search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனமழை"

    • தூத்துக்குடி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்.
    • மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள தெற்கு இலங்கை கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் பல இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வருகிற 20ம் தேதி வரை கனமழை மற்றும் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது.

    தமிழகத்தில் தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு அதி கனமழை பெய்யக்கூடும் எனவும் இதற்காக இந்த மூன்று மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதேபோல், நெல்லை, கன்னியாகுமரி, சிவகங்கை, தூத்துக்குடி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கும் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    • மழை நேரங்களில் மரங்கள், மின்கம்பங்கள், நீர் நிலைகள் அருகில் செல்ல வேண்டாம்.
    • இடி-மின்னல் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்வதை தவிர்க்கலாம்.

    நெல்லை:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாகவே கோடை மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் 3 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    இதனையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்கள் பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். 

    நெல்லை கலெக்டர் கார்த்திகேயன்

    நெல்லை கலெக்டர் கார்த்திகேயன்

    நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், மாவட்டத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை எச்சரிக்கையும், 18 மற்றும் 19-ந் தேதிகளுக்கு 'ஆரஞ்சு' எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையத்தால் வழங்கப்பட்டுள்ளது.

    எனவே பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்கும்படியும், மழை நேரங்களில் மரங்கள், மின்கம்பங்கள், நீர் நிலைகள் அருகில் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என கூறியுள்ளார்.

    தென்காசி மாவட்டத்திற்கு இன்று மற்றும் வருகிற 18, 19-ந்தேதிகளில் கனமழை முதல் மிக கனமழையும், 16, 17-ந்தேதிகளில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

    எனவே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லவும். நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகமாக வாய்ப்பு இருப்பதால் கரையோர மக்கள் உரிய எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

    மேலும் இடி-மின்னல் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்வதை தவிர்க்கலாம். மரங்களுக்கு கீழே ஒதுங்க வேண்டாம். காய்ச்சிய குடிநீரை பருகுங்கள் என பொதுமக்களுக்கு கலெக்டர் கமல் கிஷோர் அறிவுறுத்தியுள்ளார்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 17-ந்தேதி வரை கனமழை எச்சரிக்கையும், 18-ந்தேதி மிக கனமழைக்கான எச்சரிக்கையும், 19-ந்தேதி கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    எனவே பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரையிலான தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.
    • அதிக பட்சமாக ஆத்தூரில் 96.4 மி.மீ. மழை பெய்துள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக 5-வது நாளாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. குறிப்பாக ஆத்தூர், கரியகோவில், நத்தகரை, சங்ககிரி, மேட்டூர் உள்பட பல பகுதிகளில் நேற்றிரவு கன மழை பெய்தது.

    குறிப்பாக ஆத்தூரில் நேற்றிரவு 9 மணிக்கு தொடங்கிய மழை இன்று அதிகாலை 2 மணி வரை கன மழையாக கொட்டியது. 5 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கன மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. இன்று காலையும் மழை தூறிய படியே இருந்தது.

    இதே போல நத்தக்கரை சங்ககிரி, கரியகோவில், மேட்டூர், தம்மம்பட்டி, கெங்கவல்லி உள்பட பல பகுதிகளிலும் மழை பெய்தது. சேலம் மாநகரில் நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கிய சாரல் மழை இன்று காலையிலும் தூறலாக நீடித்தது.

    மழையை தொடர்ந்து சேலம் மநாகர் மற்றும் புறநகர் பகுதிகளில குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொது மக்கள் நிம்மதியாக தூங்கினர். மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக ஆத்தூரில் 96.4 மி.மீ. மழை பெய்துள்ளது. நத்தக்கரை-31, கரியகோவில்-26, சங்ககிரி-20, சேலம்-3.7, ஏற்காடு-4.4, ஆனைமடுவு-19, கெங்கவல்லி-6, தம்மம்படடி-10, ஏத்தாப்பூர்-2, வீரகனூர்-9, எடப்பாடி-4, மேட்டூர்-18.2, ஓமலூர்-4.2, மி.மீ. என மாவட்டம் முழுவதும் 253.9 மி.மீ. மழை பெய்துள்ளது., இன்று காலையும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை தூறிய படியே இருந்தது.

