search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Students protest"

    • செஞ்சி அருகே அரசு பள்ளியில் ஆசிரியர்களை நியமிக்க கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியின் முகப்பு வாயிலை மூடி மாணவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சிட்டாம்பூண்டி கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது, ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 140 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி பயிற்று விப்பதற்காக 5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர், இப்பள்ளியில் கணித ஆசிரியர் பணியிடங்கள் கடந்த இரண்டு வருடங்களாக காலியாக உள்ள நிலையில் மற்ற ஆசிரியர்கள் கணிதப் படத்தை பயிற்றுவிக்கின்றனர் மேலும் தலைமை ஆசிரியர் 6மாத காலமாக இல்லை எனவும் இதன் காரணமாக மாணவர்களின் கல்வி பாதிப்படைகிறது எனவும், இது சம்பந்தமாக பலமுறை துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கை இல்லை எனவும், உடனடியாக காலியாக உள்ள இடங்களில் ஆசிரியர்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கை வைத்து மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியின் முகப்பு வாயிலை மூடி மாணவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்டம் நடத்தப் போவதாக தகவல் வெளியான நிலையில், இன்று மக்கள் கடற்கரை வரத் தடை விதித்து சென்னை காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    அனைத்து கல்லூரிகளிலும் தேர்வுகள் நேரடியாக தான் நடத்தப்படும் என தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆன்லைனில் தேர்வுகள் நடத்தக்கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், இன்று மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்டதில் ஈடுபடப் போவதாக தகவல்கள் பரவியது. இதையடுத்து கடற்கரை முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மெரினாவில் உள்ள சர்வீஸ் சாலை மூடப்பட்டது.

    மேலும், இன்று பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வர அனுமதி இல்லை என காவல்துறை அறிவித்துள்ளது.

    பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதானவர்களின் படத்தை துடைப்பத்தால் அடித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். #Pollachicase
    திருச்சி:

    பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதானவர்களின் படத்தை துடைப்பத்தால் அடித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மாணவர்கள் போராட்டத்தால் பொள்ளாச்சியில் உள்ள கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களிடம் முகநூல் (பேஸ்புக்) மூலம் நட்பாக பழகி, பின்னர் அவர்களை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து ஆபாசமாக வீடியோ எடுத்த சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் மற்றும் திருநாவுக்கரசு ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி கண்டன குரல்கள் வலுத்து வருகின்றன. அரசியல் கட்சியினர், கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே நேற்று காலை 11 மணிக்கு, திருச்சி மண்டல மக்கள் அதிகாரம் அமைப்பினர் நூதன போராட்டம் நடத்தினார்கள்.

    போராட்டத்தின்போது மக்கள் கலை இலக்கிய கழகத்தினர், பாலியல் குற்றவாளிகளுக்கு எதிராக பறை அடித்து பாட்டு பாடினார்கள். பொள்ளாச்சி பாலியல் வழக்கை சி.பி.ஐ. விசாரித்தாலும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்காது. எனவே, அவர்களை மக்கள் முன்னிலையில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது.

    ஒரு கட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பிளக்ஸ் பேனரில் உள்ள கைதானவர்கள் 4 பேரின் உருவப்படத்தின்மீது துடைப்பத்தாலும், செருப்பாலும் மாறி, மாறி அடித்து கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    நெய்வேலி புதுநகர் 14-வது வட்டத்தில் உள்ள ஜவகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு வழக்கம்போல் நேற்று காலை மாணவ-மாணவிகள் வந்தனர். ஆனால் அவர்கள் வகுப்பறைக்கு செல்லாமல், நுழைவு வாயில் முன்பு ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    பின்னர் கல்லூரியில் இருந்து மாணவ-மாணவிகள், பேரணியாக சூப்பர் பஜார், மெயின் பஜார் வழியாக சென்று மீண்டும் கல்லூரியை வந்தடைந்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.



    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் துறை மாணவ-மாணவிகள் நேற்று காலை 10.45 மணிக்கு வகுப்புகளை புறக்கணித்து பொறியியல் துறை கல்லூரி வளாகம் முன்பு ஒன்று திரண்டு தரையில் அமர்ந்து பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும், இந்த வழக்கில் கைதானவர்களை தூக்கிலிட வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் அண்ணாமலைநகர் போலீசார் விரைந்து வந்து, மாணவ-மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாணவ-மாணவிகள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலை கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் கிள்ளை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவ-மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாணவ- மாணவிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.

