search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "released"

    முறையான விசா இல்லாமல் தங்கியிருந்ததால் உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட உக்ரைன் மாடல் அழகி இன்று விடுதலை செய்யப்பட உள்ளார். #UkrainianModel #UPModelRelease
    கோரக்பூர்:

    உக்ரைனைச் சேர்ந்த மாடல் அழகி தாரியா மோல்சா (வயது 20). இவர் முறையான விசா எதுவும் இன்றி நேபாளம் வழியாக எல்லையை கடந்து இந்தியாவிற்கு வந்துள்ளார். பின்னர், உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருந்தார். இதுபற்றி தகவல் அறிந்த சிறப்பு அதிரடிப்படை போலீசார் கடந்த ஏப்ரல் 3-ம்தேதி கைது செய்தனர். அவரிடம் போலியான டிரைவிங் லைசென்ஸ் மட்டும் இருந்தது.

    அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு பின்னர் கோரக்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் உளவு வேலை பார்ப்பதற்கு அனுப்பி வைக்கப்பட்ட நபராக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக இந்தியாவில் உள்ள அவரது நண்பர்கள் குறித்து விசாரிக்கப்பட்டது.

    இதுபோன்ற காரணங்களால் அவரது ஜாமீன் மனுவை கோரக்பூர் நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து கடந்த வாரம் ஜாமீன் பெற்றார். இதையடுத்து அவரை விடுதலை செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின.

    இந்நிலையில், தாரியாவை விடுதலை செய்வதற்கான உத்தரவை கோரக்பூர் நீதிமன்றம் நேற்று பிறப்பித்தது. கோர்ட் உத்தரவு கோரக்பூர் சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி இன்று அவர் விடுதலை செய்யப்படுவதாக சிறை கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.  #UkrainianModel #UPModelRelease
    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனைக் கைதிகள் 67 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். #MGRcentenaryfunction #TNPrisonersReleased
    சென்னை:

    முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக ஆளும் அதிமுக அரசு பல்வேறு நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் என ஏற்பாடு செய்து எம்.ஜி.ஆரின் புகழ்பாடியது.



    அவ்வகையில், எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய அரசு முடிவு செய்தது. அதன்படி, 25.02.18 அன்று 10 ஆண்டுகள் நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யவுள்ளதாகவும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அரசு அறிவித்தது.

    இதையடுத்து தமிழகம் முழுவதிலும் உள்ள ஆயுள் கைதிகள் கணக்கெடுக்கப்பட்டது. அதில் முதற்கட்டமாக விடுதலை செய்யப்பட உள்ள 67 கைதிகள் தேர்வு செய்யப்பட்டு அந்த பட்டியலை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. நன்னடத்தை குழு பரிந்துரையின்படி இந்த 67 பேரை விடுவிக்கவுள்ளதாகவும் கூறியிருந்தது.

    அதன்படி, முதற்கட்டமாக 67 ஆயுள் தண்டனைகளும் இன்று புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். அவர்களின் மறுவாழ்விற்காக அனைவருக்கும் பெட்ரோல் பங்குகளில் மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் வேலை வழங்க சிறைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த பணியில் சேருவதற்கு ஆர்வம் இருந்தால் பின்னர் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #MGRcentenaryfunction #TNPrisonersReleased
    தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண்களை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது. #TNEA2018 #TNEARandomNumbers
    சென்னை:

    தமிழகத்தில் இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே மாதம் 3ம் தேதி தொடங்கி நடைபெற்றது. மாணவர்களின் வசதிக்காக அனைத்து மாவட்டங்களிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.



