search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Money Cheating"

    • தனது காதலனிடம் இருந்து எந்த தகவலும் வராததால் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த இளம்பெண் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து இளம்பெண்ணிடம் மோசடி செய்தது யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    வடமாநிலத்தை சேர்ந்த லாவண்யா (வயது 26) என்ற பெண், புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் பி.எச்.டி. படித்து வருகிறார். இவர் ஒரு வாலிபரை காதலித்து வந்தார். காதலர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு சில மாதங்களாக பேசாமல் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் லாவண்யாவின் இன்ஸ்டாகிராம் செயலியில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? காதல் பிரச்சனையா? தொழிலில் பிரச்சனையா? எதுவாக இருந்தாலும் நாங்கள் மாந்திரீக முறையில் தீர்த்து வைக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அப்போது அவர் தனது காதலுடன் பிரச்சனை இருப்பதாக கூறினார்.

    எதிர்முனையில் பேசியவர், நான் சொல்கிற சில விஷயங்களை செய்து, மாந்திரீக பூஜைக்கும் ஒத்துழைப்பு கொடுத்தால் உங்கள் காதலரை சேர்த்து வைக்கிறோம் என்று கூறினார். பின்னர் அந்த பெண்ணிடம் அவர் மாந்திரீக பொருட்கள் வாங்க வேண்டும், பல பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய லாவண்யா பல்வேறு தவணைகளாக ரூ.5 லட்சத்து 84 ஆயிரத்து 340 அவரது வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.

    இருப்பினும் தனது காதலனிடம் இருந்து எந்த தகவலும் வராததால் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த அவர் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து லாவண்யாவிடம் மோசடி செய்தது யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொடர்ந்து எனக்கு பல வங்கிகளில் கணக்குகள் இருப்பதாகவும், அவை பயங்கரவாத நிதிக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் கூறி பயமுறுத்தினர்.
    • மீண்டும் அவர்களிடம் பணத்தை கேட்டபோது, எனது பணத்தை திரும்ப தர மறுத்து எனது போன் இணைப்பை துண்டித்து விட்டனர்.

    பெங்களூரு:

    பெங்களூரு மன்யாதாடெக் பார்க் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் அங்குள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் பெங்களூரு சம்பிகேஹள்ளி போலீசில் ஒரு புகார் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    கடந்த ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி நள்ளிரவில் எனக்கு தானியங்கி தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் பதிவு செய்யப்பட்ட குரலில் உங்கள் மீது போக்குவரத்து விதிமீறல் வழக்கு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் ஆர்.டி.ஓ. மற்றும் அதிகாரிகளுடன் பேச எண் 1ஐ அழுத்தவும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நான் 1ஐ அழுத்தியபோது மறுமுனையில் மும்பை அந்தேரியில் உள்ள வட்டார போக்குவரத்து அதிகாரி என்று கூறிய ஒருவர், என்னிடம் உங்கள் வாகனத்துக்கு எதிராக வழக்கு இருப்பதாகவும், எனவே மும்பையில் உள்ள நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார். மேலும் அந்த நபர் போலீசாரிடம் அழைப்பை மாற்றுவதாக கூறினார். அதைத்தொடர்ந்து தான் போலீஸ் என்று ஒருவர் பேசினார். அவரிடம் நான், பெங்களூருவில் தங்கி இருப்பதாகவும், தனக்கு சொந்தமாக வாகனம் ஏதும் இல்லை என்றும், சமீபத்தில் நான் மும்பைக்கு வரவில்லை என்றும் விளக்கினேன்.

