search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thanga tamil selvan"

    நீதிபதியை பற்றி கடும் விமர்சனம் செய்துள்ள தங்க தமிழ்ச்செல்வன் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று ஐகோர்ட்டு வக்கீல் சூரிய பிரகாசம் தலைமை நீதிபதிக்கு மனு அனுப்பி உள்ளார். #ThangaTamilSelvan

    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை. அவரை மாற்ற வேண்டும் என்று கவர்னரிடம் மனு கொடுத்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கதமிழ்ச்செல்வன் உள்பட 18 பேர்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்திருந்தார்.

    இதை எதிர்த்து தங்க தமிழ்ச்செல்வன் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பு கூறப்பட்டது. இதில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு கூறி இருந்தனர்.

    தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சபாநாயகர் எடுத்த நடவடிக்கை செல்லும் என்று கூறி இருந்தார். மற்றொரு நீதிபதியான சுந்தர் அளித்த தீர்ப்பில் சபாநாயகர் உத்தரவு செல்லாது என்று கூறி இருந்தார்.

    நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு பற்றி சமூக வலை தளங்களில் மட்டுமின்றி பல்வேறு கட்சி தலைவர்களும் விமர்சனம் செய்திருந்தனர்.

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட தங்க தமிழ்ச்செல்வன் தலைமை நீதிபதியின் தீர்ப்பை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.


    அரசுக்கு ஆதரவாக தலைமை நீதிபதி செயல்படுகிறார். கோர்ட்டில் இனி நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. அதனால் வழக்கை வாபஸ் பெற போகிறேன் என்று கூறி இருந்தார். மேலும் பல்வேறு கருத்துக்களையும் வெளிப்படுத்தினார்.

    இது தொடர்பாக தங்க தமிழ்ச்செல்வன் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று ஐகோர்ட்டு வக்கீல் சூரிய பிரகாசம் தலைமை நீதிபதிக்கு மனு அனுப்பி உள்ளார். மேலும் தலைமை பதிவாளர் சக்திவேலை நேரில் சந்தித்தும் மனு கொடுத்துள்ளார்.

    தலைமை நீதிபதியை பற்றி கடும் விமர்சனம் செய்துள்ள தங்க தமிழ்ச்செல்வன் மீது கோர்ட்டு தாமாக முன்வந்து அவதூறு வழக்கை எடுத்து விசாரிக்க வேண்டும் அல்லது எனது மனுவை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறி உள்ளார்.

    இந்த மனு விசாரணைக்கு ஏற்கப்படுமா? இல்லையா? என்பது விரைவில் தெரிய வரும். #ThangaTamilSelvan

    டிடிவி தினகரனுக்கும் தனக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக தவறான தகவல் பரப்பப்படுவதாக தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். #MLAdisqualifiedcase #ThangaTamilSelvan
    சென்னை:

    18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கு விசாரணை கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்த நிலையில் சமீபத்தில் அந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், வழக்கை விசாரித்த இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் மூன்றாம் நீதிபதி நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தி பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து 18 எம்.எல்.ஏக்களில் ஒருவரும் தினகரனின் ஆதரவாளருமான தங்க தமிழ்ச்செல்வன் அவரது சார்பில் தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெறப்போவதாகவும், மேலும் ராஜினாமா செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்து மீண்டும் தேர்தலை சந்திக்கலாம் என வலியுறுத்தினார்.

    இதையடுத்து டிடிவி தினகரனின் உத்தரவு இன்றி இவர் இந்த கருத்தை தெரிவித்ததாக கூறப்பட்டது. அதற்கு பதிலளித்த தங்க தமிழ்ச்செல்வன், அவரது விருப்பப்படி செய்துகொள்ளும்படி டிடிவி தெரிவித்ததாக கூறியிருந்தார்.

    இதனால், டிடிவி தினகரனுக்கும், தங்க தமிழ்ச்செல்வன் உட்பட சில ஆதரவாளர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும் அதனால் தான் இதுபோன்ற கருத்துக்களை தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின.

    இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன், 18 எம்.எல்.ஏக்களும் டிடிவி தினகரனுடன் ஒற்றுமையாக இருப்பதாகவும், நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இழந்ததால் மட்டுமே வழக்கை வாபஸ் பெறப்போவதாக அறிவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், இதுபோன்ற அவதூறுகளை பரப்ப வேண்டாம் எனவும், நாங்கள் மிகவும் வெளிப்படையாகவே இருப்பதாகவும் அப்போது அவர் தெரிவித்துள்ளார். #MLAdisqualifiedcase #ThangaTamilSelvan
    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எண்ணம் பலிக்காது என்று தங்க தமிழ்செல்வன் பேட்டியில் கூறியுள்ளார். #Thangatamilselvan #EdappadiPalaniswami

    சென்னை:

    தமிழக சட்டப்பேரவையின் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் அந்த வழக்கு 3-வது நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதை நீதிபதி விமலா விசாரிக்க உள்ளார்.

    இந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஆண்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச் செல்வன் தன்னுடைய வழக்கை நாளை மறுநாள் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்.

    இதகுறித்து ‘மாலைமலர்’ நிரூபரிடம் அவர் கூறியதாவது:-

    நான் எனது தொகுதி மக்களை நேற்று சந்தித்து பேசினேன். இந்த தொகுதியில் வளர்ச்சி திட்டங்கள் நடைபெற எம்.எல்.ஏ. இருக்க வேண்டும். அல்லது உள்ளாட்சி பிரதிநிதிகள் இருக்க வேண்டும். ஆனால் எந்த மக்கள் பிரதிநிதியும் தொகுதியில் இல்லாததால் உங்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாத நிலை உள்ளது.

    அதனால் ஐகோர்ட்டில் நடந்துவரும் எனது வழக்கை வாபஸ் பெற்றால் இடைத்தேர்தல் மூலம் எம்.எல்.ஏ.வை தேர்ந்தெடுக்கலாம் என்றேன்.

    அதற்கு அங்குள்ள மக்கள் இடைத்தேர்தல் வந்தால் நீங்கள்தான் தேர்தலில் நிற்க வேண்டும் என்றனர்.

    என்னை பொறுத்தவரை தொகுதிக்கு ஒரு எம்.எல்.ஏ. வேண்டும். அது நானாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி நான் தேர்தலில் நிற்க சட்ட சிக்கலை உருவாக்குவார்கள் என்றேன். மக்கள் எனது கருத்தை ஏற்றுக் கொண்டனர்.

    எனவே இடைத்தேர்தல் நடத்துவதற்கு வசதியாக நாளை மறுநாள் (வியாழன்) சென்னை உயர்நீதிமன்றத்தில் 3-வது நீதிபதி விமலாவை சந்தித்து வழக்கை வாபஸ் பெறும் மனுவை கொடுக்க உள்ளேன்.


    தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்தால் பாராட்டுக்குரியது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார்.

    அவர் என்னதான் ஆசை வார்த்தை கூறி அழைத்தாலும் ஒரு ஆள் கூட போக மாட்டார்கள். 18 பேரும் தினகரன் பக்கம் உறுதியாக உள்ளோம்.

    எனவே எடப்பாடியின் பேச்சு வெற்றுஜம்பம். அவரது எண்ணம் பலிக்காது. நிறைவேறாது. நாங்கள் பனங்காட்டு நரி. எந்த சலசலப்புக்கும் அஞ்ச மாட்டோம்.

    சட்டம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. ஏற்கனவே எங்களை தகுதி நீக்கம் செய்து விட்டார்கள். இப்போது மறுபடியும் வந்தால் வரவேற்கிறோம் என்றால் சட்டத்தை வளைக்க போவதாக சொல்கிறாரா?