    நேற்று முன்தினம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவ-மாணவிகளும் போராட்டத்தில் குதித்தனர். இதனால் பொள்ளாச்சி நகரம் போராட்ட களமாக மாறியது. நேற்று பொள்ளாச்சியில் கல்லூரி மாணவ-மாணவிகள் மீண்டும் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் பரவியது.

    இதையடுத்து பொள்ளாச்சியில் உள்ள குறிப்பிட்ட சில கல்லூரிகளுக்கு நேற்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டது. போராட்டம் நடைபெற்ற நகராட்சி அலுவலகம் எதிரே தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா வாகனம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. 350 போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    வால்பாறையில் பாரதியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று காலை தர்ணா போராட்டம் நடத்தினர்.



    தஞ்சை குந்தவைநாச்சியார் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரியின் முன்பு மாணவிகள் அமர்ந்து பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை ரெயிலடியில் பல்வேறு தனியார் கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் நேற்று ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர். தஞ்சை கோர்ட்டு முன்பு சாலையின் குறுக்கே நின்று தஞ்சை வக்கீல்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    வேலூர் ஊரீசு கல்லூரி மாணவிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி மாணவிகள் போராட்டம் நடந்த அதேவேளையில் சத்துவாச்சாரி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் பணிபுரியும் பெண் வக்கீல்கள் அனைவரும் வெளியே வந்து தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். #Pollachicase
    கிரெடிட் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த புதிய முறையை ரத்து செய்ய முடியாது என பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார். #AnnaUniversity #StudentsProtest
    சென்னை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அரியர் முறைப்படி , குறிப்பிட்ட பாடத்தில்  தேர்ச்சி அடையாதோர்களுக்கான தேர்வு, அடுத்த செமஸ்டரில் தேர்வினை எழுதலாம் என இருந்தது. 2017-ம் ஆண்டில் இருந்து அம்முறை மாற்றப்பட்டு , கிரெடிட் முறை அமல்படுத்தப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது.

    இதனால் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி வீதம் குறைகிறது எனவும், விடைத்தாள் திருத்தம் செய்யும் முறை கடுமையாக்கப்பட்டிருப்பதால் தேர்வில் தேர்ச்சி பெறுவது கடினமாக உள்ளது எனவும் கூறினர். மேலும் இதனால் ஓராண்டு காலம் வீண் ஆகிறது எனவும் வருத்தத்துடன் தெரிவித்திருந்தனர்.



    இதனையடுத்து  அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்  திரண்ட மாணவ, மாணவிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக கிரெடிட் முறையை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து மாணவர்களிடம் பல்கலைக்கழக பதிவாளர் குமார்  பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மாணவர்களிடம் இருந்து எழுத்துப்பூர்வமாக மனுவை பெற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்வு விதிகளில் செய்யப்பட்ட மாற்றம் தொடர்பாக விளக்கம் அளித்தார்.

    இந்நிலையில் , தேர்வு சீர்திருத்தங்களை குறிப்பாக கிரெடிட் முறையை ரத்து செய்ய முடியாது என பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா இன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால் மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். #AnnaUniversity #StudentsProtest 
    அரியர் தேர்வு விதிமுறைகளை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா பல்கலைக்கழகம் முன் மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினர். #AnnaUniversity #StudentsProtest
    சென்னை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அரியர் முறைப்படி , குறிப்பிட்ட பாடத்தில்  தேர்ச்சி அடையாதோர்களுக்கான தேர்வு, அடுத்த செமஸ்டரில் தேர்வினை எழுதலாம் என இருந்தது. 2017-ம் ஆண்டில் இருந்து அம்முறை மாற்றப்பட்டு , கிரெடிட் முறை அமல்படுத்தப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது.

    இதனால் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி வீதம் குறைகிறது எனவும், விடைத்தாள் திருத்தம் செய்யும் முறை கடுமையாக்கப்பட்டிருப்பதால் தேர்வில் தேர்ச்சி பெறுவது கடினமாக உள்ளது எனவும் கூறியுள்ளனர். மேலும் இதனால் ஓராண்டு காலம் வீண் ஆகிறது எனவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.

