search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sivakasi"

    சிவகாசியில் நிலம் விற்பதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

    விருதுநகர்:

    சிவகாசி விஜயகருக்கல் குளத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 54). இவர் தன்னிடம் 5 ஏக்கர் நிலம் இருப்பதாகவும், ஏக்கர் ரூ.3 லட்சம் என்றும் கூறியுள்ளார்.

    இதனை கேள்விப்பட்ட திருத்தங்கல் ராமராஜ் (42) நிலத்தை வாங்க ஆசைப்பட்டு ரூ.15 லட்சம் கொடுத்தாராம். பணத்தை பெற்றுக் கொண்ட ரவிச்சந் திரன், நிலத்தை பதிவு செய்து கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார்.

    4 ஆண்டுகளாக அவர் தன்னை மோசடி செய்து விட்டதாக கூறி திருத்தங்கல் போலீசில் ராமராஜ் புகார் செய்தார்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து பணம் மோசடி செய்ததாக ரவிச்சந்திரனை போலீசார் கைது செய்தனர்.

    சிவகாசி அருகே பட்டாசு ஆலைகளை திறக்க கோரி கிராம மக்கள் நடைபயணம் மேற்கொண்டு அதிகாரியிடம் மனு அளித்தனர். #FireCrackers

    சிவகாசி:

    பட்டாசு உற்பத்தியின் மையமாக விளங்கும் சிவகாசியில் பட்டாசு தொழிலை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். சுற்றுச்சூழலை பாதுகாக்க பட்டாசு உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    இதனை தளர்த்தக் கோரி பட்டாசு உரிமையாளர்கள் கடந்த ஒருமாத காலமாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக சிவகாசி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் லட்சக் கணக்கான தொழிலாளர்கள் வேலையில்லாமல் வருமானமின்றி தவித்து வருகின்றனர்.

    பட்டாசு ஆலைகளை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகாசி அருகே உள்ள ஆனையூர், அய்யம்பட்டி, லட்சுமியாபுரம், ரிசர்வ்லைன், பாரைப்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் இன்று நடைபயணம் மேற்கொண்டனர்.

    இவர்கள் ஆனையூரில் இருந்து சிவகாசிக்கு சென்றனர். அங்கு தாசில்தார், வருவாய் அதிகாரியை சந்தித்து பட்டாசு ஆலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனு கொடுத்தனர்.

    சிவகாசி அருகே பயிர்கள் கருகியதால் வேதனை அடைந்த விவசாயி மாரடைப்பால் பரிதாபமாக இறந்தார்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள லட்சுமியாபுரத்தைச் சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது70), விவசாயி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பலரிடம் கடன் வாங்கி தனது நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தார்.

    பயிர் செழித்து வளர்ந்து அறுவடை செய்ய இன்னும் சில வாரங்கள் இருந்த நிலையில் திடீரென்று “அமெரிக்கன் புழு நோய்” தாக்கியது. இதில் பயிர்கள் சேதமடைந்தது.

    பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தும் பலனில்லை. இதனால் வேதனையில் இருந்த சுப்புராஜ் கடந்த சில நாட்களாக வீட்டுக்கு செல்லாமல் தோட்டத்திலேயே தங்கி இருந்தார்.

    இந்த நிலையில் சேதம் அடைந்த பயிர்களை பார்த்து வருந்திய சுப்புராஜூக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவர் தனது நிலத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சுப்ரீம்கோர்ட்டு விதித்த கடும் நிபந்தனைகளால் சிவகாசி பகுதியில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் நேற்று முதல் மூடப்பட்டன. இதனால் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். #SC #SivakasiFireworks
    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்க (டான்பாமா) பொதுச்செயலாளர் மாரியப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் 1,000-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளும் இந்தியாவில் மற்ற பகுதியில் 500-க்கும் மேற்பட்ட ஆலைகளும் உள்ளன. சுப்ரீம் கோர்ட்டு விதித்த கடும் நிபந்தனைகள் எதிரொலியாக தற்போது எந்த பட்டாசு ஆலையும் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தீர்ப்பில் பட்டாசு வெடிக்க, விற்பனை செய்ய தடை இல்லை என்று கூறிவிட்டு, பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த நிபந்தனைகள் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதவை.