    • இன்று முதல் 19ம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • நெல்லை , தென்காசி , கன்னியாகுமரி , தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது.

    இந்நிலையில் இன்று முதல் 19ம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நெல்லை , தென்காசி , கன்னியாகுமரி , தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் எழுதியுள்ளது.

    கனமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து துறைகளும் தயாராக இருக்க வேண்டும்; நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி கனமழையை எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

    • சங்ககிரி, சேலம், ஏற்காடு ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது
    • ஏற்காட்டில் கடந்த 2 நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டில் கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. பின்னர் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து கடந்த 2-ந் தேதி அதிக பட்சமாக 108 டிகிரி வெயில் பதிவானது. இதனால் பொது மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீடுகளில் முடங்கினர்.

    இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. தொடர்ந்து பகல் 1 மணி வரை வெயில் அடிப்பதும், பின்னர் 2 மணியளவில் மழை பெய்வதும் வாடிக்கையாக உள்ளது . 4-வது நாளாக நேற்றும் பகல் 1 மணி வரை வெயில் அடித்த நிலையில் பிற்பகல் 2 மணியளவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது . குறிப்பாக ஏத்தாப்பூர், சங்ககிரி, சேலம், ஏற்காடு ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது .

    இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் 4-வது நாளாக நேற்று பெய்த மழையால் தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இரவிலும் இந்த குளிர் நீடித்தது. இதனால் பொது மக்ககள் போர்வையை போர்த்தியபடியே தூங்கினர். மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று காலை 10 மணியளவில் தொடங்கிய மழை நள்ளிரவு வரையும் தூறலாக நீடித்தது. இதனால் ஏற்காட்டில் கடந்த 2 நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் அங்கு வசிக்கும் பொதுமக்கள் கடும் குளிரில் தவித்து வருகிறார்கள்.

    சேலம் மாவட்டத்தில் அதிக பட்சமாக நேற்று ஏத்தாப்பூரில் 23 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சங்ககிரி 23, சேலம் மாநகர் 5.4, ஏற்காடு 3.2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 80 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இன்று காலையும் சேலம் மாநகரில் மழை தூறிய படியே இருந்தது. இதனால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

    • தமிழக தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
    • தமிழக அரசின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 13-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை பரவலாக மழை இருக்கும் என்று சென்னை வானிலை நிலையம் அறிவித்துள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது எச்சரிக்கையை அளித்த போதும், வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடமும் தமிழக அரசும் தகுந்த முன்னேர்பாடுகள் செய்யாமல் பல்வேறு இடங்களில் அறுவடை செய்து விற்பனைக்கு வந்த நெல்மணிகளும் கொள்முதல் செய்த நெல்மணிகளும் உரிய பாதுகாப்பு இல்லாமல் மழையில் நனைந்து வீணாகியுள்ளது. இது தமிழக அரசின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது.

    விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கடைமடைகளுக்கு எளிதாக செல்லும் வகையில் வாய்க்கால்களை தூர்வார வேண்டும். அதோடு கோடை காலங்களில் ஏரி, குளங்களையும் தூர்வாரி தண்ணீரை சேமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கை அளிக்கும் மழை தண்ணீரை சேமிக்கும் திட்டம் கர்மவீரார் காமராஜர் ஆட்சிக்குப்பிறகு எந்த ஆட்சியாளரும் செய்யவில்லை என்பது வருத்தத்திற்குரியது.