    இதனையடுத்து இன்று அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்  திரண்ட மாணவ, மாணவிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக கிரெடிட் முறையை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர். மாணவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும், மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்ல வேண்டும் என்றும் பதிவாளர் மற்றும் ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டனர்.



    எனினும் மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து மாணவர்களிடம் பல்கலைக்கழக பதிவாளர் குமார் இன்று மதியம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மாணவர்களிடம் இருந்து எழுத்துப்பூர்வமாக மனுவை பெற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்வு விதிகளில் செய்யப்பட்ட மாற்றம் தொடர்பாக விளக்கம் அளித்தார்.

    ‘அரியர் தேர்வு விதிகளில் செய்த மாற்றத்தை மாணவர்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை. பல்கலைக்கழக இணைய தளத்தில் இதனை தெரிந்துகொள்ளலாம். தனி குழு அமைத்து மாணவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்’ என்றும் அவர் தெரிவித்தார். #AnnaUniversity #StudentsProtest

    தாம்பரம் கல்லூரியில் கைப்பந்து போட்டியில் பங்கேற்ற மாணவி உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தாம்பரம்:

    கிழக்கு தாம்பரம் ஆனந்தபுரத்தைச் சேர்ந்தவர் லூயிஸ் தேவராஜ். இவரது மகள் மகிமா (வயது18). கிழக்கு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் வேதியியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள் அனைவரும் விளையாட்டு போட்டியில் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்று கூறி இருப்பதாக தெரிகிறது.

    நேற்று மாலை கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள மாணவி மகிமாவை அழைத்து உள்ளனர். ஆனால் அவர் உடல்நிலை சரியில்லாததால் விளையாட்டு போட்டியில் பங்கேற்க முடியாது என்று சொல்லியதாக கூறப்படுகிறது.

    எனினும் மகிதாவை கட்டாயப்படுத்தி கைப்பந்து போட்டியில் விளையாட வைத்து உள்ளனர். இதற்காக அவர் மைதானத்தை சுற்றி வந்து பயிற்சியில் ஈடுபட்டார்.

    திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு அங்கேயே மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகளும், பேராசிரியர்களும் மகிமாவை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி மகிமாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இன்று காலை மகிமாவின் உடலுக்கு இறுதி சடங்கு செய்ய ஏற்பாடு செய்து இருந்தனர்.

    இந்த நிலையில் மகிமாவின் பெற்றோர் சேலையூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதில், “விளையாட முடியாத நிலையில் இருந்த மகளை கட்டாயப்படுத்தி விளையாடுமாறு கூறி இருக்கிறார்கள். இதனால் அவர் இறந்து விட்டார். இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்து உள்ளனர்.

    இதையடுத்து மகிமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே மாணவி மகிமா இறந்ததை அறிந்த மாணவ - மாணவிகள் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க மாணவ- மாணவிகளை கட்டாயப்படுத்தக் கூடாது, அவசர சிகிச்சைக்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அவர்களிடம் கல்லூரி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    விளையாட்டு போட்டியில் பங்கேற்ற மாணவி இறந்த சம்பவம் மாணவ- மாணவிகளை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
    ஜல்லிக்கட்டுக்காக எழுந்தது போல் மாணவர்கள் மீண்டும் புரட்சி செய்ய வேண்டும் என்று தாம்பரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசினார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் பெண்கள் பாதுகாப்புக்காக ரவுத்திரம் என்ற மொபைல் செயலி தொடக்க விழா தாம்பரத்தில் உள்ள கல்லூரியில் நடந்தது.

    செயலியை தொடங்கி வைத்து கமல்ஹாசன் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்தினார்.

    ‘மாணவர்களின் கைகளில் தான் எதிர்காலம் இருக்கிறது. ஜல்லிக்கட்டுக்காக எழுந்தது போல் மாணவர்கள் மீண்டும் புரட்சி செய்ய வேண்டும். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அவர்களின் பாதுகாப்புக்காகவே இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது’.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் மாணவர்கள் கேட்ட கேள்விகளும் கமல் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- தோல்விகளை வெற்றியாக மாற்றுவது எப்படி?

    பதில்:- தோல்விகள் தான் நம்மை வெற்றியை நோக்கி கூட்டிசெல்லும். தோல்வியை பார்த்து யாரும் தயங்கவேண்டாம். எல்லா தோல்விகளிலும் உங்களுக்கு சில படிப்பினைகள் கிடைக்கும். தோல்விப்படிகளை தொடும் போது வெற்றிப்படி கண்ணில் பட்டுவிடும். எதை செய்யக்கூடாது என்பதை தெரிந்துகொண்டால் எதை செய்ய வேண்டுமோ அதை சரியாக செய்ய முடியும்.

