search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலேசியா"

    • மலேசியாவில் கடற்படை தினத்தின் போது ஒத்திகை நடந்தது.
    • அப்போது இரு ஹெலிகாப்டர்கள் மோதியதில் 10 பேர் பலியாகினர்.

    கோலாலம்பூர்:

    மலேசியாவில் கடற்படை தினத்தின் 90-ம் ஆண்டு விழா நடைபெற உள்ளது. இதற்காக இன்று காலை பெரக் பகுதியில் லுமுட் நகரில் உள்ள கடற்கடை தளத்தில் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இந்த ஒத்திகையில் கடற்படையின் ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டன. அவைகள் நடுவானில் சாகசங்களை நிகழ்த்திக் கொண்டிருந்தன.

    அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிக்கொண்டன. ஒரு ஹெலிகாப்டர் மற்றொரு ஹெலிகாப்டரில் ரோட்டர் பகுதியை இடித்தது. இதில் 2 ஹெலிகாப்டர்களும் நடுவானில் ஒன்றோடு ஒன்று பயங்கரமாக மோதிக் கொண்டன. பின்னர் அவை தரையில் விழுந்து நொறுங்கின.

    உடனே தீயணைப்பு வீரர்கள், மீட்புக்குழுவினர் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ஹெலிகாப்டர்களில் இருந்த 10 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களை உடல்களை மீட்டனர்.

    இதுகுறித்து மலேசிய கடற்படை கூறும்போது, ஒத்திகை நிகழ்ச்சியின்போது 2 ஹெலிகாப்டர்கள் மோதிக் கொண்டதில் அதில் பயணம் செய்த 10 பேரும் உயிரிழந்துள்ளனர். அவர்களை அடையாளம் காண உடல்கள் ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

    இந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தது.

    மலேசிய கடற்படை தின நிகழ்ச்சிக்காக நடந்த ஒத்திகையின்போது இந்த கோர விபத்து சம்பவம் அந்நாட்டு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இரு ஹெலிகாப்டர்களும் மோதி விபத்துக்குள்ளானது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

    • மாயமான எம்.எச். 370 விமானம் எங்கு சென்றது என்ற கேள்விக்கு பதில் இல்லை.
    • மாயமான விமானத்தை மீண்டும் தேட வேண்டும் என்ற கோரிக்கை எழ துவங்கியுள்ளது.

    கடந்த 2014, மார்ச் 8-ம் தேதி கோலா லம்பூரில் இருந்து மலேசியா நோக்கி புறப்பட்ட எம்.எச்.370 என்ற விமானம் ரேடார்களில் இருந்து காணாமல் போனது. ரேடார்களில் இருந்து மாயமான எம்.எச். 370 விமானம் எங்கு சென்றது, அதில் இருந்தவர்கள் நிலை என்ன என்ற கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை.

    மாயமான மலேசிய விமானம் எம்.எச். 370-ஐ தேடும் பணிகளை மீண்டும் துவங்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழ துவங்கியது. இந்த நிலையில், ஆஸ்திரேலியா சென்ற மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம்-இடம் மாயமான விமானத்தை தேடும் பணிகள் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம், "தேடல் தொடர்பாக உறுதியான ஆதாரம் ஏதேனும் கிடைக்கும் பட்சத்தில், மீண்டும் தேடும் பணிகளை துவங்குவதில் மகிழ்ச்சி அடைவோம். இந்த விவகாரத்தில் தொழில்நுட்ப கோளாறு இருக்கும் என்று நினைக்கவில்லை."

    "மக்களின் உயிரை பாதிக்கும் விவகாரம் இது, இதற்காக என்னவெல்லாம் செய்ய வேண்டுமா, அவற்றை நிச்சயம் செய்தாக வேண்டும்," என்று தெரிவித்தார்.