    பேரியம் நைட்ரேட் என்ற வேதிப்பொருளை பட்டாசு உற்பத்தியில் பயன்படுத்தக்கூடாது என்று கூறி உள்ளது. ஆனால் அது இல்லாமல் பட்டாசு தயாரிக்க முடியாது. அப்படி தயாரித்தால் அது வெளிச்சம் கொடுக்காத பட்டாசாக இருக்கும்.

    ஒலி அளவு வரையறைக்கு உட்பட்டுதான் சரவெடிகளை தயாரித்து வந்தோம். ஆனால் தற்போது சுப்ரீம் கோர்ட்டு சரவெடிக்கு தடை விதித்துள்ளது.

    பசுமை பட்டாசு என்ன? என்பது குறித்து எங்களுக்கு தெரியாது. பட்டாசு வெடிக்கும்போது ஏற்படும் புகையை குறைக்க தேவையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம். அதற்கான ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதன் முடிவு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் தான் எங்களுக்கு கிடைக்கும்.

    அதன்பின்னர் தான் பசுமை பட்டாசு குறித்து முடிவு செய்யப்படும். 2 மணி நேரம் தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற தீர்ப்பு உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இல்லை.



    சுப்ரீம் கோர்ட்டு விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி பட்டாசுகளை உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் ஆலைகளை நாங்களே முன்வந்து மூட முடிவு செய்துள்ளோம். இதுகுறித்து அரசுக்கும், தொழிலாளர் நலத்துறைக்கும் கடிதம் மூலம் தெரிவிக்க உள்ளோம்.

    சுற்றுச்சூழல் விதியில் இருந்து பட்டாசுகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே இந்த தொழில் காப்பாற்றப்படும். எங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு எடுத்துக்கூற முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த தீபாவளி தினத்தன்று நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 2,000-க்கும் அதிகமானவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும். நேரக்கட்டுப்பாடு காரணமாக இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு விற்பனை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோடிக்கணக்கில் வங்கிகளில் கடன் வாங்கி தொழில் செய்த நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். கடந்த 3 வருடங்களில் பட்டாசு தொடர்பான வழக்குக்கு மட்டும் பல கோடி ரூபாய் செலவு செய்துள்ளோம்.

    மத்திய அரசு இந்த தொழிலுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது. அதனால் மத்திய அரசு மூலம் தான் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். இதுதொடர்பான வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 11-ந்தேதி நடக்க இருக்கிறது. இதில் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த முடிவை தொடர்ந்து பட்டாசு ஆலைகள் அனைத்தும் மூடப்பட்டன. இந்த முடிவால் சிவகாசி பகுதியில் பட்டாசு தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் இருக்கும் சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக பட்டாசு ஆலை உரிமையாளர்கள் வேதனை தெரிவித்தனர். #SC #SivakasiFireworks
    சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் 5 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்க கோரி மனு கொடுத்துள்ளதாக தாசில்தார் பரமானந்தராஜா தெரிவித்துள்ளார்.
    சிவகாசி:

    கடந்த 1.9.2018 அன்று துணை வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 1,16,756 ஆண் வாக்காளர்களும், 1,21,686 பெண் வாக்காளர்களும், 22 திருநங்கைகளும் இருந்தனர். இந்த நிலையில் 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதை தொடர்ந்து சிவகாசியில் 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமில் ஆர்வமுடன் கலந்து கொண்ட 18 வயது நிரம்பிய இளைஞர்கள் 4,743 பேர் நேரடியாகவும், 332 பேர் ஆன்-லைன் மூலமாகவும் தங்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க கோரி மனு செய்து இருந்தனர். இந்த மனுக்களை தேர்தல் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். தகுதியானவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு அடுத்த ஆண்டு வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறும். இதனை சிவகாசி தாசில்தார் பரமானந்தராஜா தெரிவித்தார்.