    அல்லது 3-வது நீதிபதியிடம் எங்களுக்காக பரிந்து பேச போகிறாரா? என்பது தெரியவில்லை. மனம் திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்வதாக ஒரு அமைச்சர் கூறுகிறார். அப்படி என்றால் நீதி எங்கே போகிறது? நீதியை வளைக்க இவர்கள் துணிந்து விட்டார்கள் என்றுதான் கருத வேண்டி உள்ளது.

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் தனித் தனியாக வழக்கு தொடர்ந்துள்ளதால் நான் எனது வழக்கை வாபஸ் பெறுவதில் உறுதியாக உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thangatamilselvan #EdappadiPalaniswami

    ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். இருக்கும் அணிக்கு நான் ஒருபோதும் செல்லமாட்டேன் என்று ஆண்டிப்பட்டி தொகுதியில் மக்களை சந்தித்து கருத்து கேட்டபோது தங்கதமிழ்செல்வன் கூறினார். #thangatamilselvan #OPS #EPS
    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி தொகுதியில் மக்களை சந்தித்து கருத்து கேட்ட தங்கதமிழ்செல்வன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நாங்கள் மட்டுமின்றி மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே நான் ஏற்கனவே கூறியபடி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெறுவது உறுதி. இன்று நான் சென்னைக்கு சென்று மூத்த வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தி அதற்கான முடிவுகளை ஆண்டிப்பட்டி தொகுதி மக்களிடம் அறிவிப்பேன்.

    என்னை பொறுத்தவரையில் ஆண்டிப்பட்டியில் மக்கள் பிரச்சினையை தீர்க்க சட்டமன்ற உறுப்பினர் வரவேண்டும். நான் வழக்கை வாபஸ் பெற்றவுடன் சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். இல்லையெனில் 3 லட்சம் மக்களை திரட்டி சிறைநிரப்பும் போராட்டம் நடத்துவேன்.



    வழக்கை வாபஸ் பெறுவதாகவும், நாடகம் ஆடுவதாகவும் சிலர் அவதூறு பரப்பி வருகின்றனர். ஆனால் நாடகம் நடத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஓ.பி.எஸ்.- ஈ.பி.எஸ். இருக்கும் அணிக்கு நான் ஒருபோதும் செல்லமாட்டேன். நான் மீண்டும் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று மக்கள் கூறி வருகிறார்கள். எனவே அது குறித்த முடிவினை தேர்தல் நேரத்தில் அறிவிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #thangatamilselvan #OPS #EPS
    சபாநாயகரின் உத்தரவுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற தங்க தமிழ்ச்செல்வன் முடிவு செய்து உள்ளார். 3-வது நீதிபதியின் தீர்ப்பு தாமதம் ஆகலாம் என்பதால் இந்த நடவடிக்கையை எடுக்கிறார்.
    சென்னை:

    19 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பதவியை விட்டு நீக்க வேண்டும் என்று தமிழக கவர்னரை சந்தித்து மனு கொடுத்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், சபாநாயகரிடம் புகார் தெரிவித்தார்.

    அதன் அடிப்படையில் 19 எம்.எல்.ஏ.க்களும் விளக்கம் அளிக்க சபாநாயகர் உத்தரவிட்டார். அதில் கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜக்கையன் சபாநாயகரிடம் விளக்கம் அளித்தார். மற்ற 18 எம்.எல்.ஏ.க்கள் ஆஜராகி விளக்கம் அளிக்காததால், அவர்கள் அனைவரையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    இதையடுத்து தகுதி நீக்கத்தை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு நேற்றுமுன்தினம் வெளியானது.

    தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தகுதி நீக்கம் செல்லும் என்றும், நீதிபதி எம்.சுந்தர் தகுதி நீக்கம் செல்லாது என்றும் முரண்பட்ட தீர்ப்பு வழங்கினர். இதனால் 3-வது நீதிபதியின் விசாரணைக்கு அந்த வழக்கு செல்கிறது.

