search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thirumangalam"

    திருமங்கலம் அருகே குடும்ப தகராறில் மனைவியை எரித்துக் கொல்ல முயன்றதாக கணவர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள நாகையாபுரம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட எஸ்.வளையபட்டியைச் சேர்ந்தவர் இளங்கோ (வயது 29). இவரது மனைவி பஞ்சவர்ணம் (27).

    இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகின்றன. செல்வகுமார் (7) என்ற மகன் உள்ளான். கடந்த சில மாதங்களாக இளங்கோவுக்கும், அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் குடும்பத்தகராறு உருவானது.

    நேற்றும் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் பஞ்சவர்ணம் மற்றும் இளங்கோ தீக்காயங்களுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர்.

    இது குறித்து நாகையாபுரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது பஞ்சவர்ணம் கூறுகையில், குடும்ப தகராறில் கணவர் இளங்கோ, என்மீது மண் எண்ணை ஊற்றி தீ வைத்தார். அந்த அறையில் இருந்த மகனை காப்பாற்ற வந்தபோது நான் கணவரை கட்டிப்பிடித்தேன் என்றார்.

    மேலும் கணவரின் செயலுக்கு அவரது பாட்டி பேச்சியம்மாள் உடந்தையாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

    அதன்பேரில் இளங்கோ, பேச்சியம்மாள் மீது நாகையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருமங்கலத்தில் பல்வேறு கொலை வழக்கில் தொடர்புடையவர் ரவுடி டாக் ரவி. கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் ஒருவரை கொல்ல முயற்சி செய்ததாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

    பேரையூர்:

    மதுரை, திண்டுக்கல், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ரவுடியாக வலம் வந்தவர் டாக் ரவி என்ற ரவிக்குமார் (வயது 47). இவர் மதுரை எல்லீஸ் நகரில் குடியிருந்து வருகிறார்.

    இவர் மீது முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா, வரிச்சியூர் செல்வத்தின் தம்பி இளங்கோ கொலை வழக்கு உள்ளிட்ட 4 கொலை வழக்குகள் உள்பட 24 வழக்குகள் உள்ளன.

    2014-ம் ஆண்டுக்கு பின் இவர் மீது வழக்கு எதுவும் பதிவாகவில்லை. தற்போது 2 வழக்குகள் மட்டும் நிலுவையில் உள்ளது.

    இந்த நிலையில் திருமங்கலம் அருகேயுள்ள எர்ர மலம்பட்டியைச் சேர்ந்த பீட்ராமன் (45) என்பவரிடம் டாக் ரவி என்ற ரவிக்குமார் ரூ.1 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று திருமங்கலம் அருகே உள்ள மறவன்குளம் தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனத்திற்கு டாக் ரவி வந்ததாகவும், அப்போது பிட்ராமன் தான் கொடுத்த 1 லட்ச ரூபாய் பணத்தை கேட்டதற்கு டாக் ரவி ஆபாசமாக பேசியதோடு, காலி பீர் பாட்டிலை எடுத்து கொலை செய்யும் நோக்கத்துடன் அவரை குத்த முயன்றதாக தெரிகிறது.

    பின்னர் ராமனின் இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து ராமன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரவுடி ராக் ரவி கைது செய்யப்பட்டார். திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம் அருகே கார் மோதிய விபத்தில் தாய் கண் முன்பு மகன் பரிதாபமாக இறந்தான்.

    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி மல்லிகா. இவர்களுக்கு சூர்யா (வயது 13), ஆறுமுகம் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    சூர்யா அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை மல்லிகா மகன் சூர்யாவுடன் 4 வழிச்சாலையில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கு சாமி கும்பிட்டு விட்டு இருவரும் வீட்டுக்கு புறப்பட்டனர்.

    தாய்-மகன் 4 வழிச் சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வேகமாக வந்த கார் எதிர்பாராத விதமாக சூர்யா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சூர்யா ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்தான். இதைப் பார்த்த மல்லிகா அதிர்ச்சியில் உறைந்தார்.

    அங்கிருந்தவர்கள் சூர்யாவை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் சூர்யா பரிதாபமாக இறந்தான்.

    புகாரின் பேரில் கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த முத்துச்செல்வம் (28) என்பவரை கைது செய்தனர்.

    திருமங்கலம் அருகே வைகை நீரை பங்கிடுவதில் பாரபட்சம் காட்டுவதாக புகார் கூறி, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பேரையூர்:

    பருவ மழை மற்றும் கஜா புயல் காரணமாக மழை பெய்ததால் வைகை அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. இதன் காரணமாக மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயத்துக்காக வைகை அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக சில ஆண்டுகளாக வற்றிக்கிடந்த மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூர் கண்மாய் தற்போது நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. இந்த தண்ணீர் கம்பிக்குடி கால்வாய் மூலமாக திருமங்கலம் அருகே உள்ள பெரிய ஆலங்குளம் கண்மாய்க்கு வந்தடையும்.