    இந்நிலையில், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண்கள் இன்று வெளியிடப்பட்டன. அண்ணா பல்லைகக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில், விண்ணப்பதாரர்களுக்கான ரேண்டம் எண்களை உயர்கல்வித்துறை  அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார். நிகழ்ச்சியில் முதன்மை செயலர் சுனில்பாலிவால், பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா ஆகியோரும் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பழகன், பொறியியல் படிப்புகளுக்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஜூன் 8ம் தேதி முதல் முதல் 14ம் தேதி வரை வரைசான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்றார். இந்த ஆண்டு டிடி மூலம் 270 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர் என்றும் அமைச்சர் கூறினார்.  #TNEA2018 #TNEARandomNumbers

    அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் உடல்நிலை தேறியதையடுத்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். #GeorgeHWBush
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபுள்யு புஷ் மைனே மாநிலத்தில் வசித்து வருகிறார். 93 வயதான ஜார்ஜ் புஷ்சுக்கு குறை ரத்த அழுத்தம் ஏற்பட்டதையடுத்து மிகவும் சோர்வடைந்தார். இதையடுத்து கடந்த மாத இறுதியில் தெற்கு மைனே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. உறவினர்கள் உடன் இருந்து அவரை கவனித்து வந்தனர். ஜார்ஜ் புஷ் குணமடைய வேண்டி பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை பதிவு செய்தனர்.



    சுமார் ஒரு வார சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். தனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மற்றும் குணமடையவேண்டி பிரார்த்தனை செய்த அனைவருக்கும் ஜார்ஜ் புஷ் நன்றி தெரிவித்திருப்பதாக அவரது குடும்ப செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

    இதேபோல் கடந்த ஏப்ரல் மாதமும் ஜார்ஜ் புஷ்சுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ரத்தத்தில் நோய்த்தொற்று ஏற்பட்டதையடுத்து இரண்டு வார காலம் டெக்சாஸ் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.  #GeorgeHWBush
    காவிரி மேலாண்மை ஆணையம் அரசிதழில் வெளியானது விவசாயிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #EdappadiPalanisamy #CaveryManagement
    சென்னை:

    காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை மத்திய அரசு அமைத்து அரசிதழில் வெளியிட்டது தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய நீர்வள ஆதாரம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகளை அமைத்து, அதை மத்திய அரசின் அரசிதழில் இன்று (நேற்று) வெளியிட்டுள்ளது. இது மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் செயல்பட்டு வரும் அவருடைய அரசிற்கும், தமிழ்நாட்டு விவசாய பெருங்குடி மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

    தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கும் காவிரி நதி நீரை பகிர்ந்து கொள்வது பல ஆண்டுகளாகவும், குறிப்பாக 1970-ம் ஆண்டிலிருந்தும் தமிழ்நாட்டிற்கும், கர்நாடகத்திற்கும் இடையேயுள்ள நீண்ட நாள் பிரச்சினை ஆகும்.

    ஜெயலலிதா மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளாலும், சட்டப் போராட்டத்தினாலும் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தலையீட்டாலும், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை மத்திய அரசிதழில் 19.2.2013 அன்று வெளியிடப்பட்டு செயலாக்கத்திற்கு வந்தது.

    காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை மத்திய அரசிதழில் கொண்டு வந்ததுதான் தன்னுடைய 30 ஆண்டுகால அரசியல் வாழ்வில், தான் செய்த சாதனைகளில் முதன்மையானதாக கருதுவதாகவும், தான் பல ஆண்டுகள் பொது வாழ்வில் இருந்து கஷ்டப்பட்டதற்கு இந்த வெற்றிதான் தனக்கு முழு நிறைவைத் தந்திருக்கிறது என்றும் ஜெயலலிதா ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மனம் நெகிழ்ந்து பேசினார் என்பதைக் கொண்டு காவிரி நதிநீர் பிரச்சினையில் அவருக்கு இருந்த உள்ளார்ந்த அக்கறையும், ஈடுபாடும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாக புரிந்தது.

    விவசாயிகளின் உரிமையை நிலைநாட்ட மெரினா கடற்கரையில் தொடர்ந்து 80 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து போராடிய ஜெயலலிதாவின் தியாகம் இத்தருணத்தில் நினைவு கூறத்தக்கதாகும்.

    உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த சிவில் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டு 16.2.2018 அன்று இறுதியாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில், காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த இறுதி ஆணை மற்றும் அதனை மாற்றியமைத்த உச்சநீதிமன்றத்தின் 16.2.2018 அன்று அளிக்கப்பட்ட தீர்ப்பின்படி ஒரு செயலாக்க திட்டத்தை மத்திய அரசு 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டுமெனவும், காலக்கெடு ஏதும் நீட்டிக்கப்பட மாட்டாது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதனைத் தொடர்ந்து நான் பிரதமரிடம் நேரிலும் மற்றும் கடிதங்கள் வாயிலாகவும் இவ்வமைப்புகளை உடனே அமைக்க வலியுறுத்தினேன். பாராளுமன்ற கூட்டத்தொடர் 5.3.2018 அன்று தொடங்கி 6.4.2018 வரை நடைபெற்றது. இக்கூட்டத்தொடரில், தமிழ்நாட்டைச் சேர்ந்த அ.தி.மு.க. எம்.பி.க்கள் செயலாக்க திட்டத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்கக் கோரி தொடர்ந்து வலியுறுத்தியதால் பாராளுமன்ற நடவடிக்கைகள் 22 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    உச்சநீதிமன்றம் பிறப்பித்த காலக்கெடு முடிவடையும் நிலை இருந்தபோது, 29.3.2018 அன்று மூத்த அமைச்சர்கள், தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர், தலைமைச் செயலாளர் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோருடன் தமிழ்நாட்டின் சார்பில் எடுக்கப்பட வேண்டிய மேல்நடவடிக்கை குறித்து நான் விரிவாக விவாதித்தேன்.

    அக்கூட்டத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை மத்திய அரசின் மீது உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய வேண்டும் என முடிவெடுக்கப்பட்டு, 31.3.2018 அன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மத்திய அரசின் மீது உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

    மத்திய அரசும் கால அவகாசம் கேட்டு ஒரு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம் 14.5.2018 அன்று, மத்திய நீர்வள ஆதாரம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சக செயலாளர் ஒரு வரைவுத் திட்டத்துடன் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி, 14.5.2018 அன்று, மத்திய அரசின் நீர்வள ஆதாரம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சக செயலாளர், உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, மத்திய அரசு தயாரித்துள்ள வரைவு திட்டத்தினை தாக்கல் செய்தார். எனது அறிவுரையின் பேரில், 16.5.2018 அன்று தமிழ்நாடு அரசு சார்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞர்கள் காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையில், குறிப்பிட்டபடி அனைத்து அதிகாரங்களும் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகளை மத்திய அரசு உடனடியாக அமைத்து செயல்படுத்த வேண்டும் என தகுந்த ஆதாரங்களுடன் கடுமையாக வாதிட்டனர்.

    இதனை அடுத்து, 18.5.2018 அன்று மத்திய அரசு தாக்கல் செய்த திருத்திய வரைவு திட்டத்தின் மீது உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பில், மத்திய அரசு தாக்கல் செய்த திருத்திய வரைவு திட்டம், நடுவர் மன்ற இறுதி ஆணை / கட்டளைகள்படியும், அதனை திருத்தியமைத்து வழங்கிய உச்சநீதிமன்ற தீர்ப்பின்படியும் உள்ளது எனவும், 1956-ம் ஆண்டைய பன்மாநில நதிநீர்த் தாவா சட்டப்பிரிவு 6 ஏ 4 ஒத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்று, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைமையிடம் டெல்லியிலும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் தலைமையிடம் பெங்களுரூவிலும் செயல்படும் எனவும் இத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைபடுத்தும் குழு ஆகிய அமைப்புகளை அமைத்து, மத்திய அரசிதழில் வெளியிட்டு பருவ மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னர் செயலாக்கத்திற்கு கொண்டுவர வேண்டி, பிரதமருக்கும், மத்திய நீர்வளத்துறை மந்திரிக்கும் 26.5.2018 அன்று என்னால் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

