search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Commission For Scheduled Castes Investigation"

    தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் தூத்துக்குடியில் 3 நாட்கள் விசாரணை நடத்துகிறார். முதல் நாளான இன்று துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினர், பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்துகிறார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்தமாதம் (மே) 22-ந்தேதி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பொதுமக்கள் பேரணியாக சென்றனர். அப்போது தீ வைப்பு மற்றும் கல்வீச்சு சம்பவங்களில் போராட்டக்காரர்கள் ஈடுபட்டனர். அவர்களை ஒடுக்க போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    தூத்துக்குடியில் நடந்த மோதல், துப்பாக்கி சூடு, கலவரம் குறித்து மாநில மற்றும் தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். மேலும் கலவரம் நடந்த இடங்களை பார்வையிட்டனர்.

    தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர், போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினர், காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர்களை நேரில் சந்தித்து விசாரணை நடத்தினர்.

    மேலும் துப்பாக்கி சூடு நடந்தபோது பணியில் இருந்த தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஒரு வார காலம் கள விசாரணையில் ஈடுபட்ட அவர்கள், பின்பு விசாரணையை முடித்து கொண்டு டெல்லிக்கு புறப்பட்டனர். அவர்கள் தற்போது விசாரணை அறிக்கையை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    அதே போல் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஒரு நபர் விசாரணை கமி‌ஷன் நீதிபதி அருணா ஜெகதீசன் தூத்துக்குடி வந்து நேரடி விசாரணை நடத்தினார்.

    அவர் துப்பாக்கிசூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், அரசு துறை அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டார். மேலும் கலவரம் மற்றும் துப்பாக்கி சூடு நடந்த இடங்களை பார்வையிட்டு கள ஆய்விலும் ஈடுபட்டார். அவர் தனது அடுத்த கட்ட விசாரணையை அடுத்த மாதம் தூத்துக்குடியில் மீண்டும் தொடங்குகிறார்.

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரில் சாயர்புரம் அருகே உள்ள பேய்குளத்தை சேர்ந்த செல்வசேகர், தாளமுத்துநகர் காளியப்பன், மில்லர்புரம் சிலோன் காலனி கந்தையா, உசிலம்பட்டி ஜெயராமன் ஆகிய 4 பேர் மற்றும் காயமடைந்தவர்களில் சிலர் தாழ்த்தப்பட்டோர் பிரிவை சேர்ந்தவர்கள் ஆவர்.

    இதனால் அவர்கள் பலியானது குறித்து விசாரணை நடத்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் முருகன் தூத்துக்குடிக்கு வந்துள்ளனர். அவர் தனது விசாரணையை இன்று தொடங்கினர். அவர்கள் வருகிற 30-ந்தேதி வரை விசாரணையில் ஈடுபடுகிறார்.

    தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் முருகன் தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்துகிறார். விசாரணையின் முதல் நாளான இன்று, முதலில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    பின்பு தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான தாழ்த்தப்பட்டோரான செல்வசேகர், காளியப்பன், கந்தையா, ஜெயராமன் ஆகியோரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினார்.

    விசாரணையின் 2-வது நாளான நாளை (29-ந்தேதி) தூத்துக்குடியில் கலவரம் நடந்த போது கலெக்டராக இருந்த வெங்கடேஷ், போலீஸ் சூப்பிரண்டாக இருந்த மகேந்திரன் மற்றும் அதிகாரிகளுடன் துப்பாக்கி சூடு நடத்தியதிற்கான காரணம் உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து விசாரணை நடத்துகிறார்.

    3-வது நாளில் (30-ந்தேதி) தற்போதைய தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்கிறார். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய விசாரணை குறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியதாவது:-

    தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் தூத்துக்குடியில் 3 நாட்கள் விசாரணை நடத்துகிறார். முதல் நாளான இன்று துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்துகிறார்.

    நாளை (29-ந்தேதி) முன்னாள் தூத்துக்குடி கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, காவல்துறை மற்றும் அரசு துறை அதிகாரி களிடமும், நாளை மறுநாள் தற்போதைய கலெக்டர் மற்றும் காவல் துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்துகிறார். மேலும் கலவரம் தொடர்பாக மனு அளிப்பவர்களிடம் மனு வாங்கி, அதன் மீதும் விசாரணை நடத்துவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    ×