    இனிமேலும் காலதாமதம் செய்யாமல் கோடைகாலம் முடிவதற்குள் மழைநீர் வடிகால் பணியையும், போக்குவரத்து சாலைகளை செப்பணிட்டும், இப்பணிகளை ஒருகாலக்கெடுவுக்குள் முடித்து மக்கள் பயடைய உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சாலை நடுவில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகள் காற்றில் தூக்கி வீசப்பட்டன.
    • மாவட்டத்தில் பெய்த இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. பிப்ரவரி மாதத்தில் இருந்தே வெப்ப அளவு உயர்ந்து வந்தது. சராசரியாக 104 டிகிரி முதல் 111 டிகிரி வரை வெயில் பதிவாகி வந்ததால் மக்கள் அவதி அடைந்து வந்தனர். இதனால் மழை பெய்யாதா என ஈரோடு மக்கள் ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் தாளவாடியில் கடந்த 2 நாட்களாக சூறாவளி காற்றுடன் ஒரு மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. ஆனால் ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று முன்தினம் 10 நிமிடம் மட்டுமே மழை பெய்து ஏமாற்றியது. நேற்று காலை வழக்கும் போல் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தது. பகல் 11 மணிக்கு மேல் வானத்தில் கரு மேகங்கள் சூழ்ந்து இருந்தன.

    இதனையடுத்து பிற்பகல் 3 மணி அளவில் லேசான மழை பெய்ய தொடங்கியது. பின்னர் நேரம் செல்ல சொல்ல சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை போட்டி தீர்த்தது. இதனால் ஈரோடு மாநகர பகுதியில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. கொங்காளம்மன் கோவில் வீதி, வீரப்பன்சத்திரம் போன்ற பகுதியில் மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது. பலத்த காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் மாநகர் பகுதி முழுவதும் 100-க்கும் மேற்பட்ட மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. சாலை நடுவில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகள் காற்றில் தூக்கி வீசப்பட்டன.


    ஈரோடு முருகேசன் காலனி மற்றும் கணபதி காலனி பகுதியில் மரக்கிளைகளுடன் மின்கம்பங்களும் முறிந்து விழுந்ததால் அந்த பகுதியில் இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் அவதி அடைந்தனர். தற்போது அந்த பகுதியில் மின் ஊழியர்கள் மின்கம்பங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு கோபி அடுத்த மொடச்சூர் பகுதியில் பலத்த மழையால் நூற்றுக்கும் மேற்பட்ட வாழைத்தோட்டத்தில் மழை நீர் தேங்கி நின்றது. கோபி அருகே உள்ள குள்ளம்பாளையம் பகுதியில் 5 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த செவ்வாழை, கதலி, வாழை மரங்கள் கீழே சாய்ந்து சேதம் அடைந்தன. இதன் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும்.

    இதேபோல் அந்தியூர் அருகே உள்ள காட்டூர் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இந்த சூறைக்காற்றுக்க தாக்கு பிடிக்க முடியாமல் 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தன.

    தாளவாடி பகுதியில் நேற்று 3-வது நாளாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் ஓடைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேப்போல் பவானிசாகர் அணை, வரட்டுப்பள்ளம் அணை பகுதியிலும் மழை பரவலாக பெய்தது. மாவட்டத்தில் பெய்த இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    எலந்த குட்டை மேடு-33.40, தாளவாடி-23.60, கோபி-23.20, பவானிசாகர்-13.20, ஈரோடு-14, வரட்டுப்பள்ளம்-8.20, சென்னிமலை-4.

    • மழையை தொடர்ந்து மாநகரில் குளிர்ந்த காற்று வீசியது.
    • மழையால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 3-வது நாளாக நேற்று சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் அக்னி வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.

    சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, வின்சென்ட், பெரமனூர், 4 ரோடு, புதிய பஸ்நிலையம், பழைய பஸ் நிலையம், அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி உள்பட பல பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது. மழையை தொடர்ந்து மாநகரில் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஆட்டையாம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் நேற்று மதியம் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இந்த மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் சேலம் சாலையில் வி.பி.எஸ். தியேட்டர் அருகே வேப்ப மரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.

    மின் வாரியத்தினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் வேரோடு சாய்ந்து கிடந்த வேப்பமரத்தை அறுத்து பொக்லைன் உதவியுடன் அகற்றி வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஏற்காட்டில் நேற்று மதியம் 2 மணிக்கு தொடங்கிய மழை இன்று அதிகாலை 2 மணி வரை சாரல் மழையாக பெய்தது. இதனால் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து கார் மற்றும் வாகனங்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் ஏற்காட்டிற்கு வருகிறார்கள். இதனால் ஏற்காட்டில் அண்ணா பூங்கா, மான் பூங்கா, படகு குழாம், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன்கோவில், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், மீன் பண்ணை உள்பட அனைத்து பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஏற்காட்டில் தற்போது கடும் குளிர் நிலவுவதால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் ரசித்து வருகிறார்கள்.

