search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thirumangalam"

    திருமங்கலம் அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பேரையூர்:

    திருமங்கலத்தை அடுத்துள்ள சிவரக்கோட்டை ரெயில்வே தண்டவாளத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் தலை, உடல் துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

    தகவல் அறிந்ததும் விருதுநகர் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் குருசாமி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ரெயில் மோதி இறந்த அந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. பலியான வாலிபர் தனது கையில் மஞ்சள், கருப்பு கயிறு கட்டியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

    திருமங்கலம் கோவில் விழாவில் கோஷ்டி மோதலில் ஈடுபட்டதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை திருமங்கலம் அருகே உள்ள டி.புதுப்பட்டியில் முனியாண்டி கோவில் விழாவையொட்டி ஆடல்- பாடல் நிகழ்ச்சி நடந்தது. தொட்டியபட்டி உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை ரசித்தனர்.

    அப்போது உள்ளூரைச் சேர்ந்தவர்களுக்கும், தொட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் பலர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த நிலையில் டி.புதுப்பட்டியைச் சேர்ந்த அய்யலுராஜ் மகன் அருண் (வயது 19) என்பவர் ‘‘எங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும்’’என்று திருமங்கலம் போலீசில் புகார் செய்தார்.

    ஆனாலும் போலீசார் குற்றவாளிகளை கைது செய்ய தயக்கம் காட்டியதாக தெரிகிறது. இதையடுத்து புதுப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் திருமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தினகரன் புதுப்பட்டி கோஷ்டி மோதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தொட்டியப்பட்டியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் பிரகாஷ் (19), மார்நாடு மகன் ஜெகதீஸ்வரன் (20), அழகுமலை மகன் லட்சுமணன் (23) ஆகிய 3 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது தவிர தப்பி ஓடி தலைமறைவான பிரிய தர்‌ஷன், கண்ணன், தர்மதுரை, திருமேனி, முருகேசன், முரளி ஆகிய 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    திருமங்கலம் அருகே 2 வாலிபர்களை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

    பேரையூர்:

    திருமங்கலம் அண்ணா நகரைச் சேர்ந்த ஆண்டிச்சாமி மகன் வீரமணி (வயது 34). இவரது பக்கத்து வீட்டுக்காரர் விருமாண்டி (35). இவர்களுக்கு இடையே முன் விரோதம் இருந்து வருகிறது.

    இந்த நிலையில் வீரமணி போதையில் வந்து விருமாண்டியிடம் சண்டை போட்டார். தகராறு முற்றவே வீரமணி ஆத்திரமடைந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விருமாண்டியின் வயிற்றில் குத்தினார். இதைத் தடுக்க வந்த முத்தையா (32) என்பவரது கையிலும் கத்திக்குத்து விழுந்தது.

    கத்திக்குத்தில் காயமடைந்த இருவரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கத்திக்குத்து குறித்து திருமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமணியை கைது செய்தனர்.

    திருமங்கலம் அருகே ரவுடியை அரிவாளால் வெட்டிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை நரிமேடு மருது பாண்டியன் நகரை சேர்ந்தவர் கற்பூர பாண்டியன் (வயது 24). பிரபல ரவுடி. இவர் கடந்த ஆண்டு தல்லா குளத்தில் நண்பர்களுடன் சேர்ந்து வாலிபர் ஒருவரை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார்.

    இதையடுத்து கற்பூர பாண்டியன் மதுரையை காலிசெய்துவிட்டு திருமங்கலம் அருகில் உள்ள மருதங்குடி கிராமத்தில் வசித்து வருகிறார். அங்கிருந்து தினமும் மதுரை வந்து தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்தார்.

    இந்த நிலையில் கற்பூர பாண்டியன் சம்பவத்தன்று நண்பர் அய்யனாருடன் மோட்டார் சைக்கிளில் தல்லாகுளம் சென்று மருதங்குடிக்கு திரும்பிக் கொண்டு இருந்தார்.

