search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டத்தில் திருமாவளவன் பேசிய காட்சி.
    X
    கூட்டத்தில் திருமாவளவன் பேசிய காட்சி.

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை - திருமாவளவன் பேச்சு

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட பச்சை படுகொலை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.
    தூத்துக்குடி:

    துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வீரவணக்க பொதுக்கூட்டம் தூத்துக்குடி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று இரவு நடந்தது. கூட்டத்துக்கு கட்சி தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    பல்வேறு நிபந்தனைகளுடன் இந்த பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிர் இழந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். ஆனால் 15 பேர் உயிர் இழந்து இருப்பதாக தெரிகிறது. மக்கள் கூட்டம் வன்முறையை நோக்கி செல்கிறது என்றால் அதனை கையாள சில வழிமுறைகள் உள்ளன.

    துப்பாக்கி சூடு நடத்த சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் இருப்பவரிடம் அனுமதி வாங்கி இருக்க வேண்டும். ஆனால் இது அப்படி நடக்கவில்லை. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட பச்சை படுகொலை. சம்பவத்தன்று மாவட்ட கலெக்டர் இல்லை என்பதில் உள்நோக்கம் உள்ளது. பொதுமக்கள் கூடும் இடத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுகிறது என்றால், அதற்கு மக்களை சரியாக கையாள தெரியாத போலீஸ் அதிகாரிகளே காரணம்.

    ஸ்டெர்லைட் ஆலை இங்கு வந்த போது இருந்தே எதிர்ப்பு இருந்தது. மக்களின் 100-வது நாள் போராட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் வகுத்து கொடுத்த திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. வேதாந்தா நிறுவனம் பா.ஜனதாவிற்கு பல கோடி தேர்தல் நிதியாக கொடுத்து உள்ளது. இதற்கு நன்றிக்கடனாக தூத்துக்குடியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    மோடி அரசின் நோக்கம் அனில் அகர்வாலை காப்பாற்றுவதும், கார்ப்பரேட் நிறுவனங்களை காப்பாற்றுவதும் தான். மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து, அதனால் வரும் வளர்ச்சி தேவை இல்லை. ஆட்சியாளர்கள் இதுபோன்ற செயல்களை கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் பேசும்போது கூறியதாவது:-

    தூத்துக்குடியில் மே 22-ந் தேதி நடந்த போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து நடத்திய பயங்கரத்தில் 13 பேர் உயிர் இழந்துள்ளனர். காவல் துறை மீது கோபம் வருகிறது. என்ன செய்வது, அவர் மோடி உத்தரவின் பேரிலும், முதல்-அமைச்சர் உத்தரவின் பேரிலும் செயல்படுகிறார்கள்.

    அரசியல் அமைப்பு சட்டம் போராட்டம் நடத்த உரிமை அளித்து உள்ளது. இதனை யாரும் தடுக்க முடியாது. பொதுமக்களுக்கு எதிராக நடந்த துப்பாக்கி சூடு என்பது ஒரு படுகொலை. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் பல்லாயிரம் பேரும் வருவோம். அடக்குமுறை மூலம் மக்களை கட்டுப்படுத்த கூடாது. அரசு ஜனநாயக முறையில் நடந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.



    Next Story
    ×