    ஏற்காட்டில் இன்று காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது. இதனால் கடும் குளிர்ச்சியுடன் ரம்மியமான சூழல் நிலவி வருகிறது. மாவட்டத்தில் அதிக பட்சமாக ஏற்காட்டில் 26 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் 3.1, கரியகோவில் 3, சேலம் 3.1 என மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை மாவட்டத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. மோகனூர் பகுதியில் நேற்று மாலை 6 மணியில் இருந்து 7 மணி வரை கன மழை பெய்தது. இதனால் சாலையோரங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் இரவில் குளிர்ந்த காற்று வீசியது. அதேபோல் ஆண்டகலுார் கேட், கவுண்டம்பாளையம், அத்தனுார் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை கன மழை பெய்தது. ராசிபுரத்தில் 30 நிமிடம் மழை பெய்தது.

    அதேபோல், பச்சுடையாம்பாளைம், பேளுக்குறிச்சி, மூலப்பள்ளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காற்று பலமாக அடித்ததால் சாரல் மழை மட்டுமே பெய்தது. மோகனூரில் 15 மிமீ, கொல்லிமலையில் 5 மிமீ, பரமத்திவேலூரில் 1 மிமீ என மாவட்டத்தில் 21 மிமீ மழை பெய்தது. இந்த மழையால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோடை உழவுக்கு வசதியாக மழை பெய்துள்ளதால், இன்றிலிருந்து உழவு பணியை தொடங்க வாய்ப்புள்ளது.

    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்து முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • வீரபாண்டி 60, அரண்மனைபுதூர் 31.2, ஆண்டிபட்டி 10.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    கூடலூர்:

    மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக பெரியகுளம், வீரபாண்டி ஆகிய பகுதிகளில் தலா 6 செ.மீ. மழை பதிவானது.

    தொடர் மழை காரணமாக பெரும்பாலான அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. முல்லைப்பெரியாறு அணைக்கு நேற்று 100 கன அடி வந்த நிலையில் இன்று காலை 405 கன அடியாக அதிகரித்துள்ளது. 100 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 115.10 அடியாக உள்ளது. நீர் இருப்பு 1745 மி.கன அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 51.48 அடியாக உள்ளது. வரத்து 197 கன அடி. சிவகங்கை பூர்வீக பாசனத்திற்காக கடந்த 4 நாட்களாக தண்ணீர் வெளியேற்றப்படும் நிலையில் இன்று காலை 1572 கன அடிநீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 2191 மி.கன அடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்து முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீர்வரத்து 73 கன அடியாக உள்ளது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 103.81 அடியாக உள்ளது. வரத்து 40 கன அடி. திறப்பு 3 கன அடி. இருப்பு 65.76 மி.கன அடி.

    பெரும்பாலான அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கும்பக்கரை அருவியில் இன்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பெரியாறு 24.8, தேக்கடி 6, கூடலூர் 8.8, உத்தமபாளையம் 15, சண்முகநதி அணை 16.2, போடி 14, வைகை அணை 12, மஞ்சளாறு 15, சோத்துப்பாறை 11, பெரியகுளம் 60, வீரபாண்டி 60, அரண்மனைபுதூர் 31.2, ஆண்டிபட்டி 10.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • பாட்டிலில் அடைத்து வைக்கப்படும் குடிநீரும் சிறிது நேரத்தில் வெந்நீராக மாறி விடுகிறது.
    • மாநகர பஸ் டிரைவர்-கண்டக்டர்களுக்கு ஓ.ஆர்.எஸ். உப்பு கரைசல் வழங்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கோடை மழை பெய்யாததால் உஷ்ணம் அதிகமாகி புழுக்கம் காணப்படுகிறது.

    வாட்டி வதைத்து வரும் வெயிலால் மக்கள் பெரும் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக மோட்டார் வாகனங்களை ஓட்டுபவர்கள் வெப்பத்தின் தாக்கம் தாங்க முடியாமல் பாதிக்கப்படுகிறார்கள்.