    முன்னதாக காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் 370-ஐ கண்டுபிடிக்க புது திட்டம் உள்ளதாக ஆய்வாளர்கள் அறிவித்து இருந்தனர். லண்டனில் உள்ள ராயல் ஏரோனாடிக்கல் சொசைட்டியில் நடைபெற்ற விரிவுரையில் புதிய வகை தேடலின் மூலம் பத்து நாட்களில் காணாமல் போன விமானத்தை கண்டுபிடிக்க முடியும் என்று வான்வெளி துறை நிபுணர்கள் ஜீன்-லுக் மார்சண்ட் மற்றும் விமானியான பேட்ரிக் பெல்லி தெரிவித்தனர்.

    • தன்னை சொந்த ஊருக்கு மீட்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
    • உறவினர்களுடன் சேலம் வந்து அங்கு டி.ஐ.ஜி. உமாவை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

    சேலம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது 45). இவரை திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த முகமது அலி, சென்னையை சேர்ந்த முத்து ஆகியோர் மலேசியாவில் நல்ல வேலை இருப்பதாக கூறி அங்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சரியான வேலை கிடைக்காத நிலையில் வீட்டு வேலை செய்ய சொல்லி மகேஸ்வரியை அடித்து கொடுமைப்படுத்தினர். ரூ.1.26 லட்சத்திற்கு தன்னை விற்றுள்ளது மகேஸ்வரிக்கு தெரியவந்தது.

    இது பற்றி தனது உறவினர்களிடம் தெரிவித்து அவர் கதறினார். மேலும் தன்னை சொந்த ஊருக்கு மீட்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

    இதையடுத்து அவரை மீட்பதற்காக உறவினர்கள் மாவட்ட நிர்வாகத்தை அணுகினார்கள். மேலும் சேலம் சரக டி.ஐ.ஜி. உமாவிடம் புகார் மனு கொடுத்தனர். இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மகேஸ்வரியை மீட்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் மகேஸ்வரி மலேசியாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டார். காலையில் விமானம் சென்னை வந்தடைந்தது. பின்னர் மகேஸ்வரி விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும் அவரை உறவினர்கள் வரவேற்றனர். அப்போது மகேஸ்வரி உறவினர்களை பார்த்து நெகிழ்ச்சியுடன் ஆனந்த கண்ணீர் வடித்தார்.

    பின்னர் அவர் தனது உறவினர்களுடன் சேலம் வந்து அங்கு டி.ஐ.ஜி. உமாவை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

    முன்னதாக மகேஸ்வரி நிருபர்களிடம் கூறுகையில், தனக்கு மலேசியாவில் நல்ல வேலை இருப்பதாக அழைத்து சென்று கழிவறையை கழுவ சொன்னதுடன் அங்கு அடித்து கொடுமைப்படுத்தினர். இதனால் எனக்கு தற்போது வரை காது சரியாக கேட்காத நிலை உள்ளது. எனவே இதற்கு காரணமான முகமது அலி, முத்து, அருள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

    • மலேசியாவில் பத்து மலை முருகன் கோவில் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும்.
    • வரிசையாக அமைந்த குகை அல்லது குகைக் கோவில்களை இங்கு காணலாம்.

    மலேசியாவில் பத்து மலை முருகன் கோவில் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும்.

    இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும்.

    பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ளது. இது ஒரு மலைக்கோவில்; சுண்ணாம்புப் பாறைகளாலான மலை இது.

    வரிசையாக அமைந்த குகை அல்லது குகைக் கோவில்களை இங்கு காணலாம்.

    மலையை ஒட்டி சுங்கை பத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது.

    சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்துமலையில் குவிகிறார்கள்.

    தைப்பூச நன்னாளில் பக்தர்கள் கோலாலம்பூர் மாரியம்மன் கோவிலிருந்து பத்து மலைக்கு அதிகாலையில் தொடங்கி ஊர்வலமாக நடந்து வருகிறார்கள்.

    இதற்கு எட்டு மணி நேரமாகும். நேர்த்திக்கடன் செலுத்த சிலர் காவடி எடுத்து வருகிறார்கள்.

    அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துவோர் உண்டு. சுங்கை பத்து ஆற்றில் நீராடிவிட்டு, மலைக்கோவிலுக்கு 272 படிகள் ஏறி வருகிறார்கள்.

