search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MLAs disqualification case"

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் இன்றுடன் இறுதி கட்ட விசாரணை முடிவடைகிறது. இதை தொடர்ந்து இந்த வழக்கில் 1 வாரத்தில் தீர்ப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #18MLAsCase #MLAsDisqualificationCase
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்றக்கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களாக இருந்த தங்கதமிழ்ச் செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் கொடுத்தனர்.

    இதைத் தொடர்ந்து 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

    சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து அவர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை அப்போதைய ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

    இந்த வழக்கில் கடந்த ஜனவரி மாதம் 30-ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்கள். 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று இந்திரா பானர்ஜி தீர்ப்பு வழங்கினார். 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லாது என்று நீதிபதி சுந்தர் தீர்ப்பளித்தார்.

    இதையடுத்து 3-வது நீதிபதி விசாரணைக்கு வழக்கு பரிந்துரைக்கப்பட்டது. 3-வது நீதிபதியாக விமலா பரிந்துரை செய்யப்பட்டார். இதனை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் சுப்ரீம்கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் 3-வது நீதிபதியாக சத்தியநாராயணன் நியமிக்கப்பட்டார்.


    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் 3-வது நீதிபதி சத்திய நாராயணன் கடந்த மாதம் 20-ந்தேதி விசாரணையை தொடங்கினார்.

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சார்பில் மூத்த வக்கீல்கள் பி.எஸ்.ராமன், மோகன் பராசரன் ஆகியோர் 3 நாட்கள் வாதிட்டனர்.

    கடந்த 23 மற்றும் 24-ந்தேதிகளில் சபாநாயகர் மற்றும் சட்டசபை செயலாளர் சார்பில் அரிமா சுந்தரமும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் மூத்த வக்கீல் வைத்தியநானும் 3 நாட்கள் வாதிட்டனர்.

    அரசு தலைமை கொறடா சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தஜி வாதாடினார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சார்பில் பி.எஸ்.ராமன் இன்று இறுதி கட்ட வாதம் செய்கிறார். இன்றுடன் இறுதி கட்ட விசாரணை முடிவடைகிறது.

    இதை தொடர்ந்து இந்த வழக்கில் 1 வாரத்தில் தீர்ப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #18MLAsCase #MLAsDisqualificationCase
    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் சபாநாயகர் தனபால் தரப்பில் இன்று வாதங்கள் முன்வைக்கப்பட்டது. #MLAsDisqualificationCase #TNAssemblySpeaker #MadrasHC
    சென்னை:

    தமிழக முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் மனு கொடுத்த 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்கள்.

    இதையடுத்து 3வது நீதிபதியின் விசாரணைக்கு இந்த வழக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்த வழக்கை 3வது நீதிபதியாக, சென்னை ஐகோர்ட்டு மூத்த நீதிபதி எம்.சத்திய நாராயணன் விசாரித்து வருகிறார்.



    3வது நாளாக இன்று இந்த வழக்கு அவர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சபாநாயகர் தனபால் சார்பில் டெல்லி மூத்த வக்கீல் ஆரிமா சுந்தரம் ஆஜராகி வாதிட்டார். அவர் தன் வாதத்தில் கூறியதாவது:-

    பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்களால் முதல்-அமைச்சர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவ்வாறு பெரும்பான்மையானவர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட முதல்-அமைச்சருக்கு எதிராக, கவர்னரிடம் மனுதாரர்கள் 18 பேரும் மனு கொடுத்துள்ளனர்.

    கட்சிக்குள் உள்ள விவகாரத்தில், கட்சிக்குள் பேசி தீர்க்காமல், கவர்னரிடம் போய் புகார் செய்தால், அது சொந்த கட்சிக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதலாகத்தான் கருதப்படும்.