    இந்த கண்மாய் நிரம்பிய பின் அருகில் உள்ள ஓ.ஆலங்குளம், விருசங்குளம், பெரிய உலகாணி, சின்னஉலகாணி ஆகிய பகுதிகளில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கண் மாய்களுக்கு செல்லும்.

    இதன்மூலம் ஆயிரக் கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. தற்போது நிலையூர் கண்மாய் நிரம்பி, பெரிய ஆலங்குளம் கண்மாய்க்கு தண்ணீர் சென்றது. அந்த கண்மாயும் தற்போது நிரம்பியதால் உபரி நீர் அருகில் உள்ள ஓ.ஆலங்குளம், விருசங்குளம் கண்மாய்களுக்கு செல்கிறது.

    ஆனால் இந்த கிராமங்களுக்கு தண்ணீரை சமமாக பங்கீடு செய்யவில்லை என விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர். நேற்று ஓ.ஆலங்குளத்துக்கு மட்டும் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடுவதாகவும், விருசங்குளத்துக்கு பாரபட்சம் காட்டுவதாகவும் புகார் கூறி, அந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் மறியல் கைவிடப்பட்டது.

    இந்த நிலையில் ஓ.ஆலங்குளத்துக்கு செல்லும் தண்ணீரை பெரிய ஆலங்குளம் கிராம மக்கள் இன்று மணல் மூட்டைகளை அடுக்கி தடுத்து நிறுத்தினர். இதனால் ஓ.ஆலங்குளம், விருசங்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களுக்கு தண்ணீர் செல்வது முற்றிலும் தடைபட்டது.

    இதை கண்டித்து இன்று காலை ஓ.ஆலங்குளத்தை சேர்ந்த 100-க்கும மேற்பட்டோர் திடீர் என சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பெரிய ஆலங்குளத்தில் இருந்து சரிசமமாக மற்ற ஊர்களுக்கு திறந்து விட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    மறியல் குறித்து தகவல் அறிந்த அதிகாரி பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அனைத்து கண்மாய்களும் நிரம்பும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

    கம்பிக்குடி கால்வாய் தண்ணீரை பங்கிடுவது தொடர்பாக கிராம மக்களிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. பொதுவாக ஏரி, குளங்கள், கண்மாய்கள் ஆகியவை பொதுப்பணித்துறை கட்டுப் பாட்டில்தான் இருக்கும். ஆனால் இந்த பகுதியில் சிலர் தன்னிச்சையாகவே கண்மாய்க்கு வரும் தண்ணீரை அடைத்து வருகின்றனர். பொதுப்பணித்துறை அதிகாரிகளும் மெத்தனமாக இருந்து கண்டுகொள்வதில்லை என அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    திருமங்கலம் அருகே விபத்தில் விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருமங்கலம்:

    திருமங்கலம் அருகே உள்ள நடுவக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பையா, விவசாயி. இவர் இன்று காலை அருகில் உள்ள அச்சம்பட்டி காலனிக்கு சென்றார்.

    அங்கு ரோட்டோரத்தில் உள்ள கடையில் டீ குடித்தார். பின்னர் அங்குள்ள மெயின் ரோட்டை கடக்க முயன்றார்.

    அப்போது திருமங்கலத்தில் இருந்து வந்த மினிலாரி சுப்பையா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்தார்.

    உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே சுப்பையா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருமங்கலம் அருகே குடும்ப பிரச்சினையில் ஆத்திரம் அடங்காத கணவன் மனைவியின் கழுத்தை அறுத்து துண்டாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள பேரையூர் போலீஸ் சரகத்துக்குட்பட்டது பெரிய பூலாம்பட்டி. இந்த கிராமத்தை சேர்ந்தவர் பெத்தண்ணன் (வயது 69). இவருக்கு மாரியம்மாள் (60) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    மகளுக்கு திருமணமாகி அருகில் உள்ள மீனாட்சிபுரத்தில் கணவருடன் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக மகள் தந்தை வீட்டுக்கு வந்து ஏதாவது ஒரு பொருளை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதற்கு பெத்தண்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்து மனைவியை எச்சரித்துள்ளார்.

    சிறிது காலத்தில் இந்த பிரச்சினை பெரிதாகி பெத்தண்ணன்-மாரியம்மாளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மாரியம்மாள் கோபித்துக்கொண்டு மகள் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    இந்த நிலையில் நேற்று குடும்பத்தினர் சமரசம் பேசினர். இதையடுத்து மாரியம்மாள் கணவன் வீட்டுக்கு சென்றார். நேற்றும் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இருவரும் சிறிது நேரம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு விட்டு தூங்கினர்.