    இதனால் மாநகர பஸ் டிரைவர்-கண்டக்டர்களுக்கு ஓ.ஆர்.எஸ். உப்பு கரைசல் வழங்கப்படுகிறது. என்ஜின் சூட்டோடு சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கமும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பதால் டிரைவர்- கண்டக்டர்கள் அதிகளவில் தண்ணீர் குடிக்கிறார்கள்.

    பாட்டிலில் அடைத்து வைக்கப்படும் குடிநீரும் சிறிது நேரத்தில் வெந்நீராக மாறி விடுகிறது. காலை 11 மணி முதல் மாலை 4, 5 மணி வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் டிரைவர்கள் சோர்வடைகின்றனர்.

    அடுத்த மாதம் வரை வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்பதால் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் டிரைவர்களுக்கு மின்விசிறி சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளனர். சென்னையில் ஓடக்கூடிய 3 ஆயிரம் பஸ்களில் 5 ஆயிரம் டிரைவர், கண்டக்டர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் வெப்பத்தால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக மின் விசிறி பொருத்தப்பட்டு வருகிறது.

    டிரைவர் இருக்கையின் மேல் பகுதியில் மின் விசிறி பொருத்துவதன் மூலம் வெப்ப புழுக்கத்தில் இருந்து தற்காத்து கொள்ளலாம்.

    இது குறித்து அதிகாரிகள் கூறிம்போது:-

    வெப்பத்தின் தாக்குதலில் இருந்து பஸ் டிரைவர்களை பாதுகாக்கும் வகையில் முதல் கட்டமாக 1000 பஸ்களில் மின்விசிறி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு முதல் கட்டமாக

    250-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் மின்விசிறி பொருத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பஸ்களிலும் பொருத்தப்படும் என்றனர்.

    • புழுதி புயல் காரணமாக மெட்ரோ ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது
    • மும்பை நகரில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மும்பையில் இன்று பிற்பகல் 3 மணி அளவில் 40-50 கி.மீ வேகத்தில் புழுதிப் புயல் வீசியது. இதனால் மும்பை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    புழுதி புயலுடன் மழையும் பெய்ததால் மும்பை விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவதும் தரையிறக்கப்படுவதும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. புழுதி புயல் காரணமாக மெட்ரோ ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

    மும்பை நகரில் 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மும்பையின் வடாலா பகுதியில் புழுதிப் புயல் வீசியதில் ராட்சத இரும்பு பேனர் ஒன்று பெட்ரோல் பங்க் மீது விழுந்ததில் 8 பேர் உயிரிழப்பு. 

    இதுவரை விபத்தில் சிக்கிய 67 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு படை தகவல் தெரிவித்துள்ளனர்.

    • தென் மாவட்டங்களில் நாளை முதல் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது.
    • டெல்டா மாவட்டங்களிலும் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயில் வறுத்து எடுத்து வருகிற நிலையில் மழையும் ஆங்காங்கே சில இடங்களில் பெய்து வருகிறது.

    தமிழக வட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக உள்ளது. ஈரோடு, கரூர், வேலூர், திருச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது.

    இந்த நிலையில் வளி மண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடுவதால் தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும்.

    தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியதாவது:-

    தென் மாவட்டங்களில் நாளை முதல் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது. சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, திருப்பூர், பொள்ளாச்சி, கொடைக்கானல் மலை மாவட்டங்களில் கன மழை பெய்யும்.

    குமரிக்கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி உருவாகிறது. இதனால் டெல்டா மாவட்டங்களிலும் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னையில் 15-ந்தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 16,17 தேதிகளில் பலத்த மழை பெய்யும். திருவள்ளூர் மாவட்டத்திலும் மழை பெய்யக்கூடும். கோடை மழை பல மாவட்டங்களில் பெய்ய தொடங்கி உள்ளதால், வெயிலின் தாக்கம் இயல்பான அளவை விட குறைவாக இருக்கும். உள் மாவட்டங்களில் வெப்ப நிலை சற்று அதிகமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×