    தொடர்ந்து அந்த நபர் என்னை ஸ்கைப்பில் வரும்படி அழைத்தார். நானும் மறுமுனையில் பேசுவது போலீஸ்தான் என்று நம்பி ஸ்கைப்பில் இணைந்தேன். மறுமுனையில் பேசிய நபர் போலீஸ் என்று கூறி அடையாள அட்டையை அனுப்பினார். பின்னர் எனது ஆதார் அட்டை உள்ளிட்ட விவரங்களை சேகரித்தனர். தொடர்ந்து எனக்கு பல வங்கிகளில் கணக்குகள் இருப்பதாகவும், அவை பயங்கரவாத நிதிக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் கூறி பயமுறுத்தினர். மேலும் நிதித்துறை அதிகாரி என்று மற்றொருவரும் தொடர்ந்து பேசினார். பின்னர் அவர் எனது ஒரு வங்கி கணக்கில் இருந்த ரூ.48ஆயிரத்து 325யை அவர்களது கணக்குக்கு மாற்ற சொன்னார்கள். பரிவர்த்தனை சரிபார்ப்புக்கு பிறகே பணம் திருப்பித் தரப்படும் என்றனர். இதேபோல் நான் எனது 2 வங்கி கணக்குகளில் இருந்து ரூ.96ஆயிரத்து 650யை மாற்றினேன். இந்த நிலையில் நான் எனது தோழியிடம் இதுகுறித்து கூறினேன். அவர் இது போலியானது, எனவே இனி பணம் அனுப்பவேண்டாம் என்று கூறினார். இதையடுத்து மீண்டும் அவர்களிடம் பணத்தை கேட்டபோது, எனது பணத்தை திரும்ப தர மறுத்து எனது போன் இணைப்பை துண்டித்து விட்டனர்.

    இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார்.

    இதையடுத்து சம்பிகேஹள்ளி போலீசார் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பணத்துக்கு பதிலாக தங்க நகைகளை வாங்கி கொள்ளலாம் என்று போலியான ரசீதை கொடுத்து ஏமாற்றியுள்ளனர்.
    • சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விஜய ராகவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சென்னை, பாரிமுனை பகுதியை சேர்ந்தவர் பீர் அனீஸ் ராஜா. பம்மலை சேர்ந்த விஜய ராகவன் மற்றும் அவரது மனைவி பிரதீபா ஆகியோர் பீர் அனீஸ் ராஜாவை அணுகி தங்களுக்கு எப்.எம். ஒலிபரப்பு நிறுவனங்களிடம் நல்ல தொடர்பு இருப்பதாகவும், அவற்றில் காற்றின் பண்பலைகளை விலைக்கு வாங்கி வியாபார நிறுவனங்களுக்கு விளம்பரத்திற்கு விற்றால் நல்ல லாபம் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

    அதற்காக ரூ.1 கோடியே அறுபது லட்சத்திற்கு மேல் பெற்று, மோசடியில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் பணத்துக்கு பதிலாக தங்க நகைகளை வாங்கி கொள்ளலாம் என்று போலியான ரசீதையும் கொடுத்து ஏமாற்றியுள்ளனர்.

    இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விஜய ராகவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள அவரது மனைவி பிரதீபாவை தேடி வருகிறார்கள்.

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு சையது இப்ராஹிம் வீட்டுக்கு ஷீலா வந்தார்.
    • தனது லேப்டாப்பில் பலவிதமான வீட்டு அலங்கார படங்களை காண்பித்து சையது இப்ராஹிமை நம்ப வைத்தார்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அம்மாகுளத்தைச் சேர்ந்தவர் சையது இப்ராஹிம் (வயது 44). இவர் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த வீட்டுக்கு உள் அலங்கார வேலை செய்வதற்காக ஆட்களை தேடி வந்தார்.

    அதே பகுதியைச் சேர்ந்த முரளி என்பவர் கூறிய ஆலோசனையின் பேரில் சென்னை கொடுங்கையூர் லெட்சுமி அம்மன் நகரைச் சேர்ந்த ஷீலா என்பவரிடம் செல்போன் மூலம் பேசினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சையது இப்ராஹிம் வீட்டுக்கு ஷீலா வந்தார். அவர் தனது லேப்டாப்பில் பலவிதமான வீட்டு அலங்கார படங்களை காண்பித்து சையது இப்ராஹிமை நம்ப வைத்தார்.