    ஆனாலும் மனைவி மீது ஆத்திரம் அடங்காத பெத்தண்ணன் அதி காலையில் எழுந்து தூங்கிக்கொண்டிருந்த மனைவி மாரியம்மாள் கழுத்தில் அரிவாளால் வெட்டினார். இதில் அவரது தலை துண்டானது.

    இதுகுறித்து தகவல் அறிந்த பேரையூர் போலீசார் சம்பவத்தன்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலையாளி பெத்தண்ணனை போலீசார் கைது செய்தனர்.

    திருமங்கலம் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் தருமத்துப்பட்டியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மகன் சஞ்சீவி (வயது 15). இவர் கப்பலூரில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று சதீஷ்குமார் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

    குதிரைசாரிகுளம் 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருந்த போது திடீரென மோட்டார் சைக்கிள் பழுதானது. உடனே அதனை அங்கேயே விட்டுவிட்டு சதீஷ்குமார் வீட்டுக்கு வந்தார்.

    பின்னர் வீட்டில் இருந்த தனது மகன் சஞ்சீவியிடம் மோட்டார் சைக்கிளை எடுத்துவருமாறு கூறியுள்ளார்.

    அதன்படி சஞ்சீவி குதிரைசாரிகுளம் 4 வழிச்சாலையில் நின்றிருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரி எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில் சஞ்சீவி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்தனர்.

    திருமங்கலம்-கள்ளிக்குடி பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 கொள்ளையர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேரையூர்:

    திருமங்கலம் மற்றும் கள்ளிக்குடி பகுதிகளில் பூட்டியிருந்த வீடுகளில் புகுந்து கொள்ளையடிப்பது, தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பது உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தன.

    இதுதொடர்பான புகார்கள் போலீஸ் நிலையத்தில் குவிந்த வண்ணம் இருந்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில் திருமங்கலம் தாலுகா மற்றும் கள்ளிக்குடி போலீசார் கொள்ளையர்களை பிடிக்க தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் தனிப்படை போலீசாரும் விசாரணையை முடுக்கி விட்டனர். இதில் திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தது தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கோடாங்கிபட்டியை சேர்ந்த நாகையா மகன் செந்தில்குமார் (வயது30) என தெரியவந்தது. இதையடுத்து தாலுகா போலீசார் அவரை கைது செய்து 10 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் கள்ளிக்குடி பகுதியில் திருப்பரங்குன்றம் ராஜீவ்நகரைச் சேர்ந்த திருச்செல்வம் (44) என்பவர் வீடு புகுந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து கள்ளிக்குடி போலீசார் திருச்செல்வத்தை கைது செய்தனர். இவரிடம் இருந்து 15 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

    திருமங்கலம் அருகே தோட்டத்தில் போலி மது தயாரிக்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்து போலி லேபிள், மூலப் பொருட்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள புளிய கவுண்டன்பட்டியை சேர்ந்த அய்யாவு மகன் தங்கமாயன். இவரது தோட்டத்தில் போலி மதுபானம் (பிராந்தி) தயாரிக்கப்படுவதாக மாவட்ட தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு அதிரடியாக சென்று ஆய்வு செய்தனர்.

    அப்போது போலி மது தயாரிப்புக்கான பொருட்கள் அங்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 4 கேன்களில் 120 லிட்டர் மூலப்பொருட்கள், 13 ஆயிரம் போலி லேபிள், 5 மூட்டைகளில் 180 மில்லி பாட்டில்கள், 3 மூட்டைகளில் பாட்டில் மூடிகள் மற்றும் பேக்கிங் எந்திரம் போன்றவை தோட்டத்தில் இருந்தன.

    மேலும் போலி மது தயாரிக்கும் பணியில் 3 பேர் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடமுயன்றனர். போலீசார் 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் அங்கிருந்த போலி மது தயாரிப்புக்கான மூலப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

    பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களும், பிடிபட்ட 3 பேரும் மது விலக்கு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    அவர்களது பெயர் பிரகாஷ் (வயது35), விக்னேஷ் வரன் (25), சுரேஷ் (28) என்பதும், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. போலி மது தயாரிக்கப்பட்ட தோட்டத்து உரிமையாளர் தங்கமாயன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இந்த போலி மதுபான ஆலை பல ஆண்டுகளாக இங்கு செயல்பட்டு வந்திருக்கலாம் என்றும், இங்கு தயாராகும் போலி மது பல கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் தவறி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேரையூர்:

    மதுரை ஆலங்குளத்தில் உள்ள தமிழ்நகரைச் சேர்ந்தவர் மணிமாறன். இவரது மனைவி மஞ்சுளா (வயது 35). இவர் நேற்று திருமங்கலம் அருகே கிழவனேரியில் நடந்த உறவினர் விசே‌ஷத்திற்கு சகோதரி மகன் தங்கப் பாண்டி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    பின்னர் அவர்கள் மாலையில் மதுரைக்கு புறப்பட்டனர். மறவமங்கலம் மேம்பாலத்தில் இருந்து மோட்டார் சைக்கிள் வேகமாக இறங்கியது.

