என் மலர்
செய்திகள்

திருமங்கலம்-கள்ளிக்குடி பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 கொள்ளையர்கள் கைது
பேரையூர்:
திருமங்கலம் மற்றும் கள்ளிக்குடி பகுதிகளில் பூட்டியிருந்த வீடுகளில் புகுந்து கொள்ளையடிப்பது, தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பது உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தன.
இதுதொடர்பான புகார்கள் போலீஸ் நிலையத்தில் குவிந்த வண்ணம் இருந்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில் திருமங்கலம் தாலுகா மற்றும் கள்ளிக்குடி போலீசார் கொள்ளையர்களை பிடிக்க தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
மேலும் தனிப்படை போலீசாரும் விசாரணையை முடுக்கி விட்டனர். இதில் திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தது தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கோடாங்கிபட்டியை சேர்ந்த நாகையா மகன் செந்தில்குமார் (வயது30) என தெரியவந்தது. இதையடுத்து தாலுகா போலீசார் அவரை கைது செய்து 10 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் கள்ளிக்குடி பகுதியில் திருப்பரங்குன்றம் ராஜீவ்நகரைச் சேர்ந்த திருச்செல்வம் (44) என்பவர் வீடு புகுந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து கள்ளிக்குடி போலீசார் திருச்செல்வத்தை கைது செய்தனர். இவரிடம் இருந்து 15 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.