    • தூக்கு மேடையை எதிர்நோக்கி உள்ள 1300 கைதிகளின் தண்டனை குறைய வாய்ப்பு உள்ளது.
    • மரணத்தை ஏற்படுத்தாத சில குற்றங்களுக்கு மரண தண்டனை ரத்து செய்யப்படுகிறது.

    கோலாலம்பூர்:

    மலேசியாவில் கொலை, பயங்கரவாத செயல் உள்ளிட்ட பல்வேறு குற்றசெயல்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த மரண தண்டனை சட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, கட்டாய மரண தண்டனையை ஒழிப்பதற்கு வகை செய்யும் சட்டமசோதா உருவாக்கப்பட்டது. விவாதத்திற்கு பிறகு இந்த புதிய மசோதா இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் தூக்கு மேடையை எதிர்நோக்கி உள்ள 1300 கைதிகளின் தண்டனை குறைய வாய்ப்பு உள்ளது.

    இதற்கு முன்பு கொலை, போதைப்பொருள் கடத்தல், தேசத்துரோகம், கடத்தல் மற்றும் பயங்கரவாதச் செயல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கு மரண தண்டனை கட்டாயமாக்கப்பட்டிருந்தது. தற்போது மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தத்தின்படி, கடத்தல், பயங்கரவாதம் மற்றும் சில ஆயுத வழக்குகளில், மரணத்தை ஏற்படுத்தாத சில குற்றங்களுக்கு மரண தண்டனையை ரத்து செய்யலாம். 

    இந்த சட்டம் தொடர்பாக சட்டத்துறை இணை மந்திரி ராம்கர்பால் சிங் கூறுகையில், 'இந்த சீர்திருத்தங்கள் மலேசியாவின் குற்றவியல் நீதி அமைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும். மரண தண்டனை நடைமுறையில் இருக்கும். அதேசமயம், சில குற்றங்களுக்கு தண்டனையை மறுஆய்வு செய்து 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் வாய்ப்பு நீதிமன்றங்களுக்கு வழங்கப்படும். இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டால், குற்றவாளிகள் தங்கள் தண்டனையை மறுஆய்வு செய்யும்படி 90 நாட்களுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்' என்றார்.

    மலேசியாவில் 2018 ஆம் ஆண்டு முதல் தூக்கு தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கட்டாய மரண தண்டனையை ரத்து செய்ய கடந்த ஆண்டு சட்ட வரைவு முன்மொழியப்பட்டது. ஆனால் பொதுத் தேர்தலுக்காக பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய துணைத் தூதரின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை.
    • திருச்சி விமான நிலையத்திலிருந்து 90 ஆயிரம் முட்டைகள் அனுப்பி வைப்பு

    மலேசியாவில் தற்போது நிலவி வரும் முட்டை தட்டுப்பாட்டை சமாளிக்க உதவுமாறு கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரகத்திடம், மலேசிய உணவு பாதுகாப்பு அமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார். இதன் அடிப்படையில், இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்ய மலேசிய அரசு தயாராக உள்ளதாக கோலாலம்பூரில் உள்ள இந்திய துணைத் தூதர், மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார். 


    இதையடுத்து நாமக்கல்லில் இருந்து முதல் முறையாக மலேசியாவிற்கு முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டதாக வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய மண்டல தலைவர் ஷோபனா குமார் தெரிவித்துள்ளார்.

    திருச்சி விமான நிலையத்திலிருந்து சுமார் 90 ஆயிரம் முட்டைகள் விமானத்தில் ஏற்றப்பட்டு மலசியாவிற்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த முட்டைகள் சோதனைக்கு பிறகு அங்கீகரிக்கப்படும் என்றும், அதன் பின்னர் நாமக்கல்லில் இருந்து மலேசியாவிற்கு முட்டை ஏற்றுமதி தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

    • பலர் சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஏமாற்றப்படுகிறார்கள்.
    • ஏஜெண்டுகளை நம்பி வெளிநாட்டிற்கு யாரும் செல்ல வேண்டாம்.

