மீதான வழக்குகளையும் ரத்து செய்தனர். #ThoothukudiFiring #CBIProbeThoothukudiFiring #MadrasHC
    தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்த எழுத்துப்பூர்வமான உத்தரவு பெறப்பட்டதா? என்று மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. #Thoothukudifiring
    மதுரை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பொதுமக்கள் ஊர்வலமாக சென்றனர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இது தொடர்பாக தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கூடுதலாக சிப்காட் போலீஸ் நிலையத்தில் 142 வழக்குகளும், தூத்துக்குடி வடக்கு, தெற்கு உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 100 வழக்குகளும் என மொத்தம் 243 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    இந்த வழக்குகள் அனைத்தையும் ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும், துப்பாக்கி சூடு நடத்திய அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி மதுரை ஐகோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ளன.

    இந்த வழக்குகள் நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், “தூத்துக்குடியில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக 274 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 43 பேருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது. பலருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 24 பேர் மட்டுமே சிறையில் உள்ளனர். சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஆவணங்கள் மற்றும் நேரில் பார்த்த சாட்சிகள் கூறியதன் அடிப்படையில்தான் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்” என்று வாதாடினார்.

    கலவர நேரங்களில் போலீசார் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பான விளக்க கையேடு நீதிபதிகளிடம் வழங்கப்பட்டது.

    இதனையடுத்து, துப்பாக்கி சூடு நடத்த எழுத்துப்பூர்வமான உத்தரவு பெறப்பட்டதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு தமிழக அரசு வக்கீல், “சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டுவின் உத்தரவு பெறப்பட்டு தான் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “144 தடை உத்தரவை பொது மக்கள் அறியும் வகையில் முன்கூட்டியே ஏன் பிறப்பிக்கப்படவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்கள்.

    அதற்கு தமிழக அரசு வக்கீல், “தூத்துக்குடியில் 100-வது நாள் போராட்டம் மே 22-ந் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மே 22-ந் தேதி தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது என்ற செய்தியை மாவட்ட கலெக்டர் மே 21-ந் தேதி இரவு 8.30 மணி அளவில் வெளியிட்டுள்ளார். அந்த செய்தி அனைத்து தொலைக்காட்சி ஊடகங்கள், பத்திரிகைகள், சமூக வலைத்தளங்கள் மூலமாக பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது” என்றார்.

    மேலும், “துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 243 வழக்குகளையும், ஒரே வழக்காக மாற்றினால் விரைந்து விசாரிக்க முடியாது” என்றும் அரசு வக்கீல் தனது வாதத்தின்போது தெரிவித்தார்.

    இதனையடுத்து இந்த வழக்குகளின் விசாரணையை இன்றைக்கு (செவ்வாய்க் கிழமை) ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    துப்பாக்கி சூடு குறித்து தூத்துக்குடி சிப்காட் போலீசார் பதிவு செய்த குற்ற வழக்கு எண் 191-ன் ஆவணங்களையும், துப்பாக்கி சூடு தொடர்பாக நடத்தப்பட்ட மறுஆய்வு ஆவணங்களையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களின் உத்தரவில் கூறி உள்ளனர்.  #Thoothukudifiring
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது. #Thoothukudisterlite #Sterliteprotest

    சென்னை:

    தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தியதால் கடந்த மே மாதம் ஆலை மூடப்பட்டது.

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதேபோல் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியமும் ஆலையை தொடர்ந்து இயக்க அனுமதி அளிக்கவில்லை. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமான வேதாந்தா குரூப் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.

    வேதாந்தா நிறுவனம் வெளியிட்ட 2017-18-ம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கையில், கடந்த மார்ச் மாதம் ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளுக்கான செப்பு உலோகத்தை உருக்கும் பணி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து இயக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்ததுடன் பல்வேறு விளக்கங்கள் கேட்டு அனுமதியை நிறுத்தி வைத்துள்ளது. ஆலை மூடப்பட்டதை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு ஆலையை திறக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


    இந்த ஆலையால் ஆலையைச் சுற்றிலும் வசிக்கும் மக்களுக்கு ஆபத்து என தவறான தகவல்கள் பரப்பப்பட்டதால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பயம் காரணமாகவே வரலாற்றில் மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெற்றன. 2013-ம் ஆண்டு சட்ட ரீதியாக பெறப்பட்ட அனுமதியை தொடர்ந்து பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் எந்த சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாது என்பதை நிரூபிப்போம். இந்த ஆலையில் இருந்து எந்த அமிலக் கழிவும் வெளியாவதில்லை. எனவே நிலத்தடிநீர் மாசுபடுவதற்கு வாய்ப்பு இல்லை என்று உள்ளூர் நிலத்தடிநீர் மையம் தெரிவித்துள்ளது.