    கேள்வி :- குற்றசாட்டுகள் கூறும்போது ஆதாரம் கேட்டால் என்ன செய்வது?

    பதில்:- ஆதாரம் இல்லாத சமயங்களில் குரல் எழுப்பலாம். யாராவது பார்த்திருப்பார்களா? அவர்களுக்கு சாட்சி சொல்வார்களா? என்று பார்க்கலாம். ஆதாரம் இல்லாமல் பொய் குற்றசாட்டு சொல்பவர்களும் இருக்கிறார்கள். கண்ணகி, நீலி இருவருமே இருந்த ஊர் தான் இது. இந்த சிக்கல் இருக்கத்தான் செய்யும்.

    கேள்வி:- பெண்களுக்கு பாலியல் குற்றங்களை தெரிவிப்பதில் தயக்கம் இருக்கிறதா? புகார் சொன்னால் எதிராகவே திரும்புகிறதே?

    பதில்:- தாழ்ந்தவர்கள் அப்படித்தான் பேசுவார்கள். உயர்ந்தவர்கள் அப்படி பேசமாட்டார்கள். இந்த சோகம் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் பொருந்தும். இந்த அவமானங்களை தாண்டி வந்துதான் நாம் நமது தரப்பு நியாயங்களை முன் வைக்கவேண்டும்.

    கே :- நீங்கள் சந்தித்த தைரியமான பெண்மணி யார்?

    ப:- என் அம்மா. அவருக்கு இணையான துணிச்சலான பெண்ணை சந்திக்க காத்திருக்கிறேன். என் அக்கா ஓரளவுக்கு தைரியமானவர்.



    கே:- பாராளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படவில்லையே?

    ப:- நிறைவேற்றப்படாத பல வி‌ஷயங்களில் இதுவும் ஒன்று. உங்கள் பங்களிப்பு அதிகமானால் இது சரியாகும். எத்தனை சதவீதம் என்று இல்லை. எத்தனை சதவிதமாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எங்கள் கட்சிக்கு உண்டு.

    கே:- பெண்கள் அதிகாரத்துக்கு வந்தால் பெண் முன்னேற்றம் நடக்கும் என்பது சாத்தியமா?

    ப :- இந்திரா காந்தி உள்பட பலர் அதிகாரத்துக்கு வந்து இருக்கிறார்கள். பெண்கள் அதிகாரத்திற்கு வந்து வெகுநாட்கள் ஆகிவிட்டன. நாம் தான் மாற வேண்டும்.

    கே:- பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்க காரணம்?

    ப :- ஆண்கள் என்று ஒரே வார்த்தையில் சொல்லலாம். ஆனால் வீட்டில் இருக்கும் பெரியவர்களும் காரணம். அவர்கள் வளர்க்கும் முறையில் தான் இருக்கிறது.

    கே :- இந்திய அரசியலில் பெண்களின் முக்கியத்துவம் அதிகரித்து இருக்கிறதா?

    ப:- ஆமாம். அதை இன்னும் அதிகரிக்க தான் உங்களைதேடி வந்துள்ளேன். மாணவர்களை தேடி நான் செல்வதை சிலர் கிண்டல் செய்கிறார்கள். ஆனால் மாணவர்கள் தான் அரசியலின் அடித்தளம். அரசியல் தான் உங்கள் வாழ்க்கையை மாற்றும்.

    கே:- விமர்சனங்களை எப்படி எடுத்துக் கொள்வீர்கள்?

    ப :- என் மீதான விமர்சனம் தான் என்னை மக்களிடம் கொண்டு செல்கிறது. நல்ல விமர்சனங்கள் தான் என் வளர்ச்சிக்கான அங்கீகாரம்.

    கே:- படித்த பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை. கிராமங்களில் வசிக்கும் படிக்காத பெண்களின் நிலை?

    ப:- பாலியல் புகார்கள் அதிக அளவில் நகர்ப்புறங்களில் இருந்துதான் வருகிறது. ஆனால் கிராமங்களில் பெண்கள் இன்னும் தைரியமானவர்களாக இருப்பார்கள். அவர்களிடம் இப்படி தவறாக நடந்து கொள்ள முடியாது. உடனே தண்டனை தான்.