    இதில் பின்னால் அமர்ந்திருந்த மஞ்சுளா நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உயிருக்கு போராடிய அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரது நிலைமை மோசமானதால் அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மஞ்சுளா பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருமங்கலம், அண்ணாநகர் உள்பட 4 சுரங்க மெட்ரோ ரெயில் நிலையங்களில் மின்விளக்குகள், ஏசி, ரெயில் இயக்கம் ஆகியவற்றின் மின் தேவைக்காக சூரிய ஒளி மின்சார வசதி அமைக்கப்பட்டுள்ளது. #MetroTrain
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. கோயம்பேடு-ஆலந்தூர், சின்னமலை-விமானநிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம்-சென்ட்ரல், சைதாப்பேட்டை-டி.எம்.எஸ் வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் பயணிகள் போக்குவரத்து சேவை நடந்து வருகிறது.

    பயணிகள், பொதுமக்கள் இடையே ஏற்பட்ட வரவேற்பையொட்டி சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் சேவை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் 4 சுரங்க மெட்ரோ ரெயில் நிலையங்களில் மின்விளக்குகள், ஏசி, ரெயில் இயக்கம் ஆகியவற்றின் மின் தேவைக்காக சூரிய ஒளி மின்சார வசதி அமைக்கப்பட்டுள்ளது.

    திருமங்கலம், அண்ணா நகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, ஷெனாய் நகர் ஆகிய ரெயில் நிலையங்களில் 103 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் வகையில் சூரிய ஒளி மின்சார பேனல்கள் நிறுவப்பட்டுள்ளன. மெட்ரோ ரெயில் நிலையத்தில் ஒரு மாதத்திற்கு 13,800 யூனிட் மின்சாரம் தேவைப்படுகிறது.

    இந்த சூரிய ஒளி மின்சார வசதியால் வருடத்துக்கு ரூ.6.3 லட்சம் மின்சார செலவு குறைகிறது. உயர் மட்ட பாதை மெட்ரோ ரெயில் நிலையங்களில் 6 மெகாவாட் சூரிய ஒளி சக்தி மின்சாரம் தயாரிக்கும் வகையிலான சோலார் பேனல்கள் விரைவில் நிறுவப்பட உள்ளன.

    இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மெட்ரோ ரெயில் நிலையங்களில் இதுவரை 1.6 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் உள்பத்தி பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளி பேனல்கள் மூலம் உற்பத்தியாகும் மின்சாரம் தினசரி மின் தேவைகளுக்கு பயன் உள்ளதாக இருக்கிறது.


    2016-ம் ஆண்டு கோயம்பேடு மெட்ரோ நிர்வாக அலுவலகத்தில் சூரிய ஒளி மின்சார வசதி தொடங்கப்பட்டு தினசரி 5 ஆயிரம் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டது. அதன் பிறகு 1 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாக அதிகரிக்கப்பட்டது.

    கோயம்பேடு மெட்ரோ அலுவலகத்தில் மாதத்திற்கு 1.35 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன்மூலம் ரூ.22 லட்சம் மின்சார செலவு ஒவ்வொரு மாதமும் சேமிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #MetroTrain
    திருமங்கலத்தில் அரசு பஸ் மீது கல் வீசிய நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள செங்கப்படையில் இருந்து நேற்று இரவு அரசு பஸ் பயணிகளுடன் திருமங்கலத்திற்கு புறப்பட்டது.

    சீனிராஜ் (வயது 44) என்பவர் டிரைவராகவும், ஆதிமூலம் என்பவர் கண்டக்டராகவும் பணியில் இருந்தனர்.

    திருமங்கலம் தெற்குத் தெரு விநாயகர் கோவில் அருகே அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது மஞ்சள் பனியன் அணிந்திருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென்று பஸ்சின் பின்புறம் கற்களை வீசிவிட்டு தப்பினார். இதில் கண்ணாடிகள் உடைந்தன.

    இது குறித்து திருமங்கலம் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தெற்கு தெருவைச் சேர்ந்த குழந்தைவேலு என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×