    இதை தனி நபருக்கு எதிரான தாக்குதலாக கருத முடியாது. மனுதாரர்கள், தாங்கள் அரசாங்கத்தை கலைக்க வேண்டும் என்று கவர்னரிடம் மனு கொடுக்கவில்லை என்றும் முதல்அமைச்சருக்கு எதிராக மட்டுமே புகார் மனு கொடுத்ததாகவும் கூறுவதை ஏற்க முடியாது. இது தனிநபருக்கு எதிரான புகார் இல்லை.

    பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆளும் கட்சிக்கு எதிரான புகாராகும். மேலும், கவர்னரிடம் போய், இந்த 18 பேரும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி கடமையை ஆற்றுங்கள் என்று மனு கொடுத்துள்ளனர். கவர்னருக்கு என்ன அதிகாரம் உள்ளது? ஒரு மாநில அரசை கலைக்கும் அதிகாரம் தான் உள்ளது. அப்படிப்பட்டவரிடம் போய் கடமை ஆற்றுங்கள் என்று மனு கொடுத்தால், தமிழக அரசை கலைத்து விடுங்கள் என்று தானே அர்த்தம்.

    அதனால், 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு சட்டப்படி பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு பிறப்பித்ததில், சட்டவிதி மீறலோ, உள்நோக்கம் கொண்டதோ இல்லை. சபாநாயகர் அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்துதான் இறுதி முடிவு எடுத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இவ்வாறு அவர் வாதிட்டார். அவரது வாதம் தொடர்ந்து நடந்து வருகிறது. நேற்று, 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தகக்து. 
    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் ஜக்கையனுக்கும் தங்களுக்கும் வெவ்வேறு அளவுகோல்கள் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக டிடிவி தரப்பு வாதாடியது. #MLAsDisqualificationCase
    சென்னை:

    டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு கூறியதையடுத்து மூன்றாவது நீதிபதிக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து மூன்றாவது நீதிபதி சத்யநாராயணன் முன்னிலையில் இன்று வழக்கு விசாரணை தொடங்கியது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் வைக்கப்பட்ட வாதம் வருமாறு:-

    18 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு அரசியல் சாசனத்திற்கு விரோதமானது; இயற்கை நீதிக்கு எதிரானது; உள்நோக்கம் கொண்டது. சபாநாயகர் உத்தரவை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியும் என நீதிபதி சுந்தர் தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளார்


    பிரச்சனை தொடர்பாக உட்கட்சியை அணுகவில்லை என முதலமைச்சர் தரப்பில் சபாநாயகரிடம் பதில் அளிக்கப்பட்டது. இதன் நகலை எங்களுக்கு வழங்கியிருந்தால் பதில் அளித்திருப்போம். சபாநாயகர் முன் தாக்கல் செய்யாத ஆவணங்களின் அடிப்படையில் ததிகுதிநீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ஜக்கையனுக்கும் 18 எம்.எல்.ஏ.க்களுக்கும் வெவ்வேறு அளவுகோல்கள் அடிப்படையில் மதிப்பீடு செய்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மேலும் அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கூட்டு சேர்ந்து 18 எம்.எல்.ஏ.க்களும் செயல்பட்டனர் என்பதை நிரூபிக்க எந்த ஆதாரங்களும் இல்லை.

    ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத சபாநாயகர், 18 எம்.எல்.ஏ.க்களை அவசரமாக தகுதி நீக்கம் செய்ததில் இருந்து உள்நோக்கத்துடன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது நிரூபணம் ஆகிறது.

    இவ்வாறு டிடிவி தினகரன் தரப்பு வாதிட்டது. #MLAsDisqualificationCase
    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் மூன்றாவது நீதிபதி சத்திய நாராயணன் முன்பு இன்று விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. #MLAsDisqualificationCase
    சென்னை:

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் வழக்கில், இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு கூறியதால் 3-வது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டார். ஆனால் அவரை சுப்ரீம் கோர்ட்டு மாற்றிவிட்டு சத்யநாராயணனை 3-வது நீதிபதியாக நியமித்தது.

