search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்த எழுத்துப்பூர்வ உத்தரவு பெறப்பட்டதா? - மதுரை ஐகோர்ட்டு கேள்வி
    X

    தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்த எழுத்துப்பூர்வ உத்தரவு பெறப்பட்டதா? - மதுரை ஐகோர்ட்டு கேள்வி

    தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்த எழுத்துப்பூர்வமான உத்தரவு பெறப்பட்டதா? என்று மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. #Thoothukudifiring
    மதுரை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பொதுமக்கள் ஊர்வலமாக சென்றனர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இது தொடர்பாக தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கூடுதலாக சிப்காட் போலீஸ் நிலையத்தில் 142 வழக்குகளும், தூத்துக்குடி வடக்கு, தெற்கு உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 100 வழக்குகளும் என மொத்தம் 243 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    இந்த வழக்குகள் அனைத்தையும் ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும், துப்பாக்கி சூடு நடத்திய அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி மதுரை ஐகோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ளன.

    இந்த வழக்குகள் நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், “தூத்துக்குடியில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக 274 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 43 பேருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது. பலருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 24 பேர் மட்டுமே சிறையில் உள்ளனர். சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஆவணங்கள் மற்றும் நேரில் பார்த்த சாட்சிகள் கூறியதன் அடிப்படையில்தான் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்” என்று வாதாடினார்.

    கலவர நேரங்களில் போலீசார் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பான விளக்க கையேடு நீதிபதிகளிடம் வழங்கப்பட்டது.

    இதனையடுத்து, துப்பாக்கி சூடு நடத்த எழுத்துப்பூர்வமான உத்தரவு பெறப்பட்டதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு தமிழக அரசு வக்கீல், “சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டுவின் உத்தரவு பெறப்பட்டு தான் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “144 தடை உத்தரவை பொது மக்கள் அறியும் வகையில் முன்கூட்டியே ஏன் பிறப்பிக்கப்படவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்கள்.

    அதற்கு தமிழக அரசு வக்கீல், “தூத்துக்குடியில் 100-வது நாள் போராட்டம் மே 22-ந் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மே 22-ந் தேதி தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது என்ற செய்தியை மாவட்ட கலெக்டர் மே 21-ந் தேதி இரவு 8.30 மணி அளவில் வெளியிட்டுள்ளார். அந்த செய்தி அனைத்து தொலைக்காட்சி ஊடகங்கள், பத்திரிகைகள், சமூக வலைத்தளங்கள் மூலமாக பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது” என்றார்.

    மேலும், “துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 243 வழக்குகளையும், ஒரே வழக்காக மாற்றினால் விரைந்து விசாரிக்க முடியாது” என்றும் அரசு வக்கீல் தனது வாதத்தின்போது தெரிவித்தார்.

    இதனையடுத்து இந்த வழக்குகளின் விசாரணையை இன்றைக்கு (செவ்வாய்க் கிழமை) ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    துப்பாக்கி சூடு குறித்து தூத்துக்குடி சிப்காட் போலீசார் பதிவு செய்த குற்ற வழக்கு எண் 191-ன் ஆவணங்களையும், துப்பாக்கி சூடு தொடர்பாக நடத்தப்பட்ட மறுஆய்வு ஆவணங்களையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களின் உத்தரவில் கூறி உள்ளனர்.  #Thoothukudifiring
    Next Story
    ×