search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Senthil Balaji"

    • அமைச்சர் செந்தில் பாலாஜி காணொலி காட்சி வாயிலாக முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
    • செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 8-ந்தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

    சென்னை:

    சட்ட விரோத பணபரிமாற்றம் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26-ந்தேதி வரை நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் காணொலி காட்சி வாயிலாக முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

    இதையடுத்து செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 8-ந்தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார்.

    • சிறைச்சாலைகளில் தண்டனை கைதிகளுக்கு மட்டுமே வேலை வழங்கப்படுகிறது.
    • செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வருகிற 26-ந் தேதி வரை உள்ளது.

    சென்னை:

    அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஒரு மாதத்துக்கும் மேலாக அங்கு சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜி நேற்று மாலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய்களில் ஏற்பட்டிருந்த அடைப்பை சரி செய்வதற்காக செந்தில் பாலாஜிக்கு இருதய ஆபரேஷன் செய்யப்பட்டிருப்பதால் அவருக்கு டாக்டர்களின் கண்காணிப்பு தேவைப்படும். இதன் காரணமாக புழல் சிறை வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    உடல்நிலை நன்றாக தேறிய பிறகு செந்தில் பாலாஜி கைதிகள் அறைக்கு மாற்றப்படுகிறார். செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதால் அவருக்கு சிறையில் முதல் வகுப்பு வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன. அதனை முழுமையாக பார்க்கலாம்.

    புழல் சிறை கைதிகளுக்கு காலையில் உணவாக வெண் பொங்கல், உப்புமா, கஞ்சி ஆகியவை மாறி மாறி வழங்கப்படுகின்றன. இந்த உணவில் இருந்து முதல் வகுப்பு சிறைவாசியான செந்தில்பாலாஜி விலக்கு கேட்கலாம். தனக்கு சிறையில் உள்ள கேண்டீனில் இருந்து இட்லி, தோசை போன்றவற்றை வாங்கி தருமாறு கேட்கலாம்.

    இட்லி, தோசை போன்றவை மற்ற கைதிகளுக்கு எப்போதுமே வழங்கப்படுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மதிய உணவாக சாதம், சாம்பார், கூட்டு ஆகியவற்றை மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும். உணவை முதல் வகுப்பு கைதிகள் விரும்பினால் சாப்பிடலாம். இல்லையென்றால் கேண்டீனில் கிடைக்கும் சாப்பாட்டை வாங்கி சாப்பிடலாம்.

    இதே போன்று இரவு உணவையும் அவர்கள் விரும்பியபடி டிபனாகவே எடுத்துக் கொள்ளலாம்.

    முதல் வகுப்பு கைதிகளுக்கு சிறப்பு உணவாக வாரத்தில் 3 நாட்கள் கோழிக்கறி வழங்கப்படுவது வழக்கம். அதே நேரத்தில் தனக்கு அசைவ உணவு வேண்டாம் என்று கைதி கோரினால் சைவ உணவாக அவருக்கு சாதத்தோடு பிசைந்து சாப்பிட நெய் வழங்கப்படும். வாழைப்பழம் ஒன்றும் கொடுக்கப்படும். செந்தில் பாலாஜி இவற்றில் ஏதாவது ஒன்றை கேட்டு வாங்கி சாப்பிடலாம்.

    புழல் சிறை வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரியையொட்டியே முதல் வகுப்பு கைதிகளுக்கான அறைகள் உள்ளன. மொத்தம் 9 அறைகள் முதல் வகுப்பு கைதிகளுக்காக ஒதுக்கி தயார் நிலையில் சகல வசதிகளோடு உள்ளன. இதில் செந்தில் பாலாஜிக்கு தனி அறை ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி நேற்று புழல் சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தனி அறையை சிறை ஊழியர்கள் சுத்தம் செய்து புதிய படுக்கை விரிப்பு உள்ளிட்டவைகளை போட்டு வைத்துள்ளனர். செந்தில் பாலாஜி ஒதுக்கப்பட்டுள்ள அறையில் கட்டில்-மெத்தை போன்றவற்றுடன் தனி சேர், நாற்காலி மற்றும் மேஜை ஒன்றும் போடப்பட்டுள்ளது.