    சுற்றுச்சூழல் மாசுபடுவது தான் அந்தப் பகுதியில் முக்கிய பிரச்சினையாக உள்ளது என்பதை கவனத்தில் கொள்கிறோம். ஸ்டெர்லைட் ஆலை மட்டும் அங்கு இல்லை. அனல் மின்நிலையம், சாயத் தொழிற்சாலைகள் மற்றும் சிறிய-பெரிய அளவிலான 60-க்கும் மேற்பட்ட தொழிற் சாலைகள் உள்ளன. நாங்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வந்தோம். இதுதொடர்பான பேச்சு வார்த்தைக்கு திறந்த மனதுடன் இருக்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.#Thoothukudisterlite #Sterliteprotest

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பொதுமக்களை போலீசார் குறிபார்த்து சுட்டு கொன்றதாக மக்கள் பொது விசாரணை குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. #Thoothukudifiring
    சென்னை:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த மக்கள் பொது விசாரணை குழு அறிக்கை சென்னை லயோலா கல்லூரியில் நேற்று வெளியிடப்பட்டது.

    சுப்ரீம் கோர்ட்டு மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூ‌ஷன் அறிக்கையை வெளியிட வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் பெற்றுக் கொண்டார்.

    அதில் கூறப்பட்டுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-

    * தூத்துக்குடியில் மே 22-ந்தேதி நடைபெற்ற ஊர்வலத்தில் குடும்பம் குடும்பமாக ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் ஏராளமானோர் பங்கேற்பது பற்றி மாவட்ட நிர்வாகம் அறிந்திருந்தும், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாமல் கடமையை புறக்கணித்துள்ளது.

    * கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்ட 144 தடை உத்தரவு பற்றி மக்களுக்கு தெரியப்படுத்த மாவட்ட நிர்வாகம் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

    * மாவட்ட நிர்வாகம் தன் கடமையை புறக்கணித்து திட்டமிட்டு ஓடி ஒளிந்து கொண்டதால்தான் வன்முறையும் இறப்புகளும் பெரிய அளவில் நடந்து விட்டது.

    * பொதுமக்களுக்கு காவல்துறை உதவுவதற்கு பதிலாக அராஜகத்தில் ஈடுபட்டது. கூட்டத்தை கலைக்க முறையான சட்ட விதிகளை கடைபிடிக்கவில்லை.

    * ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் வன்முறையில் ஈடுபடாதபோது பல இடங்களில் போலீசார் தடியடி நடத்தி மக்களை காயப்படுத்தி அச்சுறுத்தி உள்ளனர்.

    * சீருடையில் இல்லாத சாதாரண உடை அணிந்த காவலர்கள் போலீஸ் வாகனங்களில் மேல் ஏறி கூட்டத்தினரை குறி வைத்து சுடுவதும், மக்களை கொல்வதும் போலீசாரின் அத்துமீறலாகும்.

    * பெண்கள், குழந்தைகள் மீதும் தாக்குதல் நடத்தியது. இதன் பின்னணியில் உயர் காவல்துறை அதிகாரிகளின் பங்கு குறித்து முழு விசாரணை தொடங்க வேண்டும்.



    * ஊர்வலம் நடந்த பகுதியில் இருந்து வெகுதூரத்தில் உள்ள திரேஸ்புரத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் ஜான்சியின் கொலை நடந்துள்ளது. இது போலீசாரின் செயல் என்று பரவலாக நம்பப்படுகிறது.

    * துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பிறகும் மக்களை வீடு தேடி கைது செய்வதும் சட்டத்துக்கு புறம்பாக காவலில் வைப்பதும் தொடர் சம்பவமாகி விட்டது. இதை அனுமதிக்க முடியாது.