    உள் அலங்கார வேலைக்கு மொத்தம் ரூ.26 லட்சம் செலவாகும் என தெரிவித்தார். அதன்படி அன்றைய தினமே ரூ.5 லட்சமும், அதன் பிறகு பல தவணைகளாக மொத்தம் ரூ.15.50 லட்சம் பணத்தை ஷீலாவுக்கு கொடுத்தார்.

    பணத்தை பெற்றுக் கொண்டு அவர் வீட்டு அலங்கார வேலையை செய்து தராமல் ஏமாற்றியுள்ளார். மேலும் செல்போன் இணைப்பையும் துண்டித்து விட்டார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சையது இப்ராஹிம் போடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடி பெண்ணை தேடி வருகின்றனர்.

    • தனது நண்பர் கூறிய ஆசை வார்த்தையை நம்பிய சுரேஷ் வங்கியில் இருந்து ரூ.10 லட்சம் பணத்தை எடுத்து அதனை ஒரு பையில் போட்டு வந்தார்.
    • கைதான 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே கருத்தானூரைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் சுரேஷ் (வயது31). இவர் தனியார் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் சுரேஷ் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது டிராவல்ஸ் நிறுவனத்தில் இருந்து ஒரு வாகனத்தை விற்றுவிட்டார்.

    இதற்காக அவருக்கு ரூ.10 லட்சம் பணம் கிடைத்தது. அந்த பணத்தை தனது வங்கியில் போட்டிருந்தார்.

    இதையறிந்த அவரது நண்பர் நடூரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தனக்கு தெரிந்த முக்கிய பிரமுகர் ரூ.3,200 கோடிக்கு ரூ.2ஆயிரம் நோட்டுகளாக வைத்துள்ளார் என்றும், அதனை மாற்ற முடியாமல் தவித்து வருவதாகவும், அதற்காக உன்னிடம் உள்ள ரூ.10 லட்சத்தை வங்கியில் இருந்து ரூ.500 நோட்டுகளாக எடுத்து கொடுத்தால், அதற்கு பதிலாக அவர்கள் ரூ.13 லட்சத்துக்கு ரூ.2 ஆயிரம் நோட்டுகளாக தருவார்கள்.

    அதில் ரூ.10 லட்சத்தை எடுத்து கொண்டு மீதமுள்ள பணத்தை சரிசமமாக பிரிந்து கொள்ளலாம் என்று சுரேஷிடம் கூறினார்.

    தனது நண்பர் கூறிய ஆசை வார்த்தையை நம்பிய சுரேஷ் வங்கியில் இருந்து ரூ.10 லட்சம் பணத்தை எடுத்து அதனை ஒரு பையில் போட்டு வந்தார்.

    அந்த பணத்தை எடுத்துக்கொண்டு நேற்று சுரேஷ், அவரது தந்தை நாகராஜ், ராஜேந்திரன் ஆகிய 3 பேரும் காரில் தருமபுரியை அடுத்த நல்லம்பள்ளிக்கு வந்தனர்.

    அப்போது 3 பேரும் அந்த முக்கிய பிரமுகரின் ஏஜெண்டை தொடர்பு கொண்டனர். அவர் காரை அங்கேயே விட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் தான் கூறிய இடத்திற்கு வருமாறு சுரேஷிடம் கூறியுள்ளார்.

    உடனே 3 பேரும் மோட்டார் சைக்கிளில் ஏஜெண்டு கூறிய இடத்திற்கு வந்தனர். அப்போது நம்பர் பிளேட் இல்லாத மோட்டார் சைக்கிளில் மர்மநபர்கள் 2 பேர் கையில் பையுடன் அங்கு வந்தனர்.

    அப்போது மர்மநபர்கள் சுரேஷிடம் இருந்து பையை வாங்கி கொண்டனர். அதற்கு பதிலாக மர்மநபர்கள் கொண்டு வந்த பையை சுரேஷிடம் கொடுத்தனர்.