    இந்த அறைக்கு மாற்றப்பட்ட பின்னர் செந்தில்பாலாஜி மெத்தையில் படுத்து ஓய்வு எடுக்கும் நேரங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் நாற்காலியில் அமர்ந்து 'ரிலாக்ஸ்' செய்து கொள்ளலாம். தினசரி நாளிதழ்கள் புத்தகங்கள் போன்றவையும் முதல் வகுப்பில் வழங்கப்படும்.

    மின்விசிறி ஒன்றும் போடப்பட்டிருக்கும். இப்படி முதல் வகுப்பு அறையில் செந்தில் பாலாஜிக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

    நேற்று மாலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜி, இரவில் ஆஸ்பத்திரியிலேயே தங்கினார். அங்கு இரவில் இட்லி சாப்பிட்ட அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். பின்னர் ஆஸ்பத்திரி படுக்கையிலேயே செந்தில் பாலாஜி தூங்கினார்.

    செந்தில் பாலாஜி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நோயாளி என்பதால் அவரை சிறை ஆஸ்பத்திரி டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்தபடியே உள்ளனர்.

    முதல் வகுப்பு கைதியாக சென்று முக்கிய பிரமுகர் அந்தஸ்தில் இருப்பதால் செந்தில் பாலாஜி மீது கூடுதல் கவனம் செலுத்தி டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

    தற்போதைய நிலையில், செந்தில் பாலாஜிக்கு வெளிச்சாப்பாடு கிடைக்க வாய்ப்பு இல்லை. அது போன்று வெளியில் இருந்து சிறப்பு சாப்பாட்டை வரவழைத்து சாப்பிட வேண்டுமென்றால் அதற்கு கோர்ட்டு மூலமாக அனுமதி பெற வேண்டும் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    செந்தில் பாலாஜி நேற்று மாலையில்தான் புழல் சிறைக்கு மாற்றப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதனால் தற்போதைய நிலையில் செந்தில் பாலாஜி சிறையில் தயாரித்து வழங்கப்படும் உணவு வகைகளையே சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

    சிறைச்சாலைகளில் தண்டனை கைதிகளுக்கு மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. நீதிமன்ற காவலில் விசாரணை கைதிகளாக இருப்பவர்கள் வேலையில் ஈடுபடுத்தப்படுவது இல்லை. அதே நேரத்தில் அவர்கள் விரும்பி சிறைத்துறை அதிகாரிகளிடம் கடிதம் கொடுத்தால் அவர்களுக்கு வேலை கொடுக்கலாமா என்பது பற்றி சிறைத்துறை அதிகாரிகள் முடிவு செய்வார்கள்.

    செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வருகிற 26-ந் தேதி வரை உள்ளது. அன்று அவர் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட வேண்டும். மீண்டும் காணொலி வாயிலாக அவர் ஆஜர்படுத்தப்படுவாரா? இல்லை நேரில் ஆஜர்படுத்தப்படுவாரா? என்பது செந்தில் பாலாஜியின் உடல் நிலையை பொறுத்தே அமையும்.

    வருகிற 26-ந் தேதிக்கு பிறகும் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்படுமா? அல்லது அதற்குள் அமலாக்கத்துறை காவலில் எடுப்பார்களா? என்பது வரும் நாட்களில் தெரிய வரும்.

    • அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ.1.62 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
    • 3 வழக்குகளை ஒரே வழக்காக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 2011-ம் ஆண்டு முதல் 2015 வரை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 81 பேரிடம் பணம் பெற்று ரூ.1.62 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகார் அடிப்படையில் 2018-ம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடி சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    முன்ஜாமீன் பெற்றதால் அவரை கைது செய்யவில்லை. அவர் அப்போது வழக்கு விசாரணைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்னிலையில் ஆஜர் ஆனார். இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரும்ப கொடுக்கப்பட்டதாகவும், இதனால் இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்று செந்தில் பாலாஜி உள்ளிட்ட இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது.