    அவர் மேலும் கூறியதாவது:-

    சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் வாக்காளர் சரி பார்க்கும் பணி வாக்குச்சாவடி நிலையஅலுவலர் மூலம் நடத்தப்பட்டது. இதில் 3,260 பேர் இறந்துவிட்டது தெரியவந்துள்ளது. இவர்கள் குறித்த தகவல் சிவகாசி தாலுகா அலுவலகத்தில் உள்ள அறிவிப்பு பலகையிலும், ஆர்.டி.ஓ. அலுவலகத்திலும், சிவகாசி, திருத்தங்கல் நகராட்சி அலுவலகத்திலும் வைக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இறந்தவர்கள் என்று கண்டறியப்பட்டு அறிவிக்கப்பட்ட தகவலில் யாருக்காவது ஆட்சேபனை இருந்தால் அவர்கள் தாலுகா அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவில் வருகிற 29-ந்தேதிக்குள் தெரிவிக்கலாம்.

    அதே போல் 18 வயது நிரம்பியவர்கள் வருகிற 31-ந் தேதிக்குள் வாக்காளர் பட்டியலில் தங்களதுபெயர்களை சேர்க்க கோரி மனு கொடுக்கலாம். இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார்.
    சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.#SivakasiFireworks #FireworksExplosion
    சிவகாசி:

    சிவகாசி அருகே உள்ள காக்கிவாடன்பட்டியில் செயல்படும் ஒரு பட்டாசு ஆலையில் இன்று காலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. சக்திவாய்ந்த பட்டாசுகள் வெடித்து நாலாபுறமும் சிதறியதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. விபத்து ஏற்பட்டதும் தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே வந்தனர். சிலர் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

    தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் அங்கு சென்று தீயை அணைக்க போராடினர். தீயில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 2 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், படுகாயம் அடைந்து மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த பொன்னுசாமி என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து, பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. விபத்து தொடர்பாக, பட்டாசு ஆலை உரிமையாளர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #SivakasiFireworks #FireworksExplosion
    சிவகாசியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்.
    சிவகாசி:

    ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட விரிப்புகள், தட்டுகள், கோப்பை, உறிஞ்சு குழல்கள், தூக்குபைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், டம்ளர், கொடிகள் உள்ளிட்ட பல பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்களுக்கு எடுத்து சொல்லும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று காலை சிவகாசியில் விழிப்புணர்வு பிரசார பேரணி நடைபெற்றது. கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார்.

    பேரணி அண்ணா காய்கறி மார்க்கெட்டில் தொடங்கி ரதவீதி வழியாக பஸ் நிலையத்தை அடைந்தது. இதில் மகளிர் சுயஉதவிக்குழுவினர், பள்ளி மாணவர்கள், சமூக நல அமைப்புகளை சேர்ந்தவர்கள், தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷமிட்டபடி சென்றனர். அண்ணா காய்கறி மார்க்கெட்டுக்கு வந்த பொதுமக்களுக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி துணிப் பைகளை வழங்கினார்.

    முன்னதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். அமைச்சர், உறுதிமொழியை வாசிக்க, அனைவரும் அதை திருப்பிக் கூறினர். பின்னர் பஸ் நிலையத்துக்கு வந்த அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை அரசு மற்றும் தனியார் பஸ்களின் முன்பக்க கண்ணாடிகளில் ஒட்டினார்.

    இந்த நிகழ்ச்சியில் சந்திர பிரபா எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அதிகாரி உதய குமார், திட்ட அதிகாரி சுரேஷ் மற்றும் சிவகாசி, திருத்தங்கல் நகராட்சி அதிகாரிகள், சிவகாசி ஒன்றிய அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    சிவகாசியில் மதுபானம் குடித்து 4 பேர் உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பு முனையாக, உயிரிழந்தவரின் அக்காள் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #Sivakasi #PoisoningDeaths
    சிவகாசி:

    சிவகாசியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று மதுபானம் வாங்கிக் குடித்த சிலருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அனைவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டனர். இதில், காமராஜர் காலனியை சேர்ந்த கணேசன் (21), வேலாயுத ரஸ்தாவை சேர்ந்த சையது இப்ராகிம்ஷா என்கிற ஜம்பு(22), லிங்காபுரம் காலனி கவுதம்(15), முத்தாட்சிமடத்தை சேர்ந்த முருகன் ஆகியோர் உயிரிழந்தார்கள். மேலும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    2 கடைகளில் மது வாங்கி குடித்தவர்கள் பாதிக்கப்பட்டதால் காலாவதியான மது அங்கு விற்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அந்த இரு கடைகளும் உடனடியாக மூடப்பட்டன. அதேசமயம், மதுவில் யாராவது விஷம் கலந்து கொடுத்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை தொடங்கியது.



    போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கோழிக்கறியில் விஷம் கலந்துகொடுத்திருப்பது தெரியவந்துள்ளது. முருகனின் அக்கா வள்ளியும் அதே பகுதியைச் சேர்ந்த அச்சக அதிபர் செல்வமும் நெருங்கி பழகியதாகவும், அதனை முருகன் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த வள்ளியும் செல்வமும் சேர்ந்து முருகனை தீர்த்துக் கட்ட கோழிக்கறியில் விஷம் கலந்து கொடுத்துள்ளனர். அதனை வாங்கிக்கொண்டு நண்பர்களுடன் மது அருந்தும் போது சாப்பிட்டதால் முருகன் உள்ளிட்ட 4 பேரும் இறந்திருப்பதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வள்ளியையும் செல்வத்தையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Sivakasi #PoisoningDeaths

    சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உடல் கருகிய 4 தொழிலாளிகள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியை அடுத்துள்ள காளையார் குறிச்சி கிராமத்தில் கனகபிரபு என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது.

    இங்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர்.

    இன்று காலை வழக்கம் போல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆலையில் உள்ள ஒரு அறையில் ராக்கெட் வெடிக்கு மருந்து நிரப்பும் பணி நடைபெற்று வந்தது.

    அப்போது மருந்துகளில் உராய்வு ஏற்பட்டு வெடிக்கத் தொடங்கியது. சிறிது நேரத்தில் தீ அறை முழுவதும் பரவியது. அங்கிருந்த பட்டாசுகளில் தீ பரவி பயங்கர சத்தத்துடன் வெடித்தன.

    இந்த விபத்தில் அந்த அறையில் இருந்த தொழிலாளர்கள் திருத்தங்கலைச் சேர்ந்த ராமசாமி (வயது 67), சுக்கிரவார்பட்டி மாரி பாண்டி (47), காளையார் குறிச்சி முருகேசன் (47), எரிச்சநத்தம் அழகுபாண்டி (26) ஆகிய 4 பேர் உடல் கருகினர்.

    தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் மற்றும் எம்.புதுப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீ விபத்தில் காயமடைந்த 4 பேரையும் மீட்டனர். 90 சதவீதத்திற்கும் மேல் காயமடைந்த இவர்கள் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    சிவகாசி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியானார்கள். இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.
    சிவகாசி:

    சிவகாசி அருகே உள்ள கண்டியாபுரத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் கார்த்தி (வயது22). பூசாரிபட்டியை சேர்ந்த கருப்பசாமி மகன் முத்துராஜ்(21).

    இவர்கள் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் இன்று காலை வெம்பக் கோட்டையில் இருந்து புறப்பட்டனர்.

    வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகம் அருகே வந்தபோது எழுவன்பச்சேரியைச் சேர்ந்த வெங்கடேஷ் (22) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். எதிர்பாராத விதமாக 2 மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

    இந்த விபத்தில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த கார்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த முத்துராஜ், வெங்கடேசை சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி முத்துராஜ் பரிதாபமாக இறந்தார். ஊயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள வெங்கடேசுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    கண்டியாபுரத்தில் உள்ள கண்டியாரம்மன் கோவில் திருவிழா இன்று நடைபெறுகிறது. விழாவையொட்டி கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. அந்த கிராமத்தைச் சேர்ந்த 2 வாலிபர்கள் விபத்தில் பலியானது அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.#tamilnews
    சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    விருதுநகர்:

    சிவகாசி அருகே உள்ள இடையன் குளத்தில் குமரேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது.

    நேற்று இங்கு ஊழியர்கள் பணி முடிந்து அலுமினிய பவுடரை அப்படியே போட்டுவிட்டு சென்று விட்டனர்.

    இன்று காலை 6 மணியளவில் அலுமினிய பவுடர் தீப்பிடித்துக் கொண்டது. இதில் அந்த அறை முழுவதும் சேதமடைந்தது.

    அதிகாலை நேரம் என்பதால் ஊழியர்கள் யாரும் பணிக்கு வரவில்லை. இதனால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

    பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து இது குறித்து மாரனேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    ×