search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "village public"

    நெமிலி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அரக்கோணம்:

    நெமிலி அருகே உள்ள பத்திபுத்தூர் கிராமத்தில் கடந்த 8 மாதங்களாக குடிநீர் சப்ளை செய்யவில்லை.

    இது தொடர்பாக பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் செய்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில்

    ஊராட்சி செயலாளர் குடிநீர் தொட்டி ஆபரேட்டர் ஆகியோருக்கு சம்பளம் வழங்காததால் குடிநீர் சப்ளை செய்யவில்லை எனக் கூறப்பட்டது.

    இது தொடர்பாக நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதற்கு பின்னரும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் தொடர்ந்து குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை பத்திபுத்தூரில் உள்ள நெமிலி-அரக்கோணம் சாலையில் மறியல் செய்தனர். பெண்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராம லிங்கம், அமுதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அதிகாரிகளிடம் பேசி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கபடும் என உறுதி அளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடைரோடு அருகே அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    கொடைரோடு:

    கொடைரோடு அருகே பள்ளபட்டி ஊராட்சியில் உள்ள கவுண்டன்பட்டி, ராமன் செட்டிபட்டி, கவுண்டன் பட்டி கிழக்கு தெரு ஆகிய ஊர்களுக்காக மயானம் அகரன்குளம் கண்மாய் அருகில் இருக்கிறது. இந்த மயானத்தின் இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து இருப்பதாக இப்பகுதி மக்கள் புகார் கூறி வருகின்றனர்.

    இது குறித்து தமிழக முதல்அமைச்சர், மாவட்ட கலெக்டர், நிலக்கோட்டை தாசில்தார், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனுக்கள் கொடுத்துள்ளனர். மயானம் இடம் ஆக்கிரமிப்புகளை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

    இதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் மலரவன் ஆக்கிரமிப்புகளை அகற்றிட நடவடிக்கை மேற் கொண்டார். மயானம் இடத்தை சர்வே செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் கிராம மக்கள் யாரும் வேலைக்கு செல்லாமல் அதிகாரிகள் வருகைக்காக காத்திருந்தனர். ஆனால் மயான இடத்தை அளவிட அதிகாரிகள் யாரும் வரவில்லை.

    ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் திரண்டு மதுரை- வத்தலக்குண்டு செல்லும் சாலையில் திடீர் மறியலில் ஈடுப்பட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் மலரவன், அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மயான இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றிட நடவடிக்கை எடுக்கப்படும். அடிப்படை வசதிகள் செய்து தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

    கொடைரோடு அருகே கிராம மக்கள் திடீர் சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர்.

    கொடைரோடு:

    கொடைரோடு அருகே உள்ள ஜம்புதுரைக்கோட்டை ஊராட்சியில் உள்ள பூதிப்புரம் கிராமத்தில் ஒரு தனியார் வீடு கட்ட பணி செய்ய முயன்ற போது சிலர் எதிர்ப்பு தெரிவித்து அந்த இடம் பொதுவானது என்றும், தனியாருக்கு சொந்தமானது அல்ல என்றும் மதுரை- செம்பட்டி சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர்.

    தகவல் கிடைத்தவுடன் அம்மையநாயக்கனூர் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தனியாருக்கு சொந்தமானதா? பொதுவான இடமா? என வருவாய்த்துறை மூலம் தீர்வு காண வேண்டும், பேச்சுவார்த்தை நடத்தி கொள்ளலாம் என தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து மறியலை கைவிட்டனர்.இதனால் ஜம்புதுரைக்கோட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    கொடைக்கானல் கீழ்மலைப்பகுதியில் கிராம மக்களுக்கு லாரி மூலம் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ்மலைப்பகுதியில் தாண்டிக்குடி, காமனூர், கே.சி.பட்டி, பெரியூர், பாச்சலூர், பூலத்தூர் போன்ற ஊராட்சி பகுதிகள் கஜா புயலால் கடும் சேதம் அடைந்து உள்ளது.