    தூத்துக்குடியில் இப்போது சட்டம்-ஒழுங்கு பிரச்சினை எதுவும் இல்லாத நிலையில் அளவுக்கு அதிகமாக போலீசார் அங்கு இருப்பது தேவை இல்லாத ஒன்று.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன், ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் திலக், செல்வராஜ், ஷிவ் விசுவநாதன், கிறிஸ்து தாஸ் காந்தி, கீதா, கவிதா, ஜோசையா, தீபக்நாதன், டாம்தாமஸ் உள்பட பலர் பங்கேற்றனர். #Thoothukudifiring
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு சி.பி.ஐ. விசாரணை கேட்ட மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டை அணுகுமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தியது. #ThoothukudiFiring #SC
    புதுடெல்லி:

    தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் நீண்ட நாட்களாக போராடி வந்தனர். கடந்த மே மாதம் 22-ந்தேதி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    போலீசாரின் இந்த துப்பாக்கிச்சூடு மற்றும் தாக்குதல் சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்குகளும் நடந்து வருகிறது.

    இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிடக்கேட்டு தே.மு.தி.க.வை சேர்ந்த ஜி.எஸ்.மணி என்ற வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.



    அவர் தனது மனுவில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி மக்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் எனவும், கோர்ட்டின் மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    அத்துடன் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.50 லட்சமும், படுகாயமடைந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சமும் இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்து இருந்தார்.

    இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரான வக்கீல் ஜி.எஸ்.மணியே நேரில் ஆஜரானார்.

    வழக்கின் விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், ‘இது போன்ற மனுக்கள் ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருவதால், இதனை இங்கு விசாரணைக்கு ஏற்க முடியாது’ என்று அறிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் மனுதாரர் சென்னை ஐகோர்ட்டை அணுகலாம் என்றும் அறிவுறுத்தி வழக்கை முடித்து வைப்பதாக தெரிவித்தனர். #ThoothukudiFiring #SC
    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியான 13 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று விசாரணை நடத்தினர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். துப்பாக்கி சூடு தொடர்பான 5 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்த வழக்குகளில் ஆவணங்கள், தடயங்கள் சேகரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்து தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களின் விவரங்களை சேகரித்தனர். இதேபோல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் விபரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    இதனிடையே துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்களிடமும் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டனர். அதன்படி சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன் தலைமையிலான போலீசார் 4 டாக்டர்களுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். அவர்களிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டது.

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட பச்சை படுகொலை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.
    தூத்துக்குடி:

    துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வீரவணக்க பொதுக்கூட்டம் தூத்துக்குடி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று இரவு நடந்தது. கூட்டத்துக்கு கட்சி தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    பல்வேறு நிபந்தனைகளுடன் இந்த பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிர் இழந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். ஆனால் 15 பேர் உயிர் இழந்து இருப்பதாக தெரிகிறது. மக்கள் கூட்டம் வன்முறையை நோக்கி செல்கிறது என்றால் அதனை கையாள சில வழிமுறைகள் உள்ளன.

    துப்பாக்கி சூடு நடத்த சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் இருப்பவரிடம் அனுமதி வாங்கி இருக்க வேண்டும். ஆனால் இது அப்படி நடக்கவில்லை. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட பச்சை படுகொலை. சம்பவத்தன்று மாவட்ட கலெக்டர் இல்லை என்பதில் உள்நோக்கம் உள்ளது. பொதுமக்கள் கூடும் இடத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுகிறது என்றால், அதற்கு மக்களை சரியாக கையாள தெரியாத போலீஸ் அதிகாரிகளே காரணம்.

    ஸ்டெர்லைட் ஆலை இங்கு வந்த போது இருந்தே எதிர்ப்பு இருந்தது. மக்களின் 100-வது நாள் போராட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் வகுத்து கொடுத்த திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. வேதாந்தா நிறுவனம் பா.ஜனதாவிற்கு பல கோடி தேர்தல் நிதியாக கொடுத்து உள்ளது. இதற்கு நன்றிக்கடனாக தூத்துக்குடியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    மோடி அரசின் நோக்கம் அனில் அகர்வாலை காப்பாற்றுவதும், கார்ப்பரேட் நிறுவனங்களை காப்பாற்றுவதும் தான். மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து, அதனால் வரும் வளர்ச்சி தேவை இல்லை. ஆட்சியாளர்கள் இதுபோன்ற செயல்களை கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் பேசும்போது கூறியதாவது:-

    தூத்துக்குடியில் மே 22-ந் தேதி நடந்த போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து நடத்திய பயங்கரத்தில் 13 பேர் உயிர் இழந்துள்ளனர். காவல் துறை மீது கோபம் வருகிறது. என்ன செய்வது, அவர் மோடி உத்தரவின் பேரிலும், முதல்-அமைச்சர் உத்தரவின் பேரிலும் செயல்படுகிறார்கள்.