    புதிய நீதிபதி சத்யநாராயணன் கடந்த 4-ம் தேதி விசாரணையை தொடங்கினார். முதலில் இரு தரப்பு வழக்கறிஞர்களையும் அழைத்து விசாரணையை நடத்துவது குறித்து ஆலோசித்தார். இந்த வழக்கை எப்போது தொடங்கி நடத்துவது என்பது குறித்து வழக்கறிஞர்களின் கருத்தை கேட்டறிந்தார்.

    அதன்பின்னர், வழக்கு விசாரணையை ஜூலை 23-ம் தேதிக்கு  ஒத்திவைத்தார். 23-ம் தேதி திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு விசாரணை தொடங்கும் என்றும், வெள்ளிக்கிழமை வரை 5 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்றும் நீதிபதி சத்தியநாராயணன் அறிவித்திருந்தார்.


    அதன்படி நீதிபதி சத்தியநாராயணன் இன்று காலை 10.30 மணிக்கு விசாரணையை தொடங்கினார். இந்த விசாரணையின்போது அரசு மற்றும் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் சார்பாக ஆஜராகும் வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க உள்ளனர். முதலில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி வாதாடினார். #MLAsDisqualificationCase
    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிமன்றம் மூலம் வென்று மீண்டும் சட்டசபைக்கு வருவார்கள் என்று நாமக்கலில் டி.டி.வி. தினகரன் கூறினார். #TTVDhinakaran #18MLACase
    நாமக்கல்:

    நாமக்கல்லில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் இன்று ஒருவருடைய நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடக்கிறது. உங்கள் கருத்து என்ன?

    அரசுக்கு முட்டை எல்லாம் சப்ளை செய்கிறார்கள். அதுமட்டுமல்ல சத்துணவு துறைக்கு நிறைய பொருள் சப்ளை செய்கிறார்கள். அவர்களது நிறுவனம் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடப்பதை நான் தொலைக்காட்சியில் பார்த்தேன்.

    உங்களுக்கே தெரியும். அது திருச்செங்கோடு, நாமக்கல் போன்ற பகுதிகளில் அதிக இடங்களில் சோதனை நடக்கிறது. இதற்கு பின்னணியில் யார் இருக்கிறார்? யார்? யாரை நோக்கி இது குறி வைத்து இருக்கிறார்கள் என்பது நாமக்கல் மாவட்ட மக்களுக்கு குறிப்பாக குமாரபாளையம் பகுதி மக்களுக்கு நன்றாக தெரியும்.

    2006-ல் சட்டமன்ற உறுப்பினராக ஆனவர்கள் அன்றைக்கு சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை கொடுத்து இருப்பார்கள். இன்றைக்கு அவர்களது சொத்து மதிப்பு என்ன? தமிழ்நாடு மட்டுமல்ல, வெளி மாநிலங்களிலும் ஆக்டோபஸ் மாதிரி அவர்களுடைய பினாமி பெயரில் பரவி இருக்கிறதாக வந்த தகவலின் அடிப்படையில் தான் இந்த சோதனை நடைபெறுவதாக சொல்கிறார்கள்.

    பார்ப்போம்.. பொறுத்து இருந்து பார்ப்போம்... இன்னும் இதைபோல் நிறைய வேடிக்கைள் எல்லாம் நடக்கும் என தகவல்கள் வருகிறது.

    கடந்த 2 வருடங்களாக தமிழ்நாட்டை பலர் சுரண்டி உள்ளார்கள். சுரண்டியவர்களிடம் சோதனை நடப்பதாக தகவல் வந்து இருக்கிறது.

    இந்த சோதனை மத்திய அரசின் அழுத்தமா?

    யாருடைய அழுத்தமும் இல்லை. நிறைய பேருடைய பினாமிகளை நோக்கி இந்த சோதனை நடப்பதாக சொல்கிறார்கள். சோதனை முடிந்ததும் என்ன வெளி வருகிறது என்று பார்ப்போம்.