    செம்பட்டு:

    வெளிநாட்டு வேலையில் அதிக சம்பளம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஏஜெண்டுகளிடம் பணம் கொடுத்து ஏராளமானோர் வெளிநாடு சென்று அங்கு ஏமாற்றப்படுவது வாடிக்கையாக உள்ளது. அதுமட்டுமின்றி பலர் சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஏமாற்றப்படுகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று இவ்வாறு ஏமாற்றப்பட்ட திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 186 பேர் மலேசியா நாட்டில் இருந்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

    பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஏஜெண்டுகள் மூலமாக சுற்றுலா விசாவில் மலேசியா சென்ற அவர்கள் அங்கு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளனர். இதை கண்டறிந்த மலேசிய அரசு சுற்றுலா விசா மூலமாக இங்கு வேலைக்கு வரக்கூடாது என கூறி, அவர்களை ஒரு அறையில் அடைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் அனைவரையும் திரும்பி செல்ல அறிவுறுத்தி இருக்கிறது. மேலும் அவர்களுக்கு முறையாக சாப்பாடு வழங்காமலும், சரியான வசதிகள் செய்து கொடுக்காமலும், குடிப்பதற்கு கழிப்பிட நீரை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என வற்புறுத்தியதாக மலேசியாவில் இருந்து திரும்பியவர்கள் தெரிவித்தனர்.

    மேலும் அவர்கள் கூறியதாவது:-

    ஏஜெண்டுகளை நம்பி வெளிநாட்டிற்கு யாரும் செல்ல வேண்டாம். அவ்வாறு சென்றால் பணத்தை இழப்பதுடன் அவமானப்படுத்தப்படுவோம். எனவே யாரும் ஏஜெண்டுகளை நம்பி வெளிநாட்டிற்கு செல்ல வேண்டாம். ரூ.80 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரை கொடுத்து மலேசியாவிற்கு சென்றோம். தற்போது பணத்தை இழந்து பரிதவித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நஜிப் ரசாக் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானதால் அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
    • நஜிப்பின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

    கோலாலம்பூர்:

    மலேசியாவில் நஜிப் ரசாக் பிரதமராக இருந்த போது, அந்நாட்டின் அரசு முதலீட்டு நிதி அமைப்பான 1 எம்.டி.பி. நிறுவனத்தில் 4,500 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மலேசியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த புகார் தொடர்பாக அவருக்கு சொந்தமான சொத்துக்கள் மீது மலேசிய ஊழல் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தப்பட்டு ஏராளமான நகை மற்றும் பணம் கைப்பற்றப்பட்டது.

    இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், நஜிப் ரசாக் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானதால் அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 

    இந்த தீர்ப்பை எதிர்த்து நஜிப் ரசாக், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது நஜிப் ரசாக்கிற்கு உயர் நீதிமன்றம் விதித்த 12 ஆண்டு சிறைத்தண்டனையை உறுதி செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

    உயர் நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பு சரியானது என்றும், நஜிப்பின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். அத்துடன் நஜிப்பின் தண்டனையை உறுதி செய்தனர். எனவே, நஜிப் உடனடியாக சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும். முதல் முன்னாள் பிரதமர் ஒருவர் மலேசியாவில் சிறையில் அடைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

    இந்தியா-மலேசியா பெண்கள் அணிகள் இடையிலான 5-வது ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. #India #Malaysia #Hockey
    கோலாலம்பூர்:

    இந்திய பெண்கள் ஆக்கி அணி மலேசியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் 5 ஆட்டங்கள் கொண்ட போட்டித் தொடரில் பங்கேற்றது. இதில் நேற்று நடந்த 5-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. வெற்றிக்குரிய கோலை 35-வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை நவ்ஜோத் கவுர் அடித்தார். தோல்வியே சந்திக்காத இந்திய அணி இந்த தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3-வது ஆட்டம் மட்டும் டிராவில் முடிந்தது.