    அரசியல் அமைப்பு சட்டம் போராட்டம் நடத்த உரிமை அளித்து உள்ளது. இதனை யாரும் தடுக்க முடியாது. பொதுமக்களுக்கு எதிராக நடந்த துப்பாக்கி சூடு என்பது ஒரு படுகொலை. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் பல்லாயிரம் பேரும் வருவோம். அடக்குமுறை மூலம் மக்களை கட்டுப்படுத்த கூடாது. அரசு ஜனநாயக முறையில் நடந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.



    தூத்துக்குடி துப்பாக்கி சூடு விகாரத்தில் போலீஸ் அச்சுறுத்தல் காரணமாகவே மக்கள் அதிகாரம் மீது புகார் கூறப்பட்டுள்ளது என ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ராஜூ தெரிவித்துள்ளார். #Thoothukudifiring

    சென்னை:

    மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ராஜூ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மக்கள் அதிகாரம் அமைப்பை பற்றி மீனவ சங்க பிரதிநிதிகள் புகார் மனு கொடுத்தற்கு போலீசின் அச்சுறுத்தலே காரணம், இதனை சாக்காக வைத்து மக்கள் அதிகாரம் அமைப்பை பயங்கரவாதி என பா.ஜ.க. அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசுவது கண்டிக்கதக்கது.

    இந்துத்வா கொள்கையை வைத்துக்கொண்டு மக்கள் அதிகாரம் அமைப்பை பற்றி பயங்கரவாதம், என பேசுவது, வேடிக்கையானது.

    ஸ்டெர்லைட்டைவிட அதிக ஆபத்து போலீசின் அடக்குமுறைதான். ஒரு சில மீனவ சங்க நிர்வாகிகளை அச்சுறுத்தி மூளைச்சலவை செய்து, இரண்டு வழக்கறிஞர்கள் மீதும், மக்கள் அதிகார அமைப்பின் மீதும் அவதூறு பிரச்சாரத்தை கட்ட விழ்த்துவிட்டுள்ளது. மீனவ அமைப்புகள் போராட்டத்தை முன்னெடுத்தார்கள் என எந்த நீதிமன்றத்திலும் யாரும் சொல்லவில்லை.


    மீனவ சங்க பிரதிநிதிகள் கொடுத்த மனுவில் துப்பாக்கிச்சூடு படுகொலையை கண்டித்து ஒரு வரிகூட கிடையாது. அவர்கள் சுதந்திரமாக இந்த புகாரை கொடுக்கவில்லை. இரு வழக்கறிஞர்களும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் அல்ல. போலீசார் தனது நடவடிக்கையை நியாயபடுத்த அவ்வாறு பரப்பி வருகிறார்கள்.

    இனி யாரும் எதற்கும் போராடகூடாது என்பதன் அச்சுறுத்தல்தான் தூத்துக்குடி துப்பாக்கிசூடு மக்கள் அதிகாரத் தோழர்கள் எந்த வன்முறை தீ வைப்பு சம்பவத்திலும் ஈடுபடவில்லை. எந்த ஆதாரத்தையும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யோ, அமைச்சர் பொன்னாரோ காட்ட முடியாது. தூத்துக்குடி மக்களின் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போரட்டத்தை பா.ஜ.க. அதிமுக. தவிர தமிழகத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் அங்கு சென்று ஆதரித்தார்கள். எந்த பாகுபாடு, வேறுபாடுமின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து போராடினார்கள். இதில் மூளைச்சலவை எங்கு வருகிறது. வெளியிலிருந்து தூண்டுவது எங்கு வருகிறது?

    போலீசின் அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் அமைப்புகளை பற்றி பயங்கரவாதி என பீதியூட்ட முயல்கிறார்கள். அதற்காக அனைவரும் போராட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Thoothukudifiring

    ×