    தமிழ்நாட்டில் இரண்டு பக்கமும் நிறைய கொள்ளையடித்தவர்கள் யார்? யார்? என்று உங்களுக்கே தெரியும். அவர்களுடைய பினாமி என்று சொல்கிறேன்.

    பாராளுமன்ற தேர்தல் கூடிய விரைவில் வர உள்ளதே?

    2019-ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் வரும். அதற்குள் இந்த சட்டமன்ற தேர்தல் வரவேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களுடைய எதிர்ப்பார்ப்பு.

    இந்த மக்கள் விரோத ஆட்சி விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்பது தான் மக்களுடைய எதிர்ப்பார்ப்பு. மீண்டும் அம்மா அவர்களின் ஆட்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமையில் வந்தால் தான் ஏழை, எளிய மக்கள், விவசாய பெருங்குடிமக்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள் போன்ற சமுதாயத்தின் பல்வேறு பிரிவினர் பயன்பெறுவார்கள்.


    பா.ஜ.க. தலைவர் அமித்ஷா 9-ந்தேதி தமிழகம் வருகிறார். இதனால் ஏதேனும் மாற்றம் ஏற்படுமா?

    அதுபற்றி எனக்கு தெரியாது.

    18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு குறித்து எப்படி பார்க்கிறீர்கள்?

    18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு நிச்சயம் நீதிமன்றத்தின் மூலம் வென்று மீண்டும் சட்டமன்றத்திற்கு வருவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #18MLACase
    தகுதி நீக்க வழக்கில் 3-வது நீதிபதி உடனே விசாரணையை தொடங்க வேண்டும் என்று வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் சார்பில் ஐகோர்ட்டில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்றக்கோரி டி.டி.வி. தினகரனை ஆதரிக்கும் 18 எம்.எல்.ஏ.க்கள் கவர்னரை சந்தித்து மனு கொடுத்தனர்.

    இதையடுத்து அந்த 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் கடந்த ஆண்டு அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

    அதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி சுந்தர் இருவரும் அந்த வழக்கை விசாரித்து 10 மாதங்களுக்குப் பிறகு கடந்த மாதம் 14-ந்தேதி தீர்ப்பை வெளியிட்டனர்.

    சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தலைமை நீதிபதி இந்திராபானர்ஜியும் செல்லாது என்று நீதிபதி சுந்தரும் மாறுபட்ட தீர்ப்புகளை வெளியிட்டனர். இதனால் 18 எம்.எல்.ஏ.க் கள் தகுதி நீக்கம் வழக்கு மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு விடப்பட்டுள்ளது.

    சென்னை ஐகோர்ட்டு நீதிபதி விமலா மூன்றாவது நீதிபதியாக இருந்து இந்த வழக்கை விசாரிப்பார் என்று தகவல் வெளியானது. இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களில் தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்ஏ. தவிர மற்ற 17 பேரும் சுப்ரீம்கோர்ட்டில் மனு செய்தனர்.

    அந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் விசாரித்து கடந்த 27-ந்தேதி சில உத்தரவுகளை பிறப்பித்தனர். அதன்படி மூன்றாவது நீதிபதியாக சத்திய நாராயணன் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் எப்போது விசாரணையை தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த விசாரணையை பொருத்தவரை எந்த காலக்கெடுவும் இல்லை. எனவே கடந்த 6 நாட்களாக இந்த வழக்கு விசாரணை எப்போது தொடங்கும் என்பதை உறுதி செய்ய முடியாத நிலை இருந்தது.

    இந்த நிலையில் மூன்றாவது நீதிபதி சத்திய நாராயணன் உடனே தனது விசாரணையை தொடங்க வேண்டும் என்று கோரி 17 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டை நாடியுள்ளனர். அவர்கள் சார்பில் இது தொடர்பாக வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் சக்திவேலை சந்தித்து மனு கொடுத்தார்.

