என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "District Collectors"

    • கனமழையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட நிர்வாகமும் எடுக்க வேண்டும்.
    • பெருநகர சென்னை மாநகராட்சியும், தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைவதால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

    இதையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட கலெக்டர்களும் மேற்கொள்ளவும் பேரிடர் தடுப்பு பணிகளை தயார்படுத்தவும் உஷார்படுத்தப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் மாவட்ட கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம் அடைவதால் தமிழகத்தில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், இது தமிழக கடற்கரை நோக்கி வருவதால் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரித்துள்ளது.

    வானிலை மையத்தின் முன் அறிவிப்பு எச்சரிக்கையின்படி 20, 21, 22 ஆகிய தேதிகளில் கனமழை, மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் பேரிடர் முன் எச்சரிக்கைக்கான தடுப்பு பணிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கனமழையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட நிர்வாகமும் எடுக்க வேண்டும். பெருநகர சென்னை மாநகராட்சியும், தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • நாகப்பட்டினம் கலெக்டர் அருண் தம்புராஜ், கடலூர் கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.
    • செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.

    சென்னை:

    தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்களை நியமித்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேற்று இரவு உத்தரவிட்டுள்ளார்.

    அதன் விவரம் வருமாறு:-

    * நாகப்பட்டினம் கலெக்டர் அருண் தம்புராஜ், கடலூர் கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.

    * வீட்டு வசதி மற்றும் ஊரக மேம்பாட்டு துறை இணை செயலாளர் ஆனி மேரி சொர்ணா, அரியலூர் கலெக்டராக நியமிக்கப்படுகிறார்.

    * கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், தஞ்சாவூர் கலெக்டராக பதவியேற்பார்.

    * வணிக வரித்துறை (உளவுப்பிரிவு) இணை கமிஷனர் மெர்சி ரம்யா, புதுக்கோட்டை கலெக்டராக மாற்றப்படுகிறார்.

    * தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் டாக்டர் எஸ்.உமா, நாமக்கல் கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * நில அளவை மற்றும் நில ஆவணத்துறை கூடுதல் இயக்குனர் கலைச்செல்வி மோகன் காஞ்சிபுரம் கலெக்டராக பொறுப்பேற்பார்.

    * தமிழ்நாடு பைபர்நெட் கார்ப்பரேசன் மேலாண்மை இயக்குனர் கமல் கிஷோர், செங்கல்பட்டு கலெக்டராக மாற்றப்படுகிறார்.

    * வணிக வரித்துறை இணை கமிஷனர் (நிர்வாகம்) எம்.எஸ்.சங்கீதா, மதுரை கலெக்டராக மாற்றப்படுகிறார்.

    * தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆஷா அஜித், சிவகங்கை கலெக்டராக பதவியேற்பார்.

    * தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை இணை கமிஷனர் விஷ்ணு சந்திரன், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்பார்.

    * செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.

    * சேலம் மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்துராஜ், திருப்பூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    * சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்தின் நிர்வாக இயக்குனர் ராஜகோபால் சுங்கரா, ஈரோடு கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.

    * சேலம் ஜவ்வரிசி கழகத்தின் மேலாண்மை இயக்குனர் எம்.என்.பூங்கொடி, திண்டுக்கல் கலெக்டராக பொறுப்பேற்பார்.

    * ராமநாதபுரம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், நாகப்பட்டினம் கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.

    * தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனத்தின் இணை மேலாண்மை இயக்குனர் கே.எம்.சரயு, கிருஷ்ணகிரி கலெக்டராக நியமிக்கப்படுகிறார்.

    தமிழகத்தில் 32 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் மற்றும் அவர்கள் புதிதாக பொறுப்பேற்க உள்ள துறைகள் பற்றிய விவரம் வருமாறு:-

    * சர்வே மற்றும் செட்டில்மென்ட் இயக்குனர் டி.ஜி. வினய், தொழில்நுட்ப இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி சர்வே மற்றும் செட்டில்மென்ட் இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

    * தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர் கோவிந்தராவ், தமிழ்நாடு சுகாதார முறைகள் திட்ட இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

    * திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினித், மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

    * தமிழ்நாடு மாநில மார்க்கெட்டிங் கழக மேலாண்மை இயக்குனர் சுப்பிரமணியன், வேளாண்மை ஆணையராக பொறுப்பேற்கிறார்.

    * தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக நியமிக்கப்படுகிறார்.

    * தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பதிவுத்துறை ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் விவேகானந்தன், கைத்தறி ஆணையராக பொறுப்பேற்கிறார்.

    * ஆசியர்கள் தேர்வு வாரிய தலைவராக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டார்.

    * நிதித்துறை சிறப்பு செயலாளர் ரீட்டா ஹரீஸ் தாக்கர், சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை சிறப்பு செயலாளராக மாற்றப்பட்டார்.

    * எழுதுபொருள் அச்சுத்துறை முன்னாள் கமிஷனராக இருந்த சுகந்தி அருங்காட்சிய ஆணையராக மாற்றப்பட்டார்.

    * ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணன் உன்னி, நிதித்துறை இணை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். அரியலூர் கலெக்டர் ரமண சரஸ்வதி, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இணை தலைமை செயல் அதிகாரியாக மாற்றப்பட்டார்.

    * நில நிர்வாக கூடுதல் ஆணையர் சுப்புலட்சுமி, வணிக வரிகள் கூடுதல் ஆணையராக (நிர்வாகம்) இடமாற்றம் செய்யப்பட்டார். கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

    * கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனராக மாற்றப்பட்டார்.

    * காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, சர்வசிக்ஷ் அபியான் திட்ட இயக்குனர் ஆனார்.

    * தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழக மேலாண்மை இயக்குனர் கஜலட்சுமி, உள், மதுவிலக்கும் மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதல் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

    * நாமக்கல் மாவட்ட கலெக்டர் சிரேயாசிங், வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குனராக பொறுப்பேற்கிறார்.

    * தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனர் லலிதா, நகராட்சி நிர்வாக கூடுதல் கமிஷனராக மாற்றப்பட்டார்.

    * ராஷ்மி சித்தார்த் ஜகாடே, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் செயலாளராக மாற்றப்பட்டார்.

    * பதிவுத்துறை ஐ.ஜி. சிவன் அருள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் கணினி மயமாக்கலின் சிறப்பு பணி அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

    * பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் நந்தகோபால், வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை சிறப்பு செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

    * நிதித்துறை துணை செயலாளர் லட்சுமி பாவ்யா தன்னீரு, வணிக வரிகள் மற்றும் இணை ஆணையராக (ஈரோடு) இடமாற்றம் செய்யப்பட்டார்.

    * கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் சங்கர், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக மாற்றப்பட்டார்.

    * மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையராக நியமிக்கப்படுகிறார்.

    * திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன், தமிழ்நாடு மாநில மார்க்கெட்டிங் கழகத்தின் மேலாண்மை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

    * மதுரை கலெக்டர் அனீஷ் சேகர், தமிழ்நாடு எல்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார். தமிழ்நாடு கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி சங்கர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார்.

    * இல்லம் தேடி கல்வி சிறப்பு பணி அதிகாரி இளம்பகவத், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் ஆனார்.

    * புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, பெருநகர சென்னை வளர்ச்சி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்கிறார்.

    * வேளாண்மை இயக்குனர் அண்ணாத்துறை தமிழ்நாடு சாலைகள் பிரிவு திட்ட அதிகாரியாக மாற்றப்பட்டார். அவர், சென்னை கன்னியாகுமரி தொழில் வழிச்சாலை திட்ட அதிகாரியாக முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார். மேலும், தமிழ்நாடு சாலைகள் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராகவும் செயல்படுவார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் தங்கள் மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிலை குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
    • சிறந்த கலெக்டர்களை தேர்வு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேடயம் வழங்கி சிறப்புரையாற்ற உள்ளார்.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள 10-வது மாடி கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, போதைப் பொருட்கள் ஒழிப்பு, அரசு திட்டங்கள் மக்களிடம் சென்றடைவதில் உள்ள சுணக்கத்தை போக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். வனத்துறை அதிகாரிகள், கலெக்டர்கள் அடங்கிய கூட்டமும் போலீஸ் அதிகாரிகள் அடங்கிய கூட்டு கூட்டமும் நேற்று நடத்தப்பட்டது.

    இந்த மாநாடு 2-வது நாளாக இன்றும் நடைபெற்றது. இன்றைய மாநாட்டில் மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் தங்கள் மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிலை குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.

    இன்று மாலை வரை இந்த மாநாட்டில் சிறந்த கலெக்டர்களை தேர்வு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேடயம் வழங்கி சிறப்புரையாற்ற உள்ளார்.

    • அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை விதித்த ஐகோர்ட்டின் உத்தரவுக்கு தடை விதிக்கிறோம்.
    • பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் காரணத்தை கூறி மாவட்ட கலெக்டர்களுக்கு எதிரான வழக்கை ஒத்தி வைக்க தமிழக அரசு கோரிக்கை வைத்தது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் செய்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளப்பட்டு சட்ட விரோதமாக விற்பனை செய்வதாகவும் அதன் மூலம் கிடைத்த கோடிக்கணக்கான ரூபாய் வருமானத்தை சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபடுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு செப்டம்பரில் தமிழகத்தில் 34 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

    இந்த சோதனையில் மணல் குவாரிகளின் ஏஜெண்டுகளாக செயல்பட்டு வந்த தொழில் அதிபர்கள் புதுக்கோட்டை ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளின் வீடுகளில் இருந்து கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரூ.12.82 கோடி ரொக்கம், ரூ.56.86 லட்சம் மதிப்புள்ள 24 கிராம் எடையுள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அப்போது தமிழக அரசின் நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதையடுத்து திருச்சி, தஞ்சை, கரூர், அரியலூர், வேலூர் மாவட்ட கலெக்டர்கள் பாஸ்போர்ட், ஆதார் அட்டை உள்ளிட்ட விவரங்களுடன் நேரில் ஆஜராகி மணல் குவாரிகள் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

    இந்த சம்மனை எதிர்த்து தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு அமலாக்கத்துறையின் சம்மனுக்கு இடைக்கால தடை விதித்தது.

    இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது நீதிபதிகள் பீலா எம்.திரிவேதி, பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், மணல் குவாரிகள் மூலமாக கிடைத்த தொகையில் சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதா? என்பது குறித்து விசாரிக்க மாவட்ட கலெக்டர்களுக்கு விளக்கம் கேட்டு சம்மன் அனுப்புவதில் எந்த பிரச்சனையும் இல்லையே? சில தகவல்களைத் தானே கலெக்டர்களிடம் அமலாக்கத்துறையினர் கேட்கின்றனர் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.

    இதற்கு தமிழக அரசு மற்றும் மாவட்ட கலெக்டர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், முகுல் ரோத்தகி ஆகியோர் தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

    அந்த மாவட்டத்தில் நடைபெறும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். ஆனால் கரூர், திருச்சி, அரியலூர், வேலூர் மாவட்டங்களுக்கும், அமலாக்கத்துறையின் முதல் தகவல் அறிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை. எந்த புகாரும் கிடையாது. வழக்கும் கிடையாது.

    பின்னர் எந்த அடிப்படையில் சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பான விசாரணைக்கு கலெக்டர்கள் ஆஜராக முடியும்? என கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜூ, மணல் குவாரிகள் மூலமாக சட்ட விரோதமாக பெற்ற தொகையை வேறு ஒரு மாவட்டத்தில் உள்ள குவாரியில் முதலீடு செய்திருந்தால் என்ன செய்வது? அதை கண்டறிய வேண்டும் என்பதே அமலாக்கத்துறை விசாரணையின் நோக்கம் என்றனர்.

    குற்றம் எங்கு நடந்துள்ளது என்பதை ஆராய்ந்து விசாரணை நடத்தும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு உள்ளது என்றார்.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமலாக்கத்துறையின் விசாரணையை நிறுத்த வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசும், கூடுதல் தலைமைச் செயலாளரும் மாவட்ட கலெக்டர்களும் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து தடை உத்தரவு பெற்றிருப்பது விசித்திரமானது மட்டுமின்றி அசாதாரணமானது. இது முற்றிலும் தவறானது என நாங்கள் கருதுகிறோம்.

    எனவே அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை விதித்த ஐகோர்ட்டின் உத்தரவுக்கு தடை விதிக்கிறோம். சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பான அமலாக்கத்துறையின் விசாரணைக்கு மேற்கண்ட 5 மாவட்ட கலெக்டர்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி இருந்தது.