    முன்னதாக இந்த தீர்ப்பு வெளியாவது குறித்த தகவல் அறிந்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட தங்க தமிழ்ச்செல்வன்(ஆண்டிப்பட்டி), வெற்றிவேல்(பெரம்பூர்), பழனியப்பன்(பாப்பிரெட்டிபட்டி), செந்தில்பாலாஜி (அரவக் குறிச்சி), மாரியப்பன் கென்னடி (மானாமதுரை) உள்பட 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை அடையாறில் உள்ள டி.டி.வி.தினகரன் இல்லத்தில் கூடி ஆலோசனை நடத்தினர்.

    அப்போது தங்க தமிழ்ச்செல்வன், “ஐகோர்ட்டு தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வரவில்லை என்றாலும், நாங்கள் சுப்ரீம் கோர்ட்டு செல்லமாட்டோம்” என்று தெரிவித்தார். ஆனால் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், “18 எம்.எல்.ஏ.க்களின் கருத்துகளை கேட்டு சுப்ரீம் கோர்ட்டு செல்வோம்” என்று கூறினார்.

    இந்த முரண்பாடு குறித்து டி.டி.வி.தினகரனிடம் கேட்டபோது அவர், “தங்க தமிழ்ச்செல்வன் அவருடைய நிலைப்பாட்டை தெரிவிக்கிறார். அவரும்(தங்க தமிழ்ச்செல்வனும்), வெற்றிவேலும் என்னுடைய 2 கண்கள் மாதிரி” என பதில் அளித்தார்.

    இந்த நிலையில், தற்போது தங்க தமிழ்ச்செல்வன், தகுதிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவதாக திடீரென தெரிவித்து உள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


    இதுகுறித்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட தங்க தமிழ்ச்செல்வன், ‘தினத்தந்தி’ நிருபருக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    கட்சி தாவல் தடைச்சட்ட வரம்பின்கீழ் நாங்கள் வரவில்லை. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சி தாவல் தடைச்சட்டம் பாய்ந்து இருக்க வேண்டும். இதே நீதிபதி தான் அவர்கள் நிரபராதி என்று தீர்ப்பு அளித்தார். ஆனால் எங்களை கண்டித்து இருக்கிறார். இது ஒருதலைபட்சமான தீர்ப்பு.

    அரசாங்கத்தின் சொல்படிதான் ஐகோர்ட்டு கேட்கிறது. கோர்ட்டால் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியவில்லை. இந்த அரசை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஈடுபட்டு இருக்கிறார்.

    என்னுடைய தொகுதியில் கடந்த 9 மாதங்களாக எம்.எல்.ஏ. இல்லை. இதனால் மக்கள் அடிப்படை பிரச்சினைகளை கேட்டு நிவர்த்தி செய்ய முடியாத அளவுக்கு கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

    எங்கள் வழக்கில் 3-வது நீதிபதி விசாரணை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. எப்படியும் அந்த தீர்ப்பு வெளிவருவதற்கு ஓராண்டு காலம் ஆகலாம்.

    என்னுடைய தொகுதிக்கு எம்.எல்.ஏ. வேண்டும். எனவே சென்னை ஐகோர்ட்டில் நான் தாக்கல் செய்த வழக்கை வாபஸ் பெறுகிறேன். அதன்பிறகு, என்னுடைய தொகுதியில் இடைத்தேர்தல் நடந்து ஒரு நிரந்தரமான எம்.எல்.ஏ. வரட்டும். பொதுமக்களும் பயன் அடையட்டும். அதற்காகத்தான் நான் இந்த முடிவை எடுத்து இருக்கிறேன்.

    9 மாதங்களாக 3 லட்சம் மக்களுக்கு என்ன நீதி வழங்கப்பட்டு இருக்கிறது? இது எனக்கு பிடிக்கவில்லை. உடனடியாக என்னுடைய தொகுதியில் இடைத்தேர்தலை நடத்தி எம்.எல்.ஏ.வை தேர்வு செய்ய வேண்டும். இது என்னுடைய தனிப்பட்ட முடிவு தான். மற்ற எம்.எல்.ஏ.க்களின் நிலைப்பாடு பற்றி எனக்கு தெரியாது.

    ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்கினார்கள். ஆனால் நல்லவர்களாகிய எங்களுக்கு கெட்ட தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து அவரிடம், “உங்கள் முடிவை டி.டி.வி.தினகரனிடம் தெரிவித்து விட்டீர்களா? நீங்கள் டி.டி.வி.தினகரனுடைய அணியில் தான் நீடிக்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “என்னுடைய முடிவை முதலில் டி.டி.வி.தினகரனிடம் தான் தெரிவித்தேன். அவர் வழக்கை வாபஸ் பெறுவதற்கான மனுவை தலைமை நீதிபதியிடம் கொடுக்க வேண்டாம். 3-வது நீதிபதி நியமிக்கப்பட்ட பிறகு, அவரிடம் கொடுங்கள் என்று ஆலோசனை வழங்கினார். அதன்படி செயல்படுவேன். நான் தொடர்ந்து டி.டி.வி.தினகரன் அணியில்தான் நீடிக்கிறேன்’ என்று பதில் அளித்தார். #18MLACase #ThangaTamilSelvan #AssemblySpeaker #ChennaiHighCourt
    தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக இருக்கும் என தங்க தமிழ்ச்செல்வன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #18MLAsCase #ThangaTamilSelvan
    சென்னை:

    தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று மதியம் தீர்ப்பு வழங்க உள்ளது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு வழங்க உள்ள இந்த தீர்ப்பு தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் நீதிமன்றத்திற்கு வந்தனர். ஒரு சிலர் மட்டும் வரவில்லை.

    இந்நிலையில், தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    முதமைச்சருக்கு எதிராக செயல்பட்டதால் எங்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்துள்ளார். இன்றைய தீர்ப்பு 100 சதவீதம் எங்களுக்கு சாதகமாக வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மீண்டும் சட்டமன்றம் சென்று ஜனநாயக கடமையாற்றுவோம். அதேசமயம் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வராவிட்டால் நான் மேல்முறையீடு செய்யமாட்டேன்.

    எங்கள் மீதான தகுதி நீக்கம் உறுதி செய்யப்பட்டு இடைத்தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம். ஆனால் இடைத்தேர்தலில் ஒரு எம்எல்ஏ தோற்றாலும் நாங்கள் 18 பேரும் ராஜினாமா செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #18MLAsCase #MLAsDisqualification #MadrasHighCourt #ThangaTamilSelvan
    எந்த தேர்தல் வந்தாலும் பா.ஜனதா, அ.தி.மு.க. ஆகிய கட்சிகளை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார். #Thangatamilselvan #ADMK #BJP

    கோவை:

    கோவையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    திவாகரன் கட்சி ஆரம்பித்து இருப்பதால் எங்களுக்கு எந்த பிரச்சினையயும் இல்லை. மக்கள் தான் தீர்ப்பு சொல்வார்கள். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் யாரும் அதிருப்தி இல்லை. ஆட்சியை தக்க வைத்தால் போதும் என்ற நிலையில் தற்போதை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு சொல் படி கேட்டு நடந்து வருகிறது. எந்த தேர்தல் வந்தாலும் பா.ஜனதா, அ.தி.மு.க .ஆகிய கட்சிகளை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் என்பது தேவையில்லாதது. இதற்காக எதற்கு ரு. 10 ஆயிரம் கோடி செலவு செய்யப்படுகிறது.


    இந்த திட்டத்திற்கு பதிலாக சென்னை-கன்னியாகுமரி இடையே 8 வழி சாலை அமைக்க வேண்டியது தானே?.

    18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பை நீதிமன்றம் உடனே வழங்க வேண்டும். தீர்ப்பு எதுவாக இருந்தாலும் மக்கள் மன்றத்தை நாட நாங்கள் தயாராக உள்ளோம்.

    காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் கிடைக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. காவிரி டெல்டா முக்கியமா? அல்லது சென்னை - சேலம் 8 வழிச்சாலை முக்கியமா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thangatamilselvan #ADMK #BJP

    ×