    ஆனால் இந்த வழக்கை ரத்து செய்யக்கூடாது என்றும், லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவின் கீழ் புதிதாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்றும், 2 மாதத்தில் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    மேலும் முறைகேடாக பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் உள்ளிட்டவர்கள் மீது அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்தது. இதை அடுத்து வருமான வரித்துறை சோதனை, அமலாக்கத்துறை சோதனை நடவடிக்கைகளை அமைச்சர் செந்தில் பாலாஜி சந்தித்தார். அதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

    கைது செய்யப்பட்டபோது மயங்கி விழுந்தார். பின்னர் இருதயத்தில் ரத்த குழாயில் அடைப்பு இருப்பது தெரிய வந்ததால், பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டு செந்தில் பாலாஜி சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்ற காவலில் தற்போது உள்ளார். 3 நீதிபதிகள் அடங்கிய விசாரணையில், செந்தில் பாலாஜி மீதான வழக்கை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு பச்சைக்கொடி காட்டி சென்னை ஐகோர்ட்டும் தீர்ப்பு வழங்கிவிட்டது.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், செந்தில் பாலாஜி உள்ளிட்டவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவின் கீழ் புதிதாக வழக்குப்பதிவு செய்து அடுத்தகட்ட விசாரணை நடத்தி வருகிறார்கள். மொத்தம் 3 வழக்குகள் உள்ளன. அது தொடர்பாக சம்மன் அனுப்பி 500 பேர் வரை விசாரித்து விட்டதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் 3 வழக்குகளை ஒரே வழக்காக மாற்றுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு விதித்த 2 மாத காலக்கெடு முடிந்துவிட்ட நிலையில், மேலும் 6 மாதம் காலஅவகாசம் கேட்டு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    • செந்தில் பாலாஜி மனைவியின் ஆட்கொணர்வு மனுவில், நீதிமன்ற காவல் சட்டப்படியானது என தீர்ப்பு.
    • உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதால் அமலாக்கத்துறை நடவடிக்கை.

    அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டபோது, நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அறுவை சிகிச்சை முடிந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மனைவி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நேற்று 3-வது நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அப்போது அவரது நீதிமன்ற காவல் சட்டப்படியானது எனத் தெரிவித்தார்.

    தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜியின் மனை மேல்முறையீடு மனுதாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

    அதில் தங்களுடைய கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என குறிப்பிட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீதிபதி பரத சக்கரவர்த்தி தீர்ப்பில் உடன்படுகிறேன்.
    • மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருத முடியாது.

    சென்னை:

    அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

    செந்தில் பாலாஜி கைது நடவடிக்கைக்கு எதிராக அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர்.

    அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு நீதிபதி நிஷா பானு ஏற்றார்.

    ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல, நீதிமன்ற காவல் சட்டவிரோதமில்லை, மருத்துவமனையில் உள்ள நாட்கள் நீதிமன்ற காவல் காலமாக கருதப்படாது. மருத்துவ ரீதியாக தகுதி பெற்றபின்உரிய நீதிமன்ற அனுமதி பெற்று செந்தில் பாலாஜியிடம் விசாரிக்கலாம் என நீதிபதி பரத சக்கரவர்த்தி கூறினார். இதையடுத்து 3-வது நீதிபதியாக சி.வி. கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.

    கடந்த 11-ந்தேதி முதல் 3-வது நீதிபதி முன்பு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. 3-வது நாளாக இன்று வாதம் நடைபெற்றது. அப்போது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் கூறியதாவது:-

    நீதிமன்றத்தில் புகார் தாக்கல் செய்யும் வரை புலன் விசாரணை தொடரலாம். அமர்வு நீதிமன்றம் அனைத்து தரப்பு வாதங்களை கேட்டபின் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிபதி பரத சக்கரவர்த்தி தீர்ப்பில் உடன்படுகிறேன். அமலாக்கத்துறைக்கு காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருத முடியாது. கைது, நீதிமன்ற காவல் சட்டப்படியானது, ஆட்கொணர்வு மனு ஏற்கத்தக்கதல்ல என்றார்.

    • ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.

    சென்னை:

    சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்தது. அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்ட நிலையில் அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டது.