    உடனே மர்ம நபர்கள் சுரேஷிடம் இங்கு இருந்தால் நமக்கு ஆபத்து என்றும், உடனே இங்கிருந்து புறப்பட்டு செல்லுங்கள் என்றும் கூறியுள்ளார். அதனை நம்பிய சுரேஷ் உள்பட 3 பேரும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    அப்போது சுரேஷ் சிறிது தூரம் சென்ற பிறகு மர்மநபர்கள் கொடுத்த பையை திறந்து பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    அதில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளுக்கு பதிலாக வெள்ளைதாள்கள் பணகட்டுகளாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

    உடனே திரும்பி 3 பேரும் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று அவர்களை தேடிபார்த்தனர். அதற்குள் அந்த மர்மநபர்கள் அங்கிருந்து பணத்துடன் மாயமாகி விட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து சுரேஷ் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ஏரியூர் சீலநாயக்கனூரைச் சேர்ந்த முருகன் (45), அவரது நண்பர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    தொடர்ந்து கைதான 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டிராவல்ஸ் அதிபர் ரூ.13 லட்சத்திற்கு ரூ.2 ஆயிரம் நோட்டுகளாக கிடைக்கும் என்று ஆசைப்பட்டு ரூ.10 லட்சத்தை இழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஜாகிர் உசேன் சந்திரமோகனை தொடர்பு கொள்ள முயற்சி செய்த போது போனை எடுக்காமல் பல நாட்கள் இருந்துள்ளார்.
    • சந்திரமோகன் சென்னையில் பதுங்கி இருப்பதை அறிந்த தனிப்படை போலீசார், சென்னை சென்று சந்திரமோகனை கைது செய்து ஈரோட்டிற்கு அழைத்து வந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஜாகிர் உசேன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஜாகிர் உசேன் அதே பகுதியில் டெய்லர் கடை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் கடந்த ஆண்டு இவரது மகளுக்கு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில சீட் வாங்க முயற்சி செய்துள்ளார். இதனை அறிந்த கடலூரை சேர்ந்த சந்திர மோகன் என்பவர், ஜாகிர்உசேனை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் உங்கள் மகளுக்கு சீட் வாங்கித் தருவதாக அவரிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

    இதை ஜாகிர் உசேன் உண்மை என்று நம்பியுள்ளார். பின்னர் சந்திரமோகன் அவரிடம் மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்க பணம் தேவைப்படுவதாக கூறியுள்ளார். இவ்வாறாக ஜாகிர் உசேனிடம் இருந்து சந்திரமோகன் பல தவணைகளாக மொத்தம் ரூ. 8 லட்சத்து 25 ஆயிரம் பெற்றுள்ளார். ஆனால் அவர் கூறியது போன்று மருத்துவக் கல்லூரியில் சீட்டு வாங்கி கொடுக்கவில்லை. தொடர்ந்து ஜாகிர் உசேன் சந்திரமோகனை தொடர்பு கொள்ள முயற்சி செய்த போது போனை எடுக்காமல் பல நாட்கள் இருந்துள்ளார். இதனை அடுத்து போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜாகிர் உசேன் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

    இதுகுறித்து உரிய விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கருங்கல்பாளையம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்து வந்த சந்திரமோகனை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில் சந்திரமோகன் சென்னையில் பதுங்கி இருப்பதை அறிந்த தனிப்படை போலீசார், சென்னை சென்று சந்திரமோகனை கைது செய்து ஈரோட்டிற்கு அழைத்து வந்தனர்.