    அப்போது இலந்தை குளம் விலக்கில் வந்த கும்பல் பயங்கர ஆயுதங்களால் கற்பூர பாண்டியனை வெட்டியது.

    படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த கற்பூர பாண்டியனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுதொடர்பாக திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கற்பூர பாண்டியனை வெட்டிய திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலையை சேர்ந்த சுடலை முத்து, மதுரை ஜெய்ஹிந்த் புரம் ஜெகன் (33), தினேஷ் குமார் (23), சங்கர் (23), லோகேஸ் கண்ணன் (23), தனசேகர் (21) ஆகிய 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ரவுடிகளுக்குள் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கற்பூர பாண்டியனை கொல்ல முயன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கற்பூர பாண்டியனிடமும் கொலை முயற்சி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கண்டக்டர் பலியானார்.

    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள கொம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் மணிகண்டன் (வயது 20). தனியார் பஸ் கண்டக்டர்.

    கொம்பாடியில் இருந்து மணிகண்டன் மோட்டார் சைக்கிளில் திருமங்கலம் புறப்பட்டார். விருத்தன்குளம் வளைவு பகுதியில் வந்தபோது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையில் சரிந்தது.

    இந்த விபத்தில் மணிகண்டன் பலத்த காயமடைந்தார். அவரை 108 ஆம்புலன்சு மூலம் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மணிகண்டன் இறந்தார்.

    விபத்து குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம் அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 50). வெல்டிங் தொழிலாளியான இவர் நேற்று திருமங்கலம் அருகே உள்ள புதுப்பட்டிக்கு வேலைக்கு சென்று இருந்தார்.

    வேலையை முடித்து விட்டு செல்வராஜ் மதுரை ஆவின் நகரை சேர்ந்த வேல்முருகன் (48) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார்.

    மோட்டார் சைக்கிளை வேல்முருகன் ஓட்டி வந்தார். மறவன்குளம் மதுரை மெயின் ரோட்டில் வந்து கொண்டு இருந்த போது நாகர்கோவிலுக்கு சென்ற அரசு பஸ் எதிர் பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் பின்னால் அமர்ந்து இருந்த செல்வராஜ் தவறி கீழே விழந்தார். தலையில் பலத்தக்காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் செல்வம் என்பவரை கைது செய்தார்.

    திருமங்கலம் அருகே உள்ள செங்குளத்தை சேர்ந்தவர் ஓச்சாதேவர் (70). இவர் அங்குள்ள மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டு இருந்த போது அந்த வழியா வந்த டிப்பர் லாரி மோதியது. இதில் ஓச்சாதேவரின் 2 கால்களும் துண்டானது.

    அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள்.

    திருமங்கலத்தில் சூப்பர் மார்க்கெட்டில் பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    பேரையூர்:

    திருமங்கலம் ரெயில்வே பீடர் ரோட்டை சேர்ந்தவர் வெங்கடேசுவரன் (வயது40). முன்னாள் தே.மு.தி.க. கவுன்சிலரான இவர் அதே பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு இவரது கடைக்குள் புகுந்த மர்ம நபர் கல்லாபெட்டியில் இருந்த ரூ.40 ஆயிரத்தை திருடிக்கொண்டு தப்பினான்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் திருடிய நபரை தேடி வந்தனர்.

    தொடர் விசாரணையில் சூப்பர் மார்க்கெட்டில் பணம் திருடியது பெருங்குடி அண்ணாநகரைச் சேர்ந்த சின்னச்சாமி மகன் விக்கி என்ற விக்னேஷ்(26) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இவரை கைது செய்தனர்.

    விக்னேஷ் மீது கொலை முயற்சி, வழிப்பறி, கொலை வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடததக்கது.

    திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் மெக்கானிக் பரிதாபமாக இறந்தார்.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கீழக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் மணிமாறன் (வயது29). மெக்கானிக்கான இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு விடுமுறையையொட்டி மணிமாறன் ஊருக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று அவர் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு ஊருக்கு புறப்பட்டார்.