    அப்போது பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் காரணத்தை கூறி மாவட்ட கலெக்டர்களுக்கு எதிரான வழக்கை ஒத்தி வைக்க தமிழக அரசு கோரிக்கை வைத்தது. அதன்படி வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தேர்தலுக்கு பிறகு 5 மாவட்ட கலெக்டர்களும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஏப்ரல் 25-ந் தேதி (இன்று) நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

    அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் திருச்சி கலெக்டர் பிரதீப் குமார், கரூர் கலெக்டர் தங்கவேல், அரியலூர் கலெக்டர் ஆனி மேரி சொர்னா, தஞ்சை கலெக்டர் தீபக் ஜோக்கப், வேலூர் கலெக்டர் சுப்பு லட்சுமி ஆகியோர் ஆஜர் ஆனார்கள்.

    5 மாவட்ட கலெக்டர்களும் குவாரி அனுமதி ஆவணங்களுடன் உயர் அதிகாரி முன்பு ஆஜரான நிலையில், இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரி அருகில் உள்ள கிளை மண்டல அலுவலகத்தில் இருப்பதால் அங்கு செல்லுமாறு விசாரணை இடத்தை திடீரென மாற்றினார்கள்.

    அதன்படி 5 மாவட்ட கலெக்டர்களும் ஒரே காரில் ஏறி பக்கத்தில் இருந்த அமலாக்கத்துறை கிளை அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது.

    மணல் குவாரி டெண்டர் நடைமுறை விதிகளின்படி பின்பற்றப்பட்டதா? ஒவ்வொரு நாளும் விற்கப்படும் மணல் அளவு எவ்வளவு? அதற்கு முறையான அனுமதி கொடுக்கப்பட்டதா? குவாரியில் உள்ள கண்காணிப்பு கேமரா ஆய்வு செய்யப்பட்டதா?

    எவ்வளவு பேருக்கு மணல் விற்கப்பட்டுள்ளது? அரசு அனுமதித்த அளவை விட கூடுதலாக மணல் எடுக்கப்பட்டு விற்கப்பட்டதா? என்பது போன்ற பல்வேறு கேள்விகள் கலெக்டர்களிடம் கேட்கப்பட்டது.

    இதற்கு ஒவ்வொரு கலெக்டர்களும் சொன்ன பதில்கள் அனைத்தும் வாக்கு மூலமாக பதிவு செய்யப்பட்டது.

    • இன்று முதல் 19ம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • நெல்லை , தென்காசி , கன்னியாகுமரி , தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது.

    இந்நிலையில் இன்று முதல் 19ம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நெல்லை , தென்காசி , கன்னியாகுமரி , தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் எழுதியுள்ளது.

    கனமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து துறைகளும் தயாராக இருக்க வேண்டும்; நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி கனமழையை எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 19-ந்தேதி மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, தென்காசி மாவட்ட கலெக்டர்களும் பங்கேற்கிறார்கள்.
    • அனைத்து துறைகளின் முக்கிய திட்டங்கள் குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்த உள்ளார்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கைக்கு பிறகு ஒரு சில நாட்களில் தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்படும்.

    இதைத் தொடர்ந்து தமிழகத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மண்டல அளவில் மாவட்ட கலெக்டர்களை அழைத்து சென்னை தலைமைச் செயலகத்தில் 4 நாட்கள் ஆலோசனை நடத்த உள்ளார்.

    11-ந்தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி கலெக்டர்கள் பங்கேற்கிறார்கள்.

    13-ந்தேதி கூட்டத்தில் திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களின் கலெக்டர்கள் பங்கேற்கிறார்கள்.

    ஜூன் 15-ந்தேதி சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கரூர் மாவட்ட கலெக்டர்களும், 19-ந்தேதி மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, தென்காசி மாவட்ட கலெக்டர்களும் பங்கேற்கிறார்கள்.

    குடிநீர் பிரச்சனை, பட்டா மாறுதல், சாலை சீரமைப்பு, தெரு விளக்கு உள்ளிட்ட அனைத்து துறைகளின் முக்கிய திட்டங்கள் குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்த உள்ளார்.

    • அரசின் புதிய அறிவிப்புகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
    • அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க மாவட்ட கலெக்டர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இக்கூட்டத்தில் எடுத்துரைத்தார்.

    சென்னை:

    தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படும் விதம், போதைப் பொருளை கட்டுப்படுத்தும் செயல்பாடு குறித்து ஒவ்வொரு ஆண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகளுடன் ஆலோசனை நடத்துவது வழக்கம்.