    கே:- குடும்பங்களில் ஆண்கள், பெண்கள் எப்படி வளர்க்கப்பட வேண்டும்?

    ப:- முதலில் சமமான பாசத்துடன் வளர்க்க வேண்டும். சமமான உரிமைகள் தரவேண்டும். இரண்டுமே குழந்தைகள் தான். பண்புகளை சிறுவயதில் இருந்தே சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும்.

    கே:- நடுத்தர வர்க்கத்தில் இருந்து ஒரு பெண் திரைத்துறைக்கு வந்து சாதிக்க முடியுமா?

    ப:- நடுத்தர வர்க்கம் என்ன ஏழ்மை நிலையிலிருந்து கூட வரலாம். வந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு தர்மசங்கடம் ஏற்படும் என்பதால் பெயர்களை குறிப்பிட முடியவில்லை. இந்த தொழிலை நான் மதிக்கிறேன். இந்த தொழிலை தவறாக பயன்படுத்தியவர்கள் தான் தங்கள் பிள்ளைகளை கொண்டு வர தயங்குவார்கள். ஆனால் நான் அப்படி இல்லை. என் மகள்களையும் சினிமாவுக்குள் கொண்டு வந்து இருக்கிறேன்.

    கே:- பெண்களின் சமுதாய பங்களிப்பு எப்படி இருக்கிறது?

    ப:- ஜான்சி ராணி முதல் மம்தா பானர்ஜி வரை சொல்லலாம். சங்க காலம் முதலே பெண்களுக்கு சமமான முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது.

    கே :- பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் தண்டனை கடுமையாக்கப்படவேண்டும் என்பதில் உங்கள் கருத்து என்ன?

    ப:- வந்து கொண்டே இருக்கிறது. அந்த வேகம் போதவில்லை என்பது உண்மை. நம் காலத்திலேயே அதை பார்த்துவிடுவோம்.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

    இதைத் தொடர்ந்து ‘ எந்த அரசு உத்தரவு வந்தாலும் இந்த சந்திப்புகள் தொடர்ந்து நடக்கும். நாம் சந்திப்பதை யாராவது தடுத்தால் கல்லூரிக்கு வெளியில் உங்களை சந்திப்பேன்.

    தமிழகத்தை மாற்றும் பொறுப்பு மாணவர்களிடம் இருக்கிறது. இந்த கல்லூரியில் தான் முதன்முதலில் அரசியல்வாதி என்று கையெழுத்து இட்டேன். நான் உங்களிடம் ஓட்டு கேட்டு வரவில்லை. மாற்றத்தை முன்னெடுக்க உங்களையும் என்னுடன் அழைக்கிறேன்’

    இவ்வாறு கமல் கூறினார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
    கும்பகோணம் அருகே பள்ளி முன்பு தேங்கி கிடக்கும் மழை தண்ணீரை அப்புறப்படுத்த கோரி பெற்றோர், மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த தாராசுரம் அருகே வலையப்பேட்டை பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கும்பகோணம் பகுதியில் கடந்த வாரம் பலத்த மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் மழை தண்ணீர் தேங்கியது.

    இதேபோல் வலையப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முன்பும் மழை தண்ணீர் குளம்போல் தேங்கியது. கடந்த 3 நாட்களாக மழை தண்ணீர் வடியாமல் அப்படியே உள்ளதால் பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் மிகுந்த சிரமப்பட்டனர். மேலும் அந்த பகுதியில் சாலையும் குண்டும் குழியுமாக மோசமான நிலையில் இருந்தது. இதனால் மழை நீரில் நடந்து செல்லும் மாணவர்கள் சிலநேரங்களில் தடுமாறி கீழே விழும் காயம் அடைந்து வந்தனர்.

    இதையடுத்து தேங்கி கிடக்கும் மழைநீரை அப்புறப்படுத்தி, சாலையை சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஆவேசம் அடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளி முன்பு இன்று காலை திரண்டனர்.