    மேலும் சந்திர மோகனிடம் நடத்திய விசாரணையில், டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்து வருவதாகவும் அதன் மூலம் ஜாகிர்உசேனின் எண்ணை அறிந்து மோசடி செய்தது தெரியவந்தது. மேலும் மோசடிக்கு பயன்படுத்திய லேப்டாப், செல்போன்கள் மற்றும் ஏ.டி.எம் கார்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட சந்திரமோகன் மீது கடலூரில் பணம் மோசடி வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பல்லடம், திருப்பூர், ஊத்துக்குளி, உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தனர்.
    • மோசடியில் முக்கிய குற்றவாளியான சிவக்குமார் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் பணிக்கம்பட்டியை சேர்ந்த சிவக்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் சொத்து பத்திரத்தின் மூலம் கடன் பெற்று டெக்ஸ்டைல் தொழில் செய்யலாம் என பலரிடம் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர்.

    இதற்கு சம்மதித்த பொதுமக்களிடம் சொத்து பத்திரங்களை வாங்கி வங்கியில் அடமானம் வைத்து சுமார் ரூ.100 கோடி அளவில் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பல்லடம், திருப்பூர், ஊத்துக்குளி, உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தனர். இதையடுத்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பிரவீனா என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த மோசடியில் முக்கிய குற்றவாளியான சிவக்குமார் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த நிலையில் நேற்று இரவு பல்லடத்தில் பதுங்கி இருந்த அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    • 2 நாட்கள் கழித்து அந்தோனி தனது மோட்டார் சைக்கிளுக்கு கிரெடிட் கார்டு மூலம் பெட்ரோல் போட சென்றார்.
    • வங்கி சேவை மையத்தில் இருந்து பேசுவதாக கூறிய மர்ம பெண் நூதனமான முறையில் பணத்தை சுருட்டி சென்றது தெரியவந்தது.

    போரூர்:

    ராமாபுரம், ராயலா நகர் பகுதியை சேர்ந்தவர் அந்தோனி ஆரோக்கியராஜ். ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றில் கேன்டீன் நடத்தி வருகிறார்.

    இவரது செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசிய மர்ம பெண் "வங்கி சேவை மையத்தில் இருந்து பேசுகிறேன். உங்களது கிரெடிட் கார்டின் தொகை வரம்பை மேலும் ரூ.50ஆயிரம் அதிகரித்து தருகிறேன்" என்று கூறினார். இதை உண்மை என்று நம்பிய அந்தோனி தனது கிரெடிட் கார்டு எண் மற்றும் ரகசிய ஓ.டி.பி எண் விபரங்களை அவரிடம் கூறினார்.

    2 நாட்கள் கழித்து அந்தோனி தனது மோட்டார் சைக்கிளுக்கு கிரெடிட் கார்டு மூலம் பெட்ரோல் போட சென்றார். அப்போது கிரெடிட் கார்டின் தொகை வரம்பு முடிந்துவிட்டது என்று குறுந்தகவல் வந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது ஏற்கனவே அந்தோனியின் வங்கிக் கணக்கில் 3 தவணைகளாக ரூ. 81 ஆயிரத்து 760 எடுக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.

    வங்கி சேவை மையத்தில் இருந்து பேசுவதாக கூறிய மர்ம பெண் நூதனமான முறையில் பணத்தை சுருட்டி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ராமாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருகம்பாக்கம், நடேசன் நகர் பகுதியை சேர்ந்தவர் துவாரகேஷ் சாப்ட்வேர் என்ஜினீயர். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில் கிரிப்டோ கரன்சியில் ரூ.30 ஆயிரம் முதலீடு செய்தால் தினந்தோறும் மாலையில் அதிக லாபம் கிடைக்கும் என்று குறிப்பிட்டு இருந்தது.

    இதை உண்மை என்று நம்பிய அவர் அதில் இருந்த "கூகுள் பே" எண்ணிற்கு ரூ.30 ஆயிரம் பணம் அனுப்பி முதலீடு செய்தார். சிறிது நேரத்தில் மேலும் ரூ.50 ஆயிரம் பணம் அனுப்புமாறு மீண்டும் ஒரு குறுந்தகவல் வந்தது.