    அமலாக்கத் துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை வரும் 12-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி உத்தரவிட்டார். இதனால் அவர் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.

    இதற்கிடையே, அமலாக்கத் துறை தனது கணவரை சட்டவிரோதமாக கைது செய்துள்ளதாக கூறி செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகவுள்ளது.

    இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பணமோசடி பிரிவில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், புதிதாக ஊழல் தடுப்பு பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது.

    • மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டிருப்பதாக செந்தில் பாலாஜியின் மனைவி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

    சென்னை:

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 13-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற காவலில் இருக்கும் அவருக்கு காவேரி மருத்துவமனையில் இருதய ஆபரேசன் செய்யப்பட்டது. மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்ட விரோதமானது என்றும், சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறி சென்னை ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாங்களும் கடந்த மாதம் 27ம் தேதி நிறைவடைந்ததையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது. நாளை காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் தீர்ப்பு வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • போக்குவரத்து துறையில் 2014 முதல் 2015 வரை பணியமர்த்தப்பட்ட சுமார் 1500 பேரிடம் விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
    • கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 150 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, டிரைவர், கண்டக்டர் பணியிடங்களுக்கு பணம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் பேரில் அமலாக்க துறையினர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தி கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

    செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது நீதிமன்ற காவலில் அவர் உள்ளார்.

    மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு விசாரணையை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விரைவுப்படுத்தி உள்ளனர்.

    போக்குவரத்து துறையில் 2014 முதல் 2015 வரை பணியமர்த்தப்பட்ட சுமார் 1500 பேரிடம் விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    முதற்கட்டமாக 300 போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 150 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

    பணியமர்த்தப்பட்டது எப்படி? சமர்ப்பித்த ஆவணங்கள் என்ன? என விசாரித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.

    • பா.ஜனதா ஆட்சி செய்து வரும் மணிப்பூர் மாநிலம் இன்று வரை எரிந்து கொண்டிருக்கிறது.
    • 15 எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்றாக சேர்ந்ததால் அவர்களுக்கு பயம்.

    சென்னை:

    சென்னை கிழக்கு மாவட்டம் அம்பத்தூர் கிழக்கு பகுதி தி.மு.க. சார்பில் கொரட்டூரில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அமைச்சர் பி.கே.சேகர் பாபு முன்னிலையில், அம்பத்தூர் கிழக்கு பகுதி செயலாளர் எம்.டி.ஆர்.நாகராஜ் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி, நடிகர் நாசர், நக்கீரன் கோபால், பேராசிரியர் அருணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்தில் டி.ஆர்.பாலு எம்.பி பேசுகையில், பா.ஜனதா ஆட்சி செய்து வரும் மணிப்பூர் மாநிலம் இன்று வரை எரிந்து கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கே சரியில்லை. அங்கு மந்திரி வீட்டுக்கே பாதுகாப்பு கிடையாது. இன்றைய தினமும் நூற்றுக்கணக்கானோர் கொலை செய்யப்படுகிறார்கள். அதுவும் தலித் மக்கள் மற்றும் மலைவாழ் மக்கள் வீடு இல்லாத மக்கள் உட்பட பலர் தினந்தோறும் அவதிப்பட்டு வருகிறார்கள்.இது போன்ற மிக மிக மோசமான நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கையில் நாட்டில் இருக்கக்கூடிய பிரதமர் இதுவரை ஒரு வார்த்தை கூட அது பற்றி கூறவில்லை.