    கொடைக்கானல் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராமஊராட்சி) பட்டுராஜன் தலைமையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இப்பகுதியில் உள்ள மேல்நிலை தொட்டிகளில் தண்ணீரை சேகரித்து வைத்து வினியோகம் செய்தனர்.

    தற்போது மின்சாரம் துண்டிக்கப்பட்தால் குடிநீர் வழங்க முடியவில்லை. இதனால் கே.சி.பட்டி, பெரியூர், பாச்சலூர் போன்ற ஊராட்சி பகுதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர் பட்டுராஜன் தலைமையில் லாரி மூலம் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    அப்போது மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபாலகிருஷ்ணன், ஊராட்சி செயலர்கள் செந்தில்குமார், ரெங்கராஜேந்திரன் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    திருமங்கலம் அருகே வைகை நீரை பங்கிடுவதில் பாரபட்சம் காட்டுவதாக புகார் கூறி, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பேரையூர்:

    பருவ மழை மற்றும் கஜா புயல் காரணமாக மழை பெய்ததால் வைகை அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. இதன் காரணமாக மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயத்துக்காக வைகை அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக சில ஆண்டுகளாக வற்றிக்கிடந்த மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூர் கண்மாய் தற்போது நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. இந்த தண்ணீர் கம்பிக்குடி கால்வாய் மூலமாக திருமங்கலம் அருகே உள்ள பெரிய ஆலங்குளம் கண்மாய்க்கு வந்தடையும்.

    இந்த கண்மாய் நிரம்பிய பின் அருகில் உள்ள ஓ.ஆலங்குளம், விருசங்குளம், பெரிய உலகாணி, சின்னஉலகாணி ஆகிய பகுதிகளில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கண் மாய்களுக்கு செல்லும்.

    இதன்மூலம் ஆயிரக் கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. தற்போது நிலையூர் கண்மாய் நிரம்பி, பெரிய ஆலங்குளம் கண்மாய்க்கு தண்ணீர் சென்றது. அந்த கண்மாயும் தற்போது நிரம்பியதால் உபரி நீர் அருகில் உள்ள ஓ.ஆலங்குளம், விருசங்குளம் கண்மாய்களுக்கு செல்கிறது.

    ஆனால் இந்த கிராமங்களுக்கு தண்ணீரை சமமாக பங்கீடு செய்யவில்லை என விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர். நேற்று ஓ.ஆலங்குளத்துக்கு மட்டும் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடுவதாகவும், விருசங்குளத்துக்கு பாரபட்சம் காட்டுவதாகவும் புகார் கூறி, அந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் மறியல் கைவிடப்பட்டது.

    இந்த நிலையில் ஓ.ஆலங்குளத்துக்கு செல்லும் தண்ணீரை பெரிய ஆலங்குளம் கிராம மக்கள் இன்று மணல் மூட்டைகளை அடுக்கி தடுத்து நிறுத்தினர். இதனால் ஓ.ஆலங்குளம், விருசங்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களுக்கு தண்ணீர் செல்வது முற்றிலும் தடைபட்டது.

    இதை கண்டித்து இன்று காலை ஓ.ஆலங்குளத்தை சேர்ந்த 100-க்கும மேற்பட்டோர் திடீர் என சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பெரிய ஆலங்குளத்தில் இருந்து சரிசமமாக மற்ற ஊர்களுக்கு திறந்து விட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    மறியல் குறித்து தகவல் அறிந்த அதிகாரி பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அனைத்து கண்மாய்களும் நிரம்பும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

    கம்பிக்குடி கால்வாய் தண்ணீரை பங்கிடுவது தொடர்பாக கிராம மக்களிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. பொதுவாக ஏரி, குளங்கள், கண்மாய்கள் ஆகியவை பொதுப்பணித்துறை கட்டுப் பாட்டில்தான் இருக்கும். ஆனால் இந்த பகுதியில் சிலர் தன்னிச்சையாகவே கண்மாய்க்கு வரும் தண்ணீரை அடைத்து வருகின்றனர். பொதுப்பணித்துறை அதிகாரிகளும் மெத்தனமாக இருந்து கண்டுகொள்வதில்லை என அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    ×