    அவர் அந்த மனுவில், “18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காரணத்தால், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 18 தொகுதிகளும் பிரதிநிதிகள் இல்லாமல் உள்ளன. எனவே பொதுமக்கள் நலன் கருதி 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை மூன்றாவது நீதிபதி உடனே விசாரிக்கும் வகையில் பட்டியலில் சேர்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    இது தொடர்பாக வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் “மாலைமலர்” நிருபரிடம் கூறியதாவது:-

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் விரைந்து தீர்ப்பு அளிக்க 3-வது நீதிபதி சத்திய நாராயணனை சுப்ரீம் கோர்ட்டு நியமித்துள்ளது. ஆனால் இன்னும் அவர் விசாரணை தொடங்கவில்லை.

    இதனால் உயர்நீதிமன்ற பதிவாளரை நேற்று காலையில் சந்தித்து சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை சுட்டிக்காட்டி வழக்கை விரைந்து நடத்த வலியுறுத்தி கடிதம் கொடுத்துள்ளேன்.

    நீதிபதி சத்திய நாராயணன் வேறு ஒரு பெஞ்சில் பணியில் உள்ளதால், எங்களது வழக்கை சுட்டிக்காட்டி எங்கள் வழக்கை விரைந்து விசாரிக்க நடவடிக்கை எடுக்குமாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

    ஏனென்றால் 18 தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர்கள் பணியாற்ற முடியாத சூழல் உள்ளதால் மக்கள் நலன் கருதி கால தாமதம் ஏற்படாமல் விரைந்து விசாரிக்க அதில் வலியுறுத்தி உள்ளேன்.

    இவ்வாறு வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் கூறினார்.
    எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கை விசாரிப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மூன்றாவது நீதிபதி விமலாவுக்கு பதில் சத்தியநாராயணாவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது. #MLAsDisqualificationCase #SCJudge
    புதுடெல்லி:

    தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து, இந்த வழக்கு 3-வது நீதிபதியின் அமர்வுக்கு மாற்றப்பட்டது. 3-வது நீதிபதியாக, நீதிபதி விமலா அறிவிக்கப்பட்டார்.

    ஆனால், இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு விசாரித்தால் காலதாமதமாகும் என்பதால் சுப்ரீம் கோர்ட்டு அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் தங்க தமிழ்ச்செல்வனை தவிர மற்ற 17 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்தனர். அதேசமயம் தமிழக அரசு மற்றும் சட்டப்பேரவை செயலாளர் சார்பில் கேவியட் மனுக்களும் தாக்க்ல செய்யப்பட்டன.



    இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் 3-வது நீதிபதியாக சத்யநாராயணாவை பரிந்துரை செய்தது.

    மேலும், 3-வது நீதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை திரும்பப் பெற வேண்டும் என்றும், நீதிபதிகள் மீது இதுபோன்று குற்றச்சாட்டு மனுவை இனி தாக்கல் செய்யக்கூடாது என்றும் வழக்கு தொடர்ந்த 17 பேருக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. #MLAsDisqualificationCase #SCJudge
    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் 3வது நீதிபதி விமலா நாளை தனது விசாரணையை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    சென்னை:

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் மனு கொடுத்த , டி.டி.வி. தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து, கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் 18 பேரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்புக்களை வழங்கினர்.

    சபாநாயகர் உத்தரவில் தலையிட முடியாது. அவரது உத்தரவில் உள்நோக்கம் இல்லை. போதிய கால அவகாசம் வழங்கிய பின்னர்தான் 18 பேர் மீதும் சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார். அதனால், அந்த உத்தரவில் தலையிட முடியாது. அந்த உத்தரவு சரிதான் என்று தலைமை நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

    இதற்கு நேர் மாறான தீர்ப்பை நீதிபதி எம்.சுந்தர் வழங்கினார். அவர் சபாநாயகர் உள்நோக்கத்துடன் தான் உத்தரவு வழங்கியுள்ளார். அதனால், அவரது உத்தரவை ரத்து செய்கிறேன் என்று கூறியிருந்தார்.

    நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், இந்த வழக்கு 3-வது நீதிபதி விசாரணைக்கு மாற்றப்பட்டது. நீதிபதி எஸ்.விமலா, இந்த வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இந்த வழக்கு நாளை (புதன்கிழமை) பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளதாகவும், அதன்பின்னர் தினந்தோறும் என்ற அடிப்படையில் இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்றும் ஐகோர்ட்டு வட்டாரத்தில் கூறப்படுகிறது.

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் தேர்தல் நடந்தால் அ.தி.மு.க. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என்று சீமான் கூறினார். #Seeman #18MLAs #ADMK
    மதுரை:

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசை ஆதரிக்கவில்லை என்பதற்காக 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்திருப்பது ஜனநாயக படுகொலை ஆகும்.

    தமிழக அரசுக்கு தைரியம் இருந்தால் அந்த தொகுதிகளில் தேர்தல் நடத்தட்டும். அப்படி தேர்தல் வந்தால் எடப்பாடி அணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது.

    தமிழக அரசு வளர்ச்சி என்ற பெயரில் விவசாயிகளை நிலமற்ற அகதிகளாக மாற்ற முயற்சி செய்கிறது. தமிழகத்தில் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டு வருகிறது.

    சேலம்-சென்னை பசுமை வழி சாலை திட்டம் முட்டாள்தனமான ஒன்று. இதனால் தான் எடப்பாடி பழனிசாமி அதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை.


    தமிழக ஆட்சியாளர்களுக்கு எதிராக நடிகர் மன்சூர் அலிகான் பேசியதாக உடனடி நடவடிக்கை எடுத்த அரசாங்கம், எஸ்.வி. சேகர் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை? இது பாரபட்சமான செயல்பாடாகும்.

    தூத்துக்குடி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இன்று வரை கைது செய்து வருவது பெரிய அடக்குமுறை ஆகும்.

    தமிழகத்தில் நேர்மையற்ற ஆட்சி நடக்கிறது. போராட்டத்தை முடக்க நினைப்பது சர்வாதிகாரம் ஆகும். தமிழிசைக்கு எதிராக கருத்து சொன்னால் கைது செய்கிறார்கள். இதுவே பெண்களுக்கு எதிராக கருத்து சொல்பவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குகிறார்கள். தமிழகத் தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார். #NaamThamizharKatchi #Seeman #18MLAs
    18 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் திரும்பி வந்தால் பாராட்டுக்குரியது என்று திருச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #18MLAs #TNCM #EdappadiPalanisamy
    திருச்சி:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இன்று மாலை காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சி வந்தார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெல்லியில் நேற்று நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையக்குழு விழிப்புணர்வு கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

    காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் முறைப்படுத்தும் குழுவுக்கு தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் சார்பில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கர்நாடகா இன்னும் உறுப்பினர்களை நியமிக்காமல் உள்ளது.

    எனவே உடனடியாக நியமித்து, கூட்டத்தை கூட்டி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


    கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. விரைவில் அணை நிரம்பி விடும்என எதிர்பார்க்கிறோம். 90 அடி நிரம்பியவுடன் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும்.

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட தங்கதமிழ்செல்வன் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் யார் வேண்டுமானாலும் மீண்டும் அ.தி.மு.க.வில் சேரலாம். அது மிகவும் பாராட்டுக்குரியது.

    இவ்வாறு அவர் கூறினார். #18MLAs #TNCM #EdappadiPalanisamy

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட18 எம்.எல்.ஏ.க்களை கட்சியில் மீண்டும் சேர்த்துக் கொள்வதில் எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #18MLAs
    சென்னை:

    அ.தி.மு.க.வில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கில் ஐகோர்ட்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகளை கூறியதால் 3-வது நீதிபதியின் விசாரணைக்கு இந்த வழக்கு செல்ல உள்ளது.