    பிறகு பள்ளி முன்பு தேங்கி கிடக்கும் மழை தண்ணீரை அப்புறப்படுத்த கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பள்ளி சீருடையுடன் மாணவ- மாணவிகளும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து அங்கு வந்த போலீசார் , இதுசம்பந்தமாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதை ஏற்று பெற்றோர்களும், மாணவர்களும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். #tamilnews
    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கட்டண உயர்வை எதிர்த்து போராடிய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். #ManonmaniamSundaranarUniversity #StudentsProtest
    திருநெல்வேலி:

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வருகைப்பதிவு குறைவான மாணவர்களுக்கு அபராதம் வசூலிப்பது வழக்கம். ஆனால் சமீபத்தில் வருகை பதிவு குறைவான மாணவர்களுக்கான அபராத கட்டணத்தை பலகலைக்கழக நிர்வாகம் உயர்த்தியது.

    இதனை கண்டித்து மாணவர்கள் இன்று போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். அப்போது மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இந்நிலையில், மாணவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்ததை அடுத்து, அதனை கட்டுப்படுத்த போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். மேலும், கலைந்து செல்ல மறுத்த மாணவர்களை குண்டுகட்டாக கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #ManonmaniamSundaranarUniversity #StudentsProtest
    நிலக்கோட்டை அருகே மழையினால் சேதமடைந்த பாலத்தை சீரமைக்ககோரி மாணவ-மாணவிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே விளாம்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கருத்தாண்டிபட்டி, காமாட்சிபுரம் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    கடந்த 6 மாதத்திற்கு முன்பு பள்ளி அருகே இருந்த பாலம் மழையினால் சேதமடைந்தது. இதனை சீரமைக்கவேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த மாணவ-மாணவிகள் நேற்று அப்பகுதியில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலத்தை சீரமைக்க வேண்டும் என கோசமிட்டனர். இதனால் சிறிதுநேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    ஆந்திராவில் வருகைப்பதிவு குறைவாக இருந்த மாணவர்களை இடைநீக்கம் செய்த கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் மொட்டை மாடியில் ஏறி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. #studentsprotest
    ஐதராபாத் :

    ஆந்திரப் பிரதேச மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் விஞ்ஞான் எனும் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பயிலும் மாணவர்களில் 75 சதவிகிதத்திற்கு குறைவாக வருகைப்பதிவு வைத்துள்ளவர்களை இடைநீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் நேற்று உத்தரவிட்டது.

    ஆனால், நிர்வாகத்தின் முடிவினால் அதிருப்தி அடைந்த மாணவர்கள் சிலர் கல்லூரியின் மொட்டை மாடியில் ஏறி போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இது தொடர்பாக மாணவர் ஒருவர் ஊடகங்களிடம் கூறுகையில், ஜவஹர்லால் நேரு தொழில்நுப்ட பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் 65 சதவிகிதத்திற்கு கீழ் வருகைப்பதிவு உள்ள மாணவர்கள் மட்டுமே இடைநீக்கம் செய்ய வேண்டும் என விதிமுறைகள் உள்ளன.

    ஆனால், அதற்கு மாறாக 75 சதவிகிதத்திற்கு குறைவாக உள்ளவர்களை நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

    கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் மொட்டை மாடியில் ஏறி போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #studentsprotest
    பீகார் மாநிலத்தில் இயங்கிவரும் மகத் பல்கலைக்கழகம் 32 கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ததைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். #Bihar #StudentsProtest
    பாட்னா:

    பீகார் மாநிலம் புத்தகயா பகுதியில் இயங்கிவரும் மகத் பல்கலைக்கழகத்தின் இணைப்பில் இல்லாத கல்லூரிகளின் தேர்வு முடிவுகளை வெளியிட பீகார் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், தற்போது அக்டோபர் 1 முதல் துவங்க இருக்கும் தேர்விலும் இணைப்பில் இல்லாத கல்லூரிகள் பங்கு பெற மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம் சுமார் 86 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகம் மறுஆய்வு செய்யுமாறு மாணவர் அமைப்பினர் மற்றும் பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது.



    இந்நிலையில், மகத் பல்கலைக்கழகத்தினால் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 32 கல்லூரிகளின் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது, பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும், அரசுக்கும் கண்டனம் தெரிவித்த கல்லூரி மாணவர்கள் ஆங்காங்கே வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த போராட்டத்தின் போது பீகார் அரசு பேருந்து தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியின் பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளது.

    மாணவர்கள் தங்கள் வாழ்வின் முக்கிய பகுதியான தேர்வுக்காக போராடும் நிலையில், வன்முறையை கையில் எடுத்து இருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. #Bihar #StudentsProtest
    ×