    அதற்கு முன்னோட்டமாக தலைமைச் செயலாளரும் மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்துவது வழக்கம். அந்த வகையில் மாவட்ட கலெக்டர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா 3 நாட்கள் ஆய்வுக் கூட்டம் நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் இன்று தலைமை செயலகம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலெக்டர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

    ஒவ்வொரு மாவட்டத்தில் நிலவும் பிரச்சனைகளை கையாள்வது குறித்தும், அரசு திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவது பற்றியும் அவர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

    இன்று நடைபெற்ற கூட்டத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்றனர்.

    ஒவ்வொரு மாவட்டத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை அதை கையாண்ட விதம், அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை எவ்வாறு உள்ளது? எந்த அளவுக்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது பற்றியும் இன்றைய கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். அரசின் புதிய அறிவிப்புகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

    அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க மாவட்ட கலெக்டர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இக்கூட்டத்தில் எடுத்துரைத்தார்.

    இன்று நடைபெற்ற கூட்டத்தில் 14 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்றது போல் நாளை நடைபெறும் 2-ம் கட்ட கூட்டத்தில் அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நீலகிரி ஆகிய 12 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    15-ந்தேதி நடைபெறும் 3-ம் கட்ட ஆய்வுக் கூட்டத்தில் திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, தென்காசி ஆகிய 12 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்க உள்ளனர்.

    • ‘மக்களுடன் முதல்வர்’ என்ற புதிய திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
    • மக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    சென்னை:

    தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் மக்கள் நலப்பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அதன் அடிப்படையில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் 'மக்களுடன் முதல்வர்' என்ற புதிய திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

    இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் கோவையில் தொடங்கி வைத்தார். மக்களுடன் முதல்வர் திட்டத்தில் முதற்கட்டமாக 2,058 முகாம்கள் மூலமாக 8.74 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

    இந்த நிலையில், மக்களுடன் முதல்வர் திட்டத்தின் 2-வது கட்ட செயல்பாடுகள் குறித்து 5 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.

    சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் மதுரை, தூத்துக்குடி, நாகை, வேலூர், திருப்பூர் ஆகிய 5 மாவட்ட கலெக்டர்கள் கலந்து கொண்டனர். மேலும் தமிழக அரசின் முக்கிய அதிகாரிகளும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், மக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    • 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற்றது.
    • உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம் வருகிற ஜனவரி 5-ந்தேதியுடன் நிறைவடைகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் 25 மாநகராட்சிகள், 142 நகராட்சிகள், 561 பேரூராட்சிகள், 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளும், 388 ஊராட்சி ஒன்றியங்களும், 36 மாவட்ட ஊராட்சிகளும் இயங்கி வருகின்றன. இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் மூலம் தேர்தல் நடத்தப்படுகிறது.

    அதன்படி கடந்த 2019-ம் ஆண்டில் 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. வார்டு மறுவரையறை, மாவட்ட எல்லை பிரிவு விவகாரம் போன்ற காரணங்களால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற்றது.

    இந்த நிலையில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று பதவி ஏற்ற தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம் வருகிற ஜனவரி 5-ந்தேதியுடன் நிறைவடைகிறது.

    எனவே, இந்த 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப்பணியில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர் கி.பாலசுப்பிரமணியம் மாவட்ட கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு எதிர்வரும் சாதாரண, தற்செயல் தேர்தல்களை முன்னிட்டு, தேர்தல்களுக்கு தேவையான அனைத்து வகையான வாக்குப்பதிவு பொருட்களையும் தயார் நிலையில் வைத்திருப்பது அவசியமாகிறது. இதில், வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் வாக்கு பெட்டிகளை தயார் நிலையில் வைக்க வேண்டும். எனவே, ஊரக உள்ளாட்சி தேர்தல்களுக்கு பயன்படுத்தப்படும் அனைத்து வகையான வாக்கு பெட்டிகள், தற்போதைய தரம் மற்றும் நிலையை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) நேரடியாக ஆய்வு செய்து, அவற்றின் தன்மையினை ஆராய வேண்டும்.

    அதாவது, வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தும் வகையில் நல்ல நிலையில் உள்ளவை, சிறிதளவு பழுதடைந்து, அதனை சரி செய்வதன் மூலம் வாக்குப்பதிவுக்கு மீண்டும் பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ளவை, முழுவதும் பழுதடைந்து பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளவை என வகை பிரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மீட்பு பணிக்கு தேவையான உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • மாவட்ட அளவில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் வரும் 15ம் தேதி வரை கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதனால், அதிகனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, முன்னெச்சரிக்கையை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது

    பேரிடர்களை கையாளுவதற்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    கன முதல் மிக கனமழை பெய்யும் பட்சத்தில் அனைத்து மாவட்டங்களிலும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மீட்பு பணிக்கு தேவையான உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மாவட்ட அளவில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு, வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி கடிதம் எழுதியுள்ளார்.

    • புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன மழை பெய்யக்கூடும்.
    • மயிலாடுதுறை மாவட்டத்தில் புயல், மழை பாதிப்புகளை உடனடியாக சரிசெய்ய ஏற்பாடுகள் தயார் நிலை.

    வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் எனசென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதனால், அடுத்த 4 தினங்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், மேலும், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கனமழை எதிரொலியால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

    அதன்படி புதுச்சேரி ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேற்படி, கன மழையை எதிர்கொள்ள பேரிடர் மேலாண்மைத் துறையின் உதவி அழைப்பு எண்களான 112 மற்றும் 1077 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

    மேலும், பொது மக்களின் நலன் கருதி பிரத்தியேகமாக மெசேஜ் வடிவிலான புகார்களை மட்டும் பதிந்திட 9488981070 என்கிற வாட்ஸ் அப் எண்ணினை பயன்படுத்திக் கொள்ளலாம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, காரைக்கால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அம்மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், " அத்தியாவசிய பொருட்களை முடிந்தளவு வாங்கிக் கொள்ளவும். பொருட்களை பாதுகாப்பான இடங்களில் வைக்கவும். உதவிக்கு 1070, 1077, 04368227704, 228801 ஆகிய எண்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்" என்றார்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் புயல், மழை பாதிப்புகளை உடனடியாக சரிசெய்ய ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மேலும் அவர், " மொத்தமாக 4,500 முதல்நிலை மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். மிக அதிகமாக பாதிக்கும் 12 இடங்கள், அதிகமாக பாதிக்கும் 33 இடங்களை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைக்கவும்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை சேதம் தொடர்பான புகார்களு்கு 1077 மற்றும் 04364- 222588 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்" என்றார்

    • நடப்பாண்டில் கூடுதலாகத் தொடங்கப்பட்டு நெல் கொள்முதல் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
    • மாவட்ட கலெக்டர்கள் தாங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்த விவரங்களை தெரிவித்தனர்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வு நடத்தினார்.

    தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (27.2.2025) தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் கலெக்டர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    டெல்டா மாவட்டங்களில் அடுத்த ஓரிரு தினங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுவதால் அம்மாவட்ட விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் சேதமடைமடையாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    டெல்டா மாவட்டங்களில் 2024-25 கொள்முதல் பருவத்தில் இதுவரை 16,94,796 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டு கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் அளவைவிட இது 3.10.288 மெட்ரிக் டன் அதிகமாகும்.

    விவசாயப் பெருங்குடி மக்களிடமிருந்து கால தாமதமின்றி கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த ஆண்டு 2088 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதலில் ஆறாயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    கடந்த ஆண்டைக் காட்டிலும் ஏறத்தாழ 200 கொள்முதல் நிலையங்கள் நடப்பாண்டில் கூடுதலாகத் தொடங்கப்பட்டு நெல் கொள்முதல் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

    இந்தச் சூழ்நிலையில், 28.02.2025 மற்றும் 01.03.2025 ஆகிய இரண்டு நாட்களில் டெல்டா மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுவதால் இந்த மாவட்டங்களின் கலெக்டர்கள் தயார் நிலையில் இருந்து மழையால் நெல் பாதிக்கப்படாமல் கொள்முதல் செய்திடவும், கொளமுதல் செய்யப்பட்ட நெல்லை பாதுகாப்பாக வைத்திடவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள முதல்-அமைச்சர் அறிவுரை வழங்கினார்கள். மாவட்ட கலெக்டர்கள் தாங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்த விவரங்களை தெரிவித்தனர்.

    இக்கூட்டத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, தலைமைச் செயலாளர் முருகானந்தம், இ.ஆ.ப., நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன், இ.ஆ.ப. கூட்டுறவு. உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் சத்யபிரத சாகு. இ.ஆ.ப. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    மேலும் காணொலி வாயிலாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர். தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு மேலாண்மை இயக்குநர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் கலெக்டர்கள் கலந்து கொண்டனர்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×