    அந்த நீதிபதி தீர்ப்புக்கு பிறகுதான் எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லுமா? இல்லையா? என்பது பற்றிய முடிவு தெரியும்.

    இந்த நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் இது சம்பந்தமாக ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதன் விவரம்:

    கேள்வி: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் மீண்டும் கட்சிக்கு கொண்டுவர ஏதேனும் நடவடிக்கை எடுக்கிறீர்களா?

    பதில்: அ.தி.மு.க. என்பது மாபெரும் கட்சி. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற தலைவர்களால் இந்த கட்சி சிறப்பான வளர்ச்சியை பெற்றிருக்கிறது. தற்போதைய அரசு அம்மா ஏற்படுத்தியது.

    எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் தலைவராக ஏற்றுக்கொண்ட யாரும் அடுத்த கட்சிக்கு செல்ல மாட்டார்கள். இந்த 18 எம்.எல்.ஏ.க்களை பொறுத்த வரை அவர்களை கட்சியில் மீண்டும் சேர்த்துக் கொள்வதில் எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

    அவர்கள் கட்சிக்கு மீண்டும் வர விரும்பினால் நாங்கள் அவர்களை அழைக்க தயாராக இருக்கிறோம். அதே நேரத்தில் சசிகலா, தினகரன், திவாகரன் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஒருபோதும் கட்சியில் சேர்க்கமாட்டோம்.


    கே: 18 எம்.எல்.ஏ.க்களும், எதிர் அணியில் 10 மாதமாக செயல்பட்டு வந்துள்ளனர். அவர்கள் கட்சிக்கு திரும்பி வர ஏதேனும் சலுகைகள் அளிக்க தயாராக இருக்கிறீர்களா?

    ப: அரசியல் கட்சி என்பது வியாபார ஒப்பந்தம் அல்ல. வியாபாரத்தை போல சலுகைகள், எதிர்பார்ப்புகளை வழங்க முடியாது. இது முழுமையாக அரசியல் கட்சி சம்பந்தப்பட்ட பிரச்சனை. கட்சியின் உண்மையான உறுப்பினர்கள் கட்சிக்கு பிரச்சனைகள் வருவதை விரும்பமாட்டார்கள். கட்சிக்கு பாதுகாப்பாக இருப்பார்கள்.

    இதுபோன்ற கருத்துக்கள் கொண்டவர்கள் கட்சிக்கு திரும்ப வருவார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் மறைவுக்கு பிறகு எங்களது கட்சியில் இருந்து யாரும் வெளியேறியது இல்லை.

    கே: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் அ.தி.மு.க. ஏதேனும் பேச்சு வார்த்தை நடத்துகிறதா?

    ப: தற்போது இந்த வி‌ஷயம் (தகுதி நீக்கம்) கோர்ட்டில் இருக்கிறது. இது சம்பந்தமான தீர்ப்பு வந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கட்சி முடிவு செய்யும்.

    கே: 18 எம்.எல்.ஏ.க்களும் திரும்ப வருவார்கள் என்று நம்புகிறீர்களா?

    ப: கட்சியின் நலனை அவர்கள் உண்மையாக விரும்புபவர்களாக இருந்தால் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மீது உண்மையான அன்பு இருந்தால் அவர்கள் கட்சிக்கு திரும்ப வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #18MLAs #TNMinister #Jayakumar
    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் காலத்தினை கருத்தில் கொண்டு மிக விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார். #Congress #Thirunavukkarasar #18MLAs
    கோவை:

    ஊட்டியில் அரசு பஸ் பள்ளத்தில் உருண்டு 9 பேர் பலியானார்கள். 30 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 15 பேர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    அவர்களில் 6 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்கள். தற்போது 9 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்த திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஊட்டியில் அரசு பஸ் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ. 2 லட்சம் நிதி அறிவித்துள்ளது. சுனாமி, இயற்கை சீற்றம், போன்றவற்றில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு ரூ. 20 லட்சம் வரை வழங்கி வருகிறது.