    இதனால் சந்தேகமடைந்த துவாரகேஷ் ஆன்லைன் மூலம் பணம் பறிக்கும் மோசடி கும்பல் என்பது தெரிந்து சுதாரித்துக்கொண்டார்.

    இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் சினிமா ஆசை காட்டி பண மோசடியில் ஈடுபட்டவர்கள் பற்றி தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
    • மோசடி நபர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சென்னை:

    சென்னை தி.நகர் பிரகாசம் தெருவில் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    அந்த நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி விளம்பரம் கொடுத்து சினிமாவில் நடிக்க விண்ணப்பிக்கும் இளம்பெண்கள் மற்றும் வாலிபர்களிடம் பணத்தை பறித்து மர்மநபர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

    அவர்கள் வெளியிட்ட விளம்பரத்தை நம்பி துணை நடிகர்கள், நடிகைகள் சிலரும் நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டு விண்ணப்பித்து உள்ளனர். அவர்களிடமும் பணத்தை வசூலித்து மோசடி கும்பல் பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

    இப்படி பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள் தி.நகரில் உள்ள தயாரிப்பு நிறுவனத்துக்கு சென்று சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டுள்ளனர். அப்போதுதான் தங்களது நிறுவனத்தின் பெயரை சொல்லி ஏமாற்றி பண மோசடி நடைபெற்றிருப்பது அவர்களுக்கு தெரியவந்தது.

    இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தேனாம்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் 2 செல்போன் எண்களை கொடுத்துள்ள தயாரிப்பு நிறுவனம் அந்த எண்களில் இருந்து பேசி இருக்கும் நபர்கள்தான் பண வசூலில் ஈடுபட்டு மோசடி செய்து உள்ளனர் என தெரிவித்து உள்ளனர்.

    இந்த புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் சினிமா ஆசை காட்டி பண மோசடியில் ஈடுபட்டவர்கள் பற்றி தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். மோசடி நபர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • தலைமறைவாக இருந்த ராபின், ஆல்வின் இருவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
    • நொளம்பூரில் உள்ள நகைக்கடை, வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களுக்கு இருவரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    சென்னை:

    சென்னை நொளம்பூரில் செயல்பட்டு வந்த ஏ.ஆர்.டி. நகைக்கடை சார்பில் அதிக வட்டி தருவதாக கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

    ரூ.1 லட்சம் பணம் கட்டினால் ஒவ்வொரு வாரமும் ரூ.4 ஆயிரம் வகையில் வட்டி தருவதாக கூறியதை தொடர்ந்து 400-க்கும் மேற்பட்டவர்கள் முதலீடு செய்தனர். இப்படி பொதுமக்களிடம் இருந்து வாங்கிய பணத்துக்கு நகைக்கடை சார்பில் உரிய வட்டி தராமல் ஏமாற்றினர்.

    இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் கடையின் உரிமையாளர்களான ராபின், ஆல்வின் இருவரும் தலைமறைவானார்கள். இதை தொடர்ந்து இருவருக்கும் எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ராபின், ஆல்வின் இருவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் நொளம்பூரில் உள்ள நகைக்கடை, வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களுக்கு இருவரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இவர்களுக்கு சொந்தமான வணிக வளாகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    • ரேஷ்மா தன்னை அரசு அதிகாரி போலவே காட்டி கொண்டுள்ளார்.
    • ரேஷ்மா திருமணத்திற்கு பெண் தேடும் வாலிபர்களிடமும் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    கொழிஞ்சாம்பாறை:

    பாலக்காடு மாவட்டம் ஆலத்தூரை சேர்ந்தவர் பிரதேஷ். இவர் படித்து முடித்து விட்டு அரசு வேலை தேடி வந்தார்.

    இந்த நிலையில் இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ரேஷ்மா (வயது33) என்பவர் அறிமுகம் ஆனார்.