    வெற்றிக்கு பிறகு இந்திய அணி பயிற்சியாளர் ஜோர்ட் மர்ஜின் கூறுகையில், ‘நமது வீராங்கனைகள் பல முறை எதிரணியின் கோல் எல்லைக்குள் நுழைந்தனர். போதுமான ஷாட்டுகளை அடித்ததோடு, பெனால்டி கார்னர் வாய்ப்புகளையும் உருவாக்கினர். ஆனால் வாய்ப்புகளை கோலாக மாற்றுவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி உள்ளது’ என்றார்.  #India #Malaysia #Hockey
    இந்தியா-மலேசியா பெண்கள் அணிகள் இடையிலான 4-வது ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. #India #Malaysia #Hockey
    கோலாலம்பூர்:

    இந்திய பெண்கள் ஆக்கி அணி மலேசியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் 5 ஆட்டங்கள் கொண்ட போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி முதல் 2 ஆட்டங்களில் முறையே 3-0, 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    3-வது ஆட்டம் 4-4 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்த நிலையில் இந்தியா-மலேசியா பெண்கள் அணிகள் இடையிலான 4-வது ஆட்டம் கோலாலம்பூரில் நேற்று நடந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. லால்ரெம்சியாமி 55-வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்தார். இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று (வியாழக்கிழமை) மாலை 5.35 மணிக்கு நடக்கிறது.
    மலேசியாவில் எற்பட்டுள்ள பிளாஸ்டிக் மாசுபாட்டினை கட்டுப்படுத்தும் முயற்சியில் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர். #MalaysiaPlasticPollution
    கோலா லம்பூர்:

    மலேசியாவின் பல்வேறு பகுதிகளிலும் பிளாஸ்டிக் குப்பைகள் குவிக்கப்பட்டு எரிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் தொழிற்சாலைகளின் கழிவுகள் ஆகும். மேலும் பல நாடுகளில் இருந்தும் பிளாஸ்டிக் கழிவுகள் மலேசியாவிற்கு வந்து குவிந்துள்ளன.

    இவற்றை அகற்றும் முயற்சியில் ஜெஞ்ரோம் பகுதியைச் சேர்ந்த டேனியல் டாய், டன் சிங் ஹின் ஈடுபட்டுள்ளனர். மேலும் இப்பகுதியைச் சேர்ந்த பலரும் இவர்களுடன் இயற்கை சமூக ஆர்வலர்களாக இணைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் அப்பகுதி மக்களின் நலன் கருதி பிளாஸ்டிக் எரிக்கப்படுவதற்கு எதிராகவும், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    இது குறித்து டேனியல் டாய் கூறுகையில், ‘திறந்த வெளிப்பகுதிகளில் இரவில் பிளாஸ்டிக் பொருட்களை எரிக்கும் போது கடுமையாக காற்று மாசுப்படுகிறது. சுவாசிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது.  இதனை சகித்துக்கொள்ள எங்களால் இயலவில்லை.

    நள்ளிரவு 2 மணி அளவில் திடீரென துர்நாற்றம் வீசத் தொடங்கும். அந்த நேரத்தில் பலரும் தூக்கமிழந்து, மன உளைச்சலுக்கு ஆளாகினார்கள். இந்த வாடை பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதால் வரும் நாற்றத்தினை போல் இருப்பதை உணர்ந்தோம்.    

    பின்னர் இந்த நாற்றம் வேகமாக காற்றில் பரவி அனைத்து பகுதிகளிலும் அதிகமாக வீசத் துவங்கியது. இது தொடர்பாக குழுக்களாக செயல்பட்டு விசாரித்தோம். இதில் 12க்கும் மேற்பட்ட அரசு அங்கீகாரம் இல்லாத பிளாஸ்டிக்  தொழிற்சாலைகள் கடந்த ஆண்டு உருவாகியுள்ளன என்பது தெரியவந்துள்ளது.

    இந்த பிளாஸ்டிக் கழிவுகள் பெரும்பாலும் ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து வந்த வண்ணம் உள்ளது. இந்த கழிவுகளை யாருக்கும் தெரியாத வகையில் இரவில் திறந்த வெளி நிலப்பரப்பில் எரித்து வந்தனர்.