    இவ்வாறு ஜெயலலிதாவின் வழியில் செயல்பட்டு வரும் அவருடைய அரசு பல தொடர் நடவடிக்கைகள் எடுத்ததன் வாயிலாக இன்று (நேற்று) காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகள் மத்திய அரசால் அமைக்கப்பட்டு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

    காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை 19.2.2013 அன்று மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகு, அதனை சிறப்பாக செயல்படுத்துவதற்கு ஜெயலலிதா மற்றும் அவர் வழியில் அரசு மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளாலும் மற்றும் சட்ட போராட்டங்களாலும், உச்சநீதிமன்றம், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை சற்று மாற்றியமைத்து 16.2.2018 அன்று பிறப்பித்த தீர்ப்பினை செயல்படுத்துவதற்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகளை மத்திய அரசு அமைத்து அதனை மத்திய அரசிதழில் 1.6.2018 அன்று வெளியிட்டது, ஜெயலலிதா வழியில் நடைபெறும் தமிழ்நாடு அரசிற்கும், விவசாயப் பெருங்குடி மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

    இந்த உத்தரவுகளினால், தமிழ்நாட்டின் உரிமைகள் மற்றும் விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரம் மீட்டு எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் எனது மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதன் முறையாக பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு இந்த ஆண்டு அரசு பொதுத்தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுகிறது.
    சென்னை:

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதன் முறையாக பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு அரசு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 பள்ளி மாணவ-மாணவிகளும், 1,753 தனித்தேர்வர்களும் எழுதினர். மொத்தத்தில் 8 லட்சத்து 63 ஆயிரத்து 668 பேர் தேர்வெழுதினர்.



    மேலும், வேலூர், கடலூர், புதுக்கோட்டை, கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளில் 62 ஆண் கைதிகள் புழல் சிறையில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தில் தேர்வெழுதினர்.

    மாணவ-மாணவிகள் காப்பி அடிப்பதை தடுக்க 4,000 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டிருந்தது.

    விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி முடிவடைந்து உள்ளது. இதையடுத்து பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது.

    இந்த தேர்வு முடிவுகளை (www.tnresults.nic.in, www.dge.tn.nic.in, www.dge2.tn.nic.in) என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். 
    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு இன்று வெளியிடப்படுகிறது. மறுகூட்டலுக்கு 24-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார். #SSLC #ExamResult
    சென்னை:

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மார்ச் மாதம் 16-ந்தேதி முதல் ஏப்ரல் 20-ந்தேதி வரை நடந்தது. இந்த தேர்வை 9 லட்சத்து 64 ஆயிரத்து 491 மாணவ-மாணவிகளும், தனித்தேர்வர்கள் 36 ஆயிரத்து 649 பேரும் எழுதினார்கள். தேர்வு முடிவு இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு இணையதளங்கள் மூலம் வெளியிடப்படுகிறது.

    www.tnr-esults.nic.in , www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் அறிந்துகொள்ளலாம்.

    மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி மூலமும் தேர்வு முடிவு அனுப்பப்படும்.

    28-ந்தேதி முதல் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி தலைமையாசிரியர்கள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வுமைய தலைமையாசிரியர்கள் வழியாகவும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம். 28-ந்தேதி முதல் www.dge.tn.nic.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

    விடைத்தாள்களின் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 24-ந்தேதி முதல் 26-ந்தேதி மாலை 5.45 மணி வரை பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வுமையம் வழியாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.

    துணைப் பொதுத்தேர்வு ஜூன் 28-ந்தேதி முதல் நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும்.

    இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரித்துள்ளார். 
    சென்னை மெரினா கடற்கரையில் இன்று தடையை மீறி நினைவேந்தல் பேரணி செல்ல முயன்று கைதான வைகோ, திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். #MarinaProtest #TNPolice #May18TamilGenocide

    சென்னை:

    இலங்கையில் நடந்த இனப்படுகொலை சம்பவத்தை நினைவுகூரும் வகையில் மெரினா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்ச்சியில் 13 இயக்கங்கள் இன்று பங்கேற்கப் போவதாக அறிவித்திருந்தன.