    அவர், அந்த வாலிபரிடம், நான் ஒரு அரசு அதிகாரியாக வேலை பார்த்து வருகிறேன். நீங்கள் வேலை தேடுவதாக அறிந்தேன். எனக்கு குருவாயூர் கோவிலில் முக்கிய அதிகாரிகள் பழக்கம் உள்ளது. அவர்கள் மூலமாக உங்களுக்கு நான் குருவாயூர் கோவிலில் வேலை வாங்கி தருகிறேன். ஆனால் அதற்கு கொஞ்சம் செலவாகும் என்றார்.

    வாலிபரும் வேலை கிடைக்க உள்ளது என நம்பி, அந்த பெண் தெரிவித்த அனைத்திற்கும் தலையாட்டினார். மேலும் வேலை வாங்கி தருவதற்காக அந்த பெண்ணிடம் 2 தவணையாக ரூ.10 லட்சத்தை கொடுத்தார்.

    அவர் பணம் கொடுத்து பல நாட்கள் ஆகியும் வேலை மட்டும் கிடைக்கவில்லை. இதனால் வாலிபர் சந்தேகம் அடைந்தார். அவரை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அது முடியாமல் போய்விட்டது.

    அதன்பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை வாலிபர் உணர்ந்தார்.

    உடனடியாக அவர் சம்பவம் குறித்து ஆலத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ரேஷ்மா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அவரை தேடி வந்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரியவந்தன.

    ரேஷ்மா தன்னை அரசு அதிகாரி போலவே காட்டி கொண்டுள்ளார். அவர் வைத்திருந்த காரிலும் கோவில் நிர்வாக விஜிலென்ஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டியபடியே வலம் வந்தார்.

    அப்போது, அவர் வேலை தேடி வரும் வாலிபர்கள், இளம்பெண்களை குறி வைத்து அவர்களிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பறித்து விட்டு மோசடியில் ஈடுபட்டு வந்தார்.

    மேலும் திருமணத்திற்கு பெண் தேடும் வாலிபர்களிடமும் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    கடந்த மாதம் கோட்டயத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் மணமகள் தேவை என விளம்பரம் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரேஷ்மா, அதில் உள்ள எண்ணை எடுத்து அந்த வாலிபரை தொடர்பு கொண்டு பேசினார். அடிக்கடி செல்போனில் அந்த வாலிபரிடம் பேசி வந்தார்.

    அப்போது, ஒருநாள் வாலிபரிடம் உங்களை எனக்கு பிடித்துள்ளது. நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசைவார்த்தையை அள்ளி தெளித்தார். நாம் திருமணம் செய்து கொள்வதற்கு முன் ஒரு சிறிய பிரச்சினை மட்டும் உள்ளது.

    அதனை சரி செய்து விட்டால் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்றார். ரேஷ்மாவின் பேச்சில் மதி மயங்கிய அந்த வாலிபர், அவர் என்ன கேட்டாலும் செய்ய தயார் என்ற மனநிலையிலேயே இருந்தார்.

    பெண் பிரச்சினை என்று சொன்னவுடன் என்ன வென்று அவரிடம் கேட்டார். அப்போது அந்த பெண் எனக்கு 6 லட்சம் ரூபாய் கடன் உள்ளது. அதனை கட்டிவிட்டால் நாம் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழலாம் என தெரிவித்தார். பெண்ணின் பேச்சில் மயங்கி கிடந்த வாலிபரும், அவர் கேட்ட உடனே பணத்தை எடுத்து கொடுத்தார்.

    பணம் கொடுத்த மறுநாளில் பெண்ணிடம் இருந்து போன் வரவில்லை. தினமும் போன் செய்து பேசும் பெண் திடீரென பேசாததால், வாலிபர் அவரை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவரது போன் சுவிட்ச் ஆப் என வந்தது.

    அப்போது தான் அந்த வாலிபருக்கு, இளம்பெண் தன்னை ஆசைவார்த்தை கூறி அவரது வலையில் வீழ்த்தியதும், அதன் மூலம் தன்னிடம் இருந்து பணத்தை பறித்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக அந்த வாலிபர் புகார் அளித்துள்ளார்.

