search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருமணத்திற்கு பெண் தேடும் வாலிபர்களை குறிவைத்து பல லட்சம் சுருட்டிய இளம்பெண்
    X

    திருமணத்திற்கு பெண் தேடும் வாலிபர்களை குறிவைத்து பல லட்சம் சுருட்டிய இளம்பெண்

    • ரேஷ்மா தன்னை அரசு அதிகாரி போலவே காட்டி கொண்டுள்ளார்.
    • ரேஷ்மா திருமணத்திற்கு பெண் தேடும் வாலிபர்களிடமும் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    கொழிஞ்சாம்பாறை:

    பாலக்காடு மாவட்டம் ஆலத்தூரை சேர்ந்தவர் பிரதேஷ். இவர் படித்து முடித்து விட்டு அரசு வேலை தேடி வந்தார்.

    இந்த நிலையில் இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ரேஷ்மா (வயது33) என்பவர் அறிமுகம் ஆனார்.

    அவர், அந்த வாலிபரிடம், நான் ஒரு அரசு அதிகாரியாக வேலை பார்த்து வருகிறேன். நீங்கள் வேலை தேடுவதாக அறிந்தேன். எனக்கு குருவாயூர் கோவிலில் முக்கிய அதிகாரிகள் பழக்கம் உள்ளது. அவர்கள் மூலமாக உங்களுக்கு நான் குருவாயூர் கோவிலில் வேலை வாங்கி தருகிறேன். ஆனால் அதற்கு கொஞ்சம் செலவாகும் என்றார்.

    வாலிபரும் வேலை கிடைக்க உள்ளது என நம்பி, அந்த பெண் தெரிவித்த அனைத்திற்கும் தலையாட்டினார். மேலும் வேலை வாங்கி தருவதற்காக அந்த பெண்ணிடம் 2 தவணையாக ரூ.10 லட்சத்தை கொடுத்தார்.

    அவர் பணம் கொடுத்து பல நாட்கள் ஆகியும் வேலை மட்டும் கிடைக்கவில்லை. இதனால் வாலிபர் சந்தேகம் அடைந்தார். அவரை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அது முடியாமல் போய்விட்டது.

    அதன்பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை வாலிபர் உணர்ந்தார்.

    உடனடியாக அவர் சம்பவம் குறித்து ஆலத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ரேஷ்மா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அவரை தேடி வந்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரியவந்தன.

    ரேஷ்மா தன்னை அரசு அதிகாரி போலவே காட்டி கொண்டுள்ளார். அவர் வைத்திருந்த காரிலும் கோவில் நிர்வாக விஜிலென்ஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டியபடியே வலம் வந்தார்.

    அப்போது, அவர் வேலை தேடி வரும் வாலிபர்கள், இளம்பெண்களை குறி வைத்து அவர்களிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பறித்து விட்டு மோசடியில் ஈடுபட்டு வந்தார்.

    மேலும் திருமணத்திற்கு பெண் தேடும் வாலிபர்களிடமும் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    கடந்த மாதம் கோட்டயத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் மணமகள் தேவை என விளம்பரம் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரேஷ்மா, அதில் உள்ள எண்ணை எடுத்து அந்த வாலிபரை தொடர்பு கொண்டு பேசினார். அடிக்கடி செல்போனில் அந்த வாலிபரிடம் பேசி வந்தார்.

    அப்போது, ஒருநாள் வாலிபரிடம் உங்களை எனக்கு பிடித்துள்ளது. நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசைவார்த்தையை அள்ளி தெளித்தார். நாம் திருமணம் செய்து கொள்வதற்கு முன் ஒரு சிறிய பிரச்சினை மட்டும் உள்ளது.

    அதனை சரி செய்து விட்டால் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்றார். ரேஷ்மாவின் பேச்சில் மதி மயங்கிய அந்த வாலிபர், அவர் என்ன கேட்டாலும் செய்ய தயார் என்ற மனநிலையிலேயே இருந்தார்.

    பெண் பிரச்சினை என்று சொன்னவுடன் என்ன வென்று அவரிடம் கேட்டார். அப்போது அந்த பெண் எனக்கு 6 லட்சம் ரூபாய் கடன் உள்ளது. அதனை கட்டிவிட்டால் நாம் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழலாம் என தெரிவித்தார். பெண்ணின் பேச்சில் மயங்கி கிடந்த வாலிபரும், அவர் கேட்ட உடனே பணத்தை எடுத்து கொடுத்தார்.

    பணம் கொடுத்த மறுநாளில் பெண்ணிடம் இருந்து போன் வரவில்லை. தினமும் போன் செய்து பேசும் பெண் திடீரென பேசாததால், வாலிபர் அவரை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவரது போன் சுவிட்ச் ஆப் என வந்தது.

    அப்போது தான் அந்த வாலிபருக்கு, இளம்பெண் தன்னை ஆசைவார்த்தை கூறி அவரது வலையில் வீழ்த்தியதும், அதன் மூலம் தன்னிடம் இருந்து பணத்தை பறித்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக அந்த வாலிபர் புகார் அளித்துள்ளார்.

    மேலும் ரேஷ்மா, இதுபோன்று 20-க்கும் மேற்பட்டோரிடம் திருமணம் செய்வதாகவும், அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறி ரூ.50 லட்சம் வரை பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை தேடி வந்தனர். இந்தநிலையில், ரேஷ்மா ஆலத்தூரில் இருப்பதாக தகவல் வரவே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அங்கு பதுங்கி இருந்த அவரை கைது செய்தனர். பின்னர் அவரை ஆலத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஜெயிலில் அடைத்தனர். தொடர்ந்து அவர் இதுபோன்று வேறு யாரிடமாவது மோசடியில் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×