    ஆனால், சென்னை மெரினா கடற்கரை பகுதியில் போராட்டமோ, பொதுக்கூட்டமோ நடத்துவதற்கு ஐகோர்ட்டு உத்தரவின்படி போலீசார் அனுமதி கொடுப்பது கிடையாது. இதுதொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நினைவேந்தல் நிகழ்ச்சி எனும் பெயரில் தடையை மீறி ஒன்று கூடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தது. 

    இதற்கிடையே, மெரினா மற்றும் சேப்பாக்கம் பகுதிகளில் 1,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். மெரினாவில் பல்வேறு அமைப்பினர் நுழையாமல் இருக்க போலீசார் ரோந்தும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு மத்தியில் பாரதி சாலை முதல் கண்ணகி சாலை வரை பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி தொண்டர்கள் பேரணியாக செல்ல வந்தனர். இந்த பேரணியில் வைகோ, திருமுருகன் காந்தி மற்றும் தெலகான் பாகவி ஆகியோரும் பங்கேற்றனர்.



    நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்களை கைதாகுமாறு போலீசார் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து, தடையை மீறி மெரினா செல்ல முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர். 

    இந்நிலையில், தடையை மீறி நினைவேந்தல் பேரணி செல்ல முயன்று கைதான வைகோ, திருமுருகன் காந்தி உள்ளிட்ட அனைவரையும் போலீசார் விடுவித்துள்ளனர். #MarinaProtest #TNPolice #May18TamilGenocide
    குண்டர் சட்டத்தில் கைதானவரை தவறுதலாக விடுதலை செய்த புழல் சிறை வார்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதில் முறைகேடு நடந்துள்ளதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    செங்குன்றம்:

    சென்னை தண்டையார்பேட்டை செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரவி (வயது 26). இவர் கடந்த ஆண்டு ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின்படி அவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    ஆனால் அவர் தன்னை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தது செல்லாது என்று சென்னை எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்த எழும்பூர் கோர்ட்டு, ரவியை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தது சரியே என உத்தரவிட்டது. இதற்கான உத்தரவு நகல் புழல் சிறைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

    கடந்த டிசம்பர் மாதம் 28-ந் தேதி புழல் சிறையில் கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த சேகர் அந்த உத்தரவு நகலை சிறை வார்டன் பிரதீப்(26) என்பவரிடம் கொடுத்தார். ரவியின் குண்டர் தடுப்பு சட்டம் உத்தரவை உறுதி செய்து பதிவேட்டில் எழுதும்படியும் கூறினார்.

    2 மாதங்களுக்கு முன்பு கூடுதல் கண்காணிப்பாளர் சேகர் ஓய்வுபெற்றுவிட்டார். இந்தநிலையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் இருக்க வேண்டிய ரவி சிறையில் இருந்து விடுதலையாகி வெளியில் சுற்றிக்கொண்டிருப்பதை உளவுத்துறை போலீசார் கண்டுபிடித்தனர். இதுபற்றி சென்னை போலீஸ் கமிஷனருக்கு தகவல் தெரிவித்தனர்.

    விடுதலையான ரவி

    குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதான ரவி எப்படி விடுதலை ஆனார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயில் உத்தரவை சரியாக படிக்காமல் வார்டன் பிரதீப் வேறு கைதிக்கு பதில் ரவியை தவறுதலாக விடுதலை செய்தாரா? அல்லது ரவியின் உறவினர்களிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு முறைகேடாக செயல்பட்டாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையில் சிறைத்துறை அதிகாரிகளால் சிறை வார்டன் பிரதீப் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் தலைமறைவாக உள்ள ரவியை போலீசார் தேடி வருகின்றனர். 
    நாளை (புதன் கிழமை) பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது. #ExamResult #PlusTwo #Result
    சென்னை:

    தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு மார்ச் 1-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந் தேதி முடிவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 6 ஆயிரத்து 903 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.

    அவர்களில் மாணவிகள் 4 லட்சத்து 63 ஆயிரத்து 758 பேர். மாணவர்கள் 4 லட்சத்து 3 ஆயிரத்து 176 பேர். வழக்கம் போல மாணவிகள் தான் அதிகம். தனி தேர்வர்கள் 40 ஆயிரத்து 686 பேர்.

    அனைத்து மாணவர்களும் தேர்வு எழுத தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2 ஆயிரத்து 942 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தனி தேர்வர்களுடன் சேர்த்து 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் தேர்வு எழுதினார்கள்.

    விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்து, மதிப்பெண்கள் கம்ப்யூட்டர் மூலம் சான்றிதழில் பதிவு செய்யும் பணி நடந்தது.

    மீண்டும் மதிப்பெண்களை சரிபார்க்கும் பணி நடைபெற்றது. இப்போது அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டன. நாளை (புதன் கிழமை) பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது.

    முதல் முதலாக தேர்வு முடிவு வெளியிடும் தேதியை கடந்த சில மாதங்களுக்கு முன்பே பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். அதன்படி தேர்வு முடிவு நாளை வெளியிடப்படுகிறது.

    இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், www.dge.tn.nic.in ,www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகளை பதிவு இறக்கம் செய்துகொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    அனைத்து தரப்பினரும் மேற்கண்ட இணையதளத்திற்கு சென்று தேர்வு முடிவை தெரிந்துகொள்ளலாம்.  #ExamResult #PlusTwo #Result
    ஓரினச்சேர்க்கை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மலேசியா நாட்டின் முக்கிய அரசியல் தலைவர் அன்வர் இப்ராகிம் பொதுமன்னிப்பு அடிப்படையில் 15-ம் தேதி விடுதலையாகிறார். #MalaysianleaderAnwarrelease
    கோலாலம்பூர்:

    மலேசியாவில் நடந்த பொதுத்தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. 92 வயதான மஹாதிர் முகம்மது நேற்று பிரதமராக பொறுப்பேற்றார். இதன் மூலம் உலகின் மிக வயதான பிரதமர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார்.

    ஊழல் குற்றச்சாட்டு மற்றும் ஓரினச்சேர்க்கை புகார் தொடர்பாக கடந்த 2015-ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் துணை பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிமை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் மஹாதிர் கூறியிருந்தார். அதன்படி, அன்வரை விடுவிப்பது தொடர்பாக இன்று மஹாதிர் தலைமையில் அந்நாட்டு மன்னர் சுல்தான் முகம்மதுவை சந்தித்து முக்கிய கட்சித்தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    பிரதமர் மஹாதிரின் கோரிக்கையை ஏற்ற மன்னர், அன்வர் இப்ராஹிமுக்கு பொதுமன்னிப்பு வழங்க சம்மதித்துள்ளார். இதனை மஹாதிர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அன்வர் இப்ராஹிமின் மக்கள் நீதி கட்சி மற்றும் மஹாதிரின் பிஎச் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

    அன்வர் இப்ராஹிமின் மனைவி வான் அஸிஸா வான் இஸ்மாயில் துணை பிரதமராக பதவியேற்றுள்ளார். அன்வர் இப்ராஹிம் விரைவில் சிறையிலிருந்து வெளிவரும் பட்சத்தில் முக்கிய பொறுப்பு அவருக்கு அளிக்க மஹாதிர் தயாராக உள்ளதாக தெரிகிறது.

    இந்நிலையில், மன்னர் அளித்த பொதுமன்னிப்பு அடிப்படையில் அன்வர் இப்ராகிம் வரும் 15-ம் தேதி விடுதலையாவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தகவலை அன்வர் இப்ராகிமின் மகள் நூருல் இஸ்ஸா உறுதிப்படுத்தியுள்ளார். #MalaysianleaderAnwarrelease
    ×