    மேலக்கோட்டை பெரியார் காலனி 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் மணிமாறன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு உடல்நிலை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    இந்த நிலையில் நேற்று இரவு மணிமாறன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருமங்கலம் அருகே கல்குவாரியில் பாறை உருண்டு விழுந்து அமுக்கியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

    பேரையூர்:

    திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள வி.அம்மாபட்டி கிழக்குத்தெருவைச் சேர்ந்தவர் அய்யாச்சாமி (வயது 40). பாரம் ஏற்றும் தொழிலாளி.

    இவர் காடனேரியில் உள்ள கல்குவாரிக்கு கல் பாரம் ஏற்றிச் சென்றார். டிராக்டரில் மற்ற தொழிலாளிகளுடன் சேர்ந்து கற்களை ஏற்றிக் கொண்டிருந்தார்.

    அப்போது குவாரியின் மேல் பகுதியில் இருந்து பாறை உருண்டு வந்து அமுக்கியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அய்யாச்சாமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து டி.கல்லுப்பட்டி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். பின்னர் அய்யாச்சாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருமங்கலம் பகுதியில் 15-ந் தேதி மின் நிறுத்தம் ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பேரையூர்:

    திருமங்கலம் மின் வினியோக செயற்பொறியாளர் ரமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருமங்கலம் துணை மின் நிலையத்தில் வருகிற 15-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

    எனவே அந்த நேரத்தில் திருமங்கலம் நகர் பகுதிகள், உலகாணி, சித்தாலை, சாத்தாங்குடி, புதுப்பட்டி, ஆலம்பட்டி, அச்சம்பட்டி, சிவரக்கோட்டை, மேலக்கோட்டை, மைக்குடி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    கப்பலூர் துணை மின் நிலையத்திலும் 15-ந் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

    எனவே அந்த சமயத்தில் கப்பலூர், கப்பலூர் பகுதி தியாகராஜர் மில், உச்சப்பட்டி, தனக்கன்குளம், கூத்தியார்குண்டு, தோப்பூர், முல்லை நகர், ஆஸ்டின்பட்டி, செட்டிகுளம், கரடிக்கல் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    திருமங்கலம் அருகே மர்ம காய்ச்சலுக்கு துப்புரவு தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

    பேரையூர்:

    திருமங்கலத்தில் உள்ள துப்புரவு தொழிலாளர் காலனியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 48). திருமங்கலம் நகராட்சியில் கடந்த 20 ஆண்டாக துப்புரவு ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கிருஷ்ணன் காய்ச்சலால் அவதிப்பட்டார்.

    உடனடியாக அவரை திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார்.

    கிருஷ்ணன் எந்த வகையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார் என்று தெரியவில்லை. கடந்த 10 மாதத்தில் திருமங்கலம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் இறந்துள்ளனர்.

    திருமங்கலத்தில் மத்திய அரசு அதிகாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    திருமங்கலம் சி.பி.டபுள்யூ. குடியிருப்பு 46-வது பிளாக்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ஞானசேகர் (வயது52). தேனாம்பேட்டையில் உள்ள மத்திய அரசு கணக்கு தணிக்கை அலுவலகத்தில் அதிகாரியாக இருந்தார். இவரது மனைவி மார்க்ரெட். இவர்களுக்கு மகளும், மகனும் உள்ளனர்.

    இன்று காலை வெகு நேரமாகியும் ஞானசேகரின் படுக்கையறை கதவு திறக்க வில்லை. சந்தேகமடைந்த குடும்பத்தினர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    அப்போது அங்குள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு ஞானசேகர் தற்கொலை செய்து இருந்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் கதறி அழுதனர்.

    இதுகுறித்து திருமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணா மற்றும் போலீசார் ஞானசேகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் ஞானசேகர் கடந்த சில மாதங்களாக கடன் பிரச்சினையால் மிகுந்த மன உளைச்சலில் இருந்தது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    ×