    இது என்னுடைய நகரம், இங்குதான் நான் வாழ வேண்டும். இந்த துர்நாற்றத்துடன் போராடுவதை விட, இவற்றை தடுக்க நடவடிக்கை எடுப்பதே சிறந்தது என்பதை உணர்ந்தேன். இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.

    இதற்காக ரகசியமாக எங்கள் செல்போன் மூலம் வீடியோ எடுத்தோம். எங்கள் நகரம் கொஞ்சம் பெரியது என்பதால் இது போன்ற சம்பவங்களில் யாரேனும் ஈடுபட்டால் தங்களுக்கு தெரிவிக்குமாறும் அனைவருக்கும் தெரிவித்தோம்.

    இதையடுத்து செல்போனில் ஒரு தனி வாட்ஸ் அப் குரூப் உருவாக்கி தகவல்கள் தெரிவிக்க வலியுறுத்தினோம்.  இதில் பலரும் பிளாஸ்டிக் கழிவுகளை வீடியோவாக அனுப்பி வைக்கின்றனர்.

    மலேசியாவின் அனைத்து  ஊடகங்களுக்கும், அரசிற்கும் இது குறித்த தகவல் அனுப்பப்பட்டது. இதையடுத்து தற்போது இந்த பிளாஸ்டிக் கழிவுகள் மிக சிறந்த முறையில் வேகமாக அகற்றப்பட்டு வருகின்றன. மேலும் இப்பகுதியில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

    இந்நிலையில் மேலும் இது போன்று மலேசியாவின் பல்வேறு இடங்களிலும், மறைவான பகுதிகளில் தொழிற்சாலைகள் செயல்படுவதாக அறிந்தோம். இவற்றை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளோம். பிளாஸ்டிக் மாசு குறித்த தகவல்களை ஒருங்கிணைப்பதால் என்னை இப்பகுதி மக்கள் நெட்வொர்க்கிங் அதிகாரி என அழைக்கின்றனர்’ என மகிழ்ச்சியுடன் கூறினார்.  #MalaysiaPlasticPollution



     





     






     
    ஊழல் வழக்கில் மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் இன்று பணமோசடி தடுப்பு பிரிவு முகமையால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். #NajibRazak #Malaysia
    கோலாலம்பூர்:

    மலேசியா நாட்டில் சமீபத்தில் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இதில், 60 ஆண்டுகளாக ஆளும் கட்சியாக இருந்து வந்த பாரீசன் தேசிய கட்சி தோற்கடிக்கப்பட்டது. பிரதமர் நஜீப் ரசாக் பதவி இழந்தார்.

    அதே நேரத்தில் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது அமைத்த கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து மகாதீர் முகமது பிரதமர் ஆனார். தேர்தலின் போதே அப்போதைய பிரதமர் நஜீப் ரசாக் மீது வங்கி முறைகேடு உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

    அதேபோல, கடந்த இரு மாதங்களில் நஜீப் ரசாக் வீடு மற்றும் அலுவலகங்களில் பணமோசடி தடுப்பு பிரிவு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனையில் பெட்டி பெட்டியாக நகைகளும், பல லட்சம் மதிப்பிலான பணமும் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.  

    கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பை 150 போலீசார் கணக்கீட்டு வந்த நிலையில், அதன் மொத்த மதிப்பு 27.5 கோடி டாலர் ( இந்திய மதிப்பின் படி 188 கோடி 71 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய்) என அறிவிக்கப்பட்டது. அவற்றில் 12 ஆயிரம் நகைகள்,  567 ஆடம்பர கைப்பைகள், 234 சன்கிளாசஸ் மற்றும் 423 விலையுயர்ந்த கைக்கடிகாரம் போன்றவை அடங்கும். 

    மேற்கண்ட குற்றச்சாட்டுகளை நஜீப் ரசாக் தரப்பு மறுத்து வந்தாலும், அவர் எப்போது வேண்டுமானாலும் கைதாகலாம் என்ற நிலை இருந்து வந்த நிலையில், இன்று அவர் பணமோசடி தடுப்பு பிரிவு முகமையால் வீடு புகுந்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    நஜீப் தற்போது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் நாளை பதிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  #Malaysia #NajibRazak
    ×