    15-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்த போது உள்துறை அமைச்சர் இது புகைப்படத்திற்காக மட்டும்தான் என்று கிண்டல் செய்கிறார். எந்த அளவு தைரியம் இருந்தால் இப்படி பேசுவார்கள். அவருக்கு நாவடக்கம் தேவை. 15 எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்றாக சேர்ந்ததால் அவர்களுக்கு பயம். 50 ஆண்டுகள் ஒரு கட்சிக்கு தலைவனாக இருந்த ஒருவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி தான். முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையில் ஒன்று கூடி என்ன முடிவு செய்கிறார்களோ அதைத்தான் கவர்னர் பின்பற்ற வேண்டும். அவர் தன்னிச்சையாக செயல்பட முடியாது. செந்தில் பாலாஜி பதவி நீக்கம் செய்யும் விவகாரத்தில் நான்கு மணி நேரம் கூட அவர்களால் ஒரு நிலையில் இருக்க முடிய வில்லை. நாடாளுமன்றத் தேர்தல் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் வரும் என்று நினைக்க வேண்டாம் முன் கூட்டியே டிசம்பர் மாதத்தில் கூட வர வாய்ப்பு இருக்கிறது என்றார். கூட்டத்தில் ஜோசப் சாமுவேல் எம்.எல்.ஏ, மண்டல குழு தலைவர் பி.கே.மூர்த்தி, தெற்கு பகுதி செயலாளர் டி. எஸ். பி. ராஜகோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அமலாக்கத்துறை சார்பில் அசோக்குக்கு 2 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.
    • வருகிற 27-ந்தேதி ஆஜராக வேண்டும் என்று மூன்றாவது சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் உள்ளிட்டோரின் வீடுகளில் முதலில் வருமான வரி சோதனையும், பின்னர் அமலாக்கத்துறை சோதனையும் நடைபெற்றது.

    இது தொடர்பாக அசோக் நேரில் ஆஜராகுமாறு இந்த 2 துறைகளின் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. கடந்த மாதம் 20ம் தேதிக்கு முந்தைய வாரமே அசோக்குக்கு சம்மன் அனுப்பப்பட்டு நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை அலுவலகங்களில் அசோக் கடந்த ஜூன் 20ம் தேதி ஆஜராகவில்லை. ஆனால், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக தேவையான ஆவணங்களை திரட்டவேண்டி இருப்பதால் வேறு ஒரு நாளில் ஆஜராகிறேன் என அசோக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

    அமலாக்கத்துறை சார்பில் அசோக்குக்கு 2 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாததால், மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையினர் முடிவு செய்தனர்.

    இந்த நிலையில் 3-வது முறையாக அசோக்குமாருக்கு வருமானவரிதுறை அதிகாரிகள் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர். வருகிற 27-ந்தேதி ஆஜராக வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • முதலமைச்சரின் ஆலோசனை இன்றி அமைச்சர்களை நியமிக்கவோ நீக்கவோ கவர்னருக்கு அதிகாரம் இல்லை.
    • கவர்னர் ஆர்.என்.ரவி, மாநில அரசியலிலும், மாநில அரசு நிர்வாகத்திலும் தலையிடும் வகையில் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    சென்னை:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜியை கவர்னர் ஆர்.என்.ரவி பதவி நீக்கம் செய்ததற்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. இது முழுக்க முழுக்க அரசியல் சாசனத்துக்கு எதிரான செயல். முதலமைச்சரின் ஆலோசனை இன்றி அமைச்சர்களை நியமிக்கவோ நீக்கவோ கவர்னருக்கு அதிகாரம் இல்லை.

    கவர்னர் ஆர்.என்.ரவி, மாநில அரசியலிலும், மாநில அரசு நிர்வாகத்திலும் தலையிடும் வகையில் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்வதற்கான மூர்க்கத்தனமான நடவடிக்கையை நிறுத்தி வைத்தாலும், அவர் கவர்னர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என்பதை தெளிவாக காட்டுகிறது. அவரை உடனடியாக ஜனாதிபதி திரும்ப அழைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆளுநரின் நடவடிக்கைக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
    • இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

    சென்னை:

    அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார். இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் மீதான வழக்கை சுட்டிக்காட்டி ஆளுநர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

    செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் தொடர்ந்தால் வழக்கு விசாரணை நியாயமாக நடக்காது என்றும், வழக்கு விசாரணை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்றும் ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும், இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

    அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என சபாநாயகர் அப்பாவும் தெரிவித்துள்ளார்.

    அதேசமயம், ஆளுநர் மாளிகையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் குறித்து எந்த தகவலும் வரவல்லை என்று கூறிய சபாநாயகர், இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு புறம்பாக ஆளுநர் செயல்பட்டுள்ளார் என்று கூறியிருக்கிறார்.

    ×