    அதே போல் ஊட்டி பஸ் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 20 லட்சம் வழங்க வேண்டும். அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

    காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்கள் குணமாக பல மாதங்கள் ஆகும் என்பதால் அவர்களது குடும்பத்துக்கு தேவையான நிதி உதவியை அரசு வழங்க வேண்டும்.

    ஊட்டி மலை பாதை அதிக வளைவு, நெளிவுகளை கொண்டது. எனவே அங்கு தரமான பஸ்களை இயக்க வேண்டும். ஊட்டியில் விபத்து அடிக்கடி நடைபெறுவதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க அங்கு மல்டி ஸ்பெ‌ஷல் ஆஸ்பத்திரி அமைக்க வேண்டும்.

    தற்போது அங்கு மூடப்பட்டு உள்ள இந்துஸ்தான் பிலிம் தொழிற்சாலையில் மல்டி ஸ்பெ‌ஷல் மருத்துவமனை அமைக்கலாம். இல்லாவிட்டால் ஊட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும்.

    ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 7 பேரின் கருணை மனுக்களை ஜனாதிபதி நிராகரித்துள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.

    ஜனாதிபதி நிராகரித்து விட்ட நிலையில் அரசியல் ரீதியாக எந்த முயற்சியும் செய்ய முடியாது. கோர்ட்டு மூலம் தான் நிவாரணம் பெற முயற்சிக்க வேண்டும். இந்த வி‌ஷயத்தில் சட்டம் தன் கடமையை செய்யும்.

    ராஜீவ் கொலையாளிகள் தங்களை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என கூறி உள்ளதாக தெரிகிறது.

    அவர்கள் விடுதலையை நம்பி இருந்து கருணை மனு நிராகரிக்கப்பட்டதால் வருத்தத்தில் அவ்வாறு சொல்லி இருக்கலாம். இது ஏற்புடைய கருத்து அல்ல.


    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் இரு நீதிபதிகள் இரு விதமான தீர்ப்பு வழங்கி உள்ளனர். இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கி உள்ளதால் 18 எம்.எல்.ஏ.க்களும் தற்போது பதவியில் உள்ளார்களா? இல்லையா? என்பதில் பிரச்சனை உள்ளது.

    நீதி திரிசங்கு சொர்க்கத்தில் உள்ளது. தற்போது 3-வது நீதிபதி தீர்ப்பு வழங்குவார் என கூறப்பட்டு உள்ளது. காலத்தினை கருத்தில் கொண்டு மிக விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும். 18 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டு ஏற்கனவே 8 மாதம் ஆகி விட்டது. இப்பிரச்சனை 18 எம்.எல்.ஏ. சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல. தொகுதி மக்கள் பிரச்சனை.

    ஒரு தொகுதிக்கு சுமார் 2 லட்சம் மக்கள் இருந்தாலும் 18 தொகுதிகளுக்கும் சேர்த்து 45 லட்சம் மக்களின் பிரச்சனை ஆகும். மேலும் அரசுக்கு ஸ்திரதன்மை உள்ளதா? என்பது இந்த தீர்ப்பில் தெரிய வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார், கணேஷ் எம்.எல்.ஏ., முன்னாள் மாவட்ட தலைவர் மகேஷ் குமார், நிர்வாகிகள் உமாபதி, சவுந்திர குமார், கணபதி சிவகுமார், துளசி ராஜ், கேபிள் வினோத், காமராஜ்துல்லா, எம்.எஸ். பார்த்தீபன், காட்டூர் சோமு, இருகூர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். #Congress #Thirunavukkarasar #18MLAs
    ×