    மேலும் ரேஷ்மா, இதுபோன்று 20-க்கும் மேற்பட்டோரிடம் திருமணம் செய்வதாகவும், அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறி ரூ.50 லட்சம் வரை பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை தேடி வந்தனர். இந்தநிலையில், ரேஷ்மா ஆலத்தூரில் இருப்பதாக தகவல் வரவே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அங்கு பதுங்கி இருந்த அவரை கைது செய்தனர். பின்னர் அவரை ஆலத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஜெயிலில் அடைத்தனர். தொடர்ந்து அவர் இதுபோன்று வேறு யாரிடமாவது மோசடியில் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தீபாவளி சீட்டிற்கு பணம் போதாது என்று அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் 10 லட்சம் முதல் 30 லட்சம் வரை கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
    தருமபுரி:

    தருமபுரி குமாரசாமி பேட்டை பகுதியை சேர்ந்த மணிவண்ணன், செந்தில் ஆகியோர் மாவட்டத்தில் குமாரசாமிபேட்டை, பிடமனேரி, சோளக்கொட்டாய், நடுப்பட்டி, தொப்பூர், பென்னாகரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    இவர்கள் ஏரியா வாரியாக பிரித்து பெண்களை அந்தந்த பகுதிக்கு ஒருவர் என ஏஜெண்டுகளாக அமைத்து அவர்கள் மூலம் ஒரு லட்சம் முதல் 10 லட்சம் வரை ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி சீட்டு என நடத்தி வந்துள்ளனர்.

    இந்த இரு சீட்டுகளிலும் சுமார் 2 ஆயிரம் நபர்களை உறுப்பினராக சேர்த்து கடந்த 6 ஆண்டுகளாக ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி சீட்டு நடத்தி வந்துள்ளனர்.

    தீபாவளி சீட்டிற்கு மாதம் 1,500 ரூபாய் என 12 மாதங்கள் கட்டிய பிறகு தீபாவளியன்று கட்டியவர்களுக்கு 4 கிராம் தங்க நாணயம் ஒரு கிலோ ஸ்வீட், ஒரு கிலோ காரம் ஒரு பெரிய பட்டாசு பாக்ஸ் கொடுத்து வந்துள்ளனர்.

    இதற்கு ஆசைப்பட்ட பொதுமக்கள் தீபாவளி சீட்டில் பணம் கட்டியுள்ளனர்.

    மேலும் தீபாவளி சீட்டிற்கு பணம் போதாது என்று அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் 10 லட்சம் முதல் 30 லட்சம் வரை கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

    சில மாதங்களாக சீட்டு முடிந்த பின் சிலரது முதிர்வு அடைந்த நிலையில் சீட்டு பணத்தை பெற அவர்களது வீட்டிற்கு பல முறை சென்ற போது வீடு பூட்டி இருந்த நிலையில் ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன் மணிவண்ணன் தனது குடும்பத்துடன் தலைமறைவாகி உள்ளது தெரியவந்தது.

    இது பற்றி தகவல் அறிந்த சீட்டு போட்டவர்கள் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று மாலை குமாரசாமி பேட்டையில் உள்ள மணிவண்ணனின் உறவினரும் சீட்டு பணம் வசூல் செய்யும் செந்தில் என்பவரை பிடித்து தருமபுரி டவுன் போலீசில் ஒப்படைத்து முற்றுகையிட்டனர்.

    தலைமறைவான மணிவண்ணனிடம் ஏலச்சீட்டு பணத்தை பெற்று தர வேண்டும் என புகார் மனு அளித்தனர்.

    அந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உறுதியளித்ததை அடுத்து அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த ஏலச்சீட்டால் 10 கோடிக்கு மேல் ஏமாற்றப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

    ஒரே நேரத்தில் காவல் நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் 5 மணிநேரமாக காத்திருந்து புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ×